மோடி அலை சுனாமிபோல அடித்துக் கொண்டிருக் கிறது. பா.ச.க.வின் எதிரிகளை அழித்தொழிக்கும் அள விற்கு இன்னும் வீரியம் மிக்கதாக இருக்கிறது” என்றார் பா.ச.க.வின் தலைவர் அமித் ஷா. ‘‘வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி” என்றார் நரேந்திர மோடி.
அக்டோபர்மாதம் அரி யானா மற்றும் மகா ராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ச.க. பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, பா.ச.க. ஆதரவாளர்கள் பலரும் இதையொட்டிய கருத்தையே வெளிப்படுத்தினார்கள். கறைபடிந்த காங்கிரசுக்கு எதிராகத் தூய்மையான பா.ச.க. வெல்கிறது என்பதும், பா.ச.க.வின் நான்கு மாத ஆட்சிக்கு கிடைத்த கைத்தட்டல்களே இந்த வெற்றி என்பதும், அடுத்து வரவிருக்கும் காஷ்மீர், பீகார் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களிலும், பிராந்திய கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழித்து பா.ச.க வெற்றிக்கொடி நாட்டும் என்பதும் ஊடகங்களில், சமூக ’விஞ்ஞானிகளின்’ கருத்தாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம்
மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதிகளில் பா.ச.க வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ், பா.ச.க அரசிற்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. 44 வயதேயான தேவேந்திர ஃபத்னவிஸ் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார். அந்த மாநிலத்தின் வரலாற்றிலேயே, காங்கிரசு அல்லாத ஒரு கட்சி, 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது இதுவே முதன் முறை.
காங்கிரசும் மராத்தியர்களும்
காலங்காலமாகவே மகாராஷ்டிரா காங்கிரசின் இரும்புக்கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. இந்திய அளவில் பெரும் சறுக்கல்களைச் சந்தித்த காலங்களில் கூட இம்மாநிலத்தைக் காங்கிரசு தக்கவைத்துக் கொண்டு வந்தது. அதற்கான காரணம், அங்கு அதிக அளவு எண்ணிக்கையிலுள்ள மராத்திய சாதி மக்களும் அவர்களுக்கு அடுத்தப்படியாக அதிக எண்ணிக்கையில் இருக்கும் குன்பி சாதி மக்களும் தான். இந்த இரு சாதிக்குழுக்களுமே விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்டுள்ளனர். மராத்திய சாதியின் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த சிறு பிரிவினர் வணிகமும் வியாபாரமும் செய்து வருகின்றனர். மராத்திய குன்பி சாதி மக்கள் பாரம்பரியமாகவே காங்கிரசு கட்சிக்கு ஓட்டளித்து வருபவர்கள். மராத்திய மேல்தட்டு வர்க்கத்தினரிடையே 1999 ஆம் ஆண்டு ஒரு பிளவு ஏற்பட்டது. இதன் விளைவாக சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவானது. முதன்முறையாக 1995ஆம் ஆண்டு காங்கிரசு கட்சி மகாராஷ்டிராவில் தனது ஆட்சியை இழந்தது. சிவசேனா, பா.ச.க. கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த தோல்விக்கு பின் மராத்திய மேல்தட்டு வர்க்கத்தினர் சிலர் காங்கிரசை விட்டு விலகத் தொடங்கினர். 1999ஆம் ஆண்டில் காங்கிரசில் ஏற்பட்ட பிளவு, அவ்வர்க்கத்தினரை மேலும் பிளவுபடச் செய்தது. அதற்கு அடுத்த மூன்று தேர்தல்களிலும், காங்கிரசு,தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சி அமைத்தாலும், அவர்களுக்கு கிடைத்த வாக்கு சதவிகிதம் சீரான வீழ்ச்சியை சந்தித்தது.
