“நான் தீங்கற்ற சுத்தமான கல்வியை உடைய ஒரு புரோபஸர். ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களிடையே நன்கு மதிக்கப்பட்டவன். மரியாதையுடன் வரவேற்கப் படுபவன். தூங்கும் மனங்களைத் தட்டி எழுப்புபவன். அசட்டுத் துணிவையும், அறியாமையையும் அகற்று பவன். நான் எல்லா வகையிலும் மக்களைப் பொதுவாக நேசிக்கிறேன். எந்த மனிதனாயினும் சரி, எந்த நாடாயினும் சரி, இத்தாலியும் பிரிட்டனும் எனக்குச் சமந்தான். ஆணும் பெண்ணும் எனக்குச் சமந்தான். அரசனும் சரி ஆண்டியும் சரி; கந்தலும் சரி பொன் ஆடையும் சரி, கவலையில்லை. எவர் பழகுவதற்குத் தகுந்தவராகவும் உபயோகம் உள்ளவராகவும் சிநேக பாவமும் மரியாதையும் அன்பும் காட்டுபவரோ அவரையே நான் பெரிதும் மதிக்கிறேன். அவரையே நான் நேசிக்கிறேன். பொய்யையும் புனைவுச் சொல்லையும் பிரச்சாரம் செய்யும் பித்தலாட்டக்காரர்களால் வெறுக்கப் படுபவன். நான் அறிவு ஆராய்ச்சிப் பிரியர்களாலும், யோக்கியர்களாலும், உதாரண குணமுடைய எதார்த்த வாதிகளாலும் போற்றப்படுபவன் என்று ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் புரூனோ தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையில் கூறியிருப்பதைக் கொண்டு, ஒருவாறு அவரது மனோபாவத்தையும் துணிவையும் நாம் உணரலாம்” (புது உலகம்: அக்.1935).

புரூனோ குறித்து சிங்காரவேலர் செய்துள்ள பதிவே மேலே உள்ளது. புரூனோவை அவர் கொண்டாடுவதன் மூலம் தமது கருத்துநிலையை உணர்த்துகிறார். இன்றைய வைதீகம் சார்ந்த மயிலாப்பூரில், அன்று அவைதீக மரபை முன்னெடுத்த சமூகஅறிவியலாளராக சிங்காரவேலர் (1860 - 1946) வாழ்ந்தார். அவரின் கால் நூற்றாண்டு (1917 - 1946) வாழ்க்கை குறித்தப் பதிவாக இப்பகுதி அமைகிறது.

மனிதர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைத் தான் மேற்கொள்கிறார்கள். இயற்கை நிகழ்வுகளைத் தொல்பழங்காலம் முதல் மனிதர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இயற்கை நிகழ்வுகள் குறித்து ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் புதிதுபுதிதாக அறிந்து கொள் கிறார்கள். இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணம் தெரியாத காலம் ஒன்று இருந்தது. அப்போது தாங்கள் எதிர் கொள்ளும் அனுபவம் சார்ந்து, இயற்கை நிகழ்வு களுக்கான காரணங்களை ஊகப்படுத்திக் கொண்டார்கள். ஊகங்கள் காலப்போக்கில், தர்க்கரீதியான காரணங்களால் விவாதிக்கப்பட்டன. காலந்தோறும் மனிதர்களின் பட்டறிவும் ஊகங்களும் இணைந்தே இருந்தன. இவை பின்னர் தர்க்க அடிப்படையில் விளக்கம் பெறும்போது, அதனை அறிவியல் முறை என்று புரிந்து கொண்டோம். பிரபஞ்ச நிகழ்வுகளைத் தர்க்கரீதியான புரிதல் இன்றி, வெறும் நம்பிக்கை மற்றும் ஊகம் சார்ந்து அணுகும் நடைமுறை இன்றும் முழுதாக மாறிவிடவில்லை. ஆனால், இதனை அறிவியல் முறை என்று ஏற்றுக்கொள்வதில்லை. எகிப்து, கிரேக்கம் போன்ற பண்டைய சமூகங்களில் சொல்லப்பட்ட அறிதல் முறை என்பது படிப்படியாக கி.பி.5ஆம் நூற்றாண்டு தொடங்கி மாறத் தொடங்கியது. கி.பி.15ஆம் நூற்றாண்டு அளவில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டன. கோப்பர்நிக்கஸ் (1473 - 1543) பூமியின் இயக்கத்தைக் கண்டறிந்தார். கெப்ளர் (1571 - 1630), கலிலியோ (1564 - 1642) ஆகியோர் அக்கருத்தை வலுப்படுத்தும் வகையில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தனர். புரூனோ (1548 - 1600) மேற்குறித்த பூமியின் இயக்கத்தை விரிவான பரப்புரை மூலம் உலகம் முழுவதும் அறியச் செய்தார். இவரைக் கத்தோலிக்க மதம் நெருப்பில் தள்ளிக் கொன்றது.

இவ்வகையில் சிங்காரவேலர் எனும் மனிதர் எத்தகைய ஆளுமையாக வாழ்ந்தார் என்பது குறித்த உரையாடலை மேற்கொள்வது நமது நோக்கம். இதனைக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்வோம்.

உலகில் 1840 முதல் மார்க்சியம் எனும் தத்துவம் இதுவரை பேசிய தத்துவங்களுக் கெல்லாம் மாற்றாக அமைந்தது. அத் தத்துவ முறையை ஏற்று, வாழ்நாள் முழுதும் அது குறித்த பரப்புரை மேற்கொள்பவராக வாழ்ந் தார் சிங்காரவேலர். இதன் மூலம் சமூகம் குறித்த புதிய பார்வையை உள்வாங்கியவராக இருந்தார். சமூகம் பற்றிய தர்க்கம் சார்ந்த, சமூக விஞ்ஞானத்தை ஏற்றுக்கொண்டார். இவ்வகையான இவரது ஆளுமை குறித்து உரையாடுவது அவசியம்.

உலகில் நிகழ்ந்த புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் குறித்த புரிதலை உள்வாங்கிய வராக வாழ்ந்தார். அவ்வகையான கண்டு பிடிப்புகள், சமூகம் குறித்த புதிய கண் ணோட்டத்தை எவ்வகையில் தருகின்றன என்பது தொடர்பான விரிவான உரையாடல் களைத் தமது எழுத்துக்கள் வழி மேற் கொண்டார். இத்தன்மை சார்ந்த இவரது ஆளுமை குறித்துப் பேசுவதும் இன்றைய தேவை.

சமூகத்தில் உருவான புதிய தன்மைகளை உள் வாங்கி புதிய சமூகச் செயல்பாடுகளை முன்னெடுப்பது என்பது அவசியமாகும். இவ்வகையான சமூகச் செயல்பாடுகளை எந்தெந்தப் பாங்குகளில் சிங்காரவேலர் முன்னெடுத்தார் என்பது குறித்த புரிதல் அவசியமாகும். அந்தப் பின்புலத்தில் சிங்கார வேலர் ஆளுமை குறித்து உரையாடும் தேவையுண்டு.

