sinthanaiyalan logo 100

சென்னையில் தமிழர்க்கு எழுச்சி சேர்த்த மாநாடு சிந்தனையாளன் பொங்கல் மலர் -2015 வெளியீடு -மூன்று புதிய நூல்கள் வெளியீட்டுடன்‘இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு, தேசிய இன உரிமை மீட்பு மாநாடு’!தமிழகம் முழுவதிலும் இருந்தும் தோழர்கள் திரண்டனர்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கடந்த 11-1-2015 ஞாயிறு காலை 10 மணியளவில் சென்னையில் மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தோழர் உலகஒளியின் காஞ்சிக்கலைக் குழுவினரின் எழுச்சிமிகுப் பாடல் களுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. முற்பகல் அமர்விற்கு மா.பெ.பொ.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் தோழர் க. முகிலன் தலைமை ஏற்றார். கட்சியின் மாணவர் இளைஞர் அணித் தோழர் இரா. பகுத்தறிவாளன் வரவேற்புரையாற்றினார். சிந்தனi யாளன் பொங்கல் சிறப்பு மலரை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை க. இராசேந்திரன் வெளியிட்டார்.

முனைவர் அ. ஆறுமுகம் எழுதிய இரு பாட நூல்களில் ’வள்ளுவம்’ என்ற நூலை மாம்பலம் தோழர் ஆ. சந்திரசேகரும் ‘பௌத்தம்’ என்ற நூலை மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலர் தோழர் சி. பெரியசாமியும் வெளியிட்டனர். பொங்கல் மலரின் படிகளை வேளாண் அணிச் செயலாளர் அரங்க. சானகிராமன், மாவட்டச் செயலாளர்கள் திருவண்ணா மலை பொ. சுப்பிரமணியன், வேலூர் மோ.சி. சங்கர், விழுப்புரம் ஆ.கு. ஆறுமுகம் ஆகிய தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.

பாடநூல்களின் படிகளை மாவட்டச் செயலாளர்கள் சேலம் செ. ஆனையப்பன், அரியலூர் புலவர். இரா. கலியமூர்த்தி, திருச்சி இரா. கலியபெருமாள், வாணி யம்பாடி நகரச் செயலாளர் நா.மதனகவி, புதுக் கோட்டை மாவட்ட பு.க.இ.ம. செயலாளர் ந. கருணா கரன் ஆகிய தோழர்கள் பெற்றுக்கொண்டனர். புதுவை மாநிலச் செயலாளர் இரா. திருநாவுக்கரசு, காஞ்சி மாவட்டச் செயலாளர் சி. நடராசன், கடலூர் மாவட்டச் செயலாளர் பா. மோகன், திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அணிச் செயலாளர் கோ. கோதண்டராமன் ஆகிய தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக தோழர் விடுதலை க. இராசேந்திரன் எழுச்சிமிகு சிறப்புரையுடன், கட்சியின் தலைமையக மேலாளர் தோழர் ப.வடிவேலு நன்றி நவில, முற்பகல் நிகழ்வு கள் இனிதே நிறைவுற்றன.

பகலுணவிற்குப்பின் பிற்பகல் 3 மணியளவில் கலைக்குழுத் தோழர்களின் பாடல்களுடன் தொடங்கிய இந்தி ஆட்சி மொழி எதிர்ப்பு, தேசிய இன உரிமை மீட்பு மாநாட்டிற்கு மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளர் இரா. பச்சமலை தலைமை ஏற்றார். மாணவர் இளைஞர் அணித் தோழர் சோ. அண்ணா துரை வரவேற்புரை நிகழ்ச்சிக்குமுன், தமிழேந்தி, கவியன்பன் ஆகிய இருவரும் எழுச்சிக் கவிதைகள் படித்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு மாநாட்டைத் தொடங்கி வைத்து எழுச்சிமிகு உரை வழங்கினார். அடுத்து மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்து மா.பெ.பொ.க. மாணவர் இளைஞர் அணிச் செயலாளர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். அவற்றை வழிமொழிந்து கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் வாலாசா வல்லவன், மாணவர்-இளைஞர் அணித் துணைச் செயலாளர் தி. துரைசித்தார்த்தன், தொழிலாளர் அணிச் செயலாளர் சா. குப்பன் மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் ஆகிய தோழர்கள் எழுச்சியுரை நிகழ்த்தி னர்.

நிறைவாக ‘Federalism in India in Peril' என்னும் ஆங்கில நூலை இயற்றியுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அந்நூலை வெளியிட்டார். நூலின் முதல்படியை தோழர் செந்தலை கவுதமன் பெற்றுக் கொண்டார். பின்பொதுச் செய லாளர், ஆழமானதோர் விளக்கவுரை ஆற்றி மாநாட் டை நிறைவு செய்தார். மா.பெ.பொ.க.யின் செந்துறை ஒன்றியச் செயலாளர் தோழர் சா.சீனிவாசன் நன்றியுரையோடு அனைத்து நிகழ்ச்சிகளும் இரவு 8 மணி யளவில் நிறைவுற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலும் இருந்து வருகை புரிந்திருந்த தோழர்கள் பொங்கல் சிறப்பு மலரின் படிகளையும் புதியதாக வெளியிடப்பட்ட பாடநூல்களின் படிகளையும் ஆர்வத் துடன் வாங்கிச் சென்றனர். 

Pin It

திட்டக்குழு உருவாக்கம் :

1950இல் பிரதமர் நேரு திட்டக்குழுவினை நாடாளுமன்றச் சட்டத்தின் வழியாக அமைத்தார். உலகிலேயே முதன்முதலாக சோவியத் ஒன்றியத்தில் லெனின் தலைமையிலான பொதுவுடைமை அரசு 1917இல் திட்டக்குழுவை உருவாக்கியது. பொருளாதா ரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த சோவியத் ஒன்றியம் மிகவும் குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சியைத் திட்டமிடல் கொள்கையின் வழியாகப் பெற்றது. இம்முறையை பெர்ட்ரன்ட் ரசல், ஜார்ஜ் பெர்னாட்ஷா, பொருளாதார அறிஞர்கள் மாரிசு டாப், ஜியோன் ராபின்சன் போன்றவர்கள் வரவேற்றனர்.

1930களில் மோதிலால் நேருவுடன் சோவியத் ஒன்றியத்திற்குப் பயணம் மேற்கொண்ட இளைஞரான நேரு, திட்ட மிடல் கொள்கை அந்நாட்டில் வெற்றி பெற்று வரு வதை அறிந்து, பின்னாளில், இக்கொள்கையை இந்தியா வும் ஏற்கவேண்டுமென வலியுறுத்தினார். இக்கொள் கை தொடர்பாகத் பல காங்கிரசு தலைவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நேதாஜி போன்ற முன்னணித் தலைவர்களும், இளைஞர்களும் வர வேற்றனர். டாட்டா, பிர்லா போன்ற இந்தியத் தொழில் முனைவோர்கள் இணைந்து 1945இல் ‘பம்பாய் திட்டம்’ என்ற திட்டக் கொள்கையை அறிவித்தனர். எனவே, திட்டமிடல் கொள்கையை எல்லாத் தரப்பி னரும் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ஏற்றுக்கொண்டனர் என்பதற்கு இந்நிகழ்வுகள் சான்றாக அமைகின்றன.

திட்டமிடல் கொள்கை நடுவண் அரசின் அதிகாரப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென, 1945இல் பிரித்தானிய அரசின் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் காங்கிரசு தலைவர்கள் வலியுறுத்தினர். மூன்று முறை காங்கிரசுத் இக்கோரிக்கையை வலியுறுத்தி னாலும் இத்தூதுக்குழு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், திட்டமிடல் கொள்கையில் பேரார்வம் காட்டிய நேரு போன்ற தலைவர்கள் திட்டமிடல் கொள்கையை அரசமைப்புச் சட்டத்தில் இணைக்காதது ஏன் என்பது ஒரு புதிராகும். அரசமைப்புச் சட்டவிதியின்படி திட்டக்குழு உருவாகியிருந்தால் திட்டக்குழுவை இன்றைய பிரதமர் மோடியால் கலைத்திருக்கவே முடியாது.

இந்தியத் திட்டக்குழுவின் செயல்பாடுகள்  1951ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரித்தானிய அரசின் சுரண்டல் முறையால் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் பின்னடைந்தன. பாகிஸ்தான் பிரிவினை யால் ஏற்பட்ட இழப்புகளும் இணைந்து கொண்டன. இச்சூழலில் வேளாண் நீர்ப்பாசனம், மின்சாரம், தொழில், கட்டமைப்பு, சமுதாயத் துறைகளுக்காக 1960 கோடி ரூபாய் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் வேளாண் பாசனத் துறைகளுக்கு 30.6 விழுக் காடு நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் உணவு உற்பத்தி தன்னிறைவை அடையும் நிலையில் இருந்தது. இருப்பினும், சிலர் திட்டக்குழுவின் செயல்பாடுகள் பற்றி விமர்சனம் செய்தனர். இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்கண்ட துறைகளுக்கு 4600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 24 விழுக்காடு நிதி தொழில் துறைக்கு உயர்த்தப்பட்டு, பிற துறைகளுக்கான ஒதுக்கீடு குறைக் கப்பட்டு, வேளாண் துறை ஒதுக்கீடும் 10 விழுக்காடு குறைக்கப்பட்டது. இதனால், வேளாண் துறைக்குத் தொடர்ந்து பல சிக்கல்கள் வரத்தொடங்கின.

