மார்க்சிய அறிஞர் ஆர்.பார்த்தசாரதி அவர்கள் பல்துறை வித்தகர். பல்லாண்டுகளாக மார்க்சியம், அரசியல், தமிழ் இலக்கியம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இளமையில் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தில் நாட்டம் கொண்டவர். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார துறையில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் தேறியவர். தமிழிலும் ஆர்வம் மிகுந்து தனியே படித்து முதுகலைப் பட்டத்தை சென்னைப் பல்கலைக் கழகம் வழியாகப் பெற்றவர். உத்கல் பல்கலையில் எல்.எல்.பி. பட்டமும் தேறியவர். தலைவர் ஜீவானந்தம் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்ற முனைந்த போது அவரால் கவரப் பட்டு ஆர்.பார்த்தசாரதியும் பொதுவுடைமைக் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டவர். ரிசர்வ் வங்கியில் எழுத்தராகப் பணியாற்றிய காலத்தும், அலுவலர்களின் உயர் அதிகாரியாக இருந்த போதும் தொழிலாளர் நலம்பேணத் தொழிற்சங்கம் கண்டு நிர்வாகத்துடன் போராடி யவர்.

parthasarathyஇவருக்கு ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் தான் இவரைப் பொதுவுடைமைக் கட்சியில் தொடர்ந்து பணியாற்றவும் தொழிற்சங்கப் பணி களைத் தொய்வின்றித் தொடரவும் காரணமா யிற்று என்று தன்னைச் சந்திக்க வரும் நண்பர் களிடமும் தோழர்களிடமும் மனந்திறந்து கூறு வார். ரிசர்வ் வங்கிப் பணியிலிருந்து பணிநிறைவு பெறச் சில ஆண்டுகள் இருக்கும்போதே பிரபல தொழிற்சங்கத் தலைவரும், இந்தியப் பொது வுடைமைக் கட்சியின் மூத்த தலைவருமான திரு.ஏ.எஸ்.கே. அவர்கள் எழுதிய ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா’ என்ற நூலை மெய்ப்புத் திருத்தி நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளி யிடத் துணையாக இருந்தவர்.

பணிநிறைவு பெற்றபின் முழுவதுமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நியூ செஞ்சுரி, பாவை பப்ளிகேஷன்ஸ் புத்தக நிறுவனங்கள் வெளியிட்ட நூல்களுக்குப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். தோழர்கள் ஆர்.ராதாகிருஷ்ண மூர்த்தி, ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகி யோரின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரிய வராக விளங்கித் தொண்டாற்றியவர். தன்னை எப்பொழுதும் பின் நிறுத்திக்கொண்டு பிறரது எழுத்துக்கள் அச்சில் வெளிவருவது கண்டு மனம் மிக மகிழ்ந்தவர். நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் ‘உங்கள் நூலகம்’ திங்களிதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். இவ்விதழில் இவர் தீட்டியுள்ள பல தலையங்கங்கள் இன்றளவும் கருத்துப் பெட்டக மாகத் திகழ்கின்றன.

‘மார்க்சிய ஒளி’ இதழில் இவர் பல கட்டுரை களை எழுதியுள்ளார். மொழி பெயர்ப்புக்கலை பற்றிச் சில கட்டுரைகளையும் வரைந்துள்ளார். ‘ஆர்.பி.எஸ்’ என்ற பெயரிலும் ‘பாசா’ என்ற பெயரிலும் அவை வெளிவந்துள்ளன. மேலும் தென்னக ஆய்வு மையத்தின் அறங்காவலராகவும் சீரிய பணியாற்றியவர். தென்னக ஆய்வு மையம் வெளியிட்டு வரும் ‘சமூக விஞ்ஞானம்’ ஆய்விதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியவர். இவர் எழுதியுள்ள ‘மார்க்சியம்- எதிர்காலம்’ என்ற நூல் இலங்கையில் பெருமளவில் விற்பனையானது.

