தொல்தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தின் அடை யாளங்களாக எஞ்சி நிற்பவை சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இரு தொகுப்பின் வழியாக அடையாளப்படும் அவைகளுள் பண்டைத் தமிழரின் பண்பாடுகள், தமிழ் இலக்கியப் பாரம்பரியங்கள்

ஆகியன இருத்திக்கொண்டுள்ளன.

இந்த இரு தொகுப்பைக் கொண்டு

மட்டுமே பண்டைத் தமிழகத்தின்,

தமிழரின் அடையாளங்களைப் பற்றி பெருவகையில் எழுதவும் பேசவும் முடிகின்றன. தமிழ் இலக்கிய உருவாக்க மரபு குறித்த வரலாற்றை நாம் இவற்றிலிருந்துதான் எழுதவும் முடிகின்றது.

பரந்துபட்ட கால எல்லையில் பல புலவர்களால் பாடப்பெற்று பயணித்து வந்துள்ள சங்கப் பாடல்கள் ஒரு குறிப்பிட்ட காலப் புலமைச் செயல்களால் ஒருங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

சங்கப் பாடல்கள் தொகுக்கப்பட்ட புலமைச் சமூகத்தின் செயல்பாடு அப்பாடல்கள் பாடப்பெற்ற புலமைக்குச் சமமாக வைத்துப் போற்றத் தக்கதாகும். பண்டைக் காலத்தில் தொகுப்புப் பணியை இலக்கிய ஆக்கத்திற்கு இணையாகக் கருதிச் செய்துள்ளனர் என்பதைத் தமிழ்த் தொகுப்பு மரபின் வழியாக அறிந்துகொள்ள முடிகின்றது.

சங்கப் பாடல்கள் பாடப்பெற்ற காலம், அவை தொகுக்கப்பெற்ற காலம் குறித்துத் தமிழில் பல கருத்துக்கள் உண்டு.  இவை குறித்த விவாதங்கள் இங்குத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வகை முடிவுறா விவாதத்திற்கு அதன் கால எல்லையை அறுதியிட்டுச் சொல்லக்கூடிய ஆதாரப்பூர்வமான வரலாற்றுத் தரவுகள் கிடைக்காமலிருப்பது ஒரு காரணமாக உள்ளது. தமிழில் இவற்றிற்கு இணையான விவாதங்கள் சங்கப் பாடல் தொகுப்பினுள் ‘திருமுருகாற்றுப்படை’ நூல் இணைக்கப்பட்டது குறித்தும் இருந்துவருகின்றன.

சங்கப் பாடல் தொகுப்புகளுள் பத்துப்பாட்டு பத்து தனி நூல்கள் சேர்ந்த தொகுப்பு வடிவமாக இருக்கின்றது. பத்துப்பாட்டு நூலோடு சேர்த்துச் சுட்டப்படும் சங்கப் பாடல்கள் கி.மு. 250 - கி.பி. 250 காலப் பரப்பில் பாடப்பட்டவையாகவும்

கி.பி. 500 - கி.பி. 600 காலப்பரப்பில் தொகுக்கப் பட்டவையாகவும் முடிவு கொள்ளப்படுகின்றன. இதன் பின்னர் கி.பி. 1100 - 1700 காலப் பரப்பில் இந் நூல்களுக்கு உரைகள் இயற்றப்பட்டிருக்கின்றன.  சங்கப் பாடல்களின் தொகுப்பு, உரை ஆக்கங்கள் என்பன அப்பாடல்களின் தொடர்ச்சியான வாசிப்பு மரபினை வெளிப்படுத்துகின்றன.

தொடர்ச்சியான அறுபடாத இலக்கிய உருவாக்க மரபைக் கொண்ட தமிழ் மொழியில் காலந்தோறும் பல்வேறு வகைப்பட்ட இலக்கிய உருவாக்கம் நிகழ்ந்து வருகின்றது. தமிழ் இலக்கிய மரபில் உருவாக்கம் பெறுகின்ற இலக்கியங்கள் அந்தந்தச் சமகால வழக்கில் வாசிப்பிற்கு உட்பட்டிருக்கின்றன. 

