நடுவண் அரசில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துவிட்ட அதிகார வெறியில் சங்பரி வாரங்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிராகப் பல தலைகளைக் கொண்ட கொடிய பாம்பைப் போல் நச்சுத்தனமான கருத்துகளை உமிழ்ந்து வருகின்றன. கோயபெல்சை விஞ்சும் வகையில் பொய் மூட்டை களை அவிழ்த்துவிடுகின்றன. கரவான கயமையான திட்டங்களைத் தீட்டுகின்றன. தீவிரமான தேசியம் எனும் பாசிசக் கூச்சலை எழுப்புவதன் மூலம், முன்பே மெலிந்து நலிந்து கிடக்கும் நாட்டின் அடிப்ப டையான சமூகக் கட்டமைப்பையே அச்சுறுத்துகின்றன. மத அடிப்படையிலான வகுப்புவாத மோதல் தவிர்க்க முடியாத ஒன்று என்ற நிலைக்கு நாட்டைத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் பிரிவான பாரதிய சனதாக் கட்சி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சியின் எண்ணற்ற ஊழல்களால் மக்களிடம் உருவாகியிருந்த வெறுப்பைத் தனக்கு ஆதாயமாகப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியது. இதற்காக வண்டியை ஓட்டுபவன், குதிரையின் முன் னால் கேரட்டைத் தொங்கவிடுவது போல, வாக்கா ளர்கள் முன்னால் ‘வளர்ச்சி, வளர்ச்சி’ என்ற முழக்கத் தை முன்னிறுத்தினார் மோடி. பெருமுதலாளியக் குழுமங்கள் பா.ச.க.வின் தேர்தல் செலவுக்காகக் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டின.

சங்பரிவாரத்தின் குரங்குப்படை தன்னுடைய வகுப்புவாதத் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்து வதன் மூலம் இந்துத்துவக் கொள்கைக்கு மேலும் வலிமையூட்ட முயல்கிறது. இந்த வேலையில், சங்பரி வாரங்களின் பல்வேறு கிளை அமைப்புகள் மட்டு மின்றி, நடுவண் அரசில் அமைச்சர்களாக உள்ள சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இரானி மற்றும் பா.ச.க.வின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவற்ற, கேடான கருத்துகளைக் கூறி வருகின்றனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சராக இருக்கும் ஸ்மிருதி இரானி, சமற்கிருதத்தைப் பள்ளிகளில் திணிக்கும் முயற்சியும், பகவத் கீதையை இந்தியாவின் தேசிய நூலாக ஆக்க வேண்டும் என்கிற சுஷ்மா சுவராஜின் கூற்றும் இந்துத்துவத் திசை வழியிலானவையே!

சங்பரிவாரங்களின் நீண்டகால கோரிக்கைகளான, காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புத் தன்னுரிமை அதி காரம் வழங்கும் அரசமைப்புச் சட்ட விதி 370-யை நீக்க வேண்டும். முசுலீம்களின் மதம் சார்ந்த குடிமை  இயல் உரிமைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட பொதுக்குடிமைஇயல் சட்டம் கொண்டு வரவேண்டும். மற்றும் வாக்களித்தலைக் கட்டாயமாக்க வேண்டும் என்பன சங்பரிவாரங்கள் அடுத்து எழுப்பவுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.இன் சர்சங்சாலக் (முற்றதிகாரம் பெற்ற தலைவர்) மோகன் பகவத் “இந்தியா ‘நம்’ இந்துக்களின் தேசம்; 2012 க்குள் எல்லா முசுலீம்களையும் கிறித்துவர்களையும் இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும்” என்று அறிவித் திருக்கிறார். ‘தாய் மதமான இந்து மதத்துக்குத் திரும்பு தல்’ (Ghar Wapsi-வீடு திரும்புதல்) என்ற திட்டத் தைச் செயல்படுத்துமாறு தன்னுடைய குரங்குப்படை களுக்குக் கட்டளையிட்டுள்ளார்.

