p.dyalan 350இந்திய கலாத்துவத்தை மேல் நாட்டவரும் மதிக்கும் வண்ணம் வெளிப்படுத்திய பெருமைக் குரியவர். கல்வியானது பாரம்பரிய கலாச்சார அடிப்படைகளை ஆதாரமாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.  இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர். விஞ்ஞான மேதை யாகவும், தத்துவஞானியாகவும், இசை அறிஞராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கியவர் ‘கலாயோகி’ மு. ஆனந்தக் குமார சுவாமி!

இவர் சர். ஆ. முத்துக்குமார சுவாமி - எலிசபெத் கிளேபீபி வாழ்விணையருக்கு 22-08-1877 அன்று கொழும்பு மாநகரம் கொள்ளுப்பிட்டியில் பிறந்தார். இவரது தாயார் ஆங்கிலேயப் பெண்மணியாவார். இவருக்கு இரண்டு வயது நடந்து கொண்டிருந்த போது, இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு திடீரென்று 04-05-1879 அன்று காலமாகிவிட்டார்.

தமது தந்தையார் இறந்த பின்னர், தமது தாயாருடன் இங்கிலாந்து நாட்டில் வசித்தார். விக்ளிப் (Wycliffe) கல்லூரியில் சேர்ந்து அறிவியல் பாடங்களை சிறப்புப் பாடமாகப் பயின்றார்.  பின்னர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அறிவியல் பட்டத் தேர்வில் (B.Sc., Hons)  முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்று பட்டதாரியானார். இவர் லூசா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார்.

இவர் ஆங்கிலம், பிரெஞ்சு, வடமொழி, தமிழ், லத்தீன், சிங்களம், இத்தாலி, பாளி, பாரசீகம், கிரேக்கம் உட்பட பதினான்கு மொழிகளை அறிந்த பன்மொழிப் புலமை பெற்றவராக விளங்கினார்.

இலங்கைக்கு தமது இருபத்து ஆறாவது வயதில் 1903 ஆம் ஆண்டு வந்து, கனிப்பொருள் (தாதுப் பொருள்) ஆராய்ச்சித் துறையின் தலைவராகப் பணியாற்றினார். அப்போது ‘தாரியனைட்’ (Thorianite) எனும் கனிப்பொருளைக் கண்டுபிடித்தமைக்காக இலண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியல் கலாநிதிப் பட்டத்தை (Doctor of Science)) வழங்கியது.

தமது பணிகள் தொடர்பாக இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்தார்.  அப்பொழுது பாழடைந்து கிடந்த கோயில்களையும், சிற்பங்களையும் ஆராயத் தொடங்கினார். மேலும், கிராமப்புறங் களுக்குச் சென்று சிற்போவியப் பரம்பரையினரை சந்தித்து அவர்களது குருகுலக் கல்வி முறை பற்றி ஆராய்ந்தார்.

சுதேசக் கலைகளுக்குப் புத்துயிர் அளிப்பதுடன், மேல் நாட்டு நாகரிகத்தில் நாட்டங்கொண்டுள்ள இலங்கை மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், ‘இலங்கைச் சீர்திருத்தச் சபை’ என்னும் அமைப்பை 1905 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இச்சபையின் சார்பாக ‘இலங்கை தேசிய சஞ்சிகை’ என்னும் வெளியீட்டைக் கொண்டு வந்தார்.

இந்தியாவில் பூனா நகரில் உள்ள கீழை நாட்டு ஆராய்ச்சி நிலையம், ‘கலாயோகி’ ஆனந்தக் குமார சுவாமி இந்தியக் கலைகளுக்கும், தத்துவ ஞானத்திற்கும் ஆற்றிய பணியைப் பாராட்டி அவரைத் தமது நிறுவனத்தின் கௌரவ  உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து சிறப்பித்தது.

ஆனந்தக் குமார சுவாமி அலகாபாத் நகரில் 1910 ஆம் ஆண்டு ஒரு கலைக் கண்காட்சியை நடத்தினார். மேலும், அலகாபாத்தில் நடைபெற்ற ஐந்தாவது கைத்தொழில் மாநாட்டில் ‘சுதேசியம் மெய்யும், பொய்யும்’ என்னும் தலைப்பில் சிறந்த கட்டுரையை வாசித்தார்.