மராத்திய மேல்தட்டு வர்க்கம், பெரும்பான்மை மக்களுடைய நலன்கள் சார்ந்து, அதாவது விவசாயிகளின் நலன் சார்ந்து தமது அரசியல் முடிவுகளை எடுக்காமல், நகரத்தை நோக்கியும், ரியல் எஸ்டேட் வியாபாரத்தை நோக்கியும் தனது கவனத்தைத் திருப்பியது. இதன் விளைவாக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் இவ்வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாடு அதிகரித்தது. இந்தியாவில் அதிக அளவிலான விவசாயிகள் தற்கொலை நடைபெற்ற இடங்களில் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பகுதி முதன்மையானது. மகாராஷ்டிராவில் 1995 முதல் 2005 ஆம் ஆண்டு வரை மொத்தம் 32,000 விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் மிக அதிக அளவிலானவர்கள், விதர்பா பகுதியை சார்ந்த 6 மாவட்டங்களில் வசிப்பவர்கள். விதர்பா தனி மாநில கோரிக்கை வலுப்பெற்று வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது. இதன் விளைவாக 1995 தேர்தல் முதலாகவே சாதாரண மராத்தியர்கள், காங்கிரசு அல்லாத பிற கட்சிகளுக்கு வாக்களிக்கத் துவங்கி விட்டனர். இந்தப் பல்வேறு பிளவுகளின், அதன் முரண்பாடுகளின் உச்ச விளைவே
2014 தேர்தல்களில் எதிரொலித்தது.நாடாளுமன்றத் தேர்தலில், 48 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது. சட்டமன்ற தேர்தலுக்கு முன் முத்தாய்ப்பாக, காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணி முறிவு, அக்கட்சியை வெற்று பொம்மையாக்கியது.
சிவசேனாவும் பா.ச.க.வும்
1980களின் இறுதியில் இந்த ஆட்டத்தில் இணைந்து கொண்ட சிவசேனா, பா.ச.க.வுடன் சேர்ந்து கொண்டு, இந்தப் பிளவுகளின் பலனை அறுவடை செய்து காங்கிரசிற்கு மாற்றான சக்தியாக உருவெடுக்க முனைந்தது. 1990 மற்றும் 1995 சட்டமன்ற தேர்தல்களில் இக்கட்சி விதர்பா, மராத்வாடா ஆகிய பகுதிகளில் தனது செல்வாக்கை அதிகரித்தது. அதே நேரத்தில், சிவசேனையின் முதுகில் ஏறிக்கொண்ட பா.ச.க அதே பகுதிகளில் இருந்து தனது தலைவர்களை உருவாக்கத் தொடங்கியது. இப்பொழுது, இப்பகுதிகளின் கட்டுப்பாடு இவ்விரு கட்சிகளுக்கு இடையிலான போட்டியாக மாறி விட்டது. காங்கிரசு ஓரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறது. மேலும், இந்த தேர்தலில் பா.ச.க.வும் சிவசேனாவும் தனித்தனியே போட்டியிட்டது, பா.ச.க தனது பலம் அதிகரித்ததை உணர்ந்து கொண்டது என்பதும், தேர்தல் முடிவுகளுக்குப் பின், சிவசேனாவிற்கு பதில் தேசியவாத காங்கிரசைத் தன் பக்கம் அழைத்ததன் மூலம் பா.ச.க., சிவசேனா முரண்பாடு வரும் காலங்களில் கூர்மைப்படும் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. 1990களில் இருந்தே, தனது தலைவர்களை உருவாக்குவதில் பா.ச.க கவனமாக இருந்து வந்துள்ளது. கோபினாத் முண்டே போன்ற மராத்திய சாதியைச் சேராத, பார்ப்பனரல்லாத தலைவர்களையே தனது கட்சியின் பிரதிநிதியாக முன்னிறுத்தி வந்தது. மண்டல் கமிஷன் காலகட்டத்தில் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான குரல்களை எழுப்பியதன் மூலமும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இத்தலைவர்களையே வெளிச்சத்தில் காட்டியதன் மூலமும் பா.ச.க., மகாராஷ்டிரத்துக்கான தனது முகத்தைத் தெளிவாக கட்டமைத்துக் கொண்டது. பா.ச.க.வின் வழக்கமான வாக்கு வங்கியானது நகர்ப்புற, உயர்சாதி வகுப்பினர். அவர்களுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளும் சேர்ந்து பா.ச.க.வின் வெற்றியை உறுதி செய்தது. இந்த தேர்தலில் உயர் சாதியினரின் 52% வாக்குகளையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களின் 38% வாக்குகளையும் பா.ச.க கைபற்றியிருக்கிறது. இன்னொரு கோணத்தில், இந்த கணக்கின் மூலம், இஸ்லாமியர்களுடனான தனது முரண்பாட்டை பா.ச.க. கூர்மைப்படுத்துகிறது.
