”வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக்
குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும்
கரணமோடு புணர கடி அயர்ந்து கொள்லே”
- நம்பியகப் பொருள் -171
வரைவு அதாவது திருமணம் என்பது தலைவன் தலைவியை அவனுடைய பெற்றோர் முதலியோர் கொடுக்கவும் அல்லது கொடாத போதும் கரணம் எனப்படும் திருமணச் சடங்குகளைச் செய்து திருமணம் செய்து கொள்ளுதலே என நம்பியகப் பொருளும்,
”கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
எனத் தொல்காப்பியமும் இலக்கணம் கூறுகின்றன. தமிழ் இலக்கண நூல்கள் திருமணத்தை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தர்வம், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டு வகையாகக் கூறுகின்றன.
திருமணமானது, உடன் போய் வரைதல், தன் மனை வரைதல், மீண்டு வரைதல் (தலைவியின் மனையில்) என வரைதல் எங்கெங்கு நிகழலாம் என்றும் உரைக்கின்றன இலக்கண நூல்கள். எனினும், என்னென்ன திருமணச் சடங்குகள், எத்தனை நாட்கள் நிகழ்த்தப்பட்டன என்ற இலக்கணங்கள் தொல்காப்பியத்திலோ, நம்பியகப் பொருளிலோ குறிப்பிடப்படவில்லை. தொல்காப்பியர்,
”மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே”
– தொல்காப்பியம் - பொருள் -142
என்கிறார். இதற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் உலகறிய தலைவனும் தலைவியும் கொள்ளும் திருமண நிகழ்வுச் சடங்கு மேன்மக்கள் என்று கூறப்பட்ட அந்தணர், அரசர், வணிகர் ஆகியோருக்கு இன்றியமையாதது. வேளாண் குலத்தினரும் பின்பற்றுதல் விலக்கு ஆகாது என விளக்கம் அளிக்கின்றனர். இந்நூற்பாவினால் மட்டுமின்றி கலித்தொகை (69) அகநானூறு(86,136,221,280) குறுந்தொகை(146) ஐங்குறுநூறு(147,399) புறநானூறு(122,372) சிலம்பு (மங்கல வாழ்த்துப் பாடல் 52-53) போன்றவற்றிலிருந்தும் திருமணச் சடங்குகள் நடைபெற்றன என்பதை அறியலாம். எனினும், இப்பாடல்களில் என்னென்ன திருமணச் சடங்குகள் நடைபெற்றன எனத் தெளிவாகக் கூறப்படவில்லை. சிலம்பிலும் இளங்கோவடிகள் திருமணச் சடங்கு முறையைத் தெளிவாக எடுத்தியம்பவில்லை. நன்மணம் புணர்தல் என்ற காப்பிய இலக்கணத்தை வலியுறுத்தவே மற்ற காப்பியங்களில் மணம் பாடப்பட்டுள்ளது. பெருங்கதையில் மட்டுமே காப்பிய இலக்கணத்தை வலியுறுத்த மட்டுமின்றி திருமணச் சடங்குகள் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.
பெருங்கதையின் கதைத் தலைவனான உதயணன் வாசவத்தை, பதுமாவதி, மானனீகை, விரிசிகை என்ற நான்கு பெண்களை மணந்து கொள்கிறான். உதயணனின் மகன் நரவாணதத்தன் மதனமஞ்சிகை, வேகவதி என்ற இருபெண்களை மணந்து கொள்கிறான். உதயணன் வாசவதத்தை மணந்ததை கடிக்கம்பலை, கட்டிலேற்றியது, ஆறாம் திங்கள் உடல் மயிர் களைந்தது, மண்ணுநீர் ஆட்டியது, தெய்வச்சிறப்பு, நகர்வலம் கண்டது என ஆறு பகுதிகளாக இலாவண காண்டத்திலும், மகத காண்டத்தில் பதுமாவதியை மணந்ததை பதுமாவதி வதுவை என ஒருபகுதியாகவும், வத்வ காண்டத்தில் மானனீகையை மணந்ததை மணம் படு காதை என்ற பகுதியிலும், விரிசிகையை மணந்ததை விரிசிகை வதுவை என ஒரு பகுதியிலும் பாடியுள்ளார். நரவாண காண்டத்தில் நரவாணதத்தன் மதனமஞ்சிகையை மணந்ததை நரவாணதத்தன் மணம் என்ற பகுதியிலும் பாடியுள்ளார். வேகவதியை மணந்து கொண்டதாகக் கூறப்படுகின்ற பாடல்கள் கிடைத்தில.