வல்லுநர்களின் ஆலோசனை

இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தாலும், தொழில் துறை வளர்ச்சிக்கு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் வழிகோலியது. இந்தியப் பொருளாதார அறிஞரான பி.ஆர். ஷெனாய், அமெரிக்காவின் தனியார் துறை சார்பான மில்டன் பிரைட்மன், மார்க்சிய அறிஞரான பால் பாரன், இங்கிலாந்தின் நிதியியல் வல்லுநரான நிக்கோலசு கால்டர் ஆகியோரின் கருத்துகளை நேரு இத்திட்டக் காலத்தில் கேட்டறிந்தார். பன்னாட்டு வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பெற்ற பட்டறிவின் தன்மையிலும் நேரு ஐந்தாண்டுத் திட்டங் களுக்குச் செயலாக்கம் வழங்கி வந்த நிலையில் 1964ஆம் ஆண்டில் நேரு மறைந்தார். திட்டமிடல் பொருளாதாரத்திற்கும், திட்டக்குழுவிற்கும் நேருவின் மறைவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

நேரு காலத்தில் திட்டக்குழு விரைந்து ஓடியது. இந்திரா காந்தி காலத்தில் விரைந்து நடந்தது. ராஜீவ் காந்தி ஆட்சியில் மெல்ல நடைபோடத் தொடங்கியது. இடைப்பட்ட காலத் தில் வி.பி. சிங் தொடங்கி வாஜ்பாய் வரை இதே நிலை நீடித்தது. நரசிம்மராவ் காலத்தில் ஆழ்ந்த உறக்கத் திற்குச் சென்றது. மன்மோகன் சிங் காலத்தில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் தரகராக மாறிவிட்டது. நேரு காலத்தில் தொடங்கி வெற்றிகரமாக இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களின் அரசுப் பங்குகளைத் தனியார் துறைக்குத் தாரை வார்க்க முடிவெடுத்தது.

நிதிக்குழு, திட்டக்குழு முரண்பாடுகள்

அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது பிரிவின்படி உருவாக்கப்பட்ட நிதிக்குழுதான் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வை மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றது. திட்ட மிடலுக்காக உருவாக்கப்பட்ட திட்டக்குழு, மாநிலங் களுக்குத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யும்முறையை நிதிக்குழுவிடம் இருந்து பறித்துக் கொண்டது. திட்டக் குழுவின் குறுக்கீட்டினைத் தவிர்க்க வேண்டும் என்று இரண்டாவது நிதிக்குழுவின் தலைவரான கே. சந்தானம் கடுமையாக எதிர்த்தார். அரசியல் சார்பான நிதி ஒதுக்கீட்டைத் திட்டக்குழு மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

1967க்குப் பின்னும் காங்கிரசு அல்லாத மற்ற கட்சிகள் சில மாநிலங்களில் ஆட்சிய மைத்தன. 1969 வரை திட்டக்குழு திட்ட ஒதுக்கீடு களை மாநிலங்களுக்கு வழங்கும் போது எவ்வித அளவுகோல்களுமின்றித் தன்னிச்சையாகச் செயல் பட்டது. பேராசிரியர் காட்கில் திட்டக்குழுவின் துணைத் தலைவரான பின்பு, பொருளாதார நிதியியல் சார்ந்த வரையறையை முதன்முதலாக 1969இல் வகுத்தார். மாநிலங்களின் மக்கள் தொகை அளவு, நிலப்பரப்பு, திரட்டும் வரிவருவாய் அளவு, மாநிலங்களுக்கே உரித் தான குறிப்பிட்ட பிரச்சனைகள், பின்தங்கிய நிலைமை போன்ற குறியீடுகள் அடிப்படையில் நடுவண் அரசு மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வினை மேற்கொள்ளலாம் என வரையறுத்தார். இதுபோன்ற சில அளவுகோல் களைத்தான் நிதிக்குழு 1951லிருந்து கடைப்பிடித்து வந்தது.

திசைமாறிய திட்டக்குழு

திட்ட உதவி என்ற பெயரில் (Plan Assistance) மாநிலங்களுக்கு 80 விழுக்காடு கடனாகவும், 20 விழுக்காடு மானியமாகவும் திட்டக்குழு வழங்கியது. 2010ஆம் ஆண்டில் கடன் 70 விழுக்காடாகவும், மானியம் 30 விழுக்காடாகவும் மாறியது. மாநிலங்களைக் கடன்காரர்களாகத் திட்டக்குழு மாற்றிவிட்டது. வட்டிச் சுமையால் பீகார், ஒரிசா, இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் நிதிக்குழுவிடம் முறையிட்டன. 6ஆவது, 7ஆவது நிதிக்குழுக்கள் மாநிலங்களின் நிதிநிலைமை களுக்கேற்ப வட்டி வீதத்தைக் குறைத்தன அல்லது தள்ளுபடி செய்தன. நடுவண் அரசின் இரண்டு குழுக்களில் ஒன்று மாநிலங்களுக்குக் கடனளிப்பதும், மற்றொன்று வட்டியைத் தள்ளுபடி செய்தும் கூட்டாட்சி நிதி முறையில் (Federal Finance)) முரண்பாடுகளை உருவாக்கின. 2011க்குப் பிறகு கடனைச் சந்தையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், 30 விழுக்காடு மானி யத்தை மட்டும்தான் மாநில அரசுகளுக்கு வழங்கப்படு மெனவும் திட்டக்குழு அறிவித்தது.

நடுவண் அரசின் துறைசார்ந்த நிதியுதவித் திட்டம்

நடுவண் அரசின் துறைகள் வழியாக மாநிலங்களுக்கு நேரடியாக நிதி வழங்கும் முறைமையையும் கொண்டு வரப்பட்டது. ஐந்தாவது திட்டக் காலத்தில் 190ஆகவும், ஒன்பதாம் திட்டக் காலத்தில் 360ஆகவும் இத்திட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 11ஆம் ஐந்தாண் டுத் திட்டத்தில் 147 திட்டங்களுக்காக 6.5 இலட்சங் கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் இதில் அடங்கும். இவற்றில் நடுவண் அரசின் 9 முன்னணித் திட்டங்கள் வழியாக மாநிலங்களுக்கு 5.24 இலட்சங் கோடி ஒதுக்கப்பட்டது. 79 விழுக்காடு 9 திட்டங் களுக்கும், எஞ்சிய 21 விழுக்காடு 138 திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித சமூக, பொருளாதார அளவுகோல்களையும் கடைபிடிக்காமல், அந்தந்த மாநிலங்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல், அரசமைப்புச் சட்டத்தால் நிதிப் பகிர்வை மாநிலங் களுக்கு அளிக்கும் நிதிக்குழுவின் ஆளுகையைச் சிறுமைப்படுத்திக், கூட்டாசியியலுக்கு எதிராக நடுவண் அரசு திட்டக்குழு வழியாகச் செயல்பட்டது என்பதற்கு இது சரியான சான்றாகும்.

2011இல் திட்டக்குழு உறுப்பினராக இருந்த சதுர்வேதி நடுவண் அரசின் துறைகள் வழியாக நேரடியாக நிதி வழங்கும் முறைமையைக் குறைக்க வும், மாநிங்களுடைய கோரிக்கைகளை ஏற்கவும் பல பரிந்துரைகளை வழங்கினார். பல மாநிலங்கள், மாநில அளவிலான திட்டக்குழுக்களை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு 11, 12 ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் 90 விழுக்காட்டுத் திட்டச் செலவுகளைத், தன்னுடைய நிதியாதாரங் களைக் கொண்டே திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

இச்சூழலில் பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ‘நித்தி ஆயோக்’ அறிவிப்பு நடுவண் -மாநில அரசு களுக்கிடையேயான திட்டம், திட்டம் சாரா நிதி ஒதுக் கீடுகளை எவ்வாறு கையாளப் போகின்றது? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (263) இடம்பெற்றுள்ள மாநிலங்கிடையேயான மன்றத்தைக் கூட்டி, மாநில முதல்வர்கள், வல்லுநர்களைக் கலந்துபேசி, நிதி சீரமைப்பையும் திட்ட மேலாண்மையையும் ஒழுங்கு படுத்தி இருக்கலாம். ஏற்கெனவே நடுவண் அரசில் உறங்கிக் கொண்டிருக்கும் சர்க்காரியா, வெங்கடாச் சலய்யா, பூஞ்சி குழுக்களின் சீரிய பரிந்துரைகளை ஆய்ந்து திட்டக்குழுவை மேன்மைமிக்க அமைப்பாக மாற்றியிருக்கலாம்.