சில இலக்கியங்கள் உருவாக்கம் பெற்ற கொஞ்ச காலத்திலேயே வாசிப்பு வழக்கை இழந்து போயிருக்கின்றன; சில இலக்கியங்கள் மிக நீண்டகாலத்திற்குப் பின்னும் தொடர்ந்து வழக்கில் நீடித்து வந்திருக்கின்றன. இதற்குரிய சான்றுகளை மீட்டெடுக்க உரைகளும் சுவடிகளும் அச்சுப் பதிப்பு களும் ஆதாரங்களாக உள்ளன.

உரைகள், சுவடிகள், அச்சுப் பதிப்புகள் ஆகியன வற்றை எண்ணிக்கையில் பலவற்றைக் கொண்ட இலக்கியங்கள் தமிழில் ஏராளமாக உள்ளன. அவற்றுள் சங்கப் பாடல்கள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. மக்கள் வழக்கில் குறிப்பாகப் புலமை மரபில் இவ் விலக்கியம் எப்படியெல்லாம் போற்றிப் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளன என்பதற்கு இந்நூல்களுக்கு உள்ள உரைகளும், சுவடிகளும், அச்சுப் பதிப்புகளும் சான்றாதாரங்களாக உள்ளன.  இவற்றிற்குச் சற்று மேலதிகமான ஆக்கமாகத் தொகுப்பு ஆக்கத்தைக் கருதலாம்.

சங்கப் பாடல்களும் நச்சினார்க்கினியர் உரையும் சங்கப் பாடல் உரைகளுள் நச்சினார்க்கினியர் உரை மட்டுமே புலமை மரபில் மிகுதியாகக் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளமை தெரிகிறது. தமிழ்ப் புலமை மரபில் ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்னும் புகழ்மொழியில் சுட்டப்பட்ட நச்சினார்க் கினியர், பழந்தமிழ் நூல்களுக்கு உரை கண்டவர்களுள் குறிப்பிடத்தக்கவராக அடையாளப்பட்டவர்.

தமிழ் இலக்கிய உரை மரபில் பொருள்கோடல் என்னும் உத்தியைக் கொண்டு உரைகண்ட பெருமை நச்சினார்க் கினியருக்கு மட்டுமே உண்டு. இந்த உத்தி தொல் காப்பியத்தில் சுட்டப்பட்டிருப்பினும் நச்சினார்க்கினி யருக்கு முன்பிருந்த உரையாசிரியர்கள் யாரும் கைக் கொண்டதாகக் குறிப்புகள் இல்லை. ‘மாட்டு’ எனும் இலக்கியப் பொருள் கோடல் உத்தியைக் கொண்டு பத்துப்பாட்டிற்கு இவர் எழுதிய உரையைப் புலமை உலகம் எதிர்த்தும் ஆதரித்தும் உள்ளன. இவர் எழுதிய உரையை மறுத்தே பிற்காலத்தில் புதிய உரைகள் தோன்றக் காரணமாயிருந்திருக்கின்றன.

‘சான்றோர் உரைத்த தண் தமிழ்த் தெரியல்

ஒருபது பாட்டும் உணர்வார்க்கு எல்லாம்

உரையற முழுதும் புரைபட உரைத்தும்’

என்று நச்சினார்க்கினியர் உரைச் சிறப்பை அவரின் உரைப்பாயிரப் பகுதி சுட்டுகிறது. இவரின் உரை நூல்களில் ஏராளமான வரலாற்றுச் சிறப்புகள் பொதிந்து காணப்படுகின்றன. நச்சினார்க்கினியர் உரைநூல்களில் எண்பதிற்கும் மேற்பட்ட நூல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளதை அறிஞர்கள் சுட்டிக்காட்டி அவரின் புலமைவியந்து பாராட்டியுள்ளனர்.

பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டும்கலியும்

ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத்

திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்

விருத்திநச்சி னார்க்கினிய மே’

எனவரும் வெண்பா, நச்சினார்க்கினியரைப் பற்றியும் அவர் உரை இயற்றிய நூல்கள் குறித்தும் அறிந்து கொள்ள துணைசெய்கின்றது. நச்சினார்க்கினியரின்

உரை நூல்கள் அனைத்தின் இறுதியிலும் உள்ள ‘மதுரை யாசிரியர் பாரத்துவாசி செய்த நச்சினார்க்கினியர் செய்தவுரை’ என்ற குறிப்பு மூலநூலினும் மேலாக உரை நூல் பெற்றிருந்த இடத்தைக் காட்டுகிறது.

சங்கப் பாடலின் பழைய உரைகளுள் கலித் தொகைக்கும், பத்துப்பாட்டிற்கும் நச்சினார்க்கினியர் எழுதிய உரை மட்டுமே முழுமையாகக் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றுள் பத்துப்பாட்டை உ.வே. சாமிநாதையர் பல சுவடிகளோடு ஒப்புநோக்கிய ஆராய்ச்சிப் பதிப்பை 1889ஆம் ஆண்டு வெளி யிட்டிருந்தார். உ.வே.சா. வின் அச்சுப் பதிப்பு வெளிவந்தவுடன் அந்தக் காலத்தில் தமிழ் பயின்று கொண்டிருந்த மாணவர்களுக்குப் பத்துப்பாட்டு பாடமாக இடம்பெற்றது. இந்தக் காலகட்டத்தில் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த மறைமலையடிகள் நச்சினார்க்கினியர் உரையை மாணவர்களுக்குப் பாடமெடுக்க வேண்டியிருந்தது.

‘மாட்டு’ எனும் உத்தியின் மூலம் நச்சினார்க்கினியர் உரை எழுதியிருப்பதை அப்பொழுது அறிந்துகொண்ட மறைமலையடிகள், அவருரையோடு மாறுபாடுகொண்டு பத்துப்பாட்டிலுள்ள முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய இருநூல்களுக்குத் தாமொரு புதிய உரையை எழுதி வெளியிட்டார். அவ்வுரைப் பதிப்பில் நச்சினார்க் கினியர் பாடலடிகளை இடம் மாற்றிப் பொருள் கொள்ளும் முறையை ஆராய்ந்து மறுத்து எழுதினார். நச்சினார்க்கினியர் அவ்வாறு இடம்மாற்றிப் பொருள் கொண்டிருப்பதன் மூலம் மூலநூலாசிரியன் கொள்கையைச் சிதைத்திருப்பதாகவும் அவர் கருதினார். அதனால் நச்சர் உரையை ஏற்க மறுத்தார். நச்சினார்க்கினியர் உரை குறித்த கருத்தை ஓரிடத்தில் இவ்வாறு பதிவுசெய்கிறார் மறைமலையடிகள்:

மாட்டு என்னுஞ் செய்யுளுருப்பின் பயனாகு மென்பது நுண்ணறி வுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக்கிடப் பவும், இதன் கருத்துப் பொருள் இதுவாதல் அறிய மாட்டாத நச்சினார்க் கினியர், செய்யுளில் இடையற்று ஒழுகும் பொருள் ஒழுக்கம் அறிந்து உரை எழுதாமல், ஓர் அடியில் ஒரு சொல் லையுந் தொலைவிற் கிடக்கும் வேறோர் அடியில் வேறொரு சொல்லையும் தமக்குத் தோன்றியவாறெல்லாம் எடுத்து இணைத்துத் தாமோர் உரை உரைக்கின்றார். 