கலப்படமற்ற அப்பட்டமான பொய் :

பொய்யுரைத்தலே சங்பரிவாரங்களின் வலிமை யான பரப்புரை ஆயுதமாக இருக்கிறது. அறிவுக்குப் புறம்பான அவற்றின் செயல்களை நியாயப்படுத்த பொய்மையாக வரலாற்றைத் திரிக்கிறது. முசுலீம் களும் கிறித்தவர்களும் இந்து மதத்திற்குத் திரும்பிட, மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பது, திருடர் களால் களவாடப்பட்ட பொருளை மீட்டுவருதல் போன்றது என்று விளக்கமளிக்கிறார் மோகன் பகவத். ஆனால் முசுலீம்களாக ஏன் மதம் மாறினார்கள் என்று அவர் கள் போற்றுகின்ற விவேகானந்தர் கூறுகிறார் :

“இந்தியாவில் உள்ள ஏழைகளில் இந்த அளவு எண்ணிக்கையில் முசுலீம்கள் இருப்பது ஏன்? வாள் முனையால் மிரட்டி அவர்கள் முசுலீம்களாக மதம் மாற்றப்பட்டனர் என்று கூறுவது முட்டாள்தனமான தாகும். பார்ப்பனர்களிடமிருந்தும் சமீன்தார்களிட மிருந்தும் விடுதலை பெற வேண்டியே அவர்கள் மதம் மாறினர்” (சுவாமி விவேகானந்தர் நூல் திரட்டு தொகுதி-8, பக்கம் 330).

முசுலீம் ஆட்சியாளர்கள் வாள்கொண்டு மதம் மாற்றுவது என்று முடிவு செய்திருப்பார்களேயானால் மோகன் பகவத்தின் முன்னோர்களை இந்துக்களாக நீடிக்க விட்டு வைத்திருப்பார்களா? 800 ஆண்டுகள் நீடித்த முசுலீம்கள் ஆட்சிக்காலத்தில் அவர்களால் இந்தியாவை ஒரு முசுலீம் நாடாக மாற்றி இருக்க முடியும். வாள்முனையில் முசுலீம்களாக மதம் மாற்றி னர் என்று தொகாடியா, மோகன் பகவத் போன்ற வர்கள் கூறுவது, நச்சுத்தனமான வகுப்புவாதத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டதேயாகும். முசுலீம்

ஆட்சியாளர்கள் மதமாற்றத்தைத் தங்கள் குறிக்கோ ளாகக் கொண்டிருக்கவில்லை. இந்து அரசர்கள் தங்கள் குடிமக்களை அடக்கியாளவும், கொள்ளையடிக்கவும் வாளை எவ்வாறு பயன்படுத்தினார்களோ, அதே தன்மையில்தான் முசுலீம் மன்னர்களும் வாளைப் பயன்படுத்தினர்.

கீழ்ச்சாதியினர் முசுலீம்களாக மாறியதற்கு முதன் மையான காரணம் பகவத்தின் முன்னோர்களான பார்ப்பனர்கள் கீழ்ச்சாதியினரை இழிவாக நடத்திக் கொடுமைப்படுத்தியதேயாகும். இசுலாமிய மதத்திற்கு மாறினால் சமத்துவமும், சகோதரத்துவமும் கிடைக் கும் என்று கருதி அவர்களாகவே விரும்பி முசுலீம் களானார்கள். குறிப்பாக இசுலாமிய சுஃபி துறவியரின் வாழ்க்கை முறையும், செயல்பாடுகளும், கீழ்ச்சாதி யினரிடம் மதமாற்ற எண்ணம் உருவாகக் காரணங் களாக இருந்தன. சுஃபி துறவியர் கீழ்ச்சாதி மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று அவர்களுடன் கலந்து பழகினர். சாத்திரங்களின் பேரால் கீழ்ச் சாதியினர் இந்துக் கோயில்களில் நுழையவிடாமல் தடுக்கப்பட்ட னர். அதேசமயம், சுஃபிகளின் மசூதிகளில் கீழ்ச்சாதி யினர் ஆரத்தழுவி வரவேற்கப்பட்டனர்.

இசுலாம் மதத்தை அடுத்து, கீழ்ச்சாதியினர் கிறித்துவ மதத்தைத் தழுவினர். கிறித்துவமத ஆட்சியாளர்கள் அல்லது கிறித்துவப் பாதிரிகளின் கட்டாயத்தாலோ, பொருளாசை காட்டியதாலோ கிறித்துவர்களாக மதம் மாறவில்லை. அவர்களின் சொந்த விருப்பத்தின், முடிவின் அடிப்படையிலேயே கீழ்ச்சாதியினர் கிறித்துவ மதத் துக்கு மாறினர். இந்துமத சாதியக் கட்டமைப்பில் கீழ்ச் சாதியினர் காலங்காலமாக ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப் பட்டும் வந்தமையே மதமாற்றத்தின் மூலகாரண மாகும். இழிவுபடுத்தல், ஒதுக்குதல், ஒடுக்குதல் என்கிற கொடிய அடிமை முறை நீண்ட நெடுங்காலம் நீடித்தமையே இந்தியத் துணைக் கண்டத்தின் பின் தங்கிய நிலைக்குக் காரணமாகும்.

