சாதி ஒடுக்குமுறை மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராக கோபம், நகைச்சுவை மூலம் பல கவிதைகளைப் படைத்தார். ஆயுதப் புரட்சியை ஆதரித்தார். மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று வெகுமக்கள் போராட்டங்கள், தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு அவற்றின் தாக்கத்தால் பல கவிதைகள் படைத்தார் கவிஞர் சுபத்திரன்.

இலங்கை மட்டக்களப்பு நகரில் 16.04.1935 அன்று கந்தையா தெய்வானைப்பிள்ளை வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்றார். பின்னர் ஆசிரியப் பயிற்சி முடித்து, கொழுப்பிலும், மட்டக்களப்பிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது இயற்பெயர் தங்கவடிவேல். ‘சுபத்திரன்’ என்ற புனைப்பெயரில் கவிதைகள் படைத்துள்ளார்.

subathiranஇரத்தக் கடன், சுபத்தின் கவிதைகள், கவிஞர் சுபத்திரன் கவிதைகள் முதலிய கவிதைத் தொகுதிகளைப் படைத்து அளித்துள்ளார்.

கவிஞர் சுபத்திரன் அன்றைய காலத்துத் தமிழ் இளைஞர்கள் போல், இலங்கையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார்.

கேரளாவிலிருந்து இடம் பெயர்ந்து இலங்கை வந்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக இருந்த கே. வி. கிருஷ்ணகுட்டியின் இடதுசாரி கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தொழிலாளி’ என்னும் இதழில் 1964ஆம் ஆண்டு இவர் எழுதிய கவிதைகள் மார்க்சியத் தத்துவத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியை தெள்ளத் தெளிவாகக் காட்டி நின்றன.

கவிஞர் சுபத்திரனின் கவிதைகள் தொழிலாளர்கள், விவசாயிகள், தாழ்த்தக்கப்பட்ட மற்றும் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் அவலங்களையும், அவர்களின் போராட்டங்களையும் மக்கள் மன்றங்களில் கொண்டு வந்து நிறுத்தின.

ஈழத்து முற்போக்குக் கவிஞர்களுள் மக்கள் சக்தியை இனங்கண்டு அதனை முதன்மைப்படுத்தி அதிக கவிதைகள் படைத்துள்ளார்.

மக்கள் போராட்டங்களுக்கு கலை இலக்கியங்கள் எவ்வளவு காத்திரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்பதை கவிஞர் சுபத்திரன் கவிதைகள் உணர்த்தும்.

சுபத்திரனுடைய கவிதைகள் கட்சிக் கவிதைகள், அரசயில் கவிதைகள், பொதுவான கவிதைகள், அக உணர்வுக் கவிதைகள் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவையாகும். சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான கவிதைகளையும் படைத்துள்ளார். தமிழ்நாட்டில் தலித் இலக்கியம் தலையெடுப்பதற்கு முன்பே சுபத்திரன் சாதி எதிர்ப்புக் கவிதைகளைத் தந்துள்ளார்.

சுபத்திரனின் கவிதைகளில் காணப்படும் கருத்தாழம், அவர் கவிதையை மேடைகளில் வாசிக்கும் போது கையாளும் மொழிநடை, வீச்சு, மக்களை அணி திரட்டுவதில் முக்கிய பங்காற்றியது.

யாழ்ப்பாணத்தில் 1969ஆம் ஆண்டு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு வெகுசன மாநாட்டில் சுபத்திரனின் ‘இரத்தக்கடன்’ கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. ‘இரத்தடக்கடன்’ கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ‘சங்கானைக்கென் வணக்கம்’ என்றும் கவிதை மிகவும் புகழ் பெற்றது. 1967ஆம் ஆண்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீன சார்பு தலைமையிலான தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் தலைமையேற்று இலங்கையின் வடபகுதியெங்கும் நடத்திய ஆலயப்பிரவேச, தேநீர்க்கடைப் பிரவேச போராட்டங்களில் சங்கானைப் பகுதியில் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த நிச்சாமம் என்னும் கிராமம் முன்னணியில் நின்றதுடன், பல தியாகங்களையும் செய்தது. நிச்சாமம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டன. பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார்கள் அக்கொடுமையைச் சாடி சுபத்திரனால் படைக்கப்பட்ட கவிதை தான் ‘சங்கானைக் கென் வணக்கம்’.

