‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது காலங்காலமாக நம் மக்களிடையே நிலவி வரும் பழமொழியாகும். அக்காலங்களில் கோயில் மக்களின் பொதுச் சொத்தாய் இருந்தது. நாட்டு நடப்பு கள் பற்றிப் பேச, ஊர் வழக்குகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க, கழனிகளில் விளைந்த நெல் முதலிய தானியங்களை ஒரே இடத்தில் களஞ்சியமாகச் சேமித்து வைக்க, திருவிழாக்கள் நடத்த இப்படிப் பல்வேறு செயற்பாடுகளுக்குக் கோயில் பயன்பட்டது.

நிலக்கிழாரியம் தோன்றி மன்னராட்சி செழிப்புறத் தொடங்கிய காலங்களில் கோவில்களில் பொன்னும், மணியும் விலைமதிப்பற்ற பிற பொருள்களும் குவியத் தொடங்கின. மன்னர்களும், செல்வர்களும் மக்களிட மிருந்து பறித்த பொருள்களை வரைமுறையற்றுக் கோயில்களுக்கு வழங்கினர். இன்று இந்தியாவெங் கும் உள்ள கோவில் செல்வங்களைக் கணக்கிடும் போது திருவனந்தபுரம் பத்மநாபசாமி முதலிடத்தில் நிற்கிறார்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் :

கேரளத்தில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சாமிக்கும், திருப்பதி வெங்கடாசலபதி சாமிக்கும் தான் இப்போது முதலிடத்திற்கான சரியான போட்டி நடந்து கொண்டுள்ளது. திருவனந்தபுரம் கோயில் செல்வங் கள், தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல்போல் பெருகிக் கொண்டே உள்ளன. உச்சநீதிமன்ற ஆணைப் படி கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய அக்கோயி லின் சொத்துக் கணக்கெடுப்புப் பணி இன்னும் முற்றுப் பெறவே இல்லை.

அக்கோயிலில் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒரு நிலவறையில் இருந்து மட்டும் கிடைத்துள்ள பொருள்களாவன : 1. சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள திருமாலின் தங்கச் சிலை.

2. தங்கத்தினால் செய்யப்பட்ட வைரக் கற்கள் பதித்த இரண்டு தேங்காய் முடிகள். 3. பத்தரை கிலோ எடை யுள்ள 18 அடி நீள தங்கத்தாலான மார்புச் சங்கிலி. 4. 36 கிலோ எடையுள்ள தங்கத்திரை, தங்க அங்கி. 5. 500 கிலோ தங்கப் பாளங்கள். 6. தங்கத்தில் வில்-அம்பு, வைரம் பதித்த தங்கத்தட்டுகள் மற்றும் பல கோடி எடையுள்ள தங்கமணிகள், நகைகள், கிழக் கிந்திய வணிக நிறுவனத்தின் தங்கக் காசுகள், நெப் போலியனின் தங்கக் காசுகள், அய்ரோப்பிய வைரங்கள்.

தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி. புராதனக் கலைப் பொருள்கள் என்ற தன்மையில் கணக்கிட்டால் இவை பல இலட்சம் கோடிகளைத் தாண்டலாம். இந்தச் சொத்துகள் எல்லாமே உழைக்கும் மக்களின் குருதியைப் பிழிந்து கொள்ளையிடப்பட்டவை ஆகும். ஆனால் செயேந்திர சரசுவதி உள்ளிட்ட கொலைகாரச் சாமியார் கள் ‘இவை அனைத்துமே மன்னர் சொத்துகள். இவற்றில் மற்றவர் சொந்தங் கொண்டாட உரிமை இல்லை’ என்று கூறிக்கொண்டு கோயில் மதிற்சுவர் களைப் போலக் குறுக்கே நிற்கிறார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதி கோயில் :

உலகின் மிகப்பெரிய பணக்காரச் சாமிகளில் ஒன்றாகக் கருதப்படும் வெங்கடாசலபதி கோயில் பல மன்னர்களால் பல்வேறு காலங்களில் பங்களிப்புச் செய்து கட்டப்பட்டதாகும். 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர், தஞ்சையை ஆண்ட சோழர்கள், 15, 16ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த விசய நகர மன்னர்கள், மராட்டியர்கள், இசுலாமிய ஆட்சியாளர் கள் உள்ளிட்டோர் இக்கோயிலுக்கு ஏராளமான பொருள் களை வாரி வழங்கியுள்ளனர்.