நச்சினார்க்கினியருக்கு முன்னேயிருந்த நக்கீரர், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர் முதலான உரையாசிரியன் மாராதல், அவர்க்குப் பின்னேயிருந்த பரிமேலழகிரியார், அடியார்க்கு நல்லார், சிவஞான யோகிகள் முதலியோராதல் இவ்வாறு செய்யுட்களைக் கண்டவாறெல்லாம் அலைத்து உரை எழுதக் கண்டிலம் (முல்லைப் பாட்டு ஆராய்ச்சி உரை, 1911, பக். 26, 27).

நச்சினார்க்கினியர் தொல்காப்பியர் சுட்டிய மாட்டிலக்கணத்தைப் புரிந்து கொள்ளாமல் செய்யுளைத் திரித்து உரை எழுதியிருப்பதாக மறைமலையடிகள் மதிப்பிட்டார். மறைமலையடிகளாரைப் போன்று பின்னாளில் இன்னும் பலர் அவர் உரையை மறுத்து எழுதினர்.

புலமையுலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நச்சினார்க்கினியர் உரையில் தமிழ் நூல்களின் தொகுப்பு குறித்த வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றிருப்பது கவனத்தில்கொள்ளத்தக்கதாய் உள்ளது. சங்க நூல்களின் தொகுப்பு மரபு குறித்து இதுவரை நாம் அறிந்திருக்கும் கருத்துகளுக்குள் மாற்றுப் பார்வையைச் செலுத்த வல்லதாய் அக்குறிப்புகள் உள்ளன. பத்துப்பாட்டுள் இறுதியாக இடம்பெற்றுள்ள ‘மலைபடுகடாம்’ நூலின் உரையிலும் அவரின் தொல் காப்பிய உரையிலும் அந்தக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

நச்சர் உரையில் தொகுப்பு பற்றிய ஒரு குறிப்பு

சங்க நூல்களின் தொகுப்புகள் பல்வேறுபட்ட அடிப்படை களைக் கொண்டுள்ளன. அவற்றுள் முக்கியமானதாகத் ‘திணை’ முறை பின்பற்றப்பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தத் திணை முறையோடு யாப்பு வகை, அடியளவு, எண் முறை ஆகியன கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. சங்கப் பாடல்கள் முழுதும் இந்த முறை களைக் கொண்டு தொகுத் துள்ளமை வெளிப்படையாகத் தெரிந்தவையாகும். இவைகளை மையமாகக் கொண்டு புலவர், அரசர், அரச குடிகள், பாடல் எழுந்த நிலப்பரப்பு ஆகியன சங்கப் பாடல் தொகுப்பினுள் வினை புரிந்துள்ளன. இவை மட்டுமின்றி மற்றோரு முக்கியமான புலமைச் செயல்பாடும் சங்கப் பாடல் தொகுப்பினுள் இருந்துள்ளது. இந்தச் செய்தித் தொகுப்பு பற்றிய ஆய்வாளர்களின் கவனத்திற்கு உட்படாமல் இருந் துள்ளன.

மலைபடுகடாம் நூலின் 145 - 150ஆம் பாடலடி களுக்கான உரையில் பண்டைக் காலத்தில் இருந்த தொகுப்பு நெறி பற்றிய குறிப்பு வருகின்றது. செங்காந்தளின் முகைக்குத் தீ உவமை. “தீயினன்ன” என்னும் சொல் “இயற் பெயர் மருங்கின் மங்கலமழியத் தொழிற்சொல் புணர்ப்பது சொல்லானந்தம்” (யா. வி. ஒழிபு) என்னும் விதியுண்மையால் ஆனந்த குற்றம் என்னும் குற்றமுடையதெனவும் அக் குற்றம்படச் செய்யுள் இயற்றியதால் பாடினாரும் (கௌசிகனார்) பாட்டுண்டாரும் (நன்னன்) இறந்தாரென்றும் பண்டை நாளில் ஆளவந்த பிள்ளை ஆசிரியர் என்பார் குற்றங் கூறியுள்ளார் (மலைபடுகடாம் மூலமும் உரையும், உரையாசிரியர் திரு. பொ.வே. சோமசுந்தரனார், கழகம், 1976, பக். 57, 58). அக்குற்றம்பட அமைந்துள்ளதாகக் கருதப்படும் பாடலடிகள்:

