வஞ்சச் சிங்களர் ஆட்சிகள் மாறினும்
வருத்தும் துன்பம் ஒழிந்திடுமா?
நெஞ்சில் தேக்கிய தமிழர் வெறுப்பு
நீர்மேல் எழுத்தாய் அழிந்திடுமா?

காங்கிர சென்னும் கழிசடை தொலைந்து
காவிக் கும்பல் ஆள்கிறது
‘நாங்கள் உள்ளோம் நடத்துக கொலை’என
நட்புக் கைதான் நீள்கிறது

இசைப்பிரியா உடல் தனித்தனி யாக
இற்றுச் சிதைந்ததை மறப்போமா?
பிசைந்த பச்சைமண் பாலச் சந்திரன்
பிணமாய்ச் சாய்ந்ததைப் பொறுப்போமா?

சிங்கள வெறிக்குத் தப்பிய தமிழர்
செந்தமிழ் நாட்டுக் கிடம்பெயர்ந்தார்
இங்குள தமிழக ஆட்சியர் இழிந்த
எச்சில் பதவியில் குளிர்காய்ந்தார்

புலிகள் என்னும் முத்திரை குத்திப்
புழுவினும் கேடாய் நடத்தினரே!
வலிகள் துரத்த வந்த மக்களை
மலக்குழி ஓரம் கிடத்தினரே!

சிறிசே னாவும் தில்லி வந்தார்
சிங்களர் கொட்டம் ஒழிப்பாரா?
வரிசை மாற்றி மோடி போவார்
மட்டையை இரண்டாய்க் கிழிப்பாரா?

அகதி களாக வந்தோ ரெல்லாம்
அங்கே திரும்பிட வேண்டுகிறார்
முகத்தில் பவுத்தம் மூடிய கயவர்
மீண்டும் கலவரம் தூண்டுகிறார்

எங்கள் தமிழர் இங்குதான் இருப்பர்
எல்லா உரிமையும் அளித்திடுக
தங்கி இருக்கும் காலம் மட்டும்
தகுந்த மதிப்பொடு நடத்திடுக!

- தமிழேந்தி

Pin It