சாகித்திய அகாதெமியின் மூலமாக வெளி யிடப்பட்டிருக்கும் ‘சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்’ என்னும் இந்நூல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பற்றித் தொய்வின்றி ஆய்ந் தாய்ந்து கருத்துக்களை முன்வைத்துப் பேசியும் எழுதியும் வருகின்ற குறளறிஞரும் மார்க்சியச் சிந்தனையாளருமாகிய திரு. பா.வீரமணி அவர் களின் உலையா முயற்சிக்குக் கட்டியங் கூறுவதாகும்.
நாட்டு விடுதலைப் பற்றாளராகவும், தொழிற் சங்கவியக்க முன்னோடியாகவும் பொதுவுடைமைச் சிந்தனையாளராகவும், அப்பழுக்கற்ற நாத்திக ராகவும், பகுத்தறிவுச் செம்மலாகவும் அறிவியல், தத்துவம் போன்ற பல துறைகளில் ஆழங்கால் பட்டவராகவும் விளங்கிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள், தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் போற்றுதலுக்கும் வணங்குவதற்கும் உரியவர். இந்தியச் சிந்தனை மரபுகள் மட்டுமின்றி உலகச் சிந்தனை மரபுகளையும் கண்டுணர்ந்து தம் அறிவுப் பாதையைத் தமிழ் மண்ணுக்கு வழங்கி வழிகாட்டியவர்.
தமிழக அளவிலும் இந்தியத் தேசிய அள விலும் அரசியல், சமூகம் ஆகிய இரண்டு தளங் களில், காங்கிரஸ் இயக்கத்திலும் பொதுவுடைமை இயக்கத்திலும் திராவிட இயக்கத்திலும் பங்காற்றி னாலும் அவரின் உள்ளுணர்வு தொழிலாளர் களின் நலன்களிலும் இந்திய மண்ணில் பொது வுடைமையில் பூக்கும் சமுதாயத்தை நோக்கியே மையமிட்டிருந்தமை புலனாகின்றது. அறியாமையாலும், சமயத்தின் பெயராலும் மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற தமிழ்ச்சமூகத்தில் 1930 களிலேயே அறிவியல் சிந்தனைகளை விதைத்த மாபெரும் தலைவர் அவர். அரசியலில் மதச் சிந்தனை களைக் கலந்து அரசியல் நடத்தும் போக்கு அன்றும் நடந்தது. இன்றும் நடந்து வருகின்றது. சிந்தனைச் சிற்பி அவர்கள் அவர் காலத்து மத அரசியலை நீக்கி, வர்க்க உணர்வோடும் சமுதாய உணர்வோடும் அரசியலில் பங்காற்றியவர்.
அன்னாரின் கருத்துச் சிந்தனைகள் எழுத்து வடிவில் 1919 முதல் 1936 வரை பல்வேறு ஏடுகளில் எழுதியவை அறிவுக்கு விருந்தாக அமைந்தவை. அவரின் சிந்தனைகளின் தொகுப்பாக 2007 இல் பா. வீரமணி அவர்களும் பேராசிரியர் முத்து குணசேகரன் அவர்களும் தொகுத்து வெளியிட்டு உள்ளனர். ‘சிங்காரவேலரின் சிந்தனைப் பொழிவுகள் என்னும் தலைப்பில், சிங்காரவேலர் ஆற்றிய உரைப்பொழிவுகளைக் காலவரிசையில் அண்மையில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சிங்காரவேலரின் சிந்தனைகளை வெளியிடுவது மட்டுமின்றி, சிங்காரவேலரின் சிந்தனைகள் மீதான நுண் ஆய்வுகளை ஒப்பியல் நோக்கோடும் அரசியல், சமுதாயவியல் நோக்கோடும் பல நூல்களை வழங்கியவர் பா.வீரமணி அவர்கள். சிங்காரவேலரின் சிந்தனைகளைச் சரியான திசையில் உணரவும் அவர் காலச் சூழலைப் புரிந்துகொள்ளவும், சிங்காரவேலரின் சிந்தனைகள் மீதான வீரமணி அவர்களின் நுண்ணாய்வு பெரிதும் துணை செய்கின்றது.
