பெரியாரும் சிறை புகுந்தார்

கடைசியாகப் பெரியார் ஈ.வெ.ராமசாமியும் சிறை புகுந்துவிட்டார். சிறைவாசம் அவருக்குப் புதியதல்ல. நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இது அவரது எட்டாவது சிறைவாசமாகும். சிறைவாசத்துக்குப் பெரி யார் பயந்தவருமல்ல; சிறைக்கூடம் அவருக்கு மாமி யார் வீடு மாதிரி. சர்க்கார் அழைப்பு வரவேண்டியது தான் தாமதம். மூட்டை முடிச்சு கட்டிக்கொண்டு தயங் காமல், சிறை நோக்கிப் புறப்பட்டு விடுவார். சிறை வாசத்தில் அவருக்கு அவ்வளவு காதல். எதிர் வழக் காடுவது அவருக்குப் பெரிய வெறுப்பு. ஏற்கெனவே ஏழு முறை இவ்வாறு சிறைபுகுந்திருக்கிறார். இப்பொ ழுது புகுவது எட்டாவது முறை. நம்மைப் பொறுத்த மட்டில் அவர் சிறைபுகுவது பற்றி வருத்தப்படவில்லை. ஏனெனில் அவருக்கு ஓய்வு மிகவும் தேவையாக இருக்கிறது. வாழ்நாள் முழுவதும் ஊணுறக்கமின்றி ஊரூராய்ச் சுற்றி யாருக்குத்தான் பாடுபட முடியும்! உடம்பு கல்லா? தொண்டை இரும்பா? பெரியார் உரு வத்திலும் பருத்துப் பொதிமாதிரி பருமனாயிருப்பதி னால் அவர் மகா பலசாலியென்றும், திடகாத்திரமுடை யவர் என்றும் எல்லாரும் எண்ணக்கூடும்.

உடல் நிலை

viduthalai 330ஆனால் பெரியாரைப் போல பலவீனம் - நோயாளி - வலிவற்ற இருதயமுடையவர் - அவரது தோற்ற முடையவர்களில் அதிகப்பேர் இருக்கமாட்டார்கள் என்ற உண்மையைப் பலர் அறியமாட்டார்கள். அவரு டைய இருதயம் மிகவும் பலவீனமாக இருப்பதினால் ஒரு மாதம், இரண்டு மாதம் பரிபூரண ஓய்வெடுக்க வேண்டுமென டாக்டர்கள் எத்தனையோ முறை எச்சரிக்கை செய்திருக்கின்றனர். மன்னன் லக்ஷ்யம் செய்ய வேண்டுமே! சென்னை ஜெனரல் ஆஸ்பத் திரியில் அவர் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது டாக்டர் குருசாமி முதலியார் எச்சரிக்கையையும் லக்ஷ்யம் செய்யாமல் தியாகராயநகர் பொதுக்கூடத்துக்குச் சென்று ஒரு மணிநேரம் பேசியதையும், அதற்காக டாக்டர் குருசாமி முதலியார் கோபித்துக் கொண்ட தையும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலர் அறிந்திருக்கலாம். ஆபீசில் வேலை செய்து கொண்டி ருக்கும்போது பலமுறை மயங்கி விழுந்திருக்கிறார். சில வாரங்களுக்குமுன் அவரது சகோதரி திருவாட்டி கண்ணம்மாள் பூந்தோட்டத்தில் உலாவிக் கொண்டி ருந்த போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். கடுமை யான நோயில் படுக்கையிலிருக்கும் போதும்கூட அவர் சும்மா இருப்பதில்லை. ஓயா உழைப்பில் அவருக்கு அவ்வளவு கிறுக்கு. இரவு 8 மணி வரை எழுத்து வேலை நடத்திய பின்பு 10 மணிவரை ‘விடுதலை’ “பார்சல்” கட்டவும் அவர் தயங்கு வதில்லை. உயிரையும் வெறுத்து வேலை செய்யும் இந்த உழைப் புக் கிறுக்கர் சிறைப்பட்டாலன்றி ஓய்வெடுக்க முடியுமா? ஆகவே அவரைச் சிறைப் படுத்தி ஒன்றரை வருஷகாலம் ஓய்வு கொடுக்கும் ஆச்சாரியார் சர்க்காருக்கு நமது மனமார்ந்த வந்தனம்.

