நூல் அறிமுகம்:

 முதல் வர்க்கப் போராளி,

முத்தையா வெள்ளையன்,

வெளியீடு: பூபாளம் புத்தகப் பண்ணை, புதுக்கோட்டை,

பக்: 128 + 4 ;  ரூ.65/-

 ‘மயிலாப்பூர் வெங்கடாசலம் சிங்காரவேலர்’ என்ற ªணீபயர் தமிழுலகம் நன்கறிந்ததுதான். 1860ல் பிறந்து 1946ம் ஆண்டில் மறைந்த ஒரு மகத்தான ஆளுமை அவர். இந்தியத் தத்துவ, சிந்தனை மரபிற்கும் தமிழிலக்கியப் பரப்பிறகும் மேலைத் தத்துவம் சிந்தனைகளுக்கும் ஆகச்சிறந்த புலமை வாரிசு. பெரும் செல்வந்த வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். சட்டம் பயின்று வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டவர். விடுதலைப் போராட்ட வீச்சின்போது அப்பணியை உதறிவிட்டுக் காந்தியைப் பின்பற்றுகின்ற தொண்டரானவர். பன்மொழி அறிஞர், தொழிற்சங்கம், காங்கிரஸ் பேரியக்கம், சுயமரியாதை இயக்கம், பொதுவுடைமை இயக்கம் இவை சார்ந்தே வாழ்நாள் முழுமையிலும் உழைத்தவர். மிக விரிந்த படிப்பும், அகன்று ஆழ்ந்த நூலறிவும் பெற்றவர். தனது இல்லத்திலேயே சொந்தமாகப் பிரம்மாண்டமான நூலகத்தைப் பராமரித்து வந்தவர். இந்நூலுக்குப் பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து எம்.என். ராய், இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் போன்று இந்தியப் பொதுவுடைமை இயக்கச் சிற்பிகள் உட்பட பல அறிஞர் பெருமக்கள் சிங்காரவேலரின் நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அறிகிறோம்.

தன் சமகாலத்திய ஆகச்சிறந்த சிந்தனையாளர்களின் அரிய நூற்களை மாக்மில்லன், ஆக்ஸ்போர்டு பிரஸ், ஹிக்கின்பாதம், ஃபேபர் அண்டு ஃபேபர், ஹ§ன்மேன் கோலின்ஸ் உட்பட உலகின் பிரபலமான பதிப்பாளர்களிடமிருந்து நேரடியாக வரவழைத்துப் படித்து நூலகத்தில் சேர்த்துள்ளார். ம.வெ. சிங்கார வேலர். படித்ததுடன், அந்நூற்களின் நுட்பமான கருத்துகளை உள்வாங்கி தமிழ்ச் சூழலுக்கேற்ப எளிய சிறுசிறு கட்டுரைகளின் மூலம் அவற்றைத் தமிழக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே. அன்றைய சக போராளியும், சிந்தனாவாதியும் செயல்வீரருமான தந்தை பெரியார் அவர்களுக்கும் பொதுவுடைமைத் தத்துவத்தின் மீது ஓர் ஈடுபாட்டை உண்டாக்குகிற அளவிற்கு சிங்காரவேலரின் எழுத்துகளும், உரைகளும், செயல்களும் வீச்சுடன் இருந்துள்ளன.

காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், இங்கர்சால், ஸ்பென்சர், காம்டே, தாந்தே, கான்ட், ஹெகல்... என்பதாக மேலைத் தத்துவவாதிகளின் நூல்களில் பரிச்சயம் பெற்றிருந்ததைப் போலவே இந்தியத் தத்துவ சிந்தனை மரபிலும், பவுத்த தத்துவ இயலிலும், தமிழிலக்கிய நூற்பரப்பிலும் மனந்தோய்ந்து கற்றுத் தேர்ந்திருந்தவர் அவர் எனவும் அ. மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இத்தகைய சிறப்புகள் பலவும் பெற்றிருந்தவரான சிங்காரவேலரைத் தமிழுலகம் இன்று எந்த அளவிற்கு முழுமையாக அறிந்து வைத்துள்ளது? எந்த அளவிற்கு அவருக்குரிய மரியாதையைத் தந்திருக்கிறது? இவ்வளவு மகத்தான ஓர் ஆளுமையின் தகுதிகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ஏன்? இத்தகைய பல கேள்விகள் இங்கு நம்முன் அறிமுகமாகிற நூலின் 15 கட்டுரைகளையும் வாசித்து முடிக்கையில் நமது நெஞ்சைக் குடைகின்றன.

