திட்டக்குழு உருவாக்கம் :

1950இல் பிரதமர் நேரு திட்டக்குழுவினை நாடாளுமன்றச் சட்டத்தின் வழியாக அமைத்தார். உலகிலேயே முதன்முதலாக சோவியத் ஒன்றியத்தில் லெனின் தலைமையிலான பொதுவுடைமை அரசு 1917இல் திட்டக்குழுவை உருவாக்கியது. பொருளாதா ரத்தில் மிகவும் பின்தங்கியிருந்த சோவியத் ஒன்றியம் மிகவும் குறுகிய காலத்தில் விரைவான வளர்ச்சியைத் திட்டமிடல் கொள்கையின் வழியாகப் பெற்றது. இம்முறையை பெர்ட்ரன்ட் ரசல், ஜார்ஜ் பெர்னாட்ஷா, பொருளாதார அறிஞர்கள் மாரிசு டாப், ஜியோன் ராபின்சன் போன்றவர்கள் வரவேற்றனர்.

1930களில் மோதிலால் நேருவுடன் சோவியத் ஒன்றியத்திற்குப் பயணம் மேற்கொண்ட இளைஞரான நேரு, திட்ட மிடல் கொள்கை அந்நாட்டில் வெற்றி பெற்று வரு வதை அறிந்து, பின்னாளில், இக்கொள்கையை இந்தியா வும் ஏற்கவேண்டுமென வலியுறுத்தினார். இக்கொள் கை தொடர்பாகத் பல காங்கிரசு தலைவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நேதாஜி போன்ற முன்னணித் தலைவர்களும், இளைஞர்களும் வர வேற்றனர். டாட்டா, பிர்லா போன்ற இந்தியத் தொழில் முனைவோர்கள் இணைந்து 1945இல் ‘பம்பாய் திட்டம்’ என்ற திட்டக் கொள்கையை அறிவித்தனர். எனவே, திட்டமிடல் கொள்கையை எல்லாத் தரப்பி னரும் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ஏற்றுக்கொண்டனர் என்பதற்கு இந்நிகழ்வுகள் சான்றாக அமைகின்றன.

திட்டமிடல் கொள்கை நடுவண் அரசின் அதிகாரப் பட்டியலில் இடம்பெற வேண்டுமென, 1945இல் பிரித்தானிய அரசின் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் காங்கிரசு தலைவர்கள் வலியுறுத்தினர். மூன்று முறை காங்கிரசுத் இக்கோரிக்கையை வலியுறுத்தி னாலும் இத்தூதுக்குழு இக்கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், திட்டமிடல் கொள்கையில் பேரார்வம் காட்டிய நேரு போன்ற தலைவர்கள் திட்டமிடல் கொள்கையை அரசமைப்புச் சட்டத்தில் இணைக்காதது ஏன் என்பது ஒரு புதிராகும். அரசமைப்புச் சட்டவிதியின்படி திட்டக்குழு உருவாகியிருந்தால் திட்டக்குழுவை இன்றைய பிரதமர் மோடியால் கலைத்திருக்கவே முடியாது.

இந்தியத் திட்டக்குழுவின் செயல்பாடுகள்  1951ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பிரித்தானிய அரசின் சுரண்டல் முறையால் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் பின்னடைந்தன. பாகிஸ்தான் பிரிவினை யால் ஏற்பட்ட இழப்புகளும் இணைந்து கொண்டன. இச்சூழலில் வேளாண் நீர்ப்பாசனம், மின்சாரம், தொழில், கட்டமைப்பு, சமுதாயத் துறைகளுக்காக 1960 கோடி ரூபாய் திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் வேளாண் பாசனத் துறைகளுக்கு 30.6 விழுக் காடு நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் உணவு உற்பத்தி தன்னிறைவை அடையும் நிலையில் இருந்தது. இருப்பினும், சிலர் திட்டக்குழுவின் செயல்பாடுகள் பற்றி விமர்சனம் செய்தனர். இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்கண்ட துறைகளுக்கு 4600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 24 விழுக்காடு நிதி தொழில் துறைக்கு உயர்த்தப்பட்டு, பிற துறைகளுக்கான ஒதுக்கீடு குறைக் கப்பட்டு, வேளாண் துறை ஒதுக்கீடும் 10 விழுக்காடு குறைக்கப்பட்டது. இதனால், வேளாண் துறைக்குத் தொடர்ந்து பல சிக்கல்கள் வரத்தொடங்கின.