ஆனால், நடுவண் அரசு ஓர் அறிவிப்பால் திட்டக் குழுவை முடக்கியது. மற்றொரு அறிவிப்பால் ‘நித்தி ஆயோக்’ என்ற அமைப்பை உருவாக்கியிருந்தது. National Institution for Transforming India  என்ற ஆங்கில சொல்லோடு ஆயோக் என்ற இந்திச் சொல்லை மோடியின் அரசு மாற்றியுள்ளது. மேலும், நடுவண் அரசின் அமைச் சரவை அறிவிப்பில், நித்தி ஆயோக் அமைப்பு ஆட்சியி யலில், கொள்கைத் திட்டங்களில், அரசு அமைப்புகளில் மாற்றங்கள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் துறைக்கு மட்டும் வாதிடும் அரவிந்த் பானகாரியா என்பவரை இந்த அமைப்பிற்குத் துணைத் தலைவராகவும், பொருளியலாளர் பிபேக் டெபுராய், அரசு உயர் அலுவலர் சரஸ்வாட் ஆகியோரை முழு நேர உறுப்பினர்களாகவும், நடுவண் அரசு உள் துறை, நிதித்துறை, தொடர்வண்டித்துறை, வேளாண் துறைகளின் அமைச்சர்களை அலுவல் சாரா உறுப்பி னர்களாகவும் பிரதமர் மோடி இவ்வமைப்பின் தலைவர் என்ற முறையில் நியமித்தள்ளார். பல துறை வல்லுநர்களால் மேலாண்மை செய்யப்பட்ட பழைய திட்டக்குழுவின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு, தற்போது நடுவண் அரசின் சிறு அமைச்சரவையாகவே அது மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்களைப் பெரும்பான் மையாக கொண்ட இக்குழுவில் வல்லுநர்களின் ஆய்வுக் கருத்துகள் எடுபடுமா? துணிச்சலோடு கருத்துப் பரி மாற்றங்களை மேற்கொள்வார்களா? என்ற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

அதிகாரக் குவிப்பால் ஊழல் மிகுந்து நாட்டையே அலற வைக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நடுவண் அரசின் இயங்காத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. இச்சூழலில் அதிகாரக் குவிப்பை மேலும் வலிமைப்படுத்தும் அமைப்பாகத்தானே இந்த நித்தி ஆயோக் செயல்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே, பழைய திட்டக்குழுவிற்கு நித்தி ஆயோக் சரியான மாற்றாக அமையாது; அமையவே முடியாது. 

Pin It

‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது காலங்காலமாக நம் மக்களிடையே நிலவி வரும் பழமொழியாகும். அக்காலங்களில் கோயில் மக்களின் பொதுச் சொத்தாய் இருந்தது. நாட்டு நடப்பு கள் பற்றிப் பேச, ஊர் வழக்குகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க, கழனிகளில் விளைந்த நெல் முதலிய தானியங்களை ஒரே இடத்தில் களஞ்சியமாகச் சேமித்து வைக்க, திருவிழாக்கள் நடத்த இப்படிப் பல்வேறு செயற்பாடுகளுக்குக் கோயில் பயன்பட்டது.

நிலக்கிழாரியம் தோன்றி மன்னராட்சி செழிப்புறத் தொடங்கிய காலங்களில் கோவில்களில் பொன்னும், மணியும் விலைமதிப்பற்ற பிற பொருள்களும் குவியத் தொடங்கின. மன்னர்களும், செல்வர்களும் மக்களிட மிருந்து பறித்த பொருள்களை வரைமுறையற்றுக் கோயில்களுக்கு வழங்கினர். இன்று இந்தியாவெங் கும் உள்ள கோவில் செல்வங்களைக் கணக்கிடும் போது திருவனந்தபுரம் பத்மநாபசாமி முதலிடத்தில் நிற்கிறார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் :

கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சாமிக்கும், திருப்பதி வெங்கடாசலபதி சாமிக்கும் தான் இப்போது முதலிடத்திற்கான சரியான போட்டி நடந்து கொண்டுள்ளது. திருவனந்தபுரம் கோயில் செல்வங் கள், தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல்போல் பெருகிக் கொண்டே உள்ளன. உச்சநீதிமன்ற ஆணைப் படி கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய அக்கோயி லின் சொத்துக் கணக்கெடுப்புப் பணி இன்னும் முற்றுப் பெறவே இல்லை.

அக்கோயிலில் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒரு நிலவறையில் இருந்து மட்டும் கிடைத்துள்ள பொருள்களாவன : 1. சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள திருமாலின் தங்கச் சிலை.

2. தங்கத்தினால் செய்யப்பட்ட வைரக் கற்கள் பதித்த இரண்டு தேங்காய் முடிகள். 3. பத்தரை கிலோ எடை யுள்ள 18 அடி நீள தங்கத்தாலான மார்புச் சங்கிலி. 4. 36 கிலோ எடையுள்ள தங்கத்திரை, தங்க அங்கி. 5. 500 கிலோ தங்கப் பாளங்கள். 6. தங்கத்தில் வில்-அம்பு, வைரம் பதித்த தங்கத்தட்டுகள் மற்றும் பல கோடி எடையுள்ள தங்கமணிகள், நகைகள், கிழக் கிந்திய வணிக நிறுவனத்தின் தங்கக் காசுகள், நெப் போலியனின் தங்கக் காசுகள், அய்ரோப்பிய வைரங்கள்.

தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி. புராதனக் கலைப் பொருள்கள் என்ற தன்மையில் கணக்கிட்டால் இவை பல இலட்சம் கோடிகளைத் தாண்டலாம். இந்தச் சொத்துகள் எல்லாமே உழைக்கும் மக்களின் குருதியைப் பிழிந்து கொள்ளையிடப்பட்டவை ஆகும். ஆனால் செயேந்திர சரசுவதி உள்ளிட்ட கொலைகாரச் சாமியார் கள் ‘இவை அனைத்துமே மன்னர் சொத்துகள். இவற்றில் மற்றவர் சொந்தங் கொண்டாட உரிமை இல்லை’ என்று கூறிக்கொண்டு கோயில் மதிற்சுவர் களைப் போலக் குறுக்கே நிற்கிறார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் :

உலகின் மிகப்பெரிய பணக்காரச் சாமிகளில் ஒன்றாகக் கருதப்படும் வெங்கடாசலபதி கோயில் பல மன்னர்களால் பல்வேறு காலங்களில் பங்களிப்புச் செய்து கட்டப்பட்டதாகும். 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், தஞ்சையை ஆண்ட சோழர்கள், 15, 16ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த விசய நகர மன்னர்கள், மராட்டியர்கள், இசுலாமிய ஆட்சியாளர் கள் உள்ளிட்டோர் இக்கோயிலுக்கு ஏராளமான பொருள் களை வாரி வழங்கியுள்ளனர்.

முசுலீம் மன்னர்களான ஷாஜகான், ஜகாங்கீர் போன்றோர் மட்டுமல்ல-இங்கிலாந்து எட்வர்டு மன்னர், விக்டோரியா அரசி போன்றோரும் நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

தொடக்கத்தில் தென்மாநிலங்களில் இருந்து மட்டும் பக்தர்கள் வந்தனர். இப்போது வெங்கடேசப் பெரு மாளுக்கு வியனுலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஒருநாள் உண்டியல் வசூல் 75 இலட்சம் ரூபாயி லிருந்து ஒரு கோடியே 80 இலட்சம் வரை. கடந்த 2014 சனவரி 1ஆம் தேதி வசூல் மட்டும் 4.23 கோடி. உண்டியல் வசூல் பற்றி அக்கோயிலைச் சேர்ந்த ஏ.வி. இரமணா தீட்சிதர் கூறுகையில் மூன்று ஆண்டுகள் முன்பு வரை ஒரு நாளைக்கு இருமுறை உண்டிய லைத் திறந்து எண்ணுவார்களாம். இப்போது ஒரு நாளைக்குப் பத்துமுறை எண்ணப்படுகிறதாம். அப் போதும் சில்லறை நாணயங்களை எண்ண முடியாமல் அவை மலைபோலக் குவிக்கப்பட்டுள்ளனவாம்.

உண்டியல் வசூலை அடுத்துக் கோயிலுக்குக் கிடைக் கும் மிகப் பெரிய வருவாய் முடிகாணிக்கை மூலம் கிடைக்கிறது. திருப்பதி கோயிலுக்கு அன்றாடம் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 50,000-இலிருந்து ஒரு இலட்சம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமுடி ஒரே நாளில் டன் கணக்கில் சேர்ந்துவிடுகிறது. இதன் மதிப்பு மட்டுமே 6 மில்லியன் ரூபா என அறங்காவல் துறை அறிவித்துள்ளது. இவ்வளவு பணத்தையும் அடியவர்கள் எதற்காக ஆண்டவனின் காலில் போய்க் கொட்டுகிறார்கள்? முன்னொரு காலத்தில் வெடங்கடாசலபதி பத்மாவதி அம்மையாரை மணம்புரிய செல்வக் கடவுளான குபேரனிடம் 1 கோடியே 14 இலட்சம் கலியாணக் கடன் (marriage loan) வாங்கினா ராம். ஆண்டவன் வாங்கிய கடனை இப்போது அடியவர்கள் அடைத்துக் கொண்டுள்ளனர்.

ஷீரடி சாயிபாபா கோயில் :

ஆந்திர மாநிலம், ஷீரடியில் உள்ள சாயிபாபா கோயில் அதிக வருவாய் வரும் கோயில்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஷீரடி பெரிய சாயிபாபா மறைவுக்குப்பின் 2011ஆம் ஆண்டு தம் 85-ஆவது வயதில் மறைந்த இளைய சத்ய சாயிபாபா தன்னைப் பெரிய சாயிபாபாவின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டார். இளைய சாயிபாபா இறப்புக்குப்பின் அவர் தங்கி இருந்த பல்வேறு அறைகளில் ஒரு அறையை மட்டும் திறந்து பார்த்தபோது அதில் கணக்கில் காட்டப்படாத விலை மதிப்புமிக்க தங்கக் கட்டிகள், வைரங்கள், கட்டுக்கட்டாகப் பணம் மற்றும் காசோலை கள் கைப்பற்றப்பட்டன.