இலங்கைக்கு மீண்டும் 1921 ஆம் ஆண்டு வருகை புரிந்தார். அப்போது, ‘இராயல் ஏசியாடிக் சொசைட்டியின்‘ கொழும்புக் கிளையில், சர். பொன். அருணாசலம் தலைமையில் ‘இந்திய வர்ண ஓவியங்கள்’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். மேலும், ஆனந்தாக் கல்லூரியில் ‘புராதன சிங்களக் கலை’ என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

மகாகவி தாகூரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து முதலில் வெளியிட்டவர் ஆனந்தக் குமாரசுவாமி என்பது வரலாற்றுச் செய்தியாகும்.

பிரித்தானிய கலைக் களஞ்சியத்திற்கும், அமெரிக்கத் தேசிய கலைக் களஞ்சியத்திற்கும் பல நாட்டின் கலைகள் பற்றிய கட்டுரைகள் எழுதி அளித்துள்ளார்.  மேலும், இந்திய மொழிகளில் தோன்றித் திரிபு பெற்ற ஆங்கிலச் சொற்களையும் வெப்சரின் (Webster) அனைத்துலக அகர வரிசையிற் பதிப்பித்துள்ளார்.

நியூயார்க் நகரில் ‘இந்தியக் கலைக் கேந்திரம்’ என்னும் நிறுவனத்தை 1924 ஆம் ஆண்டு நிறுவினார். இந்த நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டார். இதன் மூலம் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையே கலைத்தொடர்பை ஏற்படுத்தியதுடன், இந்தியக் கலைகளின் சிறப்பை உலகத்திற்கு வெளிப் படுத்தினார்.

அமெரிக்க நாட்டிலுள்ள போஸ்டன் (Boston) கண்காட்சி சாலையின்  நுண்கலைப் பிரிவில் 1932 ஆம் ஆண்டு ‘கி.மு. 3000 ஆண்டுகளில் சிந்து வெளி வாழ்க்கை’ என்னும் தலைப்பில், திராவிட நாகரிகத்தின் சிறப்புப் பற்றி உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்று 1917 ஆம் ஆண்டு, போஸ்டன் நகரிலுள்ள கண்காட்சி சாலையின் (Museum of Fine Arts in Boston, U.S.A.)) இந்தியக் கலைப்பிரிவின் கலைக் காப்பாளராகப் பணி யாற்றினார். 1933 ஆம் ஆண்டு முதல் அங்குள்ள இஸ்லாமிய, இந்தியக் கலையாராய்ச்சித் துறைகளின் ( Fellow of the Research in Indian, Persian and Islamic art) ) தலைவராகப் பதவி ஏற்று சிறப்பாகச் செயற் பட்டார்.

ஒரு நாடு சுதந்திர நாடாக இருந்தால் தான், அந்நாட்டின் கலை, கலாச்சார பண்புகள் வளர்ச்சியுறும் என்பதை உணர்ந்த ஆனந்தக் குமாரசுவாமி, இலங்கை, இந்திய நாடுகளின் விடுதலையில் நாட்டங்கொண்டு செயற்பட்டார்.  மேலும், அமெரிக்காவின் தலை நகரமான வாஷிங்டனில் செயல்பட்டு வந்த, ‘இந்திய சுதந்திர  இயக்கத்தின் முதலாவது  தேசியக் கமிட்டியின் தலைவராக 1938 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இயக்கத்தின் மூலம் இந்திய தேசிய விடுதலைக்கு அமெரிக்க மக்களின் ஆதரவைத் தேடினார்.

