திருக்குறள்

மனித சமுதாயம் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் எனத் திருவள்ளுவர் தொகுத்துத் தந்துள்ள கருத்துகள், காலந்தோறும் தமிழர் வாழ்க்கையைச் செம்மையாக்கிட முயன்றுள்ளன. திருக்குறள் தமிழர் நலன்களை முன்னிறுத்துகிறது. சமூகத்தில் பெண்களின் நிலை மதிப்பீடு குறித்த கருத்துக்கள், அற நூல்களில் இடம் பெறுகின்றன. திருக்குறளில் ஒழுக்கம், பொறுமை, அன்பு, நட்பு, பிறர்மனை நயவாமை, கல்வி போன்ற அனைத்தையும் காணமுடிகிறது.

நபிமொழி மாலை

சராசரியான மனிதர் முயன்றால் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற முடிகின்ற ஒழுங்குகளை வெளிப்படுத்துகிறது. நபிமொழி மாலை திருக்குறளைப் போல இரண்டு அடி கண்ணிகளால் ஆனது.abdu kapoor booksஇல்லற வாழ்வு

இல்லற வாழ்வில் மனைவி செய்யும் செயல்களை நபிமொழி மாலை எடுத்துரைக்கிறது. திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரம் இடம் பெற்றுள்ளது. இல்லற வாழ்வில் மனைவி முக்கியப் பங்காற்றுகிறாள். ஆணுக்குள் அடங்கி நடக்கின்ற வாழ்வு தான் பெண்ணுக்கு அழகானது. அவர்கள் தான் சிறந்த பெண் ஆவாள். குடும்பத்திற்கு மட்டுமின்றி சுற்றத்தையும் காக்கும் தன்மை பெண்களிடம் இருந்தது.“தகுதி வாய்ந்த இல்லத் தலைவியையுடைய இல்லமே நல்லில்லமாக அமைதல் கூடும்” என கா.அப்துல் கபூர் கருதுகிறார். மனைவியிடத்து இல்லறத்தை நன்கு நடத்தும் இயல்பு இல்லாவிடின் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய நலன்களைப் பெற்றிருப்பினும் பயனில்லை என்றும் மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில்செல்வம் முதலியன ஒன்றும் இல்லா விடினும் யாதும் உள்ளது போலாகுமென்றும் அவள் சிறந்தவளாக வாய்க்கவிடின் பிற வளங்களனைத்தும் இருப்பினும் யாதுமில்லாதது போலாகும் என்று கூறுகிறார். இதனை,

மறைவிடம் காப்பதில் கருத்தூன்றி

மனத்தைப் பேணிக் கணவன்பால்

நிறைவுடன் அன்பைச் செலுத்துபவள்

நிறைந்தவள் என்பது நபிமொழியாம் (பா-219)

என்ற அடிகளில் காணலாம். இல்லத் தலைவியிடம் சிறப்பாக வேண்டப்படும் பண்புநலம் கற்பே. கற்பு அவளுக்கு கணவன் நலத்தையும் குடும்ப நலத்தையும் பேணுவதில் உறுதி நல்குகிறது. இவ்வாறு கற்புடைய பெண்ணின் சிறப்பைப் பற்றி அப்துல் கபூர் கூறுகிறார்.

அன்பின் மிகுதியினால் எப்பொழுதும் தன் கணவன் நினைவாகவே இருக்கும்பெண் துயிலெழும் போதும் அவன் நினைவாகவே எழுவாள் என்று குறள் கூறுகிறது. தெய்வத்தை தொழாது கணவனை வணங்கியெழும் பெண், தன் கணவனுக்கு தன் குடும்பத்திற்கு சமுதாயத்திற்கு வேண்டிய போது பெற்ற மழையைப்போல் பயனுள்ளவள் ஆவாள். திருக்குறள் இதைத்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்

பெய்எனப் பெய்யும் மழை    (குறள் 55)

என்று வற்புறுத்துகிறது. குடும்ப அமைப்பை காக்கும் குறளும் நபிமொழிமாலையும் பெண்சித்தரிப்பை எடுத்துரைக்கின்றன. சமயநெறிக்கு உட்பட்டே இரண்டும் அமைகின்றன.

கற்புடைய பெண்

இல்லறத்தில் கணவன் மனைவியை இல்லறத்தை விட்டு வெளியே செல்லலாகாது எனத் தடை செய்யும் முறையை திருவள்ளுவர் விரும்பவில்லை. அத்தகைய சிறை காக்கும் காவலால் பயனில்லை மகளிர் தம் நிறையால் தம்மைக் காத்துக் கொள்ளுதலே சிறப்பாம். மேலும் பெண்கள் படித்தால் அவர்களுடைய கல்வியே கற்புக்குக் காவலாக இருக்கிறது என்கிறார். திருவள்ளுவர்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.                (குறள் 57)

என்று கூறுகிறார்.

