உலகமெங்கும் மனிதர்களின் முதல் தேவை உணவும் உடையுமேயாகும்.
‘தெண்கடல் வளாகம் பொதுமை இன்றியும்
வெண்குடை நிழற்றிய வொருமையோர்க்கும்
நடுநாள்யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி, உடுப்பவையிரண்டே’ புறநானூறு : 189
என்பது, மனிதனது இன்றியமையாத் தேவைகள் குறித்து நக்கீரர் கூறும் செய்தியாகும். மண்ணாளும் வேந்தனாயினும் கல்வியறிவற்ற வேடனாயினும் மனிதனது அடிப்படைத்தேவைகள் இவ்விரண்டுமேயாகும். அவனது பிறதேவைகள் வேறுபடலாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமையலாம். எனவே, ‘பிறவு மெல்லாம் ஓரொக்குமே” என்றார்.
குரங்கில் இருந்து மனிதனாகப் பரிணமித்த மனிதன் மானத்தை மறைத்துக் கொள்ள முயன்ற காலம் எது என்பது யாருக்கும் தெரியாது. மனித குலத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் ஆகப்பெரிய காலப் பகுதியில் அவன் விலங்குகளைப் போல், மலைக்குகைகளையும் மரக்கிளைகளையுமே தன் உறைவிடமாகக் கொண்டு வாழந்தான். உணவுக்காக விலங்குகளை வேட்டையாடினான். விலங்குகளைப் போலவே ஆடை எதுவும் அணியாமல் வாழ்ந்தான். கால வோட்டத்தில் மானத்தை மறைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்ட பொழுது அவனுக்கு ஆடையாகக் கிடைத்தவை இலைகள், தழைகள், மரப்பட்டைகள் மற்றும் விலங்குகளின் தோல்களுமேயாகும். எனவே தொடக்கத்தில் அவன் அவற்றையே ஆடையாக அணிந்தான். அவ்வழக்கம் வரலாற்றின் நீண்ட நெடிய காலப்பகுதி வரை அவனிடம் நீடித்திருந்தது. அவ்வழக்கம் சங்க காலத்திலும் அவனிடம் தொடர்ந்து நீடித்தது. அதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.
மரப்பட்டைகள் ஆடையாக அணியப்பட்டமை குறித்தும் பெண்கள் தழையுடை அணிந்தமை குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ‘சீரைதைஇய உடுக்கையர்” என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. (சீரை ஸ்ரீ மரவுரி)
இலைதழைகளையும் மலர்களையும் மரல்நாரிலும் நறை நாரிலும் தொடுத்துக் கட்டித் தழையுடையாகப் பெண்கள் அணிந்ததற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.
முடிந்த குல்லை இலையுடை நறும்பூ
செங்கான் மரா அத்தவாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண்மாத்தழை
திருந்து காழல் குல் திளைப்ப உடீஇ”
- திருமுருகு – 201-204
(இலையைத்தலையிலே உடைய கஞ்சங்குல்லையையும் (கஞ்சா) இலையை யுடைய நறிய பூங்கொத்துக் களையும் செவ்விய காலினையுடைய மராத்தினது வெள்ளிய கொத்துக்களையும் நடு நடுவே வைத்து வண்டுகள் தேனையுண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அசையும்படி உடுத்தனர்) என்று மகளிர் தழையுடையணிந்த செய்தியை நக்கீரர் கூறுகிறார்.
‘தீநீர்ப் பெருங்குண்டு சுனைப்பூத்த குவளைக்
கூம்பவிழ் முழுநெறி புரள வரும் அல்குல்’ – புறநானூறு : 116
(இனிய நீரையுடைய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகையவிழ்ந்த புறவிதழ் ஒடித்த முழுப் பூவாற் செய்யப்பட்ட தழையசையும் அல்குல்) என்று கபிலரும்
‘அளியதாமே சிறு வெள்ளாம்பல்
இளையமாகத் தழையாயினவே – புறநானூறு 248
(சிறிய வெள்ளிய ஆம்பல்கள் இரங்கத்தக்கன, அவைதாம் யாம் இளையமாய் இருக்க முற்காலத்தே தழையுடையாய் உதவின) என்று ஓக்கூர் மாசாத்தனாரும் கூறியுள்ளனர்.