சாயிபாபா அறக்கட்டளைக்கு இந்தியாவில் மட்டுமல் லாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 1300 தொண்டு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதும் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இலவசப் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பாழும் இந்தியாவில் கோவில்கள் கொழுக் கின்றன. கோடிக்கணக்கான மக்கள் பஞ்சப்பராரியாய் பட்டிணியாய் படிப்பறிவின்றி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழ்நாட்டுக் குக் கால்வாய் வெட்டிக் குடிநீர் கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்குச் சாயிபாபா உயிரோடு இருந்த காலத்தில் இருநூறு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி யுள்ளார். ‘சத்யநாராயண ராஜூ’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் தம் 14ஆம் வயதில் ஒருமுறை தேள் கொட்டிய போது மயங்கி விழுந்தார். பின் மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார்; அழுதார்; பாடல்கள் பாடினார். அன்றுமுதல் தெய்வத்தின் அவதாரமாக மாறிவிட்டார். பல மாயவித்தைகள் கற்றவராகத் தன்னைக் கற்பித்துக் கொண்டு, வெறுங்கையை நீட்டி லிங்கம், லட்டு, கடிகாரம் போன்ற சிறிய பொருள்களை மந்திர ஆற்றலால் வருவித்துக் கொடுத்து ஊர் உலகத்தை ஏமாற்றினார். இவர் மந்திர ஆற்றல்களை அம்பலப்படுத்தப் போன பல பகுத்தறிவுவாதிகளை இவர்தன் அருகில் அண்டவிட்டதே இல்லை. சாயிபாபா ஆசிரமத்தில் எல்லா ஆசிரமங்களிலும் உள்ளது போன்றே கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற அத்தனை ஒழுக்கக்கேடுகளும் உண்டு.

இப்படிக் கோயில் உடமைகள் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டே போனால் இக்கட்டுரைக்கு ஒரு முடிவு வராது. நாடு முழுவதிலும் உள்ள அளவற்ற இந்தக் கோயில் சொத்துகள் யாருக்கு உரியவை? உழைக்கும் மக்களிடமிருந்து உரிமைகள் எவ்வாறு பறிக்கப்பட்டன? அதைப்பற்றிக் காண்போம் :

மனித உரிமை மீறல்கள் :

ஒரு நாகரிக சமுதாயத்தில் உழைப்பு பொது, மக்களின் உரிமைகள் பொது என்பவற்றை உறுதி செய்யும் சட்டங்கள் நடைமுறையில் இருக்க வேண் டும். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் மனுதரும நெறியை ஆட்சிச் சட்டமாக ஏற்றுக் கொண்டதால் கோயில் உரிமையைப் பார்ப் பனர்களிடம் கொடுத்துவிட்டனர். கோயில் வருவாயைப் பெருக்கத் தம் குடிமக்கள் மீது கொடுமையான வரிகள் போட்டுக் கொள்ளையடித்தனர். இது தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பலரும் குறித்துள்ள கருத்தாகும்.

‘நிலவரியேயன்றித் தறியிறை, செக்கிறை, மனை இறை, அங்காடிப்பட்டம், தட்டாரப்பாட்டம், இடைப்பாட் டம், ஈழம் பூட்சி, வண்ணாரப் பாறை, கண்ணாலக் காணம், குசக் காணம், ஓடக் கூலி, நீர்க்கூலி, நாடு காவல் முதலான பல்வகை வரிகளும் இருந்துள்ளன என்பது சுந்தர சோழனுடைய அன்பில் செப்பேடு களாலும், முதலாம் இராசராச சோழனுடைய ஆனை மங்கலம் செப்பேடுகளாலும் கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும் நன்கறியப்படுகின்றது’ (பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் பக்.502).

இப்படி வண்ணான் துணி துவைக்க வரி, ஈழவன் கள் இறக்க வரி, ஆட்டுக்கு வரி, மாட்டுக்கு வரி, ஏன் கலியாணம் செய்து கொள்ளக்கூட கண்ணாலக் காணம் விதித்த அரசர்கள் ஆலய வழிபாட்டிலிருந்து உழைக் கும் மக்களை அடித்து விரட்டியபின், அக்கொடியவர்கள் ஆரியப் பார்ப்பனர்களுக்கு அளித்த சலுகைகள் யாவை?

“வடமொழியாளர் தமிழகம் புகுந்த காலம் ஏறத் தாழ கி.மு. எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அறைகின்றனர். அவர்கள் தமிழகத்தில் தங்கள் வேதங்களின் கருத்துகளைப் பரப்பினர்; வேத வேள்விகளைச் செய்தனர். அவர் களது தெய்வபக்தியைக் கண்டு பாராட்டிய தமிழரசர் கள் அவர்களுக்கென்று பல புதிய ஊர்களை அமைத்த னர். அவர்கள் குறைவின்றி வாழ வசதி செய்தனர். அவருட் சிலரைத் தம் புரோகிதராகவும் பிற உயர் அலுவலராகவும் அமர்த்தினர்.

இங்ஙனம் தமிழர் சமுதாயத்தில் வேதியர் செல் வாக்குப் பெற்றமையால், தமிழ்நாட்டுச் சமயத் துறையில் புதிய வழிபாடுகள் நுழைந்தன. வடநாட்டுத் தெய்வங்கள் சில இந்நாட்டில் வழிபாடு பெறலாயின. முல்லை நிலக் கடவுளாகிய மாயோனுக்கு விஷ்ணு வின் அம்சங்கள் ஏற்றப்பட்டன. சிவன் உருத்திரன் ஆக்கப்பட்டான். இந்திர வணக்கம் தோன்றியது. பாலைநிலத் தெய்வமான கொற்றவை துர்க்கையாக மாற்றப்பட்டாள். குறிஞ்சி நிலக் கடவுளான முருகப் பெருமான் ஆறு தலைகளைக் கொண்ட கடவுளாக மாற்றப்பட்டான். இங்ஙனம் சமயத் துறையில் உண் டான மாறுதல்கள் பலவாகும்” (தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்கனார், பக்கம் 182).

பல்லவர் காலத்தில் நாயன்மாராலும் ஆழ்வார்களா லும் பாடப்பட்ட கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்கோயில்களாய் மாறின. தில்லை நடராசர் கோயில் ஒவ்வோர் அரசனாலும் சிறப்பிக்கப்பட்டது. அங்குள்ள கூரைகள் பொன்னால் வேயப்பட்டன. அப்பொன் தகடுகளில் ‘நமசிவாய’ என்னும் ஐந்து எழுத்துகளும் பொறிக்கப்பட்டன.

தில்லை கோயிலுக்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன. இவை தவிர தங்கம், வைரம், வீடுகள், மனைகள் எனச் சொத்துகள் ஏராளம். ஆண் டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருவாய் வருகிறது. அதையெல்லாம் அங்குள்ள தீட்சதப் பார்ப்பனர்கள் தின்று கொழுப்பதுடன் கோயில் சொத்துக்களைச் சுரண்டித் தின்னும் பொருச்சாளிகளாய் உள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் பேர் கயிலா யத்திலிருந்து இறங்கிப் பூமிக்கு வந்தார்களாம். மண்ணு லகிற்கு வந்தவர்களை எண்ணிப் பார்க்கையில் ஒருத்தர் காணவில்லையாம். 999 பேர் மட்டும் இருந்தார்களாம். திடுமென விண்ணிலிருந்து ஓர் ஒலி ‘நான் வேறெங்கும் போகவில்லை. இதோ, தில்லையில் இறைவனாக வீற்றிருக்கிறேன்.’ ஆகத் தில்லையில் இருக்கிற - இடையில் காணாமற்போன அந்த ஒருவன் தான் இறைவன். அங்குள்ள மற்ற தடிமாட்டுப் பார்ப்பனர்கள் எல்லாம் அவனுடைய உறவினர்கள். கொலை, கொள்ளை, குடி, கூத்தி என எல்லா ஒழுக்கக் கேடுகளும் அங்கு நடக்கின்றன. அதற்குக் காவல் துறையும் துணை. அரசும் துணை, நீதித்துறையும் துணை.

பெரியபுராணக் காலத்தில் இறைவனைக் காண வந்த தாழ்த்தப்பட்ட நந்தனை உயிரோடு எரித்தவர் கள் இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள்தாம். அப்படி அவனை உயிரோடு கொளுத்திவிட்டு நந்தன் நடராசனோடு இரண்டறக் கலந்துவிட்டான் என்று கதையளந்தார்கள்.

நாயன்மார்கள் பாடி வழிப்பட்ட இடம் தில்லைக் கோயில். ஆனால் 2000ஆம் ஆண்டில் அங்குள்ள சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமி என்ற தள்ளாத வயதுப் பெரியவரை அடித்துத் துவைத்து வெளியே போட்டார்கள் அப்பார்ப் பன அக்ரகாரக் கொழுப்பர்கள்.

இந்திய விடுதலைக்குமுன், வெள்ளைக்காரன் ஆண்ட காலத்திலேயே ‘கோயில் யாருக்குச் சொந்தம்’ என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ‘ஷெப்பர்டு’ என்ற ஆங்கில நீதிபதியும், முத்துசாமி தீட்சதர் என்ற இன்னொரு நீதிபதியும் ‘தில்லை கோயில் மக்களின் உடைமை. தீட்சதப் பார்ப்பனர்கள் கோயிலை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. 2008இல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராய் இருந்தபோது கோயிலை அறநிலையத் துறையிடம் ஒப்பளிக்க வேண்டும் என ஆணை வந்தது.

