அதிகப்படியான துக்கமோ, பிரிவோ, ஏமாற்ற மோ நேருகிறபோது மனிதர்கள் மட்டுமல்ல. ஐந்தறிவுடைய விலங்கினங்களும் ஏன்? பறவைகளும் கூடத் தம்முயிரைத்தாமே பலியாக்கிக் கொள் கின்றன என்பதைக் குறுந்தொகை இலக்கியப் பாடல் (எண் 69) ஒன்று விளக்குகிறது.

கைம்மை உய்யாக் காமர்மந்தி

கல்லா வன்பிறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்கு வரையடுக்கத்துப் பாய்ந்து உயிர்செகுக்கும்

சாரல் நாட...!

கடுவனை (ஆண் குரங்கை) இழந்த பெண் மந்தி துயரம் தாளாது உயர்ந்த மலைமுகட்டினில் இருந்து தன்பலியாக உயிர்விடுவதை இப்பாடல் புலப்படுத்துகிறது.

sathi அன்றில் பறவைகளின் இணையில் ஒன்று மடிந்தாலும் பிறிதொன்று தற்கொலையாக மரணிக்கும் என்றும் சில பறவைகள் கற்களை விழுங்கிப் பின் கீழே தரையில் மோதி இறக்கின்றன என்றும் பறவை இயலாளர் கூறுகின்றனர்.

ஆறுமாதத் தமிழ் நாளிதழ்களை எடுத்து வைத்துப் படித்தால் தற்கொலைகளுக்கான காரணங்கள் புலப்படும்.

தேர்வில் தோல்வி, தேர்தலில் வீழ்ச்சி. காதலில் தோல்வி, கணவனின் துரோகம், கள்ளக்காதல், வேலை இழப்பு, பிழைப்பின்றி வறுமை, பழி, வணிகத்தில் நஷ்டம், வாழ்வில் அவமானம், அரசின் கெடுபிடி, கைப்பொருள் இழப்பு, முதுமைத் துயரம் என்று பலவிதமான காரணங்களைத் தற்கொலைகளுக்கான காரணிகளாக மனநல மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர்.

இம்மாதிரியான செயல்களின் தாக்கத்தால் விஷமருந்தவும், உயரமான இடங்களில் இருந்து கீழே பாயவும், தன் பலியாகத் தங்கள் மரணங் களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்

“வைரவியாபாரி மகனுக்கு

வணிகத்தில் பெரும்இழப்பு

வைரத்தைப் பொடிசெய்துவிழுங்கி

வாழ்வைத் துறந்தான்.

மளிகைக்கடைக்காரர் மகனுக்கு

மனக்கஷ்டம் பணநஷ்டம்

எலிமருந்தை எடுத்துவிழுங்கியே

இன்னுயிர் நீத்தான்:

செத்தாலும் மேன்மக்கள்

மேன்மக்களே!”

என்று தற்கொலைகளில் கூட மேல் மக்கள், கீழ் மக்கள் பேதம் இருப்பதாக இந்தச் சமகாலத் தமிழ்க் கவிதை கூறுகிறது.

கற்பின் பெயராலும், கணவன் இறந்தால் தம் எதிர்காலம் பாழ்பட்டுப் போய்விடும் என்ற அச்சத் தாலும் பண்பாடு, மரபு சிந்தனைகளின் தாக்கத் தாலும் பெண்கள் கணவன் மரணமடைந்ததும் தாங்களும் தன் பலியாகச் சிதையில் விழுந்து இறந்த செய்திகள் இன்றும் கூடக்காணப்படுகின்றன.

உடன்கட்டையேறுதல் எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. சட்டங்களால் கூட இச் சதி மரணங்களைத் தடைசெய்ய முடியவில்லை.

இம்மாதிரியான மரணங்கள் தன்பலியாக மேற்கொள்ளப்படுவது தொன்று தொட்டு நிகழ்கிறது. வால்மீகி இராமாயணத்தில் இராவணனுடைய தாய் வேதவதி தன் கணவர் குஷ்தவகா மாண்டதும் சிதையில் தானும் விழுந்துள்ளாள்.

மகாபாரதத்தில் வாசுதேவன் என்பவர், இறந்ததும் தேவகி, சுபத்ரா, ரோகிணி, மதுரா. ஆகியோரும் கிருஷ்ணன் இறந்தபோது அவர் மனைவியர் ருக்மிணி, காந்தாரி, கைபியா, ஹேமாவதி, ஜாம்பவதி ஆகியோர் நெருப்பில் விழுந்து வீர சுவர்க்கம் அடைந்தனர் என்று கூறப் படுகிறது.

சங்க இலக்கியத்தில் பூதப்பாண்டியன் இறந்ததும் மனைவி பெருங்கோப் பெண்டு சிதையில் விழுந்து தற்கொலை செய்ததைப் புறநானூற்றின் 246-ஆம் பாடல் பகிர்கிறது.

சோழன் பல்தடக்கைப் பெருவிறற்கிள்ளி மாண்டபோதும், சேரன் குடக்கோ நெடுஞ் சேரலாதன் மாண்டபோதும் அவர்களின் துணைவி யர் கணவர்தம் மார்பைத் தழுவியவாறே உயிர் விட்டனர் என்பதைச் சங்கப்பாடல் புறநானூறு சுட்டிக்காட்டுகிறது.

.... பெண்டிரும்

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி யாங்கமைந்தனரே!