தீயின் அன்ன ஒண்செங் காந்தள்         

தூவல் கலித்த புதுமுகை ஊன்செத்து

அறியாது எடுத்த புன்புறச் சேவல்

ஊன் அன்மையின் உண்ணாது உகுத்தென

நெருப்பின் அன்ன பல்லிதழ் தாஅய்

வெறிக்களம் கடுக்கும் வியலறை தோறும்

 (மலைபடுகடாம், 145 - 150)

என்பதாகும். இப்பாடலடிகளுக்கு நச்சினார்க்கினியர் இவ்வாறு உரைவிளக்கம் எழுதியிருக்கிறார்.

“நெருப்பினை யத்த  ஒள்ளிய செங்காந்தளினது மழையாலே செருக்கி வளர்ந்த புதிய முகையைத் தசையாகக் கருதி முகை என்று அறியாதே

எடுத்த புற்கின்ற முதுகினையுடைய பருந்து தசையல்லாமையான் உண்ணாமல் அவை யிற்றைச் சிந்திப்போட்டதாக நெருப்பினை ஒத்த பல இதழ்கள் பரந்து வெறியாடுகின்ற களத்தை ஒக்கும் அகன்ற பாறைகள்தோறும் மணம் செய்த மனைபோல மணக்கும் பெரிய மலைப்பக்கத்தே உள்ள தேனினை உடையராய்க் கிழங்கினை யுடையராய்த் தசை நிறைந்த கடகத்தை யுடையராய் சிறிய கண்ணையுடைய பன்றியிற் பழுதானவற்றைப் போக்கி அதன் தசையையும், தம்மிற் போர்செய்து பட்ட யானையினது கொம்புகளைக் காவுமரமாக மற்றுமுள்ள தசைகளோடே நிறைந்த யட்டிகளையும் காவிக் கொண்டு வந்த கானவருடைய வளவிய பலவாகிய புது வருவாயினையுடைய சிறிய ஊரிலே தங்கினால் கரிய பெரிய சுற்றத்தோடே அவ்வுணவுகளை மிக பெறாநிற்பீர்” (பத்துப் பாட்டு நச்சர் உரை, உ.வே.சா. பதிப்பு, 1889, பக். 143 - 144).

இவ்வகை உரை விளக்கத்தைத் தொடர்ந்து, மற்றொரு உரைக்குறிப்பையும் நச்சினார்க்கினியர் தருகிறார். அந்தக் குறிப்பில் சங்க காலத்தில் நிலவிய தொகுப்பு மரபு பற்றிய குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

“இதற்கு நன்னன் என்னும் பெயர் தீயோட்டுத் தன்மையின், ஆனந்தமாய், பாடினாரும், பாட்டுண் டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளை யாசிரியர் குற்றங் கூறினாராலெனின், அவர் அறியாது கூறினார்; செய்யுட் செய்த கௌசி கனார், ஆனந்தக் குற்றமென்னுங் குற்றமறியாமற் செய்யுட் செய்தாரேல், இவர் நல்லிசைப் புலவராகார்; இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்ஙனம் நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் என்ப தொரு குற்றம் இச் செய்யுளுட் கூறாமை யானென்றுணர்க (பத்துப்பாட்டு நச்சர் உரை, உ.வே.சா. பதிப்பு, 1889, ப. 143).

