இன்று தோழர் சிங்காரவேலரின் பிறந்த தினம். அவர் தன்னையும் மற்றவர்களையும் தோழரென்றே அழைக்க விரும்பினார். அவர் பிறந்து 155 வருடங் களாகிவிட்டன. இன்னும் அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய பணியைப்பற்றி முழுமையான தகவல்கள் கிட்டவில்லை. அவர் மறைந்து 67 ஆண்டுகள் தான் ஆயிற்று. ஆயினும் அவரைப் பற்றிய சமகால ஆவணங்கள் அதிகம் கிட்டவில்லை. இதுபோன்று வருடாந்தர சொற்பொழிவுகளையட்டி அவரைப் பற்றிய புதிய ஆவணங்களையும், தகவல்களையும் திரட்டி அவரைப் பற்றிய ஒரு முழுமையான புரிதலை உண்டாக்கக் கடமைப்பட்டுள்ளோம். சிங்காரவேலர் ஒரு பன்முக ஆளுமையைக் கொண்டவரெனினும் இன்றைய சொற்பொழிவில் அவர் பொதுவுடைமைத் தத்துவத்தைப் பரப்ப, செய்த முயற்சிகளை ஓரளவுக்கு அறிய முற்படு வோம்.

singaravelar 350“சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?”
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல், அரசியல் அவனால்!
தோழமை உணர்வு தோன்றிய தவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”

என்று பாரதிதாசன் முதல்

“கட்சியைத் தச்சு செய்ததில்
மே தினச் செங்கொடியை உயர்த்தியதில்
தன்மான இயக்கத்தின் தடங்களில்
விடுதலைப் போரின் தகிக்கும் வெளிகளில்
அனைத்திலும் முதலாவதாக
அவரது சுவடு!
அவர் பெயர் சுட்டாது”

என்று இன்குலாப் வரை அவரது புகழைப் பாடித் தீர்த்தனர். யார் அவர்? அவர் தான் பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலர்.

சிங்காரவேலரைப் பற்றி இதுவரை வெளியிடப் பட்ட ஆவணங்களில் ஆதாரமாக நுண்ணறிவுக் காவலர் களின் இரகசியக் குறிப்புகளிலிருந்தும், அவரது சம காலத்தவர்களின் எழுத்துக்களிலிருந்தும் அன்றைய செய்தித்தாள் குறிப்புகளிலிருந்தும் தகவல்கள் திரட்டப் பட்டு வெளியிடப்பட்டுள்ளன. சிங்காரவேலரும் தன்னுடைய காலத்தில் பெருமளவிற்குத் தனது கருத்துக் களை எழுத்து மூலம் வெளியிட்டுள்ளார். ஆனாலும் அவரைப் பற்றி வெளிவந்த நூல்களைப் பார்க்கும்போது அவரது நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இல்லாமலும், அங்கங்கே இடைவெளி இருப்பதும் தெரியவருகிறது.

அவரைப்பற்றி எழுதிய தா.பாண்டியன்,

“இவரை எவ்வாறு வட இந்தியாவில் கராச்சி, கொல்கத்தா, மும்பாய் நகரங்களில் தொழிற் சங்கங்களை அமைத்துப் பணியாற்றிய இதர கம்யூனிஸ்டுகள் தெரிந்துகொண்டனர் என்பது தெரியவில்லை”

என்று வினா எழுப்பியுள்ளார். மேலும் அவர் வேறொரு இடத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்.

“கான்பூர் மாநாட்டை ஒட்டியே சதி வழக்குகள் வந்ததால், கட்சியின் கட்டமைப்பு குலைந்தது எனலாம். 1933இல் தமிழ்நாட்டிற்கு எஸ்.வி. காட்டே வந்து கட்சியை அமைப்பு ரீதியில் கட்டிய பிறகும்-1945 வரை வாழ்ந்த சிங்கார வேலர் கட்சியுடன் சேர்ந்து செய்த காரியங்கள் என்ன என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. சிங்காரவேலரின் முதுமையும், நோய்வாய்ப் பட்டு, பக்கவாதத் தாக்குதலால் நடமாட்டம் குறைந்து நலிவுற்றதால், கருத்துப் பரிமாற்றத் தோடு இருந்துவிட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.”

திரு.வி.க போன்றவர்கள் ஒரே நேரத்தில் சிங்கார வேலரை இருவிதமாக அணுகிய போக்கும் தென் படுகிறது.

“சிங்காரவேலர் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் பற்றி மிக உருக்கமான கட்டுரை எழுதினார். சரியோ, தவறோ அவர்கள் படும் துன்பங்கள், அவர்கள் தாங்கும் துயரங்கள், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் யாவும் அவர்கள் ஆன்மாக் களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவர் களுடைய ஆறு குற்றமற்ற தோழர்களின் மரணத்தின் நினைவு அவர்களை மேலும் அதிகத் துன்பங்களை மேலும் அதிக இழப்புகளை, மேலும் அதிகத் துயரங்களைத் தாங்கும் வலிமையைத் தரும்... ...இறந்தவர்களும் தொடர்ந்து பணி யாற்றுகின்றனர் என்று ஆறுதல் கூறி, வால்ட்டர் விட்மனின் கவிதையுடன் முடித்தார். சிங்கார வேலுவின் இக்கட்டுரை, வரலாற்றில் இடம் பெறத்தக்கது என்பார் திரு.வி.க”

என்று வீரராகவனும்,

“இந்திய லேபர் கிசான் கட்சி மத்தியக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் (23-7-1923) டிராம்வே யூனியனைச் சேர்ந்த ஸ்ரீராமுலு நாயுடு, இக் கட்சியில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் திரு.வி.க போன்றோரின் தூண்டுதலின் பேரில் சிங்காரவேலுவுக்கு எதிராக அறிக்கை வெளி யிட்டார். (சுதர்மா----2-9-1923) இந்தக் கூட்டத்தில் திரு.வி.கவின் செயல்கள் இன்றைய பிழைப்புவாத அரசியல்வாதிகளின் செயல்களுக்கு எவ்விதத்தும் குறைந்ததாக இல்லை. அதிகாரி களிடம் சிங்காரவேலு சென்று தம்மை ஸ்தல ஸ்தாபன மன்றப் பதவியில் நியமிக்கும்படி கேட்டுக் கொண்டதாக திரு.வி.க. வதந்திகளைப் பரப்பி, தொழிலாளர்களிடம் இருந்து ம.வெ. சிங்காரவேலரை அன்னியப்படுத்த முயன்றார். இதைக் கேள்விப்பட்ட சிவா இது குறித்து ம.வெ. சிங்காரவேலரை விசாரித்தார். ம.வெ.சிங்கார வேலர் இது விஷமத்தனமான அவதூறு என மறுத்துரைத்து அறிக்கை வெளியிட்டார். சிங்காலவேலுவைத் தனிமைப்படுத்தும் இந்த முயற்சிகள் பயன் அளித்தன”

என்று முனைவர் கேசவனும் எழுதியுள்ளனர். ஆனால் முனைவர் கேசவனின் புத்தகத்தில் பெரும்பாலும் உளவுத்துறையின் இரகசியக் குறிப்புகளிலிருந்து தகவல்கள் திரட்டப்பட்டிருந்தன. உளவுத்துறையினர் என்றைக்குமே தங்களது குறிப்புகளில் உண்மையைத் தான் சொல்வார்கள் என்பதற்கு எவ்வித உத்தரவாதமு மில்லை. பல வேளைகளில் அவர்கள் சிண்டு முடியும் பணியிலும், அரசுக்குத் தவறான தகவல்கள் கொடுப்பதன் மூலம் தங்களது பணி நிலைமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் முயல்வார்கள். ஆனால், இப்படிப்பட்ட தகவல்களின் தன்மை பற்றி முனைவர் கேசவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

“ஒருவர் புரட்சியாளரா இல்லையா என்பதை அரசு உளவு ஸ்தாபனக் கருத்தை வைத்து எடை போட வேண்டியதில்லை என்பது சரியே. ஆனால் ஒன்றைக் கவனிக்க வேண்டும். மக்களுக்குச் செய்திகள் கொடுப்பதில் அரசு தணிக்கை செய்யுமுன், வடிகட்டும், திரித்துக் கூறும், ஆயின் தம் உள் நிறுவனங்களுக்கு இடையில் பரிமாறிக் கொள்ளும் தகவல்களில் உண்மை இருக்கும் என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்”

