தோழர் கே. ஜீவபாரதி அவர்கள் இடதுசாரி இயக்கத் தோழர்களிடம் நன்கு அறிமுகமானவர். மார்க்சியக் கருத்தியலைத் தமது எழுத்துகளின் மூலம் அனைவரிடமும் எளிதாகக் கொண்டு சேர்த்த மூத்த தோழர். எதனையும் இயக்கவியல் பார்வையில் அனுகி அதன் உண்மைத் தன்மையை அறிந்து வெளிப்படுத்தும் ஆற்றல் உடையவர். இலக்கியவாதி, இதழியலாளர், திரைப்பட பாடலாசிரியர் மற்றும் இயக்குநர் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட இவர் பல்வேறு ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தமிழகச் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரைகளைத் தேடித் தொகுத்து சிறந்த ஆவணமாக அளித்துள்ளார்.jeevabharathi book on communistsபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தோழர் ப.ஜீவானந்தம், வேலு நாச்சியார் ஆகியோரின் வரலாற்றினைக் கள ஆய்வின் வழி ஆவணப்படுத்தியதில் இவரின் கடுமையான உழைப்பினை அறிந்து கொள்ளலாம். இவ்வரிசையில் சமீபத்தில் ‘காலந்தோறும் கம்யூனிஸ்டுகள்’ (பாகம்- 1,2) என்ற தலைப்பில் இடதுசாரி இயக்கத் தோழர்களின் இரத்தக் கறைபடிந்த வாழ்க்கையை நூலாக ஆவணப்படுத்தியுள்ளார். இந்நூலுக்குச் சிறந்த ஆய்வுரையினைத் தோழர் இரா. முத்தரசன் அவர்கள் வழங்கியுள்ளது சிறப்பாகும்.

ஒவ்வொரு காலத்திலும் தொகுப்பாளர்கள் தோன்றுகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்ந்த காலத்தின் சமூக இயக்கப் போக்குகளையும் செயல்பாடுகளையும் ஏதோ ஒரு வகையில் அடுத்தத் தலைமுறையினருக்கு ஆவணப்படுத்தி தொகுத்தளிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையோடு செயல்படுகின்றனர். கள ஆய்வின் வழி கிடைத்த தரவுகளை இயக்கவியல் பார்வையில் ஒழுங்குபடுத்தி உருவாக்கப்படும் தொகுப்புகளே காலம் கடந்தும் சமூக வரலாற்றினை எழுதும் கருவி நூல்களாக மாற்றம் பெறுகின்றன. இந்தத் தன்மைகளை உள்வாங்கி தோழர் கே. ஜீவபாரதியால் உருவாக்கப்பட்ட தொகுப்பு நூல்தான் இது.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மார்க்சிய தத்துவம் உலகத் தொழிலாளி வர்க்கத்தினரிடம் பெரிய செல்வாக்கினைப் பெற்றது. நாளடைவில் அது காலனிய நாடுகளில் உள்ள ஆட்சியர்களுக்கு எதிரான அரசியல் வேலைத் திட்டமாக மாறியது. இவ்வாறாக ஜெர்மன் சித்தாந்தவாதி மார்க்சின் தத்துவம் ஆசிய நாடுகளின் அரசியலைத் தீர்மானித்தது என்று கூறலாம்.

இந்திய இடதுசாரி இயக்க வரலாற்றில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாகும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வேர்பிடித்த கம்யூனிச இயக்கம் விடுதலை வேண்டி போராடிய மக்களிடம் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

தத்துவவாதிகள், நடைமுறைவாதிகள் என்ற படிநிலையில் தோழர்கள் மார்க்சியத் தத்துவத்தினை அடுத்தடுத்த நிலைக்கு வளர்த்தெடுத்தனர். பாட்டாளி வர்க்க ஆசான்களான மார்க்ஸ்-எங்கெல்ஸ் இவர்களைத் தொடர்ந்து மார்க்சிய தத்துவத்தினை நடைமுறைப்படுத்திய தலைவர்களான லெனின், ஜே.வி, ஸ்டாலின், மாவோ சே துங், ஃபிடல் காஸ்ட்ரோ முதலான செயல்பாட்டாளர்கள் மார்க்சியத்தினை வளர்த்தெடுத்தனர். முதலாளித்துவ அடிமை முறைக்கு மாற்றான சமத்துவ - கம்யூனிச உலகினை இவர்கள் பாட்டாளி வர்க்கத்திற்கு அடையாளம் காட்டினர். கம்யூனிசம், சோசலிசம் குறித்த விவாதங்கள் உலக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியது.

