முதலில், பேராசிரியர் நா.வா. அவர்களது தமிழியல் ஆய்வு முக்கியத்துவத்தைப் பற்றி நோக்குதல் வேண்டும். தமிழில் மார்க்சிய நிலைநின்ற விமர்சன நோக்கு, இலக்கிய விமர்சனம் என்கின்ற நூலினை விதந்து எழுதிய நண்பர் தொ.மு.சி.ரகுநாதன் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதை நாம் காணலாம். அத்தொடக்க நிலையில் அவரோடு எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர் களும் இணைந்து தொழிற்பட்டார்கள்.
அவ்வேளையில் பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்தவர்கள் தமிழியல் ஆய்வுகளிலே ஈடுபடுவதை ஊக்கப்படுத்துகிற பண்பு படிப்படியாக நாற்பது களிலிருந்து தமிழ்நாட்டில் வளர்ந்து வருவதையும் நாங்கள் அவதானிக்கலாம். முதலில் தளமாற்ற நிலைப் பட்ட விமர்சனங்களாக வெளிவருகின்ற Radical ஒரு விமர்சனப் போக்கின் ஊடாகத்தான் மார்க்சிய விமர்சன முறைமை வருகிறது. இது பொதுவாக எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். இந்த மார்க்சிய நோக்கினை வாசகர்களிடையே நிலைநிறுத்துவதற்கான சில சஞ்சிகைகள் கொண்டுவரப்பட்டன. அவற்றுள் ரகுநாதனின் ‘சாந்தி’ விஜயபாஸ்கரனின் ‘சரஸ்வதி’ ஆகியவை முக்கியமானவை. இவை ஏறத்தாழ 1957,58,59,60-களில் மிக முக்கியமாக இடம்பெற்றன.
நவீன தமிழிலக்கியத்தில் மார்க்சியச் சிந்தனை மரபுக்கான ஓர் இடம் சாந்தியால், சரஸ்வதியால் நிறுவப்படலாயிற்று. இது வரன்முறையான தமிழியல் ஆய்வாகப் பரிணமிக்கத் தொடங்குகிற காலகட்டம் ஒன்று உண்டு. அந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒன்று. அதற்குள்ளேகூடப் படிப்படியான வளர்ச்சி நிலையினை நாம் காணலாம். ஏனெனில் பொது வுடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவானந்தம் அவர்கள், பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்புவதற்குத் தமிழினை நவீனமயமாக்கிய பாரதியை ஒரு மய்யமாகக் கொள்வது மாத்திரமல்லாமல் நவீன காலத்திற்கு முற்பட்ட தமிழிலக்கியத்திற்குச் சென்றும், அந்தச் சமூகச் செம்மையையும், சமத்துவத்தையும், செழுமையையும் காட்டுவதற்குக் கம்பராமாயணம் போன்ற நூல்களையும் பயன்படுத்துகிற தன்மையையும் நாங்கள் காணலாம். ஜீவா அதிலே மிக முக்கியமானவராக விளங்கினார்.
இதனை இன்னொரு பின்புலத்தில் நாங்கள் வைத்துப் பார்க்க வேண்டும். 1948-49லிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சிக்குக் காரணமாக இருந்த பின்புலச் சக்திகளில் ஒன்று இந்தத் தமிழ் நிலைப்பட்ட விடயங்களை முனைப்புறுத்திக் கூறுகின்ற தன்மை யாகும். இதில் அண்ணாதுரை அவர்களும் குறிப்பாகக் கலைஞர் கருணாநிதி அவர்களும் மிக முக்கியமான இடத்தில் வருகிறார்கள். ஆனால் அவர்கள் தமிழை முன்னிலைப்படுத்திக் கூறிய முறைமையானது குறிப்பாகச் சங்க இலக்கியத்தைப் பயன்படுத்தி, அதன் மூலம் தமிழர் சாதனைகளை எடுத்துக்கூற முயன்ற முனைப்பானது, வரலாற்று அடிப்படை சார்ந்த ஒருநிலைப்பாடாக இல்லாமல், வரலாற்று மிகை என்று சொல்லப்படத்தக்க ஒரு நிலையினையே ஏற்படுத்திற்று. இந்த சூழலில் தங்களைத் தமிழ்ச் சூழல் நிலைப்பட நிலைநிறுத்திக் கொள்ள விரும்பிய பொதுவுடைமைச் சிந்தனை யாளர்கள் அந்தப் போக்கினைக் கண்டித்தும் அதே வேளையில் வரலாற்றுபூர்வமான எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ள ஒரு அணுகுமுறையை உருவாக்குகிறார்கள்.