என்று புறநானூற்றின் 62-ஆம் பாடல் சாற்றுகிறது.

கொடும்பாளூர் குறுநிலவேந்தரான வீரசோழ இளங்கோவேளார் மாண்டபோது அவன் மனைவி கங்கமாதேவி கோயிலில் விளக்கு வைக்க ஏற்பாடு செய்துவிட்டுத் தான்பலியானதைச் சங்க இலக் கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. (கல்வெட்டுக் கலை நூல் சொ. சாந்தலிங்கம் பொ. இராஜேந் திரன் பக்கம் 159)

இவ்வாறு மாண்டோரின் நினைவாக நினைவுக் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகள் சதிக்கல், மாசதிக்கல், மாஸ்திக்கல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

கடைச் சங்கப்புலவர் கபிலர், பாரி மகளிர் திருமணம் முடிந்ததும் பெண்ணை ஆற்றின் கரையில் தீக்குளித்து மாய்ந்தார் (சோழர் கல்வெட்டு) என்று வரலாறு காட்டுகிறது.

இதுபோலப் பல இடங்களில் பெண்கள் தீயில் புகுந்து உயிர் நீத்துச் சதியானதால் அவர் களுக்காக எடுக்கப்பட்ட கோயில்கள் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் என்று வழிபடப்பட்டு வருகின்றன.

தர்மபுரி நகரில் காமாட்சி அம்மன் கோயில் தெருவில் தீப்பாஞ்ச அம்மன் கோயில், சிதம்பரம் சேத்தியாத் தோப்பு தீப்பாய்ந்தாள் கோவில் ஆகியவை இதற்குச் சான்றுகளாகக் காட்டப் படுகின்றன.

சோழ மண்டலத்தை ஆண்டு வந்த சுந்தர சோழன் மாண்டபோது அவனது காதல் மனைவி வானவன் மாதேவி சிதையில் தன்பலியாக விழுந்து உடன்கட்டை ஏறினாள். (தெ.இ. கல்வெட்டு II) இவ்வாறு அவள் மாண்டபோது அவளது மகள் குந்தவை நாச்சியார் தஞ்சைப் பெரிய கோவிலில் வானவன் மாதேவிக்குச் சிலை எடுப்பித்து அணி கலன்களை வழங்கியதாகச் சோழர் கல்வெட்டு சொல்கிறது.

வடக்கிருந்து உயிர் நீத்தல், வாளைச் செங் குத்தாகத் தரையில் நிறுத்தி அதன்மேல் பாய்ந்து உயிர்விடல், கழுவில் தானே அமர்ந்து உயிர் நீத்தல். உயர்ந்த இடங்களில், கோபுர உச்சிகளில் ஏறிக் கீழே விழுதல் ஆகியவைகளும் நஞ்சருந்துதல் போன்றும் பலவகைகளில் தன்னுயிர் மாய்ந் தவர்கள் குறித்தும் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.

சங்ககாலம் தொட்டுக் கோவில்கள் மனித வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன. ஊர் விஷயங்களை விவாதிக்கவும், கிராம சபைக் கூட்டங்கள் கூட்டவும், குடவோலைத் தேர்தல்கள் (உத்தரமேரூர் கல்வெட்டு) நடத்தவும், ஊர் முன் வரும் வழக்குகளை விசாரிக்கவும் இன்றளவும் கோவில்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

கோவில் மண்டபங்களில் விவாதித்து எடுக்கப்படும் முடிவுகளை மீறினால் தெய்வக் குற்றம் நேரும் என்ற அச்ச உணர்வு மனிதர்களிடம் நிலவியது.

முக்கியமான செய்திகளை ஊரார் அனை வருக்கும் தெரிவிப்பதற்குக் கோவில் கோபுரங்கள் பயன்பட்டன. இது மட்டுமல்லாமல் அன்னியர் படை எடுப்புக் காலத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மறைந்து வாழவும். ஊரின் முக்கிய ஆவணங்களை மறைத்து வைக்கவும் கோவில்கள் பயன்பட்டன.

மலைகளைத் தவிர்த்து அக்காலத்தில் உயர மான இடங்கள் இல்லாதிருந்த காலங்களில் கோவில் கோபுரங்கள் உயரமாகக் கட்டப்பட்டன.

பதினேழாம் நூற்றாண்டுவரை கோபுரங்கள் மட்டுமே உயரமாக இருந்தன. இப்போதைய கட்டடங்கள் வளாகங்கள் அப்போது இல்லை.

கோபுரங்கள் கோவில்களுக்கு மட்டுமல்ல ஊர்ப் பெயர்களுக்கும் அடையாளங்களாக இருந்தன. பல ஊர்கள் கோபுரங்களாலேயே புகழ்பெற்று விளங்கி வருகின்றன. விடுதலைப் போராட்ட காலங்களில் மூவண்ணக் கொடிகளைக் கோபுரங் களில் தான் ஏற்றினர் நமது தேசபக்தர்கள்.

திருச்சி மாவட்டம் அன்பிலில் திருவான் கொடையார் கோவிலுக்கு நிலம் ஒன்று ஊருக்குப் பொதுவாக இருந்தது. ஊர்ப் பொது நிதியிலிருந்து வரி செலுத்தினர். ஆனால் காலப்போக்கில் இந் நிலத்தை ஊர் மகாசபையினர் தம் பெயரில் எடுத்துக் கொண்டனர். இதனைப் பழுதயாண்டார் என்பவர் எதிர்த்தார். தன் உயிரைக் கோவில் கோபுர மேறிக்கீழே விழுந்து நீத்தார்.