அறிவியல் மனப்பாங்கு என்பது, தன்னைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் குறித்த தர்க்கப்பாங்கிலான புரிதல் ஆகும். காலம் காலமாக சமூகம் கற்பித்து வைத்துள்ள நம்பிக்கைகளை கேள்வியின்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலை அறிவியல் பாங்கான மனநிலைக்கு எதிரானது. சிங்காரவேலர் சட்டம் பயில்வதற்காக இலண்டன் சென்றார். அக்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம். பதினைந்தாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பிய சமூகத்தில் நிகழ்ந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பவை மனித சமூகத்தில் புதிய தொழில்நுட்ப அறிவை உருவாக்கின. அநுபவம்

சார்ந்த அறிவு என்பது நடைமுறை நிகழ்வுகள் சார்ந்த அறிவாக வடிவம் பெற்றது. புவி ஈர்ப்பு விசை, சக்கரம் வழி பயணித்தல், நீண்ட தொலைவு செய்தித் தொடர்பு, பூமியின் இயக்கம் குறித்த புதிய புரிதல், கோள்கள் பற்றிய அறிவு, மின்விசைக் கண்டுபிடிப்பு ஆகிய பல நிகழ்வுகள் மனித சமூகத்தின் உற்பத்தி முறையையே மாற்றின. இயற்கையின் மீது தமது உடல் உழைப்பை செலுத்தி, பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்வதற்கு அவன் பயன்படுத்திய கருவிகள் மாறின. புதிய எந்திரங்கள் கருவிகளாக உருப்பெற்றன. புதிய கருவி, புதுவகையான உற்பத்தி ஆகியவற்றால் தவிர்க்க இயலாமல் மனித சமூகம் புதுவகையான நுகர்தல் சார்ந்த வாழ்முறைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டது. இத்தன்மையின் உடன் விளைவாகத்தான் தொழில் புரட்சி உருவானது. ஐரோப்பிய சமூகத்தில் உருவான இவ்வகையான மாற்றத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பு சிங்காரவேலருக்குக் கிடைத்தது. தமது சட்டப்படிப்போடு உலகில் நிகழும் மாற்றங்களை உள்வாங்கியவராகச் செயல்பட இலண்டன் வாழ்க்கை அவருக்கு உதவியது என்பதை அவரது பிற்கால வாழ்க்கை உறுதிப்படுத்துகிறது.

சிங்காரவேலர் 1917 ஆம் ஆண்டு தொடக்கம் 1946 ஆம் ஆண்டு முடிய தமிழ்ச்சமூகத்தில் செயல்பட்ட முறைமை என்பது, அவரை ஒரு சமூக அறிவியலாளர் (Social Scientist) என்பதை உறுதிப்படுத்துகிறது. இதனைப் புரிந்து கொள்வதற்குக் கீழ்க்காணும் வகையில் தொகுத்துக்கொள்ளலாம்.

காங்கிரஸ் இயக்கத்தில் அவருக்குத் தொடர்பு இருந்த காலங்களிலேயே விவசாயி - தொழி லாளி தொடர்பான உரையாடல்களை அவ்வியக்கத்தில் முன்னெடுக்கும் பணியை மேற்கொள்ளுதல்.

காங்கிரஸ் அமைப்பில் இருந்து கொண்டே விவசாயி - தொழிலாளர்களுக்கான அமைப்பை உருவாக்கி, அதற்கென இதழ்களை நடத்தத் தொடங்கியமை.

இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கம் உருப் பெற்ற தொடக்கத்திலேயே, அவ்வமைப் போடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். கம்யூனிஸ்டு இயக்கத்தின் முதல் மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தியவர். இந்தியாவில் முதன் முதல் மே தினக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியவர். இவை இவரது ஈடுபாட்டைப் புரிந்துகொள்ள உதவும்.

சுயராஜ்ஜியம் என்னும் கருத்துநிலை பொது வெளியில் உரையாடலுக்கு வந்தபோது, யாருக்கு சுயராஜ்ஜியம்? எனும் உரையாடல் மூலம் இந்தியாவில் வாழும் உழைக்கும் மக்கள் பக்கம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

இந்தப் பின்புலத்தில், மார்க்சியம் எனும் சமூக அறிவியல் சார்ந்த தத்துவத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டை புரிந்து கொள்ள முடிகிறது. இதனை அவரது கூற்று உறுதிப்படுத்துகிறது.

“மக்களது வாழ்க்கையைக் குறித்து உத்தேசித்து வரும் தத்துவங்கள் யாவும் இதுகாறும், சித்து ஒன்று இருக்கின்றது; அந்த சித்திலிருந்தே பிரபஞ்சம் தோன்றியது; மக்கள் வாழ்க்கைக்கு அந்த சித்தே அடிப்படை என்று வாதித்து வருகின்றன. ஆனால், சமூகத் தத்துவமோ மெனில், அந்தந்தக் காலத்து மக்கள் வாழ்க்கை, அந்தந்தக் காலத்துப் பொருளாதார நிலைமையி லிருந்தே பெறப்பட்டது. அந்த வாழ்க்கை, நாகரிக  வாழ்க்கையாயினும், அநாகரிக வாழ்க்கை யாயினும் மற்றெந்த வாழ்க்கையாயினும் அந்தந்த சமூகத்தின் பொருளாதார வாழ்க்கையின்படியே ஏற்பட்டவை” (புது உலகம். நவம்பர். 1935: 1975: 126).

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் உரை யாடலுக்கு வந்த சமூக அறிவியல் சார்ந்த தத்துவ சிந்தனை மரபுதான், மேற்கண்டவாறு சிங்காரவேலர் சமூகத்தைப் புரிந்து கொண்ட மரபாகும். இத்தத் துவத்தை நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு நடை முறைப்படுத்துவது என்பது குறித்த செயல்பாடுகளை மேற்கொண்டவர்தான் சிங்காரவேலர். இவ்வகையான நடைமுறைச் செயல்பாடுகளே அவரது வாழ்க்கையாக அமைந்து போனது.

1917இல், காலனியத்திலிருந்து விடுதலைபெறும் போராட்டத்தில் புதிய முறைமைகள் உருப்பெற்றன. இதில் ‘ஹோம் ரூல்’ கிளர்ச்சி குறிப்பிடத்தக்கது. இக் காலத்தில்தான் வட்டாரப் பண்புகளை மதித்து, ஒற்றைப் பரிமாணத்தைக் கைவிட்டு, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தன. இதன் தொடர்ச்சியே இரட்டை ஆட்சிமுறை. இக்காலங்களில் காந்தி சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஒத்துழையாமை மரபு சார்ந்த இந்த இயக்கத்தில் சிங்காரவேலர் பங்கு கொண்டார். இவ்வகையில் இடதுசாரி மனநிலை உடைய காங்கிரஸ்காரராக இருந்தார். ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடந்த ஜாலியன் வாலாபாக் கிளர்ச்சி என்பது ஜாலியன் வாலாபாக் படுகொலையாக முடிந்தது. இதனால் 1917 - 1922 காலங்களில் இந்தியா கொந்தளிப்பான சூழலைக் கொண்டிருந்த காலம். இந்தியாவிற்கு வந்த வேல்ஸ் இளவரசர் புறக்கணிப்புப் போராட்டம் நடந்தது. அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு இயக்கம் நிகழ்ந்தது. இந்த இயக்கங்களில் சிங்காரவேலர் என்ன பங்கு ஆற்றினார் என்பதை, அவரது வரலாற்றாசிரியர்களான கே.முருகேசன் சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் பின்வரும் வகையில் பதிவு செய்துள்ளார்கள்.