‘நடைமுறையில்லாத தத்துவம் வரட்டுத் தனமானது, தத்துவம் இல்லாத நடைமுறை குருட்டுத் தனமானது’ - என்று மார்க்சியம் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்து கொள்ளும். மார்க்சியத்தினை லெனின் 1917 ஆம் ஆண்டு ருஷ்யப் புரட்சியின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டினார். இது உலக தொழிலாளி வர்க்கத்தினரிடம் புதிய நம்பிக்கையினை ஏற்படுத்தியது, இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சீனப் புரட்சியானது ஆசியக் கண்டத்தின் அரசியல் மாற்றத்திற்கான பாதையை பிற கண்டங்களுக்கு உணர்த்தியது.

தமிழகமும் கம்யூனிஸ்டுகளும்

முதலாளித்துவச் சுரண்டல் போட்டியால் வெடித்த இரண்டு உலகப் போர்களும் உழைக்கும் மக்களை அகதிகளாகவும் அடிமைகளாகவும் மாற்றியதோடு அல்லாமல் அணு ஆயுதத்தால் கொன்றும் குவித்தது. நாசிஸ்டுகளுக்கும் பாசிஸ்டுகளுக்கும் எதிராக மார்க்சிய இயக்கத்தின் தேவையை உழைக்கும் மக்கள் அப்பொழுது முழுமையாக உணரத் தொடங்கினர். ஐரோப்பாவின் காலனியச் சந்தையாக விளங்கிய இந்திய அரசியலில் இடதுசாரி இயக்கக் கருத்துகளும் அதன் செயல் வடிவத்திற்கான இயக்கக் கட்டமைப்புகளும் இக்காலத்தில்தான் உருப்பெற்றன. தமிழகத்தில் தோழர் சிங்காரவேலர், ஜீவானந்தம், பி. ராமமூர்த்தி, வி.சிந்தன், பாலதண்டாயுதம் முதலானத் தோழர்கள் பொதுவுடைமை இயக்கத்திற்கு அடிகோலி அதனை வளர்த்தெடுத்த வரலாற்றினை நாம் அறிவோம்.

முதலாளித்துவத்தின் சுரண்டலையும் உழைக்கும் மக்களுக்கான விடுதலையையும் பேசிய இந்தியப் பொதுவுடைமை இயக்கமானது பல்வேறு அடக்குமுறைகளைச் சந்திக்க நேர்ந்தது. இதில் பல்வேறு இயக்கத் தோழர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர் கொண்டனர். பகத்சிங் தொடங்கி அடிமட்டத் தோழர்கள் வரை அவர்கள் அனுபவித்த துன்பங்கள் அளவிட முடியாததாகும்.

இந்தியத் தொழிலாளி வர்க்கத்தினர் ஏற்படுத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளைக் கண்டு ஆங்கிலேயர்கள் அச்சமடைந்தனர். மக்களிடம் புரட்சிகர சிந்தனைகள் வேகமாகப் பரவிய நிலையில் 1934 இல் இந்தியாவில் இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சி முதல் முறையாகத் தடை செய்யப்பட்டது. பின்னர் தடை நீக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் சூழலில் கட்சி இரண்டாவது முறையாக 1940 இல் தடைசெய்யப்பட்டு, பின்னர் 1942 இல் தடை நீக்கப்பட்டது. 1948 இல் சுதந்திர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது முறையாகத் தடை செய்யப்பட்டு இயக்கத் தோழர்கள் வேட்டையாடப்பட்டனர். தலைமறைவு வாழ்க்கை, கண்டதும் சுடும் உத்தரவு, தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி சித்திரவதை செய்வது, இயக்கத் தோழர்களின் இருப்பிடங் களைக் கேட்டு கொடுமைப்படுத்துவது எனப் பல அடக்குமுறைகளை அன்றைய ஆளும் காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கைகள் மனிதத் தன்மையற்றதாகவே இருந்தது. தொடர்ந்து இயக்கத்தினைப் பலவீனப்படுத்த அவர்கள் முன்னெடுத்த முயற்சிகளும் ஒடுக்குமுறைகளும் அதன் காரணமாக பலியான தோழர்களின் தியாகமும் துயரமும் வலி மிகுந்ததாகும். அவர்கள் அனுபவித்த சிறைக் கொடுமைகளோ அளவிட முடியாதது. இதனை ஆழமாக தோழர் கே. ஜீவபாரதி இந்நூலில் தொகுத்தளித்துள்ளார்.