சங்கானைக்கென் வணக்கம்
சங்கானைக் கென் வணக்கம்
சரித்திரத்தில் உன் நாமம்
மங்காது யாழகத்து
மண்ணிற் பல காலம்
செங்குருதிக் கடல் குடித்து
செழித்த மதத்துக்குள்
வெங்கொடுமைச் சாக்காடாய்
வீற்றிருந்த சாதியினைச்
சங்காரஞ் செய்யத்
தளைத்தெழுந்து நிற்கின்ற
சங்கானைக்கென் வணக்கம்
கோயிலெனும் கோட்டைக்குள்
கொதிக்கும் கொடுமைகளை
நாயினிலும் மிக்க
நன்றிப் பெருக்கோடு
வாயிலே நின்று
வாழ்த்தும் பெருஞ்சாதி
நாய்கள் - வாலை
நறுக்கி... எழுந்தாய்
சங்கையிலே நீ யானை
சங்கானை - அந்தச்
சங்கானைக் கென் வணக்கம்
எச்சாமம் வந்து
எதிரி நுழைந்தாலும்
நிச்சாமக் கண்கள்
நெருப்பெறிந்து நீறாக்கும்
குச்சுக் குடிசைக்குள்
கொலுவிருக்கும் கோபத்தை
மெச்சுகின்றேன் - சங்கானை
மண்ணுள் மலர்ந்த
மற்ற வியட்நாமே - உன்
குச்சுக் குடிசைக்குள்
கொலுவிருக்கும் கோபத்தை
மெச்சுகிறேன் - சங்கானை
மண்ணுள் மலர்ந்த
மற்ற வியட்நாமே

கவிஞர் மதக்கொடுமைகள் மற்றும் சாதி ஆதிக்கங்கள் ஆகியவற்றைச் சாடுவதுடன் குச்சுக் குடிசைகள் எல்லாமே போர்க்கோலம் கொண்டு நின்றதை எண்ணிச் சங்கானையை மற்றுமோர் வியட்நாமாகவே காண்கின்றார்.

செந்தீ
சாதித் திமிருடன் வாழும் தமிழனோர்
பாதித் தமிழனடா - அவர்
நீதி தனக்கொரு நீதி பிறர்க்கொரு
நீதியென்றாடுதடா - தமிழ்
நீதி மறந்தவர் எந்த மதத்தினிற்
சாதி படித்தனரோ - அதை
மோதி யுடைப்பது தானொரு பாதையென்று
ஓதி எழுந்திடுவாய்
அந்த மனிதனும் இநத் உலகினின்
சொந்த மனிதனடா - அவன்
இந்த உலகினில் வந்து கிடப்பது
நொந்து கிடந்திடவோ - அட
இந்து மதத்தினுக் கிந்த நிலைதனைத்
தந்தது எந்தமறை - அது
வெந்து மடிந்திட உந்தி எழுந்திடும்
செந்தீ எழுந்திடுவாய்

இவரது கவிதைகளில் சாதிய அடிப்படைகளை வகுத்துக் வறும் இந்துமதக் கோட்பாடுகளைக் கண்டிப்பதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடுவதையும் காண முடிகின்றது. இங்கு கவிஞர் அறத்தை, நீதியை மறந்து மதத்தின் பெயரால் சாதி வேறுபாடு கூறுகின்றவர்களைப் பாதித் தமிழர்கள் என்றும், நீதியை மறந்தவர்கள் மதத்திடம் படித்த சாதியை மோதி உடைக்க வேண்டும் என்றும், இந்து மதத்திற்கு இந்த சாதிப்பிரிவினையை வழங்கிய வேதத்தை எரித்திட செந்தீ ஏந்திட வேண்டும் என்றும் பாடுகின்றார்.

கவிஞனும் கவிதையும்

அச்சமும் தயக்கமும் அற்றது கவிதை மற்றவர் சொல்ல மயங்கி நிற்பதை வெட்டை வெளிச்சமாய்த் துணிவுடன் சொல்லும், மருண்டு நிற்பது கவிதையும் அல்ல. வெருண்டு நிற்பவன் கவிஞனும் அல்ல. கவிஞன் என்பவன் கண்ணியமானவன்.