காங்கிரஸ் வாழ்வு

பெரியார் காங்கிரஸ் வாதியாகப் பொதுவாழ்வில் ஈடுபட்டார். குக்கிராமங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு பரவியிருந்ததற்கு பெரியார் உழைப்பே காரணம் என்பதை அவருடைய பழைய நண்பர் கனம் ஆச்சாரியாரே ஒப்புக்கொள்ளக்கூடும். சிறை புகுவதை காங்கிரஸ் ஒரு வேலைத் திட்டமாக ஒப்புக்கொண்ட பிறகு, தற்கால காங்கிரஸ் தியாகிகள் சிறை புகுமுன் பேசி சிறைபுகுந்து “அக்கினி பரீட்சையில்” தேறிய பெருமை நமது பெரியாருக்கே. முதன்முதல் பெண்களை சுதந்தரப் போரில் ஈடுபடுத்திய புகழும் நமது பெரியா ருக்கே; வைக்கம் சத்தியாக்கிரகத்துக்குத் தமது அருமை மனைவியாரையும் அழைத்துக் கொண்டு போனார். வைக்கம் சத்தியாக்கிரகப் போரில் பெரியார் மனைவி யாரும் ஈடுபட்டார். ஆனால் திருவிதாங்கூர் சர்க்கார் அவரை சிறைப்படுத்தவில்லை. மனைவி சகிதம் விடுதலைப் போரில் ஈடுபட்டவர் இந்தியாவில் ஒருவர் உண்டானால், அவர் நமது பெரியாரே. அக்காலத்திலே காங்கிரசில் நமது பெரியாருக்கு இருந்த மதிப்பு அபார மானது.

அன்று காந்தியார் சொன்னது

பம்பாயில் சமாதான மகாநாடு கூடிற்று. காலஞ் சென்ற சர். சங்கரன் நாயர் அதன் தலைவர். மிதவாதி கள், அமிதவாதிகள், நடுநிலைமை வாதிகள் எல்லாம் அக்கூட்டத்துக்கு விஜயம் செய்திருந்தனர். அயல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் கூட்ட நடவடிக்கைகளைக் குறிப் பெடுக்கப் பிரசன்னமாயிருந்தார்கள். பொக்கைவாய் காந்தியார் இடுப்புத் துணியுடன் தலைவர் சர். சங்கரன் நாயர் வலப்பக்கத்தில் அர்ந்திருந்தார். முப்பதினாயிரம் தொண்டர்கள் சிறைக்கோட்டம் புகுந்துள்ளார்கள். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறைபுக ஆயத்தமா யிருக்கிறார்கள். சர்க்காருக்கும் காந்தியாருக்கும் சமரசம் உண்டுபண்ண மகா கனம் ஸர். தெஜ் பகதூர் ஸாப்ரூவும், கனம் ஜெய்கரும் ஒரு பக்கம் அரும்பாடுபடுகிறார்கள். சர். சங்கரன் நாயர் தலைமை உரை முடிந்தது. காந்தி என்ன சொல்லப் போகிறார் எனக் கூட்டம் எதிர்நோக்கி நிற்கிறது. காந்தியார் எழுந்தார். புன்னகையுடன் “எனக் கும் சமாதானத்தில் விருப்பமே. ஆனால் ஈரோட்டில் என் அருமைச் சகோதரி நாகம்மாளையும் எனது ஆருயிர்த் தோழர் இ.வெ.ராமசாமியையும் கலக்காமல் முடிவு ஒன்றும் கூறமுடியாது” எனப் பளிச்சென்று கூறி னாராம்.

சமாதான மகாநாட்டார் வியப்பு

ஆச்சாரியாருடன் கலக்காமலோ, சத்தியமூர்த்தி யுடன் கலக்காமலோ, எஸ். ராமநாதனுடன் கலக்கா மலோ, முத்துரங்கத்துடன் கலக்காமலோ முடிவு கூறமுடியாதென்று காந்தியார் அன்று கூறவில்லை. அன்று இந்த தேசபக்தர்களில் பலர் அநாமதேயர்களா கவே இருந்தார்கள். ஆகவே காந்தியார் கூறியதைக் கேட்டு சமாதான மகாநாடு திகைப்படைந்தது. “நாகம் மாளாம், ராமசாமியாம்! அவர்கள் யாரப்பா! காந்தியார் மதிப்புக்குரிய அவர்கள் மகா மகா மேதாவிகளாய் - தியாகிகளாய் இருக்க வேண்டும்” என மகாநாட்டார் வியப்புற்றனராம். நமது நாடோடி ராமசாமிக்கு - பள்ளியில் பயின்றறியா ராமசாமிக்கு அன்று காங்கி ரசிலே அவ்வளவு மதிப்பிருந்தது. அந்த மதிப்பை இழந்து காங்கிரஸ் விரோதியென்றும், பார்ப்பன துவேஷியென்றும், தேசத் துரோகியென்றும் அவர் பெயர் வாங்கிக் கொண்டதற்குக் காரணமென்ன?