‘கலாயோகி’ ஆனந்தக் குமார சுவாமி எழுதி உலகிற்கு அளித்துள்ள நூல்கள்: சிவ நடனம், இந்திய இந்தோனேஷியக் கலைகள், இந்திய சிற்பி, இந்தியத் தாதுப் படிமங்கள், கலையும் சுதேசியமும், பௌத்த விக்கிரக அமைப்பு இலக்கணம், கலையில் இயற்கையின் திரிபு, புத்தர் வடிவத்தின் ஆதித் தோற்றம், இராஜ புத்தான ஓவியங்கள் (Rajput Paintings), இந்தியக் கைப் பணியாளர்கள், வீட்டிற்குரிய கைப்பணிகளும் - கலைகளும், இந்தியத் தேசிய தத்துவ விளக்கம், இந்து மதமும் புத்த மதமும், இடைக்காலச் சிங்களக் கலைகள், இந்திய சிற்பங்கள், இலங்கைக் கலைகள், இலங்கையின் வெண்கல உருவங்கள் - முதலிய நூல்களை எழுதி அளித்துள்ளார்.

மேலும், இவர் வடமொழியிலிருந்து நந்திகேஸ்வரர் அபிநய தர்ப்பணம், சுக்கிர நீதி சாரம், விஷ்ணு தர்மோத்திரம், சில்ப ரத்தினம், அபிலாசார்த்த சிந்தாமணி முதலிய கலை நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

அவரது இறுதி, ஆங்கில நூல் ‘காலமும் முடிவுற்றிருத்தலும்’ (Time and Eternity) ஆகும்.

‘பௌத்தம்’ என்ற அவரது  நூல் 1951 ஆம் ஆண்டு பென்குவின் நிறுவன ஆங்கில வெளியீடாக  வந்து, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சிவ நடனம்’ என்னும் தமது நூலில், இந்தியா மனித நல்வாழ்வுக்கு அளித்திருப்பவை என்ன, இந்துக் கலை நோக்கு, சிவ நடனம், அழகு ஓர் அரசு, இந்திய சங்கீதம் போன்ற பதினான்கு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இந்த நூல் இந்தியாவில் எழுந்த மதங்களின் தத்துவங்களை விளக்குவதோடு, இந்தியக் கலைகளையும், அவற்றின் உட்பொருளையும் அழகுற விளக்குகிறது. மணிக்கோவை, திருமூல மந்திரம், உண்மை விளக்கம், சிவஞான சித்தியார், திருவருட்பயன் முதலிய தமிழ் நூல்களில் இருந்து மேற்கோள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிவநடனத்தின் மெய்விளக்கத்தை ஆழ்ந்த ஆய்வுத்திறத்துடன் உலக கலை ஆய்வாளர்களும் போற்றும் வண்ணம் படைத்துள்ளார்.

‘சிவ நடனம்’ இத்திருவுருவம் பக்தர்களுக்கும், பாமர மக்களுக்கும், அறிவியல் அறிஞர்களுக்கும், மெய் விளக்க அறிஞர்களுக்கும் பெருவியப்பையும், பேரீடு பாட்டையும் விளைத்து மகிழ்வித்து வருகின்றது.  காலமும் இடமும் கடந்து எல்லா நாடு, மொழி, சமயம் சார்ந்த மக்களாலும் போற்றத்தக்கதாய்த் திகழ்கின்றது என்பதை தமது நூலில் விளக்கியுள்ளார்.

“ஆனந்தக் குமார சுவாமி இக்காலத் தத்துவக் கட்டுரைகள் மூலம் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இறக்கும் நிலையை அடைந்துள்ள இந்து சமயப் பண்பாட்டை மீட்பதற்கு உதவியாக இருக்கின்றன” என இவரது சிவ நடனம் நூலை ஆங்கிலத்தில் வெளியிட்ட நியூயார்க் நூன்டே என்ற வெளியீட்டாளர் பெருமைப்படுத்தி யுள்ளார்.

‘இலங்கையின் வெண்கல உருவங்கள்’ நூலில் இலங்கையில் வளர்ந்து வந்த திராவிட சிற்பங்களின் சிறப்பியல்புகளை விரிவாக விளக்கியுள்ளார்.