ஆனாலும் ஆட்சி மாற்றத்திற்குப்பின் ஜெயலலிதா வின் மறைமுகத் துணையோடும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வெளிப்படையான ஆதரவோடும், தில்லி யில் சுப்பிரமணியசாமி எழுப்பிய வாதங்களுக்குத் தோதாக மீண்டும் தில்லை கோயில் நிர்வாகம் தீட்சதர்களிடமே வழங்கப்பட்டுவிட்டது.

1971-இல், கருணாநிதி முதலமைச்சராய் இருந்த காலத்தில் ‘தகுதி அடிப்படையில் அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டம் -தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டுத் தில்லிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இங்கிருந்து போன சில உச்சிக் குடுமிகள் அந்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என உச்சநீதி மன்றத்தின் வழியாகவே சொல்ல வைத்துவிட்டனர்.

இதுபற்றி அறிஞர் வே. ஆனைமுத்து என்ன கருதுகிறார்?

1929 செங்கற்பட்டு மாநாடு, 1930 ஈரோடு மாநாடு, 1931 விருதுநகர் மாநாடு முதலானவற்றிலும்; 1932 ‘சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டக் கூட்டத்திலும்’, 1940 திருவாரூர் மாநாடு, 1944 சேலம் மாநாடு, 1945 திருச்சி மாநாடு, 1948 தூத்துக் குடி மாநாடு முதலான எல்லாவற்றிலும் ‘பிறவி வருண சாதி ஒழிப்பு’, ‘தீண்டாமை ஒழிப்பு’ மற்றும் தீண்டப் படாதாருக்கு சமூக சமுத்துவ உரிமை, எல்லாத் துறைகளிலும் இவர்களுக்கு முன்னுரிமை பற்றித் தவறாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3-11-1957இல் தஞ்சாவூரில் நடைபெற்ற சிறப்பு நிதி அளிப்பு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ‘பிறவி வருண சாதி ஒழிப்புக்கான நேரடிப் போராட் டத்துக்கு’ ஆணையிட்டது.

எப்படி அது நேரடிப் போராட்டம்?

குறைந்தது 1200 ஆண்டுகளாக எல்லா இந்துக் களின் பேரிலும் சுமத்தப்பட்ட -“நால்வருணப் பிறவி சாதி இழிவுக்கு ” -வழக்கம் (Custom), பழக்கம் (Tradi ti on), சாதி வழக்கம் (Caste Custom), பிராந்திய வழக்கம் (Territorial Custom), நம்பிக்கை ((Faith) என்கிற பெயர்களால் -“நால்வருணப் பிறவி சாதி உண்டு” என்பதை, 26-01-1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்புச் சட்டம் காப்பாற்றுகிறது. அப்படிக் காப்பாற்றுவதற்கு என்றே எழுதப்பட்டுள்ள அரசமைப் புச் சட்ட விதிகள் -13, 25, 26, 372 ஆகியவற்றை அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இந்திய அரசைக் கோரி நடத்தப்பட்ட அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம், நேரடியான - அமைதியான - தத்தம்மை வருத்திக் கொள்ளும் போராட்டமே ஆகும்.

அது கருதி அந்தச் சட்ட விதிகளைத் தமிழாக்கம் செய்து, அச்சுப்போட்டு, அதனை ஊர்தோறும் பரப்பும் கூட்டங்களை நடத்தியதன் விளைவாக, 26-11-1957இல், 10,000 கருப்புச்சட்டை வீரர்கள் அரசமைப் புச் சட்டத்தை எரித்தனர். அப்படிப்பட்ட ஒரு போராட்டம் அதுவரையில் உலகில் எந்த நாட்டிலும் நடக்கவே இல்லை (சிந்தனையாளன் அக்டோபர் 2014, பக்கம்-8).

அரசமைப்புச் சட்டவிதி 17 “‘தீண்டாமை’ ஒழிக்கப் பட்டுவிட்டது. ‘தீண்டாமை’யை எந்த வடிவத்தில் கடைபிடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நடப்பில் அவ்வாறு இல்லை.

கோயில் கருவறைக்குள் நுழைய பார்ப்பானுக்கு மட்டும்தான் அனுமதி என்பதோடு மட்டும் தீண்டாமை அனுசரிப்பு நிற்கவில்லை. கோயில்களில் பிரசாத லட்டு பிடிக்கும் வேலைக்கும் பார்ப்பனர்கள்தான் விண்ணப்பம் போட வேண்டும் என்று சில ஆண்டுகளுக்குமுன் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையே ஓர் ஆணை வெளியிட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயி லுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனச் சொல்லி இருந்தது. இந்த அறிவிப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்கு எதிரானது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது, “இத்தகைய பணிகளைப் பார்ப்பனர்கள்தான் செய்ய வேண்டும் என்ற பழக்க வழக்கத்தை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவு அங்கீகரிக்கிறது. இதன் அடிப்படையில்தான் உச்சநீதி மன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கும் தடைவித்துள்ளது” என்ற காரணங்கூறி  சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

நயவஞ்சகப் பார்ப்பனர்கள் நஞ்சான எண்ணத்தை நன்கு புரிந்துகொண்ட மேதை அம்பேத்கர், பழைமை வாதிகளுக்குத் தக்க பதிலடி தர முடிவு செய்து, இந்துச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார்.

ஆனால் அப்போது அரசமைப்புச் சட்டப் பேரவை யின் தலைவராய் இருந்த பாபு இராசேந்திரப் பிரசாத், அம்பேத்கர் மீது சீறிப் பாய்ந்தார். ‘இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் நான் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவர் பதவியிலிருந்தே விலகுவேன்’ என்று நேருவிடம் மிரட்டல் விடுத்தார். இறுதியில் இராசேந்திரப் பிரசாத்தும், நேருவும், ஆதிக்கவாதிகளும் வென்றனர். அண்ணல் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களும் தோற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோயில் உரிமை, வழிபாட்டு உரிமை இன்றுவரை யும் மீட்டெடுக்கப்படவில்லை.

நாயும், காக்கையும் நுழையும் கோயில் கருவறைக் குள் நம்மால் நுழைய முடியவில்லையே! சாய்க் கடைப் பெருச்சாளி சாமி சிலையைக் கண்டபடி பிராண்டுகிறது. மனிதனாகப் பிறந்த நம்மால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று ஏக்கத்துடன் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

‘குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்

கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு

மக்களிலே சிலர் மாத்திரம் அந்த

வகையிலும் கூட்டிலையோ?

நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி

நேரில் அக்கோயிலிலே - கண்டும்

ஒத்த பிறப்பினரை மறுத்தீர் உங்கள்

கோயிலின் வாயிலிலே!’ என ஏங்கினார்.

நமக்கான உரிமைகளை மேலும் மேலும் போராடி வென்றெடுப்போம். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கனவை நனவாக்குவோம்! 

Pin It

கட்டடமோ கருவறையோ
தேவையில்லை

திறந்தவெளி வழிபாட்டில்
கடவுளுக்கு
எந்த ஆட்சேபனையும் இல்லை

காற்றோ வெயிலோ
கடவுளை
ஒன்றும் செய்துவிட முடியாது

மழையில் நனைவதால்
கல்லான கடவுளுக்கு
காய்ச்சல் சளியா
பிடிக்கப் போகிறது?

வானம் முட்ட வீச்சரிவாளோடு
வெட்டவெளியில் நிற்கவில்லையா
அய்யனார்களும் குலசாமிகளும்

அவர்களும்
கடவுள்கள் தானே!

‘பூசாரி’ நனையக்கூடாது
என்பதற்காகவே
கருவறைகள் கட்டப்படுகின்றன

அண்ட பரம்பொருளை
அறைக்குள் பூட்டி
அடைத்து வைப்பதை
நல்லதென்று எவன் சொன்னான்?
அது ஆகக் கூடியதா என்ன?

அறையில் அடைந்து கிடக்கும்
கல்லுச் சாமிகளுக்கு
அர்ச்சனை செய்யும்
அய்யரின் மூஞ்சிகளைத் தெரியுமா?
வேறெதுதான் தெரியும்?

நாலு சுவற்றுக்குள் அடைபட்டு
கிணற்றுத் தவளைகளாய்க் கிடக்கும்
பெருந் தெய்வங்களைவிட
நட்ட நடுவெளியில் நிற்கும்
நாட்டார் தெய்வங்களே தேவலாம்

என்ன செய்ய?
கருவறைக்குள்
கறுவிக் கொண்டுதானிருக்கிறது
கடவுள்களின் ‘கல்நெஞ்சம்’

சாமிகள் கைநீட்டித் தின்றதாய்
சரித்திரமில்லை என்றாலும்...
‘படைத்தல்’ என்னவோ
நடந்து கொண்டுதானிருக்கிறது

கடவுளின் பெயரால்
சேர்த்து வைத்துள்ள
காசுபண நகைநட்டுகளுக்காக
இரும்புக் கதவுகளும் பூட்டுகளுமாய்
கன கச்சிதமாய் நடக்கிறது
‘காத்தல்’

சொல்லவே தேவையில்லை
மதங்களின் பெயரால்
நாடெங்கிலும் நடக்கிறது
ஆள்களை அழித்தலும்
கருவறையில் கற்பழித்தலும்
‘அழித்தல்’

ஆக...
ஒப்புக்கொள்ளலாம்
படைத்தல், காத்தல், அழித்தல்
என்னும் முத்தொழிலும்
சாட்சாத் “சாமிகளின்”
“ஜோலியென்று.”