இந்திய அரசியலில் அன்றைய இடதுசாரி இயக்கத் தோழர்கள் முன் பல்வேறு களங்கள் இருந்தன.

- காலனிய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எதிர்கொள்வது.

- மதவாத அடிப்படைச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவது.

- பிரிவினைவாதத்திற்கு எதிராகப் போராடுவது.

- சாதிய - தீண்டாமைக்கு எதிரான அரசியலை முன்னெடுத்தல்.

- சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தினைக் கட்டமைத்தல்.

- பண்ணை அடிமை முறைக்கு எதிராகப் போராடுவது.

- கோயில் நுழைவு உரிமைக்கானப் போராட்டங்களை முன்னெடுப்பது.

இவை அன்றைய தமிழகத்தில் இடதுசாரி இயக்கத் தோழர்கள் முன்னெடுத்த மாற்று அரசியல் இயக்கத்திற்கான களங்கள் ஆகும். சமூக விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்கும் பொழுது அந்நாட்டின் தன்மைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் கட்சிக் கட்டும் நடைமுறையினைத் தோழர்கள் நன்கு புரிந்து செயல்பட்டனர்.

தமிழக இடதுசாரி இயக்க வரலாற்றினையும் தோழர்களின் வெகுசன செயல்பாடுகளையும் காலவரிசையில் கே. ஜீவபாரதி இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். கட்சியின் தலைமைத் தோழர்கள் முதல் கடைநிலைத் தோழர்களின் செயல்பாடுகள் வரை இந்நூல் பதிவு செய்கின்றது. ஒவ்வொரு தோழர்களும் முன்னெடுத்தப் போராட்டங்கள், அவர்கள் சந்தித்த நெருக்கடிகள், சிறைக் கொடுமைகள், குடும்ப நெருக்கடிகள், காவலர்களால் அவர்கள் சித்தரவதைச் செய்து சுட்டுக் கொல்லப்பட்ட வரலாறு என அனைத்தையும் பதிவு செய்கின்றது. தமிழக கம்யூனிச இயக்கத் தோழர்களின் வர்க்கப் போராட்ட வரலாற்றினை இந்நூல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் கம்யூனிச இயக்கம் தோன்றுவதற்கு முன்னர் காங்கிரஸ் இயக்கத்திலும், சீர்திருந்த அரசியலிலும் தங்கள் செயல்பாடுகளை வகுத்துக் கொண்ட தோழர்களே பின்னாட்களில் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து மக்களுக்காக போராடிய வரலாற்றினை இந்நூல் நுட்பமாகப் பேசுகின்றது.

போராட்டமும் தோழர்களும்

இந்நூல் முழுவதும் இயக்கத் தோழர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் இயக்கத்தினை அவர்கள் வளர்த்தெடுப்பதற்கு எவ்வாறு உழைத்தனர் என்பதை எடுத்துரைக்கின்றது. அவ்வகையில் சில தோழர்களின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளலாம். அவை வருமாறு:

- மகாத்மா காந்தி முன்னெடுத்த அந்நியத் துணிகளுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டத்தில் தோழர் பாஷ்யம் தனியாக நின்று அந்நியத் துணிகளை விற்கும் கடைகளுக்குத் தீ வைத்த அந்த சாகச மனிதர்தான், 1932 ஜனவரி 25 இல் செயின்ட் ஜார்ஜ்கோட்டையில் இந்தியக் கொடியை பறக்கவிட்டார், என்ற செய்தி இடதுசாரி இயக்கத் தோழர்களின் மன உறுதியையும் துணிச்சலையும் காட்டுவதாகும்.

- தெலுங்கானாப் போராட்டத்தில் கலந்து கொண்ட பி. சுந்தரையா ஆந்திராவில் முதல் கட்சிக் கிளையை உருவாக்கினார், அதுமட்டு மல்லாமல் தென்னிந்தியா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகளை உருவாக்க முயற்சித்தார்,

- தென் கன்னடாவில் உள்ள படகரா என்ற கிராமத்தில் 1907 இல் பிறந்த தோழர் பி. சீனிவாசராவ் தஞ்சைப் பகுதியில் அன்று பண்ணையார்கள் நடைமுறைப்படுத்திய கொத்தடிமை முறைக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்து அவர்களை அரசியல்படுத்தினார். ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்களைச் ‘செங்கொடி சங்க’த்தில் இணைத்தார். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குப் போராட்ட முறைகளையும் பயிற்றுவித்தார்.