“இக்காலத்தில் சென்னை நகரில் மிக சுறு சுறுப்பாகப் பணியாற்றிய ஒருவராக சிங்காரவேலர் திகழ்ந்தார். அவர் ஜாலியன் வாலாபாக் படு கொலையைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்தினார். தம் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். தனது வழக்கறிஞர் அங்கியைப் பொது மக்கள் முன்னிலையில் கொளுத்தினார். காங்கிரஸ் தொண்டர்களை ஒன்று திரட்டினார். சென்னை மாநகரின் பல பகுதியில் ஊர்வலங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தினார். ஜனவரி 1922இல் சென்னைக்கு வந்த வேல்ஸ் இளவரசரைப் புறக்கணிக்க முனைப்பாக மக்களைத் திரட்டினார். காங்கிரசுக்கு ஆதரவாகத் தொழிலாளரைத் திரட்டினார். தொழிலாளர் பிரச்சினைகளை ஊக்கத்துடன் எடுத்துக் கொண்டு பணியாற்றும் ஸ்தாபனமாக காங்கிரஸை ஆக்க காங்கிரஸ் கமிட்டிகளுக்குள் போராடினார். தீவிர இடது சாரிக் கருத்துக்களை மேடைப் பேச்சுக்களிலும் தன் கட்டுரைகளிலும் முன்வைத்தார். (1991: 47)

காலனிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்திய நிலப் பகுதியில் ஒரு பகுதியான மெட்ராஸ் இராஜதானியில், செயல்பட்ட காங்கிரஸ்காரர்களில் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அதில் காங்கிரஸ் கோட்பாடுகளுக்கு ஒத்து வராத பல்வேறு கருத்து நிலைகளையும் நடைமுறைப்படுத்த முயற்சி மேற் கொண்டார். இவ்வகையில் அன்றைய சூழலில் நடந்த போராட்டங்களில் பங்கு கொண்ட அதே வேளையில், அதற்குள் விவசாயி - தொழிலாளி சார்ந்த சமூக எதார்த்தத்தை வெளிப்படுத்திய முறைமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. காங்கிரஸ் இயக்கம் இவரது கோட் பாடுகளை உள்வாங்கும் அமைப்பாக இல்லை. எனவே, 1.5.1923 அன்று இந்தியாவில் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட மே தினக் கூட்டத்தில் தொழிலாளி - விவசாயி கட்சி அமைக்கப்பட்டிருப்பதை அறிவித்தார். அவ் வியக்கத்திற்காக ‘லேபர் கிஸான் கெஜட்;’ என்ற ஆங்கில ஏட்டையும் ‘தொழிலாளன்’ என்னும் தமிழ் ஏட்டையும் வெளியிடும் திட்டம் குறித்தும் அக் கூட்டத்தில் அறிவித்தார். காங்கிரஸ் இயக்கத்தை இடதுசாரி அமைப்பாகக் கட்டமைக்கும் முயற்சிகளாக இவை அமைந்தன. சிங்காரவேலர் 1917 -1922 காலங்களில் மக்கள் வெகுதிரள் அமைப்பாக இருந்த காங்கிரஸ் இயக்கத்திற்குள் செயல்பட்ட முறைமை என்பது, அவரது சமூகம் குறித்த பார்வையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. 1917இல் நிகழ்ந்த சோவியத் புரட்சி போன்ற பல்வேறு நிகழ்வுகளை உள்வாங்கி இருந்தார். அதே நேரத்தில் காங்கிரஸ் நடத்திய போராட்டங்களிலும் தம்மை இணைத்துக் கொண்டார். அன்றைய சூழலில் இவரது நடவடிக்கை தனித்த பார்வை உடையதாக இருந்தது. இதன் மூலம் அவர் வேறுபட்ட சமூக அறிவியலை முன்னெடுத்த போராளி யாகவே இருந்தார்;.

“உலகிலே மானிடவர்க்கத்தில் இந்நாட்டவரைப் போல் துயரக் கடலில் மூழ்கியிருப்போர் எவரு மில்லை எனக் கூறலாம். வாழ்வுக்கு அவசியமான உணவு, குடியிருப்பு வசதிகள் நமக்கு இல்லை. உயர்ந்த அறிவு வாழ்வுக்கு அவசியமான சுதந்திரம், சமத்துவம், கல்வி இல்லை. நம்மில் பெரும்பான்மையோர் உலகில் உள்ள மற்ற தேசத்துக்கு எல்லா வகையிலும் கீழ்ப்பட்டிருக் கிறோம். முப்பது கோடி ஜனங்களில் நான்கு கோடி ஜனங்கள் அரை வயிறு உண்டு, அரை ஆடை உடுத்தித் துன்புற்றிருக்கின்றனர். பதினைந்து கோடிப் பேர் தகுந்த குடியிருப்பு வசதியின்றி மனிதர்கள் வகிக்கத் தகாத இடங்களில் வகிக் கின்றனர். நூற்றுக்கு எண்பது பேருக்கு மேல் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள். முப்பது கோடியில் கால் பகுதிக்கு மேல் தீண்டத்தகாத வர்கள். மற்ற வகுப்பாருக்கு ஊழியம் செய்வதைத் தவிர இவர்களுக்கு வேறு வகை சம்பந்தமும் கிடையாது. அவர்கள் கோயிலுக்குப் போகக் கூடாது... நமது தாய்நாட்டில் நமது சகோதரர்கள் படும் துன்பங்களை நீக்கும் பொருட்டு கிளர்ச்சி செய்வது ஆட்சேபிக்கப்படுகிறது”. (1985: 12)

மேலே கண்டவை, சிங்காரவேலர் 1925இல் கான்பூரில் நடந்த கம்யூனிஸ்டு கட்சியின் முதல் மாநாட்டில் நிகழ்த்திய தலைமையுரை. இப்போது, அவர் காங்கிரஸ் கட்சி என்ற அடையாளத்தைத் துறந்து ‘கம்யூனிஸ்டு’ எனும் அடையாளத்தை வரித்துக் கொள் வதைக் காண்கிறோம். சமூக வரலாற்றில், சமூகம் குறித்த அக்கறையும், அச்சமூக இயங்குநிலை குறித்த தேடலும் உள்ள மனிதர்களே சமூக அறிவியல் சார்ந்த ஆளுமைகளாக உருப்பெற முடியும். இந்தப் பின் புலத்தில் சிங்காரவேலரின் சமூகம் பற்றிய புரிதல் என்பது தன்னை ஒரு கம்யூனிஸ்டாக வரித்துக் கொள்வதில்தான் நாம் அவரைப் புரிந்து கொள்கிறோம். இத்தன்மையுடைய ஆளுமைகள்தான் சமூக அறிவிய லாளராக வடிவம் பெறுகிறார்கள். இத்தன்மை சார்ந்து தமிழ்ச் சமூகத்தின் முதல் சமூக அறிவியலாளர் மயிலாப்பூர் சிங்காரவேலர் என்று பதிவு செய்ய முடிகிறது. இந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த வேறு எவரையும் அன்றைய கட்டத்தில் மதிப்பீடு செய்ய இயலாது. காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளிருந்து இடதுசாரி கருத்துநிலைகளை முன்னெடுத்து உரையாடியதைப் போல் காங்கிரஸ் இயக்கத்தின் முதல் நிலைத் தலை வராக விளங்கிய காந்தி அவர்களோடும் உரையாடல் களை நிகழ்த்தினார். இந்திய மக்களுக்கான ‘சுய ராஜ்ஜியம்’ குறித்த கருத்துப் பிரச்சாரத்தைக் காந்தி பேசினார். அவரது கருத்தை, ஒரு சமூக அறிவியல் பார்வையோடு சிங்காரவேலர் எதிர்கொண்டார். காந்திக்கு அவர் எழுதிய பகிரங்கக் கடிதம் அதனை உறுதிப் படுத்துகிறது. அக்கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:

“முதலாளித்துவத் தன்னாதிக்கத்தை எதிர்த்துப் போராடாமல் அரசியல் தனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியாது. அரசியலில் விடுதலைக்கு இன்றியமையாதவைகள், தொழில் துறையில் சுதந்திரம் ஆகியவைகளைப் பொருத்த வரை நம் சுயராஜ்ஜிய அரசியல், விட்டுக் கொடுத்தலை எவ்வுருவத்திலும் ஏற்றுக் கொள் வதில்லை. ஆகையால் நமக்கு வரவிருக்கும் சுயராஜ்ஜியத்தில் நிலமும் இன்றியமையாத தொழிற்சாலைகளும் நாட்டின் நன்மைக்காக பொதுமையாக்கல் படுமென்றும், நாம் பயிரிடாத எந்தத் துக்காணி நிலத்தையும், நாம் வேலை செய்யாத எத்தொழிற்சாலையையும், நாம் வசிக்காத எந்த வீட்டையும் நம்மில் ஒருவரும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று எளிய மொழியில் எவ்வகை ஐயத்துக்கிடமின்றி அறிவிக்க வேண்டுமெனத் தங்கள் முன் தாழ்ந்து பணிந்து வேண்டுகிறேன்”. (1991: 273)

மேற்குறித்தப் பகுதியில் இந்திய மக்களுக்கான சுயஉரிமையுடன் கூடிய ராஜ்ஜியம் எவ்வாறெல்லாம் அடைய வேண்டுமென்பதை சிங்காரவேலரின் கருத்து நிலை தெளிவுபடுத்துகிறது. உலகில் உள்ள இயற்கைப் பொருள்களான நிலம் போன்றவற்றை அனைவருக்குமான பொருளாக வடிவமைப்பது எப்படி? அவ்வகையான செயல்பாடுகள்தான் உண்மையான சுயராஜ்ஜியமாக அமைய முடியும். அவ்வாறில்லாதவை மக்களுக்கான சுயராஜ்ஜியமாக அமையாது. மாறாக, யாருக்கான சுயராஜ்ஜியமாக அமையும் என்பது குறித்த விரிவான உரையாடலை மேற்கொண்டார். இக்கருத்துக்களை காந்தியார் எவ்வகையில் எதிர்கொண்டார், அதற்கான மறுமொழியை அவர் வெளிப்படுத்தினாரா என்பதற்கான தரவுகள் இல்லை; ஆனால் இவ்வாறான சுயராஜ்ஜியம் அமையாவிடில், காந்தியம் கூறும் சுயராஜ்ஜியம் யாருக்கானதாக இருக்கும் என்பதையும் பதிவு செய்துள்ளார். அப்பகுதி வருமாறு:

“பின் யாருக்குத்தான் சுயராஜ்ஜியம்? நமது லாயர்களுக்கும், ஜட்ஜுகளுக்கும், மந்திரிகளுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும், மடாதிபதிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும், வீடு சொந்தக்காரர் களுக்கும், வர்த்தகர்களுக்கும், தொழிற்சாலை, ரயில் மற்றும் கப்பல் உரிமையாளர்களுக்கும், ராணுவம் மற்றும் போலீஸ் உத்தியோகஸ்தர் களுக்கும், கலாசாலை பண்டிதர்களுக்கும் (UniversityUniversityProfessor), பட்டவர்த்தனர், மகுடவர்த் தனருக்கும், இவர்கள் சந்ததியருக்கும்தான் நமது தேசிய காங்கிரஸ் கோரும் சுயராஜ்ஜியமெனவும் அறிக”. (2006: I: 59)

சிங்காரவேலர் எனும் சமூக அறிவியலாளர் 1917 - 1925 இடைப்பட்ட காலங்களில், இந்திய சமூக இயக்கம் குறித்துக் கொண்டிருந்த கண்ணோட்டங்களை மேலே நாம் பதிவு செய்தோம். இக்காலங்களில் காங்கிரஸ் இயக்கம் சார்ந்த செயல்கள்; காந்தியாரின் செயல்கள் ஆகியவற்றில், ஒரு சமூக அறிவியலாளனாக அவர்

முன்வைத்த கருத்துநிலைகளாகப் பின்கண்டவற்றை தொகுக்கலாம்.

இயற்கையில் உள்ள பொருட்கள், மனித சமூகம் அனைத்திற்கும் பொதுவானது. அதனை வெகுசிலர் உரிமை கொண்டாடு வதை நாம் ஏற்க இயலாது.

தொழிலாளர் - விவசாயி ஆகிய இரு தரப்பு உழைப்பாளிகள்தாம் நம் சமூகத்தின் ஆணி வேர்;  அவர்களை சுரண்டுவோரை நாம் அனு மதிக்க முடியாது. அவர்களுடைய விடுதலையின் குறியீடாக மே தினக் கொண்டாட்டம் அமைகிறது.

சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை எனும் பண்புகள் சார்ந்த சுயராஜ்ஜியமே நமக்குத் தேவை. அதற்கு மாற்றான எதுவும் சுயராஜ்ஜியமாக அமைய முடியாது.

மயிலாப்பூரில் பிறந்த இத்தமிழ்மகன், இந்திய அரசியலுக்கே வழிகாட்டும் கோட்பாட்டை முன் மொழிந்த சமூக அறிவியலாளன். இதனை தான் சார்ந்த அமைப்பின் மூலம் நடைமுறைப்படுத்த முயன்ற மனிதன். இவை எவ்வாறெல்லாம் அன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளப்பட்டது என்பது குறித்து அறிவதற்கான தரவுகளைத் தேடவேண்டும். ஆனால், இவரைப் போல் சமூகம் குறித்து அந்தக் கால இந்தியச் சமூகத்தில், தமிழ்ச் சமூகத்தில் பேசிய வேறொருவர் உண்டா என்ற உரையாடலையும் நிகழ்த்த வேண்டும். இவ்வகையில் அன்றைக்கு உலகில் நடைமுறைக்கு வந்த மார்க்சியத் தத்துவத்தை தமது நிலைப்பாடாகக் கொண்ட சமூக அறிவியல் அறிஞர் மயிலாப்பூர் சிங்காரவேலர் என்ற பதிவை முன்னெடுப்பது நமது கடமை.