சிங்காரவேலரை அறிவுலகிற்கும் அரசியல் உலகிற்கும் இனங்காட்டிய பெரியவர்கள் சி.எஸ். சுப்பிரமணியனாரும் நாகை முருகேசனாரும், சிங்காரவேலரின் சிந்தனைகளைத் தொகுத்து வழங்கிய செல்வராசு பேராசிரியர் முத்து குண சேகரன் அவர்களுடன் பா. வீரமணி அவர்களின் ‘சிங்காரவேலரைப் பற்றிய ஆய்வில்’, அவரின் தனி இடம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்நூலில் சிங்கார வேலரின் பல்வேறு கட்டுரைகளில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட புதுக் கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. 1931 முதல் 1936 வரையில் காலவரிசையில் இவை அமைந்துள்ளன. இத்தொகுப்பு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பல்துறை அறிவாற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இக்கட்டுரைகளின் உள்ளடக்கம் - அரசியல், சமூகம், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், அறிவியல், மானிடவியல், மதம் போன்ற பல துறைகளில் கருத்தைச் செலுத்தியுள்ளது. சிங்கார வேலர் காலத்திய அரசியல் சமூக நிலைகளைப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் பெரிதும் உதவுவன. அறிவியல் சிந்தனைகள் மக்கள் மனதில் பதிந்தால் மூடநம்பிக்கைகள் ஒழியும் என்ற கருத்தில் அறிவியல் சிந்தனைகளைத் தன்னுடைய அரசியல் சமூகத் தொழிலாளர் போராட்டங்களுக்கு இடையே அழுத்தமாக எழுதி வந்தவர் சிந்தனைச் சிற்பி அவர்கள். அதற்கென்றே 1935 இல் ‘புது உலகம்’ என்ற ஏட்டைத் தொடங்கினார். இவ்வேட்டில் மட்டுமின்றிப் பல ஏடுகளில், குறிப்பாகத் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டில் அறிவியல் கட்டுரைகள் பல எழுதினார்.
மதமானது, ஆளுவோருக்கு ஆதரவாகவும், பொருட் குவியலின் இடமாகவும் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதாகவும் மதங்களால் நிகழ்ந்த போர்களால் அழிவுகள் நேர்ந்ததையும் எடுத்துக் காட்டி ‘மதமில்லாத அரசு’ உருவாகவேண்டும் என்கிறார் சிங்காரவேலர். மத நடுநிலை என்னும் கொள்கையை மறுதலிக்கின்றார். சாதியொழிப் பிற்குக் கலப்பு மணம் மட்டும் தீர்வாகாதென்றும், பொருளாதாரச் சமன் இன்மையே அதற்குப் பெரிதும் காரணம் என்கிறார். தீண்டாமை நீடிப்பதற்கும் பொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வே காரணம் என்கின்றார். இவற்றைச் சரி செய்ய அரசாட்சியின் அதிகாரம் தேவை என்பது சிங்காரவேலரின் ஆணித்தரமான கருத்து.
கடவுள், மோட்சம், நரகம், ஆன்மா, மனம் போன்ற சொல்லாடல்கள் மனிதக் கற்பனையில் முகிழ்த்தவை என்றும் இவற்றைச் சமூக வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு விளக்குகின்றார். மேலை நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சியால் அந்நாடுகள் மூடத்தனத்தில் இருந்து விழித்துக் கொள்ள, நம் நாட்டில் எந்த மாற்றமும் நிகழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி மனித இன வளர்ச்சிக்கு மதம் தேவை இல்லை. அறிவியல் சிந்தனையும் பகுத் தறிவும் தேவை என்பதைப் பல நிலைகளில் வற்புறுத்தியுள்ளார்.