இக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.டாங்கே மன்னிப்பு கோரியதனால் அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டாரென்று சில குறிப்புகள் கூறியபோது அவரது தரப்பிலிருந்து அத்தகைய அவதூறுகள் மறுக்கப்பட்டன. அதேபோன்று அவ்வழக்கிலிருந்து சிங்காரவேலரும் மன்னிப்பு கோரியதனால்தான் விடுவிக்கப்பட்டாரென்று மெயில் மற்றும் பயனீர் பத்திரிகைகள் அவதூறு செய்திகளை வெளியிட்டன. அச்செய்திகளை மறுக்கும் வண்ணம் புதிய தகவல்களைத் திரட்டி வெளியிட்ட சி.எஸ்.சுப்ரமணியனின் நடவடிக்கையைப் பாராட்டி பா.வீரமணி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

“சிங்காரவேலர் நோய்க்கு ஆட்பட்டு இருந்ததால், கான்பூர் சதிவழக்கைப் பம்பாயிலோ சென்னை யிலோ நிகழ்த்தினால் நன்றாக இருக்குமெனத் தம் வழக்கறிஞர் மூலம் கேட்டுக்கொண்டார். அந்நிய அரசு அதனை ஏற்காமல் அவரது உடல்நிலையைப் பரிசோதிக்க வேறொரு மருத்துவரை நியமித்தது. வெள்ளையரான மால்கம் என்ற மருத்துவரும் அவரது உடலைச் சோதனை செய்து அவரது உடல்நிலை வெளியூருக்குச் செல்லும் நிலையில் இல்லையென அறிவித்தார். மருத்துவரின் அறிக்கையைப் பெற்று ஆங்கில அரசு சரியான நடவடிக்கை எடுக்கச் சில மாதம் ஆயிற்று. இந்த இடைக் காலத்தில் உடல்நிலை சிறிது குணமாக சிங்காலவேலர் ஏற்கனவே வந்திருந்த நீதிமன்ற ஆணைப்படி வழக்காட கான்பூருக்குத் தொடர் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது ஆங்கில அரசு, சிங்காரவேலர் மீது இருந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாக அவருடைய வழக்கறிஞருக்குத் தந்தி மூலம் அறிவித்தது.

இந்தச் செய்தி இந்து நாளிதழில் 2-7-1924-இல் வெளிவந்துள்ளது. சிங்காரவேலரும் தாம் எப்போதும் மன்னிப்பு கோரவில்லை என்பதை 7-7-1924-இல் இந்து நாளேட்டில் மறுத்திருந்தார். சிங்காரவேலர் மீது இருந்த பொய்ச் செய்தியை மறுத்துச் சிங்காரவேலரின் புகழைக் காத்தவர் சி.எஸ். இந்த அரிய செய்திகளை எல்லாம் திரட்டிக் கான்பூர் சதிவழக்கு என்னும் நூலை எழுதி அவர் சிங்காரவேலர் மீது ஏற்பட்ட பழியைத் துடைத்துப் புகழைக் காத்தார். அவரது வயதும், அனுபவமும் அவருக்குத் துணை செய்தன”

அதே சமயத்தில் முனைவர் கேசவன் அக்கால கட்டத்தில் சிங்காரவேலரின் தொழிற்சங்க மற்றும் அரசியல் பங்கைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

“முதலாளிகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் விட்டு விட்டு இந்திய லேபர் கிசான் கட்சி தொழிலாளர்களை மட்டுமே அணுக வேண்டும் என ம.வெ.சிங்காரவேலர் ஒரு கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார். சென்னை நகரில் இது குறித்த முயற்சிகளை ம.வெ.சிங்காரவேலர் தொடங் கினார். சென்னை அலுமினியத் தொழிலாளர் சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம், பெரம்பூர் தொழிற்சங்கங்கள், டிராம்வே யூனியன் ஆகிய அமைப்புகளிலிருந்த தோழர்களை ஓரிடத்தில் இவர் சந்தித்தார். இந்திய லேபர் கிசான் சட்சி என்பது போல் சிவிக் கட்சி என்பதால் தொழி லாளர்கள் அதில் சேர அச்சப்பட்டுக் கொண் டிருக்கின்றனர் என்று தொழிலாளர்கள் குறிப் பிட்டனர். இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை சில ஆங்கிலப் பத்திரிகைகளும், தொழிற்சங்கத் தலைவர்களும் கிளப்பியுள்ளனர் என்று கூறி ம.வெ.சிங்காரவேலர் அதை மறுத்தார்.

தொழிலாளர்கள் ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தில் பணி யாற்றினால் தம் தலைமை பறிபோய்விடும் என்று எண்ணி திரு.வி.க, சக்கரைச் செட்டியார், இ.எல்.ஐயர் போன்றோர் இவ்வாறு கிளப்பி விடுவதாகக் குறிப்பிட்டார். சென்னைக் கடற் கரைச் சாலையில் இந்திய லேபர் கிசான் கட்சி கூட்டம் நடத்தலாம் என ம.வெ.சிங்காரவேலர் குறிப்பிட, இந்த அமைப்பின் பெயரால் கூட்டம் நடத்தினால் தொழிலாளர்கள் வரத் தயங்குவர் என்று பலர் மறுத்தனர். இறுதியில் சென்னைப் பொதுத்தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் கூட்டம் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இங்கு ம.வெ.சிங்காரவேலருக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் இடையிலான முரண்பாடு கவனிக்கத் தக்கது. இதற்கு முன் இதே தலைவர்களே இவரை அழைத்துக்கொண்டு போய் தொழிலாளர்கள் முன் நிறுத்தி உரையாற்றச் சொன்னார்கள். தம் பத்திரிகைகளில் எழுதச் சொன்னார்கள். அப்பொழுது சிங்காரவேலு தொழிலாளர் முன் அரசியலை வைத்தா ரெனினும் அவர் எவ்வித அமைப்பிலும் இல்லை. ஆனால் இப்பொழுது சிங்காரவேலு ஒரு கட்சி தொடங்கிவிட்டார். தொழிற்சங்கவாதத்தை அம்பலப்படுத்தும் பணியின் தொடக்கம் இவரது செயல்களில் இருந்தது. சில தொழிற்சங்கத் தலைவர்களோடு இரகசிய சுற்றுப் பேச்சுகளிலும் ஈடுபட்டிருந்தார்”

இங்கு நமக்கு முக்கியமானது என்னவெனில், காங்கிரசிலும் சுயராஜ்யக் கட்சியிலும் சிங்கார வேலு பெற்றிருந்த இடம் ஆகும். இவற்றில் சிங்காரவேலு முதன்மைப் பங்கு வகிக்கவில்லை. தேசியவாதிகளிடமிருந்து பொதுவுடைமையர் களைத் தனிமைப்படுத்தி ஒதுக்குதலை மைய நோக்கமாகக் கொண்டு அரசு கான்பூர் வழக்கில் செயல்பட்டது. இது பெருமளவுக்கு நிறைவேறி யதாகத் தெரியவில்லை என்பதையே காஞ்சிபுரம் மாநாடு குறிப்பிடுகிறது”

முனைவர் வீரராகவன் சிங்காரவேலருடைய அரசியல் மற்றும் தொழிற்சங்கப் பங்கைப் பற்றித் தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

“புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் கொள்கை களை ஆதரித்த தொடக்ககால முக்கிய தலைவர் களில் ஒருவராக இருந்தவர் சிங்காரவேலு. சென்னையில் தொழிலாளர் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகள்பற்றி ஏற்கனவே குறிப்பிடப் பட்டுள்ளது. அவருக்கு 1922இல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ.டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922இல் எம்.என்.ராய் வெளிப் படுத்திய திட்டத்தினால் கவரப்பட்டு அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தார். 1923இல் அவர் மே தினம் கொண்டாட இலேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான், (இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி LKPH) என்கிற கட்சியைப் புரட்சிகர திட்டத்துடன் ஆரம்பித்தார். அவர் “லேபர் கிசான் கெஜட்” என்ற ஒரு வாரத்துக்கு ஒருமுறை வெளிவரும் ஆங்கில இதழையும், “தொழி லாளன்” என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். அவர் மார்ச் 1924இல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப் பட்டது. டிசம்பர் 1925இல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்கு தலைமை வகித்தார். 1927இல் பெங்கால்-நாக்பூர் ரயில்வே வேலை நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1928இல் வரலாற்றுப் பெருமை வாய்ந்த தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை நடத்திய தலைவர்கள் மீது தொடரப்பட்ட சதி வழக்கில் அவருக்குப் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்டு 1930இல் விடுதலை செய்யப்பட்டார்”

“சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங் களிலும், தென்னிந்திய ரயில்வே போராட்டங் களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன், தனது பத்திரிகைகளிலும், செய்தித் தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும் ஓய்ச்சல் ஒழிவின்றி, கம்யூனிசப் பிரச்சாரம் செய்து வந்தார். மே தினம், உலக அமைதி தினம் கொண்டாடியதுடன் ஆகஸ்ட் 1927இல் சாக்கோ மற்றும் வான்செட்டி ஆகியோரின் மரண தண்டனையை எதிர்த்துக் கூட்டங்களும் நடத்தினார்.

1927இல் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டும், பாராளு மன்ற உறுப்பினருமான ஷாபூர்ஜி சக்லத்வாலா சென்னைக்கு வருகை தந்தபோது சிங்காரவேலர் கேட்டுக் கொண்டதால் சென்னை மாநகராட்சி அவருக்கு வரவேற்பு விழா ஏற்பாடு செய்தது. சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் மொழிபெயர்த்தார். சக்லத்வாலாவின் வருகை சோவியத் யூனியனின் சாதனைகளைப் பரப்பவும் கம்யூனிச திட்டத்தைப் பற்றிய சீரிய புரிதல் உருவாகவும் உதவி செய்தது.

1927இல் சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நகரின் இளைஞர்கள் மத்தியில் இடது தேசிய வாதத்தின் மீது அக்கறை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியது ஜவகர்லால் தலைமை ஏற்ற அந்த காங்கிரஸ் மாநாட்டின் விவாதங்களில் சிங்காரவேலரும் மற்றும் வழக்கிலிருந்து வந்த கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளும் மும்முரமாகப் பங்கேற்றனர்.

இந்த நடவடிக்கைகளும் சரி, சிங்காரவேலரின் அயராத உழைப்பும் சரி, எதுவும் சென்னையில் ஒரு முறையான கம்யூனிசக் குழு உருவாக உதவ வில்லை. சென்னையில் கம்யூனிசக் குழுவை முதன் முதலாக உருவாக்கிய பெருமை, வடமேற்கு மாநிலத்தைச் சேர்ந்த பத்தான் வகுப்பினரும், முன்னாள் கடற்படை வீரருமான அமீர் ஹைதர்கான் அவர்களைச் சாரும்”

ஏ.கே.ஜி. ஆராய்ச்சி மையத் தலைவர் பி.கோவிந்த பிள்ளை சிங்காரவேலரின் 150-ஆவது பிறந்தநாள் விழா மலரில் எழுதியிருந்த தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

“1860ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியன்று எம்.சிங்காரவேலு செட்டியார் பிறந்தார் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். அவரது குடும்பம் பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சேர்ந்த தாகும். மிகக் கடுமையான தொழிலைச் செய்து வந்த போதிலும் மீனவர்களுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. கடற்கரையில் குடிசைகளுக்கிடையே சுகாதார மில்லாத, மிக மோசமான சூழ்நிலையில், வழக்க மான கல்வியோ, மரியாதைமிக்க குடியுரிமையோ இல்லாதவர்களாகவே அவர்கள் வசித்து வந்தனர். இச்சமூகத்தினைச் சேர்ந்த மற்றவர்களைவிட ஓரளவிற்கு மேம்பட்ட நிலையில் சிங்கார வேலரின் பெற்றோர் இருந்தபோதிலும் சாதிய புறக்கணிப்பு மற்றும் ஒடுக்கமுறை என்ற தளையிலிருந்து அவர்களால் விடுபட இயல வில்லை. வறுமையிலும், சகதியிலும் வாழ்ந்து வந்த ஒடுக்கப்பட்ட மக்களிடையே உருவான சிங்காரவேலர், தனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு சிறுவயதிலேயே உணர்வு தூண்டப்பட்டவராக இருந்தார். சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் பட்டம் பெற்று, வளமான வருமானம் தரும் வக்கீல் தொழிலில் இறங்கிய போதிலும், மீனவர்களின் மிக மோசமான வாழ்க்கை நிலைமைகள் அவரைத் தொடர்ந்து வாட்டிக் கொண்டேதான் இருந்தன. எனவே சமூக சேவை நடவடிக்கைகளிலும், மேல் தட்டு சாதியினருக்கு எதிரான போராட்டங்களிலும் அவர் இறங்கினார். இத்தகைய அனுபவங்கள்தான் தேசிய விடுதலைப் போராட்டத்தை நோக்கி அவரைக் கவர்ந்திழுக்க உதவின என்றும் உறுதியாகக் கூறலாம்.

முறையான பயிற்சிக்குப் பிறகு சிங்காரவேலர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சபையில் வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டார். இந்த நீதிமன்றங்களும், அதில் செயல்பட்டு வந்த வழக்கறிஞர்களின் வெற்றி என்பது சட்ட வழிமுறைகளின் நுணுக்கமான தன்மைகள் மட்டுமின்றிப் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர்களின் போராட்டங்களும் அடங்கியதே ஆகும். எனினும் பணத்தையும் பதவியையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட வழக்கறிஞர்களின் கண்களில் இது போன்ற விஷயங்கள் தென்படுவதில்லை. ஆனால் சிங்காரவேலரோ மிகவும் வித்தியாசமானதொரு சூழ்நிலையில் வளர்ந்து வந்தவர். இவை அனைத்துமே அவரது இளம்பருவத்தில் உருப் பெற்ற கருத்துக்கள், அனுபவங்கள் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவே அமைந்தன. பொது வாகவே வழக்கறிஞர்கள் தம்மிடம் முதலில் வருபவருக்குச் சார்பாகவே வழக்குகளை, அவரது வாடிக்கையாளர் குற்றவாளியா அல்லது பாதிக்கப் பட்டவரா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஏற்றுக் கொள்வது வழக்கம். ஆனால் அப்போது தான் வழக்கறிஞர் தொழிலில் இறங்கிய சிங்கார வேலரோ எந்தவொரு சூழ்நிலையிலும் அடக்கு முறையாளர்கள், பேராசைக்காரர்கள் ஆகி யோரின் சார்பாக எப்போதும் வழக்காடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்ச், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித் தந்தது.

பல்வேறு வகையிலும் 1902ஆம் ஆண்டு இங்கிலாந்திற்குச் சிங்காரவேலர் மேற்கொண்ட பயணம் மகத்தான அநுபவமாக அமைந்தது என்றே கூறலாம். அந்த நேரத்தில் தான் மகத்தான சோஷலிஸ்ட் பேச்சாளரும் அமைப்பாளருமான கெர் ஹார்டியின் தலைமையின் கீழ்ப் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சி பிரிட்டிஷ் அரசியலின் வடிவத்தை மாற்றி யமைத்துக் கொண்டிருந்தது. உயிரோட்டமான சோஷலிஸ்ட் தத்துவம் நடைமுறை என்ற பாரம் பரியத்தை உருவாக்கி விட்டுச் சென்று பிரடெரிக் எங்கெல்ஸ் மறைந்து ஏழு ஆண்டுகளே ஆகி யிருந்தது. இவையனைத்துமே இந்தியாவிலிருந்து வந்திருந்த இளைஞரின் மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது மற்றுமொரு முக்கியமான சம்பவமும் நடைபெற்றது. அது தான் உலக புத்த மதத்தவரின் மாநாடாகும். இந்த மாநாட்டிலும் சிங்காரவேலர் பங்கேற்றார். கிட்டத்தட்ட புத்த மதத்திற்கு அவர் மாறி விட்டார் என்றே கூறிவிடலாம். சாதிய முறைக்கு எதிரான, பிராமணிய பலியிடல், சடங்கு முறைகள் ஆகியவற்றிற்கு எதிரான கௌதம புத்தரின் கருத்துக்கள் ஏற்கனவே துடிதுடித்துக் கொண்டிருந்த இளம்புரட்சியாளரின் இதயத் திலும், மனத்திலும் அலைமோதிக் கொண்டிருந்த கருத்துக்களே ஆகும்.