முசுலீம் மன்னர்களான ஷாஜகான், ஜகாங்கீர் போன்றோர் மட்டுமல்ல-இங்கிலாந்து எட்வர்டு மன்னர், விக்டோரியா அரசி போன்றோரும் நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

தொடக்கத்தில் தென்மாநிலங்களில் இருந்து மட்டும் பக்தர்கள் வந்தனர். இப்போது வெங்கடேசப் பெரு மாளுக்கு வியனுலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஒருநாள் உண்டியல் வசூல் 75 இலட்சம் ரூபாயி லிருந்து ஒரு கோடியே 80 இலட்சம் வரை. கடந்த 2014 சனவரி 1ஆம் தேதி வசூல் மட்டும் 4.23 கோடி. உண்டியல் வசூல் பற்றி அக்கோயிலைச் சேர்ந்த ஏ.வி. இரமணா தீட்சிதர் கூறுகையில் மூன்று ஆண்டுகள் முன்பு வரை ஒரு நாளைக்கு இருமுறை உண்டிய லைத் திறந்து எண்ணுவார்களாம். இப்போது ஒரு நாளைக்குப் பத்துமுறை எண்ணப்படுகிறதாம். அப் போதும் சில்லறை நாணயங்களை எண்ண முடியாமல் அவை மலைபோலக் குவிக்கப்பட்டுள்ளனவாம்.

உண்டியல் வசூலை அடுத்துக் கோயிலுக்குக் கிடைக் கும் மிகப் பெரிய வருவாய் முடிகாணிக்கை மூலம் கிடைக்கிறது. திருப்பதி கோயிலுக்கு அன்றாடம் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 50,000-இலிருந்து ஒரு இலட்சம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமுடி ஒரே நாளில் டன் கணக்கில் சேர்ந்துவிடுகிறது. இதன் மதிப்பு மட்டுமே 6 மில்லியன் ரூபா என அறங்காவல் துறை அறிவித்துள்ளது. இவ்வளவு பணத்தையும் அடியவர்கள் எதற்காக ஆண்டவனின் காலில் போய்க் கொட்டுகிறார்கள்? முன்னொரு காலத்தில் வெடங்கடாசலபதி பத்மாவதி அம்மையாரை மணம்புரிய செல்வக் கடவுளான குபேரனிடம் 1 கோடியே 14 இலட்சம் கலியாணக் கடன் (marriage loan) வாங்கினா ராம். ஆண்டவன் வாங்கிய கடனை இப்போது அடியவர்கள் அடைத்துக் கொண்டுள்ளனர்.

ஷீரடி சாயிபாபா கோயில் :

ஆந்திர மாநிலம், ஷீரடியில் உள்ள சாயிபாபா கோயில் அதிக வருவாய் வரும் கோயில்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஷீரடி பெரிய சாயிபாபா மறைவுக்குப்பின் 2011ஆம் ஆண்டு தம் 85-ஆவது வயதில் மறைந்த இளைய சத்ய சாயிபாபா தன்னைப் பெரிய சாயிபாபாவின் அவதாரம் என்று அறிவித்துக் கொண்டார். இளைய சாயிபாபா இறப்புக்குப்பின் அவர் தங்கி இருந்த பல்வேறு அறைகளில் ஒரு அறையை மட்டும் திறந்து பார்த்தபோது அதில் கணக்கில் காட்டப்படாத விலை மதிப்புமிக்க தங்கக் கட்டிகள், வைரங்கள், கட்டுக்கட்டாகப் பணம் மற்றும் காசோலை கள் கைப்பற்றப்பட்டன.