பொதுவுடைமைச் சமூகம் குறித்தும், தனி யுடைமையால் விளையும் கேடுகள் குறித்தும் எளிய முறையில் சிங்காரவேலர் அவர்கள் விளக்கி யுள்ளார். சமூகத்தில் பெண்களின் நிலை மழலை களின் நிலை குறித்தும் பொதுவுடைமைச் சமூகத்தில் அவர்களின் நிலைப்பாடு குறித்தும் விளக்கி இருப்பது அவர் இதயத்தில் இந்தியாவில் பொது வுடைமைச் சமூகம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் நிழலாடுகின்றது. பகுத்தறிவுச் சீர்திருத்தத் தோடு பொருளாதார மேம்பாடும் மிக அவசியம் என்பது இவரின் கருத்து.
விடுதலை பெறாத இந்தியாவில் சிங்காரவேலர் வாழ்ந்ததால், விடுதலை நோக்கில் அவரின் சிந்தனை மட்டுமின்றி காங்கிரசின் வேலைத் திட்டங்களின் பிற்போக்கான நிலைகளை, அவ்வப்போது சுட்டிக்காட்டி இருப்பது அவரின் அரசியல் மெய்யறிவின் செழுமை புலப்படுகின்றது. தேசிய அரசியலின் மதம் சார்ந்த பொருளாதாரம் சார்ந்த கொள்கை மீதான சிங்காரவேலரின் விமர்சனங்கள் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கவை. தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்குத் தனித்தொகுதி வேண்டும் என்ற கருத்தில், காந்தியாரின் உண்ணாவிரதப் போக்கைக் கண்டிக்கும் துணிவு சிங்காரவேலரின் தனி ஆளுமையைக் காட்டுகின்றது. காந்தியாரின் மீதும் அவரின் பண்பு நலன்களின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் சிங்காரவேலர். அவர் நகரமன்ற உறுப்பினராக இருந்த போது காந்தியாரின் திருவுருவப் படத்தைப் பள்ளிகளில் வைக்கச் சொன்னவர்.
மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மந்திர தந்திரங்கள் செய்வோரைத் தண்டிக்க வேண்டும் என்ற கருத்தை சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் 1930களிலேயே குறிப்பிட்டிருப்பது அவரின் தொலைநோக்குணர்வைக் காட்டுகின்றது. மராட்டிய அரசு இதனைச் சட்டமாக்கி உள்ளது. அவரின் கட்டுரைகளின் தொகுப்பில் பெரும்பகுதி அறிவியல் சார்ந்த கட்டுரைகளே. அறிவியல் மனப் பான்மையை மக்கள் மத்தியில் கொண்டுவர அவரின் சிந்தனைகள் எழுத்துக்கள் உரமூட்டுவன.
மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு கர்ப்பத் தடை தீர்வாகாதென்றும் விளைபொருட்கள் சமூகத்தில் சரியான முறையில் பங்கீடு செய்யப் பெறவில்லை என்பதாலும் விளை பொருட்கள் சிலரிடம் மட்டுமே குவிவதாலும் அவை வீணா வதாலும் சமூகத்தில் வறுமை நிலவுகின்றது. இந்த வறுமையைப் போக்கவும் மக்கட் தொகையைக் கட்டுப்படுத்தவும் கர்ப்பத்தடை செய்யவேண்டும் என்பதை சிங்காரவேலர் ஏற்கவில்லை. மாறாக துர்வினியோகத்தைக் கட்டுப்படுத்தவும், மக்கட் தொகைக்கு ஏற்ப உற்பத்தியைப் பெருக்கவும் வழிவகை செய்யவேண்டும் என்கின்றார். இதற்குச் சமதர்மக் கொள்கை வேண்டும் என்கின்றார்.
தமிழ் மொழி குறித்து அவரின் சிந்தனைப் போக்கு அலாதியானது. நகரமன்றத்தில் அவர் இருந்தபோது தமிழில்தான், உறுப்பினர்கள் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்றார். ஆங்கிலத்தை விடத் தமிழில்தான் நிரம்ப எழுதினார். பேசினார். தமிழறிஞர்கள் சொல்லாய்வு செய்வதைவிட சமுதாய ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவரின் உள்ளக் கிடக்கை இத்தொகுப்பில் பலர், சிங்காரவேலரிடம் எழுப்பும் ஐயங்களுக்கு அவர் பரிந்துரை செய்யும் ஆங்கில நூல்களை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், பலர் அவற்றைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே. சிங்கார வேலர் ஆங்கிலக் கல்வியில் பயின்றதால், உலக நாடுகளில் உலா வந்த பல்துறை நூல்களைத் தேடித்தேடிப் பயின்றுள்ளார் என்பது அவரின் கட்டுரைகளின் வாயிலாகத் தெரியவருகின்றது. உண்மையில் சிங்காரவேலர் மேதமையின் அடை யாளம் (a symbol of genius).