இதனை நவீன இலக்கிய நிலையில் பின்பற்றுவது மிகச் சுலபமாக இருந்தது. ஏனெனில் ரஷ்யாவில் ஏற்பட்ட வளர்ச்சி மிக முக்கியமானதாகும். கார்க்கி புரட்சியோடு, புரட்சிக்குச் சற்று முந்திய காலம் முதலே தொழிற்பட்டவர். புரட்சிக்குப் பின்னர் சோவியத் இலக்கியம் பொதுவுடைமை இலக்கியமாகவே வளர்க்கப் பட்டது. அதற்கான விமர்சன வடிவங்களெல்லாம் வடிவமைக்கப்படுகின்றன. எனவே கம்யூனிஸ்ட் கட்சிகள், சோசலிச இலக்கிய முன்னுதாரணங்களையும், குறிப்பாக ரஷ்ய இலக்கிய முன்னுதாரணங்களையும், ஐரோப்பிய இலக்கியத்தை இந்த புதிய இலக்கிய எழுச்சி எவ்வாறு பார்க்கிறது என்கின்ற முறைமையையும் பெற்றுக்கொண்டு இலக்கிய விமர்சன நடைமுறையை வளர்த்தார்கள்.
இலக்கியங்களை வரலாற்றின் வகை மாதிரிகளாக, சிந்தனைப் போக்கின் வகைமாதிரியாகப் பார்த்து, அவை காலத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன, காலத்தின் முரண்பாடுகளை எவ்வாறு காட்டுகின்றன என்பதினை மிக விரிவாக ஆராய்கின்ற ஒரு மரபை இந்த ரஷ்ய சோவியத் பொதுவுடைமை இலக்கிய மரபு வளர்த் தெடுக்கிறது. அதிலே கார்க்கியினுடைய ஆக்கங்களுக்கும் அவருடைய விமர்சனங்களுக்கும் மிக முக்கியமான இடம் உண்டு. அவையும் தமிழுக்குள் வருகின்றன. உண்மையில் கார்க்கியின் நாவலான The Mother என்பது இரண்டு மூன்று மொழிபெயர்ப்புகளைத் தமிழில் கண்டது. இந்தச் சூழலிலே நவீன இலக்கியத்திற்கு முற்பட்ட இலக்கியங்களான தமிழிலக்கியங்களை எவ்வாறு மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது பெரும் சிந்தனைச் சவாலாக இருந்து வந்தது என்று கூறலாம்.
இந்தக் கட்டத்திலேதான் நிச்சயமாக இலங்கையில் ஏற்பட்டுவந்த, குறிப்பாக 1954 முதல் தமிழிலக்கிய வளர்ச்சியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு இலக்கிய இயக்கம் பற்றிய குறிப்புகள் அவசியமா கின்றன. இலங்கையில் முற்போக்கு இலக்கிய இயக்கம் என்பது அப்போது உடையாதிருந்த பொதுவுடைமைக் கட்சியினுடைய ஒரு பண்பாட்டு முன்னணியாகத் தொழிற்பட்டது. அந்தக் கட்சியின் மிக முக்கியமான அங்கத்தவர்களான ஞானசுந்தரம், பிரேம்ஜி, எச்.எம்.பி. முஹைதீன் போன்றவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்திலும் முக்கியமான இடத்தை வகித்தார்கள். இந்த முற்போக்கு இலக்கிய இயக்க வளர்ச்சியில் இரண்டு அம்சங்கள் முன்னிலைப்பட்டன. ஒன்று, இலங்கையில் குறிப்பாகத் தமிழ்ப் பிரதேசங்களில், வடகிழக்கில் நிலவிய சமூகக் கொடுமைகளை எடுத்துக்காட்டுகின்ற இலக்கியங்கள் தோன்றின. அந்த இலக்கியங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் அந்தக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதுமாத்திரமல்லாமல் பொது வுடைமைக் கொள்கைகளையும் இயக்கத்தையும் தங்களுடைய வழிகாட்டிகளாக அமைத்துக் கொண்ட வர்கள் டேனியல், ஜீவா என்று அந்தப் பெயர்கள் வரும். சமூகத்தின் முற்போக்கான தன்மையை எடுத்துக்காட்டும் முற்போக்கு இலக்கியத்தின் இரண்டாவது அம்சம்தான் மிகமிக முக்கியமாமனது. அங்குத் தோன்றிய விமர்சன முறைமை சமூக முற்போக்குவாதத்தை ஒரு திட்டமான இலக்கியச் சிந்தனையாகக் கொள்வதற்கு வேண்டிய அத்தியாவசியத்தை வற்புறுத்தியது மாத்திரமல்லாமல், அதற்கு எதிரான விமர்சன நிலைப்பாடுகளைச் சில வேளை சாடுகின்ற விமர்சன முறையையும் அது கையாண்டது. அந்த அளவில் நின்றுவிடாது அது சற்று மேலே போய் நவீன இலக்கியத்துக்கு முற்பட்ட இலக்கியங்களையும் இத்தகைய ஒரு கண்ணோட்டத்தில் பார்க் கின்ற ஒரு மரபைப் படிப்படியாகத் தொடங்குகிறது.
