ஆண்களின் பாடுக் கென்றும்

                அருகிருந் தூக்க மூட்டும்

பெண்களின் ஈகம் மண்ணில்

                பெரிதென்பேன் பெரிதே யென்பேன்

என்னதான் வான ளக்க

                எவரெவர் எண்ணி னாலும்

பின்னவள் இல்லை யென்றால்

                பீடுடை வெற்றி யேது?

அன்னதோர் தலைவி யென்பேன்

                அருந்தவச் சுசீலா அம்மை!

பின்னவர் இருந்து செய்த

                பெரும்பணிக் கீடு இல்லை

உள்ளவன் என்றே நம்பி

                மணந்திட்ட ஆனை முத்து

கொள்ளெனக் கொடுத்த தெல்லாம்

                பிள்ளைகள்; துயரம்; துன்பம்!

வள்ளுவன் பெருமை சொல்ல

                வாய்த்ததாம் இரண்டு ஏடு

வெள்குறள் முரசு நல்ல

                குறள்மலர் மற்றும் அய்யா

கொள்கையில் முகிழ்த்த ஏடாம்

                சிந்தனை யாள னுக்கு

அள்ளியே தந்த உங்கள்

                அத்தனை உழைப்பும் மேன்மை!

இந்திய நாடே போற்றும்

                இணையிலாத் தலைவ னுக்கு

வந்துநீ வாய்த்த செல்வம்

                வழித்துணை யான வீரம்

எங்களுக் கென்றோர் கட்சி

                இருக்கின்ற வரையில் இங்கே

உங்களுக் குள்ள பெருமை

                ஓங்கியே சொல்வோம் அம்மா!

Pin It