ஆனால் இந்தப் பின்தங்கிய நிலைக்குக் காரணம் ஆயிரம் ஆண்டு களுக்குமேல் நீடித்த, அந்நியர்களான இசுலாமியரின் -ஆங்கிலேயரின் ஆட்சியே என்று சங்பரிவாரங்கள் பொய்யான குற்றச்சாட்டைக் கூறுகின்றன. வருணா சிரம-சாதிய-அடிமைமுறையை இந்தியாவின் பெருமிதம் என்று சொல்கின்றன. உண்மையில் இந்தியா பெருமை கொள்ளத்தக்க நிலையை எய்த வேண்டுமாயின், மக்களைப் பிளவுபடுத்துகின்ற இந்தச் சமூக அமைப்பு குறித்து, பகவத்துக்களும் தொகாடியாக்களும் மீளாய்வு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் மீண்டும் பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவுவதே பெருமை எனக் கருதுகின்றனர். இந்த நவீன காலத்திலும் பார்ப் பனியத்தால் இந்தியாவுக்கு இழிவும் அவமானமுமே உண்டாகின்றன.

ஆபத்தின் அறிகுறிகள்

பா.ச.க.வின் தேர்தல் வெற்றிக் களிப்பின் வெறி சங்பரிவாரங்களைக் கள்குடித்த குரங்கு போல் குதி யாட்டம் போட வைத்துள்ளது. சிக்கல்களில் சிக்கித் தத்தளிக்கும் அரசியல் சூழ்நிலைமைகளில் வகுப்புவாத உணர்ச்சியை உசுப்பிவிட்டு, அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடையும் உத்தியைக் கையாள்வது பா.ச.க.வுக்குக் கைவந்த கலையாகும். எனவேதான் 2002ஆம் ஆண்டில் குசராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைத் தாக்குதலுக்குப்பின் நரேந்திர மோடி மூன்று முறை முதலமைச்சரானார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 80 தொகுதிகளில் 74 இடங்களை பா.ச.க. கைப்பற்ற முடிந்தது.

ஆனால் மக்கள் மதவாத அடிப்படையில் எப்போதும் வாக்களிப்பார்கள் என்று எண்ணுவது முட்டாள்தனம். 2014ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வகுப்புவாத உத்தியைவிட, வளர்ச்சி என்ற முழக்கமே முதன்மையான காரணியாக இருந்தது. முசுலீம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் எதிரான வகுப்புவாத உணர்ச்சியை ஒருமுகப்படுத்துவதன் மூலம் தன் செல்வாக்கை நிலைபெறச் செய்ய முடியும் என்று சங்பரிவாரங்கள் கருதுவது சிறுபிள்ளைத்தன மான, முதிர்ச்சியற்ற அதன் அறிவு நிலையையே புலப்படுத்துகிறது.

நவீன காலத்தில், கொடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தாமல் மதம், ஆன்மிகம் போன்ற மெல்லிய இழைகளைக் கொண்டு அரசியலைக் கட்டமைக்க முடியாது. மதத்தை முன்னிலைப்படுத்தி னால் அரசியல் எந்த அளவுக்கு அவல நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்குப் பாகிஸ்தான் நம் கண்முன் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே சங்பரிவாரங் கள் தங்கள் அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்.

அரசு என்பதிலிருந்து மதம் விலக்கி வைக்கப்பட் டுள்ளது என்கிற பொதுவாக கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மை நிலையோ இதற்கு நேர் எதிராக உள்ளது. இதன்விளைவாக நாம் மதவாத - குறிப்பாக இந்துத்தவத்தின் அருவருப்பான அச்சுறுத்தலுக்குள் ளாகி அல்லல்படுகிறோம். ஆளும்வர்க்கம் தன்னுடைய நலனுக்காக, அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்துவிட்டது. சமூக மற்றும் வகுப்பு நீதிக்கு இட மளிக்க வேண்டுமென்ற எண்ணத்தால்தான் சாதி மற்றும் வகுப்பின் பேரால் இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகளை அரசு எடுப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டன.

1970களில் வாக்கு அரசியல் களத்தில் போட்டி அதிகமாயிற்று. அதேசமயம் பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசியலில் எழுச்சி பெற்றன. இந்தச் சூழலில் சாதி சார்ந்த அரசியல் உத்திகள் வெளிப்படையாக வகுக்கப் பட்டன. சாதியை முன்னிலைப்படுத்திய அரசியலால் சில தீமைகள் ஏற்பட்ட போதிலும், பெருங்கேடு உண் டாகவில்லை. ஆனால் பா.ச.க. இப்போது ‘சனநாய கப்படி பெரும்பான்மை’ என்கிற பெயரால் பெரும்பான் மையினராக உள்ள இந்துக்களைச் சிறுபான்மை மதத்தினர்க்கு எதிராக நிறுத்தியிருப்பது பேரழிவை உண்டாக்கக் கூடியதாகும்.