அந்த விமர்சன மரபு மிக முக்கியமானது. அதிலே இரண்டு பெயர்கள் அடிக்கடி பேசப்படுவதுண்டு. ஒன்று, காலஞ்சென்ற கைலாசபதி அவர்கள். அத்துடன் என்னுடைய பெயரும். இவ்வாறு சொல்வது எனக்குச் சற்று ஆழ்நிலைப்பட்ட அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும் வரலாற்றுத் தேவைக்காக இதனை நான் சொல்கிறேன் என்பதைத் தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள். கைலாசபதி, சிவத்தம்பி மரபு என்பது நாங்கள் தனியே விமர்சகர்களாகத்தான் வந்தோம். ஆனால் எழுத்தாளர்கள் சிலரும் சில முக்கிய விமர்சகர்களாக இருந்திருக் கிறார்கள். காவலூர் ராஜதுரை என்பவர் வரதராஜனின் நாவல் பற்றிக் கிளப்பிய விமர்சனப் பிரச்சினை மிக முக்கியமானது. கவிஞர் முருகையன் அவர்கள் கவித் துவம் பற்றி, இலக்கியக் கொள்கை பற்றி எழுதியவை முக்கியமான விமர்சன கருத்துகளாகும். சில்லையூர் செல்வராஜனுடைய எதிர் நிலைப்பட்டு வாதாடுகின்ற தன்மையுடைய விமர்சனப்போக்கு மிகமிக முக்கிய மானது.
இந்த எழுத்துகள் எல்லாமே அதிர்ஷ்டவசமாக சாந்தி, சரஸ்வதி ஆகிய பத்திரிகைகளிலே பிரசுரமாகின்றன. வாசிக்கப்படுகின்றன. இதனால் இலங்கையி லுள்ள டானியல், ஜீவா மாத்திரமல்லாமல் கைலாசபதி, சிவத்தம்பி பற்றியும் இங்குள்ள தமிழியல் ஆராய்ச்சி ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்கிறார்கள். இந்நிலையிலே அக்காலத்திலே முதுகலை படித்த சில மாணவர்கள் சில முக்கியமான இடத்தை வகிக்கின்றார்கள். அவர்கள்தான் உண்மையில் எங்களுடைய எழுத்துக்களைக் கொண்டு செல்கிறார்கள். நவீன இலக்கியத்திற்கு முற்பட்ட கால வரலாற்றைச் சார்ந்த இலக்கியங்களை மார்க்சியப் பின்புலத்தில் பார்க்கின்ற ஒரு மரபு அங்குத் தென்படுகிறது.
