“எங்க ஊர்க்காரங்கே…” என்று மதுரை வட்டார வழக்குமொழியில் அவர் ஒரு மேடையில் பேசத் தொடங்கியபோது, பேசிக் கொண்டிருந்தது ஒரு திரைப்பட இயக்குநர் அல்ல; தன் மண்ணின் மனிதன் தனது மக்களோடு உரையாடிக் கொண்டிருந்தார். ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்திருந்தாலும், அவருக்குள் வாழ்ந்த கிராமத்து மனிதனை நகர வாழ்க்கையால் மாற்ற முடியவில்லை.

பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான கதைகள் நகரங்களின் வீடுகளிலும், ஸ்டுடியோக்களின் செயற்கை அரங்குகளிலும் சுற்றிக் கொண்டிருந்தன. அந்தப் போக்கை உடைத்து, புழுதி பறக்கும் கிராமச் சாலைகளையும், வயல்வெளிகளையும், வெயிலில் கருகிய முகங்களையும், வெள்ளந்தியான மனிதர்களையும் பெரிய திரைக்குக் கொண்டு வந்தவர் பாரதிராஜா. அது ஒரு புதிய இயக்குநரின் வருகை மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் பார்வையையே மாற்றிய ஒரு பண்பாட்டு நிகழ்வாகும்.bharathiraja 466கிராம வாழ்க்கையை அவர் அழகுபடுத்தி மட்டும் காட்டவில்லை. அன்பும் பாசமும் நிரம்பிய உறவுகளோடு, சாதி, மதம், அறியாமை, ஆணாதிக்கம் போன்ற சமூகச் சிக்கல்களையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள வைத்தார். கிராமத்தின் அழகையும் அதன் முரண்பாடுகளையும் ஒருசேரப் பதிவு செய்ததால்தான் அவரது திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், ஒரு காலத்தின் சமூக ஆவணங்களாகவும் மாறின.

அதனால்தான் பாரதிராஜாவை நினைக்கும் போது அவரது திரைப்படங்கள் மட்டும் நினைவுக்கு வருவதில்லை; அவரது மொழி, மண்ணின் மணம், அவர் உயிர் கொடுத்த மனிதர்கள், அவர்கள் வாழ்ந்த கிராமங்களும் நம் நினைவில் உயிரோடு நிற்கின்றன.

"பாரதிராஜாவின் படைப்புலகம் பரந்தது. அதில் அவரது கலைப் பார்வையையும் மனிதநேயச் சிந்தனையையும் தெளிவாக வெளிப்படுத்தும் மூன்று திரைப்படங்களின் வழியே அவரது படைப்புலகை அணுகிப் பார்ப்போம்."

16 வயதினிலே – காதலின் மாயையும் உண்மையும்

தமிழ் சினிமாவில் கிராமத்தை வெறும் கதையின் பின்னணியாக அல்ல, உயிரோட்டமுள்ள ஒரு வாழ்விடமாக மாற்றிய திரைப்படம் "16 வயதினிலே." இது பாரதிராஜாவின் முதல் திரைப்படம் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் புதிய மொழிக்கான தொடக்கமும் ஆகும்.

கமல்ஹாசன் போன்ற அழகிய நாயகனை சப்பாணி என்ற எளிய கிராமத்து இளைஞனாக மாற்றிய துணிச்சல், முதல் படத்திலேயே இயல்பான நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்த ஸ்ரீதேவி, "இது எப்படியிருக்கு?" என்ற வசனத்தின் மூலம் தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கிய ரஜினிகாந்த், மேலும் கவுண்டமணி உள்ளிட்ட பலரின் சிறப்பான நடிப்பு—இவை அனைத்தும் இணைந்து இந்தப் படத்தை மறக்க முடியாத படைப்பாக மாற்றின.