வல்லுநர்களின் ஆலோசனை

இதுபோன்ற விமர்சனங்கள் இருந்தாலும், தொழில் துறை வளர்ச்சிக்கு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் வழிகோலியது. இந்தியப் பொருளாதார அறிஞரான பி.ஆர். ஷெனாய், அமெரிக்காவின் தனியார் துறை சார்பான மில்டன் பிரைட்மன், மார்க்சிய அறிஞரான பால் பாரன், இங்கிலாந்தின் நிதியியல் வல்லுநரான நிக்கோலசு கால்டர் ஆகியோரின் கருத்துகளை நேரு இத்திட்டக் காலத்தில் கேட்டறிந்தார். பன்னாட்டு வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், பெற்ற பட்டறிவின் தன்மையிலும் நேரு ஐந்தாண்டுத் திட்டங் களுக்குச் செயலாக்கம் வழங்கி வந்த நிலையில் 1964ஆம் ஆண்டில் நேரு மறைந்தார். திட்டமிடல் பொருளாதாரத்திற்கும், திட்டக்குழுவிற்கும் நேருவின் மறைவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

நேரு காலத்தில் திட்டக்குழு விரைந்து ஓடியது. இந்திரா காந்தி காலத்தில் விரைந்து நடந்தது. ராஜீவ் காந்தி ஆட்சியில் மெல்ல நடைபோடத் தொடங்கியது. இடைப்பட்ட காலத் தில் வி.பி. சிங் தொடங்கி வாஜ்பாய் வரை இதே நிலை நீடித்தது. நரசிம்மராவ் காலத்தில் ஆழ்ந்த உறக்கத் திற்குச் சென்றது. மன்மோகன் சிங் காலத்தில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளின் தரகராக மாறிவிட்டது. நேரு காலத்தில் தொடங்கி வெற்றிகரமாக இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களின் அரசுப் பங்குகளைத் தனியார் துறைக்குத் தாரை வார்க்க முடிவெடுத்தது.

நிதிக்குழு, திட்டக்குழு முரண்பாடுகள்

அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது பிரிவின்படி உருவாக்கப்பட்ட நிதிக்குழுதான் மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வை மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றது. திட்ட மிடலுக்காக உருவாக்கப்பட்ட திட்டக்குழு, மாநிலங் களுக்குத் திட்ட நிதி ஒதுக்கீடு செய்யும்முறையை நிதிக்குழுவிடம் இருந்து பறித்துக் கொண்டது. திட்டக் குழுவின் குறுக்கீட்டினைத் தவிர்க்க வேண்டும் என்று இரண்டாவது நிதிக்குழுவின் தலைவரான கே. சந்தானம் கடுமையாக எதிர்த்தார். அரசியல் சார்பான நிதி ஒதுக்கீட்டைத் திட்டக்குழு மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

1967க்குப் பின்னும் காங்கிரசு அல்லாத மற்ற கட்சிகள் சில மாநிலங்களில் ஆட்சிய மைத்தன. 1969 வரை திட்டக்குழு திட்ட ஒதுக்கீடு களை மாநிலங்களுக்கு வழங்கும் போது எவ்வித அளவுகோல்களுமின்றித் தன்னிச்சையாகச் செயல் பட்டது. பேராசிரியர் காட்கில் திட்டக்குழுவின் துணைத் தலைவரான பின்பு, பொருளாதார நிதியியல் சார்ந்த வரையறையை முதன்முதலாக 1969இல் வகுத்தார். மாநிலங்களின் மக்கள் தொகை அளவு, நிலப்பரப்பு, திரட்டும் வரிவருவாய் அளவு, மாநிலங்களுக்கே உரித் தான குறிப்பிட்ட பிரச்சனைகள், பின்தங்கிய நிலைமை போன்ற குறியீடுகள் அடிப்படையில் நடுவண் அரசு மாநிலங்களுக்கு நிதிப்பகிர்வினை மேற்கொள்ளலாம் என வரையறுத்தார். இதுபோன்ற சில அளவுகோல் களைத்தான் நிதிக்குழு 1951லிருந்து கடைப்பிடித்து வந்தது.

