‘கேசவனுடைய எழுத்துக்களில் மிகுந்த துணிவு உண்டு. ஆய்வாளர்கள் சிக்கலானவை குறித்துப் பட்டும் படாமலும் எழுதித் தப்பித்துக் கொள்வதே ஒரு மரபாக இருந்து வருகிறது.
கேசவன், ஆய்வுலகின் பயந்தாங்கொள்ளி மரபை நாகரிகமாக ஏற்றுக் கொண்டதில்லை. ஆய்வின் முடிவுகளை அச்சமின்றிச் சொல்லும் நெஞ்சுரம் அவருக்கு இருந்தது’ - என மக்கள் கவிஞர் இன்குலாப் கேசவனைப் புகழ்ந்துரைத்துள்ளார்.
கேசவன் மதுரையில் 05.10.1946-ஆம் நாள் கோவிந்தன்- பொன்னம்மாள் வாழ்விணையருக்கு பிறந்தார். தமது ஆரம்பக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலை பள்ளிக் கல்வியை மதுரை மன்னர் சேதுபதி உயர் நிலைப் பள்ளியிலும் பயின்றார்.
புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியிலும், பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு முதலியவற்றை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் முடித்தார்.
‘சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி’ - என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறையில் மொழி பெயர்ப்பாளராக சில ஆண்டுகள் பணி புரிந்தார்.
கேசவன் திருச்சி, புதுக்கோட்டை முதலிய அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். மாணவர்கள் மத்தியில் புரட்சிகர, முற்போக்கு சிந்தனைகளை விதைத்தார். தமிழிலக்கிய ஆய்வுகள் மார்க்சிய நோக்கு நிலையில் அமைந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தில் இணைந்து நிர்வாகியாக செயல்பட்டார். கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தில் முன்னணியில் நின்று கலந்துகொண்டார்.
கல்லூரி ஆசிரியர்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகளுடைய மக்கள் விரோத, பிற்போக்குத் தனமாக, விஞ்ஞானத்திற்குப் புறம்பான பாடத்திட்டங்களை விமர்சித்து, அவற்றை பாடத்திட்டங்களிலிருந்து நீக்கிட போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்ட கருத்தரங்குகளில் தமது கருத்துரைகளை அளித்தார்.
கல்லூரி மாணவர்களின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான, இலவசப் பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, விடுதிகளில் அடிப்படை வசதி, மாணவர் பேரவை தேர்தல் நடத்தக் கோருதல், தாய் மொழி வழிக் கல்வி, இலவசக் கல்வி கோருதல் முதலியவற்றுக்காக நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மாணவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் கல்லூரி நிர்வாகத்திடமும், பல்கலைக்கழக நிர்வாகத்திடமும் வாதாடினார்.
புரட்சிகர கம்யூனிச அரசியல் கொள்கையை ஏற்று மார்க்சிய- லெனினிய- மாசேதுங் சிந்தனை வழியில் சிந்தித்துச் செயல்பட்டார். கேசவன், புரட்சிகர முற்போக்கு பண்பாட்டை வளர்ப்பதற்காக தமது எழுதுகோலை ஏந்தியவர். எழுத்துரிமை, பேச்சுரிமை,
கருத்து கொண்டிருக்கும் உரிமை, கருத்து கூறும் உரிமை - முதலிய உரிமைகள் அனைத்தும் அரசு ஊழியரானவுடன் மறுநொடியே இல்லாமல் போய்விட வேண்டும் என்னும் மூடநம்பிக்கையை உடைத்தெறிந்தார்.
மண்ணும் மனித உறவுகளும், பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை, இலக்கிய விமர்சனம்
ஒரு மார்க்சியப் பார்வை, பொதுவுடைமை இயக்கமும் சிங்கார வேலரும், சுயமரியாதை இயக்கமும் மொழிக் கொள்கையும், பாரதி முதல் கைலாசபதி வரை, சாதியம், கோவில் நுழைவுப் போராட்டங்கள், இந்திய தேசியத்தின் தோற்றம்,
சோசலிசக் கருத்துக்களும் பாரதியாரும், சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை தமிழக மக்களுக்கு வழங்கிச் சென்றுள்ளார்.
பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், ஜார்ஜ் தாம்சனின்எ ன்னும் நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ்கார்ன் போர்த்தின்- லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் முதலிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து முக்கிய பங்காற்றினார். நடப்பு அரசியல், பொருளாதார, சமூக, பண்பாடு, கலாச்சாரம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
“எடுத்துக் கொள்ளும் விஷயத்தை தருக்க ரீதியாக விவரித்து விளக்குவதற்குப் பெரிதும் துணை கொள்வது கேசவன் கைக்கொள்ளும் அணுகு நெறியேயாகும். வரலாற்றுப் பொருள்முதல்வாதமே அந்த அணுகு நெறி. அதாவது சமுதாயமானது அதனுடைய நியதிகளின்படி தொடர்ந்து வளர்ந்து கொண்டும், மாறிக் கொண்டும் இருக்கிறது என்கிற அடிப்படை பிரமாணங்களைக் கொண்டு நிறுவனங்களையும், கருத்தோட்டங்களையும், இயங்கியல் ரீதியில் அலசியிருக்கிறார்”.
“தமிழகத்தில் உயர்கல்வி மாணவர் மட்டங்களில் மார்க்சிய விமர்சனம் கால்கோள் கொண்டுவிட்டது என்பதற்கான முதல் உதாரணமாக விளங்கியவர் கேசவன்”- கேசவனுடைய `மண்ணும் மனித உறவுகளும்’ என்னும் நூலின் முன்னுரையில் ஈழத்து மார்க்சிய ஆய்வாளர், பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி பதிவு செய்துள்ளார்.
கேசவன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் நடுவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார்.
“தாழ்த்தப்பட்டோருக்கு வர்க்க ஒடுக்குமுறையோடு, சமூக ஒடுக்குமுறையும் உள்ளது.
இந்தச் சமூக உற்பத்திமுறையை, நிலவுடைமையும், ஏகாதிபத்தியமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த உற்பத்தி முறையை மாற்றாமல் தாழ்த்தப்பட்டோருக்கு வர்க்க விடுதலை சாத்தியமில்லை. மேலும், தாழ்த்தப்பட்டோர் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் அணி திரண்டு போராடுவதன் மூலமே அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும்” என்ற கருத்தை கேசவன் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
கேசவன் மார்க்சிய அடிப்படையில்,
திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம்
பற்றி ஆய்வு மேற்கொண்டு நூல்களை எழுதி அளித்துள்ளார். மேலும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முதலிய தலைவர்களின் அரசியல் கொள்கைகள், பணிகள் பற்றியும் ஆய்வு செய்து நூல்கள் படைத்துள்ளார்.
இலக்கிய விமர்சன கொள்கை குறித்து கேசவனின் கூற்று,
`ஒரு இலக்கியதை விமர்சிக்கும் போது, அந்த இலக்கியம் தோன்றிய சமூகத்தின் புறநிலை யதார்த்தத்தையும், மனோபாவத்தையும் காண்பது மிகவும் அவசியம். இது தவிர்க்க இயலாதவாறு சமூகச் சூழலை சொல்வதில் முடிந்து விடுகிறது’.
மேலும், `இலக்கியம் என்பதைக் குறிப்பிட்ட தன்மையிலும், சமூகம் என்பதை பொதுத் தன்மையிலும் காண வேண்டும். எனவே, இலக்கியத்தை விமர்சிக்கும் போது, இந்த இரண்டின் இணைவு நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும்’.
தமது உடல் நலத்தை கவனிக்காமல் ஆய்வுப் பணியிலும், எழுத்துப் பணியிலும், இயக்கப் பணியிலும், பேராசிரியப் பணியிலும் ஓய்வின்றி அயராது பாடுபட்ட புரட்சிகர எழுத்துப் போராளி கேசவன் 1998-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16-ஆம் நாள் தமது ஐம்பத்து இரண்டாவது வயதில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.
“ஆய்வாளர் சிலர் ஆய்வு என்ற பெயரில் தனிநபர் வழிபாட்டிற்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் களம் அமைக்கின்றார்கள்.
இந்தப் போக்கிற்கு முற்றிலும் மாறாக நடுநிலைமையில் ஆய்வு மேற்கொண்டவர் கேசவன். இதனால் ஒரு சிலர் அவரைத் தூற்றியதும் உண்டு. அரசியல் சமூகத் தளங்களில், சமூகவியல் பார்வையில் விஞ்ஞானப் பூர்வமான பார்வையைக் கொண்டோர் வெகு சிலரே
உள்ள சூழலில் கேசவனின்மறைவு தமிழக ஆய்வு உலகிற்கு உண்மையிலேயே பேரிழப்பாகும்” என தமிழகத்தின் மூத்த ஆய்வாளர் பெ.சு.மணி புகழாரம் சூட்டியுள்ளார்.