- பாவலர் வையவன்

Pin It

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கருதப்படுகிற வேத கால பார்ப்பனிய மதமான இந்து மதம், இந்தியத் துணைக் கண்டத்துச் சமூகங்களுக்கு எண்ணற்ற கொடுங்குற்றங்களை இழைத்திருக்கிறது. சமூகத்தைக் குறுக்கு, நெடுக்குவாக்கில் பல துண்டுகள் போட்டு, ஒருவரை மற்றொருவரிடமிருந்து தொடர்பற்ற நிலையில் நிறுத்திவிட்டது. வலிமையான உடல் உறுப்புகள் உள்ளவர்களையும் உளவியல் ரீதியில் ஊனப்படுத்தி வைத்துவிட்டது. மூளைக்குப் பண்பாட்டு விலங்கு போட்டு, சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பெரும்வாரியான மக்களை முடமாக்கி வைத்துவிட்டது. தன்னைச் சீண்டுவோரிடம் கை, கால்கள் ஏதுமற்ற புழுகூட உடலை வளைத்து நெளிந்து தன் எதிர்ப்பைக் காட்டுகிறது. ஆறறிவும், ஆரோக்கிய மான உடல் அமைப்பையும் கொண்ட மனிதனோ அடக்குமுறைகளையும் தனக்கிழைக்கப்படும் கொடுமை களையும் கண்டு, சிறிய எதிர்ப்பைக் கூடக் காட்டாமல் சிறிதும் சலனமின்றிப் போய்க் கொண்டிருப்பதற்கு மூளைக்குப் போடப்பட்ட விலங்குதானே காரணம்?

இம்மண்ணில் விளைந்ததைச் சமமாகப் பங்கிட்டு மாண்போடு வாழ்ந்த பண்டைய பொதுவுடைமைச் சமூக வழிவந்தவர்களிடம் தனியுடைமை மூலம் ஆதிக்கப்படுத்துதல், அடிமைப்படுத்துதல் சிந்தனை எப்படி ஏற்பட்டிருக்கும்? இந்தியத் துணைக்கண்டத் தைப் பொறுத்தவரை, ஆரியரின் வருகைக்குப் பின்பே இவ்வாறெல்லாம் நடந்திருக்கின்றன. சாதி, மத, கடவுள் கோட்பாடுகள் எப்போது தலையெடுக்கத் தொடங்கினவோ, அப்போதே பிளவுகளும் பிணக்கு களும், ஆதிக்கமும் அடிமைத்தனமும் ஆரம்பமாகி விட்டன.

ஆதிகாலப் பொதுவுடைமைச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்று வழிநடத்திய பெண்ணினம், குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குப் பிறகு ஆணினத்திற்கு அடிமைப்பட்டுப் போனதுகூட இப்படித்தான். ஒட்டு மொத்தச் சமூகத்தையும் மேலிருந்து கீழாக-வருணங் களாகப் பிரித்துப் பிறகு பல்லாயிரம் உள்சாதிகளாகப் பெருக்கி, மேலிருப்பவனுக்குக் கீழிருப்போர் கட்டுப் பட்டவர்களாக ஆக்கி, அதுவே அடிமைப்பட்டுக் கிடப் பதற்கு அடிப்படையாகிப் போனது. மெல்ல, அதுவே பழக்கமாகியும் போனது. காலப்போக்கில் அதுவே சமூகச் சட்டமாகிப் போய்விட்டது.

பழைய பழக்கவழக்கங்கள், சடங்குகள், சம்பிரதா யங்கள், பல கடவுள்கள் இவைகளெல்லாம் ஆசியக் கண்டத்தின் கூறுகள். இதற்குக் காரணம், இங்கிருக் கும் நிலப்பிரபுத்துவம், உலக நாடுகளெல்லாம் நிலப் பிரபுத்துவத்திலிருந்து முதலாளியத்திற்கும், சோசலியத் திற்கும் வெகுவிரைவில் மாற்றமடைந்தாலும், ஆசியா வில் சற்றுத் தாமதமாகத்தான் மாற்றம் நடைபெற்றது.

ஆனாலும் ஆசிய நாடுகளில் நிலப்பிரபுத்துவப் போக்கு முற்றாக முதலாளியத்துவத்திற்கு மாற்றமடையவில்லை. பழமையில் ஊறித் திளைக்கும் இந்தியாவில் நிலப் பிரபுத்துவம் இன்றளவும் செல்வாக்குடன் இருப்பதற் குப் பார்ப்பனியம் மிக முக்கியக் காரணம். ஆசியக் கண்டத்தில் பெரும் நிலப்பரப்பிலிருக்கும் சீனாவில் மாற்றம் நிகழ்ந்ததற்குக் காரணம், புத்தமும், மார்க் சியமும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டதுதான்.

அதே ஆசியக் கண்டத்திலுள்ள இரண்டாவது பெரிய நாடான இந்தியாவில் நடந்ததோ வேறு. முதல் கொடுமை, பவுத்தத்தை நாட்டைவிட்டு விரட்டியது; இரண்டாவது பெரிய கொடுமை பொதுவுடைமைத் தத்தவம் உள்ளே நுழையவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பது. இதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவம் -சாதி -இந்துமதம் -பார்ப்பனியம். இந்த நேர்க் கோட்டில் சிந்தித்தால் இந்தியக் கட்டமைப்பிற்கும், பார்ப்பனியத்திற்கும் இடையிலான நேரடித் தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.

அனைத்து உரிமைகளும் அனைத்து மக்களுக் கும் கிடைக்க வேண்டும் என்கிற பொதுவுடைமைக் கொள்கைக்கு நேர் எதிரானது இந்து மதம். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களின் நலன் காக்க வேண்டி, மீதியுள்ள மக்களையும் பல்வேறு சாதிப் பிரிவுகளாகப் பிரித்து வைத்து ஏணிப்படி வரிசையில் சமூகத்தைக் கட்டமைத்து, அதன்படியே உரிமைகளையும் அனுபவிக்கும்படி அமைக்கப்பட்டதுதான் இந்து மதம். என்றைக்கோ பைபிளில் பூமியின் வடிவம் தட்டை என்று எழுதப்பட்டிருப்பதற்காக இன்று கிருத்துவத் தலைமை ‘போப்’ மன்னிப்பு கேட்டாரே, என்றைக்கோ பெண்கள் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று மனுநீதியில் எழுதியதற்காகவும் தலித்துகளைத் தீண்டத் தகாதவர்களாக ஆக்கியதற்காகவும் எந்த இந்து மதத் தலைவனாவது இன்றுவரை மன்னிப்புக் கேட்டானா? ஏன் கேட்கவில்லை? நாத்திகனையும், பவுத்தனையும் தன்னுள் சேர்த்து இழுக்கத் தெரிந்த இந்து மதத்திற்கு மாற்றத்தையும், அறிவையும் ஏற்றுக்கொள்ளத் தெரியாதது ஏன்? அவ்வளவு காட்டுமிராண்டித்தன மான மதம்தான் இந்துமதம்.

வேள்வி என்ற பெயர்களில் விலங்குகளை நெருப் பில் போட்டுப் பொசுக்கித் தின்றவர்கள், தாம் உழைக் காமல் மற்றவரின் உழைப்பைச் சுரண்டுபவர்கள் பார்ப்பனர்கள் எனச் சொல்லி 2500 ஆண்டுகளுக்கு முன்னே கேள்விகள் கேட்டு அறிவுப் புரட்சியை ஏற் படுத்தி, பார்ப்பனர்களை வடநாட்டிலிருந்து விரட்டிய வர் புத்தர். விரட்டப்பட்ட பார்ப்பனர்கள் தென்னாட்டில் தஞ்சம் புகுந்து, இந்நாட்டு வளங்களைத் தமதாக்கிக்

கொண்டார்கள். அந்தக் கூட்டத்து வெள்ளைத் தோலி லும், நயவஞ்சகப் புத்தியிலும் வீழ்ந்தே போனார்கள், ஏமாந்த சோணகிரிகளான இந்நாட்டு வீர மன்னர்கள். மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி. எழுச்சியுடன் எழுந்த புத்தகத்தை வீழ்த்தி, மீண்டும் இந்து மதம் கோலோச்சியது. பிறகென்ன? மீண்டும் மனுநீதி ஆட்சிதான். இந்திய அரசமைப்புச் சட்டம் இதற்குப் பாதுகாப்பு. நாடாளுமன்ற ஓட்டு அரசியல் இதற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. படித்தவர்கள் எல்லோருமாக இன்றளவும் விலை போய் கொண்டி ருக்கிறோம்.

வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலையாகி 67 ஆண்டுகள் கடந்தும் கூட, அதன் உரிமைகள் எல்லாத் தரப்பு மக்களிடமும் சென்று சேரவில்லை. வெள்ளைக் காரன் வருவதற்கு முன்னால் அடித்தட்டு மக்களின் உரிமைகள் எப்படி நசுக்கப்பட்டனவோ அதேபோலத் தான் இன்றும் உள்ளது. இடைப்பட்ட காலத்தில் விண்ணை முட்டும் அளவிற்கு முதலாளித்துவம் வளர்ந்திருக்கிறது. விஞ்ஞானம் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே உள்ளங்கை அளவுக்குச் சுருங்கியிருக்கிறது. ஆனால் பழக்கவழக்கங்களில் பழமையைக் காப்பதில் மட்டும் நாம் இன்னும் காட்டு மிராண்டிக் காலத்திலேயே இருக்கிறோம். இல்லை யென்று மறுக்க முடியுமா?