சிறை என்பதை நாட்டில் அரசர் குற்றவாளிகளைக் காவலில் வைக்கும் முறையை குறிப்பதாகக் கொண்டு நாட்டில் குற்றம் நிகழாமல் காப்பதற்கு அரசர்கள் குற்றம் புரிவோரை சிறையிலிட்டு காவல் செய்வது மட்டும் பயன்தராது. நாட்டில் அறப்பண்புடைய மகளிரே குற்றம் நிகழாமல் தடுக்கக் கூடியவர் என்கிறார் அப்துல் கபூர்.

பெண்கள் மறைவாய் இருந்திடுவீர் பேணா தேகின் சைத்தானும்

கண்கட் கழகை மிகுத்திடுவான்

கடமையுணர்த்தும் நபிமொழியாம்.    (பா.214)

என்று கூறுகிறார்.கணவன் பார்க்கத் தன்னை அழகுபடுத்திக் கொள்வதே அல்லாது மற்றவர் பார்க்கத் தன்னை அழகுபடுத்திக் கொள்ளாள். கற்பே உயிரினுஞ் சிறந்தது. உலகத்தில் பிற பெண்களைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்கிற ஆடவர்களும் இருக்கின்றாராகையால் பெண்கள் தகுந்த துணையில்லாமல் ஒருபோதும் தனிமையாயிருக்கத் தக்கவர் அல்லர். உயிர் போனாலும் கற்புநிலை தவறுவதில்லை என்ற மன உறுதியோடு இருக்க வேண்டும். எல்லா ஆண்களுக்கும் மேலான சிறந்த ஆண்களும் மேலான பொருளுமான கடவுளுடைய கட்டளை எல்லாவற்றிற்கும் மேலானது ஆகையால், அந்தக் கட்டளைக்கும் அறத்துக்கும் மாறுபாடில்லாமல், ஆண் சொல்லுகிற எல்லா நன்மைதரும் கட்டளைக்கும் மனைவி கீழ்படிய வேண்டியவளாள். அரசனுடைய கட்டளைக்கு மக்கள் எப்படி உட்பட வேண்டியவர்களோ அப்படியே. ஆண்களுக்கு அடங்கி அவனுடைய மன விருப்பப்படி நடக்கக் கடமைப்பட்டிருக்கிறாள் என்கிறார்.இஸ்லாம் பெண்கள் வெளியே செல்வதை தடை செய்கிறது. திருவள்ளுவர் பெண்களைச் சிறை காக்க வேண்டாம் என்கிறார். கா.அப்துல் கபூர் பெண்கள் வெளியே வருவதை மறுக்கிறார்.

பெண்ணுாிமை

அடக்கம், பொறுமை, தியாகம், பரநலம், இரக்கம், அழகு, ஒப்புரவு தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும். பெண் பிறவி அடுப்பூதல் முதலிய வேலைகட்கும் பயன்படுத்துதல் அறியாமை. தாய்மையுடைய பெண்ணிற்கு முதன்மை வழங்க மறுப்பது அநாகரிகம். எல்லாவற்றிலும் முதன்மை பெற்று விளங்கும் பெண்ணிற்கு உரிமை வழங்க வேண்டும். உரிமை என்பது ஒருவர் கொடுப்பதன்று. மற்றொருவர் வாங்குவதுமன்று. ஒருவர் உரிமைக்கு மற்றொருவர் கேடு சூழ்வது பெரிய பாவம். பெண்மை என்பது அநாதியாக முழுமுதற்பொருளின் ஒரு கூறாயிருப்பது பெண் உலகம் ஒரு தெய்வீகமானது.

வள்ளுவரின் ஆண்பெண் பாலுறவு குறித்தப் பார்வை காமத்துப்பாலில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க ஆணின் மொழியிலமைந்த பிரதியாகக் குறள் அமைகிறது ஆண் மையப்பாலியலைச் சார்ந்தது. ஆணின் பாலியல் வேட்கை மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் தனக்கான பாலியல் விழைவை அடைதல் கூறப்படவில்லை பெண் எனப்படுபவள் ஆணினால் அறிந்து கொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று ஆணின் பாலியல் தொழில் நுட்பமாக அவள் மாற்றப்படுகிறாள். இத்தகைய ஆண்மையப் பார்வைதான் எல்லா வகையான பாலியல் அத்துமீறல்களுக்கும் வன்முறைக்கும் அடித்தளமாகும். பெண்ணுடலைப் போகப் பொருளாக மாற்றித் துய்ப்பிற்கான தளமாக்கிறார் வள்ளுவர். பெண்ணின் உரிமை கொள்ளும் அதிகாரத்தையும் அறத்தின் பெயரால் ஆணுக்கு வழங்குகிறார். இதனை

இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்

திருநீக்கப் பட்டார் தொடர்பு (குறள் 920)

என்ற குறளால் அறியலாம்.