திசைமாறிய திட்டக்குழு

திட்ட உதவி என்ற பெயரில் (Plan Assistance) மாநிலங்களுக்கு 80 விழுக்காடு கடனாகவும், 20 விழுக்காடு மானியமாகவும் திட்டக்குழு வழங்கியது. 2010ஆம் ஆண்டில் கடன் 70 விழுக்காடாகவும், மானியம் 30 விழுக்காடாகவும் மாறியது. மாநிலங்களைக் கடன்காரர்களாகத் திட்டக்குழு மாற்றிவிட்டது. வட்டிச் சுமையால் பீகார், ஒரிசா, இராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் நிதிக்குழுவிடம் முறையிட்டன. 6ஆவது, 7ஆவது நிதிக்குழுக்கள் மாநிலங்களின் நிதிநிலைமை களுக்கேற்ப வட்டி வீதத்தைக் குறைத்தன அல்லது தள்ளுபடி செய்தன. நடுவண் அரசின் இரண்டு குழுக்களில் ஒன்று மாநிலங்களுக்குக் கடனளிப்பதும், மற்றொன்று வட்டியைத் தள்ளுபடி செய்தும் கூட்டாட்சி நிதி முறையில் (Federal Finance)) முரண்பாடுகளை உருவாக்கின. 2011க்குப் பிறகு கடனைச் சந்தையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும், 30 விழுக்காடு மானி யத்தை மட்டும்தான் மாநில அரசுகளுக்கு வழங்கப்படு மெனவும் திட்டக்குழு அறிவித்தது.

நடுவண் அரசின் துறைசார்ந்த நிதியுதவித் திட்டம்

நடுவண் அரசின் துறைகள் வழியாக மாநிலங்களுக்கு நேரடியாக நிதி வழங்கும் முறைமையையும் கொண்டு வரப்பட்டது. ஐந்தாவது திட்டக் காலத்தில் 190ஆகவும், ஒன்பதாம் திட்டக் காலத்தில் 360ஆகவும் இத்திட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 11ஆம் ஐந்தாண் டுத் திட்டத்தில் 147 திட்டங்களுக்காக 6.5 இலட்சங் கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் இதில் அடங்கும். இவற்றில் நடுவண் அரசின் 9 முன்னணித் திட்டங்கள் வழியாக மாநிலங்களுக்கு 5.24 இலட்சங் கோடி ஒதுக்கப்பட்டது. 79 விழுக்காடு 9 திட்டங் களுக்கும், எஞ்சிய 21 விழுக்காடு 138 திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வித சமூக, பொருளாதார அளவுகோல்களையும் கடைபிடிக்காமல், அந்தந்த மாநிலங்களின் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல், அரசமைப்புச் சட்டத்தால் நிதிப் பகிர்வை மாநிலங் களுக்கு அளிக்கும் நிதிக்குழுவின் ஆளுகையைச் சிறுமைப்படுத்திக், கூட்டாசியியலுக்கு எதிராக நடுவண் அரசு திட்டக்குழு வழியாகச் செயல்பட்டது என்பதற்கு இது சரியான சான்றாகும்.