கான்பூர் மாநாட்டிற்குப் பிறகு சிங்காரவேலர் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகள் நாட்டின் பல பகுதிகளிலும் சட்டபூர்வமாகச் செயல்படு வதற்காகத் தொழிலாளர் மற்றும் விவசாயக் கட்சியை உருவாக்கினர். சிங்காரவேலரின், சாதிக்கு எதிரான உறுதியான நிலைப்பாடும், இந்துச் சடங்குகள், அவர்களது மனுஸ்மிருதி போன்ற நூல்களின் மீதான அவரது வெறுப்பும் தான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் மற்றும் அவரது சுயமரியாதைக் கட்சியுடன் நெருக்கமாக அவரைச் செயல்பட வைத்தது எனலாம். ஈ.வெ.ரா நடத்தி வந்த “குடியரசு” இதழிலும் அவர் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் குறித்து, சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் கொண்டிருந்த பாராமுகமான போக்கினைச் சிங்காரவேலர் அங்கீகரிக்கவில்லை. எனவேதான் சுயமரியாதை சோஷலிஸ்ட் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிக்கு அவர் ஆதரவளித்தார்”

சோவியத் வரலாற்று ஆசிரியர் அன்தனோவா சிங்காரவேலரின் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தொடர்புகளைப்பற்றி எழுதும்போது இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்:-

“கான்பூர் பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான ” இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி” அமைக்கப்பட்டிருப்பதாக 1924, செப்டெம்பர் மாதம் அறிவித்தார். இந்தக் கட்சி கம்யூனிஸ்டு அகிலத்துடனும் மற்ற அயல்நாட்டுப் புரட்சி மையங்களுடனும் தொடர்பு கொண்டிருக்க வில்லை என்று அதன் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் அழுத்திக் கூறியிருந்தார்கள். இந்தக் காரணத்தால் அது நிறுவப்பட்டதை அதிகாரிகள் பொறுமையுடன் அனுமதித்தார்கள். சத்திய பக்த் அமைத்த கட்சி இந்தியக் கம்யூனிஸ்டுகளுக்கு ஈர்ப்பு மையமாக விளங்கவில்லை என்றாலும் இந்திய மார்க்சியவாதிகளின் தனித் தனிக் குழுக் களை ஒன்றாக இணைப்பதற்கான முன்னேற் பாடுகளை அவர் தொடர்ந்தார். ஒன்றிணைப்பு மகாநாடு கூட்டுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யும் பொருட்டு இடதுசாரி காங்கிரஸ் காரரான ஹஜரத் மொஹானியின் தலைமையில் ஒழுங்கமைப்புக் கமிட்டி நிறுவப்பட்டது. இதன் பயனாக இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மகாநாடு 1925, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் சென்னைக் கம்யூனிஸ்டு எம்.சிங்கார வேலுச் செட்டியாரின் தலைமையில் நடந்தது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியை அமைப்பது என்றும் அதன் மையத்தை பம்பாயில் வைத்துக் கொள்வது என்றும் மகாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற் குழுவின் செயலாளர்களான ஜே.பெகெர்ஹொத் தாவும் எஸ்.வி.காட்டேயும் பதவி ஏற்றார்கள். இந்தியாவில் இருந்த முக்கியமான கம்யூனிஸ்டுக் குழுக்கள் எல்லாவற்றினுடையவும் பிரதிநிதிகள் மத்தியச் செயற்குழுவில் இடம் பெற்றார்கள்.

உழைப்பாளி மக்களின் சட்டபூர்வமான வெகுஜன நிறுவனத்தை - தொழிலாளி-விவசாயிக் கட்சியை - கம்யூனிஸ்டுகளின் தலைமையில் நிறுவுவதற் கான முதல் முயற்சி 1923லேயே சிங்காரவேலு செட்டியாரால் (சென்னை) மேற்கொள்ளப் பட்டது”

முனைவர் கேசவன் தனது நூலில் மேலு மோரிடத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்:-

“பட்டியலைக் காணும்பொழுது அதில் ம.வெ.சி. இல்லை. தொடக்க காலத் தொழிற்சங்க முனைப்புப் பணிகளில் (Pioneering Works) ம.வெ.சி. இல்லை. 27-4-1918 இல் தொடங்கிய சென்னை தொழிலாளர் சங்கத்தில் இவர் இல்லை. எனவே இவற்றில் இவரது பங்கும் பணியும் இல்லை. குறிப்பிடத்தக்கவராக அந்நாளில் இல்லாமல் பின்னாளில் பொதுவுடைமை ஈடுபாடு கொண்டிருந்திருப்பாரோ என்ற ஐயம் எழக்கூடும். அப்படியிருப்பின் அவரது வரலாற்று அறிக் கையைத் (history sheet) தொகுக்கும் பொழுது அரசு அதைக் குறிப்பிட்டிருக்கும். அப்படியும் இல்லை. மேலும் அரசியலுக்கும் தொழிற் சங்கத்துக்கும், தான் மிகவும் புதியவர் என்று அவரே 28-11-1922 இல் ராய்க்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் தொழிலாளர் கூட்டங்களில் இவரைக் கூட்டிக்கொண்டு பேசியதாகக் குறிப்புகள் உண்டு. அக்காலத்தில் இவர் தொழிற்சங்கங்களைக் கட்டியதாகக் குறிப்புகள் இல்லை. எனவே 1918 வரை இவரது பொது வாழ்க்கையைத் தொகுத்துக் கொள்ளு தலுக்கு உரிய போதிய ஆதாரங்கள் இன்மை யாலும் இவரே தன்னை அரசியலில் இளையவர் என்று 1922இல் கூறியுள்ளதாலும் அந்த இடை வெளியை நம்மால் ஆதாரங்களுடன் இட்டு நிரப்ப இயலவில்லை. ஆதாரமில்லாமல் இட்டு நிரப்பும் முயற்சி எதுவாயினும், அது அகவய நோக்கில் வரலாறு எழுதப்படுதலுக்கு இணையாகும்”

இப்படி பலதரப்பட்ட அறிஞர்களின் நூல்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது இன்னும் சிங்கார வேலருடைய நேரடியான அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றிய முழுமையான புரிதல்கள் ஏற்படவில்லையென்பதும், பல இடங்களில் அவரது வாழ்க்கை வரலாற்றில் இடைவெளிகள் இருப்பதும் தெரியவருகின்றன. எனவே இவ்வறக்கட்டளை சிங்கார வேலரைப் பற்றிய முழுமையான ஆதாரபூர்வமான தகவல்களுடன் ஒரு அதிகாரபூர்வமான வரலாற்று நூலை எழுத முன்வரவேண்டும்.

சிங்காரவேலர்தான் தென்னிந்தியாவின் முதல் பொதுவுடைமைவாதி என்பதைப்பற்றி எவ்வித சச்சரவுமில்லை. ஆனால் அவரது சமகாலத்தில் அவருடன் சென்னை மாகாணத்தில் தொடர்பிலிருந்த மற்ற பொதுவுடைமைவாதிகள் பற்றி எவ்விதக் குறிப்பும் காணப்படவில்லை. அதேபோல் சென்னை மாகாணத்தில் நடைபெற்ற பல தொழிற்சங்கப் போராட்டங்கள் பற்றி அவருடைய கட்டுரைகள் கிடைக்கப் பெற்றிருப்பினும் நேரடியாக அத்தொழிற்சங்கங்களில் அவருடைய பொறுப்புபற்றிக் குறிப்புகள் ஏதுமில்லை. அவரது வழக்கறிஞர் தொழில் பற்றிய நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கத்தில் அவர் ஆற்றிய பங்குகள் பற்றியும் முழுத்தகவல்களில்லை. 1928-இல் நாகை இரயில்வே தொழிலாளர் போராட்டத்திற்குப் பிறகு சிறை சென்று 1930-ஆம் வருட விடுதலைக்குப்பின் சுயமரியாதை இயக்கத்துடன் அவர் தன்னை இணைத்துக்கொண்டது பற்றியும்,1937-இல் எப்படி அவர் எஸ்.வி.காட்டேயின் விருப்பத்திற்கேற்ப டிராம்வே தொழிலாளர் சங்கத்திற்கு பொறுப்பேற்றாரென்பதும், மறுபடியும் அவர் பொது வுடைமை இயக்கத்துடன் எத்தகைய தொடர்பி லிருந்தார் என்பது பற்றியும் வரலாற்றுக் குறிப்புகள் முறையாக எழுதப்படவில்லை.

