பூமிப் பந்தில் காற்று நிரம்பியிருப்பது போலவே கதைகளும் நிரம்பித் ததும்புகின்றன. நிகழ்வுகளைச் செய்தியாக்குவதற்கும், கதைகளாக்குவதற்கும் இடையில் ஊடாடிக் கிடக்கிறது படைப்பின் ரகசியம். சொல்லப்படும் முறையால் இறந்து போன சம்பவங்கள் மனிதர்களாக உயிர் பெற்று உலாவுகின்றன. பள்ளிக்கூடத்திற்குத் தாமதமாக வரும் பிள்ளைகளைக் காரணம் கேட்டால் ஆயிரம் கதைகளைச் சொல்லி விடுவார்கள்.

ஒரு வாய்ப்பைத் தவறவிட்டவனிடம் எத்தனையோ கதைகள் சொல்லப்படாமல் இருக்கும். வெட்டி எடுக்கப்படும் மலைகள் மௌனத்தின் வழியாகப் பல கதைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றன. உணவு உண்ண வரும் காகத்தின் மரபணுவில் நூற்றாண்டுக் கதைகள் ஒட்டிக் கிடக்கின்றன. இப்படி எல்லா இடங்களில் கதைகள் நீக்கமற நிறைந்திருந்தாலும் அவற்றை எடுத்துச் சொல்லும் முறையில் எழுத்தாளன் வெற்றி பெறுகிறான்.

அந்த வகையில் யாரும் சிந்திக்கத் துணியாத பொருள் குறித்த புதுமை நாவலாக ‘கல்லறை’யை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் எம்.எம். தீன். வாழ்வு குறித்தும், கொண்டாட்டம் குறித்தும் ஆர்வமாகப் பேசும் மனிதன் மரணம் குறித்தும், கல்லறை குறித்தும் மௌனம் காக்கிறான். சாகாமல் எப்போதும் வாழ்வதற்கான வழிமுறைகளைத் தேடிக் கொண்டிருக்கும் மனித மனம் கல்லறையை எப்படி எதிர்கொள்ளும்? தன் வாழ்வை நீட்டிக்கும் விதமாக தன் பிள்ளைகளின் பிள்ளையாக அதாவது பெயரனாகவோ அல்லது பெயர்த்தியாகவோ பிறப்பேன் என்று சொல்பவர்கள் உலகம் முழுக்க உண்டு.

mm dheenமன்னர்களின் கோட்டைக்குள் புதைந்து கிடக்கும் செய்திகளைப் போலக் கல்லறைகளிலும் வரலாறுகள் புதைந்து கொண்டு வெளியில் வரத் துடிக்கின்றன. ஆட்சியாளர்களின் கோட்டைக்குத் தரும் முக்கியத்துவத்தைக் கல்லறைக்குக் கொடுக்க வேண்டி அறிவுரை சொல்கிறது இந்தப் படைப்பு. தொல்பொருள் ஆராய்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் தமிழகத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்த தாழிகளான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. தற்போது தமிழர் நாகரிகத்தின் சாட்சியாக ‘கீழடி’யில் வாழ்விடத்திற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன.

ஆனால் தொடக்கத்தில், வரலாறு என்பது அடக்கம் செய்த இடத்திலிருந்து தொடங்கியது போல இந்தப் புதினமும் தொடங்குகிறது. ‘ஆகோள்’ நாவலில் எழுத்தாளர் கபிலன் ‘விர் ஜடாயு’ என்ற அதிநவீன கற்பனைக் கண்டுபிடிப்புத் தொடர்வண்டி சுடுகாட்டில் போய் நிற்பதாக எழுதியிருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ஐம்பெருங்காப்பியத்தில் ஒன்றான சீவகசிந்தாமணியில் கதைத்தலைவன் சீவகன் சுடுகாட்டில் பிறப்பதாகக் காப்பியம் அமைக்கப்பட்டிருக்கும் போது உயிர் நீத்தோர் உறைவிடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டுக் கல்லறைகள் மீது உலகளாவிய பார்வையைத் தந்திருக்கிறார் எழுத்தாளர். அமெரிக்கக் கல்லறைகளின் தோற்றம், பராமரிப்பு என்று பலவற்றையும் சொல்லித் தமிழ்நாட்டின் நிலையை ஒப்பிட்டுக் காட்டுகிறார். இந்தக் கதைக்கருவைத் தேர்ந்தெடுப்பதற்கும், இந்தப் பெயரைச் சூட்டுவதற்கும் ஆசிரியர் சொல்லும் காரணம் பாராட்டுதற்குரியது. ‘‘கல்லறை என்பது மனித வாழ்வியலின் கடைசி படிம நிறுத்துதல் என்று சொல்லலாம். அவன் வாழ்ந்து மறைந்தான் என்பதைச் சொல்லும் அடையாளக் கீற்று அது. இது மட்டும்தானா கல்லறை, இல்லை என்றே தோன்றுகிறது. மானுடத்தின் மாண்பினை அல்லது அவன் வாழ்ந்த வாழ்வின் ஒரு சின்ன அவசியத்தை, பெருமையை, சிறப்பை வெளிப்படுத்தும் காரியம் கல்லறைக்குள் ஒளிந்திருக்கிறது.