1947இல் மதம்-வகுப்பு வாதம் என்ற பெயரால் மக்களைப் பிளவுபடுத்தியதால் ஏற்பட்ட கொடிய விளைவுகளை நாம் பார்த்தோம். இப்போது பா.ச.க. முன்னிலைப்படுத்தும் இந்துப் பெரும்பான்மை வகுப்புவாதம் நாட்டை உள்நாட்டுப் போரில் தள்ளும். இதனால் யுகோஸ்லேவியா பிள வுண்டது போன்ற நிலை இங்கும் உருவாகக் கூடும்.

வீடா? நரகமா?

2014 திசம்பர் 8 அன்று ஆக்ராவில் வேத நகரில் மொத்தம் 350 பேர் கொண்ட 57 முசுலீம் குடும் பங்கள், தர்ம ஜக்ரன் மற்றும் பஜ்ரங்தள் ஆகிய அமைப்பினரின் தூண்டுதலால் இந்து மதத்திற்கு மாறின. இக்குடும்பத்தினர் நடைபாதைகளில் வாழ் பவர்கள். வீசி எறியப்பட்ட தாள்களைப் பொறுக்கி எடுத்து விற்று வாழ்பவர்கள். எத்தகைய வாழ்வாதார மும் இல்லாதவர்கள். இவர்களில் இசுமாயில் என்பவர், காவல் நிலையத்தில், “எங்களுக்கு நியாயவிலைக் கடையில் மானிய விலையில் பொருள்களைப் பெறு வதற்கான அட்டை, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள வர்களுக்கான அட்டை ஆகியவற்றைத் தருகிறோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதன் பேரில்தான் இந்து மதமாற்றச் சடங்கில் நாங்கள் கலந்துகொண்டோம். ஆனால் இப்போது ஏமாற்றிவிட்டார்கள்” என்று புகார் தெரிவித்த பிறகுதான் இந்திய அளவில் இது பரபரப்பான பெரிய செய்தியாயிற்று.

நந்த கிஷோர் வால்மீகி என்கிற ஒரு தலித் தான், 57 குடும்பங்களை இந்து மதத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை முன்னின்று செயல்படுத்தினார். ஆசைகாட்டி மதமாற்றம் செய்தார் என்கிற மோசடி அம்பலமானதும் நந்த கிஷோர் வால்மீகி தலைமறைவாகிவிட்டார். திசம்பர் 16 அன்று அவர் கைது செய்யப்பட்டார். இந்த இசுலாமியக் குடும்பங்கள் முன்பு தலித்துகளாக இருந்த வர்கள் என்பதால், சங்பரிவாரங்கள் ஒரு தலித் மூலம் இச்சதியைச் செயல்படுத்தினர். ஆனால் நந்த கிஷோர் வால்மீகி கைது செய்யப்பட்டதும், ஆக்ரா வேத நகர் தலித்துகள், இம்மத மாற்றச் சதிக்கு மூலகாரணமான வர் அஞ்சு சவுகான் என்கிற இந்துத்துவவாதிதான்  என்கிற உண்மையை அம்பலப்படுத்தினர்.

அதனால் கைது செய்யப்பட்டுள்ள நந்த கிஷோரை எவ்வகை யிலும் துன்புறுத்தக்கூடாது என்று கோரினர். ஆனால் இந்துத்துவத்தின் கையாளாகிவிட்ட நந்தகிஷோர், தொலைக்காட்சியில், “இம்மதமாற்றத் திட்டத்திற்கு நான்தான் பொறுப்பு” என்று பெருமிதத்துடன் கூறினார். தலித்துகளில் ஒரு சிலர் எந்த அளவுக்குத் தரங்கெட்டுப் போயிருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது.

இருபதாம் நூற்றாண்டில் (அம்பேத்கர் காலத்தில்) இந்துத்துவ சக்திகளுக்குத் தலித்துகளிடமிருந்து கடும் எதிர்ப்பு இருந்தது. ஏனெனில் நால் வருண இந்துமத அமைப்பில் தலித்துகள் இடம்பெறவில்லை. ஆகவே தலித்துகள் தங்களை இழிவுபடுத்தும் இந்து மதத்தைக் கைவிட்டு வெளியேறுவது எளிதாக இருந்தது (1995 இல் உச்சநீதிமன்றம் இந்துத்துவா என்ற சொல் இந்து மதத்தைக் குறிப்பதன்று; இந்தியர்களின் வாழ்க்கை நெறியைக் குறிப்பதாகும் என்கிற வஞ்சகமான தீர்ப்பை வழங்கியது). இப்போது இந்துத்துவ சக்திகள் தலித்து களையும் பழங்குடியினரையும் தங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவர முயல்கின்றன.