இருப்பினும், 90 வருடங்களுக்கு முன்னரே சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளைப் பற்றி அவருக்கு இருந்த தெளிவும், பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை மீறித் தனது கருத்துகளை அவர் தொடர்ந்து கட்டுரை வாயிலாக வெளியிட்டிருந்தது பாராட்டுதலுக்குரியது. ஒரு பக்கத்தில் மகாத்மா காந்தியுடைய சாத்வீகமும், சுயதொழில் கொள்கையும் அவர் ஏற்றுக்கொண்டார். இன்னொருபுறம் பொது வுடைமைக் கொள்கைகளும், தொழிற்சங்க இயக்கங் களும் அவருக்கு உடன்பாடு. வேறொரு முனையில் சமதர்மக் கருத்துகள் மட்டுமின்றிச் சாதி ஒழிப்பு மற்றும் சுயமரியாதைக் கொள்கையைப் பற்றியும் அவருக்கு சரியான புரிதலிருந்தது. இக்கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கிய ஒரு பொதுவுடைமை இயக்கம் அன்றைக்குத் தோன்றிச் செயல்பட்டிருந்தால் தமிழகத்தில் ஒரு மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டிருக்கும்.

சிங்காரவேலர் பொதுவுடைமைக் கருத்துக்கள் மற்றும் அரசியல் திட்டங்கள் பற்றியும், அவர் எழுதிய கட்டுரைகளிலிருந்தே எடுத்த சில கருத்துக்களை இப்பொழுது காணலாம். அவர் ‘கயா’ காங்கிரஸ் மாநாட்டிலேயே தன்னுடைய பொதுவுடைமைக் கருத்துக்களை வெளியிட்டு ஒரு கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதியாகத் தன்னைக் கூறிக்கொண்டு அவர் பேசிய பேச்சுரையின் பகுதியை இங்கே குறிப்பிட வேண்டும்:-

“உலக கம்யூனிஸ்டுகளின் சிறப்புக்குரிய வரிசை முறையில் உலக நலனில் அக்கறை உள்ள மாபெரும் இயக்கத்தின் பிரதிநிதியாக இங்கு வந்துள்ளேன். உலகத் தொழிலாளர்களுக்கு கம்யூனிசம் தரும் உயரிய வாழ்த்துச் செய்தியை உங்களுக்குத் தர வந்துள்ளேன். சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ்டுகள், ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் மற்ற உலகக் கம்யூனிஸ்ட்டுகள் ஆகியோரின் வாழ்த்துக்களை உங்களுக்கு அளிக்க இங்கு வந்துள்ளேன்”

“ஏ,பணக்காரர்களே! எச்சரிக்கையாக இருங்கள்! ஏ, பெரிய மனிதர்களே, விழிப்புடன் இருங்கள்! எங்களின் துயரங்கள் அனைத்தையும் கடுமையான உழைப்பையும் ஞாபகப்படுத்திப் பாருங்கள்! உலகில் நல்லன யாவற்றையும் உழைப்பு உங்களுக்குத் தந்துள்ளது. நீங்களோ அவனை (சின்ட்ரெல்லாவை) (இந்த இடத்தில் தொழி லாளியைக் குறிப்பிடுகிறார்) மூலையில் வைத் துள்ளீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் தேவை களுக்காகப் பணியாற்றும் அவனை (தொழி லாளியை) நீங்கள் புறக்கணித்துக்கொண்டு வருகிறீர்கள். அவனது (தொழிலாளி) திறமை, ஈடுபாடு, அறிவினால் நீங்கள் உலகில் உள்ள இன்ப வாழ்க்கைக்குரிய பொருள்களையெல்லாம் அனுபவித்துக்கொண்டு வருகிறீர்கள். ஆனால் பூர்ஷ்வா என்னும் செருக்கு மிக்க சகோதரர்கள், புறக்கணிக்கப்பட்ட சின்ட்ரெல்லாவின் (தொழி லாளர்களின்) தலைமையின் கீழ் விழும் நாள் நாடகத்தின் கடைசிக்கட்டம் நெருங்கிக்கொண்டு வருகிறது. தகுதி, அழகு இரண்டிலும் மிக உயர்ந்ததென அறிவிக்கப்பட்டுள்ள இந்தியத் தொழிலாளி ஒப்புயர்வற்ற முறையில் ஆட்சி செய்வான், பூர்ஷ்வாக்களே, இந்தியத் தொழி லாளி வர்க்கம் விழிப்படைந்துள்ளது. அவர்கள் கண்ணை மூடாது விழித்திருப்பார்கள். உலகைக் காப்பாற்றப் படிப்படியாகவும், உறுதியாகவும் தம் உரிமைகளைப் பெற்று வருகிறார்கள்”

மார்க்சும், ஏங்கல்சும் கூட்டாக எழுதி வெளியிட்ட “கம்யூனிஸ்ட் அறிக்கை”யை சிங்காரவேலர் தனது “ஸ்வதர்மா” பத்திரிகையில் வெளியிட்டதோடு மட்டு மல்லாமல் அதை மானுடத்தின் குறிப்பிடத்தக்க ஆவணம் என்று அழகாகத் தனது கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:-

“So ends the remarkable human document which today stands unrivalled for its honey of purpose, singleness of aim and brilliancy of its hopes and wishes.”

இந்தியத் தொழிலாளர்களுடைய கடுமையான உழைப்பைப் பற்றியும் அவர்கள் சுரண்டப்படுவது பற்றியும் கூறியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் எப்படி இச்சுரண்டலிலிருந்து விடுபட முடியும் என்பது பற்றியும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:-

“தற்போது இந்தியாவில் தொழிலாளர்களின் நிலைமை திரிசங்கு சுவர்க்கத்தைப் போலிருக்கிறது. தொழிலாளிகளுக்குச் சொந்தமான நிலம் கிடை யாது. வீரம் போய்விட்டது. பண்டைய கைத் தொழிலை விட்டு விட்டுக் கூலிக்காக அடிமைப் பட்டு இருக்கிறார்கள். வசிப்பதற்குச் சொந்த இடமில்லை. குடிக்கூலிக்கிருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதல்ல. ஒரு சிலர் நன்மை எய்துவதற்காகத் தொழிலாளி, அநேக மணி நேரம் வேலை செய்கிறான். ஒரு சிலர் நன்மையும், சௌக்கியத் தையும் அடைவதற்குரியவைகளைத் தொழிலாளி செய்கிறான். அந்தோ! கடைசியில் அவன் நிலைமை என்ன? அவனைப் பற்றிக் கவனிப்பார் யாருமில்லை. அவன் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தனாயிருக்கிறான். ஆனால் அவனுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இவ் விஷயம் ஆச்சரிய மானதல்லவா? இதற்குப் பரிகாரம் என்ன?