இதன் பின் ஊர் மகாசபையாரும் ஊர் முதலியும், ஊர் மக்களும் ஒன்றுகூடி ஆய்வு செய்து கோவில் அதிகாரியின் கணக்குப்படி நிலத்தை மகாசபையாரிடமிருந்து எழுதி வாங்கி மீட்டு ஊர்ப் பொதுவில் சேர்த்தனர். (புலவர் ஆ. சிவசுப்பிரமணியன் 2007 பக் 21)

கோவில் நிலத்தைப் பாதுகாக்க உயிர்விட்ட பழுதையாண்டாருக்கு திருவான் தொடையார் கோவிலில் சிலை உருவாக்கி இந்நாயனாருக்கு அமுது படிக்கு மூலதனமாக அரைவேலி நிலத்தை வற நீக்கி வழங்கினார். மூன்றாம் இராஜேந்திரனின் நான்காம் ஆண்டு ஆட்சியில் கி.பி.1249- இது நிகழ்ந்தது.
விஜய நகரப் பேரரசின் காலத்தில் ஸ்ரீரங்கம் பகுதி உள்ளிட்ட மண்டலத்தை ஆண்டு வந்தவன் வைத்தியநாத காளிங்கராயன் (கி.பி. 1471- 1485) என்ற கோனேரி ராயன் ஆவான்.

இவனுடைய ஆட்சிக்காலத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் புரவரி, காணிக்கை வரி, பட்டுவரி, பரிவட்டவரி, போன்ற வரிகளை விதித்தும் ஸ்ரீரங்கம் கோவிலின் ஸ்ரீ பண்டாரம் என்னும் கருவூலத்தில் சேர்த்து வைக்கப்பட்ட உயர்ந்த அணி களையும் பொன் நாணயங்களையும் கவர்ந்தும் சென்றான். மக்களின் எழுச்சியையும் கண்டனங்களையும் கோனேரி ராயன் செவி மடுக்கவே இல்லை. அரச பயங்கரவாதமான கோனேரி ராயனை எதிர்த்துப் போராடி மக்கள் முழக்க மிட்டனர்.

இதனைப் பொறுக்கமாட்டாமலும் ஊரறிய இதனைக் கண்டிக்கவும் விரும்பிய அரங்கனின் பக்தரானவரும் ஏகாங்கியுமான அழகிய மண வாளதாசர் என்பவர் இரண்டு ஜீயர்களுடன் வெள்ளைக் கோபுரம் என்னும் கிழக்குக் கோபுரம் மீது ஏறிக் கீழே விழுந்து உயிர் நீத்தனர்.

“ஸ்ரீரங்கநாத சுவாமிக்குப் படித்தரம் ஒன்றும் நடத்தாமல்

மிகவும் அன்னியாயம் பண்ணுகையில் பொறுக்க

மாட்டாதேயிந்த திருக்கோபுரத்திலேறி விழுந்து இறந்த

காலமெடுத்த அழகிய மணவாளதாசன் ஸ்ரீகாரியம்

பெரியாழ்வார்.”

என்று வெள்ளைக் கோபுர வடபுற நிலைக்கால் அடியவர் சிலை மேலே கல்வெட்டு ஒன்று உள்ளது. தெற்கு நிலைக் காலில் ஜீயர்கள் இருவரின் சிலைகள் உள்ளன. அரசியல் பின்னணியில் நடந்தவைகளாகக் கருதப்படுகிற இத்தகைய மரணங்கள் கி.பி. 1486-ல் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது (புலவர் ஆ. சிவசுப்பிரமணியன் 2007. பக் 51)

கோனேரி ராயன் காலத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் எதுவும் சரிவர நடைபெறவில்லை. வைணவ சம்பிரதாயங்கள் மீறப்பட்டன. கோவிலே களை யிழந்து போனது போல் உணர்ந்தனர்.

இதனால் அரங்கன் பக்தர்கள் மிகவும் அவதி யுற்றனர். இதைப் பலமுறை கோனேரி ராயன் கவனத்திற்குக் கொண்டு சென்றும் கூட ஸ்ரீரங்கநாத சுவாமிக்குப் படித்தரம் ஒன்றும் நடக்காமல் அநியாயம் நேர்ந்துவந்தது.

இதனால் இவ்வூரைச் சார்ந்த ஸ்ரீ காரியம் அப்பாவையங்கார் என்பவர் தெற்குக் கோபுர உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிர் நீத்தார். தெற்குக் கோபுரவாசலின் கீழ்ப்புற நிலையில் அப்பாவையங்கார் உருவச்சிலையும் கல்வெட்டும் உள்ளன. இக்கல்வெட்டில்,

“சுபமஸ்து சௌமிய வருஷம் தை மாதம் நாலாந்தேதி

வெள்ளிக் கிழமை நாளன்று ஸ்ரீரங்க நாத சுவாமிக்கு

படித்தரம் ஒன்றும் நடத்தாமல் மிகவும் அன்னியாயம்

பண்ணுகையில் குடுக்கமாட்டாதே இந்தத் திருக்கோ

புரத்தில் ஏறி விழுந்து இறந்த ஸ்ரீகாரியம் அப்பா

வையங்கார் இவருக்கு சுவாமி யெக்காளங்கள்

திருத்தேர் புறப்பாட்டு முதலான அதியவரிசைபிரசாதித்

தருளி பிரம்மமேத சமஸ்காரம் பண்ணிவித்தருளி

முழுப்படித்தரம் கொண்டருளினார். யிப்படி நடந்த

இந்த முழுப் படித்தரத்துக்கு விரோதம் பண்ணினவன்

ரெங்கத்துரோகியாய்ப் போகக் கடவன்”

