கிராமியக் கலைஞர்களின் இன்றைய கலை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் ஒப்பனை, கருவிகள், இசைக்கருவிகள், நிகழ்த்தும் முறை, பாடல்களின் இசை வடிவம், மூலப்பனுவல், என்பனவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வாளர்கள் அங்கங்கே பதிவு செய்திருக்கிறார்கள் என்றாலும் தமிழகத்தின் கிராமிய கலை வடிவங்கள் எல்லாவற்றிலும் நிகழ்ந்த வடிவ மாற்றங்கள் கருவிகளின் மாற்றங்கள் என எல்லாம் பதிவு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

இன்றைய நிலையில் 80 வயது கலைஞர்களில் சிலரைச் சந்தித்தபோது "என் தாத்தா இந்த இசைக்கருவியைப் பயன்படுத்தியதாகச் சொல்லி இருக்கிறார்கள். சில இசைக்கருவிகளை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். எங்கள் ஜாதிக்காரங்க சலங்கை கட்டி ஆடக்கூடாது. கோவிலில் நடனமாடும் தேவதாசிகள் மட்டும்தான் சலங்கை கட்டி ஆடலாம். அதனால் எங்கள் முன்னோர்கள் வாகை மரத்தின் நெத்தை கயிற்றில் கோர்த்து கட்டிக்கொண்டு ஆடினார்கள்; நான் அப்படி ஆடவில்லை. ஆனால் தாத்தா சொல்லிக் கேட்டிருக்கிறேன்" என்று சொன்னார்கள்.

இன்றைய வயதான கலைஞர்களிடமிருந்து அவர்களின் நேரடி அனுபவத்தைப் பதிவு செய்கின்றபோது பலர் தன் சமகால விஷயங்களையே சொல்லிக்கொண்டு போவதைக் கவனித்திருக்கிறேன். நாமாக உங்கள் தாத்தா காலத்தில் எப்படி நடந்தது என்று கேட்டால் பழைய நினைவைப் பகிர்ந்து கொள்வார்கள். பெரும்பாலும் அது தாத்தா சொல்லி கேட்டதாக இருக்கும். சிலர் வாய்வழி கேட்ட விஷயங்களை தன் சமகாலத்தில் நடந்தது மாதிரி சொல்லவும் கேட்டிருக்கிறேன். கள ஆய்வு செய்கின்ற ஆய்வாளனுக்கு இது ஒரு பிரச்சனை.folk artistsமராட்டிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டதோல்பாவைக் கூத்து கலைஞர்களில் ஒருவர் 500 - 600 வருஷம் முன்பே நாங்கள் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டோம் ; நாங்கள் 17ஆம் தலைமுறை. எங்கள் பகுதியில் இருந்து இந்தக் கலையைக் கொண்டு வந்தோம் என்று சொன்னார். தமிழகத்தில் மராட்டிய ஆட்சி 1659 - 1855 ஆண்டுகளில் இருந்தது என்பது வரலாறு. சில தகவலாளிகளின் பேச்சு வரலாற்றுக்கு முரணாக இருந்ததைக் கவனித்திருக்கிறேன்.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களில் எதார்த்தமாக இயல்பாக பேசுகின்றவர்களில் சுப்பையா ராவ், பரமசிவராவ், கணபதிராவ் போன்றோர் முக்கியமானவர்கள் என்று நினைக்கிறேன். இவர்களிடம் நான் சேகரித்த பல விஷயங்களைப் பின்னர் ஒப்பிட்டுப் பார்த்து உண்மை என்பதை ஊகித்து இருக்கிறேன்.

எழுபதுகளின் இறுதியில் தோல்பாவைக் கூத்து பார்ப்பதற்கு அஞ்சுகிராமம் என்ற கிராமத்திற்குச் சென்றபோது சுப்பையா ராவிடம் பேச (1908-1999) முடிந்தது அப்போது அவர் 75 வயதைத் தாண்டி விட்டார். அவரது தந்தை கோபால ராவ் (1882- 1976) தாத்தா கிருஷ்ணராவ் (1860- 1940) ஆகியோர் சொன்ன விஷயங்களை விரிவாகவே சொன்னார்

அன்று நான் பார்த்த நல்லதங்காள் கூத்தை சுப்பையாவின் தம்பி பரமசிவராவ் நடத்தினார். சுப்பையா ராவ் பின்பாட்டு பாடினார். நிகழ்ச்சி முடிந்த பின் இரவு 10 மணிக்கு மேல் சாலையோர கடையில் ஒன்றாக சென்று டிபன் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அந்த மாதிரி சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. நான் அதற்காக காத்திருந்து செய்திகளைச் சேகரித்து இருக்கிறேன்.