‘இராசபுத்தான  ஓவியங்கள்’ எனும் தமது நூலில், இந்தியாவில் மொகலாயர் காலத்தில் காணப்பட்ட இந்து ஓவியங்கள் யாவும், இங்கு ஏற்பட்ட மொகலாய  ஓவியக்கலை மரபின் (கி.பி.1550-1800) ஆக்கத்தின் பயனாகவே தோன்றியன என்னும்  கொள்கை பத்தொன்பதாம்  நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் உலகில் பரவி இருந்தது.  இக்கொள்கையை மறுத்துப் பண்டைய இந்திய மரபு வழி வந்தனவே, இந்து ஓவியங்களை இராசபுத்தான மரபு ஓவியங்கள் என்றும், மொகலாய ஓவியக்கலை இலக்கணங்களில்லாத தனி இந்திய ஓவிய மரபில் ஏற்பட்டன என்பதை நிறுவி யுள்ளார்.

காந்தார புத்தர் திரு வடிவங்கள் கிரேக்கரது சிற்ப வடிவங்களைப் பின்பற்றி அமைக்கப்பட்டதென்ற கருத்தை கண்டித்துப் ‘புத்தர் வடிவத்தின் ஆதித் தோற்றம்’ என்னும் ஆதாரங்களுடன் நூலில் நிறுவி யுள்ளார்.

Òமக்கள் இன இயலைப் பொறுத்த வரையிலும், பண்பாட்டைப் பொறுத்த வரையிலும் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கமாகவே இலங்கை விளங்குகிறதுÓ என்பதை ‘ இந்திய இலங்கைக் கலைகள் - சிற்பங்கள்’ (Arts and Crafts of India Ceylon) என்னும் நூலின் மூலம் எடுத்துரைத்துள்ளார்.

“மத்திய கால ஐரோப்பியக் கலைகளில் ரோசாமலர் பெற்றுள்ள ஸ்தானத்தைப் போல தாமரை மலர் இந்தியக் கலைகளின் முக்கிய அங்கமாக மிளிர்கின்றது” எனத்  தமது கலை குறித்த ஆய்வில்  தெரிவித்தார்.

“மேனாட்டுச் சிற்பங்களைப் போல இந்திய சிற்பங்கள் உடலுறுப்புச் சாஸ்திர ( Human Anatomy) அமைவுகளுக்கேற்ப அங்க அமைவுகளையும், உறுதியான நரம்புகளையும், மனித அழகையும், முகபாவத்தையும் கொண்டிருக்கவில்லை. சாதாரண பொம்மைகளாகவே அவை இருக்கின்றன என்று கருதி வந்தவர்கள் மேல் நாட்டினர். மேலைத்தேசக் கலைப்படைப்புக்கள் மனிதனின்  சாதாரண உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய, முப்பரிமாணமுள்ள, தன்மை நவிற்சி (Realistic) படைப்புக்களே. அவைகளில் உயிர்த் துடிப்பையோ உயர்ந்த தத்துவங்களையோ, உள்ளத்தின் உணர்ச்சிகளைக் காட்டும் முகபாவங்களையோ காண முடிவதில்லை. கீழைத்தேசக் கலைகள் முக்கியமாக இந்தியக் கலைகள் குறியீட்டு எண்ணமும், அரூபத்தன்மையும் அலங்காரச் சிறப்பும், ஆத்ம உணர்ச்சி வெளிப்பாடும் கொண்ட கற்பிதக் (Idealistic) கலைப் படைப்புக்களே, இவைகளிற் காணப்படும் அங்க அமைப்பும், சாயலும், கால்களின் நிலையும், கைகளிற் காணும் முத்திரைகளும், ஆடை அணிகலன்களும், ஆயுதங்களும், பிறவும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட  அரும்பெரும் தத்துவங்களை விளக்குவனவே” - இவ்வுண்மைகளை மேலை நாட்டினருக்கு தமது ஆங்கில கட்டுரைகள், சொற் பொழிவுகள் மூலம் விளங்கவைத்து அவர்கள் மனதில் கொண்டிருந்த இந்தியக் கலைகள் குறித்த தவறான  கருத்துக்களை மாற்றியவர் ஆனந்தக் குமாரசுவாமி.

