பொதுவுடைமை இயக்கத்தின் தந்தையாகவும், தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகவும் விளங்கியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்; பல்துறைகளில் முன்னோடியாக விளங்கிய அவர், பல தலைவர்களுக்கும் அறிஞர்களுக்கும் முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்; இது மிகமிகக் குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். தமிழ்த் தென்றல் திரு.வி.க, பல்கலைச் செல்வர் தெ.பொ.மீ, விடுதலைப் போராட்ட வீரர் நீலகண்ட பிரமச்சாரி, பன்மொழி அறிஞர் ஜெமதக்னி போன்றோர் சிங்காரவேலரின் சிந்தனையால் கவரப்பட்டவர்கள்; சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட திரு.வி.க, மார்க்சியத்தைக் கற்கவும், அதில் ஈடுபாடு கொள்ளவும் பெருங்காரணமாக இருந்தவர் சிங்காரவேலர்; இதனைத் திரு.வி.க, தம் வாழ்க்கை வரலாற்றில் கீழுள்ளவாறு குறித்துள்ளார். அது நம் கவனத்திற்கு உரியது.

“எனது வாழ்க்கை, தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால், பல சமய ஆராய்ச்சிப் பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி, பொதுமை உணர்ச்சியை உண்டாக்கியது. சமயங்களின் அடிப் படையாயுள்ள பொதுமை, சமரசம்- ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணுவேன்; சிற்சில போழ்து ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை; சிங்காரவேல் செட்டியார் கூட்டுறவு சிறிது விளக்கம் செய்தது. அவ்விளக்கம் பொதுமையை உலகில் பரப்பி நிலைபெறுத்த வல்லது. கார்ல்மார்க்ஸ் கொள்கை என்ற விளக்கத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது.

இக்குறிப்பைப் போன்று பல குறிப்புகள் அவரைப் பற்றித் திரு.வி.க.வின் வாழ்க்கை வரலாற்றில் ஆங்காங்கே உள்ளன. மேற்கண்ட ஒரு குறிப்பை நோக்கினாலேயே சிங்காரவேலரின் சிந்தனை திரு.வி.க. விடத்தில் ஏற்படுத்திய தாக்குறவை உணரலாம். திரு.வி.க. தொழிற்சங்கத்தில் இடையறாது ஈடுபடுவதற்கும், மார்க்சியத்தில் முனைப்பு கொள்வதற்கும் அவரே காரணமாவார். திரு.வி.க, தம் நூலில் மற்றொரிடத்தில், டார்வினிசத்தைத் தனக்குப் போதித்த ஆசிரியர் சிங்காரவேலர் என்றும் குறித்துள்ளார். திரு.வி.க. வைப் போலவே பன்மொழி அறிஞர் ஜெமதக்னியும் அவரது சிந்தனைக்கு ஆட்பட்டவர்.

தமிழகத்தில் 1930-ஆம் ஆண்டில் நடந்த உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது தலைவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்; அவர்களில் ஜெமதக்னியும் ஒருவர்; அவரொரு காந்தியவாதி; பழுத்த ஆத்திகவாதியும்கூட; அவர் சிறையிலிருந்தபோது பக்கத்து அறையில் சிங்கார வேலர் இருந்துள்ளார். அப்போது அவர் நாகையில் நடந்த தென்னிந்திய இரயில்வே வேலை நிறுத்தப் போராட்டத்திற்காகச் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். அப்போது இராஜாஜியும் சிறையில் இருந்தார். ஒருமுறை இராஜாஜி, ஜெமதக்னியை நோக்கி, “எந்தக் காரணத்தை முன்னிட்டும் பக்கத்து அறையில் இருக்கும் கிழவனைப் பார்க்கச் செல்லாதே! அந்தக் கிழவனைச் சந்தித்தால் உனக்கு நச்சு ஊசியை (கம்யூனிசத்தை) ஏற்றிவிடுவார்; ஜாக்கிரதை” என்றாராம்.2