அன்று தலைமைப் பொறுப்பில் இருந்த அமீர் ஹைதர்கான், மணலி கந்தசாமி, சி. எஸ். சுப்பிரமணியம் பி. சீனிவாசராவ் முதலானோர் புதிய தோழர்களுக்கு அரசியல் வகுப்புகளைக் கற்பித்து இயக்கத்தினை வலுப்படுத்தினர். தென்னிந்தியா முழுவதும் இயக்கத் தலைமைகள் ஓர் இணக்கமானத் தொடர்பில் இருந்து கட்சியினை வளர்த்தனர்.

தோழர்கள் சந்தித்த நெருக்கடிகள்

இந்திய விடுதலைக்குப் பின் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் இயக்கத் தோழர்கள் சந்தித்த நெருக்கடிகள் கடுமையானதாகும். இந்தியாவின் விடுதலை யாருக்கானது? என்ற கேள்வியும் அப்பொழுது எழுந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் வலதுசாரி சக்திகள் மதத்தின் பெயரால் அடித்தளமிட்டு மெல்ல வளர்ந்து வந்தன. இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சியானது ஆளும் இந்திய வர்க்கத்திற்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் கடுமையான நெருக்கடியாக அமைந்திருந்த சூழலில், அதனை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்ற வேலைத்திட்டத்தினை அவர்கள் கையில் எடுத்தனர். இச்சூழலில் தான் தோழர்கள் பலர் தங்கள் உயிரை மக்களுக்காக தியாகம் செய்யும் நிலை உருவானது. சில தோழர்கள் சந்தித்த வலி நிறைந்த கொடுமைகள் வருமாறு:

- 1950 களில் இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் திருப்பூர் பழனிச்சாமி தோழர் காவல் துறையினரின் சித்திரவதைக்கு ஆளானார். இயக்கத் தலைமைத் தோழர்களின் இருப்பிடங்களைக் கேட்டு அவர் துப்பாக்கி முனையில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார். பிற தோழர்களைக் காட்டிக் கொடுக்க முடியாது, தைரியம் இருந்தா என்னைச் சுடுடா, எனத் துப்பாக்கி முனையில் ‘உன்னைச் சுட்டுவிடுவேன் டா’ என மிரட்டிய காவலரிடம் நெஞ்சை நிமிர்த்தி வீரத்துடன் கூறி தன்னுயிரை விட்டார். சுடப்பட்டு கீழே விழும்பொழுது செங்கொடிக்கு ஜே!, புரட்சி ஓங்குக! என முழக்கமிட்டார்.

- தூத்துக்குடி மாவட்டத்தினைச் சோர்ந்த தோழர் பொன்னு 1944 இல் ‘இந்திரகுல வேளாளர் சங்க’த்தை தொடங்கி அந்த மக்களுக்காகப் போராடினார். 1948 இல் ‘உப்புத் தொழிலாளர் சங்க’த்தினையும் அவர் தோற்றுவித்து அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார். விடுதலைக்குப்பின் இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்ட பொன்னுவை காவல்துறையினர் தேடிப் பிடித்து கைது செய்தனர். இயக்கத் தோழர்களின் மறைவிடங்களைக் கேட்டு அவரைக் கடுமையாகத் தாக்கினர். அவரது முதுகு சதை பிய்ந்து போகும் வரை அடித்தனர். இரு புஜங்களிலும் தீயை வைத்துக் கொளுத்தி மகிழ்ந்தனர். அவர் முகத்தில் காரி உமிழ்ந்தும் மூத்திரத்தினைப் பெய்தும் அவமானப்படுத்தினர். மீசையின் முடிகளை ஒவ்வொன்றாகப் புடுங்கினர். பல பொய் வழக்குகளை அவர் மீது பட்டு இறுதியில் அவரை அடித்தே கொன்றுவிட்டனர்.