பேரா. முத்து குணசேகரன் தொகுத்து, 1978ல் தஞ்சை மாவட்டம் சீர்காழி வட்டம், பெருந்தோட்டத்தைச் சேர்ந்த நண்பர்களால் வெளியிடப்பட்ட ‘வீட்டுக்கு வீடு சிந்தனைச் சிற்பி’ மலரிலிருந்து முத்தையா வெள்ளையன் தேர்வு செய்து தொகுத்திருக்கும் 15 கட்டுரைகள் இத்தொகுப்பாக உருவெடுத்துள்ளன.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, வே. ஆனைமுத்து, ம.பொ. சிவஞானம், கி. வீரமணி, குத்தூசி குருசாமி, சி.எஸ். சுப்ரமணியம், ஏ.எஸ்.கே., நாகை முருகேசன் , எல்.வி. மித்ரோகின் ஆகிய பெருமக்களின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் சிங்காரவேலரைப் படம் பிடிக்கின்றன. பேரா. அ. மார்க்ஸின் நீண்ட முன்னுரை, மேற்கண்ட கட்டுரைகளுக்கு ஓர் அறிமுகமாகவும், ஓரிரு அம்சங்களைப் பற்றிய விமர்சனமாகவும், பொதுவான இவரின் சிந்தனைகளின் பதிவாகவும் திகழ்கிற ஒரு சிறப்பான கட்டுரை.

சிங்காரவேலரின் காதல்மணம், குடும்ப வாழ்க்கை குறித்து இரு கட்டுரைகள் உள்ளன. பேரா. முத்து குணசேகரனின் கட்டுரை சிங்காரவேலர் புரிந்த காதல் மணத்தைச் சுருக்கமாகவும், சுவையாகவும் சித்திரிக்கிறது.‘எங்கள் தாத்தா’ என்ற பெயரில் சிங்காரவேலரின் வாரிசான ம. ஜெய்பாய் ‘அழகு கொழிக்கும் ஆங்கிலத்தில்’ எழுதிய கட்டுரையை பேரா. முத்து குணசேகரனும், பி. இரத்தினசபாபதியும் தமிழாக்கித் தந்துள்ளனர். சிங்காரவேலருக்கு இருந்த ‘புத்தகப் பைத்தியம்’, பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது நெஞ்சு நிமிர்த்தி ‘தைரியமிருந்தால் என்னையும் சுடு’ என்று முழங்கிய அவரின் வீரம், 22, சவுத் பீச் ரோடு முகவரியில் இருந்த சிங்காரவேலரின் மாளிகை அன்றைய ‘இந்துஸ்தான் லேபர் கிஸான் கட்சி’த் தலைமையகமாகச் செயல்பட்டதுடன் அக்கால கட்டத்திலிருந்த புகழ்பெற்ற பொதுவுடைமை காங்கிரஸ் இயக்கத் தலைவர்களின் வேடந்தாங்கலாகவும் அது இருந்த விதம் பற்றியெல்லாம் ஜெய்பாயின் கட்டுரை மிக உணர்வுபூர்வமான நடையில் விவரிக்கிறது.

கான்பூரில் 1925ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர்; 1923 ம் ஆண்டிலேயே முதன் முதலாக மேதினக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தியவர். இத்தகைய ஒருவரைப் பற்றி அன்று திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் போன்றோரும், முசாபர் அகமது சுந்தரய்யா போன்று கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பழி சுமத்துகின்றனர். அவற்றை சிங்காரவேலரே மறுத்துரைத்திருந்த போதிலும் மீளவும் அவை இதழ்களில் வெளியாகின்றன. வேறு பலரும் இக்குற்றச் சாட்டுகளை எதிர்த்து எழுதுகின்றனர். முத்தையா வெள்ளையனின் தொகுப்புரை, இத்தகைய சில கேள்விகளை உரத்துச் சொல்லி விவாதிக்கிறது. இருவேறு கருத்துகளையும் படிக்கிற ஒருவர், காய்தல் உவத்தலற்ற மனநிலையுடன் தேடலில் ஈடுபட்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும். அவ்வாறு ஓர் உண்மைத் தேடலில் ஈடுபடத் தூண்டுகிற வகையில் முத்தையா வெள்ளையனின் தொகுப்புரையின் பதிவுகள் அமைந்துள்ளன. பொறுப்புள்ள ஒரு தொகுப்பாசிரியர் இவ்வாறுதான் செயல்பட வேண்டியிருக்கும். தொகுப்பாசிரியர் பணியைப் பொறுப்புணர்வுடனும், சிரத்தையாகவும் முத்தையா வெள்ளையன் நிறைவேற்றித் தந்துள்ளது பாராட்டுக்குரியது.

பூபாளம் புத்தகப் பண்ணை இந்த நூலை அழகிய முறையில் பதிப்பித்துள்ளது. அச்சுப் பிழைகளைத் தவிர்த்திருக்க வேண்டும். இச்சிறு குறை சரிசெய்து கொள்ளக் கூடியதே. ம.வெ.சி. குறித்து மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்நூல் தூண்டு கோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Pin It