தேர்தல் பத்திரங்கள் என்ற மோசடித் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, ஒட்டுமொத்த விவரங்களையும் வெளியிட எஸ்.பி.ஐ.-க்கு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பத்திரங்களை வாங்கின, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ. மார்ச் 13ஆம் தேதி வெளியிட்டது. 2018ஆம் ஆண்டிலேயே தேர்தல் பத்திரங்கள் நடைமுறைக்கு வந்திருந்தாலும் 2019 ஏப்ரல் 12 முதல் நடப்பாண்டு ஜனவரி 11ஆம் தேதி வரையிலான விவரங்கள் மட்டுமே முதலில் வெளியிடப்பட்டன. எஸ்.பி.ஐ. தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு, அதற்கு அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தலையில் கொட்டிய பின்பே, இந்த அரைகுறை விவரங்களும் வெளியிடப்பட்டன.

தொடக்கம் முதலே இந்த விவகாரத்தில் பாஜகவை காக்கும் நோக்கிலேயே எஸ்.பி.ஐ. செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதற்கேற்ப, எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் நிதி கொடுத்தது என்பதை கண்டுபிடிப்பதை தடுக்க தேர்தல் பத்திரத்தின் எண் எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “தேர்தல் பத்திர வழக்கில் SBI-ன் செயல்பாடு நேர்மையானதாக இல்லை. தேர்தல் பத்திர வழக்கின் தீர்ப்பை செயல்படுத்துவதில் எஸ்.பி.ஐ. வங்கியின் அணுகுமுறை சரியில்லை. உச்சநீதிமன்றத்தின் முழு தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது எஸ்.பி.ஐ. வங்கியின் முழு கடமை”என்று கண்டித்தது.

modi sbi corruption“தேர்தல் பத்திர ரகசிய எண்ணை வெளியிடுவது தொடர்பாக மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் எஸ்.பி.ஐ. பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். எந்த தரவுகளும் விடுபடவில்லை என்று எழுத்துப்பூர்வமாக எஸ்.பி.ஐ.” உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பாஜக மூடி மறைக்க முயன்ற மெகா ஊழல் உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவுகளால் மக்கள் மத்தியில் அம்பலமாகியிருக்கிறது.

ஏற்கெனவே ரஃபேல் ஊழல், துவாரகா எக்ஸ்பிரஸ் ஊழல், சுங்கச்சாவடி ஊழல், ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு ஊழல் என பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் பாஜக அரசின் மீது சுமத்தப்பட்டிருந்தாலும், ஊழலே இல்லாத ஒரே அரசு என அவர்களுக்கு அவர்களாகவே பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனி அந்த கதையாடல்கள் மக்கள் முன் எடுபடாது என்ற அளவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நடைபெற்ற மெகா ஊழல் வெளியாகி, வட மாநிலங்களிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

மார்ச் 2018 முதல் ஜனவரி 2024 வரையிலான காலத்தில் ஒட்டுமொத்தமாக 16,492 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடையாகப் பெற்றுள்ளன. இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 8,252 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாஜக மட்டுமே 50 விழுக்காட்டுக்கு அதிகமாகப் பெற்றுள்ளது. மற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து 50 விழுக்காடுக்கும் குறைவான நன்கொடையைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

இதில் பல நிறுவனங்கள் பாஜக அரசின் கீழ் இயங்கும் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் சோதனை நடத்திய சில நாட்களில் கோடிக்கணக்கான ரூபாயை நன்கொடையாக வாரி இறைத்துள்ளன. ரெய்டு நடத்தி மிரட்டியே ஒவ்வொரு நிறுவனங்களிடமும் பாஜக நன்கொடையை வாங்கியிருக்கிறது என்பதையே இவை உணர்த்துகின்றன.

கொரோனா பேரிடர் காலத்தில் தடுப்பூசி தேவை மிக அதிகமாக இருந்த காலகட்டத்தில், செங்கல்பட்டில் உள்ள ஒன்றிய அரசின் தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால் கடைசிவரை அதற்கான முயற்சி எடுக்கப்படவில்லை. அதற்கு நேர்மாறாக சீரம் நிறுவனத்திற்கு தடுப்பூசி தயாரிக்க அனுமதி கொடுக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கும் அந்நிறுவனம் ஏற்றுமதி செய்தது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 500 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் பத்திரங்களை வாங்கி நன்கொடை கொடுத்துள்ளது.

பாஜக ஆட்சியானது அம்பானி, அதானி என்ற இருவருக்கான ஆட்சி மட்டும்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி கூறுவார். அதை நிரூபிக்கும் விதமாக அம்பானி, அதானியின் நேரடி நிறுவனங்கள் ஒன்று கூட ஒரு தேர்தல் பத்திரத்தை கூட வாங்கவில்லை. எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை வாங்கியிருக்கிறோம் என்ற விவரங்களை திமுக, அதிமுக, தேசியவாத காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அறிவித்து விட்டன. ஆனால் நாட்டிலேயே அதிகபட்ச நன்கொடை வாங்கிய பாஜக இதுவரை தேர்தல் ஆணையத்திடம் அந்த விவரங்களை தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே பாஜகவின் மோசடிகளை மக்கள் புரிந்து கொள்ளலாம்.

  • ஃபியூச்சர் கேமிங் நிறுவனத்தின் ரூ.409 கோடி மதிப்பிலான சொத்துக்களை 02.04.2022 அன்று அமலாக்கத்துறை முடக்கியது. 07.04.2022 அன்று தேர்தல் பத்திரங்களை இந்நிறுவனம் வாங்கியுள்ளது.
  • அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் 11.04.2022 அன்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 15.04.2022 அன்று இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
  • சீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் 20.12.2023 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 11.01.2024 அன்று இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
  • டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்தில் 11.11.2023 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 17.11.2023 அன்று இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
  • கல்பதரு குழுமத்தில் 04.08.2023 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 10.10.2023 அன்று இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
  • மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் 14.07.2023 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 07.10.2023 அன்று இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
  • டோரண்ட் பவர் நிறுவனம் 10.01.2024 அன்று தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. அதற்குப் பலனாக 07.03.2024 அன்று 1,540 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.
  • APCO இன்ஃப்ரா நிறுவனம் 10.01.2022 அன்று தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது. 24.01.2024 அன்று வெர்சோவா - பாந்த்ரா கடல் இணைப்புத் திட்டத்திற்கான 9,000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 21.03.2022 அன்று வருமான வரித்துறை சோதனையை எதிர்கொண்டது. 07.10.2022 அன்று தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.
  • யசோதா மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் 26.12.2020 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. 2021 ஏப்ரல் முதல் அக்டோபர் வரை இந்நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது.

35 மருந்து நிறுவனங்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன. அதில் 7 நிறுவனங்கள் தரமற்ற மருந்துகளை தயாரிப்பதாக விசாரணைக்கு உள்ளான பிறகு, தேர்தல் பத்திரங்களை வாங்கியிருக்கின்றன. பாஜகவைப் பொறுத்தவரையில் தரமற்ற மருந்துகளை தயாரிப்பது தவறல்ல, நன்கொடை கொடுக்காமல் தயாரிப்பதுதான் தவறு.

- விடுதலை இராசேந்திரன்

Pin It