உதயணன் வாசவதத்தையை மணந்ததைப் பாடுமிடத்திலே திருமணச் சடங்குகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளது. வாசவதத்தையின் திருமணம் சயந்தி நகரில் நடைபெற்றது.
”வனப்பு வீற்றிருந்த வாசவதத்தை
வதுவை செல்வம் விதியிற் கூறுவென்”
–பெருங்கதை – 2.2(8-9)
வாசவதத்தை உதயணனைத் திருமணம் செய்த அழகினை விதிப்படி கூறுகிறேன் என்கிறார் கொங்குவேள்.
மண நாளை முரசறைந்து அறிவித்தல்
வாசவ தத்தையொடு வதுவை கூடிக்
கோல நீண்மதிற் கொடிக்கோ சம்பி
மாலை மன்னவன் மணமக னாகும்
காலை யிதுவெனக் கதிர்மணிக் கடிப்பிற்
கண்ணதிர்ந் தியம்ப வின்மொழி பயிற்றிக்
கல்லென வறையு மொல்லென் கம்பலை
அறைந்தறி வுறீஇய பின்றை நிறைந்த
–பெருங்கதை – 2.2(49-55)
திருமணத்தின் முதல் நிகழ்வாக அரும்பரி சாரத்து பெருங்கணி வகுத்த நன்னாளை முதுகுடிப் பிறந்த வள்ளுவன் யானை மீதிருந்து முரசறைந்து தெரிவித்தான். அதனால் நகரில் கம்பலை நிறைந்தது. அரசனின் மணம் எனவே நகர் அலங்கரிக்கப்பட்டது.
மங்கல நீர் கொண்டுவருதல்
கடிக்கம்பலை என்ற பகுதியில் மணமக்களை மங்கல நீராட்ட மங்கல நீர் கொண்டு வரும் சடங்கினை விரிவாக விளக்குகிறார் கொங்குவேள்.
பொன்னணி கொண்ட பூந்தண் சிகழிகைக்
கன்னி மகளிர் கண்ணணங் குறூஉம்
ஒவ்வா வணியின ரொப்பக் கூடி
மண்ணகக் கிழவற்கு மண்ணுநீர் சுமக்கும்
புண்ணிய முடையீர் போதுமி னீங்கென
–பெருங்கதை – 2.2(224-228)
மங்கல நீர் நிலை அதனைச் சுற்றிலும் யானையின் தந்தத்தினால் ஆகிய தூண்கள் நடப்பட்டு இரும்பு சட்டங்கள் இட்டுப் பாதுகாக்கப்பட்டது. அந்நீர் நிலையினை மாசுபடுத்துவோர் தண்டிக்கப்படுவர் என்று எழுதப்பட்ட கழறுகால்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அந்நீர்நிலையின் மீது பறவைகளும் பறக்காமல் பாதுகாக்கப்பட்டது. அங்கிருந்து மங்கலநீர் கொண்டு வருவதற்கு கன்னிப் பெண்கள் ஆயிரம் பேர் பணிக்கப்பட்டனர். அவர்கள் அலங்கரிக்கப்பட்ட யானை மீது பல்வகை இசைக்கருவிகள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
முகூர்த்தம் குறித்தல்
பேரிய லாளர் பிழைப்பிலர் நோக்கி
வழுவில் செந்தீப் பழுதில வேட்கும்
பொழுதுமற் றிதுவெனப் புரையோர்க் குரைப்ப
-பெருங்கதை – 2.3(6-8)
சோதிடன் நாள் கோள் முதலியவற்றை மீண்டும் ஆராய்ந்து முழுத்தம் அதாவது முகூர்த்தம் நடைபெறும் பொழுதினை அனைவருக்கும் உரைக்கின்றான்.