 • ···

மார்க்சியம் எனும் சமூக அறிவியல் சார்ந்த தத்துவத்தின் மீது அவருக்கிருந்த ஈடுபாட்டை நாம் அறிவோம். இத்தத்துவம் இயற்கை நிகழ்வுகளின் இயங்கியலை முதன்முதல் தர்க்கப்பூர்வமாக உரை யாடலுக்குட்படுத்தியது. மனிதனின் உழைப்பு என்றால் என்ன? அது சமூக மாற்றத்தில் பெறும் இடம் எத்தகையது? உலகத்தில் நிகழ்ந்த / நிகழ்ந்து கொண் டிருக்கும் தொழில்புரட்சி எத்தகைய சமூக நிகழ்வு களுக்கு அடிப்படையாக அமைகிறது? இத்தகைய பல்வேறு கேள்விகளுக்கு விடை கண்டது மார்க்சியம். இத்தன்மைகளை உள்வாங்கி, மார்க்சியம் முன்னெடுக்கும் சமூக இயங்கியல் சார்ந்து தமிழ்ச் சூழலில், சிங்கார வேலர் தமது எழுத்துக்களின் மூலம் பதிவு செய்தார். இவ்வகையில் மார்க்சிய சமூக இயங்கியல் குறித்த விரிவான பதிவை தமிழில் செய்த முதல் சமூக அறிவியலாளர் அவர்தான் என்று கூற முடியும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரால் எழுதப்பட்டவை நமக்கு சான்றாதாரங்களாக அமைகின்றன.

‘கடவுளும் பிரபஞ்சமும்’ (1932), ‘மனித உற்பவம்’ (1934), ‘விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்’ (1934), ‘தத்துவ விஞ்ஞானக் குறிப்புகள்’ (புதிய உலகம்:1935-1936) ஆகியவற்றையும் மேலும் பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவரது ‘கடவுளும் பிரபஞ்சமும்’ எனும் நூல் கடவுள் என்ற பொருள் உலகில் இல்லை; அது மனிதனால் கற்பிக்கப் பட்டது என்ற கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்திய நூலாகும். ஐரோப்பிய சமூகத்தில் அறிவொளி இயக்கம் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் பல பரிமாணங்களில் வளர்ச்சியுற்றது. கிறித்தவ நிறுவனங்களுக்கு எதிரான கலகங்கள் உருவாயின. இவ்வகையில் தோன்றியதே இலண்டன் இலௌகிக சங்கம் (London Secular(London SecularSociety -1860). இவ்வமைப்பின் கிளை சென்னை நகரத்தில் 1878 ஆம் ஆண்டு உருவானது. இவர்கள் 1882இல் சென்னை இலௌகிக சங்கத்தை (Madras Secular Society) உருவாக்கினர். இவ்வமைப்புகள் கடவுளின் இருப்பு குறித்த கேள்விகளை முன்வைத்தன. ஐரோப்பிய நாடுகளில் உருவான இவ்வமைப்புகள் குறித்து சிங்காரவேலர் பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஆனால் சென்னையில் 1878 - 1888ஆம் ஆண்டுகளில் செயல் பட்ட ‘சென்னை இலௌகிக சங்கம்’ குறித்த பதிவுகளை அவரது எழுத்துகளில் காண முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் மார்க்சியம் கூறும் பொருள்முதல்வாதக் கருத்துக்களை பரப்புரை செய்யும் நோக்கில் செயல் பட்டார். இதனை அவரது ‘கடவுளும் பிரபஞ்சமும்’ எனும்  நூல்; வழி வெளிப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

“தத்துவஞானிகள் கூறும் பிரம்மமும் (Brahmam), சத்தும் (Sat), சர்வமும் (Absolute), தெரியப் படாததும் (Unknownable), எண்ணமும் (Idea), இச்சையும் (Will), யாவும் கற்பனைகளென அறிக”. (2006: I: 256)

மேலே கூறியுள்ள செய்திகள் மூலம் Ôகடவுள் மனிதனால் உண்டாக்கப்பட்டதுதான்Õ என்பதை வலியுறுத்துகிறார். இவ்வகையான கடவுளை மனிதன் ஏன் உண்டாக்கிக் கொண்டான், அதனை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்தும் மிக விரிவாகப் பேசியுள்ளார். பிரபஞ்ச நிகழ்வுகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை எண்ணற்ற அறிவியல் சார்ந்த தர்க்க உரையாடல்கள் வழி பேசுகிறார். இதில் மனிதன் எவ்வாறு செயல் படுகிறான் என்பதையும் பதிவு செய்கிறார்.

“பிரபஞ்சத்தில் நமக்குத் தெரிந்தவரை, இருக்கும் பிராணிகளில் மனிதனைப் போன்ற மூடப்பிராணி இல்லை என்றே சொல்லலாம். இல்லாத தெய்வங் களையும் பிசாசுகளையும் தானே சிருஷ்டி செய்து கொண்டு, அந்தச் சொற்களுக்குத் தானே நற்குணங் களையோ, துர்குணங்களையோ காட்டி, தான் கொடுத்த குணத்திற்குப் பயந்து அந்தப் பயத்தைப் போக்க, பிரார்த்தனையும் பூசையும் காவையும் பலியையும் செய்து, அவைகளால் தன்னையும், பிறரையும் இம்சித்துக் கொண்டு, இவ்வுலகில் உயிர் வாழும் சம்பவம் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் இருக்காது என்று தீர்க்கமாக எண்ணலாம். (2006:I: 290)

இவ்வகையில் மார்க்சியம் சார்ந்த பொருள்முதல் வாதக் கருத்துக்களை பொது வெளியில் முன்னெடுத்த சமூக அறிவியலாளராக இவரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கருத்தியலை மேலும் வலுப்படுத்த டார்வின் கோட்பாடுகளை மிக விரிவாக அறிமுகப் படுத்தி எழுதியுள்ளார். உயிர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி சார்ந்த பரிணாமக் கோட்பாடுகளை ‘மனித உற்பவம்’ எனும் நூலில் வெளிப்படுத்துகிறார். பிரபஞ்ச நிகழ்வுகள், அதில் கடவுள் எனும் சொல் பெறும் இடம், மனித இன உற்பத்தி ஆகியவற்றைக் குறித்துப் பேசிய சிங்காரவேலர், அவரது செயல்பாடுகள் குறித்து ‘விஞ்ஞானமுறையும் மூடநம்பிக்கையும்’ எனும் தொகுப்பு நூலை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள் ‘குடியரசு’ பதிப்பகம் மூலம் 1934இல் வெளியிட்டார். இந்நூல் குறித்துப் பெரியாரின் பதிவு பின்வருமாறு:

“ ‘விஞ்ஞானமுறையும் மூடநம்பிக்கையும்’ என்னும் இப்புத்தகமானது சென்னை தோழர் ம.சிங்காரவேலு பி.ஏ.பி.எல்., அவர்களால் எழுதப்பட்டதாகும். இது எழுத நேர்ந்ததின் அவசியம் என்னவென்றால், தோழர் சிங்காரவேலு அவர்களால் முன் எழுதப்பட்ட ‘கடவுளும் பிரபஞ்சமும்’ என்னும் புத்தகமானது மக்களிடையில் ஒரு பரபரப்பை உண்டாக்கி விட்டதுடன், பொது ஜனங்கள் பல மூலைகளிலிருந்தும் தோழர் சிங்கார வேலு அவர்களைச் சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து, சுமார் ஆறு மாத காலம் அநேக விசயங்களைப் பற்றிக் கேட்டுவந்தார்கள். அக்கேள்விகள் ஒவ்வொன்றிற்கும் தோழர் சிங்காரவேலு அவர்கள் தக்க பதிலளிக்கும் முறையில் எழுதியதாகும்”. (2016: முகவுரை)