இந்தக் குறிப்பின்வழி, சங்க காலத்தில் மலை படுகடாம் நூலை ஆளவந்த பிள்ளை ஆசிரியர் என்பவர் ஆனந்த குற்ற வகையுள் வைத்தெண்ணியுள்ளார் என்பதையும் அவர் கூற்றை மறுத்து விளக்கம் கூறும் வகையிலேயே நச்சினார்க்கினியர் மேற்கண்ட விளக்கத்தை எழுதியுள்ளார் என்பதையும் அறியமுடிகிறது. ஆனந்த குற்ற வகையுள்ள பாடல்களைப் புலமையுலகம் மதிப்பளிக்கவில்லையென்பதும், அவ்வகையான பாடல்களைச் சங்கப் பாடல்களைத் தொகுப்பித்தோர் தொகுப்பினுள் சேர்க்காமல் புறந்தள்ளியுள்ளனர் என்பதையும் அறியமுடிகின்றன.

ஆனந்த குற்ற வகையுள் அடங்காது என்பதற்குக் கீழ்வரும் உரைவிளக்கத்தை நச்சினார்க்கினியர் தந்திருக்கிறார்.

இச் சொன்னினை நோக்குமிடத்து ஒரு குற்றமும் இன்று; என்னை? அன்னவென்னும் பெயரெச்ச உவமவுருபு தீ யென்னும் பெயரைச் சேர்ந்து நின்று இன் சாரியை இடையே அடுத்து நிற்றலின்; நன்னன் என நகரமுதலும் னகர வொற்றீறுமாய் நிற்கும் சொல்லாயினன்றே அக் குற்றம் உளதாவதென மறுக்க. நன்னவென அண்மை விளியாய் நின்ற முன்னிலைப் பெய ரென்று குற்றங் கூறுவார்க்கு இப் பாட்டுப் படர்க்கையேயாய் நிற்றலிற் குற்றமின்றென்க.

நூற்குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே “தன்னானொரு பொருள் கருதிக் கூறல்” என்னும் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்ற மென்று நூல் செய்ததன்றி அகத்தியனாரும், தொல்காப்பியனாரும் இக் குற்றம் கூறாமையின் சான்றோர் செய்யுட்கு இக் குற்றமுண்டாயினும் கொள்ளார் என மறுக்க” என்பதாம் (பத்துப்பாட்டு நச்சர் உரை, உ.வே.சா. பதிப்பு, 1889, ப. 143).

நச்சினார்க்கினியரின் உரைக் குறிப்புகள், சங்கப் பாடல் தொகுப்புமுறை இன்றைக்கு நாம் அறிந் திருக்கும் திணை, அடியளவு, எண்முறை ஆகியனவற்றை மட்டும் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாக்கு கின்றன. இந்தமுறைகளைக் கடந்த புலமை மிகுந்த தொகுப்பு முறை பின்பற்றப்பட்டுள்ளதை இவ்வுரைக் குறிப்பு தெரிவிக்கிறது. நச்சினார்க்கினியர் தொல் காப்பிய உரையிலும் சங்கப் பாடல் தொகுப்புமுறை குறித்த குறிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

சொல்லக்கருதும் கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில் பிற கருத்துக்களைச் சான்றாகத் தரும் வழக்கம் உரை மரபில் உண்டு. அவற்றைத் தமிழில் மேற்கோள் என்பர். நச்சினார்க்கினியர் பல சங்கப் பாடல்களை மேற் கோளாகக் காட்டி உரை எழுதியிருக்கிறார். அவற்றுள் சங்கப் பாடல் தொகுப்பு பற்றிய குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன.

திணை மயக்கம் குறித்த ‘உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே’ (அகத்திணை - 13) எனும் நூற்பாவிற்கு உரை எழுதுகின்றபோது கலித்தொகைப் பாடல்களையும் (56, 103, 104, 139, 112, 2) அகநானூற்றுப் பாடலையும் (11) நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இவற்றுள் கலித்தொகை 56ஆம் பாட்டு தொல்காப்பியர் சுட்டும் ‘கைக்கிளை’ குறிப்பை வெளிப்படுத்துவதாகும். ஆனால் குறிஞ்சிக் கலியில் இடம்பெற்றிருக்கும்.