திருமண நிகழ்வு
வேதத்தினை முறைப்படி பயின்ற அந்தணன் பூக்களால் அலங்கரிக்கப்பட்டப் பந்தரின் கீழ் வெண்மணலைப் பரப்பி, முக்குழி அமைத்து முத்தீ வளர்க்கின்றான். ஆகவநீயம் என்ற தீயை வளர்க்க நாற்கோணமும், தெக்கணாக்கினி என்ற தீயை வளர்க்க முக்கோணமும், காருகபத்தியம் என்ற தீயை வளர்க்க வில்வடிவமும் கொண்ட முக்குழியை அமைத்து அந்தணன் முத்தீ வளர்த்தான்.
மணப்பந்தரானது, ஐ ஒன்பான் கால்களைக் கொண்டிருந்தது. அதில் தெய்வங்கள் உறைவதாக எண்ணி கால்கள் தோறும் முலைப் பாலிகைகளும் நிறைகுடமும் வைக்கப்பட்டன. கடிப்பன, நக்குவன, பருகுவன, மெல்லுவன, விழுங்குவன என்ற ஐவகை உணவுகளும் படைக்கப்பட்டன.
பந்தரின் வடகிழக்கு திசையில் அம்மி இடப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் அரசாணி கொம்பு வைக்கப்பட்டிருந்தது. இதனை,
விசை யம்மிக் குணதிசைக் கோணத்
தீடமை பீடிகை பாடுபெற விருந்த
பொன்னயி ராணி முன்வயிற் பேணிப்
பன்னிய பனுவற் பார்ப்பன முதுமகன்
- பெருங்கதை – 2.3(27- 30)
என்கிறார் கொங்குவேள்.
பின்னர், தெய்வங்களுக்கு பால்சோறு, தேன்சோறு, புளிச்சோறு, கருப்பஞ்சாற்றில் சமைத்த சோறு, நெய்சோறு முதலியன விளையுயர்ந்த பொருட்களால் ஆன கிண்ணத்தில் படைக்கப்பட்டன. இதற்கு வலப்பக்கத்தில் பஞ்சவாசமும் வெற்றிலைப்பாக்கும் வைக்கப்பட்டன. சந்தனமும் மஞ்சளும் வைக்கப்பட்டன. முதுபெண்டிர் பந்தர்கால்களை வலம் வந்து, உழுந்து, நெல், உப்பு, மலர், வெற்றிலைப்பாக்கு, சந்தனம் ஆகியவற்றைக் கன்னிப்பெண்களிடம் கொடுத்து ஏழு முறை வணங்குங்கள் என்று திருமணப்பந்தலில் உறையும் தெய்வங்களை நீவீர், மலையிலோ, கடலிலோ, நிலத்திலோ, வானிலோ எங்கு உறைபவராயினும் வாசவதத்தையின் திருமண வழிபாட்டை ஏற்றுக் கொள்வீர் என வேண்டினர்.
வாசவதத்தையின் தோழி, காஞ்சனை மணமகனாகிய உதயணனின் அருகில் வாசவதத்தையை அமரச்செய்தாள். மாமுது பார்ப்பான் வேள்வித்தீயினை முறைப்படி வளர்த்தான். மணச்சடங்கின் முக்கிய நிகழ்வாக மணமகன் உதயணன் தன்கைகளாலே வாசவதத்தையின் சிற்றடியினைப் பற்றி, அம்மியின் வீது வைத்து தீயில் பொரியிட்டனர். இந்நிகழ்வின் போது இருநிகழ்வுகள் நடைபெறாததை எண்ணி வாசவதத்தை சினம் கொண்டால் என்கிறார் கொங்குவேள். பொரியிடுதல் என்ற சடங்கினை முன் நின்று செய்பவர்கள் மணமகளின் சகோதரர்கள். மைத்துனன் முறைகொண்டவர்கள் முதலில் மாலை மாற்ற வேண்டும். பின்னர் மணமகளின் பெற்றோர் தாரை வார்த்துக் கொடுத்தல் வேண்டும். அதன் பின்னரே, மணமக்களைத் தீயின் முன் நிறுத்தி மைத்துனன் பொரிமுகம் தட்ட வேண்டும். ஆண்டாளும் வாரணமாயிரம் திருமொழியில் பொரிமுகந் தட்டுவதைக் கனவாகக் கண்டதாகப் பாடுகிறாள். வாசவதத்தையை உதயணன் வலிந்து வந்து திருமணம் செய்து கொண்டதால் இந்நிகழ்வு முறைப்படி நடைபெறவில்லை என கோபம் கொள்கிறாள் வாசவதத்தை. கோபம் கொண்ட வாசவதத்தையின் கைகளை வலுவாகப் பற்றித் தீயினை வலம் வந்தான் உதயணன். அடுத்த நிகழ்வு மணமகன் மணமகளுக்கு அறிவுரை வழங்குதல். உதயணனும்,
மறுவில் காதன் மக்களைப் பெறுகென
முறைமையிற் பிழையாது முகிழ்விரல் பற்றித்
தகாஅக் காலந் தலைவரு மெனினும்
பகாஅக் காதலொடு பத்திமை……
பெருங்கதை – 2.3(110- 113)
என அறிவுறுத்துகின்றான். பின்னர் தென் திசையில் பரப்பியிருந்த தர்ப்பைப் புல்லின் மீது அவளை நடக்கச் செய்து திருமண இருக்கையில் அமர்த்தினான். பின்னர் வடக்கு திசையிலிருந்த விடைத் தோலிருக்கையில் அமர்ந்து அருந்ததி காட்டினான்.