ஜெமதக்னி, இராஜாஜி கூறியதைப் பொருட் படுத்தாமல், சந்தித்துதான் பார்ப்போமே என்று ஒருநாள் சிங்காரவேலரைச் சந்தித்துள்ளார். சிங்காரவேலர் அவரை அன்போடு வரவேற்று உரையாடியுள்ளார். சிங்காரவேலரின் பேரன்பும் தோழமையுணர்வும் அவரை வெகுவாகக் கவர்ந்து விடவே, நாள்தோறும் சந்திப்பதைக் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார். அதன் காரணமாக நாளடைவில் சிங்காரவேலரிடம் மார்க்சியத்தைப் பாடம் கேட்டுள்ளார். இதன் விளைவாக மார்க்சிய வாதியாக மாறியுள்ளார். அன்றுதொட்டு இறுதி நாள்வரை அவர் சிங்காரவேலரின் நேயராகவும், பின்னர்ப் பொதுவுடைமைவாதியாகவும் இருந் துள்ளார். சிங்காரவேலரிடம் மார்க்சியத்தைக் கற்றதால் பின்னாளில் நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து (1978-1981) மார்க்சின் மூலதனத்தைத் தம் 79-ஆம் வயதில் தமிழாக்கம் செய்துள்ளார். அந்நூல் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அந்நூலின் முன்னுரையில் அவர் சிங்காரவேலருக்கு நன்றி கூறியுள்ளார்; சிங்காரவேலர் ஜெமதக்னிக்குச் சிறையில் மார்க்சியத்தைப் போதித்ததைப் போன்று, பின்னாளில், சிறையில் ஜெமதக்னி காங்கிரசு தலைவர்களுக்கு மார்க்சியத்தைப் போதித்துள்ளார். அந்தப் போதனையைக் கேட்டவர்களுள் பெருந் தலைவர் காமராசரும் ஒருவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

தலைவர்கள் பலர், சிங்காரவேலரின் நட்பால் பொதுவுடைமைவாதியாகவும், மார்க்சிய அன்பரா கவும் மாறியதைப் போல வேறொருவரும் மாறி யுள்ளார். அவர்தான் வீரமுரசு சுப்பிரமணிய சிவா, இவர் (4.10.1884- 23.7.1925) வ.உ.சி, பாரதியார் ஆகியோரோடு இணைந்து திலகரின் தளபதியாக விளங்கியவர். தம் தாய்நாட்டைத் தெய்வமாகப் போற்றியவர்; அதனால்தான் பின்னாளில் பாரத மாதா திருக்கோயில் அமைக்கப் பாடுபட்டார்; நாட்டுக்காக வீட்டைத்துறந்தவர்; ஆங்கிலேயரை வெளியேற்றுவதை உயிர் மூச்சாகக் கொண்டவர். இதனால் பலமுறை சிறை ஏகியவர்; சிறையில் தொழுநோய்க்கு ஆட்பட்டவர்; வெள்ளையரின் கொடுந்தண்டனையும், கொடுநோயும் அவரைத் துன்புறுத்தியபோதும், சிறிதும் துவளாதவர்; துன்பங்கள் அடுக்கடுக்காக, வந்தபோதும், “சுடச்சுட ஒளிரும் பொன்போல்” ஒளிர்ந்தவர், அவர் தியாகத்தின் திருவுரு; அறிவுச்சுடர்; ஆற்றலில் ஏறு; வீரத்திலோ மேரு. சிவத்தின் பேச்சு வீரஞ்செறிந்த பேச்சு என்பர் அறிஞர், “சிவம் பேசினால் சவமும் எழுந்து நடக்கும்” என்பார் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்லர்; நல்ல எழுத்தாளர்; மறைமலையடிகளுக்கு முன்னரே தனித்தமிழை ஊக்குவித்தவர்; நூலாசிரியர், பன்மொழி அறிஞர், இதழாளர், தொழிலாளர் தலைவர்; ஏழைப் பங்காளர்; இவ்வாறு பன்முக ஆளுமை கொண்ட பேரறிஞர்தான் அவர்; தொழுநோய் தனக்குத் தீராத் தொல்லை அளித்த போதும் துவளாது மேலும் பன்னிரண்டு ஆண்டுகள் தொண்டாற்றிய செம்மல்தான் அவர், ஆம்; செம்மை சான்ற செம்மல். சுருங்கக் கூற வேண்டுமாயின் “என் கடன் பணிசெய்து கிடப்பதே” என்ற ஆன்றோர் மொழிக்கு இலக்கணமானவர்; அதில் அவரொரு தனிப்பிறவி.