ஈனம் செறியும் கற்பழிவுக் கென்றும்

நெருங்கிச் செல்லாதீர்

மானம் போற்றும் நெறிதந்த மாண்பார்

மன்சூர் நபிமொழியாம்.         (பா.353)

என்று அப்துல் கபூர் கூறுகிறார். பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துக்களை கா.அப்துல் கபூர் முன்னிறுத்துகிறார். ஒருவன் கெட்ட நடத்தையுடன் நடந்து கொண்டால் அவனுக்கு செல்வம் என்பது நில்லாது போய்விடும் என திருவள்ளுவர் கூறுகிறார். அவ்வாறே அப்துல் கபூரும் ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய நற்செயல்கள் யாவும் அழிந்துவிடும் என்று கூறுகிறார். இருவருடைய கருத்தும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

திருமண வாழ்வு

ஒரு பாதியான பெண்ணும் மற்றொரு பாதியான ஆணும் ஒன்றுபடுவது திருமணம். மக்களின் இயற்கை அமைப்பை நோக்கினால் அவர்கள் தனித்து வாழும் இயல்பினரல்லர். மக்கள் கூடிவாழும் இயல்பினரேயாவர். அக்கூட்டை நிகழ்த்துவது திருமணம். திருமணம் என்பது வெறும் விளையாட்டன்று. ஒவ்வொரு பாதியாய் வளர்ந்து வரும் இரண்டு உயிர் ஒன்றி முழுத்தன்மை எய்திக் கடனாற்றப் பிணிப்பது திருமணம். உலகியல் வழிநின்று பெண் ஆண் ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

இஸ்லாமிய வாழ்வியலில் பெண்கள் பேசுவதற்கு வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குழந்தைப் பருவத்தில் மகிழ்ந்து தெருவில் விளையாடும் சிறுமியாக இருந்த பின் தன்னுடைய பெற்றோரின் விருப்பத்தின் பேரிலே திருமணமானது நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக மாறுகின்றாள். குடும்பத்தின் நல்லொழுக்கங்ளைப் போற்றி பின்பற்றி நடக்கின்றாள். திருமணம் செய்து கொள்ளுங்கள் அதோடு நில்லாமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் அதுவே வாழ்க்கை முழுமைக்கும் உதாரணமாகும். குடும்பத்தைப் பெருக்கிடுங்கள் அதனால் பெரும் மகிழ்ச்சியடைந்து உங்கள் பின் தொடர்வேன் என்று நபிகள் கூறுகிறார் இதனை வள்ளுவரும்,

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்

நன்கலம் நன்மக்கட் பேறு (குறள் 60)

என்கிறார்.

திருக்குறள் பெண்களுக்குச் சார்பான அறக்கருத்துக்களை முன்னிறுத்துகிறது என்ற நம்பிக்கை தமிழரிடையே உள்ளது. கா.அப்துல் கபூர்

திருமணம் செய்வீர் குழந்தைகளைத்

தருவீர் எண்ணால் பெருகிடுவீர்

பெருமித மடைவேன் அதனால்யான்

பின்தொட ரினரால் – நபிமொழியாம் (பா-222)

என்று கூறுகிறார்.வாழ்வுக்கு அழகாவது அணியாவது மனைவியின் புகழத்தக்க குணமே. அத்தகைய புகழத்தக்க குணத்துக்கும் பெருமை போற்றுதற்குரிய நல்ல குழந்தைகளைப் பெறுதல் இதன் மூலம் நபிமொழி மாலையின் கருத்தும் திருக்குறள் செய்தியும் கருத்தாகின்றன.

பிறன்மனை நயத்தல்

பிறன்மனை நயத்தல் கூடாது என வலியுறுத்துகின்ற குறள்கள் தனிமனித ஒழுக்கம் என்ற நிலையில் அமைந்துள்ளன. திருவள்ளுவர்

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு              (குறள் - 148)

என்று கூறுகிறார்.