உண்மையில் கைலாசபதியின் ‘நாடும் நாயன்மாரும்’ ‘பெருந் தத்துவங்களும் பேரரசுகளும்’ என வரும் கட்டுரைத் தொடர் மிக முக்கியமானது. அப்பொழுது நான் ‘தேனருவி’ என்கிற இதழில் எழுதிய ‘இயக்கமும் இலக்கியமும்’ என்கின்ற ஒரு கட்டுரைத் தொடரும் சுவாரஸ்யமானது. இப்போது பின்னோக்கிப் பார்க்கிற பொழுது அதிலே பல தவறுகள் இருந்தாலும் அந்தக் கண்ணோட்டத்தில் இலக்கிய வரலாறு முழுவதையும் பார்க்கின்ற மிக எளிமைப்படுத்தப்பட்ட, இன்னும் சற்றுக் கண்டிப்பாகச் சொன்னால் ஒரு கொச்சை நிலைப்பட்ட ஒரு முற்போக்குப் பார்வை அதற்குள்ளே காணப்படுகிறது. இதற்கு மேலாகச் சற்றுப் போய் இந்த வரலாற்று ஆய்வியலைத் தமிழ் ஆய்வியல் அம்சமாக ஆக்குகின்ற பண்பு ஒன்று, நாடும் நாயன்மாரும், பேரரசும் பெருந் தத்துவங்களும் மாத்திரமல்லாமல் தனித்தமிழ் இயக்கம் பற்றியும் கட்டுரையும் முக்கிய மானது. இதிலே குறிப்பிடத்தகுந்த விசயம் என்னவென்றால் இந்தக் கட்டுரைகள் தனியே தமிழில் மாத்திரமல்லாமல் ஆங்கிலத்திலும் வெளிவந்தன.
இப்படியான வளர்ச்சியன்று படிப்படியாக அறுபதுகளின் நடுப்பகுதிகளில் வளர்ந்து வருவதை நாங்கள் பார்க்கிறோம். இலங்கையிலிருந்து வருகின்ற வளர்ச்சியில் ஒரு சிந்தனைக் கருத்தாடல் தோழர் ரகுநாதனுடன் ஏற்பட்டது. குறிப்பாக எங்களுடைய சிந்தனை ஓட்ட வளர்ச்சியில் ரகுநாதனுடைய பாதிப்பு மிகப்பெரியது. அது துரதிர்ஷ்டமாகச் சரியாகச் சொல்லப்படவில்லை. ‘சரஸ்வதி’யில் அவர் எழுதிவந்த கட்டுரைகளில் அவர் பல விஷயங்களைக் கிளப்ப, நாங்கள் அவருடன் தொடர்பு கொண்டோம். 1959-ம் ஆண்டு நாங்கள் இங்கு வருவதற்கு முன்னரே அவரை நாங்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு விரிவுரை யாளராக அழைத்திருந்தோம். அவர் அங்கு வந்து பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், பொதுக் கூட்டங் களில் பேசியது மிகுந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.
ரகுநாதன் ஏற்கெனவே நவீன காலத்திற்கு முந்திய இலக்கியங்களிலே உள்ள மார்க்சிய விமர்சனத்தை வளர்த்தெடுக்கிறார். அதனோடு நாங்கள் நுழை கின்றோம். அதனால் நாங்கள் பயனும் பெறுகின்றோம். இந்த வேளையில் நா.வா. ஒரு தொழில்நிலைப்பட்ட ஆசிரியர் என்கின்ற வகையில் தமிழியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
நாங்கள் அறிகின்றோம்; நெல்லை ஆய்வு வட்டம் திருநெல்வேலி கட்சியினுடைய ஒரு புலமாகவும் அதனுடைய ஒரு பிரிவாகவும் தொழிற்படுகிறது. எனக்கு நல்ல ஞாபகம் 1967, 1970-ம் ஆண்டு பிற்பகுதியில் தமிழகப் பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் முனைவர் பட்ட ஆராய்ச்சி தொடங்கப்படுகிறது. அப்பொழுது தான் நா.வா. ‘ஆராய்ச்சி’ பத்திரிகையைத் தொடங்கு கிறார். முதலாவது இதழில் அவர் கட்டுரை கேட்ட பொழுது என்னால் கட்டுரை கொடுக்க முடியவில்லை. அப்பொழுது இருந்துதான் கடிதத் தொடர்பு அவரோடு ஏற்பட்டது.
ஆராய்ச்சியின் முக்கியத்துவம் என்னவென்றால் அதன், பிரதானமான பயன்பாடு என்னவென்றால் அது மார்க்சியச் சிந்தனைத் தளம் கொண்ட தமிழியல் ஆய்வு முறைமைக்கான ஒரு நிறுவனமயப்படுத்தல் முயற்சி யாகும். அதாவது Institutionallised Marxism Research
in Tamil. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், நாங்கள் கட்சிகளோடு சம்பந்தப்பட்டு, தொடர்புப்பட்டு வந்திருந்தாலும்கூடப் படிப்படியாக இந்தக் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாலே சென்று மார்க்சிய நிலைப்பட்ட ஒரு நிலைபாட்டை நாங்கள் மேற் கொண்டோம். Marxist analysis. Not Communist analysis இது ஒரு முக்கியமான வளர்ச்சி.