சிவம், முதலில் திலகரையும், பின்னர் காந்தியடி களையும் பின்பற்றியவர். அவருடைய வாழ்க் கையைக் கூர்ந்து நோக்கின் அதில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளவற்றைக் காணலாம்; பிற தலைவர் களைப்போல் கண்டதே காட்சி; கொண்டதே கொள்கை என்று இராமல், மாற்றத்தை அறிந்தவர், புரிந்தவர் அவர்; சிந்தனையிலும் சமுதாயத்திலும் ஏற்படும் மாற்றங்களைக் காணமுயலாமல், பத்தாம் பசலியாக இருக்கும் போக்கு அவரிடத்தில் இருந்த தில்லை. சமுதாயத்தில் ஏற்படும் மாற்றங்களையும், தேவைகளையும் அவர் நன்குணர்ந்து செயல் பட்டுள்ளார். இங்கு ஒன்றை நோக்கினால் உண்மை விளங்கும். ஒரு மொழியில் வெளிவரும் இதழ் களோ நூல்களோ முழுக்க முழுக்க மக்கள் மொழியில்தான் வெளிவர வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்தார். தாம் நடத்திய ஞான பானு இதழில் ஆங்கில மோகம் கொண்டோரைக் கண்டனம் செய்துள்ளார். இதனைப் போன்றே தமிழில், சமஸ்கிருதம், இந்துஸ்தானி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிச் சொற் களைக் கலந்து எழுதுவதை அவர் பெரிதும் சாடினார். தாய்மொழியின் தூய்மையைக் காப்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். இதனைப் போன்றே சட்டத்துறைச் சொற்களை மொழி பெயர்க்கப் பலவாறு கட்டுரை எழுதித் தெளிவுறுத்தி உள்ளார். இவற்றிற்கெல்லாம் காரணம் என்னை? மக்கள்பால் அவர் கொண்ட அக்கறையும், தொலை நோக்குமே காரணமாகும்.

சுதந்திரப் போராட்ட வீரராக விளங்கிய அவர் தொழிலாளர் போராட்டத்திலும் பெரும் பங்கு கொண்டுள்ளார். தூத்துக்குடியில் கோரல் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை வ.உ.சி. தொடங்கியபோது அவருக்குத் துணையாக இருந்தவர் சிவா. 28.2.1908 அன்று அரசாங்கத்தின் தடையை மீறித் தொழிலாளர்கள் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். 1919-ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த டிராம்வே தொழிலாளர் சங்கத்திலும் பங்கேற்று உழைத்துள்ளார். 27. 1. 1919-இல் டிராம்வே தொழிலாளர் சங்கத்தில் தேசபக்தர் ஹரிசர் வோத்தமராவ் தலைமையில் தொழிலாளர்களுக்காக நீண்ட உரையாற்றியுள்ளார். இதே ஆண்டில் இச்சங்கத்தில் வ.உ.சி.யை அழைத்தும் பேச வைத்துள்ளார். 1920-ஆம் ஆண்டில் டிராம்வே வேலை நிறுத்தம் தொடங்கியபோது சிவா இரவு பகல் பாராமல் உழைத்துள்ளார். பிற சங்கங்களின் போராட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார். 1921-ஆம் ஆண்டில் பிஅண்டுசி மில் தொழிலாளரின் வேலைநிறுத்தம் ஆறு மாதங்களாகத் தொடர்ந்த போது தொழிலாளர்கள் வறுமையிலும் இல்லா மையிலும் வாடினர்; அவர்கள் கைகளில் பணம் இல்லாததால் வீட்டில் சமையல் செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் தலைவர்கள் பலரோடு சிவாவும் இணைந்து வீடுவீடாக (மைலாப்பூர், திருவல்லிக்கேணி) கையரிசி பெற்றுக் குவித்து அதனைத் தொழிலாளர்களுக்குத் தந்துள்ளனர். இவ்வாறு ஏழை எளிய மக்களின் தொண்டராக இருந்தவர்தான் அவர்.

இவ்வாறு மக்களின் தேவை உணர்ந்து மாற்றத்தை அறிந்து செயல்பட்டவர் அவர்; நாட்டு விடுதலைக்காக அரசியல் போராட்டத்தில் மட்டுமின்றி, ஏழை-எளிய மக்களுக்காகத் தொழிற் சங்கப் போராட்டத்திலும் ஈடுபட்டவர் அவர். தேவையை, மாற்றத்தை மனங்கொள்ளும் நிலை அவரிடத்தில் இருந்ததால்தான் அது சாத்திய மாயிற்று; அரசியலிலும் அவரது மாற்றம் காணும் மனப்பான்மை எப்படியிருந்தது என்பதை இனிக் காண்போம். அன்னிபெசண்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கம் கண்டபோது அவரது அரசியல் நிலைப்பாட்டைப் பலர் ஆதரித்தனர்; சிலர் எதிர்த்தனர்; அப்படி எதிர்த்ததில் முக்கியமானவர் களில் சிவம் ஒருவர். திரு.வி.க, முதலில் பெசண்ட்டை ஆதரித்தார்; பின்னர் எதிர்த்தார். ஆதரிக்கும் போது அவர் தேசபக்தனில் பெசண்டை “அன்னை பெசண்ட்” என்று எழுதினார். ஆனால், சிவாவோ திரு.வி.கவைக் கடிந்துகொண்டு “அவரை “அந்நிய பெசண்ட்” என்றுதான் குறிப்பிட வேண்டும் என்றார். அந்நாளிலேயே தாய்மொழிவழிக் கல்வி யையும், விதவை மறுமணத்தையும் வலியுறுத்தி யுள்ளார்; இவை அவரது புதுமைச் சிந்தனைக்கும் மாற்றம் காணும் மனப்பான்மைக்கும் எடுத்துக் காட்டாகும்.