‘நீரறவறியா நிலமுதற்கலந்த
கருங்குரனொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்லியல் மகளிரைதகலல் குற்
றொடலை யாகவும் கண்டனம்” – புறநானூறு :271
(நீர் தொலைதலையறியாத நிலத்தில் நிற்கும் கரிய கொத்துக்களையுடைய நொச்சியினது அழகிய நிறத்தையுடைய தழை, இளமகளிருடைய அல்குலிடத்தே தழையுடையாக அணியப்பட்டதனை யாம் முன்பு கண்டோம்) என்று நொச்சித்தழைகள் பெண்களால் தழையுடையாக அணியப்பட்டதற்கு வெறிபாடிய காமக் காணியார் சான்றளிக்கிறார். இதனையே மோசிகீரனாரும்
மணிதுணர்ந்தன்ன மாக்குரனொச்சி
தொடியுடை மகளிரல் குலுங்கிடத்தி -புறநானூறு : 272
(மணிகள் கொத்துக்கொத்தாய் அமைந்தாற் போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே, தொடியணிந்த இளமகளிர் அல்குலிடத்தே தழையுடையாகவுங்கிடப்பாய்) என்று நொச்சியை நோக்கிக்கூறுவதாகப்பாடியுள்ளார்.
‘தலைவி தோழியருடன் 99 வகைப்பட்ட மலர்களைக் காட்டிற்கொய்து வந்து பாறையிலே குவித்து அவற்றின் புறவிதழ்களை நீக்கி, பாம்பின் படம் போலப் பரந்த அல்குலிடத்தே தழையுடையாக அணிந்தாள்” என்று, கபிலர் குறிஞ்ப்பாட்டில் கூறுகிறார். மக்கள் கணசமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் மானத்தை மறைத்திட அம்மக்கள் தழையும் தோலும் உடையாக அணிந்தனர் என்பதனை இலக்கியங்கள் கூறுகின்றன.
தொடக்கத்தில் மனிதன், தென்னை ஓலை, பனையோலை, பனையகணி, மரல்நார், நறை நார் முதலியவற்றைக்கொண்டு பெட்டி, கடகம், பேழை, பிழா, வட்டி, வலை முதலியவற்றைச்செய்யத்தெரிந்து கொண்டிருந்தான். பின்னர் பருத்தியில் இருந்து பஞ்செடுக்கவும் நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் தெரிந்து கொண்டிருந்தான். அவ்வாறு நூல் நூற்கவும் ஆடை நெய்யவும் மனிதன் தெரிந்து கொண்ட காலம் எது என்பது யாருக்கும் தெரியாது. அது நிகழ்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கலாம். சங்க காலத்தில் பருத்தி நெசவுத்தொழில் பெற்றிருந்த வளர்ச்சியைச் சங்க நூல்கள் நமக்கு காட்டுகின்றன.
முல்லை நிலத்தில் ஊரைச் சூழ இருந்த நிலங்களில் பருத்தி விளைந்தது. பருத்திச் செடியில் விளைந்து முற்றி வெடித்துக்கிடந்த பருத்தியைச் சேகரித்து மூடைகளிடல் திணித்து அடைத்து வீடுகளுக்குக் கொண்டு வந்தனர். இச்செய்தியை, ‘கோடைப்பருத்தி வீடுநிறைபெய்த மூடைப்பண்டம்” என்று புறநானூறு (393) கூறுகிறது.
பரிசில் வேண்டிவந்த பாணர்க்குச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் உணவளித்து உண்பித்த செயலுக்கு, பருத்தியை மூடைகளில் அடைத்து திணித்த செயலை நல்லிறையனார் என்ற புலவர் உவமையாகக்காட்டுகிறார். ‘கோடையிற் கொண்ட பருத்தியினின்றும் கொட்டை நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத்திணித்த பொதியாகிய பண்டம் நிறைந்திருப்பது போல வெள்ளிய ஊன் துண்டங்களைக்கொடுத்து உண்பித்தான்” என்று கிணைப்பொருநன் கூற்றாக வைத்து அவர் பாடியுள்ளார்.