வடபான் மருங்கிற் சுடர்மீக் கூரிய
கற்புடை விழுமீன் காணக் காட்டிய
பொற்றொடி நுதன்மிசைப் புனைவிரல் கூப்பி
மன்னிய வுலகினு ணின்னியல் பாக
என்வயி னருளென மும்முறை யிறைஞ்சுவித்து
- பெருங்கதை – 2.3(125- 129)
இந்நிகழ்வு சூரியன் சிவந்த வானத்தில் மறைந்த பின் நிகழும் நிகழ்வாகக் கொங்குவேள் குறிப்பிடுகின்றார். அருத்ததியை நானும் உன்னைப் போல் கற்புடன் வாழ அருளல் வேண்டும் என்று மும்முறைவணங்கினாள் வாசவதத்தை.
திருமணம் முடிந்து மூன்று நாட்கள் கழிந்த பின் நான்காம் நாள் இரவு கட்டிலேற்றுதல் என்ற சடங்கு நிகழ்ந்தது. ஆறு திங்கள்கள் கழிந்த பின்னர் மீண்டும் முறைபடி மணவறை அமைகப்பட்டு மயிர் களைந்தது என்ற சடங்கு நிகழ்த்தப்பட்டது. பின்னர் மணமக்கள் நண்ணீரால் நீராட்டப்பட்டுத் தெய்வத்தினை வணங்கிய பின்னரே நகர் வலம் வந்தனர் எனப் பாடியுள்ளார் கொங்குவேள்.
வாசவத்தையின் திருமணத்தினை ஆறு பகுதிகளாகப் பாடிய கொங்குவேள் பதுமாவதியை உதயணன் மணந்ததை,
நன்னுதன் மாதரை நாட்கடிச் செந்தீ
முன்முத லிரீஇ முறைமையிற் றிரியா
விழுத்தகு வேள்வி யொழுக்கிய லோம்பிச்
- பெருங்கதை – 3.22(271-273)
என்று தீ முதலியன வளர்த்து முறை திரியாமல் மணந்து கொண்டான் என்கிறார். அதே போல் மானனீகையை மணந்ததையும்,
நான்மறை யாளர் நன்மணங் காட்டத்
தீவலஞ் செய்து கூடிய பின்றை
கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின்
- பெருங்கதை –4.14(180-182)
தீ முறை குறைய நெறிமையின் என்கிறார். விரிசிகையை மணந்ததும்,
வேட்டவட் புணர்ந்து வியனுல கேத்த
வதுவைச் செல்வமொடு வான்றோய் வியனகர்
- பெருங்கதை – 4.17(113-114)
என வேள்வி வளர்த்தே. உதயணனின் மகனான நரவாணதத்தன் மதனமஞ்சிகையை மணம் முடித்ததையும்,
விதியி னெய்தி விழவு முந்துறீஇப்
பதன்றிந்து நுகருமாற் பண்புமிகச் செறிந்தென்
- பெருங்கதை – 5.8156-157)
என விதியின் எய்திய விழவு என்கிறார் கொங்குவேள்.
பழந்தமிழர் திருமண முறையில் தீவளர்த்து வேள்வி செய்தல் என்ற சடங்குகள் இடம் பெறவில்லை. பின்னர் தோன்றிய மரபே தீ வளர்த்தல். மங்கல நீராட்டுதல், மணப்பந்தர் அமைத்தல் போன்ற சடங்குகள் மட்டுமே சங்க காலத் திருமண முறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.
