பிற துறை ஆராய்ச்சிகளைப்போல் தமிழிலும் உயராய்வுகள் இருக்கின்றன என்றும் அதற்கான உயராய்வு நிறுவனங்கள் இருக்கின்றன என்பதும் தெரியாத நிலைதான் இன்றைய தலைமுறைகளின் நிலை. தமிழ் நாட்டுல தமிழ் தானே பேசுறோம், தமிழ் ஆராய்ச்சி எல்லாம் செய்வாங்களா எனும் வினாதான் பொதுப்புத்தியில் பதிவாகிறது. தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழர் பண்பாட்டினையும் அறியாததது தான் இதற்குக் காரணியமாகிறது. இதைப் புரிய வைக்க வேண்டியது அடிப்படைக் கல்விச்சூழல்தான்.

“வீழ்வது நாமாக இருப்பினும்

            வாழ்வது தமிழாக இருக்கட்டும்”

“என்மொழி என்னினம் என்னாடு நலிகையில்

எதனையும் பெரிதென எண்ணமாட்டேன்”

“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

“சாம் போதும் தமிழ் படித்துச்

                சாதல் வேண்டும் - எந்தன்

சாம்பலதும் தமிழ் மணம் வேதல் வேண்டும்”

என்று மொழியைத்  தன்  உயிரினும் மேலாகக்  காதல் கொண்ட தமிழ்க் கவிஞர்கள் கொண்ட தமிழ்நாட்டில்  காலமெல்லாம் மொழிக்கான பனிப்போர் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் அவலத்திற்குரியது.

வடமொழியிலிருந்து தமிழைக் காப்பது, இந்தித் திணிப்பிலிருந்து தமிழைக் காப்பது என்பது தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொரு தமிழனுக்கும் குருதியில் கலந்த ஒரு  மொழி உணர்வாக இருப்பதனால் மொழிக்கான பணிப்போர் தொடர்ந்திருக்கிறது. தாய்மொழிக்கு

ஒரு தாழ்வு எனில். மொழியைக் காக்கவும், மொழியை  மீட்கவும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து களம்பட வேண்டும்.

எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்பு பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு எனும் இரட்டை வழக்கு மொழியைப் பெற்றிருப்பது,  இருமொழிக் கொள்கை கொண்ட நாடு தமிழ்நாடு எனத்  தமிழ்மொழிக்கெனத் தனிச் சிறப்புகள்  பல உண்டு.

“மொழி யில்லையேல்  இனமில்லை

இனமில்லையேல் மொழியும் இல்லை”

ஆகையால் தான் காலந்தோறும் தமிழ் மொழிக் காப்பாளர்கள் இருந்துள்ளனர்.  ஒரு தலைமுறையிலிருந்து மொழியைப் பாதுகாத்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச்செல்வது மொழிதான். அத்தகைய மொழிக்கு ஒரு சிறப்பு  செவ்வியல்  மொழி என்ற ஏற்பிசைவு.

நம்முடைய தமிழ்மொழிக்கென  செவ்வியல்  அங்கீகாரத்தை நடுவண் அரசு 12.10.2004-இல் வெளியிட்டபொழுது தமிழர்கள் அனைவரும் தமிழன்னைக்கு மகுடம் சூட்டப்பட்டதாக மகிழ்ந்து கொண்டாடினர். (அரசாணை எண்.IV. 14014/7/2004NI-11) செவ்வியல் மொழி ஏற்பிசைவை நடுவண்  அரசு 2004-இல் கொடுத்தாலும் அதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே 1903-இல் பரிதிமாற்கலைஞர் “வடமொழி. இலத்தீன், கிரீக்கு போன்று தமிழ் மொழியையும், உயர்தனிச் செம்மொழியாகுமாறு சிறிது காட்டுவோம்  “திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழி யாப்பு பெற்று விளங்கும் தமிழ்” எனத் தமிழ் மொழியின் வரலாறு (ப.71) என்றும் தமிழ் மொழியின் வரலாறு என்ற தமது நூலில் தமிழின் தகுதி பற்றி அன்றே குரல் கொடுத்திருக்கிறார். 1918இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சைவ சித்தாந்த மகா சமாஜம் எனும் மாநாட்டில் இதை ஒரு தீர்மானமாக முன்மொழிந்து நிறைவேற்றினர்..