‘பருத்திக்காய் முற்றி வெடித்ததனாற் கிடைக்கும் பஞ்சை வில்லால் அடித்துச்சுத்தம் செய்தனர்” என்று நற்றிணை (299) கூறுகிறது. பருத்தியில் இருந்து கொட்டை நீக்கிப் பஞ்செடுத்து வில்லால்அடித்துச் சுத்தம் செய்தல் நூல் நூற்றல் முதலிய வேலைகளைப் பெண்களே செய்தனர். அப்பெண்கள் ‘பருத்திப் பெண்டிர்” எனப்பட்டனர் . இவ்வேலைகளைப் பெண்கள் பகலில் மட்டுமல்லாது, இரவு நேரங்களிலும் விளக்கு வைத்துக்கொண்டு நெடுநேரம் வரை செய்தனர். இதனை,
‘ சிறையுஞ் செற்றையும்புடையுநளெழுந்த
பருத்திப்பெண்டிர் சிறு தீ விளக்கம் “
(பக்கங்களையும் குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த பருத்தி நூற்கும் பெண்டாட்டியினுடைய சிறிய விளக்கின் ஒளி) என்ற புறநானூற்றுப் பாடலடிகளும் (326)
‘ ஆளில் பெண்டிர் தாளிற் செய்த
நுணங்கு நுண்பனுவல் “ என்னும்
நற்றிணைப்பாடலடிகளும்(353) தெளிவுற உணர்த்துகின்றன. ‘ நுண்ணிய பலவாய பஞ்சு நுனிகளால் கைவல் மகடூஉ தனது செய்கை மாண்பினால் ஓரிழைப்படுத்தலாம், உலகத்து நூல் நூற்றலென்பது “ என்று பஞ்சில் இருந்து பெண்கள் நூல் நூற்றது குறித்து இறையனார் களவியல் சூத்திர உரைகாரர் கூறுகிறார். இதனையே ‘பருத்திப்பெண்டிர் பனுவல் “ (பருத்தி நூற்கும் பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சு) என்று புறநானூறு கூறுகிறது.
அடிமைச் சமூகத்தில் ஆணடைகளின் சொகுசு மிக்க சுகபோகமான வாழ்க்கைக்காக அடிமைகளாக்கப்பட்ட ஆண்களும் பெண்களும் இரவு பகல் பாராது இவ்வேலைகளைச் செய்தனர். அதனால் அவர்களின் குடிசை முற்றமெங்கும் பஞ்சுத்துய் பரவிக்கிடந்தது. இது குறித்து ‘ பஞ்சி முன்றிற் சிற்றில்” (பஞ்சு பரந்த முற்றத்தையுடைய சிற்றில்) என்று புறநானூறு (116) கூறுகிறது.
பஞ்சிலிருந்து நூற்கப்பட்ட நூலில் இருந்து ஆடைகள் நெய்யப்பட்டன. ஆடைகளின் நுண்மையும் மென்மையும் நோக்கி அவை ‘நுண் பூங்கலிங்கம்” எனப்பட்டன. கலிங்க நாட்டினின்றும் ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டமையால் அவை கலிங்கம் எனப்பட்டன. பட்டு சீனத்தில் இருந்தும் பருத்தி ஆடைகள் கலிங்கத்தில் இருந்தும் தமிழகம் வந்தன என்பதையும் இலக்கியங்கள் கூறுகின்றன.