எதிரியை ஒளித்து நின்று தாக்குதல் யுத்த தந்திரமாக இருக்கலாம். எதிரியை எதிர்க்கும் கவிதையின் சொல்லும் கருத்தும் ஒளித்தல் கோழைமையாகும்.

கவிஞன் என்பவன் வினோதமானவன் அச்சம் அற்றவன் தயக்க மற்றவன் கற்களை முகர்ந்து பூவென வெருடுவான் பூக்களைக் கல்லென வீசி எறிவான். கவிஞனின் ஆணை கவிதை ஆகினால் எரிமலை கூட வாய் பொத்தியிருக்கும் கூழாங்கற்கள் மேகம் தொட்டு அணையும் மலையால் நிமிர்ந்து நிற்கும்.

கவிஞன் கற்பனைத் தேரில் உலாவுவான் யதார்த்தம் என்னும் மண்ணிலும் நடப்பான் கவிஞன் புன்னகை அழவும் வைக்கும் கவிஞனின் அழுகை மகிழவும் வைக்கும் கவித்துவத்தாலே செருக்கும் கொள்வான். கவித்துவத்தாலே குழந்தையுமாவான். உலகம் முழுவதும் தன் சொத்தென்பான் அண்டம் முழுவதும் வாங்குவேன் என்பான் பீடியைக் கடையிற் கடனாய்க் கேட்பான்.

எரிமலை வாசலில் உலாவியவாறு கவிதை மழையாய் அள்ளிப் பொழிவான் பூஞ்சோலைக்குள் இருந்து கொண்டு கவிதையை நோக்கித் தவமும் இருப்பான். மக்கள் தானவன் சொத்தும் சுகமும் மக்கள் தானவன் உளத்தின் மலர்கள்.

பாலஸ்தீனத்தின் விடுதiலைக்காக பாணந்துறையிற் கூட்டம் போடுவீர் காலம் காலமாய் உம்முடன் வாழும் தமிழன் உரிமை பறிக்கப்பட்டு ஓலம் இடுவது மட்டும் உங்கள் காதுகளுக்குள் ஏற இல்லையா? தோழமையாலே அழைக்கிறேன் சிங்களத் தோழனே தமிழரின் உரிமைப் போரிடு தாயும் பிள்ளையும் ஒன்றென்றாலும் வாயும் வயிறும் வேறு இல்லையா? நீயும் நானும் ஒரு நாடெனினும் எம் பிரதேசம் பறித்தல் நீதியா? தேயும் எங்கள் உரிமை மீட்க நீயும் எம்முடன் ஒரு படையாகிப் பாயும் நம்மைப் பரித்து வைக்கும் பகைவன் பற்றி வீழ்ந்திடத் தோழனே?

இலங்கையில் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறை வெறியாட்டத்தின் போது எதுவும் செய்ய முடியாமல் இருந்த இலங்கையின் தென்பகுதி சிங்கள இடதுசாரிகளின் நிலையினால் ஏமாற்றமடைந்தார். அதன் விளைவே மேற்கண்ட கவிதை ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலைப் போராட்டப் பணி எதிர்பார்த்திருக்கின்றது என்றும் அரிவாளைச் சின்னமாகக் கொண்ட தொழிலாளர் படையணி உனது விடுதலைக்காகப் போராட வருகின்றது. அதில் இணைந்து கொள் என்றும் மக்களுக்கு இவர் அறை கூவல் விடுகின்றார்.

‘பாளையைச் சீவிடும் கையைப் புதுப்பணி
பார்த்துக் கிடக்குதடா - புது
நாளைப் படைத்திடும் நாளில் வரும் பகை
நாய்களைச் சீவிடவே - அரி
வாளைச் சுமந்திடுந் தோழர் உனதணி
வந்து நெருங்குகிறார் - அவர்
தோளைப் பல தொழிலாற்றிடும் தோழர்கள்
தொட்டு நெருங்குகின்றார்’

அடிமை விலங்கும் ஆயுதமும்

அடிமை விலங்கு அறுப்போம்
அதில்
ஆயுதங்களைச் செய்திடுவோம்
கொடுமை மிக மலிந்த
இந்தக்
குவலயத்தை மாற்றிடுவோம்

இந்தக் கவிதை மூலம் அடிமை விலங்கொடிக்க ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என அறை கூவி அழைக்கிறார்.