அந்த நபர் இன்னும் பெரிய செயல்கள் புரிந்திருந்தால், அது உயரிய மானுடச் சின்னமாக மாறி விடுகிறது. மேலும் உயர்ந்து நின்றவர்களின் அடக்க இடம் சமாதி, கல்லறை அவரது புகழ் சொல்லும் மண்டபமாக, கோயிலாக மாறியும் விடுகிறது. கல்லறையின் பிறப்பு என்பது ஒரு மனிதனின் இறப்பு – இது எவ்வளவு பெரிய வாழ்வியல் முரண். அநேகமாகக் கல்லறைகள் என்பது ஆங்கிலேய அரசாங்கம் இங்கு வந்த பிறகு வந்தவைதான். அதற்கு முன் அது சமாதி, அடக்கமான இடம், வீரக்கல், நடுகல், பள்ளிப்படை, ஜீவசமாதி என்று வழங்கப்பட்டது. அவை தவிர இடுகாடுகளில் அடக்கப்படும் உடல்கள் அடக்கப்படும் இடத்தின் மீது எதுவும் எழுப்பப்படுவதில்லை.

சாதாரண மனிதர்கள் தோன்றுவதும் மறைவதும், நீர்பிம்பம் மறைவதைப் போலச் சலனமற்று மறைந்து போவதுதானே! ஆங்கிலேயனுக்கோ அது அவனது வரலாறு. இருநூறு ஆண்டுகளுக்கு முன் வந்த மிஷனரிகளின் ஊழியம், வாழ்வு, மதம் மாறிய மக்கள் வாழ்வு, இன்றைய மனை விற்பனையாளர்களின் மனநிலை எனப் பலவற்றையும் பேசுகிறது. அமெரிக்காவில் ஆரம்பித்து இந்தியாவில் முடியும் கதை,’’ என்று பெரிய தத்துவவாதி போலப் பேசுகிறார்.

சாமி ஆடும் குடும்பம் ஒன்று இருநூறு ஆண்டுகளுக்கு முன் கிறித்தவ நிறுவனங்கள் வரும் போது அதன் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறிப் போனது. கிறித்தவராக மாறிய அந்தக் குடும்பத்தில் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை இழவுச் செய்தியின் நீட்சியாக இல்லாமல் வரலாற்றுப் பார்வை செலுத்தியிருப்பது கதையின் சிறப்பம்சம். பல ஆண்டுகளாக அடக்கம் செய்த இடத்தைப் பற்றிக் கவலைப்படாத சொந்தங்கள் அதைச் சொத்தாக நினைக்கும் போது இந்த இடம் கவனம் பெறுகிறது. ஆனால் தன் தாத்தா சாலமோனின் நினைவிடமாகக் கருதும் பெயரன் ஜோசப் அந்த இடத்தைப் பொக்கிஷமாக நினைத்துப் பாதுகாக்க முயற்சி எடுக்கிறான் என்பது இளைய தலைமுறையினர் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

மரணம் ஒரு மனிதனை என்ன செய்துவிட முடியும்? இறப்பை அழகியல் கண் கொண்டு பார்ப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தக் கருத்தில் மரணம் என்பது முற்றுப்புள்ளி அல்ல என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் வார்த்தைகளுக்குள் பல தத்துவங்கள் ஊடாடிக் கிடக்கின்றன. மரணம் பல நேரங்களில் பாவமன்னிப்பு கேட்க வைக்கும்; நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும்; சேர்த்து வைத்திருக்கும் பொருளைப் பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்துவிட முயலும்; தன் கடைசி ஆசையை நம்பிக்கையுடையவரிடம் சொல்லி அதை உண்மையாக்கிவிட எத்தனிக்கும். அப்படி ஒரு தாத்தாவின் கடைசி ஆசையாக உதிக்கிறது கல்லறை.

