சாகித்ய அகாதமியின் பால புரஸ்கார் விருது பெற்ற நூல் தன்வியின் பிறந்தநாள் சிறார்களுக்கு எழுதப்பட்டுள்ள அறிவுரைக் கதைகளாகவோ அறவுரை கூறும் கதைகளாகவோ இல்லாமல் இயல்பான நடை ஓட்டத்தில் சமூகத்தின் எதார்த்தத்தை எடுத்துரைக்கும் தனித்துவ நூலாக நிற்கிறது.
சிறார் உலகின் நுட்பங்களை புரிந்து கொண்டவருக்கு சிறார்களுக்கு எப்படியான கதைகளை சொல்ல வேண்டும் என்ற அடிப்படை தெரிந்திருக்கிறது. அதுதான் இந்த நூலில் உள்ள 10 கதைகளுக்கும் சிறந்த கதை கருக்களைக் கொடுத்திருக்கிறது.
இன்றைய நடைமுறைகளையும் இயல்பான போக்கையும் எடுத்துக் கூறும் அதேசமயம் சிறார்களுக்குள் ஏற்படும் மனஸ்தாபங்களும் கோபமும் பழி வாங்குவதைத் தூண்டி விடாமல் அன்றைய நிகழ்வை அன்றே மறந்துவிடும் குழந்தைத் தன்மையை எடுத்துக்காட்டும் வகையிலும் அமைந்திருக்கிறது.
அறிவுரைகளைக் கூறுவதன் மூலமும் சதா இந்த வழியைப் பின்பற்று என்று தொடர்ந்து அறிவுறுத்துவதன் மூலமும் ஒவ்வொரு குழந்தைகளையும் நாம் கட்டுப்படுத்தி விட முடியாது. அதேசமயம் அறச் சிந்தனைகளையும் ஒழுக்கப் பண்புகளையும் அவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் சமூகத்தில் எழுத்தாளர்களின் பணியாக அமைந்திருக்கிறது.
நூலில் உள்ள 10 கதைகளும் தனித்தனியான சொல்லாடல்களை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கதையும் தனிச்சிறப்பு வாய்ந்த கவித்துவத்தில் நம்மை சிந்திக்க வைக்கிறது. எளிமையும் விளக்கமும் இணைந்த மொழியையும் சிறுவர்களுக்கு புரிந்த மொழியையும் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்த கதைகளில் மன்னித்தல் மறத்தல் பேரன்பைக் காட்டுதல் எல்லா உயிர்களிடத்தும் கருணையை நிரப்புதல் இயற்கையை நேசித்தல் என்ற விழுமியங்கள் இடையூடாக நுழைக்கப்பட்டுள்ளன.
முதல் கதையான தன்வியின் பிறந்தநாளில் அவளது பெற்றோர் தன்வியின் பிறந்தநாளுக்கு சிறப்பு செய்ய விரும்புகின்றனர். அதேசமயம் தன்விக்கு யாரெல்லாம் பிறந்தநாள் வாழ்த்து கூறுகின்றனர் என்பதை அவளது கனவுலகத்திற்குள் நம்மையும் அழைத்துச் சென்று காட்டுக்குள் ஒரு திருவிழாவை கொண்டாடி மகிழ்கிறது. இயற்கை வானம் விலங்குகள் பறவைகள் சூரியன் நிலா காற்று என தன்விக்கு தங்கள் அன்பையும் முத்தத்தையும் வழங்கத் துடிக்கும் ஒவ்வொன்றும் ஒட்டுமொத்தமாக ரோஜாச் செடியாக மாறி அவளது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்கின்றன. இந்தக் கதையின் வாயிலாக எழுத்தாளர் இயற்கையின் ஒவ்வொரு உயிரையும் நேசிப்பதன் அவசியத்தையும் அப்படி காணும் உயிர்களிடத்தில் கருணையையும் அன்பையும் விதைக்கும் மனதிற்கு இந்த உலகமே அன்பால் கட்டுண்டு விடும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறார்.