2011இல் திட்டக்குழு உறுப்பினராக இருந்த சதுர்வேதி நடுவண் அரசின் துறைகள் வழியாக நேரடியாக நிதி வழங்கும் முறைமையைக் குறைக்க வும், மாநிங்களுடைய கோரிக்கைகளை ஏற்கவும் பல பரிந்துரைகளை வழங்கினார். பல மாநிலங்கள், மாநில அளவிலான திட்டக்குழுக்களை அமைத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு 11, 12 ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் 90 விழுக்காட்டுத் திட்டச் செலவுகளைத், தன்னுடைய நிதியாதாரங் களைக் கொண்டே திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.

இச்சூழலில் பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ‘நித்தி ஆயோக்’ அறிவிப்பு நடுவண் -மாநில அரசு களுக்கிடையேயான திட்டம், திட்டம் சாரா நிதி ஒதுக் கீடுகளை எவ்வாறு கையாளப் போகின்றது? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (263) இடம்பெற்றுள்ள மாநிலங்கிடையேயான மன்றத்தைக் கூட்டி, மாநில முதல்வர்கள், வல்லுநர்களைக் கலந்துபேசி, நிதி சீரமைப்பையும் திட்ட மேலாண்மையையும் ஒழுங்கு படுத்தி இருக்கலாம். ஏற்கெனவே நடுவண் அரசில் உறங்கிக் கொண்டிருக்கும் சர்க்காரியா, வெங்கடாச் சலய்யா, பூஞ்சி குழுக்களின் சீரிய பரிந்துரைகளை ஆய்ந்து திட்டக்குழுவை மேன்மைமிக்க அமைப்பாக மாற்றியிருக்கலாம்.

ஆனால், நடுவண் அரசு ஓர் அறிவிப்பால் திட்டக் குழுவை முடக்கியது. மற்றொரு அறிவிப்பால் ‘நித்தி ஆயோக்’ என்ற அமைப்பை உருவாக்கியிருந்தது. National Institution for Transforming India  என்ற ஆங்கில சொல்லோடு ஆயோக் என்ற இந்திச் சொல்லை மோடியின் அரசு மாற்றியுள்ளது. மேலும், நடுவண் அரசின் அமைச் சரவை அறிவிப்பில், நித்தி ஆயோக் அமைப்பு ஆட்சியி யலில், கொள்கைத் திட்டங்களில், அரசு அமைப்புகளில் மாற்றங்கள் உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் துறைக்கு மட்டும் வாதிடும் அரவிந்த் பானகாரியா என்பவரை இந்த அமைப்பிற்குத் துணைத் தலைவராகவும், பொருளியலாளர் பிபேக் டெபுராய், அரசு உயர் அலுவலர் சரஸ்வாட் ஆகியோரை முழு நேர உறுப்பினர்களாகவும், நடுவண் அரசு உள் துறை, நிதித்துறை, தொடர்வண்டித்துறை, வேளாண் துறைகளின் அமைச்சர்களை அலுவல் சாரா உறுப்பி னர்களாகவும் பிரதமர் மோடி இவ்வமைப்பின் தலைவர் என்ற முறையில் நியமித்தள்ளார். பல துறை வல்லுநர்களால் மேலாண்மை செய்யப்பட்ட பழைய திட்டக்குழுவின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு, தற்போது நடுவண் அரசின் சிறு அமைச்சரவையாகவே அது மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்களைப் பெரும்பான் மையாக கொண்ட இக்குழுவில் வல்லுநர்களின் ஆய்வுக் கருத்துகள் எடுபடுமா? துணிச்சலோடு கருத்துப் பரி மாற்றங்களை மேற்கொள்வார்களா? என்ற ஐயம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

அதிகாரக் குவிப்பால் ஊழல் மிகுந்து நாட்டையே அலற வைக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் நடுவண் அரசின் இயங்காத் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. இச்சூழலில் அதிகாரக் குவிப்பை மேலும் வலிமைப்படுத்தும் அமைப்பாகத்தானே இந்த நித்தி ஆயோக் செயல்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. எனவே, பழைய திட்டக்குழுவிற்கு நித்தி ஆயோக் சரியான மாற்றாக அமையாது; அமையவே முடியாது. 

Pin It