சாயிபாபா அறக்கட்டளைக்கு இந்தியாவில் மட்டுமல் லாமல் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளில் 1300 தொண்டு மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. நாடு முழுவதும் கோயில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இலவசப் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பாழும் இந்தியாவில் கோவில்கள் கொழுக் கின்றன. கோடிக்கணக்கான மக்கள் பஞ்சப்பராரியாய் பட்டிணியாய் படிப்பறிவின்றி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவின் கிருஷ்ணா நதியிலிருந்து தமிழ்நாட்டுக் குக் கால்வாய் வெட்டிக் குடிநீர் கொண்டுவரும் தெலுங்கு கங்கைத் திட்டத்திற்குச் சாயிபாபா உயிரோடு இருந்த காலத்தில் இருநூறு கோடி ரூபாய் நன்கொடை வழங்கி யுள்ளார். ‘சத்யநாராயண ராஜூ’ என்ற இயற்பெயர் கொண்ட இவர் தம் 14ஆம் வயதில் ஒருமுறை தேள் கொட்டிய போது மயங்கி விழுந்தார். பின் மயக்கம் தெளிந்து எழுந்ததும் சிரித்தார்; அழுதார்; பாடல்கள் பாடினார். அன்றுமுதல் தெய்வத்தின் அவதாரமாக மாறிவிட்டார். பல மாயவித்தைகள் கற்றவராகத் தன்னைக் கற்பித்துக் கொண்டு, வெறுங்கையை நீட்டி லிங்கம், லட்டு, கடிகாரம் போன்ற சிறிய பொருள்களை மந்திர ஆற்றலால் வருவித்துக் கொடுத்து ஊர் உலகத்தை ஏமாற்றினார். இவர் மந்திர ஆற்றல்களை அம்பலப்படுத்தப் போன பல பகுத்தறிவுவாதிகளை இவர்தன் அருகில் அண்டவிட்டதே இல்லை. சாயிபாபா ஆசிரமத்தில் எல்லா ஆசிரமங்களிலும் உள்ளது போன்றே கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற அத்தனை ஒழுக்கக்கேடுகளும் உண்டு.

இப்படிக் கோயில் உடமைகள் பற்றித் தொடர்ந்து எழுதிக்கொண்டே போனால் இக்கட்டுரைக்கு ஒரு முடிவு வராது. நாடு முழுவதிலும் உள்ள அளவற்ற இந்தக் கோயில் சொத்துகள் யாருக்கு உரியவை? உழைக்கும் மக்களிடமிருந்து உரிமைகள் எவ்வாறு பறிக்கப்பட்டன? அதைப்பற்றிக் காண்போம் :

மனித உரிமை மீறல்கள் :

ஒரு நாகரிக சமுதாயத்தில் உழைப்பு பொது, மக்களின் உரிமைகள் பொது என்பவற்றை உறுதி செய்யும் சட்டங்கள் நடைமுறையில் இருக்க வேண் டும். ஆனால் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் மனுதரும நெறியை ஆட்சிச் சட்டமாக ஏற்றுக் கொண்டதால் கோயில் உரிமையைப் பார்ப் பனர்களிடம் கொடுத்துவிட்டனர். கோயில் வருவாயைப் பெருக்கத் தம் குடிமக்கள் மீது கொடுமையான வரிகள் போட்டுக் கொள்ளையடித்தனர். இது தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பலரும் குறித்துள்ள கருத்தாகும்.

‘நிலவரியேயன்றித் தறியிறை, செக்கிறை, மனை இறை, அங்காடிப்பட்டம், தட்டாரப்பாட்டம், இடைப்பாட் டம், ஈழம் பூட்சி, வண்ணாரப் பாறை, கண்ணாலக் காணம், குசக் காணம், ஓடக் கூலி, நீர்க்கூலி, நாடு காவல் முதலான பல்வகை வரிகளும் இருந்துள்ளன என்பது சுந்தர சோழனுடைய அன்பில் செப்பேடு களாலும், முதலாம் இராசராச சோழனுடைய ஆனை மங்கலம் செப்பேடுகளாலும் கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளாலும் நன்கறியப்படுகின்றது’ (பிற்காலச் சோழர் வரலாறு, தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் பக்.502).

இப்படி வண்ணான் துணி துவைக்க வரி, ஈழவன் கள் இறக்க வரி, ஆட்டுக்கு வரி, மாட்டுக்கு வரி, ஏன் கலியாணம் செய்து கொள்ளக்கூட கண்ணாலக் காணம் விதித்த அரசர்கள் ஆலய வழிபாட்டிலிருந்து உழைக் கும் மக்களை அடித்து விரட்டியபின், அக்கொடியவர்கள் ஆரியப் பார்ப்பனர்களுக்கு அளித்த சலுகைகள் யாவை?