நச்சினார்க்கினியர் இப்பாட்டு ‘குறிஞ்சிக்கலி’ யில் இடம்பெற்றது குறித்து ‘இது நிலம்வரையாது வந்த கைக்கிளை. இதனைக் குறிஞ்சியுட் கோத்தார் புணர்ச்சி யெதிர்ப்பாடாகலின்’ என்று உரைவிளக்கம் எழுதுகிறார். இதுபோல் கலித்தொகை 138, 142 ஆகிய இரண்டு பாடல்களும் ‘பெருந்திணை’ குறிப்பை உணர்த்தக்கூடியனவாகும். இவை நெய்தல் கலியில் இடம்பெற்றிருக்கும்.

அவ்வாறு இடம்பெற்றதற்குக் காரணம் ‘‘புரிவுண்ட புணர்ச்சிÓ என்றது முதலிய ஆறுபாட்டுந் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணை. இவற்றை Ôநெய்தலுட் கோத்தார் சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின்’ என்று விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.

சங்கப் பாடல் தொகுப்பாக்கத்தில் திணை, யாப்பு வகை, அடியளவு, எண்முறை, புலவர், அரசர், அரச குடிகள், நிலப்பரப்பு ஆகியன கவனத்தில் கொள்ளப் பட்டுள்ளமை வெளிப்படையாகத் தெரிகின்றன. இவற்றைக் கடந்த ஆழமான புலமை மதிப்பீடுகள் சங்கப் பாடல் தொகுப்பு முறையில் இருந்ததை நச்சினார்க் கினியர் உரைக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

நச்சினார்க்கினியர் மலைபடுகடாம் நூலின் உரையில் சுட்டும் ‘கோவாமல் நீக்குவர்’ என்ற சொல்லாடலும், தொல்காப்பிய உரையில் சுட்டும் ‘கோத்தார்’ எனும் சொல்லும் சங்கப் பாடல் தொகுப்பு நிலையில் செயலாற்றிய புலமைச் செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. அக்குறிப்புகளின் வழியாகப் ‘பாடலின் பொருளே’ தொகுப்பின் முதன்மைக் கூறாகக் கொள்ளப்பட்டுள்ளமை வெளிப்படுகின்றது.

இதுநாள் வரையில் சங்கப் பாடல் தொகுப்பு வரலாற்றை எழுதியவர்கள் இந்தச் செய்தியைக் கருத்தில் கொண்டெழுதியதாகத் தெரியவில்லை. இனிவரும் காலத்தில், சங்கப் பாடல் தொகுப்பு வரலாற்றை எழுதுவோர் இதைக் கவனத்தில்கொண்டு எழுத வேண்டியது அவசியமாகும். அப்படி எழுதப்படும் வரலாறு சங்கப் பாடலின் தொகுப்புமுறைகளைத் தெளிவுபடுத்த உதவும். அதுவே முழுமையான வரலாறாகவும் அமையும்.

துணைநின்ற நூல்கள்

1. வையாபுரிப்பிள்ளை, எஸ் (ப. ஆ.). 1934. தொல்காப்பியப் பொருளதிகாரம் - முதற்பாகம் (நச்சினார்க்கினியம்), சென்னை: சாது அச்சுக்கூடம்.

2. வேதாச்சலம், ஆர். எஸ். 1911 (3ஆம் பதிப்பு). முல்லைப்பாட்டு ஆராய்ச்சி உரை, சென்னை: சன்மார்க்க நிலையம்.

3. சோமசுந்தரனார், பொ.வே. (பதிப்பும் உரையும்). 1976 (மறுஅச்சு). மலைபடுகடாம் மூலமும் உரையும், சென்னை: சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

4. சாமிநாதையர் உ. வே. (ப. ஆ.) 1889. பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், சென்னை: திராவிட ரத்னாகர அச்சுக்கூடம்.

Pin It