மேலே பெரியார் பதிவு செய்துள்ள செய்திகளின் அடிப்படையில் சிங்காரவேலர் செயல்பாடுகளை நாம் புரிந்து கொள்ள இயலும். கடவுள், மந்திரம், பில்லி சூனியம், குறிபார்த்தல், தெய்வமாடல், புத்த மதம், கிறித்தவ மதம் ஆகியவற்றின் மூடநம்பிக்கைகள், போலி விஞ்ஞானம், ஆஸ்திகம், மொழி உருவாக்கம், நாஸ்திகம் ஆகிய பல்வேறு செய்திகள் குறித்த உரையாடலை இந்நூலில் மேற்கொண்டுள்ளார். உலகில் புதிதாகக் கண்டுபிடித்தவற்றைக் கொண்டு, மேற்குறித்தவற்றை மறுக்கிறார். விஞ்ஞானம் என்பது குறித்து தவறான நம்பிக்கைகளையும் மதம், நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பொய் சார்ந்த பரப்புரைகளை செய்கின்றன என்பதையும் விரிவாகப் பதிவு செய்துள்ளார். பெரியார் 1925இல் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவ்வியக்கக் கோட்பாடுகளை பரப்ப ‘குடியரசு’ இதழையும் நடத்தத் தொடங்கினார். இவ்விதழில் மேற்குறித்த கருத்துப் பரப்புகளைச் சிங்காரவேலர் மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் இச்செயல்பாடுகள் மிக முக்கியமான நிகழ்வுகள். மதம் சார்ந்த மூடநம்பிக்கை களும் கடவுள் சார்ந்த மூடநம்பிக்கைகளும் மக்களை சிந்திக்க விடாது அடிமைப்படுத்திய காலங்களில், அவற்றை உடைத்தெறிய, ஐரோப்பியப் பின்புலத்தில் உருவான புத்தொளி மரபு மற்றும் மார்க்சிய பொருள் முதல்வாதக் கருத்துநிலை ஆகியவற்றை உள்வாங்கிச் செயல்பட்டவர் சிங்காரவேலர். இதற்குப் பெரியார் தமது முழு ஆதரவையும் வழங்கினார். தமது பத்திரிகை மற்றும் வெளியீட்டு நிறுவனம் மூலம் சிங்காரவேலர் எழுத்துக்களை வெளியிட்டார். சமூக சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட பெரியாரும் சமூக அறிவியல் கண்ணோட்டமுடைய சிங்கார வேலரும் இணைந்து தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய பணிகளை நன்றியுடன் பதிவு செய்வது நமது கடமை.

பெரியாரின் ‘குடியரசு’ இதழில் தொடர்ந்து எழுதும் வாய்ப்பு நேராத போது, தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு 1935-1936ஆம் ஆண்டுகளில் ‘புது உலகம்’ எனும் இதழைப் பயன்படுத்திக் கொண்டார். அக்கட்டுரைகள் கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகிய இருவரால் ‘தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு வெளிவந்தது. இத்தொகுப்பின் முன்னுரையில், தொகுப்பா சிரியர்கள் செய்துள்ள பதிவு என்பது, சிங்காரவேலர் எனும் சமூக அறிவியல் ஆளுமையை அறிந்துகொள்ள உதவும்.

“மார்க்சியம் என்பது விஞ்ஞான சோஷலிஸம். நமது விருப்பு வெறுப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல;  விஞ்ஞான முறையில், விஞ்ஞானத்தின் அடிப்படையில் சமூக மாற்றத்தைப் பற்றி எடுத்துரைத்து சோஷலிசத் திற்கு வழிவகுக்கின்றது. எது விஞ்ஞானம், விஞ்ஞான வழிவகை என்றால் என்ன என்ப வற்றை எடுத்து விளக்க உலகத்தின் இயல்பு என்ன பிரபஞ்ச அமைப்பு எப்படி, பரிணாம வாதம் என்றால் என்ன, என்பன போன்ற விசயங் களை உருப்படியான வகையில், தெளிவான முறையில் விளக்கியுள்ளார் தென்னகத்தின் முதல் கம்யூனிஸ்டான இந்தப் பெரியார். (1975: முன்னுரை)

சமூக அறிவியலாளன் என்பவன் தத்துவம் என் பதை விஞ்ஞானத்தின் ஒரு பகுதியாகவே புரிந்து கொள்வான். இந்தப் பின்புலத்தில் ‘புது உலகம்’ இதழில் எழுதிய தொடர் கட்டுரைகளுக்கு ‘தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ என்று பெயரிட்டார். அப் பெயரில் அக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டன. தத்துவம் என்பதை சமயப் பின்புலத்தில் உரையாடலுக்கு உட்படுத்தியோர் மிகுதியாக வாழ்ந்த காலச்சூழலில் வாழ்ந்தவர் சிங்காரவேலர். மதத்திற்கும் தத்துவத்திற்கும் தொடர்பில்லை; தொடர்பு இருப்பதாக பேசப்படும் சொல்லாட்சிகள் பொருள்முதல்வாதக் கருத்துநிலையை ஏற்பதில்லை. மிகச் சிக்கலான இந்த உரையாடலை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சார்ந்து, தத்துவ மரபுகளுடன் உரையாடலுக்கு உட்படுத்தினார் சிங்கார வேலர். அந்த வகையில் அமைந்தவை ‘புது உலகம்’ கட்டுரைகள். 1925 - 1936 வரை இடைப்பட்ட காலங்களில் அவரது செயல்பாடுகள், தாம் புரிந்து கொண்ட பொருள்முதல்வாதத் தத்துவமரபை எந்தெந்த வகையிலெல்லாம் பரப்புரை செய்ய இயலும், சமூக நடைமுறையில் உள்ள நிகழ்வுகளோடு அதனை எவ்வாறு இணைப்பது ஆகிய கண்ணோட்டத்தில் செயல்பட்டவர் சிங்காரவேலர். அதனைத்தான் ‘தத்துவ ஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ என்று அழைக்கிறார்.  சமூக அறிவியலாளன் அல்லது சமூக விஞ்ஞானி என்பவருக்கான அனைத்துப் பண்புகளையும் கொண் டிருந்தவராக, மேற்குறித்த செய்திகள் மூலம் சிங்கார வேலரைப் புரிந்து கொள்ளலாம்.

 • ···

சமூக அறிவியலாளர் என்பவர் சமகால வாழ்க்கை குறித்த புரிதலும் அக்கறையும் கொள்வது அவசியம். அந்தப் புரிதலை நடைமுறைப்படுத்துவதற்கான வழி முறைகளைக் கண்டறிதலும் அவசியம். அந்த வகையில் தொழிலாளர், விவசாயிகளைப் புரிந்து கொண்டதன் மூலம், தான் வாழ்ந்த காலத்தை முதன்மைப்படுத்தினார் சிங்காரவேலர். அதனை நடைமுறைப்படுத்த, அச்சு ஊடகம் சார்ந்த பரப்புரை மேற்கொள்ள இதழ்களை நடத்தினார். தொழிலாளி, விவசாயிகளுக்கான அமைப்புகளைக் கட்டி எழுப்பினார். அவ்வமைப்பு கைக்கொள்ள வேண்டிய தத்துவார்த்த நடைமுறை குறித்த புரிதலைப் பெற்றவராக இருந்தார். இத் தன்மைகளை 1917 - 1924 உட்பட்ட காலங்களில் அவரிடம் நாம் காண முடிகிறது. 1925 - 1936 காலங்களில் சமூகத்தில் இருந்த மூடநம்பிக்கைகளை விஞ்ஞான கருத்தியல் சார்ந்த தத்துவப் பின்புலத்தில் எதிர்கொண்டார். அதனைப் புலப்படுத்துவதாக ‘புது உலகம்’ இதழ் கட்டுரைகள் உள்ளன. இவ்வகையான செயல்பாடுகளை மேற்கொண்ட காலங்களில் அவர் வாசித்த தத்துவத்துறை சார்ந்த நூல்கள், அறிவியல் துறை சார்ந்த நூல்கள் ஆகியவற்றையும் அவர் பதிவு செய்துள்ளார். சமகாலப் புரிதல் நோக்கி அவர் வாசித்த அறிவியல் நூல்கள் சார்ந்து, அவரை நாம் சமூக அறிவியலாளராகப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வகையான உரையாடல்களை மேற்கொள்ள கீழ்க்காணும் வகையில் தொகுத்துக் கொள்ளலாம்:

