சென்ற ஆண்டு பட்ஜெட்டில், பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுத்து உலகத் தரத்திலான பல்கலைக்கழங்களாக மாற்றுவது என்று அறிவித்திருந்தார்கள். அதன்படி இரண்டு பல்கலைக்கழகங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. 'Institute of eminence' என்று சொல்கிறார்கள். அதன்படி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்றால் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த ஆயிரம் கோடி ரூபாயில் மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசின் பங்கு என்ன? மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசுதான் பணம் கொடுக்க வேண்டும்.
காலேஜ் ஆஃப் என்ஜினியரிங் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. 1978 இல் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதற்கென தனிச்சட்டம் தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டது. அதன்பின் பல்துறை ஆளுமைகளை இப்பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. அவர்கள் எல்லோரும் உலக அளவில் பல்வேறு முக்கியப் பணிகளில் பெரும்பங்கு ஆற்றி வருகிறார்கள். பிறகு அந்தப் பல்கலைகழகம் முதல் 200 அல்லது 300 இடங்களில் ஏன் வரவில்லை என்று கேட்கிறார்கள். அந்த நாடுகளின சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளும் இங்குள்ள சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஒன்றாக இருக்கின்றனவா? 'Institute of eminence' விதி முறைகளின்படி 25 சதவீதம் பேர் வெளிநாட்டு மாணவர்களாக இருக்கலாம்.
பல்கலைக்கழகத்திற்கு நிதி தன்னாட்சி, நிர்வாகத் தன்னாட்சி என்று சொல்கிறார்கள். அனைத்து மாணவர்களுக்குமான கட்டணத்தையும் பல்கலைைக்கழகமே முடிவு செய்து கொள்ளலாம். ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகமே முடிவு செய்து வழங்க வேண்டும். இதற்கான நிதி ஆதாரங்களைப் பல்கலைக்கழகமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். மாணவர் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர எப்படி பல்கலைக்கழகத்தால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியும்? கட்டணம் உயர்த்தப்படும் போது எப்படி ஏழை மாணவர்கள் படிக்க முடியும்?
தமிழ்நாடு அரசு 69% இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி வருகிறது. இது தொடருமா? தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது. தன்னாட்சி அதிகாரம் பெறும் போது தமிழக அரசின் கொள்கை பின்பற்றப்படுமா அல்லது நுழைவுத் தேர்வு நடத்தப்படுமா?
எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், அக்கட்சி ஆட்சியிலிருக்கும் காலத்திலேயே அது உருவாக்கப்பட்ட நோக்கம் சிதைந்து போய்க் கொண்டிருக்கிறது. இது திராவிட இயக்கம் செய்த பணிக்கு நேர்ந்திருக்கும் நெருக்கடி. அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தேவைப்படும் நிதியை மாநில அரசு அளிக்க முன்வர வேண்டும்.
- பிரின்ஸ் கஜேந்திர பாபு, கல்வியாளர்