“கலை ஒரு மொழி, அதில் மாற்றங்கள் ஏற்படா விட்டால் அது இறந்த மொழியாகும் - பேச்சு மொழி போல உள்ளிருந்து வரும் உந்துதல்களால் தான் மாற்றமடையும். இந்தியக் கலையின் இலட்சியம் ஒரு காலத்திற்கு மாத்திரமல்ல, இந்திய எண்ணங்களின் சேர்க்கையானது (Synthesis) முழுமையானது! அது இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கொண்டது, நாம் பழையனவற்றை அழிப்பதில்லை, அதை வளப்படுத்துகிறோம் (Enrich). இந்தியக் கலையின் வரலாற்றில் பெயர்கள் கிடையாது.  இது நன்மைக்கே! வரலாற்று ஆசிரியர் தனது முழுக்கவனத்தையும் முன்னோர்களின் படைப்புக்களில் செலுத்துவர். ஆக்கியோன் பெயர் பற்றிக் கவலைப்படுவதில்லை” என இந்தியக் கலைகளின் பெருமையைச் சுட்டிக்காட்டு கிறார் ‘கலாயோகி’ ஆனந்தக் குமார சுவாமி.

தமது நூல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் ஈழத்துக் கலைகள் பற்றியும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள பிரிக்க முடியாத பிணைப்பையும், தமிழரின் தனிச் சிறப்பையும், சிற்பத்திறனையும், ஓவியங்களின் ஒப்பில்லாத தன்மையையும் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உணர்ச்சிப் பெருக்கோடு, நடுநிலை பிறழாத நிலையில் எடுத்துரைத்துள்ளார்.

“எந்தவித அடிவேரும் அற்ற மேலெழுந்த நிலையில் என்னவென்று குறிப்பிட முடியாத பழமைத் தொடர்பு முற்றாக அறுக்கப்பட்ட மனிதனை ஒரு தலைமுறை ஆங்கிலக் கல்வி உருவாக்கிவிடும்.  இவ்விதம் தோற்றுவிக்கப்படும் அறிவாளி கிழக்கிற்கோ, மேற்கிற்கோ, பழமைக்கோ, வருங்காலத்திற்கோ தேவைப்படாத வெறுத்து ஒதுக்கப்படுபவனாகவே காட்சியளிப்பான்” - என ஆனந்தக் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவின் கடந்த 3000 ஆண்டு வரலாற்றை நமது சமயம் மெய் விளக்க நூல், கலைகள் முதலிய வற்றை விளக்கும் வரலாற்றை ஆராயும் பொழுது இதிற் காணப்படுவதிலும் சிறந்த இலட்சியங்களை வேறெங்கும் காண முடியாது என்றும் முடிவுக்கு வந்துள்ளேன்” எனத் தமது ஆய்வின் முடிவில் ஆனந்தக் குமாரசுவாமி பதிவு செய்துள்ளார்.

“பெண் கல்வி மிக அவசியமாகும். பெண்களே ஒரு நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கூடிய வர்கள். இந்தியாவிலே பெண்களுக்கும், பாட்டாளி மக்களுக்கும் ஆரம்பக் கல்வி கூட இல்லை. அதனால் ஏற்படக்கூடிய தீமையிலும் பார்க்க மோசமானது இப்போது அளிக்கப்பட்டு வரும் உயர்தரக் கல்வி, அது பயனற்றதாகிவிட்டது. எம்மவர் விஞ்ஞானக் கல்வியையும், கைத்தொழிற் கல்வியையும் பெற விரும்புகின்றனர். இவை அவசியமானவையே ஆனால், இவையெல்லாம் நாட்டின் பண்பாடு என்னும் அத்திவாரத்திலிருந்து எழுப்பப்பட வேண்டும்” என பெண் கல்வி, விஞ்ஞானப் பூர்வமான கல்வி தேவை என்பதை வலியுறுத்தி உள்ளார்.