1856-இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய திராவிட மொழிகளின் தந்தை என அழைக்கப் படும்  கால்டுவெல் தான் முதன்முதலில் தமிழ்மொழி  தனித்தமிழ், திராவிடமொழிகளுக்கு மூலம், திராவிட மொழி ஆரியத்திற்கு எதிரானது, திராவிடர் என்பதே  எழுச்சியின்  வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று திராவிடர் என்பது ஆந்திரா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு திராவிட நாடுகளாக இருக்கும்போது திராவிடர் என்பது  ஒட்டுமொத்த சொல் சரி. ஆனால்  மொழியின் அடிப்படையில் ஆந்திரம், (தெலுங்கு), கர்நாடகம், (கன்னடம்) கேரளம் (மலையாளம்) என மக்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளி நாம் மட்டும் ஏன் திராவிடர் எனக் குறிப்பிடவேண்டும் என்பதன் அடிப்படையில்தான் திராவிடர் எனும் சொல்லை மறுத்து தமிழ் மொழி பேசுவோர் “தமிழர்” என்றாயிற்று. மொழியியலறிஞர்கள், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் போன்றோரும் திராவிடர் எப்படி தமிழர் ஆனார் என்பதைப் பற்றி விரிவாக ஆராய்ந்து அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆங்கிலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு, செர்மன் கி.பி. எட்டாம் நூற்றாண்டு, ஸ்பானிஸ் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு,  இத்தாலியன் கி.பி. பத்தாம் நூற்றாண்டு, ரஷ்யன் கி.பி. பத்தாம் நூற்றாண்டு. கன்னடத்தில் உள்ள பழமையான இலக்கியமாக கவிராஜ மர்க கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு, நன்னய்யாவின் மகாபாரதம் தெலுங்கு பதினொன்றாம் நூற்றாண்டு, மலையாளத்தி லுள்ள இராமசரிதம் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு, மராட்டி கி.பி. 7 அல்லது எட்டாம் நூற்றாண்டு, அஸ்ஸாமிலுள்ள “காமரூப கார்ய (Kamarupa carya)  8லிருந்து 12ஆம் நூற்றாண்டு, வங்காளம்  கி.பி. 12ஆம் நூற்றாண்டு. ஆனால் இதற்கெல்லாம் பல நூற்றாண்டு களுக்கு முன்பே தோன்றி பேச்சு வழக்கிலும் செம்மை யாகத் திகழும் முதன்மையான மொழி தமிழும் சீனமும் கிரேக்கமும் ஆகும். ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்திருந்தாலும் பேச்சு வழக்கு மொழிகள் இறந்த மொழிகளாகவே காணப்படுகின்றன.

செவ்வியல் மொழி (Classical languages)  என்ற கருத்து  (Concept) முதன் முதலாகக் கருப்பெற்றது  ஐரோப்பாவில் தான். Classicus - என்ற இலத்தீன் வேர்ச் சொல்லைக் கொண்டது இந்த சொல்லாட்சி.  இதன்  பொருள்  “உச்சநிலைத் தரம்” கொண்டது என்பதாகும்.

தொன்மை (Antiquity), ஒத்திசைவு (Harmony) தெளிவு (clarity), தன்னடக்கம் (Restraint) கண்ணியம் (Serenity), இலட்சியம் (Idealism), பொதுமை (Universality), பகுத்தறிவு (Reason), ஒழுங்கு (Order), கண் ணோட்டம் (Humaneness) போன்ற கூறுபாடுகளின் தொகுப்புதான் செவ்வியல் தன்மை எனக் கருதப்படுகிறது.

தலைசிறந்த இந்தியவியல் நிபுணர் டாக்டர்  சுனிதி குமார் சாட்டர்ஜி, திராவிட பங்களிப்பு பற்றி எழுதிய   சர் ஜான் மார்ஷல், தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும் குறித்துப் பேசிய தனிநாயக அடிகளார் டாக்டர் வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்றாய்வறிஞர்கள், பரிதிமாற்கலைஞர், பேராசிரியர் எ.கே. ராமானுஜம்  போன்ற இந்திய அறிஞர்கள் பேராசிரியர் கமில் சுவலபில் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் தமிழ் செவ்வியல் மொழி என்பதற்கான தன்மைகளை  எழுதியும் பேசியும் உள்ளனர்.

“தமிழ்  இலக்கியத்தின் நுட்பம், ஆழம், பொதுமை ஆகியன  அதை உலகின் செம்மாந்த செவ்வியல் மரபும், செவ்வியல் இலக்கியமும் கொண்ட மொழியாக நிற்கத் துணைசெய்கின்றன.  வடமொழியினின்றும் மற்ற இந்திய மொழிகளினின்றும்  மிகவும் வேறுபட்ட இந்திய நுண்ணுணர்வுகளைத் தமிழ் இலக்கியம் பிரதிபலிக் கின்றது. நவீன இந்தோ, ஆரிய மொழிகளுக்கு வட மொழி பிறப்பிடம் என்பது போல, நவீன தமிழுக்கும் மலையாளத்திற்கும் செவ்வியல் தமிழ் பிறப்பிடமாகும்” என அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் (University of California) பெர்க்கலி (Barkelely) வளாகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும்     டாக்டர் ஜார்ஜ் எல் ஹார்ட், (statement on the statusof Tamil Classical Language) என்ற தமது அறிக்கையில் தமிழ் மொழியின் செவ்வியல் தகுதிக்கான அடிப்படை களை விரிவாக எடுத்துரைத்துள்ளார். காலந்நோறும் புலவர்கள் தமிழும்  வடமொழியும் சமமானவை என்று தான் பாடியிருக்கிறார்கள்.