சாலமோன் தாத்தாவுக்கும் பெயரன் ஜோசப்புக்கும் இடையில் எப்போதும் அன்பின் பரிமாற்றம் நிகழும். தாத்தாவுடன் செல்லும் போது நடக்க முடியாமல் சோர்வு ஏற்படும்போது தாத்தா அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு நடப்பார். அப்போது உலகமே அவன் கீழே போய்விடுவதாக உணர்வான். அவனைக் கீழே இறக்கும் நேரங்களில் அவன் கன்னத்தில் முத்தம் கொடுக்கும் போது ஏற்படும் பரவசத்தை அமெரிக்காவில் வேலை பார்க்கும் போதும் நினைத்துக் கொள்வான். தாத்தா சொல்லும் கதை கேட்டு, அனுபவம் பெற்று வளரும் பெயரன் பெயர்த்திகள் புண்ணியம் செய்தவர்கள். சாலமோன் தாத்தாவின் பேச்சில் வேதவார்த்தைகளும், விவிலிய வசனங்களும் நிரம்பியிருக்கும்.

சமயவெறி பிடித்து அலைபவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்துவிட்டுக் கடவுளின் பெயரைச் சொல்லித் தப்பித்துச் செல்கின்றனர். ஆனால், சமயக் கருத்துக்களைப் போதிக்கும் மனிதர்கள் உயிரிரக்கம் கொண்டவர்களாக வாழ்ந்த தருணங்களைப் பதிவு செய்கிறது கதை. பறவைகளுக்குத் தானியங்கள் கொடுத்தும், அவை தாகம் தீர்த்துக் கொள்ளும் வகையில் சிறிய தொட்டியைக் கட்டி அதில் நீர் ஊற்றி அவற்றின் தாகத்தைத் தீர்த்த மேன்மையையும் பேசுகிறது. இத்துடன் நின்றிருந்தால் எழுத்தாளர் கொண்டாடப்பட்டிருக்க மாட்டார்.

இப்படி பறவைகளின் நேசிப்பாளராக இருந்தவர் நாளடைவில் இறந்து போகிறார். அவருக்காக எழுப்பப்பட்ட கல்லறையின் அடையாளம் மனிதர்களுக்குத் தெரியாமல் போனாலும், பறவைகள் எப்போதும் அவரின் கல்லறை மீது தலைமுறை தலைமுறையாக அமர்ந்தபடி எதையோ கொத்தித் தின்று அவர் கல்லறை இருப்பதைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன என்பதே படைப்பாளரின் நேர்த்தி. மனிதனைக் காட்டிலும் பறவைகள் நன்றியுணர்ச்சி மிக்கவை என்ற பகுதி நயமானது.

இந்த உலகத்தில் அமைதி நிலவுவதற்குக் காரணம் என்ன யோசிக்கும் போது ஒரு கருத்தைச் சொல்கிறார் ஆசிரியர். எதிர்பாலினத்தின் மீது உண்டாகும் ஈர்ப்பும் – நம்பிக்கையும்தான் இந்த உலகத்தை அமைதிப் படுத்தியிருக்கின்றன. இந்த விதி மரங்கள் முதல் மனிதர்கள் வரை எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் என்றும் இனப்பெருக்கமும் நேச உறவும் தொடர்வதற்கு இதுவே காரணம் என்று சொல்லும் இடத்தில் ஒரு மகத்தான சிந்தனையாளரைத் தரிசிக்க முடிகிறது.

இந்தப் படைப்பில் இடம்பெற்றிருக்கும் ‘கவிமாலா’ என்ற பாத்திரம், கற்பனையாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு எப்போதும் கனவுகள் குறித்தும் ஆண்களின் மனவோட்டங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே இருப்பாள். அவள் மனத்தில் ஆண்கள் பற்றிய பிம்பம் இழிவாக அமைந்திருக்கிறது. ஆண்களை அவள் தேடிக் கொண்டே இருக்கிறாள். அவள் தேடலில் ஒரு தலைமகனைக் காண முடியாத சோகம் வழிகிறது. அந்தச் சோகம் எல்லா ஆண்களையும் சந்தேகத்துடன் அவளைப் பார்க்க வைத்தாலும், அலுவலகப் பணியில் கைதேர்ந்தவளாக இருப்பது கொஞ்சம் ஆறுதல். இது இன்றைய காலகட்டத்தில் வாழும் பெண்களின் மனப்போக்காக எடுத்துக் கொள்ள வாய்ப்பு தருகிறது.