இந்தப் புதுமைச் சிந்தனையே அவரை மார்க்சியத்தை நோக்கி அழைத்துச் சென்றுள்ளது. கால வளர்ச்சிக்கேற்ப அவர் சிந்திப்பவராக இருந்ததால்தான் அம்மாற்றம் அவர் மனத்தில் ஏற்பட்டுள்ளது எனலாம். அக்காலத்தில் சுதந்திரம் பெறுவதற்கு அமைதி வழியே மிக முக்கியமானது என்று பெரும்பாலோர் கூறிக் கொண்டிருந்த போது, இவர்தான் மிகத் துணிவாகத் தேவை யிருந்தால் ஆயுத வழியிலும் இறங்கலாம் என்றார். அகிம்சை மட்டுமே பயன்தரத்தக்கது என்பதை அவர் ஏற்கவில்லை; ஏதோ ஒரு திட்டத்தை எடுத்துக் கொண்டு அதற்கு ஒருவழிதான் உள்ளது என்பதைத் தன்னால் ஏற்க முடியாது என்றார். சுதந்திரம் எந்த வழியில் வந்தாலும், ஏற்பேன் என்றார். இரத்தப் புரட்சியை அவர் ஆதரித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது,

“வரலாற்றில் ஒரு நாடு ரத்தம் சிந்தாமல் யுத்தம் இல்லாமல் சுதந்திரம் பெற்றதுண்டா? இந்நாள்வரை வரலாற்றுச் சான்று ஏதும் நமக் கில்லை” என்று கூறியுள்ளார்.3

மேலும் “திரிசூலம் ஏந்த வேண்டிய காலம் வரும்” என்னும் புரட்சிக் குறிப்பையும் அளித் துள்ளார். திரிசூலம் என்னும் குறியீடு ஆயுதம் ஏந்துவதைக் குறிப்பதாகும். ஆன்மீகத்தில் மூழ்கிய ஒருவர், காந்தியத்தில் அழுந்திய ஒருவர் இவ்வாறு கூறுவது சாதாரணமானது அன்று; மாற்றத்தை மனங்கொள்ளும் புதுமை எண்ணம் அவரிடத்தில் இருந்ததால்தான் அவர் சிங்காரவேலரை நோக்கிப் பயணித்துள்ளார்; இச் செய்தி மிக முக்கியமானது. இது அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரும் மாற்றம். இதனை மையப் புள்ளியாக அடையாளம் காட்டுவதே இக்கட்டுரை.

1905-இல் ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டபோது அதனை முழுமையாக ஏற்று வரவேற்றவர்களில் சிவாவும் ஒருவர். அப்புரட்சி தோல்வியுற்றபோது போல்ஸ்விக்குகளைக் குறித்து பிரித்தானிய இந்தியாவில் செய்தி நிறுவனங்களால் தவறான செய்திகள் பரப்பப்பட்டன. அச் செய்திகளின் உண்மையை அறியாமல் இந்தியாவிலுள்ள தலைவர்கள் தவறான குறிப்புகளைத் தருபவர் களாக மாறிவிட்டனர். இதில் திரு.வி.கவும் பாரதியாரும் அடங்குவர். எதிர்பாராவிதமாக இராஜாஜி போல்ஸ்விக்குகளை ஆதரிப்பவராக இருந்துள்ளார். இவர்களுள் டாக்டர் வரதராசலு நாயுடு குறிப்பிடத்தக்கவர். செய்தி ஊடகங்கள், எவ்வளவு பொய்ச் செய்திகளைப் பரப்பினாலும், அவற்றை ஏற்காது, நன்கு சிந்தித்துப் போல்ஸ் விக்குகளை ஆதரிப்பவராக இருந்துள்ளார். அவர் எப்படி ஆதரித்துள்ளார் என்பதைக் கீழே காணலாம்.