சமூக அறிவியலாளராகச் செயல்பட, சமூக வரலாற்றில் இதுவரை பேசப்பட்ட / பேசப் படும் தத்துவச் சொல்லாடல்கள் குறித்த அக்கறையுடையவராக இருத்தல் அவசியம். தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு எவ்வகையான வாசிப்பு மரபை கொண்டிருக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும். சிங்கார வேலர் மேற்குறித்தவாறு எவ்வாறு செயல் பட்டார் என்ற உரையாடல் நிகழ்த்தும் தேவை நமக்குண்டு.

தாம் வாழும் காலத்தில், எந்தெந்த முறைமை களில் புதிய பார்வைகள் உருப்பெற்றுள்ளன; எந்தெந்த வகையில் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன; அக்கண்டு பிடிப்புகள் சார்ந்து சமூகம் குறித்த தேடுதலில் என்னென்ன புதிய தன்மைகள் உருவாகி யுள்ளன ஆகிய பல புரிதல்களை சமூக அறிவியலாளன் தன்னுள் கொண்டிருக்க வேண்டும். இந்தப் பின்புலத்தில் சிங்கார வேலரை எவ்வாறு மதிப்பீடு செய்ய இயலும் என்ற உரையாடலும் அவசியமாகும்.

தொழில்புரட்சிக்குப் பிந்தைய சமூகத்தில் பல்வேறு ஊடகங்கள் உருப்பெற்றுள்ளன. இவ்வூடகங்கள் சமூக வாழ்க்கை குறித்த பதிவுகளை செய்த வண்ணமே உள்ளன. இதில் அச்சு ஊடகம் என்பது பெரும் பண் பாடாகவே உருப்பெற்றுள்ளது. அச்சு வழி நாள்தோறும் வெளிவரும் இதழ்கள் மற்றும் பிரசுரங்களை நாம் தொடர்ந்து வாசிக்க வேண்டியுள்ளது. அதைப் போல புத்தகங் களை வாசிக்கும் பழக்கமும் தொடர்தல் அவசியம். சிங்காரவேலர், எந்தெந்த வகையான புத்தகங்களோடு உறவு கொண் டிருந்தார்; குறிப்பாக, நவீன அறிவியல்துறை சார்ந்த வாசிப்பை அவர் எவ்வகையில் கைக் கொண்டிருந்தார் என்ற அறிதலும் அவசியம். இந்தப் பின்புலத்திலும் சிங்காரவேலர் ஆளுமையை நாம் அறிய இயலும்.

சிங்காரவேலரின் 1917-1946 இடைப்பட்ட கால வாழ்க்கையில், தாம் ஒரு பொருள்முதல்வாத தத்துவ மரபை ஏற்றுக் கொண்டவராகவும், அதனைப் பரப்புரை செய்பவராகவும் இருந்தார். இதனைப் புரிந்து கொள்ள அவரது எழுத்துக்களில் பல்வேறு தத்துவ ஞானிகளின் கருதுகோள்களை உள்வாங்கியதைக் காண்கிறோம். தொடக்ககால கிரேக்க - ரோமானிய தத்துவ அறிஞர் களான அரிஸ்டாட்டில் (கி.மு.384-322), பிளாட்டோ (கி.மு. 427-347), சாக்ரடீஸ் (கி.மு. 469-399) ஆகியோரின் கருத்துநிலைகள் குறித்த உரையாடலை மேற்கொள்கிறார். அவை சமகாலத்தில் எவ்வகையில் அணுகுதல் வேண்டும் என்பதைப் பேசுகிறார்.  ஜெர்மன் தத்துவ அறிஞர்களான ஜார்ஜ் வில்லியம் ஹெகல் (1770-1831), ஆர்தர் கோபன்ஹார் (1788-1860), ஹெர்பர்ட் ஸ்டென்ஸர் (1820-1903), இமானுவேல் கான்ட் (1724-1804) ஆகிய பலரின் தத்துவம் சார்ந்த உரையாடல்களை மேற்கோள்காட்டி, அதிலிருந்து மார்க்சியம் எவ்வாறு உருப்பெற்றது என்பதைப் பேசுகிறார். மார்க்சும் எங்கல்சும் உருவாக்கிய பல்வேறு தத்துவ உரையாடல்களை விரிவாக முன்வைக்கிறார். ‘கம்யூனிஸ்டு அறிக்கை’ தொடங்கி, அவர் வாழ்ந்த காலம் வரையிலான மார்க்சிய உரையாடல்கள் குறித்த பதிவை மிக விரிவாகவே செய்துள்ளார். அவ்வகையான அணுகுமுறை சார்ந்தே இயங்குகிறார். அதனையே தமது அடையாளமாகவும் கருதுகிறார். இவ்வகையில் மார்க்சிய தத்துவ மரபை ஏற்றுக் கொண்ட முதல் சமூக அறிவியலாளராக சிங்காரவேலர் தமிழ்ச்சமூகத்தில் வாழ்ந்தார். இதற்கான பதிவுகளை அவரது ஆக்கங்கள் அனைத்திலும் நாம் காண்கிறோம். சிங்காரவேலர் முன்னெடுத்த சமூக அறிவியல் கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமைந்தவை, அவரது காலத்தில் அறியப்பட்ட அறிவியல் அறிஞர்களின் செயல்பாடுகள் ஆகும். கோப்பர்நிக்கஸ் (1473-1543), கெப்ளர் (1571-1630), ஆல்பர்ட் ஈன்ஸ்டின் (1879-1955), கலிலியோ (1564-1642), பிளமிங் (1849-1945), புரூனோ (1548-1600), சி.வி.இராமன் (1888-1970) ஆகிய பல அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பாக விரிவான பதிவுகளைச் சிங்காரவேலர் செய்துள்ளார். இவ்வறிஞர் களின் கண்டுபிடிப்புகள் என்பவை, பூமியின் இயக்கம், உயிர்களின் தோற்றம், உயிர்களின் வளர்ச்சி வரலாறு ஆகிய பல அடிப்படையான உரையாடல்களுக்கு வழி கண்டது. பொருள்முதல்வாத தத்துவ உரையாடல்களை வலுப்படுத்த இக்கண்டுபிடிப்புகள் அடிப்படை ஆதாரங்களாக அமைந்தன. சிங்காரவேலர், புதிய கண்டுபிடிப்புகள் குறித்த விரிவான பதிவுகளை ‘தத்துவ விஞ்ஞானக் குறிப்புகள்’ எனும் தொடரில் ‘புது உலகம்’ இதழில் விரிவாகப் பதிவு செய்தார். உலகத்தில் உருப்பெற்றுள்ள புதிய பார்வைகள் என்பவை, இதுவரை இருந்த நம்பிக்கை சார்ந்த கருத்துமுதல்வாத உரை யாடல்களைத் தகர்த்தது. பொருள்முதல்வாதமே அறிவியல் பூர்வமானது என்பதற்கான விரிவான சான்றாதாரங்களைப் பரப்புரை செய்யும் பணியை தம் வாழ்க்கைப் பணியாகக் கொண்டார். இதுவே சிங்கார வேலர் எனும் முதல் சமூக அறிவியலாளர், தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளமாக நம்முன் உள்ளது. இதனைப் பல பரிமாணங்களிலும் கொண் டாடும் அவசியம் நமக்குண்டு.

