ஈழத்தில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த போர்க் கொலைக் குற்றவாளி இராஜபக்சே என்பது உலகறிந்த செய்தி. ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்டப் போரில், இலங்கைக்கு ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி போன்றவைகளை இந்தியா அளித்தது என்று இலங்கை அமைச்சர்கள், அதிகாரிகள் சொன்னபோது, அதற்கு இந்தியா மறுப்புத் தெரிவிக்கவில்லை.

இலங்கைக்கு எதிரான மிகச் சாதாரணமான ஒரு தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அவையில் அமெரிக்கா கொண்டு வந்த போது, அந்தத் தீர்மானத்தில், இலங்கைக்குச் சாதகமான திருத்தம் ஒன்றைச் செய்த பின்னர், தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. இப்பொழுது இலங்கையின் விமானப்படை இராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு, அதிநவீன ஓட்டுனர் பயிற்சியும், தொழில்நுட்பப் பயிற்சியும் தாம்பரத்தில் 30 நாள்கள் அளிக்க ஏற்பாடாகிக் கடந்த 30ஆம் தேதி அவர்கள் பயிற்சிக்காக வந்துள்ளனர்.

தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை இராணுவத்தினருக்குத் தமிழ்நாட்டில் பயிற்சியா என்று தமிழகத் தலைவர்களும், மக்களும் கொந்தளித்த பின்னர், அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றாமல், பெங்களூருக்குப் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளது இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம்.

இலங்கையும் இந்தியாவும் தெற்காசிய உறுப்பு நாடுகளுள், உறுப்பு நாடுகளாக இருப்பதனால், இப்படி இராணுவப் பயிற்சி அளிப்பது இயல்பு என்றும், ஒப்பந்தம் என்றும் சொல்கிறது மத்திய அரசு.

இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறித்து 20.06.2012 அன்று ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற மாநாட்டில், தமிழக மீனவர்களைக் கொள்ளைக்காரர்கள் என்றும், தமிழக(இந்திய) மீனவர்கள் மீது சர்வதேசக் கடல் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இராஜபக்சே பேசியிருக்கிறார்.

அதாவது சர்வதேசக் கடல் சட்டப்படி எல்லை தாண்டி மீன்பிடித்தால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்பது இராஜபக்சே நோக்கம். அங்கே அதே மாநாட்டில், கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இராஜபக்சேவின் பேச்சுக்கு, இந்திய அரசு சார்பில் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் நாடு திரும்பி விட்டார்.

அண்மையில் அதிபர் இராஜபக்சே உத்தரவின் பேரில்தான் 45,000 தமிழர்களைக் கொன்று குவித்தோம் என்று இலங்கை இராணுவ தளபதி ஒருவர் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் 2011ஆம் ஆண்டறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதில் ஈழத்தமிழர்கள் வாடிக் கொண்டிருக்கும் 64 முகாம்களில் சென்று சேகரித்த, தகவல்களின் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் போருக்குப் பின், முகாம்களில் தஞ்சம் அடைந்த தமிழர்களில் 15,780 பேர்கள் காணவில்லை. இதில் 751 பேர்கள் பெண்கள். இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், இளம் பெண்கள். இவர்கள் சிறையில் இருக்கிறார்களா அல்லது கொலை செய்யப்பட்டு விட்டார்களா என்பது இன்னமும் தெரியவில்லை என்கிறது அறிக்கை.

இப்படி இலங்கைச் சிங்கள இராஜபக்சே அரசு தொடர்ந்து தமிழர்களைக் கொன்று குவித்து, முற்றாக அழித்துவிடத் திட்டமிட்டு நடத்தப்படும் சிங்களப் பேரினவாதச் சதிச் செயல்கள், வெளிப்படையாக, உலக அளவில் அம்பலப்பட்டுக் கொண்டு இருந்தாலும், இந்தியா மட்டும் இலங்கையுடன் தழுவிக் கொண்டு இருப்பது வேதனையின் உச்சமாக இருக்கிறது.

அண்மையில் இலங்கையில் உள்ள இந்திய அரசுக்குச் சொந்தமான “இலங்கை - இந்திய எண்ணெய் நிறுவனத்”தை, இலங்கை அரசு எடுத்துக்கொள்ள நடைபெற்ற முயற்சியை அறிந்து இந்தியப் பிரதிநிதி இலங்கை சென்று வந்ததை நாடு அறியும்.

இலங்கை இந்தியாவை மதிக்கவில்லை. சீனாவின் பின்பலத்தில் இருக்கிறது. நாளைச் சீன ஆதிக்கத்தில் இலங்கை போனால் விளைவு என்னாகும் என்பதை இந்திய அரசு சிந்திக்கவில்லை.

சார்க் உறுப்பு நாடு என்றும், இலங்கை இறையாண்மை என்றும் சொல்லிக் கொண்டு, போர்க்குற்ற நாடான இலங்கைக்குப் போர்ப்பயிற்சியை இன்று இந்தியா அளிக்கின்றது.

சீனாவின் நண்பன் அப்பயிற்சியின் பலனை நாளைத் திருப்பிக் காட்டமாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இலங்கைக்கு இந்தியா இனி எந்தப் பயிற்சியும், எங்கும் அளிக்கக் கூடாது.

Pin It