“அடிப்படையான நியாய கோட்பாடுகளின் அடித்தளத்தின் மீதான ஒரு சர்வதேச தார்மீக ஒழுக்கத்தைப் போல்ஸ்விக்குகள்தான் நிலைநாட்ட முயன்றுள்ளனர். ஏகாதிபத்திய இங்கிலாந்தோ போல்ஸ்விக்குகள் நடைமுறையில் செயல்படுத்துகிற ஒரு கொள்கையை மதிக்க முடியாது. ஏனெனில் அவ்வாறு மதித்தால் அது அதனுடைய நன்மையைப் பாதிக்கக் கூடியது.”4

இக்குறிப்பின் மூலம் டாக்டர் வரதராசலு நாயுடு எத்துணைத் தெளிவாக இருந்துள்ளார் என்பதை உணரலாம். அக்காலத்தில் (1020- 24) சோவியத் ஒன்றியத்தைப் பற்றிய தவறான பிரச்சாரங்களை எல்லாம் கடுமையாக மறுத்துத் தள்ளியவர் அவர். மேலும் மேயோ எழுதிய இந்தியத் தாய் (MOTHER INDIA) நூல் மீது பெரும்பாலோர் சேற்றை வாரி இறைத்தபோது, அந்நூலில் பெரும் பாலும் உண்மைச் செய்திகள் உள்ளன என்று துணிவாகக் கூறியவர் நாயுடு; அவரொரு நியாயமான சிந்தனையாளர். பிரித்தானிய இந்தியாவில் பரப்பப்பட்ட தவறான செய்திகளுக்கு சிவாவும் ஆட்பட்டுவிட்டார். இதனால் போல்ஸ்விக்கு களை எதிர்ப்பவராக இருந்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் உண்மையை உணர்ந்ததால் போல்ஸ்விக்குகளைப் பற்றியும், பொதுவுடைமைக் கொள்கை பற்றியும், லெனினைப் பற்றியும் நிரம்பப் படிப்பதை விரும்பியுள்ளார். இதற்குக் கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஃபார்வேர்டு இதழ் (FORWARD) பெரும் தூண்டுதலாகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளது. இந்த இதழின் ஆசிரியராக இருந்தவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் அவர்கள் ஆவர்.

காங்கிரசில் மாற்றம் வேண்டுவோரும் வேண்டாதவருமாக இருவகையாகப் பிரிந்தனர்; மாற்றம் வேண்டுவோர் சுயராஜிய கட்சியினராக இருந்தனர்; இதன் தலைவர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்; மோதிலால் நேருவும் வேறு சில தலைவர் களும் இக்கட்சியை ஆதரித்தனர்; சிங்காரவேலரும் சுப்பிரமணிய சிவாவும் இக்கட்சியைத்தான் ஆதரித்தனர். பாப்பாரப் பட்டியில் சிவா 22. 6. 1923-இல் சித்தரஞ்சன் தாஸைக் கொண்டு பாரதா சிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் தேசபந்துடன் சிவா நல்ல உறவு கொண்டிருந்தார். தேசபந்து வங்கத்தில் ஃபார் வேர்டு இதழைத் தொடங்கினார். அந்த இதழில் சோவியத் புரட்சி பற்றியும், பொதுவுடைமை பற்றியும், லெனின் குறித்தும், இந்தியத் தொழிலாளர் குறித்தும் போல்ஸ்விஸம் குறித்தும் கட்டுரைகள் வெளியாகி உள்ளன; அக்கட்டுரைகள் அவரது சிந்தனையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இதனால் கம்யூனிசம் குறித்தும் போல்ஸ்விக்குகள் குறித்தும் அவர் கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஃபார்வேர்டு இதழில் வந்த கட்டுரைகளை ஆழ்ந்த ஈடுபாட்டோடு அவர் கத்தரித்து ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டிவைத்துப் பாதுகாத் துள்ளார். அக்கட்டுரைகளின் தலைப்புகளை ஆய்வாளர் பெ.சு.மணி தம் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். அதனை நோக்கினால் உண்மையை உணரலாம்.5

1. M.N. Roy’s appeal to Labour.
2. Indian working Class Rights 16-4.27 “Hindu”
3. Memories of Nicholas II - By Leo Tolstoi- Forward.
4. Lenin- The Hero of a Legend - Maxim Gorky- Forward.
5. Alexis Ivanvcih Rykoff- Swarajya.
6. Reds would make Lenin immortal- Forward.
7. Lenin’s Last illness- Forward.
8. Evolution of the Revolution in Russia- Forward.
9. Communist Design on British Empire- Forward.
10. Terrorism in Russian Politics- Maxim Gorky.
11. Lenin’s Glowing Faith in Life- Swarajya.
12. Anti- British Plots in Moscow-3rd International’s Programme- Hindu- 16-7-1924.
13. Communist Leaflet- ‘Red’ challenge to Government- Forward.
14. Christianity and Bolshevism; Hugh. B. Chapman. Forward.
15. The Soviet Russia- Leading Men of Time- Forward.
16. Government and the Communist Party- A Challenge- S. Satya Bhakta- Forward.