இந்தப் படம் உருவான பின்னணியும் போராட்டங்களால் நிரம்பியதுதான். படப்பிடிப்பின்போது பிலிம் ரோல் கிடைப்பதில் ஏற்பட்ட சிரமங்கள், சில காட்சிகளை—குறிப்பாக மெதுவாக நகரும் (slow motion) காட்சிகளை—பதிவு செய்ய எதிர்கொண்ட தொழில்நுட்ப சவால்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் பலமுறை நினைவுகூர்ந்துள்ளார். படம் வெளியாவதிலும் பல தடைகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம் கடந்து மக்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் படத்தின் மையத்தில் இருப்பது காதலின் உண்மையான முகம். மயிலு, மருத்துவரின் கல்வி, தோற்றம், சமூக அந்தஸ்து ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறாள். ஆனால் வாழ்க்கை அவளுக்கு வேறு ஒரு உண்மையை உணர்த்துகிறது. வெளிப்புற அழகோ, உயர்ந்த அந்தஸ்தோ காதலின் அடிப்படை அல்ல; எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பு செலுத்தும் சப்பாணியின் இதயம்தான் உண்மையான காதலின் முகம் என்பதை அவள் உணர்கிறாள்.

அதனால்தான் சப்பாணி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒருவராக மட்டுமல்ல, நிபந்தனையற்ற அன்பின் அடையாளமாகவும் இன்றுவரை நினைவில் நிற்கிறார்.

"‘16 வயதினிலே’ ஒரு காதல் திரைப்படம் மட்டுமல்ல; கிராமத்து மனிதர்களின் உணர்வுகளுக்கும், தமிழ் சினிமாவின் புதிய யதார்த்தத்திற்கும் எழுதப்பட்ட முதல் கவிதை."

முதல் மரியாதை – தாமதமாக வந்த அன்பின் அர்த்தம்

பாரதிராஜாவின் திரைப்படங்களில் மிகவும் முதிர்ச்சியான படைப்புகளில் ஒன்று "முதல் மரியாதை." இது வழக்கமான காதல் கதையல்ல; வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஒரு மனிதன் தேடும் அன்பு, புரிதல், மரியாதை ஆகியவற்றின் கதை.

குடும்பச் சூழ்நிலையால் ஏற்கனவே கர்ப்பமாக இருந்த பெண்ணை மணக்கிறார் மலையச்சாமி. அந்தத் திருமணம் கணவன்–மனைவி என்ற உறவின் பெயரைப் பெற்றிருந்தாலும், அன்பும் மனப்புரிதலும் இல்லாத வெறுமையான வாழ்க்கையாகவே நீள்கிறது.

பொதுவாக ஐம்பது வயதைக் கடந்த பெண்களின் வாழ்க்கை பேரன், பேத்திகள், குடும்ப உறவுகள் என்று புதிய அர்த்தங்களைப் பெறத் தொடங்குகிறது. ஆனால் பல ஆண்களின் வாழ்க்கையில் அந்த வயதில்தான் இன்னொருவர் தன்னைப் புரிந்துகொள்ள வேண்டும், தனது வார்த்தைகளைக் கேட்க வேண்டும், அன்பாக அணுக வேண்டும் என்ற ஏக்கம் அதிகமாக வெளிப்படுகிறது. அது உடல்சார்ந்த ஆசையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மனம் தேடும் ஒரு மனித உறவாகவும் இருக்கலாம்.

அதனால்தான் இந்தப் படத்தில் இடம்பெறும் "கிடைக்குமா தாய்மடி..." என்ற பாடல் வரி வெறும் இசையாக ஒலிக்கவில்லை; மலையச்சாமியின் உள்ளார்ந்த ஏக்கத்தின் குரலாக மாறுகிறது. குடும்ப வாழ்க்கையில் கிடைக்காத அன்பையும் புரிதலையும் அவர் குயிலின் நட்பில் உணர்கிறார். அவர்களது உறவு காதலின் வழக்கமான வரையறைகளைத் தாண்டி, இரண்டு தனிமையான மனங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனிதநேய உறவாக உயர்கிறது.