என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (புலவர். ஆ. சிவசுப்பிரமணியன் 2007 மேலது பக் 50)

ஸ்ரீரங்கத்தில் தேவரடியாரான ஒரு பெண்ணும் இசுலாமியர் படைக்கொடுமை பொறாமல் தற்கொலை செய்து கொண்டதை கோயிலொழுகு நூலில் கிருஷ்ணமாச்சாரியார் (அ. 2005) தனது நூலில் குறிப்பிடுகின்றார்.

பதினான்காம் நூற்றாண்டில் திருவரங்கத்தின் மீது இஸ்லாமியர் படை எடுப்பு நிகழ்ந்தது. திருவரங்கத்தின் அளவு கடந்த செல்வங்களும், நிரம்பி வழியும் அணிகலன்களும் இஸ்லாமியர் படைக்கு ஆசையைத் தூண்டின. தேவரடியார் களும் இவர்களால் இன்னல்பட்டனர்.

இவர்களின் அட்டூழியம் எல்லை மீறுவதைப் பொறுக்கமாட்டாத வெள்ளையம்மாள் என்ற தேவரடியார் தன்னை மிகவும் அழகுபடுத்திக் கொண்டு இஸ்லாமியர் படைத்தலைவனைச் சந்தித்தாள். தேன்குடித்தவனாக மயங்கிய படைத் தலைவனை பலவிதமான ஆசை வார்த்தைகள் பேசி மயக்கி, கோபுர உச்சிவரை அழைத்துச் சென்றாள். அங்கேயிருந்து படைத்தலைவனைக் கீழே தள்ளிவிட்டுத் தானும் தரையில் பாய்ந்தாள்.

இந்திய விடுதலைப் போரில் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் சுட்டுக் கொண்ட வாஞ்சிநாதனின் தற்கொலையைப்போல் வரலாற்றில் வெள்ளையம்மாளின் தியாகமும் பாராட்டிப் பேசப்படுகிறது.

இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேவரடியார் எவரேனும் இம்மாதிரி மரணமடைந்தால் திருவரங்க நாதர் கோவில் திருமடப்பள்ளியிலிருந்து நெருப்பும், திருக் கொட்டாரத்திலிருந்து அமுதுபடி, தீர்த்தம் திருமாலை, திருப்பரிவட்டம் வழங்கப்பட வேண்டு மென்று கோவில் நிர்வாகம் ஆணையிட்டது. தேவதாசி முறை 1953-இல் ஒழிக்கப்பட்ட போது இம்முறையும் முடிவுக்கு வந்தது.

நாயக்கர் காலத்தில் மதுரையை ஆண்ட விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் சப்பரந் தூக்கிகள் என்று அழைக்கப்படும் சீர்பாதந்தாங்கிகளுக்கு எவ்விதமான வரிகளும் இல்லாமல், சாம நத்தம். சீகாழை, புங்கங்குளம், செங்குளம் ஆகிய கிராமங்களில் நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் மன்னரின் பிரதானிகளும் அரண் மனை அதிகாரிகளில் சிலரும் மன்னருக்குத் தெரி யாமல் சீர்பாதந்தாங்கிகளுக்கு வழங்கப்பட்ட இறையிலி நிலங்களுக்கு வரி கேட்டுத் துன்புறுத்தி வந்தனர்.

இதனை மன்னரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயன்ற போது அதிகாரிகள் இதனை அனுமதிக்காமல் மன்னனின் கவனத்தையும் திசை திருப்பினர். இது சீர்பாதந்தாங்கிகளிடையே கோபத்தை உண்டு பண்ணியது. கூட்டமாகத் திரண்டு கோவில் வாசலில் முற்றுகையிட்டனர். மக்களும் பிறபணியாளர்களும் கூட்டமாகத் திரண்டதால் மதுரையில் பரபரப்பு நிலவியது.

தளவாயும் பிரதானியும் செய்கிற அட்டூழியங்களைக் கண்டு ஆவேசப்பட்ட சீர்பாதந்தாங்கி களில் ஒருவன் மதுரை கிழக்கு கோபுரத்தில் ஏறிக் கீழே விழுந்து மாண்டான் என்று கல்வெட்டு சொல்கிறது.

இது மக்களிடையே கலவரத்தைத் தூண்டியது. நான்கு கோபுர வாசல்களிலும் கூடித் திரண்டு நின்றனர். செய்தி அறிந்ததும் அரண்மனையி லிருந்து அதிகாரிகள் ஓடிவந்தனர்.

மக்கள் அவர்களைச் சூழ்ந்து நின்றனர். மிகுந்த சிரமத்தின் பேரில் அதிகாரிகள் ‘மணியம், சம்பிரிதி, தினசரிக்காரர் ஆகியோர் சீர்பாதந்தாங்கி களைச் சமாதானப்படுத்தினர். முன்பு போலவே எல்லா வரிகளும் நீக்கப்பட்டு சர்வ சுதந்திர பாத்தியதையும் ஆவணம் செய்துகொடுத்தனர்.