சுயநலக்காரராயிருந்தால்?

தமிழர்களே! நீங்கள் எப்பொழுதாவது எண்ணிப் பார்த்ததுண்டா? சுயநலத்தையே நமது பெரியார் பெரிதாக மதித்திருந்தால், அவர் இன்று காங்கிரசிலே ஒரு பரமாத்மாவாகவோ, மந்திரியாகவோ இருந் திருக்கலாம். நியாயமான வருமானம் எதுவுமில்லாமல் லட்சக்கணக்கில் சம்பாதித்து ராஜவாழ்வு நடத்தும் காங்கிரஸ் பக்தர்களைப் போலவே பெரியாரும் ஒரு காங்கிரஸ் பக்தராகவும் சீமானாகவும் இருந்திருக் கலாம். ஆனால் அவருக்கு சுயநலம் என்பதே இல்லை; தமிழர் நலமே அவரது குறிக்கோள். பிறப்பால் கன்னடராயினும் தாம் புகுந்த தமிழ்நாட்டின் பெருங்குடி மக்கள்மீது அவருக்கு அவ்வளவு அழியாத - அடக்க முடியாத பற்று. தமிழன் எவருக்கும் தலைகுனியலாகாது என்பது அவரது பேரவா. தேசிய நோக்கம் கொண்ட காங்கிரசிலே பார்ப்பனியமே ஆதிக்கம் வகித்து வருவதை சேரமாதேவி குருகுல ஸ்தாபனம் மூலம் உணர்ந்த பெரியார், காங்கிரசைத் தலைமுழுகிவிட்டு வெளியே வந்து தமிழர் உயர்ச்சிக் குப் பாடுபடக் கங்கணம் கட்டிக்கொண்டார். ஒரு காலத்திலே பெரியாரின் சிஷ்யனாக இருந்த தோழர் அய்யாமுத்து இவ்வாண்டு குடிநூல் ஆண்டுமலரில் பெரியாரைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் “மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோரும் சமம்” என்பதாக ஒரு தீர்மானத்தை திருச்சியில் நடை பெற்ற காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் நிறைவேற்றி யதை ஆட்சேபித்து சில தலைவர்கள் கமிட்டியை விட்டு அந்நாளில் வெளியேறியதே நாயக்கர் காங்கிரசிலி ருந்து பிரிந்தமைக்கு ஒரு காரணமாயிருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸைத் தலைமுழுகியது தப்பா?

மக்கள் எல்லாம் பிறப்பினால் சமம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காரணத்தால், காங்கிரஸ் கமிட்டி மெம்பர்கள் சிலர் இராஜிநாமா செய்தனர் என்றால் எந்த சுயமரியாதையுடைய மனிதனாவது அந்த காங்கிரசில் ஒட்டிக்கொண்டு இருப்பானா? இப்பொழு தாவது அந்தத் தீர்மானம் காங்கிரஸ்காரரால் ஒப்புக் கொள்ளப்படுகிறதா? இல்லையே! ஆகவே நமது பெரியார் காங்கிரசிலிருந்து பிரிந்ததும் தனி இயக்கம் கண்டு உழைத்து வருவதும் ஆச்சரியமல்ல. சுய மரியாதை இயக்கம் கண்டது முதல் நாளிதுவரை நமது பெரியாரின் முக்கிய லக்ஷ்யமாக இருந்து வருவது தமிழரின் முன்னேற்றமே. வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தை காங்கிரஸ் ஒப்புக்கொண்டால் ஓரளவு தமிழர் முன்னேற முடியுமென்றெண்ணி அவ்வழியிலும் முயன்று பார்த்தார். பல சந்தர்ப்பங்களில் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்தை ஒப்புக்கொள்ள காங்கிரஸ் தலைவர் களில் சிலர் இணங்கினராயினும், காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டிய தருணங்களில் சில பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்ததினால் காங்கிரஸ் வகுப்புவாரிப் பிரதி நிதித்துவத்துக்கு எதிரியாகவே இருந்து வருகிறது. ஆகவே காங்கிரஸ் மூலம் தமிழர்களுக்கு நலம் கிடை யாதென்பது பெரியார் துணிபு.