இக்கட்டுரைகளைப் படித்து நன்கு பாதுகாத்து வைத்திருக்கிறார் எனில் அவரது சிந்தனையில் எத்துணை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை நன்கு உணரலாம். தொழிலாளர் இயக்க ஈடுபாடும், சிங்காரவேலர் போன்ற தொழிலாளர் தலைவர் களோடு இணைந்து செயல்பட்டதாலும் அவரது சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம். தியாகி சிதம்பர பாரதி நேர்முகப் பேட்டியில் சிவம், சிங்காரவேலருக்குச் சிறந்த நண்பராக இருந்துள்ளார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பெ.சு.மணி மேற்குறித்த நூலில் குறித்துள்ளார். இது குறித்து வேறு சிலர் எழுதி யிருப்பதும் நம் கவனத்திற்குரியது.

தொழிலாளர் தலைவர்களான சிங்காரவேலர், சக்கரைச்செட்டியார், திரு.வி.க ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தொழிலாளர் பிரச்சினைகளில் ஆழ்ந்த அக்கறையுடன் செயல் பட்டார். ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டார் இயல்பாகத் தனக்கிருக்கும் ஞானத் தேடலாலும், தொழிற்சங்க ஈடுபாட்டாலும், சிங்காரவேலர் போன்ற தலைவர்களுடன் கொண்ட உறவாலும் பொதுவுடைமைக் கொள்கை மீது நாட்டம் கொண்டார்.6

“சிவா வாழ்க்கையின் தம் இறுதிக்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நெருங்கிப் பார்த்து அறிந்திட விழைந்தார்; சிவாவின் சென்னை நண்பர்களில் ஒருவர்தான் தோழர் எம். சிங்கார வேலு. சிவா பொதுவுடைமை இயக்கத்தினிடம் ஆர்வம் காட்டினார்.”7

இக்குறிப்புகளை நோக்கினால் சிங்காரவேல ரோடு அவருக்கிருந்த நட்பை உணரலாம். இங்கு நட்பைக் காட்டிலும் அவரது சிந்தனையில் ஏற்பட்ட மாற்றமே மிக முக்கியமானது. சிவத்தின் தொழிற்சங்க ஈடுபாடும், புதியதைக் காணும் தேடலும் சிங்காரவேலரோடு கொண்ட நட்பும் அவரை வேகமாகப் பொதுவுடைமைக் கொள் கையை நோக்கி நகர்த்தியுள்ளது. மேலும், சிங்காரவேலரின் இல்லம் (2, சௌத் பீச் சாலை மயிலை) சிவத்தின் இல்லத்தின் (பார்பர் பிரிட்ஜ், மயிலை மற்றும் 12, பிச்சுப் பிள்ளைத் தெரு, மயிலை) அருகில்தான் இருந்துள்ளது. அதாவது ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்துள்ளது. பிஅண்டுசி மில் போராட்ட காலத்திலிருந்து இவர்களது நட்பு மேலும் கெட்டிப்பட்டிருக்கும். இக்காலம் முதற்கொண்டு பொதுவுடைமைக் கொள்கை பற்றியும் சோவியத் ஒன்றியம் குறித்தும் விவாதங்கள் நடத்திருக்கலாம்; இந்த விவாதங்களின் வளர்ச்சியாகத்தான் அவர் ஃபார் வேர்டு இதழின் கட்டுரைகளைக் கூர்ந்து படித்துச் சேகரித்து வைத்திருப்பார்.

இங்கு மற்றொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும். 1. 5. 1923-இல் சிங்காரவேலர் மே தினத்தை இரு இடங்களில் நடத்தியுள்ளார். ஒன்று உயர்நீதிமன்றக் கடற்கரையிலும் (இப்போது துறைமுகம் உள்ள இடம்) மற்றொன்று திருவல்லிக் கேணிக் கடற்கரையிலும் நிகழ்த்தப்பட்டுள்ளன. முதல் இடத்தில் சிங்காரவேலரும் இரண்டாம் இடத்தில் சுப்பிரமணிய சிவாவும், கிருஷ்ணசாமி சர்மாவும் உரையாற்றியுள்ளனர். மேதினக் கொண்டாட்டங்களைக் கொண்டே அவர்களுக் கிடையே இருந்த நட்பையும், கொள்கையுறவையும் உணரலாம். இதுபோன்ற செயல் பாடுகள்தான் அவரைப் பொதுவுடைமையை நோக்கி நகர்த்தி யுள்ளது. திரு.வி.க, மற்றும் ஜெமதக்னி போன் றோர் சிங்காரவேலரால் தாக்குறவு பெற்றது போய் சுப்பிரமணிய சிவாவும் பெற்றிருப்பதற்கு வாய்ப்புகள் பல உண்டு. சிங்காரவேலரின் வரலாற்றை முதன் முதலில் எழுதிய சி.எஸ். சுப்பிரமணியம் ஒரு குறிப்பைத் தெரிவித்திருப்பது நோக்கற்பாலது.