இந்திய அரசு வடமொழி, அரேபியம், பாரசீகம் ஆகிய மொழிகளைக் கொண்ட செவ்வியல் மொழிகள்/பண்டை மொழிகள் பட்டியலிலும் நடுவண் அரசின் அறிக்கையிலும் தமிழ் செவ்வியல் மொழி எனும் தகுதியுடன் வடமொழியோடு இடம் பெறும்பொழுது மொழிக்கானப் பனிப்போருக்கு முடிவு கட்டப்படுகிறது.

இப்படி காலந்தோறும் நம் தாய்மொழியைக் காக்க வடமொழியுடனும் இந்தியுடனும் போராட வேண்டிய திருக்கிறது. வடமொழி ஈராயிரம் ஆண்டு பனிப்போர் என்றால் இந்தியும் ஆங்கிலமும்   தமிழ் மொழி இருக்கும் இடத்தில் நான், நீ என முந்திக்கொண்டிருப்பதுடன் நாமும் அதற்கு ஏதுவாய் தமிழன்னையை அடகு வைத்துவிட்டோம் என்றுதான் சொல்ல முடியும்.

பல தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் போராடிப் பெற்ற தமிழ்மொழியைக் காக்க முற்படும் போது செம்மொழித்தகுதி எனத் தமிழுக்கு மகுடம்  சூட்டியது இந்திய அரசு.

தமிழே அனைத்து மொழிகளுக்கும் முதன்மை மொழி, மூத்தமொழி, மூலமொழி, வேர்மொழி, இப்படிப்பட்ட மொழி என்றும் இளமை, தனிமை, தொன்மை, வளமை, செழுமையோடுத் திகழ்கிறது. என்றென்றும் கன்னித் தமிழாக இருக்கும் தமிழ் மொழியை இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் ‘செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்’ என்னும் பெயரில் செயல்பட்டு வந்ததை 2008-இல்  சென்னைக்கு மாற்றப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன கட்டிடத்துக்கென அரசு பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கியது. இருந்தும் இன்றுவரை வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது. மாற்றான் தாய் பிள்ளைபோன்று.

தமிழாய்ந்த தமிழறிஞர்களின் துணையைக் கொண்டு இதுவரை எத்தனையோ அரிய சங்க இலக்கிய, செவ்வியல் இலக்கிய நூல்களை  வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கென கருத்தரங்கம், பயிலரங்கம், திட்டப்பணி, மேற்கொள்வதற்கும் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை ஆய்வு செய்துவரும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியும் செவ்வியல் ஆய்வு மேம்பட நிதி நல்கி ஊக்குவிக்கிறது. ஆராய்ச்சி மற்றும் நிதிநல்கை நிறுவன மாகவும் செயல்படுகிறது.  2013இல்  செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட மலையாளம் இன்று கேரளாவில் பெற்றிருக்கும் நிதி உதவிகளைவிட நம்  தமிழ்மொழிக் கென தமிழ்நாடு பெறவில்லை. இதற்கு யாரை குறை சொல்வது.

வடமொழிக்கென ஒதுக்கும் நிதிநல்கைகூட தமிழுக்கு ஒதுக்குவதில்லை.  நிலையான தமிழாய்ந்த அறிஞரை இயக்குநராக, பணிபுரிபவர்களுக்கெனப் பணிப்பாதுகாப்பு இதுபோன்ற இல்லைகள், இல்லை யென்பது எல்லாம் பெரும் குற்றச்சாட்டாக இருந்தாலும் அதையெல்லாம்  புறந்தள்ளி  இனி வரும் காலங்களில் இவையெல்லாம் நிரந்தரமாக்கி தமிழ்மொழி மற்றும் செவ்வியல்  இலக்கியங்களை ஆய்வு செய்வோருக்கான நிதியைக்  கூடுதலாக வரப்பெற்று ஆக்கம் பெறுவதற்கு  வழிவகை செய்யலாம்.

ஒரு மொழிக்கு வரும் இழப்பும், தொய்வும், புறக் கணிக்கும் நிலையும் ஏற்பட்டால் அது மொழியைப் புறந்தள்ளுவது அல்ல. அம்மொழி பேசும் இனத்தின் மீது சாற்றுவது.