பா.ச.க.வின் வாக்குவங்கி காங்கிரசின் பாரம்பரிய வாக்கு வங்கிக்கு நேர் எதிரானது. கிராமப்புற உயர் சாதி மேல்வர்க்க, இஸ்லாமியர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என்பதே 1950கள் மற்றும் 1960களில் காங்கிரசின் வெற்றிக் கணக்காக இருந்திருக்கிறது. இதற்கு எதிராக பா.ச.க. நகர்ப்புற உயர்சாதிபடித்த மேல்தட்டு பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வாக்குகளை அணிதிரட்ட முயல்கிறது. உத்தர பிரதேசத்தில் இந்த முயற்சியில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து ஏனைய மாநிலங்களிலும் இந்த அணுகுமுறையையே பா.ச.க தொடரும் என்பதும், புலனாகிறது.
அரியானா
மகாராஷ்டிரத்தைப் போலவே அரியானாவிலும், பா.ச.க. முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 இடங்களில் வெற்றி பெற்று பா.ச.க. தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் வெறும் 15 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ச.க இம்முறை பெற்றிருக்கும் வெற்றி, எவ்வகையில் பார்த்தாலும் அக்கட்சிக்கு முக்கியமான ஒன்றாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் நீண்டகாலமாக செயல்பட்டவரும் மோடியின் நண்பருமான மனோஹர் லால் கட்டார் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜாத்களும் மற்றவர்களும்
அரியானாவைப் பொறுத்தவரை, அதன் சமூக அளவீடுகள் எப்பொழுதுமே ஜாத்துகளும் மற்றவர்களும் என்றே இருந்து வந்துள்ளன. வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையில், 21% மக்கள் ஜாத் இனத்தை சேர்ந்தவர்கள். விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள இம்மக்கள், அரியானாவின் மூலை முடுக்கெல்லாம் தனது அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். காவல்துறை, நிர்வாகம், மற்றும் அரசு இயந்திரத்தின் முக்கிய பொறுப்புகள் அனைத்திலும் ஜாத்துகளே முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். உயர்சாதியினர் 23 சதவிகிதத்தினராகவும், பிற்படுத்தப் பட்டவர்கள் 45 சதவிகிதமாகவும், தலித்துகள் 21 சதவிகித மாகவும் இருக்கிறார்கள். ஜாத் அல்லாத இதர பிற்படுத்தப் பட்டோர் ஜாத்துகளைப் போல ஒருமித்த சக்தியாக இல்லாமல், சிதறுண்டவர்களாக இருப்பதால், அவர்களுக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை.
இம்முறை ஜாத்களின் வாக்கு காங்கிரசிற்கும் இந்திய தேசிய லோக் தளத்திற்கும் சரி பாதியாக பிரிந்து விட்டதால், இவ்விரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பும் குறைந்து போனது. இதைத்தவிர, ஜாத் அல்லாத பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளைக் காங்கிரசிடமிருந்து பா.ச.க ஒட்டுமொத்தமாக பறித்துக்கொண்டது. இது மட்டுமின்றி காப் பஞ்சாயத்துகளின் ஆதரவும் பா.ச.க.விற்கு கிட்டியது.
1996ஆம் ஆண்டு முதல் மாறி மாறி ஜாத் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வந்திருக்கிறார்கள். அதற்கு எதிரான குரலாகவும் பா.ச.கவின் இந்த வெற்றியைப் பார்க்கலாம்.
இங்கு குறிப்பிடப்பட வேண்டிய இரண்டு முக்கியமான விஷயங்கள்,
1. புதிய முதலமைச்சர் மோகன் லால் கட்டார் ஜாத் அல்ல, அவர் ஒரு பஞ்சாபி.
2. அரியானா மாநிலம் பழமைவாதம் மிகுதியாக உள்ள மாநிலம். தேர்தல் முடிவுகளுக்குப் பின் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், அம்மாநிலத்தவர்களில் 88% ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் செய்வதற்கு எதிரானவர்களாகவும், 51% காப் பஞ்சாயத்துகளுக்கு ஆதரவானவர்களாகவும், 70% பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு எதிரானவர்களாகவும் இருக் கிறார்கள்.
இதர காரணங்கள்
மகாராஷ்டிரா
1. மகாராஷ்டிராவில் என்னதான் பா.ச.க. பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட 122 பா.ச.க. உறுப்பினர்களில் 52 பேர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து வெகு அண்மையில் பா.ச.க.வுக்கு வந்து சேர்ந்தவர்கள்.