“வடமொழியாளர் தமிழகம் புகுந்த காலம் ஏறத் தாழ கி.மு. எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் அறைகின்றனர். அவர்கள் தமிழகத்தில் தங்கள் வேதங்களின் கருத்துகளைப் பரப்பினர்; வேத வேள்விகளைச் செய்தனர். அவர் களது தெய்வபக்தியைக் கண்டு பாராட்டிய தமிழரசர் கள் அவர்களுக்கென்று பல புதிய ஊர்களை அமைத்த னர். அவர்கள் குறைவின்றி வாழ வசதி செய்தனர். அவருட் சிலரைத் தம் புரோகிதராகவும் பிற உயர் அலுவலராகவும் அமர்த்தினர்.

இங்ஙனம் தமிழர் சமுதாயத்தில் வேதியர் செல் வாக்குப் பெற்றமையால், தமிழ்நாட்டுச் சமயத் துறையில் புதிய வழிபாடுகள் நுழைந்தன. வடநாட்டுத் தெய்வங்கள் சில இந்நாட்டில் வழிபாடு பெறலாயின. முல்லை நிலக் கடவுளாகிய மாயோனுக்கு விஷ்ணு வின் அம்சங்கள் ஏற்றப்பட்டன. சிவன் உருத்திரன் ஆக்கப்பட்டான். இந்திர வணக்கம் தோன்றியது. பாலைநிலத் தெய்வமான கொற்றவை துர்க்கையாக மாற்றப்பட்டாள். குறிஞ்சி நிலக் கடவுளான முருகப் பெருமான் ஆறு தலைகளைக் கொண்ட கடவுளாக மாற்றப்பட்டான். இங்ஙனம் சமயத் துறையில் உண் டான மாறுதல்கள் பலவாகும்” (தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் - மா. இராசமாணிக்கனார், பக்கம் 182).

பல்லவர் காலத்தில் நாயன்மாராலும் ஆழ்வார்களா லும் பாடப்பட்ட கோயில்கள் அனைத்தும் சோழர் காலத்தில் கற்கோயில்களாய் மாறின. தில்லை நடராசர் கோயில் ஒவ்வோர் அரசனாலும் சிறப்பிக்கப்பட்டது. அங்குள்ள கூரைகள் பொன்னால் வேயப்பட்டன. அப்பொன் தகடுகளில் ‘நமசிவாய’ என்னும் ஐந்து எழுத்துகளும் பொறிக்கப்பட்டன.

தில்லை கோயிலுக்கு ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன. இவை தவிர தங்கம், வைரம், வீடுகள், மனைகள் எனச் சொத்துகள் ஏராளம். ஆண் டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருவாய் வருகிறது. அதையெல்லாம் அங்குள்ள தீட்சதப் பார்ப்பனர்கள் தின்று கொழுப்பதுடன் கோயில் சொத்துக்களைச் சுரண்டித் தின்னும் பொருச்சாளிகளாய் உள்ளனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் பேர் கயிலா யத்திலிருந்து இறங்கிப் பூமிக்கு வந்தார்களாம். மண்ணு லகிற்கு வந்தவர்களை எண்ணிப் பார்க்கையில் ஒருத்தர் காணவில்லையாம். 999 பேர் மட்டும் இருந்தார்களாம். திடுமென விண்ணிலிருந்து ஓர் ஒலி ‘நான் வேறெங்கும் போகவில்லை. இதோ, தில்லையில் இறைவனாக வீற்றிருக்கிறேன்.’ ஆகத் தில்லையில் இருக்கிற - இடையில் காணாமற்போன அந்த ஒருவன் தான் இறைவன். அங்குள்ள மற்ற தடிமாட்டுப் பார்ப்பனர்கள் எல்லாம் அவனுடைய உறவினர்கள். கொலை, கொள்ளை, குடி, கூத்தி என எல்லா ஒழுக்கக் கேடுகளும் அங்கு நடக்கின்றன. அதற்குக் காவல் துறையும் துணை. அரசும் துணை, நீதித்துறையும் துணை.

பெரியபுராணக் காலத்தில் இறைவனைக் காண வந்த தாழ்த்தப்பட்ட நந்தனை உயிரோடு எரித்தவர் கள் இந்தத் தீட்சதப் பார்ப்பனர்கள்தாம். அப்படி அவனை உயிரோடு கொளுத்திவிட்டு நந்தன் நடராசனோடு இரண்டறக் கலந்துவிட்டான் என்று கதையளந்தார்கள்.