நீங்கள் எல்லாவற்றையும் உற்பத்தி செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு ஒன்றுமே சொந்தமில்லை. உலகத்தில் செல்வம் பெருகிக்கிடக்கின்றது. ஆனாலும் உங்களுக்குப் போதுமான உணவும், உடையும், இருப்பிடமும் கிடையா... ...ஏராள மான விளைபொருட்கள் இருந்தும், ஜனங்கள் கஷ்டப்படுகிறார்கள்... ஏன்?... தொழிலாளர்கள் பொருளை அபரிமிதமாய் உற்பத்தி செய் கிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்குப் போதுமான அளவு பொருட்கள் கிடைப்பதில்லை. பொருள்களை உற்பத்தியாக்குவோனுக்கும், அதை வாங்கி அனுபவிப்பவனுக்கும் இடையில் மூன்றாவது மனிதன் ஒருவன் இருக்கிறான். இவன் தான் எல்லாவற்றிற்கும் சொந்தக்காரனாகப் பாவிக்கப்படுகிறான். இவன் நிலத்தில் விளையும் பொருள்களையும் சுரங்கங்களிலிருந்து தோண்டி யெடுக்கப்படும் உலோக வகைகளையும், ரயில் வேக்களையும், கப்பல்களையும், தொழிற்சாலை களையும், தன்னுடையதாக ஆக்கிக்கொண்டு தன்னிஷ்டம் போல் விலை ஏற்படுத்துகிறான். இதனால்தான் பஞ்சம், நோய், கஷ்டங்கள், அமைதியின்மை, வேலை நிறுத்தங்கள், இராஜிய புரட்சிகள் ஆகிய, இவைகள் உலக முழுமை யிலும் ஏற்படுகின்றன. அவன்தான் முதலாளி.

இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் அரசியல் உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? வேண்டுமாயின், அது எவ்வகையான அரசியலாக இருக்கவேண்டும் என்ற பிரச்சினை எழுந் துள்ளது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் வளர்ந்துகொண்டு இருக்கிறது. முட்டை புழுப் பருவத்தை அடையும் நிலையை அது ஏற்கனவே கடந்துவிட்டது. அது ஒன்றாகத் திரண்டு வருகிறது. நேர்மையற்ற, பேராசை பிடித்த முதலாளிகளுக்கெதிராக, உறுதிமிக்க எதிர்ப்பைக் காட்ட முயல்கிறது. நாட்டின் அரசாங்கம் முதலாளிகள் பக்கமே பெரிதும் சாய்ந்திருப்பதை அது காண்கின்றது.

நாட்டில் தற்போது நிலவும் அரசியலுறவுகள் உள்ள நிலைமையில், இச்சிறப்புமிக்க நம் நாட்டில் வசிக்கும், எல்லாக் கடுமையான உழைக்கும் மக்களின் விடுதலை நம்பிக்கை ஆகியவைகளின் சின்னமாக விளங்கும், சுயராஜ்யக் குறிக்கோள் அதன் நீண்ட நெடுங்கால அடிமைத்தனத்தி லிருந்தும், துயரத்திலிருந்தும், விடுதலை பெற அது நம்பியுள்ளது. தொழிலாளரின் குறிக்கோள், ‘இந்திய சுயராஜ்யம்’- ‘அரசியலிலும் தொழில் துறையிலும் ராஜ்யம்’.

சுமார் மூன்று கோடி மக்கள் பெரிய தொழிற் சாலைகளடங்கிய ரெயில்வே, பஞ்சு, நெசவு, சாய நெசவு, தேயிலை, காஃபி, பயிர், இரும்புச் சுரங்கம் முதலிய வேலைகளில் உழைத்துவருகின்றனர். இவர்களுடைய வருமானமும், சாதாரண ஜீவனத் திற்கே போதாது. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வோரின் வருமானம், ஆணுக்குத் தினமொன்றுக்கு ஆறேமுக்கால் அணாவும், பெண்ணுக்கு ஐந்தணாவும், பத்துப் பன்னிரண்டு வயது குழந்தைகளுக்கு மூன்று அணாவும் ஆகும். இம்மூன்று பேரும், ஒரு குடும்பத்தைச் சேர்ந் திருந்தால் இவர்களுடைய மொத்த வருமானம், தினமொன்றுக்குப் பதினாலே முக்காலணாவாகும். இதைக்கொண்டு துணிமணிகள் போன்ற அவசியச் செலவுகளைச் செய்து கொள்ளவேண்டும். இந்த வேலை, அடிமை வேலைக்குச் சமானமென ஆங்கிலத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தங்கள் அறிக்கையில் வரைந்துள்ளார்கள். மற்ற தொழி லாளர்களின் வருமானமும் இதற்கு அதிகமில்லை."

யார் இந்த சுரண்டலமைப்பைக் கட்டிப் பாது காக்கிறார்கள் என்பது பற்றி அவருக்கு எவ்வித சந்தேகமும் இருந்ததில்லை. அதேபோல் காந்தியாருடைய சுய ராஜ்ஜியத்தில் சாதாரண மக்களுக்கு எவ்வித பிரயோ ஜனமும் இருக்கப்போவதில்லை என்று மக்களிடம் அறிவிக்க அவர் தயங்கியதில்லை. இக்கருத்துக்களை அவர் தனது பல கட்டுரைகளில் மிகத் தெளிவாக எழுதியிருந்ததைப் பார்க்கலாம்:-

“எளியோருக்கு நியாயஸ்தலங்களால் பயனில்லை என்று ஜட்ஜ் பாரி என்பவர் சொல்லுகின்றார். “எந்தக் காலத்தில் கோர்ட்டுகளும், லாயர் ஸ்தாபனங்களும், இந்த உலகை விட்டு ஒழியுமோ அந்தக் காலத்தில்தான், உலகம் சுகப்படும்” என்றார் அமெரிக்கா தேசத்து மெய்ஞ்ஞானி யாகிய வாட்ஸன்”

இந்தத் தேசிய முதலாளிகளே, இந்த வர்த்தகர் களே, இந்த ஜட்ஜுகளே, இந்த லாயர்களே, சுயராஜ்யத்தில் அரசு புரியப் போகின்றவர்கள் இந்தத் தேசியவாதிகளே அரசு புரியப் போகின்ற வர்கள். இவர்களுடைய செல்வத்தையும், செல் வாக்கையும், ஆதிக்கத்தையும், பாமர மக்களுக்குச் சரிசமமாக விட்டுக்கொடுக்கப் போகின்றார்களோ? அது ஒரு போதுமில்லை. பிற நாட்டிலுள்ள செல் வத்தின் மேல் இவர்களுக்கெல்லாம் ஒரு கண் இருந்தே தீரும்.
புலியும், பசுவும் ஓர் துறையில் நீர் அருந்தினாலும் அருந்தும்: ஆனால் முதலாளியும் தொழிலாளியும் சரிசமத்துவமாகத் தங்கள் தேச பொருள்களை, காந்தியாரின் சுயராஜ்யத்தில் அனுபவிப்பார்கள் என்பது பகற்கனவே. உடையவன், இல்லாதவன், என இனி மனிதக் கூட்டம் பிரிந்திருப்பதும், இந்தத் தனிச் சொத்து உரிமையால் நிகழ்ந்து வரும் வித்தியாசம் என அறிதல் வேண்டும். முதலாளி-தொழிலாளி என்ற வித்தியாசமும், ((Freeman)) - அடிமை ((Slave) என்னும் வித்தியாசமும் மக்களுக்குள் ஏற்படக் காரணம் என்னவெனில், சிலரிடம் பொருள் தங்கவும், பலரிடத்தில் ஒன்றும் இல்லாமையாலும் என அறிக.

இந்தப் பொருளாதார வேற்றுமையுள்ளவரை எந்த அரசாயினும் சரி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், என்பதெல்லாம் பொய்ப்பேச்சே. உடையவனுடைய பொருளைக் காப்பதற்குத் தான், எல்லாப் போலீசும், எல்லா நீதியும், எல்லாச் சேனை சிப்பந்திகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால், எந்த இல்லாதவனுடைய வறுமையைப் போக்க, எந்த நியாயம், எந்தச் சட்டம், எந்த அரசு ஏற்பட்டுள்ளது?

சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? இந்தப் பிரச்சினைக்குக் கொடுக்கும் விடையில்தான் 160 கோடி உலக மக்களின் சுகாசுகங்கள் அடங்கி யுள்ளன. இந்த விடையில்தான் 35 கோடி இந்திய மக்களின் சுகாசுகங்கள் அடங்கியுள்ளன.