திரு. ஆர்.பி.எஸ். அவர்கள் தமிழ், ஆங்கிலம், மார்க்சியம் ஆகியவற்றில் ஆழ்ந்த பயிற்சியும் கொண்டிருந்தார். அறிஞர் ஆர்.பார்த்தசாரதி எழுதியுள்ள கட்டுரைகள், பதிப்புரைகள், முன்னுரைகள், அணிந்துரைகள் எண்ணிறந்தன. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வெற்றிப்பயணம், கருத்துக் களத்தில் மார்க்சியம்- லெனினியம், மார்க்சியம்- எதிர்காலம், உலகாயதம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தோழர் ஆர்.பி.எஸ் கம்யூனிஸ்ட் தலைவர் அமீர் ஹைதர்கானின் ‘தென்னிந்தியாவைக் கண்டேன்’ என்ற நூலையும் சோவியத் அறிஞர் புருடோவின் ‘இக்கால இந்திய மெய்ப்பொருளியல்’ என்ற நூலையும் அலெக் ஸாந்தர் கோந்த்ரதோவ்வின் ‘இந்துமாக்கடல் மர்மங்கள்’ (லெமூரியாக்கண்டம்) என்ற நூலையும் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

தோழர் ஆர்.பி.எஸ் எந்நேரமும் புத்தகங்களை வாசித்துக் கொண்டும் நண்பர்கள், தோழர் களோடு விவாதித்துக் கொண்டும் இருப்பார். அவருக்கு வாசிப்பு என்பதும் எழுத்து என்பதுமே உயிர்மெய்யாக இருந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி’ நாளேட்டின் வளர்ச்சியிலும் ‘தாமரை’ இதழின் வளர்ச்சியிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். தோழர் ஆர்.பி.எஸ். சைவ சித்தாந்தத்திலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.

பாரதிதாசன் நறுமலர்க்கொத்து என்ற நூலின் முன்னுரையில் “பாரதிதாசன் பாடல்கள் பல மக்களியக்கத்தை வளர்த்து உழைக்கும் வர்க்கங் களுக்கு உணர்வூட்டும் தன்மையன; தமிழகத்தின் மிக உயர்ந்த மனிதத்துவக் கவிஞராக பாரதிதாசன் உயர்ந்து நிற்பதைக் காணலாம்” என்று கூறி யுள்ளார். ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்ற கட்டுரையில் தோழர் ஆர்.பி.எஸ் அவர்கள் கீழ்க் கண்டவாறு கூறுகிறார். “மண்ணும், கடலும், விண்ணும், சுற்றுப்புறச் சூழலும், செயற்கையும், இயற்கையும், முதலாளித்துவத்திற்கு ஏவல் செய்ய வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆனால் இந்த நிலையை மாற்றியமைக்க உழைக்கும் வர்க்கம் ஆளும் வர்க்கமாக உயரவேண்டும். தொழிலாளி வர்க்க அரசு அமைந்தாலொழியச் சுரண்டல் ஒழியாது - நிலைமை மாறாது என்று அறிக்கை கூறுகிறது. புதிய பொதுவுடைமைச் சமுதாயம் அடையப் பழைய சமுதாயம் புதிய சமுதாயமாக அமைய வேண்டும். புதிய சமுதாயம் அமை வதற்குப் புதிய பொருளாதார பௌதிக அடிப் படைகளைப் போராடும் தொழிலாளிவர்க்கம் இடைவிடாது பொறுமையாகப் போராடி அமைக்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது”.

பேரா. முனைவர். கா. சிவத்தம்பி அவர்கள் தமது ‘தமிழில் இலக்கிய வரலாறு’ நூல் வெளி வரத் தோழர் ஆர்.பார்த்தசாரதி மிகவும் உந்து சக்தியாக விளங்கியதை நன்றியுடன் தனது நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் நூல் தொகுதிக்கும், சங்க இலக்கியம் நூல் தொகுதிக்கும் இவர் விரிவான அணிந்துரைகள் வழங்கியுள்ள திறம் அறிஞர் உலகம் போற்றுதற்குரியது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேரா. வீ. அரசு அவர்கள், ஆர். பார்த்தசாரதி அவர்களுடன் நல்ல தொடர்பு கொண்டிருந்தார். இவர் 16.01.2011 அன்று மறைந்த போது ‘இவரது எழுத்து என்றென்றும் நம்மை வழிநடத்தும் தன்மையது’ என்று தோழர் தா. பாண்டியன் கூறியுள்ளமை நினைவுகூரத்தக்கது.

Pin It