“ஏப்ரல் 6 முதல் 13 வரை கடைப்பிடிக்கப் பட்ட தேசிய வாரத்தின் போது சுப்பிரமணிய சிவாவோடு சிங்காரவேலர் சென்னைத் திருவல்லிக் கேணிக் கடற்கரையில் பலமுறை பொதுக்கூட்டங் களில் பேசியிருக்கிறார்.8

இக்குறிப்பினாலும் அவர்களுக்கிடையே இருந்த நட்புறவை அறியலாம். மேலும் மதுரைச் சிதம்பர பாரதி மதுரைத் தியாகிகள் மலர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை யாருக்கும் தெரிந்திராத ஓர் அரிய செய்தியை வெளிப்படுத்தி யுள்ளார். கீழ்வருமாறு அம்மலரில் குறிப் பிட்டுள்ளார்.

“தமிழ்நாட்டில் பொதுவுடைமைத் தத்துவத்தைச் சிங்காரவேலு செட்டியாருடன் சேர்ந்து பரப்பு வதற்காக ஓர் அச்சாபிஸ் மிஷின் கொண்டு வந்தார் சிவம்.”9

இக் குறிப்பின் மூலம் சிவா, பொதுவுடைமைக் கொள்கையின்பால் கொண்டுள்ள பற்றுறுதியை உணரலாம். இத்துனை மாற்றம் ஏற்படுவதற்குச் சிங்காரவேலர் பெருங்காரணமாக இருந்திருப்பார் என்பதை இதுகாறும் கண்ட குறிப்புகளால் நன்கு உணரலாம் அன்றோ! சிதம்பர பாரதி அம்மலரில் மேலும் ஒரு குறிப்பைத் தந்துள்ளார். அதாவது, “மேல் விவரங்களை அடுத்து வெளிவரும் ‘தமிழகத்தில் புரட்சி’ என்பதில் எதிர் பாருங்கள்” என்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் வெளி வரவில்லை எனக் கூறப்படுகிறது. அந்நூல் வெளி வந்திருந்தால் அவ்விருவரைப் பற்றி மேலும் பல அரிய தகவல்கள் கிடைத்திருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இது மிகச் சோகமானது. தமிழகத்தில் இதுபோன்று கிடைக்காமல் போன செய்திகள் பற்பல உண்டு; இதுதான் தமிழகம். சிவாவின் சிந்தனையில் கலந்த பொதுவுடைமைத் தத்துவம் அவருடைய சீடர் களான சிதம்பர பாரதி, சீனிவாசவரதன், நெல்லை எஸ்.என். சோமயாஜுலு ஆகியோரிடத்திலும் கலந்துள்ளது. அவர்கள் பொதுவுடைமையைப் பரப்புவதிலும், கார்ல் மார்க்சை அறிமுகப்படுத்து வதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்கள் சில கட்டுரைகளையும் நூல்களையும் மொழிபெயர்த் துள்ளனர். குறிப்பாக, சீனிவாச வரதன் கார்ல் மார்க்சைப் பற்றிக் “கார்ல்மார்க்ஸ் அல்லது மேற்றிசை மாதவன்” எனக் கட்டுரையையும் எழுதியுள்ளார். இக்கட்டுரை பல ஆண்டுகளின் பின்னர் தாமரையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் கட்டுரையில் ஒருபகுதிதான் கிடைத் துள்ளது. சிவாவின் சீடர்களுக்கே இத்துணை உணர்வு உள்ளதென்றால் சிவாவுக்கு எத்துணை உணர்வு இருந்திருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம்.

25. 12. 1925இல் கான்பூரில் இந்தியாவின் முதன்முதலான அகில இந்தியப் பொதுவுடைமை மாநாடு நடந்தபோது அம்மாநாட்டில் சிவாவும் கலந்துகொள்ள விரும்பியுள்ளார். ஆனால் அதற்கு அவரது உடல்நலம் இடம் தராததால் அவருக்கு மாநாட்டில் பங்கேற்க இயலாநிலை ஏற்பட்டு விட்டது. இது குறித்து இரவீந்திர பாரதி கீழுள்ளவாறு குறித்துள்ளார்.