எனினும் மங்கல அணி என்னும் தாலி அணிதல் பெருங்கதையில் எங்கும் கூறப்படவில்லை. வடமொழியில் குணாட்டியர் எழுதிய நூலை முதல் நூலாகக் கொண்டிருந்த போதும் பெருங்கதையில் மங்கல அணி இடம் பெற வில்லை. ஆனால் சிலம்பில் மங்கல அணி என்னும் வழக்கு மங்கல வாழ்த்துப்பாடலிலும், மனையறம் படுத்த காதையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மங்கல என்ப மனைமாட்சி என்ற திருக்குறளுக்கு உரைகூறும் வ.உ.சியும் தண்டபாணி தேசிகரும் மங்கலம் என்ற சொல்லிற்குத் தாலி என்றே பொருள் தருவதையும் இங்கு கவனத்தில் கொள்ளல் வேண்டும். ஆனால் இன்றும் தெலுங்கு பழங்குடிகள் சிலரிடமும், மலையாளம், கன்னடம், துளு மொழி பேசுகின்ற சில இனத்தாரிடமும் மங்கல அணி அணிதல் என்ற திருமணச் சடங்கு இல்லை.
மங்கல நீராட்டல், மணப்பந்தல் அமைத்தல், தெய்வம் பரவல் போன்ற சடங்குகள் இருந்தமை புலனாகும். பெருங்கதையில் பந்தல் நாற்பத்தைந்து கால்கள் கொண்டதாக அமைக்கப்பட்டு அவிப்பலி தரப்பட்ட செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சடங்கில் தமிழர் வழக்கில் இல்லாத உளுந்தினைத் தூவுதல் கூறப்பட்டுள்ளது. தமிழர் வழிபாட்டு முறையில் நெல்லும் மலரும் தூவி வழிபடும் வழக்கம் உள்ளது. ஆனால் பெருங்கதையில் உளுந்தும் உப்பும் சந்தனமும் மஞ்சளும் தூவி வழிபட்டதாகப் பாடுகிறார் கொங்குவேள். திருமணச் சடங்கில் இன்றும் சில இனத்தாரிடம் உப்பும் மஞ்சளும் வெற்றிலைப் பாக்கிற்குப் பதில் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது இங்கு நோக்கத்தக்கது. திருமணச் சடங்கில் வெற்றிலையும் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனினும் திருமணம் முடிந்து ஆறாம் திங்களில் நிகழ்த்தப் பெறும் மயிர்களைதல் சடங்கு திருமணத்துடன் தொடர்புடையதா அல்லது முடிசூட்டலுடன் தொடர்புடையதா என்பது ஆய்வுக்குட்பட்டதே. மேலும் பிற இலக்கியங்களில் அருந்ததி காட்டல் என்ற சடங்கு சுட்டப்பட்டுள்ளது. அம்மி மிதித்தல் என்ற சடங்கு பெருங்கதையிலும், நாச்சியார் திருமொழியிலும் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளது. நாச்சியார் திருமொழியிலும் அரசாணிக் கொம்பு வழிபாடு குறித்த செய்திகள் இல்லை. ஆனால் பெருங்கதையில் திருமணத்தில் அரசாணிக் கொம்பு குறிக்கப்பட்டுள்ளது. பெருங்கதை வடமொழியை மூலநூலாகக் கொண்டிருந்தாலும் அக்கால மக்களின் திருமண மரபையும் வழக்காறையும் உள்ளடக்கிய பெட்டகம் என்றே கருதலாம்.
துணைமை நூல்கள்
1. சிலம்பொலி செல்லப்பன், பெருங்கதை ஆராய்ச்சி, அருணோதயம், சென்னை- 14 பதிப்பு-1976
2. சிலம்பு நா.செல்வராசு, தொல்தமிழர் திருமண முறைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில். பதிப்பு -2016
3. பெருங்கதை, விக்கி மூலம்
4. பெருங்கதை, மின்னூல், தமிழ் இணைய வழி பல்கலைக் கழகம்
- ச.முத்துச்செல்வி, உதவிப் பேராசிரியர், தரும்மூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக்கல்லூரி, பட்டாபிராம், சென்னை-72