நாயன்மார்கள் பாடி வழிப்பட்ட இடம் தில்லைக் கோயில். ஆனால் 2000ஆம் ஆண்டில் அங்குள்ள சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமி என்ற தள்ளாத வயதுப் பெரியவரை அடித்துத் துவைத்து வெளியே போட்டார்கள் அப்பார்ப் பன அக்ரகாரக் கொழுப்பர்கள்.

இந்திய விடுதலைக்குமுன், வெள்ளைக்காரன் ஆண்ட காலத்திலேயே ‘கோயில் யாருக்குச் சொந்தம்’ என்று கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ‘ஷெப்பர்டு’ என்ற ஆங்கில நீதிபதியும், முத்துசாமி தீட்சதர் என்ற இன்னொரு நீதிபதியும் ‘தில்லை கோயில் மக்களின் உடைமை. தீட்சதப் பார்ப்பனர்கள் கோயிலை விட்டு உடனே வெளியேற வேண்டும்’ என்று தெளிவான தீர்ப்பு வந்துவிட்டது. 2008இல் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராய் இருந்தபோது கோயிலை அறநிலையத் துறையிடம் ஒப்பளிக்க வேண்டும் என ஆணை வந்தது.

ஆனாலும் ஆட்சி மாற்றத்திற்குப்பின் ஜெயலலிதா வின் மறைமுகத் துணையோடும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் வெளிப்படையான ஆதரவோடும், தில்லி யில் சுப்பிரமணியசாமி எழுப்பிய வாதங்களுக்குத் தோதாக மீண்டும் தில்லை கோயில் நிர்வாகம் தீட்சதர்களிடமே வழங்கப்பட்டுவிட்டது.

1971-இல், கருணாநிதி முதலமைச்சராய் இருந்த காலத்தில் ‘தகுதி அடிப்படையில் அனைத்துச் சாதி யினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டம் -தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டுத் தில்லிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இங்கிருந்து போன சில உச்சிக் குடுமிகள் அந்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டப்படி செல்லாது என உச்சநீதி மன்றத்தின் வழியாகவே சொல்ல வைத்துவிட்டனர்.

இதுபற்றி அறிஞர் வே. ஆனைமுத்து என்ன கருதுகிறார்?

1929 செங்கற்பட்டு மாநாடு, 1930 ஈரோடு மாநாடு, 1931 விருதுநகர் மாநாடு முதலானவற்றிலும்; 1932 ‘சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டக் கூட்டத்திலும்’, 1940 திருவாரூர் மாநாடு, 1944 சேலம் மாநாடு, 1945 திருச்சி மாநாடு, 1948 தூத்துக் குடி மாநாடு முதலான எல்லாவற்றிலும் ‘பிறவி வருண சாதி ஒழிப்பு’, ‘தீண்டாமை ஒழிப்பு’ மற்றும் தீண்டப் படாதாருக்கு சமூக சமுத்துவ உரிமை, எல்லாத் துறைகளிலும் இவர்களுக்கு முன்னுரிமை பற்றித் தவறாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

3-11-1957இல் தஞ்சாவூரில் நடைபெற்ற சிறப்பு நிதி அளிப்பு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ‘பிறவி வருண சாதி ஒழிப்புக்கான நேரடிப் போராட் டத்துக்கு’ ஆணையிட்டது.

எப்படி அது நேரடிப் போராட்டம்?

குறைந்தது 1200 ஆண்டுகளாக எல்லா இந்துக் களின் பேரிலும் சுமத்தப்பட்ட -“நால்வருணப் பிறவி சாதி இழிவுக்கு ” -வழக்கம் (Custom), பழக்கம் (Tradi ti on), சாதி வழக்கம் (Caste Custom), பிராந்திய வழக்கம் (Territorial Custom), நம்பிக்கை ((Faith) என்கிற பெயர்களால் -“நால்வருணப் பிறவி சாதி உண்டு” என்பதை, 26-01-1950இல் நடப்புக்கு வந்த அரசமைப்புச் சட்டம் காப்பாற்றுகிறது. அப்படிக் காப்பாற்றுவதற்கு என்றே எழுதப்பட்டுள்ள அரசமைப் புச் சட்ட விதிகள் -13, 25, 26, 372 ஆகியவற்றை அச்சட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்று இந்திய அரசைக் கோரி நடத்தப்பட்ட அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டம், நேரடியான - அமைதியான - தத்தம்மை வருத்திக் கொள்ளும் போராட்டமே ஆகும்.