இந்தியை எதிர்க்கும் காங்கிரஸ் அபிமானிகள்

இந்தி கட்டாயப் பாட ஏற்பாடு தமிழர்களை வட நாட்டாருக்கு அடிமைப்படுத்தும் தந்திரம் என உணர்ந் ததும், கட்டாய இந்தியை, ஏனைய தமிழ்த் தலைவர் களையும், பார்ப்பனத் தலைவர்களையும் போல நமது பெரியாரும் எதிர்க்கத் தொடங்கினார். இந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிரியான நமது பெரியாரின் புரளியென கனம் ஆச்சாரியார் கூறுவது உண்மைக்கு மாறானதாகும். தோழர்கள் டி.ஆர். வெங்கடராம சாஸ் திரியார், புரோபஸர் சாராநாத அய்யங்கார் போன்ற பார்ப்பனத் தலைவர்களும், விளம்பர மந்திரி கனம் ராமநாதனும் இந்தியை எதிர்த்திருக்கிறார்கள். இந்தி எதிர்ப்புத் தலைவர்களில் ஒருவரான தோழர்சோம சுந்தர பாரதியார் இப்பொழுதும் காங்கிரஸ்வாதியாக இருந்து வருகிறார். ஆகவே இந்தி எதிர்ப்பு இயக்கம் காங்கிரஸ் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது என்னும் கூற்றுக்கு ஆதாரமே இல்லை. பெரியார் சிறை புகுந்த பிறகும் இந்தி எதிர்ப்பு இயக்கம் முட்டின்றி நடைபெறு வதைப் பார்த்த பிறகாவது கனம் ஆச்சாரியார் உண் மையை உணர்வாரென்பது நிச்சயம்.

தமிழர் கடமை

ஆகவே சிறை புகுந்த பெரியார் உபதேசப்படி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சாத்வீகமாக இந்தி எதிர்ப் புக் கிளர்ச்சியைத் தமிழர்கள் தளர விடாமல் நடத்தி வருவார்கள் என நம்புகிறோம். சிறைபுகுந்த பெரியா ருக்குத் தன்னைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ கவலையில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கத் தைப் பற்றியும் அவரால் நடத்தப்படும் “விடுதலை”, “குடிஅரசு”, “பகுத்தறிவு”ப் பத்திரிகைகளைப் பற்றி யுமே அவருக்குப் பெரிய கவலை. இந்தி எதிர்ப்பு இயக்கமும் அவரது பத்திரிகைகளும் தடையின்றி நடைபெறுமாயின், அவர் நிம்மதியாக சிறைவாச நாளைக் கழிப்பார் என்பது நிச்சயம். தமிழருக்காகத் தன்னை யும் தன் குடும்பத்தையும் தன் செல்வத்தையும் அர்ப்பணம் செய்த ஒரு பெரியாருக்குத் தமிழர் நன்றி செலுத்த எண்ணினால் அவர் நிம்மதியாக சிறைவாச நாளைக் கழிப்பதற்குச் சாதகமாக இருக்கும். இந்தி எதிர்ப்பையும் பத்திரிகைகளையும் சட்டவரம்புக்குட் பட்டு ஆதரித்தால் போதுமானது. இந்தச் சிறுகாரியத் தைச் செய்யத்தயங்கும் தமிழர்கள் தமிழ்நாட்டில் இரார் என்றே நம்புகிறோம். மற்றும் ஒரு லக்ஷ்யத்தை முன்னிறுத்தி உழைத்தவர்கள் கஷ்டப்பட்டதனாலேயே அந்த லக்ஷ்யம் கைகூடியிருப்பதாக சரித்திரம் கூறுகிறது. ஆகவே நமது பெரியார் சிறைவாசம் அவரது லக்ஷ்ய வெறிக்கு ஒரு அறிகுறியேயாகும். நியாய பலமுள்ள எவருக்கும் ஒருக்காலும் தோல்வி கிடையாதென்ற நம்பிக்கையுடன் நாம் சட்ட திட்டங் களுக்கு உட்பட்டு சாத்வீக வழியில் உழைப்போமாக!

- விடுதலை தலையங்கம், 7.12.1938

(தொடரும்)

Pin It