- திண்டுக்கல் மாவட்டத்தினைச் சேர்ந்த தோழர் மதனகோபால் கல்கத்தாவில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்டவர். ஜனசக்தி பத்திரிகை நிதிக்காக தன் மனைவியின் ஒரு பவுன் மோதிரத்தைக் கழற்றி தோழர் ஜீவாவிடம் கொடுத்தவர். இவர் 1950 இல் இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தக் காலத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இயக்கத் தோழர்கள் எங்கு தங்கியுள்ளனர்? என்று கேட்டு அவரை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கடுமையாகத் தாக்கினார். நீண்ட சங்கிலியால் அவரது கால்களையும் கைகளையும் கட்டி வீதி வழியாக மக்கள் பார்க்கும்படி இழுத்துச் சென்றனர். அப்பொழுது காவல் துறையினர் பெண்களிடம் துடைப்பத்தைக் கொடுத்து, அவர்களை மிரட்டி தோழர் மதனகோபாலை அடிக்க வைத்தனர். ஒரு செருப்பைக் கொடுத்து அவரை வாயில் கவ்வும்படி வற்புறுத்தி அடித்து படுபயங்கரமாகத் தாக்கி இழுத்துச் சென்றனர். இவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கி உயிர் பிழைத்த தோழர் மதனகோபால் 1952 இல் நடந்த பொதுத் தேர்தலில் கட்சி சார்பாக வேடச்சந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கம்யூனிஸ்டுகளை ஆளும் வர்க்கம் எவ்வளவு அவமானப் படுத்தினாலும் மக்களிடம் அவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினை இதன் வழி அறியலாம்.

இப்படி பல தோழர்கள் சந்தித்த நெருக்கடிகால வரலாறு இந்நூல் முழுவதும் விரிவாக உள்ளன.

இயக்கத்தினை வலுப்படுத்தும் சங்கங்கள்

இடதுசாரி இயக்கச் செயல்பாட்டினூடாக தோழர்கள் சிலர் அதனை வலுப்படுத்த துணை அமைப்புகளை உருவாக்கினர். தோழர் ஏ.எஸ்.கே அவர்கள் அவ்வாறு உருவாக்கிய அமைப்புதான் ‘இளைஞர்கள் பௌதீகக் கழகம்’ என்ற அமைப்பாகும். இதுபோன்றே அவர் 1934 இல் ‘தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்’ என்ற அமைப்பினைத் தோழர் ஜீவா தலைமையில் உருவாக்கினார். மதராஸ் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கம், சென்னை துறைமுக ஐக்கிய தொழிலாளர்கள் சங்கம், சென்னை துறைமுக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் முதலான சங்கங்கள் இவரால் உருவாக்கப்பட்டவையே.

‘சென்னை கம்யூனிஸ்ட் குழு’ என்ற அமைப்பில் இயக்க முன்னணித் தோழர்களுடன் இனைந்து பணியாற்றிய தோழர் பி. சீனிவாசராவ் தஞ்சைப் பகுதியில் நிலவிய பண்ணையாளர்களின் கொத்தடிமை முறைக்கு எதிராக மக்களைத் திரட்டியவர். தஞ்சைப் பகுதியில் பொதுவுடைமை இயக்க அரசியலுக்கு அடித்தளமிட்ட தோழர்களில் முக்கியமானவர். இவர் மூக்குப்பொடி தொழிலாளர் சங்கம், கள் இறக்கும் தொழிலாளர் சங்கத்தினை உருவாக்கி அவர்களின் உரிமைக்காகப் போராடினார்.

தோழர் ஏ. எம். கோபு நாகப்பட்டினத்தில் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது (1943) பைந்தமிழ் இளைஞர் கழகம் என்ற அமைப்பினை நிறுவினார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இண்டர் மீடியர் படித்த போது 18 கிராமங்களில் விவசாய சங்கங்களைத் தோற்றுவித்தார் என்பதன் முலம் அவரது அயராத உழைப்பினைப் புரிந்து கொள்ளலாம்.

குடியாத்தம் பகுதியினைச் சேர்ந்த மருத்துவம் படித்த தோழர் ஜி. கண்ணபிரான் அவர்கள் 1948 இல் இயக்கம் தடை செய்திருந்த காலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபடி கட்சி வேலைகளைத் தொடர்ச்சியாக செய்து வந்தார். இவர் பஞ்சாலைத் தொழிலாளர் சிக்கனக் கூட்டுறவு சங்கம், குடியாத்தம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஆகியவற்றை நிறுவினார். வீட்டு வசதி சங்கத்தில் இருந்த 400 சங்க உறுப்பினர்களுக்குச் சொந்தமாக வீடும் கட்டிக் கொடுத்தார்.