சுப்பையாராவ் பழைய விஷயங்களை ரசபாவத்துடன் சொல்லுவார். அன்று அவரது தாத்தா கிருஷ்ணராவ் சொன்ன விஷயங்களைச் சொன்னார். எனக்கு முக்கியமாக தோலில் படங்களை வரையும் முறை பற்றி அறிய வேண்டும் என்று தோன்றியது. அதைப் பற்றியே கேட்டேன்.

தோல்பாவைக்கூத்து கலை பற்றியும் கலைஞர் பற்றியும் செய்தி சேகரிக்கின்றவர்கள் மின்சாரம் வருவதற்கு முந்திய காலம் வந்த பின்பு உள்ள காலம் என்னும் காலகட்டத்தின் அடிப்படையில் செய்தி சேகரித்தால் பகுத்து ஆய்வதற்கு வசதியாக இருக்கும். ஏற்கனவே இது பற்றி மு.ராமசாமி என்னிடம் சொன்னதன் அடிப்படையில் கேள்விப்பட்டியலைத் தயார் செய்திருந்தேன்.

தோல் பாவைகளைச் செய்வதில் ஆட்டுத்தோலை வாங்கியதும் உடனே பதப்படுத்துவது தோலில் படம் வரைந்து நிறம் கொடுப்பது என்னும் இரண்டு நிலைகளில் பகுத்துக் கொண்டு செய்திகள் சேகரிக்கலாம். இதுவும் கூட இரண்டு காலகட்டங்களில் மாற்றம் அடைந்திருக்கிறது

தோலில் படம் வரைந்து சாயம் பூசுவதற்கு கோழிச் சாயம் எனப்படும் (இது ஓலைச்சாயம் எனவும் படும்) ஒரு வகை சாயத்தை இப்போது பயன்படுத்துகிறார்கள். இந்தச் சாயப்பொடியில் தண்ணீர் கலந்து வரைவது என்னும் வழக்கம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்துவிட்டது என்பதை சுப்பையாராவின் பேட்டியின் வழி ஊகித்துக் கொண்டேன். அதற்கு முன்பு தோலில் நிறம் கொடுக்கும் முறை பற்றி சுப்பையா ராவ் அவரது அண்ணன் கணபதி ராவ் ஆகியோர் அவர்களின் தாத்தா வழிகேட்ட செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

முந்திய காலங்களில் தோல்பாவைக் கூத்துக்கு உரிய ஆட்டுத்தோல் இலவசமாக கிடைத்தது. அப்போது அதைப் பயன்படுத்தியதற்கு ஒரு முறை இருந்தது. தோலை சாதாரண நீரிலோ சுண்ணாம்பு கலந்த நீரிலோ இரண்டு நாட்கள் ஊற வைத்த பின்பு தோலின் மேல் உள்ள ரோமத்தை எளிதாக அகற்றுவார்கள். பின்னர் தோலை வெயிலில் காய வைப்பர். அதற்கும் கூட ஒரு முறை உண்டு.

தோலை இழுத்துக் கட்டி ஆணி அடித்து டெம்பராக ஆகும்படி செய்து காய வைப்பர். அது தகடு போல் ஆகிவிடும். அதன் பிறகு தேவையான படத்தைக் கரித்துண்டால் வரைபடம் போல் வரைவர். சாயம் கொடுத்த பின்பு பட வடிவத்தை உளியால் வெட்டிக் கொள்ளுவர்.

இன்றைய நிலையில் ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட ஆயத்தமான தோலை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். பெரும்பாலும் இசைக்கருவிகள் விற்கும் கடைகளில் பதப்படுத்தப்பட்ட தோல் கிடைக்கின்றது.

தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களிடம் நிறம் கொடுப்பதில் ஒரு வரன்முறை இல்லை. நிறம் அடர்த்தியாக இருக்க வேண்டும். பாவையைத் திரையில் காட்டும் போது ஒளி ஊடுருவ வேண்டும். இந்த எண்ணத்துடனேயே நிறம் கொடுக்கின்றனர். கருப்பு, நீலம், சிவப்பு, பச்சை போன்றவை அடிப்படை நிறங்கள்.

