2019 ஆம் ஆண்டு தேர்தலில், ‘வானத்தை வளைப்பேன்! வைகுண்டத்தைக் காட்டுவேன்! மணலைக் கயிறாய்த் திரிப்பேன்! மக்களுக்கு சொர்க்கத்தைக் காட்டுவேன் ‘ என்றெல்லாம் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்த கட்சி, பாஜக.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டு இருக்கும் இந்திய கருப்புப் பணத்தை மீட்டு “இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் !” என்று மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது, பா.ஜ.க கட்சி!
திடீரென்று ஒருநாள் ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்து, அவர்களில் பலரை மன உளைச்சலாலும் , வெயில் தாக்கத்தாலும் மடியச் செய்த ஆட்சி, பா.ஜ.க ஆட்சி!
ஏழை மாணவர்கள் கல்விக்காகக் வங்கியில் கடன் பெற்றுப் படித்து முடித்து, வேலைக்குப் போய் முறையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன், வங்கி அதிகாரிகளால் அந்த ஏழை மாணவர்கள் துன்புறுத்தப் படுகிறார்கள். ஆனால் பல்லாயிரம் கோடிகளை வங்கியில் கடனாக வாங்கி, பட்டை நாமம் போட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடும் மல்லையாக்களுக்கும், லலித் மோடிகளுக்கும், நீரவ் மோடிகளுக்கும் அவர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் நேர்மையற்ற ஆட்சி செய்யும் கட்சி, பா.ஜ.க ஆட்சி!ராமர் படத்தையும், அயோத்தி கோயிலையும் காட்டிக் காட்டி, மக்களிடம் மத உணர்வுகளைத் தூண்டி கோரத்தாண்டவம் ஆடும் பாசிசத்தின் ஆட்சியே பா.ஜ.க ஆட்சி!
காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்து, அதன் மாநிலத் தகுதியைப் பறித்து, அதை மூன்றாகப் பிரித்து அநீதி இழைத்த நாசிச ஆட்சி, பா.ஜ.க ஆட்சி!
சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து, இந்துத்துவச் சாயலில் இந்திய ஒன்றிய குடிமக்களின் குடி உரிமையைக் கேள்விக் குறியாக்கி, சிக்கலை ஏற்படுத்திய மதவாத, எதேச்சதிகார ஆட்சி பா.ஜ.க வின் ஆட்சி!
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை இயற்றி லட்சோப லட்சம் விவசாயிகளைத் தலைநகரில், தில்லி புறநகர் பகுதியில் ஆண்டுக் கணக்கில் போராட வைத்து பல நூறு உயிர்களைப் பறித்த ஆட்சி, பா.ஜ.க.வின் ஆட்சி!
அந்தந்த மாநிலங்களில் மாணவர்களுக்குக் கிடைத்து வந்த மருத்துவக் கல்வியை, ‘நீட்’ எனும் தேர்வைக் கொண்டு, பாமர ஏழை, கிராமப்புற மக்களின் மருத்துவக் கல்விக் கனவுகளைத் தகர்த்தது, கொடுமையான பா.ஜ.க வின் ஆட்சி!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தங்கள் ‘ஏஜெண்டு’ ஆளுநர்கள் மூலம் தொல்லைகள் கொடுத்து, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆட்சி, பா.ஜ.க ஆட்சி!
எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் வீடுகளில் அமுலாக்கத் துறையை ஏவி ‘சொத்துக் குவிப்பு’ என்று சோதனையிடுவதும், முறையற்ற கைது நடவடிக்கைகளும், பிணை மறுப்பும், சிறைவாச நீடிப்பும் என்று மிரட்டும் ஆதிக்க ஆட்சி, பா.ஜ.க ஆட்சி!
போதிய வாக்கு வங்கி இல்லாத மணிப்பூர் மக்களின் குக்கி இனப்பெண்கள், நிர்வாணப் படுத்தப்பட்டு, வல்லுறவுகளுக்கு ஆளாக்கப்பட்டுத் தெருக்களில் இழுத்து வந்தாலும் அந்த அவலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் வேடிக்கை பார்க்கும் ஆட்சி, பா.ஜ.க வின் நரேந்திர மோடி ஆட்சி!
கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் பாசிச, மதவாத, சனாதன பாஜக அரசை வீழ்த்துவதற்குக் காஷ்மீரத்தின் பரூக் அப்துல்லா கட்சி, பஞ்சாப், டெல்லி மாநிலங்களை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, ஹரியானா, இமாச்சலப் பிரதேச விவசாயப் பெருங்குடிகளின் கட்சிகள், உத்திரப்பிரதேசத்தின் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி, பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா கட்சி - நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் - இந்திய தேசிய காங்கிரஸ் - இடதுசாரிக் கட்சிகள், மராட்டியத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி என வட மாநில அரசியல் கட்சிகளும், தமிழ்நாட்டில் அசைக்க முடியாத திமுக, கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி, கேரளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி - எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சிகள் எல்லாம் ஒருங்கிணைந்து I.N.D.I.A. என்னும் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
கண்களுக்கு எதிரே பொதுத் தேர்தல். கைகளிலே வாக்குச் சீட்டு. ஜனநாயகத்தை மீட்க, நாட்டைக் காப்பாற்ற, பா.ஜ.கவைத் தோற்கடிப்போம்.
வாருங்கள் நாட்டினரே ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களிப்போம், 2024 பொதுத் தேர்தலில்.!
- பொள்ளாச்சி மா.உமாபதி