“சனங்களின் அபிப்பிராயத்துக்கு மாறாக அரசாங் கத்தை நெடுநாட்களுக்கு நடத்த முடியாது. மக்கள் திரண்டு விஷயங்களை எடுத்துச் சொன்னால் அதை அரசாங்கம் கேட்டே தீர வேண்டும். கல்வி சம்பந்தமாக ஒருவர் பேசுகையில், ஆங்கிலம் இலங்கையில் எல்லா வீடுகளிலும் பேசப்படும் காலம் விரைவில் வருமென்றார்.  அப்படி ஒரு காலம் வருமாயின் தமிழ்ச் சாதியே இல்லாமற் போய்விடும்” என இலங்கைத் தமிழ் மக்களுக்கு 04-06-1906 அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியின் உரையில் குறிப்பிட்டார்.

“அமராவதி நகரில் உள்ள சிலப்பதிகார காலத்துக் கல்லோவியம் எழில் மிக்க நரம்புகளுள்ள யாழின் உருவத்தை நமக்குக் காட்டுகிறது. இவ்வோவியத்தின் நிழற்படத்தினைக் கண்ணுற்ற ஆனந்தக் குமார சுவாமி என்னும் ஈழநாட்டுப் பேரறிஞர் பழமையான இக்கருவி சிலப்பதிகாரத்தின் காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும் தமிழ் நாட்டிலே வழங்கி வந்தது என்பதையும் மிகப்பழமையான இசை மரபு ஒன்று தமிழகத்தில் இருந்தது என்பதையும் உலகிலுள்ள பேரறிஞர்கட்கு வெளியிட்டார்” - என சுவாமி விபுலானந்த அடிகள் தமது ‘யாழ் நூலின்’ ‘பேரி யாழ்‘ பகுதியில் பதிவு செய்துள்ளார்.

‘சிவ நடனம்’ எனும் நூலின் அணிந்துரையில் பிரான்சு நாட்டு அறிஞர் றோமேயின்றோலண்டு, “கவிஞர் இரவீந்தரநாதர் போல ஆனந்தக் குமாரசுவாமி அவர்களும் ஐரோப்பியப் பண்பாட்டிலும், இந்தியப் பண்பாட்டிலும் ஒற்றுமை காண விழைந்தவர்” - என புகழ்ந்துரைத்துள்ளார்.

“டாக்டர் ஆனந்தக் குமார சுவாமி எங்கள் உரிமை களின் உயர்ந்த  இலட்சியத்தை எடுத்து அறிவுறுத்தியவர். இந்தியக் கலையின் சிறந்த அழகினை உலகிற்கு விளக்கிய ரிஷியாவார்” என இந்தியாவின் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் பாராட்டியுள்ளார்.

எரிக்கில் (Eric Hill)) என்ற மேல்நாட்டு அறிஞர் தமது சுயசரிதையில், “வில்லியம் றொத்தென்ஸ்ரீன் (William Rothenstin) என்பவர் என்னை ஒருவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவரது செல்வாக்கும், தாக்கமும் என்னில் நன்றாகப் பதிந்துள்ளன. சிலர் வாழ்க்கையின் யதார்த்தங்களையும், சமயத்தையும் பற்றி எழுதினார்கள். சிலர் சிறந்த தெளிவான ஆங்கிலம் எழுதினார்கள். சிலர் ஹாஸ்யமாக எழுதினார்கள். வேறு சிலர் தத்துவத்தினையும், பாலியலையும் சித்தரிக்கும் சிற்பங்கள் பற்றி எழுதினார்கள்.  சிலர் அன்புள்ளம் படைத்தவராகக் காணப்பட்டனர். ஆனால், இவை எல்லாம் சேர்ந்த ஒருவராக கலாயோகி ஆனந்தக் குமார சுவாமியைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை. தத்துவம், சமயம், கலை, விஞ்ஞானம் எல்லாம் ஒருங்கே அமையும்படி எழுதிய வேறு ஒருவரை நான் காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