தமிழகப் பாவைகளின் நிறங்களின் அடிப்படையில் அவை நல்ல பாத்திரங்களா, கெட்ட பாத்திரங்களா என்று பகுக்க முடியவில்லை. வண்ணங்களைக் குறித்த கலைஞர்களின் சிந்தனை சாதாரணமாக உள்ளது. பொதுவாக ராமன், நீலம், பச்சை ஆகிய நிறங்களிலும் பரதன் பச்சை நிறத்திலும் சீதை, இலக்குவன், தசரதன், ராவணன் ஆகியோர் சிவப்பு நிறங்களிலும் இருப்பதை விரும்புகின்றனர்

தமிழகக் கலைஞர்கள் பாவைகளின் நிறங்களை விட ஆபரணத் துளைகள் போடுவதில் கவனம் செலுத்துகின்றனர். தோலில் துளை போடுவதற்கென சிறிய பல்வேறு உளிகளை வைத்திருக்கிறனர். ஆபரணத் துவாரங்கள் வழி ஒளி ஊடுருவதால் படங்களின் தரம் கூடும் என்றும் இந்தப் பாவைகளைப் பார்வையாளர்கள் விரும்புகின்றனர் என்றும் கூறுகின்றனர். பாவைகள் அடர்த்தியில்லாமல் இருந்தால் பார்வையாளர்கள் குறை கூறுகின்றனர். இதனால் பாவைகளுக்கு அடிக்கடி நிறம் கொடுக்கின்றனர்

கறுப்பு நிறப் பொடி தயாரிப்பதற்கென்று ஒருமுறை உண்டு. தூய்மையான வெள்ளைத் துணியில் ஆமணக்கு எண்ணெய் தோய்த்து திரியாகச் சுற்றி அகல்விளக்கில் வைத்து ஆமணக்கு எண்ணெய் விட்டு எரிப்பர். விளக்கு நன்றாக எரியும் போது அகன்ற வாயுள்ள மண்சட்டியின் மூடியை விளக்கில் காட்டுவர். கொஞ்ச நேரம் ஆனதும் மண் சட்டியின் உள் பகுதியில் படிந்திருக்கும் கரியைப் பனை ஓலையால் சுரண்டிச் சேகரிப்பர். இந்தப் பொடியை வேப்பம் பசையுடன் கலந்து கொஞ்சம் நீர் விட்டு குழைத்துப் பயன்படுத்துவர்.

சிவப்பு நிறச் சாயத்தை சப்பாத்திக்கள்ளியின் பழத்திலிருந்து எடுப்பர். நன்றாகப் பழுத்த சப்பாத்திக் கள்ளிப் பழத்தில் சிறு ஊசியால் குத்தினால் சிவப்பு திரவம் வழியும். இதை கொட்டாங்கச்சி மூடியில் சேகரித்துக்கொள்ளுவர். இதைத் தண்ணீர் சேர்க்காமல் பயன்படுத்துவர். கள்ளிப் பழச்சாறு வயலட் நிறத்தில் இருக்கும். இதில் வேப்பம் பசையைக் கொஞ்சமாகக் கலந்தால் வயலட் தன்மை மாறிச் சிவப்பாகும்.

மஞ்சள் நிறத்துக்கு கஸ்தூரி மஞ்சளைப் பொடித்துப் பயன்படுத்துவது தோல்பாவைக் கூத்துப் படங்களுக்கு மட்டுமல்ல களமழுத்தும் பாட்டுக் கலையைப் போன்ற வேறு நாட்டார் கலைகளுக்கும் பொதுவானது. தோல்பாவை, கூத்துக் கலைஞர்கள் மஞ்சள் பொடியில் வேப்பம் பசையைக் கலந்து தண்ணீரையும் சேர்த்து குழைத்து பயன்படுத்துகின்றனர்.

மஞ்சள் நிறம் சில தோல்களில் ஒட்டாமல் இருப்பதுண்டு. அதனால் பூவரசு மரத்தின் மொட்டின் முனையை அறுத்துவிட்டு தண்ணீரில் தோய்த்து தோலில் வண்ணம் கொடுப்பர். மஞ்சள் பொடியை விட பூவரசம் மொட்டு இயல்பாக அடர்த்தியாக இருக்கும். அது எளிமையாக கிடைப்பதும் கூட.

நீல நிறத்திற்கு அவரிச்செடியின் இலையைப் பயன்படுத்தினர். சுப்பையா ராவ் அவுரியைப் பயன்படுத்தும் முறை பற்றி மேலோட்டமாகச் சொன்னார். கிழக்கு இந்திய கம்பெனி நூற்பு ஆலைகளுக்குத் துணியில் நீல நிற சாயத்திற்கு அவுரியை பயன்படுத்திய கதை நீண்ட வரலாறு. அவுரி பயிரிட்டதால் பஞ்சம் வந்தது என்பது வரலாறு இந்த அவுரி இலையை எப்படி பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.

