தோழர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வந்துள்ள சிறந்த படம். தலித் சமுதாயத்தில் பிறந்த ஒருவர், தனது இழிவுகளில் இருந்து விடுபடக் கல்வியைக் கருவியாக்கிப் போராட முயற்சி எடுக்கிறார். அவர் சந்திக்கும் சமுதாயத் தடைகளுக்குக் கலை வடிவம் கொடுத்துள்ள தோழர் மாரிசெல்வராஜ் அவர்கள், சரியான ஒரு விவாதத்தைத் தொடங்க விரும்புகிறார். உரையாட வேண்டியவர்கள் உரையாட வேண்டியதன் அவசியத்தை இதைவிடச் சிறப்பாகக் கூறமுடியாது.

pariyerum perumal teamதலித் மக்களின் இன்றைய வாழ்க்கை முறையை வாழ்ந்து பார்க்காதவர்களுக்கும், தலித் வாழ்வியலை, தலித் உணர்வுகளை இதுவரை உணரமுடியாதவர் களுக்கும் இந்தப்படம் நிச்சயமாகப் புரியாது. பிடிக்காது. மேற்குத்தொடர்ச்சி மலை படத்துக்குத் தோழர் பா.இரஞ்சித் பாராட்டுத் தெரிவிக்கும் போது, “எளிமையைப் படமாக்குவது மிகப்பெரும் சவாலான வேலை” என்றார். அந்தச் சாதனையை மாரி செல்வராஜூம் எட்டியுள்ளார்.

“என்னை நாயாக மதிக்கிற உங்களோட நினைப்பு மாறாதவரை இங்கு எதுவுமே மாறப் போவதில்லை” என்று இறுதிக் காட்சியில் பரியன் பேசும் ஒற்றை வாக்கியம், பல நூறு பக்கங்களில் பேச வேண்டியவற்றை அடக்கியுள்ளது. மிகமிகத் திறமையான வசனம் அது. அதைவிட அந்த இறுதி ஷாட்.....திட்டிக்கொண்டே படம் பார்த்துக் கொண்டிருந்த சிலரையும் கைதட்ட வைத்தது. பல நூற்றாண்டுக் கொடுமைகளை ‘ஒரே ஒரு ஃபோட்டோ’ என்ற அளவில் உள்ள அந்த ஷாட் டில் விளக்கியுள்ள ஆற்றலுக்கு வாழ்த்துக்கள்.

தீண்டாமை ஒழிப்பு என்ற அளவில் ‘பரியன்’ பாராட்டுக்குரியவர் தான் மறுப்பே இருக்காது. ஆனால், தீண்டாமைக் கொடுமைகளுக்குக் காரணமான ஜாதிமுறை, அதற்கு அடிப்படையாக உள்ள இந்துமதம், இந்து மதக் கடவுள்கள், இந்து சம்பிரதாயங்கள் இவற்றை நிறுவனப்படுத்தியுள்ள பார்ப்பனர்கள் போன்ற தீண்டாமையின் அடிவேர், ஆணிவேர்களைப் பற்றி சிறு அளவில்கூட விவாதிக்காதது ஏமாற்றமாக உள்ளது.

படத்தின் பெயரே ஒரு குலதெய்வப்பெயர். அதுவும் தற்செயலாக விபரம் தெரியாமல் வைக்கப்பட்ட பெயர் அல்ல. “அது எனது குலசாமியின் பெயர்” என இயக்குநரே விகடனில் கூறியுள்ளார். “திருநெல்வேலி மாவட்டத்துல பரியேறும் பெருமாள் முக்கியமான தெய்வம். இந்தத் தெய்வத்துக்கு, `சாஸ்தா வழிபாடு’ன்னு ஒண்ணு இருக்கு. அதாவது, குலதெய்வ வழிபாடு. அதில் எல்லா சாதியினரும் பாகுபாடு பார்க்காமல் சேர்ந்து பூஜை செய்வாங்க. அதுதான் இந்த சாமியுடைய விசேஷம். எங்க குடும்பத்துக்கும் பரியேறும் பெருமாளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. எங்களுடைய குலசாமி அவர்தான். என்னுடைய அப்பாவுடைய ஜாதகப் பேரும் அதுதான். அதனால்தான் அப்பா, என் அண்ணனுடைய பேரை பரியேறும் பெருமாள்னு வைச்சாரு. எனக்கும் அந்தப் பேரு மேல பெரிய ஈர்ப்பு உண்டு. அதையே என்னுடைய பேரா வைச்சிக் கணும்னு ஆசையும் இருந்துச்சு. (https://www.vikatan.com/news/spirituality/138076-director-mari-selvaraj-reveals-about-pariyerum-perumal.html)

இயக்குநரின் பார்வை தவறு என்பதை இந்தப் படத்தின் ஒரு காட்சியே விளக்குகிறது. படத்தில் முக்கியப் பாத்திரமாகத் தொடர்ச்சியாக ஆணவக் கொலைகளைச் செய்யும் ஒருவர் வருகிறார். அந்தக் கொலைகளைத் தனது குலதெய்வத்துக்குச் செய்யும் சேவையாகக் கருதித்தான் செய்கிறார். குலதெய்வங்கள் பார்ப்பனியத்துக்கு எதிரானவை என்பது யதார்த்தம் அல்ல. நாம் பேசிக்கொள்ளும் வெற்று வசனம் என்பதை அந்தக் காட்சியே விளக்குகிறது.

குலதெய்வங்களையும், ஜாதகங்களையும், இந்து மதப் பண்பாடுகளையும் போற்றிப் புகழ்ந்து கொண்டு, தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்து விட முடியும் என்பது சில கம்யூனிஸ்ட்டுகளின் நிலை. அம்பேத்கரிஸ்ட்டுகளுக்கும், பெரியாரிஸ்ட்டுகளுக்கும் இவற்றின் ஆபத்துகள் புரியும்.

இந்த மாற்றுக் கருத்துக்கள் நமக்குள் உரையாட வேண்டிய விசயங்கள் தான். அதை எப்போது வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். எந்த ‘இச’ த்தையும், எந்த அமைப்பையும் அறிந்திராத மக்களைப் படம் பார்க்க வைக்க வேண்டும். ஏனெனில், ‘பரியன்’ பல பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு இணையானவர்.

படத்தின் உள்ளடக்கத்தைத் தாண்டி ஒரு அரசியல். மெட்ராஸ் டாக்கீஸ் பார்ப்பனர் நிறுவனம். மெட்ராஸ் இயக்குநரின் ‘நீலம் ப்ரோடக்ஷன்ஸ்’ நமது நிறுவனம். நமது பணம் 150 ரூபாயைப் பார்ப்பனர் மணிரத்னத்துக்குக் கொடுக்க வேண்டுமா? தோழர் இரஞ்சித்துக்குக் கொடுக்க வேண்டுமா?

Pin It