நா.வா.வும் இந்த ஆராய்ச்சி மரபினைக் கட்சி நிலைப்படுத்தி வைத்துவிடாமல் தமிழியல் ஆய்வாளர் களிடையே, ஆசிரியர்களிடையே, ஆய்வியல் மாணவர் களிடையே படிப்படியாக வளர்த்தினார். நா.வா.வின் பங்கினை நான் மூன்று நிலைப்பட பார்க்கிறேன்.
ஒன்று, ஆராய்ச்சியை வளர்த்தது. அந்த ஆராய்ச்சியை வளர்ப்பதற்குக் காரணமான துணைக்குழுவை, துணைப் படையை அவர் அமைத்துக் கொண்டது. அவர்கள் கட்சிரீதியாக ஒன்றானவர்கள் என்றாலும் அவர்கள் எல்லாருமே கட்சிக்காரர்கள் அல்ல.
இரண்டாவது, நா.வானமாமலை தமிழ்நாட்டின் நாட்டுப்புறவியல் ஆய்வை ஒரு களநிலைப்பட்ட வரன்முறையான ஆய்வியல் நெறிமுறை தவறாத ஒரு ஆய்வுமுறையாக முதன் முதலில் அதனை எடுத்து ஒரு ஆராய்ச்சி நிலைப்பட்ட வரலாற்று முறையியலுடன் இணைந்த ஒன்றாகக் கொண்டுவந்து அதிலே பல முக்கிய சாதனைகளைச் செய்தார். உண்மையில் தமிழியல் ஆய்வுகளில் கிடைத்த முதலாவது அங்கீகாரம் நாட்டுப்புறத் துறையில் அவருக்கு ஏற்பட்ட ஆராய்ச்சி காரணமாக வி.ஐ.சுப்பிரமணியம் வழங்கிய அங்கீகாரம். உண்மையில் அதோடுதான் அவர் முக்கியமானவராகிறார். துரதிர்ஷ்டவசமாக வானமாமலையைப் பேசுகின்ற நாங்கள் இலங்கைச் சூழலில் நாட்டுப்புற ஆய்வின் வளர்ச்சி பற்றிப் பேசுவதில்லை. இப்பொழுது நாட்டுப்புற ஆய்வு என்பது பி.ஹெச்.டி. பட்டத்திற்கு ஆய்வு செய்கின்ற சில மாணவர்கள் எழுதுகின்ற ஒன்றாக ஆகிவிடுகிறது. அதற்கு ஊடாக வந்த ராம நாதன் போன்றவர்கள் சில முக்கியமான ஆய்வுகளைத் தந்திருந்தாலும்கூட, அது வேண்டிய அளவுக்கு இன்னும் வளரவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.
மூன்றாவது, நா.வா. பல இளம் எழுத்தாளர்களை இந்தச் சிந்தனைப் போக்கில் எழுத வைத்தது. அதாவது ஆராய்ச்சி சஞ்சிகையின் தொடர்ச்சிக்கு வேண்டிய பின்புலத்தை ஏற்படுத்தியமை. நா.வா. கொண்டுவந்த ஆராய்ச்சியும் எங்களுடைய தமிழியல் ஆய்வியலில் ஒரு நிறுவனமயப்பட்டதாக அமைந்தது. அதனைப் பலர் பேசுவதில்லை. இது பேசப்பட வேண்டிய விடயம். செந்தமிழ் போன்ற சஞ்சிகைகள் தமிழைப் பாரம் பரியமான ஆய்வுமுறையில் கொண்டு செல்கின்றன. இந்த ஆராய்ச்சி சஞ்சிகை அவற்றிலிருந்து தன்னைத் தனிப்பட்ட நிலையில் பாரம்பரியத்தை உடைக்காமலும் புதியதை உடைத்துக் கொண்டும் வளர்ந்து வந்த சஞ்சிகை.