பல்வேறு அரசியல்  சார்ந்த மொழிசார்ந்த இனம் சார்ந்த காழ்ப்புணர்வுகள் இருப்பினும் அதையெல்லாம் போக்கி மொழி நலன் கருதி,  ஆய்வுச் செழுமை கருதி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தனக்கேயுரிய தன்னாட்சியுடன் திகழச் செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமையோடு நடுவணரசின் செயல்பாட்டுக்குக் கொண்டு செல்லவேண்டும்.

எப்படி பிறமொழி சொற்களைக் கலந்து பேசும் போது இதுதான் தமிழ்மொழி எனும் சூழல் உருவாகுமோ அதேபோல தனித்தியங்கக் கூடிய வல்லமை பெற்ற இந்நிறுவனம்  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பது என்பது  ஒரு நிறுவனத்திற்குச் செய்வது அல்ல மொழிக்குச் செய்யும் துரோகம் ஆகும்.

இதை அரசியலோடு ஒப்பிட்டு பார்க்காமல் பிறரைக் குறைகூறாமல் நம்மை நாமே  எப்படி சரிசெய்வது என்பதால் தமிழர்கள் முனைப்புடன் இருக்க வேண்டும். இது மொழிக்கானது அல்ல. ஒட்டு மொத்த தமிழர்களுக்கானது என்ற உணர்வு வரவேண்டும்.

முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் மாணவர் களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) வழங்கும் இளநிலை ஆராய்ச்சியாளர் (JRF) முதுகலை ஆராய்ச்சியாளர் (SRF)க்கான உதவித்தொகை  இது மாணவரின் பொதுஅறிவு கற்றல், கற்பித்தல், ஆய்வு மேம்பாடு மற்றும் முதன்மைப்பாலித்திலான ஆழம் இவற்றின் அடிப்படையில் அவன் பெறும் மதிப்பெண்ணிற்கேற்ப வழங்கப்படுகிறது. ராஜீவ் காந்தி (RAJIV GANDHI FELLOWSHIP) உதவித்தொகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக வழங்கப்பட்டது. இப்போது மிகவும் பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கும்  வழங்கப் படுகிறது. மௌலானா ஆசாத் உதவித்தொகை சிறுபான்மையினத்தைச் சார்ந்த மாணவர்களுக்காக வழங்கப்படுவது. இது  இருக்க  இன்னும்  எத்தனையோ அறக்கட்டளைகள், கல்வி சார்ந்த நிறுவனங்கள் மாணவர்களின் கல்வித் தகுதி, மதிப்பெண் மற்றும் பொருளாதார நிலை இவற்றைக் கருத்தில் கொண்டு உதவித் தொகைகள் வழங்குகின்றன.

இவை அனைத்தும் இருக்க செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செவ்வியல் இலக்கியங்களை ஆய்வு செய்வோருக்கென உதவித்தொகை வழங்குகிறது. இது ஆய்வாளர்களின் பொருளாதார நெருக்கடிகளைப் போக்குவதற்குப் பேருதவியாக இருக்கிறது. இப்படி பல்வேறு துறைகளோடு செவ்வியல் இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் ஒரு தன்னாட்சி நிறுவனம் அனைத்து அதிகாரங்களையும் தன்னுள் கொண்டுள்ள நிறுவனம், இந்நிறுவனத்திற்குப் பிறகு தோற்றுவிக்கப் பட்ட (2009) திருவாரூர் மத்திய  பல்கலைக்கழகத்துடன் இணைப்பது என்பது நிறுவனத்தின் தரத்தைத் தாழ்த்தும் முயற்சியாகும். செம்மொழி எனும் ஏற்பிசைவு பெற்ற பின் தான் கல்லூரிகளில் படிக்கும் பிற துறைசார்ந்த மாணவர்கள் பகுதிநேரப் பிரிவில் ‘செம்மொழித்தமிழ்’ எனும் பாடத்தை முடித்துத் தேர்ச்சிபெறவேண்டும் எனும் நிலைப்பாடு வந்தது. அது  அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்மொழியைப்  பற்றி அறிய நல்வாய்ப்பாக அமைந்தது.

ஒரு நிதி நல்கை நிறுவனத்தை ஒரு பல்கலைக் கழகத்துடன் இணைப்பது என்பது அதன் ஆற்றல் மிகு  செயல்பாடுகளை முடக்குவதற்குரிய செயலாகும். அதைவிடுத்து இந்நிறுவனத்தைச் செழுமையாக

ஆக்கச் செயல்பாடுகளை நடுவணரசு கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்பதுதான் இன்றைய தமிழுணர்வாளர்களின் வேண்டுகோளாகும்.

Pin It