'தலைவர் ஜெய் செய்தது சரியா' கதை ஒரு சங்கிலித் தொடர் போன்ற நீட்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது. அம்மாவிற்கு தலை வலிக்கிறது மகன் ஜெயிடம் டீ வாங்கி வர கடைக்கு அனுப்புகிறார் டீ கடைக்கு செல்லும் ஜெய் அங்கிருந்து மளிகை கடை செல்கிறார் மளிகை கடைக்கு செல்லும் ஜெய் அங்கிருந்து பேக்கரிக்கு பயணமாகிறார். பேக்கரியில் இருந்து மருந்து கடை மருந்து கடையிலிருந்து உணவகம் என இந்த கதை ஒன்றிலிருந்து மற்றொன்று என நீட்சியாக இணைந்து மீண்டும் எதிர் சுழற்சியில் வீடு அடைகிறார் ஜெய். இந்தக் கதை எழுதப்பட்டிருக்கும் விதமும் இதை நமக்கு வர்ணிக்கும் செம்பூனை வழியாக கூறப்பட்டிருக்கும் செய்திகளும் அன்பை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு உலகத்தை வழிநடத்த அழைப்பு விடுக்கிறது.
இறகுத்தேள் என்ற கதையின் வழியே தனது தங்கைக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு மருந்து வாங்க கடைக்குச் செல்லும் ஜெய் கடுமையான மழையில் தனது ஆசிரியரின் வீட்டை கடந்து செல்லும்போது ஒரு புதிய உயிரினத்தை பார்க்கிறான். அந்த ஆசிரியரைக் கண்டாலே பயந்து நடுங்கும் மாணவர்களுக்கு மத்தியில் துணிச்சலாக அவரது வீட்டைத் தட்டி அவரிடம் அந்த உயிரினத்தைப் பற்றிக் கூறிவிட்டு தனது வீட்டிற்குச் செல்கிறான் ஜெய். தனது தங்கைக்கு உடல் நலம் சரியில்லாத போதும் தனது ஆசிரியருக்கு ஏதேனும் ஒன்று நேர்ந்து விடக்கூடாது என்ற பொது நலத்தை அடாது மழையிலும் பின்பற்றிய ஜெய்க்கு உலக அளவில் பாராட்டி கிடைக்கிறது. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கீதையின் தத்துவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த கதை அவரவர் பணியை சிறப்புற செய்வதை மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறது. அதேபோல எத்தகு சூழலிலும் அச்சமும் பயமும் கொண்டு மனதை அடக்கி வைக்காமல் தைரியத்தையும் துணிச்சலையும் கைக்கொண்டு பிறரையும் தன் போல எண்ணும் நேசத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பண்பையும் கூறி விடுகிறது இந்தக் கதை.
நூலின் சிறந்த கதையாக எழுதப்பட்டிருக்கிறது வலியினால் அல்ல என்ற கதை. இந்த கதை தன்விக்கு அவளது முன்னாள் தோழி ஏற்படுத்தும் அடுக்கடுக்கான துன்பங்களை எத்தகு சூழலிலும் அவளை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் பொறுத்துக் கொள்கிறாள். என்றாவது ஒரு நாள் தனது தோழி மனம் மாறுவாள் என்ற அடிப்படையில் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப அவளுக்கு ஒருமுறை ஏற்பட்ட காயத்திற்கு சிறந்த மருத்துவத்தை ஏற்பாடு செய்கிறாள். தன்வி தன் தோழி கோபிகாவின் மனநிலையைப் புரிந்து கொண்டு நிதானமாக எதிர்வினையாற்றும் தன்மை நம்மை எல்லாம் வியப்பில் ஆழ்த்துகிறாள். இயற்கையாகவும் நொடியில் ஏற்படும் மனமாற்றமோ பிறர் மீது ஏற்படும் பொறாமை குணத்தை அதிகப்படுத்தி விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை நல்வழிக்கு கொண்டு வருதல் அன்பு உள்ளம் கொண்ட மனிதர்களுக்கு சாத்தியமாகும் என்பதற்கு இந்த கதையின் வழியே தன்வி உதாரணமாகிறாள்.
தன்வி என்று சிறுமியின் வழியாக இதில் உள்ள 10 கதைகளையும் சிறந்த சிறார் நூலாக எழுதி இருக்கும் எழுத்தாளரின் மனதிற்குள் எழுந்து நிற்பது உலகத்தின் மீதான பேரன்பு என்பதை நூல் விவரித்து விடுகிறது.
தன்வியின் பிறந்தநாள், சிறார் கதைகள், யூமா வாசுகி
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் | விலை ரூபாய் 130
- இளையவன் சிவா