வருணாசிரம-சாதியக் கட்டமைப்பு இந்து மதத்தின் வலிமையான அடித்தளமாகும். இந்து மதத்தின் பெயரிலான பழக்கங்கள், வழக்கங்கள், கடவுள்கள், சடங்குகள், திருவிழாக்கள், பல்வேறு கோலங்கள் பூண்டுள்ள சாதுக்கள், துறவிகள் போன்றனவெல்லாம் இந்து மதத்தின் புறவெளித் தோற்றங்களேயாகும்.

இந்துத்துவ மாயவலையில் விரும்பி விழுகின்ற அளவுக்கு தலித் அரசியல் தன் விழுமியங்களை முற்றி லுமாக இழந்து தரங்கெட்டிருக்கிறது. ‘இராமன்கள்’ அனுமான்களாகிவிட்டனர். ஆக்ரா மதமாற்றம் குறித்த சிக்கல் ஏற்பட்டபின், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவரான சோன்கர் சாஸ்திரி தலைமையில் இயங்கும் பா.ச.க.வின் தலித் கிளை அமைப்பு, தலித்துகளின் ‘இழந்த பெரு மையை’ மீட்டெடுக்க, உயர்சாதிகளின் பெயர்களான மிஸ்ரா, பாண்டே, திவாரி, தோமார் முதலானவற்றை தலித்துகள் தங்கள் பெயருக்குப்பின் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரப்புரை செய்துவருகிறது. தலித்து களின் புதிய தலைவராக அவதாரம் எடுத்துள்ள சோன்கர் சாஸ்திரி இதுவரை இந்த நோக்கத்திற்காக 500 கூட்டங்கள் நடத்தியிருக்கிறார். மேலும் 2000 கூட்டங்கள் நடத்தப் போகிறார்களாம்.

இந்து மதத்துக்கு மீண்டும் திரும்புபவர்கள் எந்தச் சாதியில் சேர்க்கப்படுவார்கள்? இந்த வினா வசதியாக ஓரங்கட்டப்படுகிறது. ஆனால் பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள யோகி ஆதித்தியநாத் அவரா கவே இந்த வினாவுக்கான விடையைக் கூறிவிட்டார். இந்து மதத்திற்கு மீண்டும் திரும்புவோர், இந்து மதத்தைவிட்டு வெளியேறுவதற்கு முன் அவர்கள்  எந்தச் சாதியில், எந்தக் கோத்திரத்தில் இருந்தார்களோ அதே சாதியில் சேர்க்கப்படுவார்கள் என்று தெளிவு படுத்தியிருக்கிறார்.

அதாவது, இந்து மதத்தின் அடிமைத்தளையிலிருந்தும், சாதியக் கொடுமைகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளும் உரிமை வேட்கையால் இசுலாம் மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் மாறிய கீழ்ச்சாதியினர்க்கு மீண்டும் அதே இழிந்த சாதிகளில் தான் இடம் தரப்படும். இவர்களின் முன்னோர்கள் நரகம் என்பதைவிடக் கொடிய சாதியப் படுகுழி யிலிருந்து தப்பிக்கவே வேறு மதத்திற்கு மாறினர்.

எனவே சங்பரிவாரங்கள் ‘தாய் மதத்துக்குத் திரும்புங்கள்’ என்று விடுக்கும் அழைப்பு என்பது ‘வீடு திரும்புதலா?’ அல்லது மீண்டும் ‘சாதிய நரகப் படு குழியில் தள்ளுவதா?’

இந்தியாவில் வாழும் முசுலீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எத்தகைய பொன்னுலகம் காத்திருக்கிறது பாருங்கள்!

(நன்றி : Economics and Political Weekly , சனவரி 3, 2015. (தமிழாக்கம் : க. முகிலன்) இக்கட்டுரையின் ஆசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டெ மராத்திய தலித்-மார்க்சிய ஆய்வாளர். இவர் எழுதியுள்ள ‘அம்பேத்கருக்குப் பின் தலித் இயக்கங்கள்’, ‘ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’ (எஸ்.வி. ராஜதுரை மொழி பெயர்ப்பு) நூல்கள் படிக்க வேண்டியவை. 

Pin It