இந்த வேளையில்தான் மார்க்சிய ஆய்வு முறையியல் என்பது யாது என்கின்ற பிரச்சினை முக்கியமாகிறது. மார்க்சியத்தின் சிந்தனை அடித்தளமாக இரண்டு விடயங்களைச் சொல்லலாம். ஒன்று, வரலாற்றுப் பொருள்முதல்வாதம். இரண்டு இயங்கியல் பொருள் முதல்வாதம். மார்க்சிய நோக்கு என்பது ஒரு விடயத்தினை அதன் வரலாற்றுப் பின்புலத்தில் பார்க்கின்ற அதேவேளையில், அந்த வரலாற்றுத் தன்மையில் அது எவ்வாறு இயங்கியல் தன்மைகளைக் கொண்டதாக இயங்கிற்று என்பதினை அறிந்து கொள் வதாகும். போகின்றபொழுது அதன் பொருளாதாரக் காரணிகள் மிக முக்கியமானது. ஆனால் பொருளாதாரக் காரணிகள் மாத்திரம்தான் சகலத்தையும் தீர்மானிக்காது. எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும்பொழுது பொருளாதாரத்திற்கு ஒரு தீர்மானமாக இடம் உண்டே தவிர அதுவே சகலத்தையும் தீர்மானிக்காது. அதற் குள்ளே பண்பாட்டு அம்சங்கள் வரும்.
அதாவது மார்க்சிய விமர்சனம், பண்பாட்டு இயக்கத்தின் நடைமுறைகளை, அந்த நடைமுறைகளின் உந்துசக்திகளாக, இயக்க சக்திகளாக அமைகின்ற காரணி களின் மூலமாக விளங்கிக் கொள்ள முயல்கிறது. இது ஒரு மிகமிக முக்கியமான விடயம். இதன் காரணமாகத் தான் கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக Cultural Studie என்கின்ற ஒரு துறை மார்க்சியத்தைத் தளமாகக் கொண்டு மேல்நாடுகளில் வளர்ந்து வருகின்றது.
மார்க்சிய ஆய்வுமுறையில் முக்கியமாக விதந்தோத வேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலும் தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகளில் பொது வுடைமைச் சிந்தனை என்பது எங்களுக்குக் கட்சி நிலைப்பட்ட அரசியல் சிந்தனை மரபாக உள்ளது. அது தவிர்க்கப்பட முடியாதது. ஏனென்றால் இங்குப் புரட்சிகள் ஏற்படவில்லை. அரசியல் இயக்கங்கள் உண்டு. அரசியல் எதிர்ப்புகள் உண்டு. அரசியல் நிலையாகக் கொள்கிறபோது துரதிர்ஷ்டவசமாக எங்களுடைய நாட்டு அரசியல் சூழல்கள் காரணமாகச் சோவியத், சீன முனைப்புகள் மிக முக்கியமாகத் தாக்கப்பட்டன. இதனால் மார்க்சியச் சிந்தனை மரபுகள் முழுவதையும் அந்த இரண்டுக்குள் வைத்துப் பார்க்கின்ற மரபு ஒன்று வந்துவிட்டது.
ஆனால் மேற்கு நாடுகளில் இந்த அனுபவம் வித்தியாசமானது. அங்கும் வரலாற்றுச் சூழல் காரணமாக, அங்கும் மார்க்சியத்தை எவ்வாறு நடை முறைப்படுத்துவது என்கின்ற பிரெஞ்சுச் சிந்தனை யாளர்கள், இத்தாலியச் சிந்தனையாளர்கள், அவர் களுடைய தேவைகள் காரணமாக (இதிலே பிரித்தானிய தொழிற்பாடு மிகமிகக் குறைவு. அமெரிக்காவில் பிடரெனிக் ஜேம்ஸன் இருக்கிறார்), தொழிற்பாடுகள் காரணமாக மார்க்சியச் சிந்தனை மரபில் சோவியத் மரபின் பின்னர்ப் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளோம், அல்தூசரோடுதான் மார்க்சியக் கருத்துநிலை என்கிற அம்சம் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.
இப்படிப் பார்க்கின்ற பொழுதுதான் நா.வா.வின் ஆராய்ச்சி முறைமைகள் அந்த ஆராய்ச்சி சஞ்சிகை ஏட்டுக்குள்ளேயும் அவர் எழுதிய நூல்களிலேயும், குறிப்பாக நாட்டுப்புறவியலை ஆய்ந்த முறையிலும், அரசியல் தீர்மான சக்திகளையும் பொருளாதாரத் தீர்மான சக்திகளையும் மார்க்சியமாகக் கொள்ளாது வரலாற்று இயங்கியல் தன்மையைப் பார்க்க முனைந்தது புலப்படும்.
(இரா.காமராசுவின் நா.வா. ஆராய்ச்சித்தடம் நூல் முன்னுரை)