சிங்காரவேலர் என்ற மனிதரின் வாசிப்பு மரபு சார்ந்து, அவரின் வரலாற்று ஆசிரியர்களான கே.முருகேசன் மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் செய்துள்ள பதிவு முக்கியமானது. அது வருமாறு:

“மேலை நாட்டு விஞ்ஞானிகளும் தத்துவ ஆசிரியர்களும் இயற்கையின் குண விசேஷங்களை ‘மெட்டீரியலிஸ்டு’ (பொருள்முதல்வாத) முறையில் அணுகி ஆராய்ந்ததைப் பற்றி தான் தெரிந்து கொண்ட பரந்த அறிவின் அடிப்படையில் எழுதப்பட்டவை சிங்காரவேலு கட்டுரைகள். அவரிடம் இந்த விஷயங் களைப் பற்றி ஏராளமான நூல்கள் இருந்தன. அவர் இதுபற்றி படித்த விஷயங்களை ஆதாரமாகக் கொண்ட நூல்களில் சிலவற்றைக் கீழே தருகிறோம்.

 1. நட்சத்திரங்களும் அணுக்களும் (Stars andStars andAtoms) எட்டிங்டன் எழுதியது. 1927;
 2.  குழப்பத்தி லிருந்து ஓட்டம் - ஷேப்பி (1931, Fight from Chaos)
 3.  நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் (The UniverseThe Universearound us) ஜீன்ஸ் எழுதியது - 1930.
 4. கடவுளும் பிரபஞ்சமும் (God and the Universe) கோஹென் - 1931.
 5. பிரபஞ்சத்தின் ஜீவன் (Life of the Universe) - 1909.
 6. எலக்ட்ரான்களும் மூலப்பொருள்களும் (Elementsand Electrons) ராம்ஸே - 1912.
 7. அணுவுக்கு அப்பால் (Beyond the Atom) காக்ஸ் - 1913.
 8. ஆந்தரோபாலஜி ((Anthropology) டைய்லர்.
 9. தங்கக் கிளை (The GoldenThe GoldenBough) பிரேசர்.
 10. மனிதனும் கடவுளும் சாகாமையும் (Man, God and immorality) பிரேசர்.
 11. பிஹேவியரிசம் ((Behaviourism) வாட்சன்” (1991: 134 -135).

மேலே குறித்துள்ள நூல்கள் பலவற்றிலிருந்தும் மேற்கோள் தந்து சிங்காரவேலர் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது நூல்கள் மற்றும் கட்டுரைகள் என்பவை, நாம் வாழும் பூமி, அதிலுள்ள உயிரினங்கள், அவற்றின் இயக்கங்கள், இயக்கங்கள் சார்ந்து உருவான சமூக வாழ்க்கை என்ற மரபை உள்வாங்கியே எழுதப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இவரைப் போன்று தமிழ்ச்சூழலில் சமூக வரலாற்றை எழுதியவர்கள் மிகக் குறைவு. அவர் மறைந்து சுமார் அறுபது ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது எழுத்துக்கள் இன்றும் புதிய புதிய வாசிப்பு அநுபவத்தைத் தருகின்றன. சமூக அறிவியலாளரின் எழுத்துக்கள் வேறெப்படி இருக்க முடியும்?

இப்பதிவை உருவாக்க அடிப்படையாக இருந்த நூல்கள்

I. ம.சிங்காரவேலர் எழுதிய நூல்கள்:

1) 1931, 1932, 1934 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த சுயராஜ்ஜியம் யாருக்கு? மூன்று பாகங்கள்

2) 1934 - மெய்ஞான முறையும் மூடநம்பிக்கையும். இந்நூலை ஈரோடு குடியரசு பதிப்பகம் வெளியிட்டது. இரண்டு பாகங்கள். இவை இப்போது இரண்டு பாகங்களும் இணைந்த வகையில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடாக வந்துள்ளது. பதிமூன்றாம் அச்சு. 2016. விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்  எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரியார் முன்னுரை எழுதியுள்ளார்.   

3) 1974 - ம.சிங்காரவேலரின் சொற்பொழிவுகள்; 1931 - 1934 ஆம் ஆண்டுகளில் சிங்காரவேலர் நிகழ்த்திய பேச்சுக்கள். 1974இல் தான் முதன் முதல் அச்சு வடிவம் பெற்றது. என்.சி.பி.எச். - மூலம் மூன்றாம் அச்சு 1984இல் வந்துள்ளது. தொகுப்பாசிரியர்கள் கே.முருகேசன் மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியன்.

4) 1974 - ம.சிங்காரவேலரின் பொதுவுடைமை விளக்கம் இதில் உள்ள கட்டுரைகள் 1924-1928இல் ஒரு பகுதியும் 1931-1932இல் இன்னொரு பகுதியும் எழுதப்பட்டவை. எழுத்துப் பிரதி அச்சானது 1974இல்தான். இதன் மூன்றாம் அச்சு என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1985.

5) 1975 - தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் ‘புது உலகம்’ இதழில் 1935-1936 ஆண்டுகளில் எழுதப்பட்டவை. கே.முருகேசன் அவர்களும் சி.எஸ்.சுப்பிரமணியன் அவர்களும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இதனை என்.சி.பி.எச். வெளியிட்டுள்ளது.

6) 1975 - அரசியல் நிலைமை, மே, 1935-ஏப்ரல் 1936 1935-1936ஆம் ஆண்டுகளில் சிங்காரவேலர் ‘புது உலகம்’ இதழில் எழுதிய கட்டுரைகள். தொகுப்பாசிரியர்கள் கே.முருகேசன் மற்றும் சி.எஸ்.சுப்பிரமணியன். என்.சி.பி.எச் வெளியிட்டுள்ளது.

7) 2006 - ம.சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள், தொகுப்பாசிரியர்கள்: முத்து குணசேகரன், பா.வீரமணி. தென்னக ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

பிற ஆக்கங்கள்

8) 1991-சிங்காரவேலு - தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டு ஆசிரியர்கள் கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம். நி.செ.பு. என்.சி.பி.எச். வெளியீடு.                            

9) 1970 - 1990 - ம.சிங்காரவேலரின் பிறப்பு மற்றும் நினைவு நாட்களில், தோழர் கே.முருகேசன் அச்சிட்டுக் கொடுத்த பதினாறு பக்க சிறுவெளியீடுகள். வெளியிட்டவர்கள் ‘நடமாடும் முற்போக்கு வெளியீட்டுக் கழகம்’ மதராஸ் ஹொர்பர் தொழிலாளர் சங்கம். பகத்சிங் இல்லம் - ஜீவா ஹால். சென்னை-1.

Pin It