கிபி. 1710 இல் எழுதப்பட்ட இக்கல்வெட்டு மூலம் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக நடந்த போராட்டம் பற்றி அறியமுடிகிறது. (புலவர் ஆ. சிவசுப்பிரமணியன் 2007. பக் 52)அரசனுக்குத் தெரியாமல் அதிகாரிகளும் அமைச்சர்களும் செய்து வந்த வரிவசூல் நாடகம் பற்றி இதன் மூலம் தெரிகிறது. இப்படியும் இருந் துள்ளனர். இவர்களை நம்பி ஒரு மன்னர் எவ்வாறு ராஜ்யபரிபாலனம் செய்தார் என்று வியப்பாக இருக்கிறது.

இத்தனை பரபரப்பிலும் விஜயரங்கச் சொக்க நாதர் வெளியே வரவில்லை என்பதும் கொடுமை செய்த அதிகாரிகளுக்குத் தண்டனை கிடைத்ததா என்பதும் மறைவான செய்திகளாகவே உள்ளன.

சைவர்களால் கோவில் என்று கூறப்படும் சிதம்பரம் முன் குடுமிப் பிராமணர்கள் என்று அழைக்கப்படும் தீட்சிதர்களின் பிடியில் இருந்து வருகிறது.

எவ்வித அரசாணையும் மதியாமல், தங்கள் இஷ்டமே நடராசர் இஷ்டம் என்று கூறிக் கொள்ளும் அவர்கள் சிதம்பரம் நடராசர் கோவிலில் தொன்று தொட்டு இருந்த வைணவக் கடவுள் சன்னதியை அங்கிருந்து அகற்ற முடிவு செய்து தில்லைக் கோவிந்தன் சன்னதியை இடித்தனர். இது “சைவர் கோவில்! இங்கே வைணவ வழிபாடு நடைபெறக் கூடாது” என்று புதுவேதம் பேசினர்.
சிதம்பரத்தில் இருந்த வைணவர்கள் இது குறித்து அப்பகுதியை ஆண்டுவந்த செஞ்சி மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கரிடம் முறையிட்டனர்.

ஏற்கனவே தீட்சிதர்களின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருந்த செஞ்சி மன்னர் கி.பி. 1597-இல் சிதம்பரம் கோவிலின் வைணவச் சன்னதியைச் சீர்திருத்தி கருவறையில் மீண்டும் கோவிந்தராசப் பெருமானை பிரதிஷ்டை செய்தார்.

இதனை தீட்சிதர்களும் அவர்களால் தூண்டப் பெற்ற சைவர்களும் எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். கோவில் கோபுரத்தில் ஏறிச் சிலர் கீழே பாய்ந்து விழுந்து தற்கொலை செய்தனர்.

ஆவேசமான ஒரு பெண் கத்தியால் தன் கழுத்தில் கீறிக் கொண்டு தன் பலியாக மரண மடைந்தாள்.

தீட்சிதர்கள் மூர்க்கமாகப் போராடி அதனால் நிலைமை மோசமான போது செஞ்சிப் படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பல தீட்சி தர்கள் இறந்தனர்.
செஞ்சி மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிறந்த இறைபக்தர், சமயப் பொறை நோக்கு உடையவர். இருப்பினும் வேறு வழியில்லாமல் தீட்சிதர்கள் மேல் பலப்பிரயோகம் செய்யும் நிலைக்கு ஆளானார் என்று வரலாறு தெரிந்தவர்கள் சொல்கின்றனர்.

கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவில் நடராசர் சன்னதி மகாமண்டபம் எதிரில் இப்போதிருக்கும் இடத்தில் வைணவ சன்னதியை திருப்பணி செய்து முடித்தார். இக்கோவில் 108 (வைணவ சன்னதி) திவ்யதலங்களில் ஒன்றாகும்.

இச்சைவ வைணவப் போராட்டம் நடந்த கி.பி. 1597-இல் அவ்வழியாகப் பயணம் செய்த கோவா-மற்றும் மலபார் பகுதி சேசுசபை மேற் பார்வையாளர் நிகொலோ பீமென்ட்டோ என் பவர் தான் இப்போராட்டத்தை நேரில் கண்டதாக தனது அறிக்கைகளில் எழுதியுள்ளார். (புலவர் ஆ. சிவசுப்பிரமணியன் 2997. மேலது பக் 52)
திருப்பரங்குன்றம் சமணமலையாக இருந்தது. சமணர் தங்கித் தமிழ்வளர்த்த எண்பெருங்குன்றங்களில் திருப்பரங்குன்றமும் ஒன்று. மலையின் தென்புறமும் வடபுறமும் அமைந்த குடைவரைக் கோவில்கள் வரலாற்றில் புகழ் பெற்றவைகளாகும்.

திருப்பரங்குன்றம் வாழ் மக்கள் இவ்வூர் தவிரப் பிற ஊர் விரும்பாதவர்கள் என்பதை,

“பதியெழுவறியாப் பழங்குடிகள்” என்ற பாடல் புலப்படுத்துகிறது.