காட்டை வெட்டி களமாக்கி அதைக் கதிர்கள் கொட்டும் தலமாக்கும் நாட்டின் இறைவன் விவசாயி - ஏன் நன்றி மறந்தாய் முதலாளி,

காட்டை வெட்டி கழனியாக்கி விளைச்சல் பெருக்கி உணவளிக்கும் விவசாயி இறைவனுக்கு சமமானவன் என்பதை முதலாளிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

‘உண்டோ சாதி? எவன் வைத்த சட்டம்
உணர்க நீ... தமிழ்நாடு
துண்டு துண்டானால் தோல்வி தான் மிச்சம்
துயரம் ஏனடா தோழா

என விடுதலையை வென்றெடுக்க சாதி, மத பேதமின்றித் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

சுதந்திரன், குமரன், வசந்தம், தொழிலாளி, கழனி முதலிய இதழ்களில் சுபத்திரனுடைய கவிதைகள் வெளிவந்துள்ளது.

மலைநாட்டுத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டம், சங்கானை மக்களின் சாதிக்கொடுமைக்கு எதிரான போராட்டம், வியட்நாமின் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என யாவற்றையும் தமது கவிதைக் குரலால் ஆதரித்தார்.

இந்த நூறு ஆண்டில் வலிமை பெற்று பல ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிந்த தீண்டாமைக்கு எதிரென போராட்ட வரலாற்றை கவிஞர் சுபத்திரனைத் தவிர்த்து எழுதவே முடியாது.

கனடாவில் உள்ள சம உரிமை இயக்கம் கவிஞர் சுபத்திரனுடைய சில கவிதைகளை தேர்ந்தெடுத்து இசையைமைத்து பாடலாக்கி உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர்.

‘ஒரு கோடிக் கவிதைகளால் உலகம் போற்றும் பெருங்கவிஞன் என நாமம் பெற்றாலும் அஃது ஒரு சொட்டு இரத்தத்தை உரிமைப்போரில் சிந்துபவனின் புகழ் முன்னே தூசு தூசு என போராட்டத்தில் கலந்து கொண்டு இரத்தம் சிந்துபவனின் தியாகத்தின் முன்னால் கவிஞர்களின் கவிதைகள் தூசு ஆகும் என்பதைப் பிரகடனப்படுத்துகிறார் கவிஞர் சுபத்திரன்.

‘மக்கள் என்ற வைத்தியர்கள் தான் எனது ஊமைக் கவிதைகளைப் பேசச் செய்தனர். குருட்டுக் கவிதைகளை பார்க்கச் செய்தனர். செவிட்டுக் கவிதைகளை கேட்கச் செய்தனர். மூடக் கவிதைகளை நடக்கச் செய்தனர். கோழைக் கவிதைகளை போராடச் செய்தனர். நண்பர்களே, உங்கள் கவிதைகளையும் அந்த வைத்தியனிடம் அனுப்பி வையுங்கள். என மக்கள் தான் அனைத்து இலக்கியங்களுக்கும் அடித்தளமாக விளங்குகின்றனர். மக்களுக்காக இலக்கியம் படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

‘ஒடுக்குமுறை எத்தகைய வடிவத்தில் வந்த போதம், அதனை எதிர்ப்பதையும், விடுதலைக்காகப் போராடுவதையும் தமது ஒரே லட்சியமாகக் கொண்டு கவிதைகள் படைத்தார் கவிஞர் சுபத்திரன்’ என ஈழத்து இலக்கிய விமர்சகர் பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

மட்டக்களப்பில் நஞ்சருந்தி 30.10.1979 அன்று தமது 44ஆவது வயதில் காலமானார். கவிஞர் சுபத்திரன் மறைந்தாலும் அவரது முற்போக்குக் கவிதைகள் மக்கள் மனங்களில் என்றும் நிலைத்து நிற்கும்.

 - பி.தயாளன்

Pin It