அமெரிக்காவில் இருக்கும் சுத்தமான, அழகான, வாசனை மிகுந்த கல்லறைகளைப் பார்க்கும் போது இவை போன்ற கல்லறைகள் நம் நாட்டில் சாத்தியப்படுவதில்லையே என்ற ஆதங்கம் ஜோசப்புக்கு வெளிப்படுகிறது. மெல்லிய சருகுச் சேலை முகத்தில் பரவுவது போன்ற அருமையான வாசம் கல்லறையிலிருந்து வருவது அவனை வியப்பில் ஆழ்த்தும். இறந்துபோன மனிதர்களின் வாசம் அமாவாசை – பௌர்ணமி நாள்களில் வீசும் ஓர் அபூர்வ வாசம். அப்போது கல்லறைகளுக்கு உயிர் உண்டு என்ற உணர்வு தொற்றிக் கொள்ளுமாம். அவை மௌன மொழியில் பேசிக் கொள்ளுமாம். கல்லறைகள் பேசும்போது மனிதனின் பேச்சு அர்த்தமற்ற கூச்சலாகி விடுகின்றன என்ற பொன்மொழி இங்கே பொருள்படுகிறது.

கல்லறைக்குள் புதைந்து கிடப்பவர்கள் அங்கே வரும் மனிதர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கேள்வியை ஜோசப்பின் தோழி ஜெனி வழியாக ஆசிரியர் கேட்கும்போது வாசகனுக்கும் அதற்கான பதில் தேடவேண்டுமென்ற உணர்வு மேலிடுகிறது. கல்லறை கற்றுத் தரும் பாடம் வித்தியாசமானது. அங்கே எழுதப்பட்டிருக்கும் கவிதைகள், வாசகங்கள் சுவாரஸ்யமானவை. அங்கே சிந்தப்படும் கண்ணீர் காண்பவரை ஒருவித சோகத்தில் ஆழ்த்தும். ஒரு பிரபல நடிகை நோய்வாய்ப்பட்டு இறக்கும் முன் கல்லறைக்காக வழங்கிய நன்கொடை பத்தாயிரத்தைப் பதிவு செய்கிறது நாவல். தன்னை யாரும் தொந்தரவு செய்யாத தனிமை தனக்கு வேண்டுமென்றும் அப்படி ஓர் இடம் தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சொல்லும் பகுதி இரக்கப்பட வைக்கிறது. யாரும் நுழைய முடியாத இரவுகளை இறந்த பிறகாவது அனுபவிக்க வேண்டும் என்ற அவளின் விருப்பம் பரிதாபத்திற்குரியது.

அண்ணன் முறையில் இருக்கும் மாசானம் முன்னோர்கள் கல்லறை இருக்கும் இடத்தை விற்றுக் குடும்பத்தாருக்குப் பங்கு கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்கிறார். ஜோசப்புக்கு இது பற்றித் தெரிவித்த போது, கல்லறைகள் இருக்கும் பகுதியை விட்டு விட்டு மற்ற நிலத்தை விற்க ஒப்புதல் கொடுத்தான். இதனால், ஐந்து தலைமுறைக்கு அப்பாலும் புலமாடன் என்ற இயற்பெயர் கொண்ட சத்தியநாத உபதேசியார் தாத்தா பின்வரும் சந்ததியினருக்கு உதவி செய்கிறார் என்று கருதினான் ஜோசப்.

அந்த நிலத்திற்கான வரலாறு பற்றி அவனுடைய தாத்தா கூறிய போது சிலிர்த்துப் போனான். சாலமோன் தாத்தா இறக்கும் தருவாயில் இருந்த போது சொன்ன செய்திகள் கடைசி வாக்குமூலத்தைப் போல நினைத்துக் கொண்டான். தாத்தாவின் தாத்தாவான சத்தியநாத உபதேசியார் விவிலியத்தில் இருக்கும் வசனங்களைச் சொல்லித் தனக்கும், தன் அடுத்தடுத்த சந்ததியினருக்கும் அடக்கம் செய்வதற்கான நிலம் வழங்கப்பட வேண்டும் என்று மிஷனரி துரையிடம் கேட்டுக் கொண்டார். உயிர் பிரியும் நிலையிலும் விவிலியத்தின் வசனங்களைச் சரியாக நினைவு வைத்திருக்கும் உபதேசியாரின் விசுவாசத்தின் மீது வியப்பு கொண்ட துரை, உபதேசியார் கேட்டுக் கொண்டபடி நிலத்தைக் கொடுக்க முயற்சி எடுத்தார்.