இவ்வூர் முருகன் கோவில் கோபுரத்தில் ஏறிக் கீழே விழுந்து இறந்த இரண்டு மனிதர்களின் சர்வபரித்தியாகம் இன்றும் இப்பகுதி முதியவர் களால் நினைவு கூரப்படுகிறது. அந்த அளவுக்கு இத்தற்கொலைகள் புகழ்பெற்ற வரலாறுகளாகும்.

இசுலாமியர்களைப் போலவே இங்கிலீஷ் காரர்களும் கோவில் இடிப்புகளை காலனி ஆட்சிக்காலத்தில் அரங்கேற்றியுள்ளனர்.

கி.பி. 1793-இல் மதுரை சொக்கநாதர் கோவிலை ஆக்கிரமிப்புச் செய்த ஆங்கிலப் படைப்பிரிவு திருப்பரங்குன்றத்திலும் ஊடுருவியது. கர்னல் பேயர்டு என்பவன் தலைமையிலான ஆங்கிலப் படை காயம்பட்ட வீரர்களைக் கோவிலின் உள்ளே படுக்க வைத்தது. ஒரு மருத்துவமனைபோலக் கோவிலை மாற்றி வைத்தது.

இது மக்களிடையே அதிருப்தியைக் கிளப் பியது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்லவோ, வழிபடவோ இயலாத நிலை உருவாகி நின்றது. மக்கள் ஆவேசமாகப் போராடினர். இந்த நிகழ்ச்சிகளைத் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிகோவில் உள் கோபுரத்தில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டுச் செய்திகள் காட்சியாகப் படம் பிடித்துக்காட்டுகின்றன.

“வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கிச்

சொக்க நாதர் கோவிலும் இடிச்சு பழனியாண்டவன்

கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக் கொண்டு

ஆஸ்தான மண்டபம் கைக் கொண்டு அட்சகோபுர

வாசல் கதவையும் வெட்டி கலியாண மண்டபத்துக்கு

வருகிற பக்குவத்தில் திருவிழாவும் நின்று தலமும்

ஊரம் தெய்வேந்திரபட்டர், குட்டிபட்டி பட்டர்

சிதம்பரம் பிள்ளை, விழுப்பாத ரய்யர் ஆறுகரைப்

பேர் உள்ளிட்டாரும் கூடி வயிராவி முத்துக் கருப்பன்

மகன் குட்டி வயிராவியை கோபுரத்திலேறி விழச்

சொல்லி அவன் விழுந்து பாளையம் வாங்கிப் போன

படியினாலே அவனுக்கு ரத்தகாணிக்கைப் பட்டயம்

எழுதிக் கொடுத்தோம்...!

நாள்தோறும் அரைப்படி அரிசிச் சோறும் கோவிலிலிருந்து அவன் குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. அது மாத்திர மில்லாமல் ரத்த காணிக்கையாகக் கொடுக்கப் பட்ட நிலத்தின் நான்கு எல்லைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. (புலவர் ஆ. சிவசுப்பிரமணியன் 2007 மேலது பக் எண் 53)

இதே போன்று திருப்பரங்குன்றம் கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் எழுந்த முறைகேடு களை நீக்கம் செய்து கோவில் உரிமைகளைக் காப்பதற்காக திருப்பரங்குன்றம் எல்லப்ப முதலி மகன் அண்டராபரணமுதலி என்பவர் கோவில் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்று வரலாற்றுத் தகவலாளர் ஒருவர் கூறுகிறார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கொடி மரப்பீடம் எதிரில் மூலவர் சன்னதி போகும் படிக்கட்டு வழியில் அண்டரா பரணருக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. வயிராவி சிலையும் அருகில் உள்ளதாகக் கூறுகின்றனர்.

அம்மாதிரிச் சிலைகளின் மூலம் அக்காலத்தில் தியாகம் செய்தவர்களுக்குக் கோவிலிலேயே சிலை வைக்கிற அளவுக்கு மக்களிடம் பெருந்தன்மையும் மனிதநேய உணர்வும் இருந்ததை அறிய முடிகிறது.

மயிலாடுதுறை அருகே புஞ்சை என்னும் சிற்றூரில் கோவில் நிலத்தினை உரிமைபெறாத நான்கு நபர்கள் அபகரித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் நிலத்தின் எல்லைக் கற்களையும் அகற்றி உரிமை கொண்டாடினர். கோவில் அறங் காவலர்களும் ஊர்ச்சபையினரும் இதனை உறுதிப் படுத்தினாலும் ஆக்கிரமிப்பாளர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. இது ஊரில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் இக்கோவில் திருச்சூலப்பணி யாளர்கள் நான்கு பேர் கோவில் முன்பாகத் தீயை மூட்டி அதில் பாய்ந்து இறந்தனர்.

இதன்பிறகு ஊரார் ஒன்று சேர்ந்து எல்லைக் கற்களை முறைப்படி வைத்து அபகரித்த நபர்களை வெளியேற்றித் தண்டமும் வசூலித்தனர்.

ஊர் நிலத்தை மீட்பதற்காக தீப்பாய்ந்த நால்வருக்கும் உலோகத்தால் சிலை செய்து கோவிலில் நிறுவினர். இச் செய்தியினை கி.பி. 1177-இல் பொறிக்கப்பட்ட இரண்டாம் ராஜாதி ராஜன் காலக் கல்வெட்டு உறுதி செய்கிறது.