“நான் டாக்டர் ஆனந்தக் குமார சுவாமியின் நூல்களைப் பல ஆண்டுகளாகக் கற்று வந்தேன். அவரைப் போஸ்டன் நகரில் 1946 ஆம் ஆண்டில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இந்திய மறுமலர்ச்சிக்கு மாத்திரமின்றி, உலகத்தில் புதிய மறுமலர்ச்சிக்கும் வழிகோலியவர்களுள் அவருமொருவராவர். இக்காலத்து நிலையற்ற வேடங்களில் ஏமாற்றமடையும் எங்கள் மாணவர்கள், உண்மை உணர்ச்சியைப் பெறுவதற்கு, அவரின் நூல்களைக் கற்க வேண்டுமென  நான் விரும்புகிறேன்” என இந்திய தத்துவ மேதையும், மேனாள் குடியரசுத் தலைவருமான டாக்டர். ச. இராதாகிருஷ்ணன் வியந்து பாராட்டியுள்ளார்.

“அழகை இறைவனாகக் கண்டவருள் ஆனந்தக் குமாரசுவாமி முதன்மை பெற்றவர். அவர் ஒரு பெரியார். மற்றையோர் காணாத பலவற்றைக் கண்டவர்” என மூதறிஞர் இராஜாஜி சிறப்பித்துக் கூறியுள்ளார்.

“தமிழ் நாட்டில் தமிழ் சோர்ந்திருந்த போது, யாழ்ப்பாணம் தமிழைப் போற்றி வளர்த்தது. நம் நாட்டிலுள்ள சிவாலயங்களில் நாம் நடராஐ மூர்த்தியைத் தொழுது வந்த போதிலும், அந்த நடராஜர் எவ்வாறு, எவ்வித முறையில் நடனமாடுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ளாதிருந்தனர்.  யாழ்ப்பாணத்து அருங் கலை வல்லுநரான ஆனந்தக் குமாரசுவாமியின் பலனாகவே நாம் நடராஜ நடனத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடிந்தது” என சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் புகழ்ந்துரைத் துள்ளார்.

யாழ்ப்பாணத்து தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ‘கலாயோகி’ ஆனந்தக் குமாரசுவாமிக்கு ‘வித்தியா விநோதன்’ என்னும் பட்டம் யாழ்ப்பாணம் வண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் 10.06.1906 அன்று வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம், ‘கலாயோகி’ ஆனந்தக் குமார சுவாமி நினைவாக, அவரது திருவுருவம் பொறித்த தபால் முத்திரை ஒன்றை 27.11.1971 அன்று வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. மேலும் கொழும்பு நகரிலுள்ள ஒரு முக்கிய வீதிக்கு (Green Path) ஆனந்தக் குமார சுவாமி மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடுதி ஒன்றுக்கு ஆனந்தக் குமார சுவாமி பெயர் சூட்டப்பட்டது.

ஆனந்தக் குமாரசுவாமி கவின்கலை விருது, தமிழ்நாட்டிலுள்ள திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் (எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்) தமிழ் மொழி வளர்ச்சிக்கென  நிறுவப்பட்டுள்ள ‘தமிழ்ப் பேராயம்’ மூலம் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். சிற்பம், ஓவியம் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான சிறந்த நூல்களில் ஒன்றைத் தேர்வு செய்து வழங்கப்படுகிறது.  தகுதி வாய்ந்த நூல்கள் இல்லாத போது கவின்கலை, தமிழிசை போன்ற துறைகளில் பங்களிப்புச் செய்தவர்களுக்கு விருதும்,  ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பரிசுத் தொகையையும், பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்படுகிறது.

விஞ்ஞானக் கலாநிதியாகவும், தேசியத் தந்தை யாகவும் திகழ்ந்து கலைஞானியாகவும், தத்துவஞானி யாகவும் மிளிர்ந்தவர் ஆனந்தக் குமார சுவாமி, இவர் ஈழத்திற்கு மாத்திரமின்றி உலகிற்கே ஒரு திலகமாகத் திகழ்ந்தார்.

அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் நாள், தமது எழுபத்தொன்றாவது வயதில் இயற்கை எய்தினார்.

ஆனந்தக் குமார சுவாமி உலகப் பெருங்கலைஞர். உலகுள்ளளவும் அவரின் கலையுள்ளம் உவந்து போற்றப்படும்.

Pin It