ஆசீர்வாத நாடாருக்கு மிஷனரி கொடுத்திருந்த இடத்தில் அதாவது பெருவழிப் பாதையில் இருக்கும் அந்த இடத்தில் அரை ஏக்கர் நிலத்தை உபதேசியாருக்குக் கொடுக்கும்படி துரை கூறினார். அதற்கு முழுமனதுடன் ஒப்புதல் கொடுத்தார் ஆசீர்வாத நாடார். உடனடியாக ஊர் எழுத்தரை அழைத்துக் கிரைய பத்திரம் செய்து உபதேசியாரிடம் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் தன் ஆன்மா இறைவன் கையில் புகும் என்று சொல்லி உபதேசியாரின் உயிர் பிரிந்ததையும் சாலமோன் தாத்தா மரணப்படுக்கையில் இருந்தபடி சொன்னதை நினைவுப்படுத்திக் கொண்டான். பிறகு தன்னையும் உபதேசியார் அருகில் புதைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதையும் எண்ணிப் பார்க்கத் தொடங்கியது அவனது உள்ளம்.

தன் முன்னோர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர்களின் கல்லறையை நினைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறான் ஜோசப். நிலம் விற்பனைக்கான ஏற்பாடுகள் செய்தாகிவிட்டன என்று அண்ணன் மாசானம் சொன்னதும், இந்தியா வந்து தன் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் அமெரிக்காவிலிருந்து புறப்படுகிறான். முதலில் பத்திரப் பதிவு முடித்த பின்னர் கல்லறைக்குச் செல்லலாம் என்று மாசானம் முதலியவர்கள் சொன்னதும் அப்படியே பத்திரப் பதிவு முடித்துவிட்டு வந்தவனுக்குப் பெரிய ஏமாற்றமே காத்திருந்தது என்று கதை முடியும் இடத்தில் பணத்தைத் தவிர மனிதனுக்கு வேறு எதுவும் முதன்மையாகப் படுவதில்லை என்ற வேதனை ஒட்டிக் கொள்கிறது.

படிக்க வேண்டும் என்று ஆசைப்படும் புலமாடன் சாமியாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். கிறித்தவ நிறுவனங்கள் கல்வி கற்றுத் தர முன்வரும் போது அவர்களின் சமய நூல்களையும் தாராளமாகக் கொடுக்கும் நிலை இருந்தது. தன் மகன் எங்கே வேறு மதத்திற்குச் சென்று விடுவானோ என்று பயப்படும் மயிலாத்தா மற்ற மதத்திற்குச் சென்றால் நம் குலசாமி நம் குலத்தையே நாசம் செய்யும் என்று மகனுக்கு அறிவுரை கூறுகிறாள். மிஷனரி துரையின் சமயப் பொழிவுகளைக் கேட்கும் புலமாடனுக்கு துரையின் மீது அப்படியொரு பற்றுதல் ஏற்படுகிறது.

மெல்ல மெல்ல சமய நூல்களை வாசிக்கும் புலமாடனுக்கு, கிறித்துவின் மீது விசுவாசம் ஏற்படுகிறது. அப்போது தன் தாயிடம் நம் குலசாமியைப் போலவே இயேசுவும் கொல்லப்பட்டவர் என்றும் மீண்டும் உயிர்த்தெழந்தார் என்றும் சொல்லி தாயின் நேசத்தைப் பெறுகிறான். சிலுவையில் ஆணியால் அறையப்பட்ட கொடுமை இயேசுவுக்கு நடந்தது என்று சொன்னவுடன் மயிலாத்தாவும் நம் குலசாமி புலமாடனைப் போலத் துன்பப்பட்டிருக்கிறார் என்று இரக்கப்படுகிறாள். கடைசியில் எல்லோரும் கிறித்தவத்தைத் தழுவும் செயல்பாட்டை இயல்பாகப் படம் பிடிக்கிறது நாவல்.

மதம் மாறினால் ஏதேதோ நன்மைகள் கிடைக்கும் என்று மற்றவர்கள் சொல்லியதைக் கேட்டு வரும் பெண்ணிடம் துரை அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்வதாக வரும் வசனம் மிகுந்த கவனத்திற்குரியது. மதங்களின் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நாட்டில் சமய மாற்றம் பற்றிய கதையைப் பொறுப்புடன் எழுத வேண்டும் என்பது கட்டாயம். அந்தப் பொறுப்புணர்வுடன் படைக்கப்பட்டிருக்கிறது படைப்பு. நுண்ணுயிர்களைப் பார்க்கத் தேவைப்படும் நுண்ணாடியைப் போல இயற்கையின் அழகை முழுமையாகத் தரிசிக்க படைப்பாளனின் ரசனை வேண்டும் என்று நூலை வாசிப்போர் நிச்சயம் நினைப்பர்!

முனைவர் மஞ்சுளா

Pin It