உலகில் எங்குதான் மதங்களில்லை. அதில் கூடப் பல உட்பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டுமே இருக்கிற இந்து மதத்தை மற்ற மதங்களைப் போல் நினைக்கக் கூடாது. ஏனெனில் மற்ற மதங் களுக்கு ஒரே ஒரு புனித நூல் இருக்கும்; ஒரே ஒரு கடவுள் இருப்பார். அம்மதத்தை வழிநடத்த ஒரு மதத்தலைவர் இருப்பார். இங்கு அப்படி இல்லையே! கொசுக்கூட்டம் போல் கடவுள்கள், புற்றீசல்கள் போல் மதத்தலைவர்கள். காமமும், கொலைகளும் நிறைந்த மத நூல்கள். இவைகளைக் கொண்ட இந்து மதம் எப்படிப்பட்டதாக இருக்கும்? மனித உரிமை மீறல்களின் தொகுப்புத்தான் இந்து மதம். சாதிகள் என்ற சாக்க டையில்தான் இந்து மதம் என்கிற புழு வாழ்ந்து கொண்டிருக்கிறது. ‘பிரமிடு’ கூம்பு வடிவம் கொண்ட இந்து மதத்தில் மேலிருப்பவனுக்குக் கீழே இருப்பவன் அடிமை. அதுமட்டுமல்லாமல் கீழே இருப்பவன் எல்லோருமே தீண்டப்படாதவன். இதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டமே பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மனுநீதி சட்டப்படி தலையில் பிறந்தவன் பிராம ணன். தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன் வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும் பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த அடுக்கில் அடியில் இருப்பவன் பஞ்சமன் என்றும் அவன்தான்

தீண்டப்படாதவன் என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் அம்மக்களை ஊருக்கு வெளியே குடிய மர்த்திவிட்டார்கள். குடியிருப்பு, கோயில், கடவுள், சுடு காடு எல்லாமே தனிதான் அம்மக்களுக்கு. பார்ப்பனர் களுக்கு மீதியிருக்கும் அனைத்து இந்துக்களுமே தீண்டத்தகாதவர்கள்தான், இந்து சனாதனச் சட்டப்படி. இதை எந்த இந்துமத முட்டாளும் உணரவில்லை. பார்ப்பானுக்கு மற்றவர்களனைவரும் தீண்டப்படாத வர்கள் என்பதோடு நிற்கவில்லை இந்துமதம்.

ஏனை யோருக்கும் தீண்டப்படாத வகுப்பு உள்ளது என்ற நஞ்சையூட்டிய இந்துமதம் அவர்களை நாம் பார்ப் பானுக்குத் தீண்டத்தகாதவனாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கு ஒரு அடிமை கிடைத்தால் போதும் என்கிற இழிந்த மனப்பான்மையில் இருக்கிறார்கள் எல்லா இடைநிலை சாதி இந்துக்களும். “நான் யாருக் கும் அடிமையில்லை; எனக்கு யாரும் அடிமை யில்லை” என்ற அம்பேத்கரை நாகரிகமே இல்லாமல் இன்றளவும் இழிவுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் தானே இவர்கள்.

இந்திய அரசியல் வானில் சுடர்விடும் சூரியனான மேதை அம்பேத்கர், தன் வாழ்நாளில் எவ்வளவோ தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். தொடக்கப் பள்ளியில் படிக்கும்போது மற்ற பிள்ளை களுடன் சேர்ந்து பழகிவிடாவண்ணம் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறார். பள்ளிக்கு வரும்போது புத்தகப் பையுடன் தவறாமல் ஒரு கோணி சாக்கும் கொண்டு வர வேண்டும். தண்ணீர் குடிக்கும்போது பானை யைத் தொட்டுவிடக்கூடாது. அதைக் கண்காணிக்க ஒரு ப்யூன் கூடவே நிற்பான். தனக்கு முடிவெட்டிவிட எந்த நாவிதரும் தயாராய் இல்லாததினால் அவரது அக்காவே அவருக்கு முடிவெட்டிவிட்டிருக்கிறார். ஒரு முறை வெளியூரிலிருக்கும் அவரது அப்பாவைப் பார்க்கப் போகும்போது மாட்டு வண்டிக்காரன் வண்டியில் ஏற்றத் தயாராக இல்லை.

இவையெல்லாம் சிறுவனாக இருந்தபோதே அவர் அனுபவித்த கொடுமைகள் என்றால், மேல்நாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற, இராணுவ உயரதிகாரியாகப் பணியில் சேர்ந்த போது, கடைநிலை ஊழியர்கூட கோப்புகளைக் கையில் தர மறுத்து, தூக்கிப் போட்டிருக்கிறார்கள். மாலையில் வேலை முடித்து எழுந்தவுடன் அவர் அமர்ந்த இருக்கை கழுவப்பட்டிருக்கிறது. அவர் நடந்துவந்த நடை விரிப்பு துவைக்கப்பட்டிருக்கிறது. அவர் தங்குவதற்கு இடம்தர மறுத்திருக்கிறார்கள். அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந் தவர் என்பதினால் அவர் படிப்பையும் மதிக்கவில்லை. அவரையும் மதிக்கவில்லை. இதுபோல் அவரது வாழ் வில் மிக உயர்கல்வி கற்று உயர் பதவியில் அமர்ந்த போதும் சாதியின் பேரால் அவர் அவமானப்படுத் தப்பட்டே உள்ளார்.

துணைப் பிரதமராக இருந்தபோது பாபு ஜகஜீவன் ராம், சம்பூர்ணநாத் என்பவரின் சிலையைத் திறந்து வைத்தார். தலித் ஒருவர் உயர்சாதிக்காரரின் சிலையைத் திறந்ததினால் அசல் சிலை தீட்டாகிவிட்டது எனக்கூறி, பிறகு கங்கை நீரால் சிலையைக் கழுவிச் சுத்தம் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு. இதுபோன்ற அவமான செயல் வேறு எந்த நாட்டிலாவது நடந்திருக்குமா?

அம்பேத்கர் காலத்தோடு, பாபு ஜகஜீவன்ராம் காலத்தோடு இது முடிந்திருந்தால் -சாதி இந்துக்கள் திருந்தியிருந்தால், குறைந்தபட்சம் தலித்துகள் இன் றைக்குச் சுயமரியாதையோடாவது வாழ்ந்திருப்பார்கள். இந்து மதம் அவர்களுக்கு அதையா கற்றுக் கொடுத்திருக்கிறது? எந்தப் பதவியில் இருந்தாலும் தலித் மக்களை இழிவாகத்தான் பார்க்கிறார்கள்; நடத்துகிறார்கள். இன்றைக்கு பீகாரின் மாநில முதல் வராக இருக்கும் மாண்புமிகு ஜிதன்ராம் மஞ்ஜி அவர் கள் வெளிப்படையாக அண்மையில் பேசியிருக்கிறார். அதைக் கேட்போம்.

“நான் மாநில முதல்வராக இருந் தாலும்கூட, இப்போதும் சில சக்தி வாய்ந்த மக்கள் என்னைத் தீண்டத்தகாதவராகத்தான் நடத்துகிறார் கள். ஏனெனில் நான் மகா தலித் வகுப்பைச் சேர்ந்த வன் என்பதனால்தான் இவ்வாறு செய்கிறார்கள். மதுபானி மாவட்டத்திலுள்ள ஒரு கோயிலுக்குச் சிறப்புப் பிரார்த்தனை செய்ய வருமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக் கோயிலுக் குள் சென்றேன். ஆனால் கோயிலுக்குச் சென்று திரும்பிய பிறகு கோயிலையும் அங்கு உள்ள சிலையையும் கழுவியதாக எனக்குத் தகவல் கிடைத்தது.

சில வேலை களை முடித்துக் கொள்வதற்காகவும் அல்லது சில சலுகைகளுக்காகவும் எனது காலை மக்கள் தொடு கின்றனர். ஆனால் சமக அளவில் வருகையில் அவர்கள் என்னை இன்றும் தீண்டத்தகாதவராகத் தான் நடத்துகிறார்கள்” என்று தனக்கு நேர்ந்த அவ மானத்தைச் சில மாதங்கள் கழித்துத் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்து மதம் தலித்துகளை முடக்கி வைத்திருப்பது போலவே சமூகத்தில் சம விகிதத்தில் இருக்கும் பெண் களையும் முடக்கி வைத்திருக்கிறது. அம்பேத்கரின் கடும் உழைப்பினாலும், போராட்டத்தினாலும் உரு வாக்கப்பட்ட சட்டத்தினால் பெண்கள் ஓரளவிற்கு கல்வி, பொருளாதாரம், பதவி, அந்தஸ்து, உரிமை போன்ற எல்லாத் துறைகளிலும் இப்போதுதான் முன் னேறிக் கொண்டிருக்கிறார்கள். இதைக்கூட இந்துத்துவ வாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் நாடாளுமன்றத்தில் 33 விழுக்காடு பெண்களுக் கான இடஒதுக்கீடு மசோதா சட்ட வடிவம் பெறாமல், தேடித் தேடிக் காரணங்கள் கற்பித்து நடைமுறைப் படுத்தப்படாமல் இழுத்தடித்துக் கொண்டேயிருக் கிறார்கள்.