‘ பாம்புரியன்ன வடிவின காம்பின்
கழைபடு சொலியின் இழையணிவாரா
ஒண்பூங் கலிங்கம்’ -புறநானூறு : 383
(பாம்பின் தோல் போன்ற வடிவினையுடையவாய், மூங்கிற் புறத்தேயுள்ள தோல் போன்ற, நெய்யப்பட்ட இழைகளின் வரிசையை அறிய இயலாத ஒள்ளிய பூவேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை) என்றும் ‘ திருமலரன்ன புது மடி” (அகன்ற பகன்றை மலர் போன்ற புத்தாடை) (புறநானூறு 390) என்றும் ஆடைகளின் மென்மையும் நுண்மையும் குறித்துச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ‘நீலக்கச்சைப் பூவாராடை” ( நீலநிறமுடைய பூத்தொழில் செய்யப்பட்ட ஆடை) என்று புறநானூறு (274) கூறுகிறது. ‘கோபத்தன்ன தோயாப் பூந்துகில்” (இந்திர கோபத்தையொத்த நிறம் பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகில்) என்று திருமுருகாற்றுப்படை (15) கூறுகிறது. ‘புகை முகந்தன்ன மாசில் தூவுடை” (புகையை முகந்தாலொத்த அழுக்கேறாத தூய உடை) என்று செல்வர்கள் அணிந்த ஆடைகளின் மென்மையும் தூய்மையும் குறித்து அந்நூல் (138) மேலும் பேசுகிறது. ஆண்டைகள் அணிந்த ஆடைகளின் மென்மையும் மேன்மையும் பற்றியும் அழகிய பூவேலைப்பாடுகளுடன் அவ்வாடைகள் விளங்கினமை குறித்தும் சங்க இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன. ஆடைகள் நீலம் செம்மை முதலிய வண்ணங்கள் தோய்க்கப்பட்டடிருந்த செய்தியையும் அவை குறிப்பிடுகின்றன.
செல்வர்களும் அரசர்களும் அழகிய வேலைப்பாடு மிக்க நுண்ணிய பட்டாடைகளைத் தாமும் உடுத்தினர், தம்மைப் புகழ்ந்து பாடிய புலவர்களுக்கும் தானமாக வழங்கினர் என்ற செய்தியை,
‘பாசி வேரின் மாசொடு குறைந்த
துன்னற் சிதா அர் நீக்கித் தூய
கொட்டைக் கரைய பட்டுடை நல்கி”
( கொட்டைப் பாசியினது வேர் போலே அழுக்கோடு குறைந்த, தையலையுடைய துணிகளைப் போக்கி, தூயவாகிய திரள முடிந்த முடிகளைக் கரையிலே யுடைய பட்டாடைகளை நல்கினான் ) என்றும்
‘மாசில் காம்பு சொலித்தன்ன அறுவையுடீஇ”
( குற்றமில்தாத மூங்கில் ஆடையை உரித்தாலொத்த உடையினை உடுக்கப் பண்ணினான் ) என்றும்.
‘புரையோன் மேனிப் பூந்துகிற் கலிங்கம்
உரைசெல வருளியோனே
பறையிசை யருவிப் பாயற் கோவே” - புறநானூறு 398
(பறைபோல முழங்கும் அருவிகளையுடைய பாயல்மலைக்குத் தலைவனும் உயர்ந்தோனுமாகிய அவன், தன்மேனிக்கண்கிடந்து விளங்கும் பூவேலை செய்யப்பட்ட உடைகளைத் தன் புகழ் எங்கும் பரவ நல்கினான் ) என்றும் இலக்கியங்கள் விரிவாகக் கூறுகின்றன.
செல்வர்களும் ஆண்டைகளும் அரசர்களும் அணிந்திருந்த ஆடைகளை மட்டுமல்லாது, அரசர்கள் பயன்படுத்திய குடைகள், கொடிகள், பதாகைகள் முதலியவற்றையும் அடிமைகள் செய்து கொடுத்தனர். அழுக்கான ஆடைகளைப் புலைத்தி ஆண்டைகளுக்கு வெளுத்துக் கொடுத்தசெய்தியையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
‘களர்ப்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்திகழீ இய தூவெள்ளறுவை.....
(களர் நிலத்து உண்டாகிய கூவலைத் தோண்டி நாள்தோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த ஆடை ) என்று புறநானூறு கூறும் இச்செய்தி முன்னர்க் கூறப்பட்டுள்ளது.
