1917ஆம் ஆண்டில் சோவியத் புரட்சி வென்ற பின், அந்நாட்டில் மக்களுக்குச் சுதந்தரம் இல்லை என்றும், அவர்கள் கம்யூனிஸ்டுகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் பலவாறாகப் பொய்ப் பிரச்சாரம் செய்தனர். பொது மக்களும், அறிவுஜீவிகளும் அப்பிரச்சாரத்தில் மிரண்டு போய், சோவியத் ஒன்றியத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளக்கூட முயலாமல் இருந்தனர். இந்த நிலையில்தான் 1929 ஆம் ஆண்டில் முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி வெடித்தது. இந்த நெருக்கடியினால் முதலாளித்துவ நாடுகள் அனைத்திலும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் போது மான உணவு கிடைக்காமல் பசியிலும் பட்டினியிலும் வாடினர்.

ஆனால் சோவியத் ஒன்றியத்தில் மட்டும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் நல்ல முறையில் பொருளாதாரம் இயங்கிக் கொண்டு இருந்தது. அக்காலத்தில்தான் வேலை யில்லாத் திண்டாட்டப் பிரச்சினை முதல் கேந்திரமான பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டன. மக்கள் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

இந்த நிகழ்வு, முதலாளித்துவ அறிஞர்களின் வலுவான பொய்ப் பிரச்சாரத்தை மீறி அறிவுஜீவிகளை, சோவியத் ஒன்றியத்தின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. அப்படிப் பார்த்தவர்களில் ஒருவர் புரொட்டஸ்டன்ட் கிருத்துவ மதத்தின் தலைவரான கான்டெர்பரி ஆர்ச் பிஷப் ஹெவ்லெட் ஜான்சன் (Hewlett Johnson) ஆவார். அவ்வாறு சோவியத் ஒன்றியத்தின் பக்கம் பார்வையைத் திருப்பிய அந்த மதகுரு, அதன் ஆட்சி முறை, அம்முறையில் மக்கள் துய்க்கும் சுதந்தரம், மக்களுக்கு இடையேயான தோழமை உணர்வு, மக்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமை மற்றும் மனிதனின் சுதந்தர வாழ்வுக்குத் தேவைப் படும் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தார்.

அவ்வாறு ஆராய்ந்த பின், 1939இல் “உலகில் ஆறில் ஒரு பகுதியில் சோசலிசம் (Socialism one sixth of the World )” என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

அந்நூலில் சோசலிச நாடான சோவியத் ஒன்றி யத்தில் தான் மக்கள் உண்மையான சுதந்தரத்துடன் உள்ளனர் என்றும், சுதந்தரம், சுதந்தரம் என்று மூச்சுக்கு முன்னூறு தரம் உரக்கக் கூவிக்கொண்டு இருக்கும் முதலாளித்துவ நாடுகளில், மக்களுக்குச் சுதந்தரமே இல்லை என்றும் விளக்கமாக எழுதி உள்ளார். முதலாளித்துவத்தின் வலுவான பிரச்சாரங் களை உடைத்து எறிந்துவிட்டு, அதன் உண்மையான உருவத்தைத் தோலுரித்துக் காட்டிய முதல் மதகுரு இவர்.

இன்று 2008ஆம் ஆண்டில் பொருளாதார நெருக் கடி வெடித்ததில் இருந்து அதற்குத் தீர்வுகாண முடியா மல் இன்று வரை திணறிக்கொண்டு இருக்கும் முத லாளித்துவத்திற்கு, அதைவிட முக்கியமாக புவிவெப்ப உயர்வுக்கும், சூழ்நிலைக் கேட்டிற்கும் உலக உயிரி னங்கள் அனைத்தையும் காவு கொடுக்க முனைந்து கொண்டு இருக்கும் முதலாளித்துவத்திற்கு எதிராக இன்னொரு மதகுரு மனம் வெதும்பி வெடித்துள்ளார். அவர்தான் கத்தோலிக்கக் கிருத்தவ மதத்தின் தலைவ ரான போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ் (Pope Francis).

இவர் 18.6.2015 அன்று புவிவெப்ப உயர்வுக்கும், சுற்றுச்சூழல் கேட்டுக்கும் தீர்வைத் தேடாமல் பணக் கார நாடுகள் அலட்சியமாக நடந்து கொள்வதற்கு எதிராகக் கடுமையாகச் சாடினார். மேலும் 12.7.2015 அன்று இதே பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் போது முதலாளித்துவப் பொருளாதார முறை தான் இதற் கெல்லாம் காரணம் என்றும், மக்களுக்கு இடையே ஏற்பட்டு உள்ள ஏற்றத்தாழ்வைப் போக்குவதற்கும், உலகில் உயிரினம் அழிந்துவிடாமல் இருப்பதற்கும் உலக மக்கள் அனைவரும் முதலாளித்துவத்துக்கு எதிராகப் புனிதப் போரைத் தொடுக்க வேண்டும் என்றும் தார்மீகக் கோபத்துடன் அறைகூவல் விடுத்துள்ளார்.

மிகப் பெருவாரியான மக்கள் பின்பற்றும், பிரொட் டஸ்டன்ட் கிருத்தவ மதத் தலைவர் கான்டைர்பரி ஆர்ச் பிஷப் ஹெவலட் ஜான்சன் 1939ஆம் ஆண்டில் முதலாளித்துவத்தின் முகத்திரையைக் கிழித்து அது கொடூரமானது என்பதைக் காட்டினார்.

இன்று அவரைப் போலவே முதலாளித்துவத்தை நேரடியாக எதிரித்து நிற்கிறார் கத்தோலிக்கக் கிருத்தவ மதத்தின் தலைவரான போப் ஆண்டவர். இவர் முத லாளித்துவத்தை இன்று நேரடியாக எதிர்த்த இரண்டா வது மதகுரு ஆவார்.

இவ்வாறு மதகுருக்களே முதலாளித்துவத்தின் கொடூரத் தன்மையை வெளிப்படையாக எதிர்க்கும் அளவிற்கு நிலைமை முற்றி இருக்கும் பொழுது மக்கள் அமைதி காப்பது சூழ்நிலைக்குப் பொருத்தமாக இல்லை.

மக்கள் அனைவரும் பொங்கி எழுந்து முதலாளித்துவப் பொருளாதார முறையைக்காவு கொடுத்துவிட்டு, சோசலிசப் பொருளாதார முறையைக் கைக்கொள்ள வேண்டிய தருணம் இது.

Pin It