காந்தியார் சுயராஜ்யத்தில், தனி உடைமை ஆதரிக்கப்படும். அதில் அடங்கியுள்ள பொருளாதார அடிமைத்தனமும் நிலைத்து வரும். தொழி லாளிக்கும், விவசாயிகளுக்கும், உண்ணப் போது மான உணவு இல்லாமை இன்றைக்கு உள்ளதைப் போலவே இருந்து வரும். தோழர்களே! இந்தச் சுயராஜ்யமா வேண்டுமெனக் கேட்கின்றேன்! ஏனெனில், காந்தி ராஜ்யத்தில் தற்போதுள்ள நிலைமையாகிய பொருளாதார வித்தியாசமே நிலைத்துவரப் போகின்றது. ஆயிரம் பதினாறாயிரம் பேர்கள் மாத்திரம் எல்லா நிலங்களையும், நீர்களையும் (Waters)) தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், வீடுவாசல்களையும், வங்கிகளையும் சொந்தமாக ஆண்டு வரப் போகின்றார்கள். ஆனால் கோடானுகோடி மக்களோ, இவை எதுவும் சொந்தமின்றி உண்ணப் போதுமான உணவின்றி, அறிவு விளங்கச் சரியான கல்வி இன்றி, மக்கள் வசிக்க சுகாதாரமான வீடின்றி, போதுமான கூலியின்றி, வேலை நிச்சயமின்றி உழைத்து வரப்போகிறார்கள். காந்தியாரின் சுயராஜ்யத்தில் அதுதான் சிலருக்கு வரப்போகும் நற்பாக்கியம். இதுதான் பெரும் பான்மையோருக்கு வரும் துர்ப்பாக்கியம்”

அவர் கனவு கண்ட சமதர்ம சமூகத்தில் மக்களுக்கு என்ன நன்மைகள் இருக்குமென்பதைப் பற்றி அவர் மிகத் தெளிவாகப் பல கட்டுரைகளில் வெளியிட்டிருந்த கருத்துக்களின் சாராம்சம் இதோ:-

1. சகலவிதப் பொருள்களிலும் லாபம் சம்பாதிக்கும் மனப்போக்கு சமதர்மத்தில் இல்லாமலிருக்கும். இந்த மனப்போக்கால் உழைத்தவனுக்கு ஒன்று மில்லாமல், உழைக்காத சோம்பேறிகளுக்கு எல்லா லாபமும் கிடைக்கும் திட்டம் சமதர்மமில்லை.

2. சிலரே, சகல பொருள்களையும் கைப்பற்றி, சொந்தமாக்கிக்கொள்ளும் இலட்சணமும், சமதர்மத்தில் இல்லாமல் இருக்கும்.

3. விளையும் பொருள்களும், செய்யும் பொருள்களும், விளைவிக்கச் செய்யும் சமூகத்தாருக்கு, ஏற்றத்தாழ் வின்றி விநியோகம் செய்யப்படும். இலட்சணம் சமதர்மத்தில் விசேடமாக பொருந்தி உள்ளது.

4. சமதர்ம சமூகத்தில், நிலத் தீர்வை வாங்கும் நிலச் சுவானும் குடிக்கூலி வாங்கும் சொந்தக்காரனும் இருக்கமாட்டார்கள். லாபம் சம்பாதிக்கும் வர்த்தகனும், வட்டி வாங்கும் வணிகனும் இருக்க மாட்டார்கள். அவசியமாக வாங்கவேண்டிய நிலத்தீர்வையும், குடிக்கூலியும், வீட்டு வாடகை யையும் வர்த்தக லாபமும், கடனுக்கு வட்டியும், சகலவித லாபங்களும் ((Profits), பொதுமக்களுக்கே உரித்தாகி, பொதுமக்களுக்கே அவர்கள் உண்ண உணவு, தங்க வீடு வாசல், அணியும் ஆடை, கற்கும் கல்வி முதலிய வாழ்விற்கு வேண்டிய அத்தியா வசியங்களுக்கு உபயோகப்படுத்தப்படும்.

5. தற்கால சோம்பேறிகளாகிய நிலச்சுவானும், வர்த்தகனும், வணிகனும், வாடகை வாங்கு வோனும், சமதர்ம சமூகத்தில் உழைத்து எல்லாவித சமதர்ம சுகபோகங்களைப் பெறுவார்கள்.

6. சமதர்ம சமூகத்தில் சொத்து வைத்திருக்கும் சாதி என்றும் (Haves) , சொத்து இல்லாத சாதியென்றும் (Have Nots) இனவேற்றுமை இருக்காது. எஜமான் சாதியென்றும் வேலை செய்யும் சாதியென்றும், சமதர்மத்தில் கிடையாது. தற்கால உலகத்தில் இருக்கும் இரண்டு சாதியாகிய பொருளாளி, தொழிலாளி என்போர் இருக்கமாட்டார்கள். சமதர்மத்தில் ஒரே இனம்தான் இருக்கும். அதாவது உழைக்கும் இனம் ஒன்றுதான்.

7. சமதர்மத்தில் ஒவ்வொருவனும் உழைப்பதுவே சமதர்மக் கொள்கையாகும்.

8. “உழைக்காதவனுக்கு உணவில்லை” என்பதே சமதர்மக் கொள்கையாகும்.

9. தற்காலத்தில் உழைப்பின்றிச் சோம்பேறிகளாக வாழ்ந்து வரும் சில மக்களுக்குச் சமதர்மத்தில் வாழ இடமே இல்லை.

10. சமதர்மத்தில், சோம்பேறிகள் வாழவும் முடியாது.

“சமதர்ம உலகில் மனிதன் மேன்மேலும் தன் வாழ்வை உயர்த்திக்கொண்டே போவான். சதா உயர்ந்துகொண்டே போகும் வாழ்விற்கு வேண்டிய பொருள்களை உண்டாக்க, எல்லோருக்கும் வேலை இருந்துகொண்டே இருக்கும். இந்தச் சமதர்ம சமூகத்தில், இறந்து போனவர்களுக்கும், இறந்தவர் களுக்குச் சமமானவர்களுக்குமே ஒழிய, மற்ற உயிர் வாழும் எந்த மனிதர்க்கும் வேலையில்லாமலிராது. சமதர்ம சமூகத்தில், வேலை செய்துவரும் வேலையெல்லாம், சிலரின் உபயோகத்திற் கில்லாமல் அனைவருடைய உபயோகத்திற்கும் செய்துவரப்படுமாகையால், அதில் உழைப்பவன் ஒவ்வொருவனுக்கும் வேலை செய்து உழைக்க அவா மேலிட்டுவரும். சமதர்ம சமூகத்தில் ஒருவனுக்காகப் பலர் உழைக்க வேண்டிய அவசியமில்லாதபடியால் ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்த வேலையை அன்புடன் செய்து வருவான். 8,9,10 மணி நேரம் வேலை செய்யும் தற்கால வேலைகள் சமதர்ம சமூகத்தில் இருக்கவே இருக்காது. வாழ்விற்கு வேண்டிய பொருள்கள்யாவும் உலகிலுள்ள மக்கள் 4 மணி நேரம் உழைப்ப தனாலேயே கிடைக்கக்கூடுமென, பொருளாதார விற்பன்னர்கள் ஒரு கணக்கெடுத்திருக்கின்றார்கள். உலகில் கிடைக்கக்கூடிய எல்லா அவசிய சுக போகங்களை யாவரும் அனுபவிக்க வேண்டும் என்றாலும், மனிதருடைய 4 மணி நேர உழைப்பே போதுமென மதிப்பிட்டிருக்கின்றார்கள்.

இந்தச் செல்வாக்கு சமதர்ம சமூகத்தில்தான் கிடைக்கும். மற்ற நேரங்களை எவ்விதம் கழிப்பதென்று கேள்வி பிறக்கலாம். அதற்கு விடை யாதெனில், மன உல்லாசம், திரேக உல்லாசம், பொது மக்கள் சேவையில் உல்லாசம், விஞ்ஞான ஆராய்ச்சியில் உல்லாசம் முதலிய சுகப் பேற்றை ஓய்வு நேரங்களில் யாவரும் அனுபவிக்கக் கூடும்... ...சமதர்ம திட்டத்தில் ஓய்வு நேரம் அதிகரிக்குமாகையால், சகலரும் உயர்தர வித்தைகளைக் கற்று வாழ்வை உயர்த்திக் கொள்ள அனுகூலமாகுமன்றோ!.... இது ஒன்றே உலகம் சுகம் உய்யப் போதுமானதாகும்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள பொருளாதார வித்தியாசம் தொலைந்த அன்றுதான், பெண்கள் தங்கள் பிறப்புரிமைகளாகிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பெறுவார்கள். அந்தப் பொருளாதார வித்தியாசம் ஒழியும் வரை பெண்களின் அடிமைத்தனம் நீங்கவே நீங்காது. மற்ற முயற்சிகள் யாவும் காலப் போக்கே. ஆதலின், சமதர்ம சமூகம் ஒன்றில்தான் பெண்கள் ஆணுடன் சரிசமத்துவம் பெற முடியும்.