இம்மாதிரியான தற்கொலை செய்தவர்கள் நோக்கம் பெரும்பாலும் கோவில் நிலங்களைக் காப்பதற்காகவே இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. அந்த அளவிற்கு பக்தி என்கிற ஒன்று அவர்களின் ஆழ் மனதில் இருந்திருக்கிறது என் பதை உணர வியப்பு மேலிடுகிறது. கோவில் சொத்து காப்பாற்றப்படுவது கடவுளுக்குச் செய்கிற தொண்டாகக் கருதினர். சிவன் சொத்து குலநாசம் என்பது பழமொழி.

அதிகார வர்க்கக் கோழி முட்டைகள் பெரும் பாலும் அப்பாவிகள் வீட்டு அம்மிக்கற்களைத் தான் உடைக்கும். எதிர்க் கேள்வி எழுப்புகிறவர் களிடமும், போர்க்குணம் கொண்டவர்களிலும் ராஜா வீட்டுக் கன்னுக் குட்டிகளின் சாகசம் பலிப்பதில்லை.

பெண்கள் குறிப்பாக அப்பாவி, படிக்காத, ஏழ்மையான பெண்களாக இருந்தால் போதும். நமது அலுவலர்களில் ஒரு சிலர் இல்லாத விதி களை எல்லாம் எடுத்துக்காட்டி அரசு அலுவலகங்கள் என்றாலே அலறித் துடிக்கச் செய்துவிடுகிறார்கள்.

மலருக்கு வலிக்காமல் தேனெடுக்க வேண்டும். மக்களுக்கு நோகாமல் வரிவசூலிக்க வேண்டும். என்பது அரச கட்டளை. ஆனால் வரிவசூலிக்க வந்த அரசு அதிகாரி பழங்கூறன் குன்றன் என்பவர். அவ்வூர் வீரபத்திரன் மனையாள் சேந்தன் உமையாள் என்பவளைத் தாறுமாறாகப் பேசி அரசு ஆணைக்கு உட்படுத்தினான். அரசு ஆணை விவரம் தெரிய வில்லை.

இதனைப் பொறுக்காத சேந்தன் உமையாள் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாள். ஊரார் இது குறித்து விசாரித்தபோது அதிகாரியின் தவறு வெளியில் தெரிந்தது.

வீரபத்திரன் மனையாள் சேந்தன் உமையாள் தற்கொலைச் சாவுக்கு அதிகாரியே பொறுப்பு என்று நான்குதிசை பதினெண் பூமி நானாதேசி’ என்ற ஊர்ச் சபை முடிவுக்கு வந்தது. அதிகாரி தான் செய்த தவறுக்குப் பிராயச் சித்தமாக திருத் தான்றி மகாதேவர் ஆலயத்தில் விளக்கெரிக்க 32 காசுகளை வழங்க வேண்டும் என்று ஊரார் ஆணையிட்டனர். இதனை விளக்கும் கல்வெட்டு இதன் காலம் கி.பி. 1055 என்று தென் இந்திய கல்வெட்டு நூல் கூறுகிறது.

ஆணைக்கு உட்படுத்தப்பட்ட சேந்தன் உமை யாளுக்கு அரசு வழங்கிய நஷ்ட ஈடு விவரம் குறிப் பிடப்படவில்லை. ஆனால் ஒரு ஏழைப் பெண்ணின் உயிரின் விலை 32 காசுகள் தான் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

முந்தைய அரசுகள் இறையிலியாக நிலங்கள் வழங்குவதும், பின்னர் வருகிற அரசுகள் அதனை மாற்றி அமைப்பதுமான செயல்கள் இதற்கு முன்பே பழங்காலந்தொட்டு நிகழ்ந்து வருகிறது. இவ்வாறு ஒரு செயல் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நடைபெற்றபோது தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்திற்கு வரியா? என்று கேட்டு மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர். என்ற ஒரு தகவலைக் கீரனூர் உத்தம நாதர் கோவிலில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மூலம் காண முடிகிறது.

இக்கோவிலில் மேற்குப் பிரகாரச் சுவரில் கி.பி. 1311ஆம் ஆண்டைய பாண்டியர் கல்வெட்டு மூலம் இச்செய்தியை அறிய முடிகிறது.

உரிமைகள் பறிக்கப்படுகிறபோது மக்கள் எழுச்சி பெறுவதையும் அதற்காக உயிரையே பணயம் வைப்பதையும் சர்வசாதாரணமாகச் செய்வதாகக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

வீரர்கள் தங்கள் தலைவன் போரில் வெற்றி பெற வேண்டித் தங்கள் தலைகளைத் தாமே அறுத்துக் கொற்றவைத் தெய்வத்திற்குப் படைக்கும் மரபு தமிழ்நாட்டில் இருந்ததை

அடிக்கழுத்தி னெடுஞ்சிரத்தை யரிவ ராலோ

அரிந்தசிர மணங்கின்கைக் கொடுப்பராலோ

கொடுத்த சிரங் கொற்றவையைப் பரவுமாலோ

குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ.

என்ற பாடல் மூலம் கலிங்கத்துப் பரணி இலக் கியம் காட்சிப்படுத்துகிறது.

மாமல்லபுரம் திரௌபதி ரதம், வராக மண்டபம், அவினாசி, பேரூர், சோழவந்தான் தென்கரை, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் மடப்புரம் போன்ற ஊர்களில் இவ்வாறு அடிக்கழுத்தை அறுத்துக் கொண்டு மாண்ட வீரர்களின் சிற்பங்களைக் காணலாம்.

