அடுக்கிவைத்த உண்டியல்களாய்
அமர்ந்திருக்கிறார்கள்
வகுப்பறையில் மாணவர்கள்

எவ்வளவு போட்டாலும்
நிரப்பிக் கொள்ளும்
அகன்றவயிறு அவர்களுடையது

அறிவு நாணயங்களை
அளவின்றி நிரப்பிக் கொள்ளவே
செவி ஓட்டைகள் இரண்டோடு
செய்யப்பட்டவர்கள் இவர்கள்

கருத்துக் காசுகளைக்
காதில் போட்டு வைத்தால்
எப்போது தேவையோ
எடுத்துப் பயன்படுத்தலாம்
என்ற நம்பிக்கையில்
எதிர்காலத் தேசங்களாய்
எதிரில் அமர்ந்திருக்கிறார்கள்

காதுகளால் உள்வாங்கிக்
கைவழியே வெளியேற்றும்
அபூர்வ உண்டியல்களாய்
அவர்கள் விளங்குகிறார்கள்

“டீச்சிங்கை” விடக்
“கோச்சிங்கைப்” பெரிதென நம்புவதால்
‘கற்றிலன் ஆயினும்’ கேட்கும் வாய்ப்பு
கட்டாயமாய் மறுக்கப்படுகிறது

எத்தனையோ வேளைகளில்
ஏமாற்றமே ஏற்பட்டுத்
தோட்கப்படாத செவிகளுடனேயே
திரும்பிப் போகிறார்கள் அவர்கள்

எதிர்காலச் சேமிப்புக்கு ஏற்ற
மிகச்சிறந்த உண்டியல்கள்
இவர்களைத் தவிர
பிறிதெவையுமில்லை

வருங்காலத் தேவைக்கு
வாய்ப்பாகச் சேமிக்கும்
பாதுகாப்புப் பெட்டகங்களாய்ப்
பள்ளிஅறைகள் விளங்குகின்றன

பலவேளைகளில்
“சத்துணவைப் போன்றே”
சத்தான அறிவு வழங்கப்படாமல்
சவலைப் பிள்ளையாய் நொண்டுகிறது
கல்வி

ஒரு மாணவனை
வாழ்க்கை வாழ ஆளாக்காமல்
வாக்களிக்க மட்டுமே ஆளாக்கும்
அரசியல் சூழ்ச்சியால்

வீண் செலவோடு
தேர்வும் தேர்தலும் இங்கு
தேவையில்லாமல்
நடந்து வருகின்றன.

Pin It