‘நலத்தகைப் புலைத்தி பசை தோய்த் தெடுத்துத்
தலைப்புடை போக்கித் தண்கயத்திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி”
(ஆடைகளுக்குப் பசை தோய்த்து அவற்றைப் பெரிய திரிபோல முறுக்கிப் புலைத்தி குளத்தில் இட்டுத் தோய்த்தாள்”) என்ற செய்தியைக் குறுந்தொகை (330) கூறுகிறது.
“ சோறமைவுற்ற நீருடைக் கலிங்கம்’ என்று மதுரைக் காஞ்சி (721) கூறுகிறது.
விழா நாட்களில் புலைத்தி மிகுதியான ஆடைகளை ஆண்டைகளுக்கு வெளுத்துக் கொடுத்தாள் என்ற செய்தியை நற்றிணை கூறுகிறது. வெளுத்த ஆடைகளுக்கு அகிற்புகை யூட்டப்பட்ட செய்தியை மதுரைக் காஞ்சி கூறுகிறது (554) ‘மென்னூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப” என்பது மாங்குடி மருதனாரின் கூற்றாகும்.
உழைக்கும் மக்களான உழவர் களமர் முதலான அடிமைகள் மாற்றுடைக்கு வழியில்லாமல் கோவணத்துடனும் அழுக்கான ஆடையுடனும் தான் இருந்தனர். அழுக்கும் கந்தலுமான ஆடைகள் குறித்துப் பரிசிலரும் பாணருமான புலவர்கள் கூறியுள்ள செய்திகள் கடையர் கடைசியரான உழைக்கும் மக்களுக்கும் பொருந்தும். வயல்களில் தொளிகலக்குதல், நாற்றுநடுதல், களைபறித்தல் முதலான பணிகளைச் செய்த பெண்கள் கடைசியர் எனத் தாழ்வாகக் கருதப்பட்டனர். அப்பெண்கள் தழையையே உடையாக அணிந்து மானத்தை மறைத்துக் கொண்டனர்.
மக்கள் கணசமூகமாக வேட்டையாடியும் நிரை மேய்த்தும் வாழ்ந்த கால கட்டத்தில் நிலவிய வறுமையும் பற்றாக் குறையுமான நிலைமை, உற்பத்திப் பெருக்கமும் செல்வப் பெருக்கமும் ஏற்பட்டிருந்த அடிமைச் சமூகத்திலும் உழைக்கும் மக்கள் வாழ்க்கையில் நீடிக்கவே செய்தது.
‘கொண்டைக் கூழைத்தண்டழைக் கடைசியர்
சிறமாணெய்தல் ஆம்பலொடு கட்கும்
மலங்குமிளிர் செறு”
என்று வயலில்களை பறித்த கடைசியர் தழையுடையே அணிந்திருந்தனர் என்ற தனைப் புறநானூறு கூறுகிறது.
அடிமைகளான ஆண்களும் பெண்களும் தங்களது உழைப்பின் பயனை, ஆண்டைகளிடம் பறிகொடுத்தனர். ஆண்டைகள் தங்களின் சுக போகத்துக்காகவும் ஆடம்பரத்துக்காகவும் அடிமைகளின் உழைப்பை உறிஞ்சினர். அடிமைகள் உழைத்து உற்பத்தி செய்து கொடுத்த ஆடைகளையும் ஆபரணங்களையும்; ஆண்டைகள் அணிந்து தம்மை அலங்கரித்துக் கொண்டு ஆடம்பர மாக வாழ்ந்தனர். உணவும் உடையும் பிறவும் உற்பத்தி செய்த உழைப்பாளிகள் அவற்றை அனுபவிக்க முடியவில்லை. ஆண்டைகளிடம் அவற்றைப் பறிகொடுத்து விட்டு அல்லல் பட்டனர். வறுமையில் வாடினர், வேட்டைச் சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் வாழ்ந்த காலகட்டத்தில் தழையும் தோலும் ஆடையாக அணிந்து காலந்தள்ளியது போலவே, உற்பத்தி பெருகி உபரிநிலை எய்தியிருந்த அடிமைச் சமூகத்திலும் தழையுடையும் அழுக்கான கந்தல் ஆடையும் அணிந்து அல்லல் பட்டனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.
(நன்றி : வெ.பெருமாள்சாமி)