ஆண்கள் சாதிக்கின்ற அத்தனைத் துறைகளிலும் பெண்களும் சாதிக்கிறார்கள். ஆண் துணையில்லாமல் பெண்களால் வாழ முடியாது என்கிற கோட்பாடு உடைந்து தூள் தூளாகிவிட்டது. ஆணோடு உடல் உறவு கொள்ளாமலேயே பெண்களால் பிள்ளைகூடப் பெறமுடியும் என்ற நிலை எட்டப்பட்டுவிட்டது. சேர்த்து வைத்த உடைமைகளுக்கு வாரிசு வேண்டியே மனைவி என்கிற முறையைக் கொண்டு வந்தான் ஆண். அவள் தனக்கு மட்டுமே உடைமையானவள் என்று அறிவிக்கத்தான் தாலி கட்டும் முறையைக்கூடக் கொண்டுவந்தான். இல்லறம் என்பது ஆண்-பெண் சேர்ந்தால் மட்டுமே என்பது அல்ல. பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்தல் கூட இல்லறம்தான் என்பதை உலக நாடுகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இதுபோன்ற கருத்துக் களைத் தாங்கி வருகின்ற திரைப்படங்களைக் கூட நெடிய போராட்டத்திற்குப் பிறகுதான் அனுமதிக்கிறார் கள். இங்கே இவற்றைத் திரையிடும் திரையரங்கு களைத் தாக்கி உடைக்கிறார்கள் ஆணாதிக்க குணம் கொண்ட இந்துமத வெறியர்கள். கருத்தைக் கருத்தால் சந்திக்கத் தெரியாத கழுதைகள். சாதி ஆதிக்கத்தையும், ஆண் ஆதிக்கத்தையும் ஒருங்கே பெற்றிருக்கும் சட்டத்துறை கூட இப்போதுதான் தனது மயக்கத்தை மெல்ல மெல்லக் கலைத்துக் கொண்டு வருகிறது. பெண்கள் முன்னேறி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாததினால்தான் முன்னெப்போதும் இல்லாத அளவில் பாலியல் வன்முறைகள் பெருகி வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு ஆண் எப்படி ஒரு பெண்ணைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முறையில் செயலாற்றிக் கொண்டி ருப்பதே இந்து மதத்தின் நுண்ணரசியல். சாதியைக் காப்பதும், உடைப்பதும் அவள் கையில்தானே இருக் கிறது; அதற்காகத்தான் குடும்பம், ஒழுக்கம், கட்டுப் பாடு, கற்பு, மரபு, பரம்பரை போன்றவைகளைக் கற்பித் துக் கொண்டிருக்கிறார்கள். உலகிலுள்ள மற்ற மதங் களும் கிட்டத்தட்டப் பெண்களை அதற்காகத்தான் பயன்படுத்திக் கொண்டு வந்தார்கள்; வருகிறார்கள். கடவுள் ஆணைப் படைத்தான். அவனுக்குத் துணை யாகப் பெண்ணைப் படைத்தான். இருவரும் இணைந்து பிள்ளைகள் பெறுகிறார்கள் எனக் கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படியானால் ஆணுமல்லா மல், பெண்ணுமல்லாமல் மூன்றாவது ஒரு பாலி னத்தைப் படைத்து யார்? எதற்காகப் படைத்தான்? என்று சம்மட்டியால் அடிப்பதுபோல் பல கேள்விகள் அவர்களுக்கு முன்நிற்கின்றன.

மூன்றாம் பாலினர் என்றவுடன் சட்டென சில பெயர்கள் நம் நினைவுக்கு வரும்; பேடி, அலி, அரவாணி, ஒன்பது, பொட்ட, ரெண்டுங்கெட்டான், ஏழரை.. ஒன்பதரை... போன்ற பெயர்களில் அவர் களை அழைத்து நாம் சுகம் கண்டு கொண்டிருக் கிறோம். அரசு அவர்களுக்கு திருநங்கை, திருநம்பி என்ற இலக்கியக் காரணப் பெயர் சூட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டது. சமூக, அறிவியல் அடிப்படையில் அவர்களின் நிலையை நாம் ஆராய முற்படுவதில்லை.

மத அடிப்படையில் மட்டுமே அவர்களை அணுகு வதால் நமக்கு நியாயம், அநியாயம் தெரிவதில்லை. அறிவியல் அடிப்படையில் உற்றுநோக்கிப் பல கேள்வி களுக்கு விடை தேடியாக வேண்டும். பள்ளிப் பாடத் தில் கூட நாம் ஆண்  பெண் , அது  என்று தான் படிக்கிறோம். அதாவது ஆண்மை, பெண்மை, அஃறிணை என்று பொருள். அப்படியானால் “அவன்” இருக்க வேண்டும். அவனுக்காக “அவள்” இருக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு மேல் இருப்பதை விட்டு விரட்ட வேண்டும். இதுதான் அறிவியலற்ற சமூகப் பார்வை. அவனுக்கும், அவளுக்கும் அப்பாற் பட்ட ஒரு “பால்” கணக்கில் கொள்ளப்படவில்லை. அப்படியானால் சமூகத்தை அறிவியல் கண்கொண்டு பார்க்கவில்லை என்றுதானே அர்த்தம்.

ஒரு பெண்ணின் கருவறையில் கரு உருவாகும் போது நிறமூர்த்தங்கள் (ஊhசடிஅடிளடிஅநள) தான் தீர் மானிக்கிறது. ஓ என்ற குரோமோசோமும் லு என்ற குரோமோசோமும் சேர்ந்தால் அது ஆண்; ஓ என்ற குரோமோசோமும் ஓ என்ற குரோமோசோமும் சேர்ந்தால் அது பெண்; அவ்வளவுதான். இவர்கள் மட்டுமே சமூகம் எனக் கற்பிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஓ என்ற இரண்டு குரோமோசோமும் லு என்ற குரோமோசோமும் அல்லது ஓ என்ற ஒரு குரோமோ சோமும் லு என்ற இரண்டு குரோமோசோமும் சேர்ந்து கூடப் பாலினம் உருவாகிறது. அதுவும் மனித உயிர்தானே? ஏன் அவர்களைக் கணக்கில் வைக்கத் தவறினோம்? பிள்ளை பெறும் தன்மை அவர்களிடம் இல்லாததினால்தானே? பிள்ளைப்பேறு இல்லாத பெண்ணை மலடி என்றவர்கள், மூன்றாம் பாலித் தாரை எப்படி நடத்துவார்கள்? அவர்கள் மனிதர்கள் என்பதைக்கூட மறந்துவிட்டார்கள்...

அவர்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. அறிவு உண்டு. திறமை உண்டு. அவர்களும் சாதனையாளர்கள்தான். நமது முட்டாள் தனத்தால் அவர்கள் வேதனையில் உழல்கிறார்கள். அவர்களை மனிதர்களாக மதிக்காததினால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிறது. சமூகம் அவர்களை இன்றளவும் கேலி செய்து கேவலப்படுத் திக் கொண்டிருக்கிறது. ஏதோ பெயரளவிற்கு அரசு அவர்களுக்குச் சில சலுகைகள் வழங்கி தப்பித்துக் கொள்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் சமூகக் கொடுமையால் ஒன்று வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இல்லை யேல் விரட்டியடிக்கப்படுகின்றனர். மனித உடலையும் யானைத் தலையையும் கொண்ட கற்பனை உருவத் தைக் கடவுள் என்று ஏற்றுக்கொண்டு வழிபடும் நாம், மனித உடலையும்மனித உணர்ச்சிகளையும் கொண்ட ஒரு மனித உயிரை அவமானப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். எவ்வளவு கேவலப்பட்டு வாழ்ந்தாலும் அதிலும் சிலர் சாதனையாளர்களாக வெளியில் மின்னிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அவர்களை அரவணைக்கவில்லை என்றாலும் அவர் களுக்கு வாழ்த்துக்களாவது சொல்ல முயற்சிப்போம்.

அண்மையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட மது கின்னர் என்ற 36 வயதுடைய திருநங்கை ஒருவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ச.க. வேட்பாளர் மஹாவீர் குருஜியை விட 4,537 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற் றுள்ளார். தலித் வகுப்பைச் சார்ந்த மதுகின்னர் பேசு கிறார். கேட்போம் : “மேயர் தேர்தலில் போட்டியிட்ட நான் பிரச்சாரத்தின் போது எனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்தேன். முதன்முறையாக இத்தேர்தலில் போட்டியிட வைத்ததும், வெற்றி பெற வைத்ததும் உள்ளூர் மக்கள்தான். அவர்களின் ஆதரவினால்தான் இத்தேர்தலில் என்னால் வெற்றி பெற முடிந்தது” என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

வெறும் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மதுகின்னர், பல்வேறு வேலைகள் செய்தும், இரயில்களில் ஆடிப் பாடி பணம் சேகரித்தும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ள தாகத் தெரிவிக்கிறார்.

ஊடகத் துறையிலும், திரைப் படத் துறையிலும் மெல்ல முன்னேறி வரும் இவர் களை இன்றளவும் நாம் பிச்சைக்காரர்களாகவும், பாலியல் தொழிலாளர்களாகவும் பார்ப்பது நமக்கு அறிவில் சிந்தனையில் இருக்கும் ஊனத்தையே காட்டுகிறது. அவர்களை ஆதரிக்கவில்லையென்றாலும் கேவலப் படுத்தாமலாவது இருப்போம். அவர்கள் வாழ வழி விடுவோம்.

தலித்தாகப் பிறந்தாலும்

மூன்றாம் பாலினரானாலும்

அவர்கள் இம்மண்ணின்

மக்கள் (மைந்தர்கள்) அல்லவா?

அவர்களுடன் கரம் கோப்போம்

சாதி, மதப் பாலின வேறுபாட்டைப் போக்குவோம்! 

Pin It