“1925-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி மதுரை சேர்ந்தனர்; உடம்பு சிறிது சௌக்கிய மானதும் திருநெல்வேலி ஜில்லா மார்க்கமாக மேற்குக் கடற்கரையோரமாய்ப் பம்பாய் சென்று, கான்பூரில் நடைபெறும் பொதுவுடைமைக் கட்சி மாநாட்டிற்குச் சென்றுவிட்டு, கல்கத்தா சென்று ஸ்ரீதேசபந்து தாஸரைப் பார்க்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் பராசக்தி சுவாமி சிவத்திற்கு “நீ இந்த உடலுடன் இவ்வளவு பாடுபட்டது போதும் என்னிடம் வந்துவிடு” என்று ஆக்ஞையிட்டு விட்டாள் போல் தோன்றுகிறது.”10

சிவா இறுதிநாள்களில் பொதுவுடைமைத் தத்துவத்தில் எத்துணை ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளார் என்பதற்கு மேற்கண்ட குறிப்பு நல்ல சான்றாகும்; ஆன்மீகத்திலும், மத நம்பிக்கை யிலும் ஆழ்ந்த நம்பிக்கையுடைய ஒருவர் வழி வழிச் சடங்கைப் பேணும் மரபில் வந்த ஒருவர் மிக வேகமாகவும் விவேகமாகவும் மாற்றமடைந் திருப்பது சாதாரணமானதன்று; மிக அசாதாரணமானது. சிவாவின் புதுமைத் தேடலும், தொழிற் சங்க இயக்க அனுபவமும், சிங்காரவேலரின் நட்பும் அவரை வெகுவாக மாற்றியுள்ளன. சிவா உடல் நலத்தோடு பல்லாண்டுகள் வாழ்ந்திருப்பாராயின் அவரது அரசியல் நிலைப்பாடு மேலும் துலக்கம் பெற்றிருக்கும்; சிங்காரவேலரோடு கொண்டிருந்த நட்பின் ஆழமும் வெளிப்பட்டிருக்கும். ஆனால் சிவாவைப் பற்றிய கொடும் நோய் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. சிவாவின் சீடரின் இரண்டாம் நூல் வெளிவந்திருந்தாலும், சிதம்பர பாரதி மேலும் கூடுதலாக வாழ்ந்திருந்தாலும் பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கும். அவற்றிற்கும் வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது; எது எப்படி யிருப்பினும் சிங்காரவேலரின் நட்பு, அவரது கொள்கை மாற்றத்திற்குத் திருப்புமுனையாக இருந்துள்ளது என்பதை ஒருவாறு தெளியலாம்.

சான்று நூல்கள்

1.திரு.வி.க, - திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்-பக்- 606- 1967- சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை- 600001
2.விளக்கத்திற்கு மேற்குறிப்பிட்ட நூலைப் (பக்- 288) பார்க்கவும்.
3.கு. கணேசன்- சுப்பிரமணிய சிவா- பக் 23- 2009- சாகித்ய அகாதெமி - குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை தேனாம்பேட்டை, சென்னை- 600018.
4.பெ.சு.மணி- வீரமுரசு சிவா - பக்-141, (2004- பூங்கொடி பதிப்பகம்- 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி- மயிலை சென்னை- 600 004.
5.முன்குறிப்பிட்ட நூல்- பக்- 148- 2004.
6.இரவீந்திர பாரதி- விடுதலை வேள்வியில் தமிழகம்- தொகுப்பு- ஸ்டாலின் குணசேகரன்- பக்- 218- 2000- பாகம் 1- நிவேதிதா பதிப்பகம்- 78, தெற்குவீதி, மாணிக்கம் பாளையம், வீரப்பன் சத்திரம், ஈரோடு- 638 004.
7.கு. கணேசன்- சுப்பிரமணிய சிவா- பக்- 24- 2009.
8.சி.எஸ். சுப்பிரமணியம்- சிங்காரவேலர்- விடுதலை வேள்வியில் தமிழகம்- பக்- 388- 2000- பாகம் ஐ.
9.சிதம்பர பாரதி- மதுரைத் தியாகிகள் மலர்- பக்- 95- எடுத்துக் காட்டியவர் பெ.சு. மணி- வீரமுரசு சுப்பிரமணிய சிவா- பக் 149- 2004.
10.சீனிவாசவரதன்- சுப்பிரமணியசிவம் வாழ்க்கை வரலாறு- எடுத்துக்காட்டியவர்- இரவீந்திர பாரதி- சுப்பிரமணிய சிவா- விடுதலை வேள்வியில் தமிழகம்- பக்- 219 பாகம் I -2000.

Pin It