இந்தப் படம் நம்மிடம் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. கணவன்–மனைவி உறவு என்பது உடல் சார்ந்த உறவா? அல்லது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மதித்து, அன்பு செலுத்தும் வாழ்க்கைத் துணைத்தனமா? பாரதிராஜாவின் பதில் தெளிவானது. மனித உறவுகளின் அடித்தளம் உடல் அல்ல; அன்பும் புரிதலும்தான்.

இந்தப் படத்தில் மலையச்சாமியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளிப்படுத்திய அமைதியான, ஆழமான நடிப்பு தமிழ் சினிமாவின் உச்சங்களுள் ஒன்றாகும். அவருக்கு இணையாக ராதாவும், வடிவுக்கரசியும் தங்களது கதாபாத்திரங்களை வாழ்ந்து காட்டியுள்ளனர். இந்த உணர்வுமிக்க உலகத்தை இளையராஜாவின் இசை இன்னும் ஆழமாக்குகிறது. பல இடங்களில் காட்சிகள் பேசுவதற்கு முன்பே இசையே கதாபாத்திரங்களின் மனநிலையை நமக்கு உணர்த்துகிறது.

"முதல் மரியாதை" ஒரு திரைப்படம் மட்டுமல்ல; அன்பில்லாத வாழ்க்கை எவ்வளவு வெறுமையானது என்பதையும், உண்மையான அன்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதையும் நமக்கு உணர்த்தும் காலத்தால் அழியாத படைப்பு.

"இளமைக்குக் காதலைப் பற்றி பல திரைப்படங்கள் பேசுகின்றன; ஆனால் முதுமையில் மனிதன் தேடும் அன்பைப் பற்றி இவ்வளவு நுட்பமாகப் பேசிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவு. அந்த அரிய இடத்தை 'முதல் மரியாதை' பெற்றிருக்கிறது."

கிழக்குச் சீமையிலே – மண்ணும் உறவுகளும்

“மானூத்து மந்தையிலே மாங்குட்டி பெத்த மயிலே…” என்ற பாடலுடன் தொடங்கும் கிழக்குச் சீமையிலே, முதல் காட்சியிலிருந்தே நம்மை மதுரை–தேனி மண்ணின் மண்வாசனை நிறைந்த உலகிற்குள் அழைத்துச் செல்கிறது. வயல்வெளிகளுக்கு நடுவே செல்லும் மாட்டுவண்டிகள், வயலில் உழைக்கும் மக்கள், “தாய்மாமன் சீர்கொண்டு வாராண்டி…” என்ற பாடல் வரிகள்—இவை அனைத்தும் இது வெறும் திரைப்படம் அல்ல; ஒரு கிராமத்தின் வாழ்க்கை என்று உணர வைக்கின்றன.

இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக பாரதிராஜாவின் படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்தார். அந்த இசை, கிராமத்து மண்ணின் மண்வாசனையை நவீன இசையுடன் இணைத்து ஒரு புதிய அனுபவத்தை உருவாக்கியது.

தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான உறவுமுறைகளில் மிகவும் முக்கியமானது தாய்மாமன் உறவு. உலகின் பல சமூகங்களில் காணப்படாத அளவுக்கு பாசமும் பொறுப்பும் கலந்த இந்த உறவை மையமாகக் கொண்டு உருவான திரைப்படங்களில் கிழக்குச் சீமையிலே தனி இடம் பெறுகிறது. கிராமத்து உறவுகள் அளவுகடந்த அன்பையும் வெளிப்படுத்தும்; அதே உறவுகள் கருத்து வேறுபாடுகள் வந்தால் கோபத்தையும், மோதலையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு உணர்வுகளுக்கும் இடையில் அண்ணன்–தங்கை பாசத்தையும், தாய்மாமன் உறவின் ஆழத்தையும் பாரதிராஜா மிகவும் நுட்பமாகச் சித்தரிக்கிறார்.