அது கருதி அந்தச் சட்ட விதிகளைத் தமிழாக்கம் செய்து, அச்சுப்போட்டு, அதனை ஊர்தோறும் பரப்பும் கூட்டங்களை நடத்தியதன் விளைவாக, 26-11-1957இல், 10,000 கருப்புச்சட்டை வீரர்கள் அரசமைப் புச் சட்டத்தை எரித்தனர். அப்படிப்பட்ட ஒரு போராட்டம் அதுவரையில் உலகில் எந்த நாட்டிலும் நடக்கவே இல்லை (சிந்தனையாளன் அக்டோபர் 2014, பக்கம்-8).

அரசமைப்புச் சட்டவிதி 17 “‘தீண்டாமை’ ஒழிக்கப் பட்டுவிட்டது. ‘தீண்டாமை’யை எந்த வடிவத்தில் கடைபிடிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நடப்பில் அவ்வாறு இல்லை.

கோயில் கருவறைக்குள் நுழைய பார்ப்பானுக்கு மட்டும்தான் அனுமதி என்பதோடு மட்டும் தீண்டாமை அனுசரிப்பு நிற்கவில்லை. கோயில்களில் பிரசாத லட்டு பிடிக்கும் வேலைக்கும் பார்ப்பனர்கள்தான் விண்ணப்பம் போட வேண்டும் என்று சில ஆண்டுகளுக்குமுன் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையே ஓர் ஆணை வெளியிட்டது.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயி லுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பில் திருமஞ்சனம், நிவேத்தியம், சுயம்பாகி ஆகிய பணியிடங்களுக்குப் பார்ப்பனர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனச் சொல்லி இருந்தது. இந்த அறிவிப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவுக்கு எதிரானது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது, “இத்தகைய பணிகளைப் பார்ப்பனர்கள்தான் செய்ய வேண்டும் என்ற பழக்க வழக்கத்தை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது பிரிவு அங்கீகரிக்கிறது. இதன் அடிப்படையில்தான் உச்சநீதி மன்றம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திற்கும் தடைவித்துள்ளது” என்ற காரணங்கூறி  சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

நயவஞ்சகப் பார்ப்பனர்கள் நஞ்சான எண்ணத்தை நன்கு புரிந்துகொண்ட மேதை அம்பேத்கர், பழைமை வாதிகளுக்குத் தக்க பதிலடி தர முடிவு செய்து, இந்துச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்தார்.

ஆனால் அப்போது அரசமைப்புச் சட்டப் பேரவை யின் தலைவராய் இருந்த பாபு இராசேந்திரப் பிரசாத், அம்பேத்கர் மீது சீறிப் பாய்ந்தார். ‘இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமேயானால் நான் அரசமைப்புச் சட்ட அவையின் தலைவர் பதவியிலிருந்தே விலகுவேன்’ என்று நேருவிடம் மிரட்டல் விடுத்தார். இறுதியில் இராசேந்திரப் பிரசாத்தும், நேருவும், ஆதிக்கவாதிகளும் வென்றனர். அண்ணல் அம்பேத்கரும் ஒடுக்கப்பட்ட மக்களும் தோற்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கோயில் உரிமை, வழிபாட்டு உரிமை இன்றுவரை யும் மீட்டெடுக்கப்படவில்லை.

நாயும், காக்கையும் நுழையும் கோயில் கருவறைக் குள் நம்மால் நுழைய முடியவில்லையே! சாய்க் கடைப் பெருச்சாளி சாமி சிலையைக் கண்டபடி பிராண்டுகிறது. மனிதனாகப் பிறந்த நம்மால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று ஏக்கத்துடன் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

‘குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்

கொஞ்சமும் தீட்டிலையோ - நாட்டு

மக்களிலே சிலர் மாத்திரம் அந்த

வகையிலும் கூட்டிலையோ?

நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி

நேரில் அக்கோயிலிலே - கண்டும்

ஒத்த பிறப்பினரை மறுத்தீர் உங்கள்

கோயிலின் வாயிலிலே!’ என ஏங்கினார்.

நமக்கான உரிமைகளை மேலும் மேலும் போராடி வென்றெடுப்போம். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கனவை நனவாக்குவோம்! 

Pin It