2. தனித்துப் போட்டியிட வேண்டுமென்ற அமித் ஷாவின் துணிச்சலான, ஆபத்தான முடிவு
3. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே ஒரு சமயோசிதமான, வலுவான தலைவராக இல்லை
4. காங்கிரசு தேசியவாத காங்கிரசு கூட்டணியிலும் பிரபலமான, தலைவர் ஒருவர் கூட இல்லை. (ஊழல் மட்டும் இங்கே காரணம் இல்லை. ஏனெனில், பா.ச.க.விலும் கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள் அநேகம்)
அரியானா
1. ஊழல் வழக்கில் தண்டனை வழங்கப்பட்டு அண்மைகாலம் வரை சிறையில் இருந்தார் இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா.
2. காங்கிரசு முதலமைச்சர் பூபிந்தர் சின் ஹூடா, ராபர்ட் வதோராவின் ஊழல் வழக்கில் மிகுந்த அவப்பெயர் பெற்றுக்கொண்டார்
3. பெரும்பாலான பா.ச.க. வேட்பாளார்கள் எந்த குற்றச்சாட்டிலும் சிக்காமல் இருந்தனர்.
மோடி மந்திரம்
மத்தியில் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததும், வலதுசாரி அரசாங்கத்தின் மக்கள் விரோதச் சூடு இன்னும் பரவலாக உணரப்படாததாலும், மோடி அலையென்ற தொடர் மந்திர உச்சாடனங்களும், மேற்குறிப்பிட்ட அத்தனை சமூகப் பொருளாதார அரசியல் காரணங்களுக்கும் பிறகு ஒரு கூடுதல் காரணமேயன்றி, அது மட்டுமே காரணமல்ல. பா.ச.க. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சி அமைத்ததற்கு மிக முக்கியமான காரணம், அரசியல் சாதுர்ய காய் நகர்த்தல்கள். கடந்த பத்தாண்டுகளாகவே காங்கிரசு மீதான அதிருப்தி நிலவி வந்த போதிலும், மோசமான அரசியலால் பா.ச.க. வாக்குகளை அறுவடை செய்ய முடியாமல் இருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் உள்வாங்கும் பா.ச.க.வின் புதிய உத்தி பலனளிக்கத் துவங்கியுள்ளது. இத்தனை காலமாகியும் தங்கள் வாழ்க்கை கிஞ்சித்தும் மேம்படவில்லை என்ற அடித்தட்டு மக்களின் விரக்தியும் ஏமாற்றமும் எப்படியாயினும், அடுத்த படிநிலைக்கு தங்களை உயர்த்திக்கொள்ள முடியும் என்ற கீழ்மத்திய தர வர்க்கத்து மக்களின் ஆசைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது பா.ச.க.
வெகுசீக்கிரமே காங்கிரசும் பா.ச.க.வும் வேறு வேறல்ல என்பதை மக்கள் உணரத் துவங்கி விடுவார்கள். அதற்குள் எப்படியாவது, இந்தியாவில் எஞ்சியுள்ள பிராந்திய கட்சிகளின் செல்வாக்கை துவம்சம் செய்து, தனது இந்துத்துவ புஜபலப் பராக்கிரமத்தை நிலைநாட்டுவது என்பதே பா.ச.கவின் இலக்கு. பின்பு இராமர் கோவில், இந்து நாடு ஆகியவற்றைத் தனது தாராளமய, தனியார்மய கொள்கையுடன் பிணைத்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற கனவு காண்கிறது பா.ச.க. மோடி சுனாமியும் அல்ல அலையும் அல்ல அவர் ஒரு முகம், ஒரு முகமூடி. அவ்வளவு தான்.
மகாராஷ்டிரா, அரியானாவின் தேர்தல் வரைபடங்களுக்கு ஊடாக பா.ச.க. வின் தமிழ்நாட்டு வியூகத்தைக் கண்ணுற வேண்டும். பா.ச.க. எந்த சமூக சக்திகளைக் குறி வைத்து தனது நகர்வுகளை மேற்கொள்கிறது?. இன்னும் விரித்து சொல்லின், தென் தமிழகம், வட தமிழகம் என்று பிரித்துப் பார்ப்பனர், இடை நிலை சாதிகள், தலித்துகள் என்று பகுத்து, பா.ச.க. வின் சமன்பாட்டைப் புரிந்து கொண்டு அதை முறியடிக்க வேண்டியுள்ளது.
நன்றி: விசை