பூலாத்தி மரத்தின் பழத்தை நீல வண்ணத்திற்கும் பயன்படுத்துவது உண்டு. 10 முதல் 20 பழங்களை வெள்ளைத் துணியில் வைத்து இறுக்கிக் கட்டி கையால் பிழிந்தால் நீல நிறச் சாறு வழியும். அதை சேகரித்து வேப்பம் பசை சேர்த்து பயன்படுத்தினர்.

வாராய்ச்சி மரத்தின் இலையை இடித்து கசக்கி பிழிந்து சாற்றை எடுத்து வேப்பம் பசையுடன் சேர்த்து பச்சை நிறத்தை தயார் செய்தனர். அதில் கருப்புப் பொடியைக் கொஞ்சமாக சேர்த்தால் கரும் பச்சையாகும். மஞ்சள் பொடியை மிகக் குறைவாக சேர்த்தால் இளம் பச்சையாகும்

வெள்ளை நிறத்துக்குத் தனியாக தயாரிப்பு கிடையாது. தோல் நிறத்தை இயல்பாக விட்டுவிடுவர்.

எண்பதுகளின் பாதியில் தோல்பாவைக் கூத்து பற்றி விரிவான அறிக்கை தயாரிக்க பல்கலைக்கழகம் மானியம் கிடைத்தபோது பரமசிவராவை சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். முக்கியமாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாவைக்கூத்து எப்படி நடந்ததோ அதை மறுபடியும் நடத்த விரும்பினேன். அதற்காக நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் நிர்வாகிகளிடம் உதவி கேட்டேன். கோவில் வளாகத்தில் உள்ளே நிகழ்ச்சி நடத்த அனுமதித்தார்கள்

பாவைகளுக்கு உரிய தோலை இயல்பான நிலையில் பதப்படுத்த வேண்டும் என்று பரமசிவராவிடம் கேட்டுக் கொண்டேன். ஆயுத்த நிலையில் உள்ள தோலைத் தவிர்க்கச் சொன்னேன். அப்போது வள்ளியூர் அருகே உள்ள ஒற்றைப்பனை சுடலை மாடன் கோவில் விழாவில் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலி கொடுத்தார்கள். கோவில் சாமியாடியின் மகள் என் மாணவி. அவளது சிபாரிசு பேரில் பத்துக்கு மேற்பட்ட ஆட்டுத் தோல்களைப் பரமசிவராவிற்கு இலவசமாய் பெற்றுக் கொடுத்தேன். சுப்பையாராவின் உதவியுடன் தோலைப் பதப்படுத்திய போது கூடவே இருந்தேன்.

தோலில் வண்ணம் தீட்டுவதற்குரிய பொருட்களைச் சேகரிப்பது சிரமமாக இருந்தது. குறிப்பாக சப்பாத்திக் கள்ளியில் உள்ள பழத்தை எடுப்பது ஒரு சவால். அந்தக் கள்ளிப் புதரில் பாம்புகள் நிறையத் தங்கும். அதனால் அதற்குப் பாம்புக் கள்ளி என்ற பெயர் உண்டு. பழத்தைப் பறிக்க பரமசிவராவின் மகன் தயங்கினான். நான் பாம்பு பிடிக்கும் புல்லுக்கட்டி நாயக்கர் ஒருவருக்குப் பணம் கொடுத்து சப்பாத்திப் பழங்களைப் பறிக்கச் செய்தேன்

பத்து தோல்களில் 18க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை வரைந்தார்கள். நடத்துவதிலும் பழைய முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னேன். கூத்து அரங்கிற்குள் புன்னைக்காய் எண்ணெய் விளக்கை பயன்படுத்தினோம். அந்த விளக்கு கூட சுப்பையா ராவ் 50 களில் பயன்படுத்திய விளக்கின் மாதிரி அது. விளக்கு பிரகாசமாக இருந்தது

பரமசிவராவ் மைக் கூட வேண்டாம் என்று தவிர்த்து விட்டார். குறைவான பார்வையாளர்கள் அன்று இருந்தனர். நிகழ்ச்சி கச்சிதமாக முடிந்து விட்டது. மின்விளக்கிலேயே பழகிய பார்வையாளர்களுக்கு புன்னகாய் எண்ணெய் விளக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஒருவிதத்தில் சொல்லப்போனால் பாவைகளில் ஒளி ஊடுருவதற்கு பாவை அசைவிற்கு எண்ணெய் விளக்கு நன்றாக இருந்தது. பார்வையாளர்களிடம் இது பற்றி நான் கேட்டபோது அவர்கள் பாவைகளைப் பார்ப்பதில் சிரமம் இருக்கவில்லை என்றார்கள். பழக்க தோஷமும் மனநிலையும்தான் ரசனை மாற்றத்திற்கு காரணமா?

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It