விருதுநகர் அருகில் உள்ள துலுக்கப்பட்டி அருகில் உள்ள மன்னார் கோட்டை காளி கோயிலில் தற்பலிவீரனின் நடுகற் கல்வெட்டு உள்ளது.

கலியுக கண்டடி தன்ம செட்டி என்னும் தன் தலைவனுக்காக சூரங்குடி நாட்டுக்கைய மூர் என்ற ஆதனூர் சிராமத்தைச் சேர்ந்த வேலன் சீலப் புகழன் என்பவன் இவ்வாறு தலைப்பலி கொடுத்து மாய்ந்த செய்தி இதில் கூறப்பட்டுள்ளது.

கி.பி. 16ஆம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் உள்ள தில்லைக் காளியம்மன் கோயில் தேர் ஓடாது நின்றுவிட்டது. அப்போது மருளாடிவந்த ஒரு பெண் நரபலி கொடுத்தால் தேரோடும்” என்று கூற இதனைக் கேட்ட பழைய தரையன் என்ற சேனைத் தலைவன் மகன் தாமே முன்வந்து தலைப்பலி கொடுத்தான்.

தலைப்பலி வழங்கிய வீரப்பெருமாள் தன் தலையைத் தானே தன் உடைவாளினால் அறுத்து தில்லைக் காளி சன்னதிமுன் வைத்து வணங்கி யதும் தேர் ஓடியதாகவும் உள்ளூர் வரலாற்றுத் தரவு ஒன்று சொல்கிறது.

இம்மாதிரி திருக்கோயிலூர் வட்டம் அரகண்ட நல்லூர் ஒப்பிலாமணி ஈசுவரர் கோயில் நாட்டிய மண்டபக் கல்வெட்டுப்படி கிபி 13-ம் நூற்றாண்டு) அக்கோயில் தேவரடியார் பொன் ஆண்டை மகன் இள வெண்மதி சூடினான் என்பவர் அக்கோயில் மண்டபம் கட்டி முடித்ததும் தலையை இறை வனுக்குக் காணிக்கையாகத் தருவதாக உறுதி கூறினான்.

அதன்படியே தலைப்பலி தந்தமைக்காக உதிரப்பட்டியாக நிலம் வழங்கப்பட்டது.

இக்கோவிலில் தலைப்பலி தந்தவனின் சிற்பம் இன்றும் உள்ளது. கோவில் திருப்பணிக்காகத் தன் பலியானது மிகவும் போற்றப்படுகிறது.

கல்வெட்டுக்களில் காட்டப் பெறும் அனைத்துத் தற்கொலைகளும் கோவில் சொத்துக்களைக் காப்பாற்றவும் தங்கள் நாட்டைக்காக்கவும் தங்கள் தலைவனின் போர் வெற்றிக்காகவும்தான் செய்யப் பட்டன.

கோவில் கோபுரங்கள் நீக்கி வேறு உயரமாக இடங்கள் அக்காலத்தில் இல்லாமையினால் தான் கோபுரங்களில் ஏறித் தன்பலியாகினர். திருப் பணிக்காகவும், தில்லைக் காளியம்மன் தேரோட்டம் நடக்கவும் மேற்கொண்ட தன்பலிகளெல்லாம் பக்தியின்பால் வயப்பட்ட வாழ்வை வெளிப் படுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக தீட்சிதர்கள் தம் பலியைத் தவிர ஏனைய எல்லாத் தற்கொலை களும் மக்களால் பாராட்டப்பட்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தற்கொலை மனிதர்களுக்கு எழுப்பப்பட்ட சிலைகளே இவர்களை மக்கள் எந்த அளவிற்குப் போற்றினர் என் பதற்கு அடையாளம் ஆகும்.

தில்லைத் தீட்சிதர்களின் மரணம் தன்னலத்தின் பாற்பட்டது. சொத்துடைமையைத் தக்க வைத்துத் தாங்கள் மட்டுமே சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்காக ஒரு போராட்டம் அவர் களால் நடத்தப்பட்டது. எனவே தீட்சிதர்களின் போராட்டம் மக்களாலும் வரலாற்று ஆசிரியர் களாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் தீக்குளித்தல் (ஈழ விடுதலைக்காக முத்துக்குமார் தீப்பாய்ந்தது) உயரமான மாடிகள் செல்போன் டவர்களில் இருந்து தரையில் பாய்தல் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய அரசுகளும் இயக்கங்களும் சிலைவைத்தும் பணம் வழங்கியும் நினைவேந்தல் என்று படம்திறந்தும் விழா எடுக்கின்றன. இதனைப் பண்டைய மரபின் தொடர்ச்சிகளாகவும் கருதலாம்.

ஆனால் எல்லா நிகழ்வுகளுக்கும் தற்கொலைகள் மட்டுமே தீர்வுகளாகிவிடாது என்பது மனநல மருத்துவர்களின் முடிவாகும்.

சான்றாதார நூல்கள்:

1) “கோபுரத் தற்கொலைகள்” புலவர் ஆ. சிவ சுப்பிரமணியன் 2007 மேலது பக்கஎண்கள் 21, 40, 50, 52, 53.

2) கல்வெட்டுக்கலை முனைவர் பொ. இராசேந்திரன் முனைவர் சொ. சாந்தலிங்கம் மேலது பக்க எண்கள் 132, 154, 157, 158, 161.

3) மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு. 2005.

Pin It