- தோழர் எஸ். சுப்பிரமணி சர்மா (சர்மாஜி) கல்லூரியில் படித்த காலத்தில் ‘தோழர்கள் மன்றம்’ என்ற அமைப்பினை 1930 களில் உருவாக்கினார்.

- தோழர் மணலூர் மணியம்மை ‘நாகப்பட்டினம் ஸ்டீல் ரோலிங் மில் தொழிலாளர் சங்க’த்தைத் தொடங்கிப் பல போராட்டங்களை நடத்தினார்.

- தோழர். கே. பாலதண்டாயுதம் 1945 இல் ‘சோவியத் நண்பர்கள்’ சங்கம் என்ற அமைப்பினை உருவாக்கினார்.

இந்நூலில் இடம்பெற்ற சங்கங்களை இவ்வாறு தொகுத்துப் பார்ப்பதன் மூலம் அன்று இடதுசாரி இயக்கத்தினை மக்கள் எவ்வளவு ஆழமாக நம்பியிருந்தனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதன் விளைவாகத்தான் அன்று பல தொழிற் சங்கங்கள் தோன்றி, வேகமாக வளர்ந்தன. சான்றாக,

- சுருட்டுத் தொழிலாளர்கள் சங்கம்,

- லாரி பஸ் தொழிலாளர்கள் சங்கம்,

- நகரசுத்தித் தொழிலாளர்கள் சங்கம்,

- ஓட்டல் தொழிலாளர்கள் சங்கம்,

- நெசவுத் தொழிலாளர்கள் சங்கம்

எனப் பல சங்கங்கள் தமிழகத்தின் ஊர்கள் தோறும் பரவியிருந்தன. இதனைத் தலைமையேற்று இடதுசாரி இயக்கத் தோழர்கள் செம்மையாக வழி நடத்தினர். ஊர்கள் தோறும் கம்யூனிஸ்ட் கட்சியினை இச்சங்கங்களே வலுப்படுத்தின. இந்நூலினை வாசிக்கின்றபொழுது பல்வேறு தொழிற் சங்கங்களின் செயல்பாடுகளையும் அதன் வரலாற்றினையும் புரிந்து கொள்ள முடிகின்றது.

இந்நூலின் இன்றைய தேவை

இந்திய இடதுசாரி இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டச் சூழலில் வெளிவந்த இந்நூல் பல்வேறு தோழர்களின் உயிர்த் தியாகங்களை நமக்கு எடுத்துரைக்கின்றது. அடுத்த தலைமுறையினர் இதுபோன்ற தொகுப்புகளை வாசிக்கின்ற பொழுதுதான் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை வரலாற்றினை அறிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ சமூகம் எவ்வளவு நெருக்கடிமய மானது? அதனை இடதுசாரி இயக்கத் தோழர்கள் எவ்வாறு வென்றெடுக்க வழிகாட்டினர்? என்ற புரிதலையும் இந்நூல் அளிக்கின்றது. இந்நூலினை ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. வண்ணப் படங்களுடன், தரமான தாளில் அச்சிட்டு, கெட்டி அட்டைக் கட்டினால் காலம் கடந்து வாழும் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்டுரையினைப் படிக்கும் பொழுதும் எளிதாக அதனைவிட்டு நாம் வெளியே வருவது கடினமாகவே உள்ளது. தோழர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் ஆண்டு வரிசையில் ஒழுங்குபடுத்தி ஆசிரியர் நேர்த்தியாக அளித்துள்ளார். இந்நூலினைப் படிக்கும்பொழுது அக்காலத்திற்கே நாம் சென்று தோழர்களின் வலியினையும் துன்பத்தினையும் அனுபவிப்பது போன்ற உணர்வினை ஆசிரியரின் எழுத்துநடை ஏற்படுத்துகின்றது.

தோழர்கள் அனைவரும் அவசியம் வாங்கிப் படித்து அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டிய மிக முக்கிய நூல். இன்றையத் தலைமுறை தோழர்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய வரலாற்று ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது.

காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் | கே. ஜீவபாரதி | வெளியீடு: நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

 -  முனைவர் சி.இளங்கோ, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.