பிறன்மனை நயத்தலை திருக்குறள், நபிமொழி ஆகிய நூல்கள் எடுத்துக்கின்றன. இவ்விலக்கியங்கள் பிறன்மனை விழைவால் ஏற்படும் சமூகக் கேட்டைப் பதிவு செய்துள்ளன. அவ்வகையில் திருக்குறள் நபிமொழி இவை பிறன்மனை விழைதலால் ஏற்படும் தீமைகளைக் கூறுகின்றன. திருக்குறளில் பிறனில் விழையாமை எனும் அதிகாரம் இடம் பெற்றுள்ளது. இதில் அறம்,பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்தவர். பிறர் மனை நோக்காதிருப்பர். இக்குறளில் பிறர் மனைவியை நோக்காதிருக்க வேண்டும் என்ற கருத்து மையமாக உள்ளது. அப்துல் கபூர்

மனைவியைப் பகலில் துன்புறுத்தி

மகிழ்வாய் இரவில் நேசிப்போர்

மனித இயல்பின் எதிராவார் மனதிற்

கொள்வீர் நபிமொழியாம்      (பா - 218)

என்று கூறுகிறார்.

ஆணுடலைக் காட்டிலும் பெண்ணுடல் இழிவானதாகும். பெண் எனப்படுபவள் பொதுச் சமூகத்தில் ஆணினால் அறிந்து கொண்டு அனுபவிக்கப்பட வேண்டிய பொருள் என்று உள்ளது. பால் வேட்கையானது ஆணின் பாலியல் தொழில் நுட்பமாக மாற்றப்படுகிறது. பெண்ணை முன்னிலையாக்கி கூறியிருப்பது பெண்ணுடல் மீது இருக்கும் ஆசையை அகற்றுவதற்கே ஆகும். பெண் மீது கொள்ளும் காமமின்மையை முதன்மைப்படுத்தியே இருவரும் கூறயிருக்கிறார். காமத்தை அழிக்கவும் உடல்மேலிருக்கும் பற்றைப் போக்கவும் பெண்களின் உடல் தீமைக்குரிய குறியீடாகவும் இழிவானதாகவும் வள்ளுவர் கூறுகிறார்.

முடிவுரை

திருக்குறளும், நபிமொழி மாலையும் உரைக்கின்ற பெண் வாழ்வியல் சிறப்பியல்புகள் பல. இல்லற வாழ்வு பற்றியும், ஆண் பெண் உள்ள உணர்வுகள் இங்கு ஆராயப்பட்டன. சில கருத்துக்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாய் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் பெண்களின் மனஓட்டம் காணப்படுகிறது. இல்லற வாழ்வு, பெண்ணுரிமை, திருமண வாழ்வு இவற்றில் பெண்ணை முதன்மைப்படுத்தினாலும் அப்துல் கபூரும் திருவள்ளுவரும் ஆணாதிக்கத்தை உயர்த்திப் பெண்களை அடிமைப்படுத்தும் கருத்துகளை முன்வைக்கின்றனர் என்பதை இக்கட்டுரை முன்வைக்கிறது. திருக்குறள் உருவாக்கியுள்ள பெண் பற்றிய மதிப்பீடுகள் இன்றைக்கும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன, கா.அப்துல் கபூர் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் நிலவ வேண்டிய உறவு பற்றி பெண்களுக்கு மட்டும் அறிவுரை வழங்குகிறார் என்பதையும் அறிய இயன்றது.

துணைநூற்பட்டியல்

1.      பாமாலை-18 கா.அப்துல் கபூர், பொன்மொழிப் பதிப்பகம்,14-69A, மேட்டுக்கடை, தக்கலை-629175

2.      திருக்குறள் பரிமேலழகர் உரை, ராம் பிரசுரம் 18, பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை.

3.      பெண்கல்வி வேதநாயகம்பிள்ளை 1978, திருநெல்வேலி. தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட்,79 பிரகாசம் சாலை, சென்னை-1

4.      பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை, கலியாண சுந்தரனார், பாவை பப்ளிகேஷன்ஸ் 142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.

5.      குறள் கூறும் சமுதாயம், காமாட்சி ஸ்ரீனிவாசன், மதுரைப் பல்கலைக்கழகம், மதுரை – 625 021 பதிப்பு -1975.

கட்டுரையாளர்கள்:

நெறியாளர்: முனைவர் ம. நூர்ஜஹான், இணைப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னாட்சி, (பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றது), திருச்சிராப்பள்ளி- 620 023

ஆய்வாளர்: ஆ. யாஸ்மின்,  முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழாய்வுத்துறை, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னாட்சி, (பாரதிதாசன் பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்றது), திருச்சிராப்பள்ளி -620 023 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.