எரிமலையில் வெடித்துவரும் தீயின் ஊற்று

எரிதழலில் வடித்தெடுத்த வாளின் கீற்று

குறிதவறா இலக்கடையும் குண்டு வீச்சு

குத்திவிட்டுக் குடலுருவும் கொக்கி ஈட்டி

நரிக்குணத்தோர் முதுகிற்கு நல்ல சாட்டை

நற்றமிழர் வாழ்விற்கு எஃகுக் கோட்டை

வெறிகொண்டு பகைவெல்ல வருவோ ரெல்லாம்           

வெற்றிகொள்ளக் கட்டிவைத்த கத்தி மூட்டை!

ஒப்புக்குப் பாட்டெழுதும் கவிஞர் உண்டு;

ஒருபயனும் இல்லாமல் ஓடி எங்கும்

தப்புக்குத் துணைபோகும் திரைப்ப டத்தில்

தரங்கெட்ட பாட்டெழுதும் கவிஞர் உண்டு;

எப்பொழுதோ படித்துவைத்த இலக்கி யத்தை

எந்நேரம் வாந்தியாக எடுப்பா ருண்டு;

எப்போதும் லட்சியத்தைப் பாடி நிற்கும்

எரிகவிஞர் தமிழேந்தி போன்று உண்டா?                                      

தாய்மொழியில் கல்விக்கு உரிமை வேண்டி

தமிழ்மான மறவர்செங் குன்றந் தன்னில்

காய்மொழிக்குத் துணைபோகும் அரசைக் கேட்டு    

கண்டனஞ்செய் கூட்டத்தில் பேசும் போது

வாய்வலித்துக் கைகால்கள் வீழ்ந்த போதும்

வளையாத தமிழ்வீரம் கொண்ட எங்கள்

தாய்நிகர்த்த பெருங்கவியே உன்தன் பாட்டு

தடைகளுக்குச் செய்துவைத்த அதிர்ச்சி வேட்டு!

சிற்றிதழ்தான் சிந்தனையா ளன்ஆ னாலும்

சீர்மைமிகு பேரறிஞர் ஆனை முத்து

வெற்றியுடன் நடத்திவரும் வெளிச்ச ஏட்டில்

வீறுநடை போட்டிடுவார் எழுதும் பாட்டில்!

சற்றேனும் எதுகுறித்தும் அச்சம் இன்றி

சரவெடியாய் எரிமலையாய்ப் பாட்டி ருக்கும்

பெற்றவுடன் ஏடதனின் கடைசிப் பக்கம்

பெருவிருப்பாய் எல்லாரும் திருப்பிப் பார்ப்பார்!

ஆர்க்கட்டும் போர்முரசம்; ஆளா ளுக்கும்

அவரவரும் தூக்கிடுவீர் ஆயு தத்தை;

தூர்க்கட்டும் எதிரிகளின் கோட்டை தம்மை;

துடிப்புடனே பார்க்கின்ற விழிநெ ருப்பில்

பூக்கட்டும் பொதுவுடைமைச் சமுதா யந்தான்

பொலியட்டும் புதுமையுடன் தமிழர் தேசம்;

தாக்கட்டும் நம்கருத்து இந்தியத்தை;

தலைநிமிர்வோம் தமிழேந்தி வழியில் நாமும்!

Pin It