சகலருக்கும் போதுமான சமத்துவ உணவு, ஆடை, வீடு கிடைக்க வேண்டுமானால் அவை சமதர்ம ஆட்சியில்தான் (Socialist Rule) பெற முடியும். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஓய்வு நேரம் சமதர்மத்தில்தான் கிடைக்கும். சகலரும் உயர்தரக் கல்வியைப் பெற்று, மூட சாதி, மூட மத நம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் அது சமதர்ம ஆட்சி மூலமாகத்தான் முடியும். பெண்கள் ஆணுடன் சமத்துவம் பெறவேண்டு மானால் சமதர்மத்தில்தான் அனுகூலப்படும். இனி வரும் சந்ததியாரை, பஞ்சத்திலிருந்தும், பட்டினியி லிருந்தும், நோயிலிருந்தும், அகால மரணத்தி லிருந்தும் விடுவித்து, உலகை அழகு பெறச் செய்ய வேண்டுமானால் அது சமதர்மத்தில்தான் கூடிவரும். நமக்குப் பின்னால் உலகம் முழுதும், துவேச மோகமற்று, சண்டையற்று, போரற்று, உலக மக்கள் அன்புடன் கூடி வாழ வேண்டுமானாலும், சமதர்ம ராஜ்யம் மூலமாகத்தான் முடியும். உலகம் இப்பேற்றைப் பெறத் தற்காலத்தில் நிலவிவரும் கொடிய பொருளாதார வித்தியாசத்தினை முற்றிலும் மாற்றி, சமதர்ம ராஜ்யத்தை உருவாக்குதல் வேண்டும். தற்காலக் கொடிய திட்டத்தை மாற்றும் வகையையும், சமதர்ம ஆட்சியினை அமைக்கும் வழியையும், இனி எடுத்துக்காட்டுவோம்”

இப்படிப்பட்ட தெளிவான கருத்துக்களை அன்றைக்குத் தமிழகத்தில் மிக்க மனவுறுதியுடன் ஒருவர் வெளிப்படுத்தினாரென்றால் அது சிங்காரவேலர் மட்டுமே. அக்கருத்துக்களைத் தமிழகம் முழுவதும் எடுத்துச்சென்று பரப்புவதற்கு உரிய இயக்கமும், தொண்டர்களும் இல்லாமல் போனது வருத்தத்திற் குரியது. ஆயினும், அவர் வெளியிட்ட கருத்துக்கள் இன்றைய இந்தியாவிற்கும் பொருந்துமென்பதும் அவருடைய பிறந்தநாளில் இப்படிப்பட்ட அவரது கருத்துக்களை நினைவுகூர்ந்து பரவலாக மக்களிடம் எடுத்துச்செல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.

புரட்சி கீதம் இசைக்கப்போகும் சுதந்திர இந்தியாவின் கனவை நிறைவேற்ற இந்திய மக்களுக்கு கான்பூர் பொதுவுடைமை மாநாட்டில் அவர் விடுத்த வேண்டுகோளை மீண்டும் நினைவூட்டி இவ்வுரையை முடித்துக்கொள்கிறேன்:-

தோழர்களே! இந்தியாவில் கம்யூனிஸ்டுகளாகிய நாம் குறிக்கோளாகக் கொள்ளவேண்டியது எது? எல்லோருக்கும் எளிய வாழ்க்கை, அன்றாட உணவு பற்றிய கவலையற்ற வாழ்வு, அகால மரணத்தி லிருந்தும், உடல்நலக் கேட்டிலிருந்தும் விடுதலை பெற்ற வாழ்வு, அறியாமை நீங்கிய வாழ்வு ஆகிய வைகளே. கம்யூனிசக் கொள்கைகளைப் படிப்படி யாகவும் அமைதியாகவும் கடைப்பிடிப்பதால், இந்தியாவில் மக்களுக்குச் சிறந்த வாழ்க்கையைக் கொண்டுவர முடியும் எனக் கம்யூனிஸ்டுகளாகிய நாம் நம்புகிறோம். இந்தியாவின் எதிர்காலம் நம் கையிலுள்ளது. மிக உயர்ந்த இந்தியாவைக் காண, நாம் கனவு காண்கிறோம். ஆகையால் எளியோரை வலியோர் சுரண்டுவது, பட்டினி, நோய், சாவு ஆகியவைகளிலிருந்து விடுதலை பெற வேண்டு மென்ற நம் எண்ணங்களை, எத்தடையும் இடையூறுமின்றி வெளிப்படுத்த கலையுருவாக்கம் மிக உயர்ந்த பொருள்கள், விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவைகளை அனுபவிக்கும் உரிமையுள்ள தொழிலாளர் தம் புரட்சி கீதத்தை இசைக்கும் சுதந்திர இந்தியா பற்றிய கனவை நிறைவேற்ற முயல்வோம்

சிங்காரவேலர் நாமம் வாழ்க!

இக்கட்டுரை எழுத உதவிய சான்று நூல்களின் பட்டியல்:-

1) பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும் (டாக்டர்.கோ.கேசவன்) சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம், முதல் பதிப்பு - டிசம்பர் 1988

2) சென்னைப் பெருநகரத் தொழிற்சங்க வரலாறு, தோற்றமும் வளர்ச்சியும் (கி.பி.1918-1939), (முனைவர்.தே.வீரராகவன்), (தமிழில் ச.சீ.கண்ணன், புதுவை ஞானம்) அலைகள் வெளியீட்டகம், சென்னை, வெளியீடு : 2003

3) Contribution of Tamil Nadu To The Trade Union Movement in India by M.Dharma Rajan, A Publication of SBOA Institute, Madras 600 001, First Published in 1992

4) சிங்காரவேலரின் சிந்தனைகள், பா.வீரமணி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., சென்னை, முதற்பதிப்பு - பிப்ரவரி 2012

5) சிங்காரவேலரின் தத்துவப்பார்வை, பா.வீரமணி, மணிவாசகர் பதிப்பகம், முதல் பதிப்பு : 7, ஆகஸ்ட் 2011

6) ம.சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி-1, பா.வீரமணி, முத்து குணசேகரன், தென்னக ஆய்வு மையம், முதல் பதிப்பு : டிசம்பர் 2006

7) ம.சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி-2, பா.வீரமணி, முத்து குணசேகரன், தென்னக ஆய்வு மையம், முதல் பதிப்பு : டிசம்பர் 2006

8) ம.சிங்காரவேலரின் சிந்தனைக்களஞ்சியம் தொகுதி-3, பா.வீரமணி, முத்து குணசேகரன், தென்னக ஆய்வு மையம், முதல் பதிப்பு : டிசம்பர் 2006

9) சிந்தனைச்சிற்பி ம.சிங்காரவேலரின் சமூகச் சிந்தனையும் பன்முக ஆளுமையும், பா.வீரமணி, வீ.கலியபெருமாள், தோழர் ம.சிங்காரவேலர் 150 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மலர் 18-02-1860 --- 11-2-1946, சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் - அறக்கட்டளை, முதல் பதிப்பு டிசம்பர் 2009

10) அண்மைக் காலத்தில் இந்தியா, இந்தியாவின் வரலாறு, 18-ஆம் நூற்றாண்டின் நடு முதல் நம் காலம் வரை: கொ.அ.அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின், கி.கி.கத்தோவ்ஸ்கி, முன்னேற்றப் பதிப்பகம்: மாஸ்கோ

குறிப்பு: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையின் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரில் உள்ள அறக்கட்டளையில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவம்: 18-2-2014.

Pin It