மதுரை–தேனி வட்டார மக்களின் வாழ்க்கை, குடும்ப மரபுகள், உறவுகளின் வலிமை, மண்ணோடு மனிதனுக்குள்ள பிரிக்க முடியாத பிணைப்பு—இவற்றை இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகச் சிலவே.

தொடக்கத்தில் மாப்பிள்ளை–மச்சான் பாசத்துடன் பழகும் மாயாண்டித்தேவனாக விஜயகுமாரும், சிவனாண்டியாக நெப்போலியனும், சூழ்நிலைகளால் ஒருகட்டத்தில் எதிரெதிராக நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு புறம் கணவன், மறுபுறம் சகோதரன் என்ற இரு உறவுகளுக்கிடையில் மனம் பிளந்து நிற்கும் விருமாயியாக ராதிகா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு காட்சி மறக்க முடியாதது. காயமடைந்த விஜயகுமாரின் காயத்தின் மீது ராதிகா ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வைக்கிறார். அது வெறும் நாட்டுப்புற வைத்தியம் அல்ல. “இந்த மண்ணில்தான் நாம் பிறந்தோம்; இந்த மண்ணே நம்மைக் காக்கும்” என்ற கிராமிய நம்பிக்கையின் குறியீடு. ஒரு கைப்பிடி மண்ணின் வழியாக, மண்ணுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை பாரதிராஜா பேசுகிறார்.

"கிழக்குச் சீமையிலே" அண்ணன்–தங்கை பாசத்தைப் பற்றிய திரைப்படம் மட்டுமல்ல; மண்ணும் மனிதனும், உறவுகளும் பண்பாடும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் தமிழர் வாழ்க்கையின் காவியப் பதிவு.

பாரதிராஜா மறைந்திருக்கலாம். ஆனால் அவர் காட்டிய கிராமங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. சப்பாணி, மயிலு, மலையச்சாமி, குயில், விருமாயி போன்ற கதாபாத்திரங்கள் இன்னும் நம்மோடு வாழ்கின்றன. ஒரு இயக்குநரின் மிகப்பெரிய வெற்றி, அவரது திரைப்படங்கள் காலத்தை வெல்வதில்தான் இருக்கிறது. அந்த வகையில் பாரதிராஜா இன்னும் உயிரோடிருக்கிறார்.

அவரது உடல் அவர் நேசித்த மண்ணில் உறங்கலாம். ஆனால் அவர் விதைத்த விதைகள் இன்னும் தமிழ் சினிமாவில் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்று கிராமங்களைப் பற்றி திரைப்படம் எடுக்கும் ஒவ்வொரு இயக்குநரிடமும் பாரதிராஜாவின் நிழல் இருக்கிறது. அவர் ஒரு இயக்குநராக மட்டும் வாழவில்லை; தமிழ் சினிமாவின் பார்வையை மாற்றிய ஒரு பண்பாட்டு சக்தியாக வாழ்ந்தார். அதனால்தான் பாரதிராஜா மறையவில்லை; அவர் காட்டிய மண்ணின் மணமாகவும், மனித நேயத்தின் வாசனையாகவும், தமிழ் சினிமாவின் நினைவாகவும் தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

"தமிழ் சினிமாவை ஸ்டுடியோவிலிருந்து மண்ணுக்குக் கொண்டு வந்த மனிதர், இன்று அந்த மண்ணோடு கலந்துவிட்டார். ஆனால் அவர் எழுப்பிய மண்வாசனை இனியும் மறையாது."

"அவர் கிராமத்தை வெறும் காட்சிப் பின்னணியாகப் பயன்படுத்தவில்லை; கிராமத்தின் மனிதர்களை, அவர்களின் மொழியை, வலியை, காதலை, பண்பாட்டைத் தமிழ்த் திரையின் மையமாக மாற்றினார். அதனால்தான் பாரதிராஜா ஒரு வெற்றிகரமான இயக்குநர் மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு ஆவணப்படைப்பாளராகவும் நினைவுகூரப்படுகிறார்."

- அ.தமிழ்ச்செல்வன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.