மற்றும் இந்நூலில் கவனிக்க வேண்டிய செய்தி; இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள தொகுப்பாளர் பா.வீரமணி அவர்களின் ஆய்வுக் கருத்து. சிங்காரவேலரின் ‘பன்முக ஆளுமையும் தொண்டும்’ என்ற தலைப்பில் சிங்காரவேலரை அவரின் பிறப்பு, கல்வி, தொழில், தொண்டு போராட்டங்கள் இவற்றை முழுமை நோக்கில் வெளிக்காட்டியிருப்பது அருமை.
இவ்வாய்வுக் கட்டுரை சிங்காரவேலரின் தனி ஆளுமையையும் தனி ஆற்றலையும் புலப்படுத்து வதற்கு வழிகாட்டியாய் அமைந்துள்ளது. சிங்கார வேலரின் சிந்தனைகள் திலகர், ஜின்னா, சையது அகமது, காந்தியார், அரவிந்தர் போன்ற தலைவர்களின் சிந்தனைகளோடு ஒப்பிட்டு முடிவு காண்கின்றது. அது மட்டுமின்றி பக்கிம் சட்டர்ஜி, தயானந்த சரசுவதி போன்றவர்களின் சமுதாய இயக்கச் சிந்தனைகளோடு ஒப்பிட்டு சிங்காரவேலரின் சிந்தனைகளை இக்காலப் பொருத்தப்பாட்டிற்கு ஏற்றவாறு விளக்கி உரைக்கின்றது. தமிழகம் மட்டும் இன்றி இந்திய அரசியல் இயக்கங்களோடு சிங்காரவேலரின் சிந்தனைகளை ஒப்பிட்டு விளக்கியிருப்பது அரசியல் சிந்தனையாளர்களுக்கும் மற்றவர் களுக்கும் இக்கட்டுரை வழிகாட்டுதலாய் அமைந்துள்ளது.
தந்தை பெரியாருக்கும் பாபாசாகிப் அம்பேத் கருக்கும் இயக்கங்களும் அதன் வழி அவரின் சிந்தனைப் பரவல்கள் நிகழ்ந்துள்ளது போல் சிங்காரவேலரின் சிந்தனை பரவி இருத்தல் வேண்டும். அவ்வாறு நிகழாதது சோகமான வரலாறுதான். நாட்டுணர்வையும் முற்போக்குச் சிந்தனைகளையும் முன்வைத்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் தொண்டை மக்கள் முன்னெடுப் பார்கள் என நம்புவோம்.
இந்த நூலினை மிகச் சிறந்த முறையில் வெளியிட்டுள்ள சாகித்திய அகாதெமிக்கு நன்றிகள் பல. இதனை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியிலும் மொழிபெயர்த்தும் வெளியிடப்பெறும் என்ற தகவல் மகிழ்ச்சிப் படுத்துகின்றது. இம்மொழி களில் மட்டுமின்றிப் பொதுவுடைமைக் கட்சிகள் பெரிதும் அங்கம் வகிக்கும் மாநிலங்களான கேரளம், வங்காளம் இவற்றில் உள்ள மக்களுக்காக மலையாளம், வங்கமொழியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இது காலத்தின் தேவை.
சிங்காரவேலரின் சிந்தனைகள் திசை எங்கும் பரவட்டும்.
சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்: பா.வீரமணி
வெளியீடு: சாகித்திய அகாதெமி
குணா பில்டிங்ஸ்
443, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை,
சென்னை - 600 018
விலை : ` 155/-