இருபதாம் நூற்றாண்டின் வாசல் கதவுகள் திறந்த போது பாட்டாளி மக்களின் கால்கள் ஜார் மன்னர்களின் மகுடங்களைப் பந்தாடின.

மாமேதை இலியாவிச் லெனின் தலைமையில் சுரண்டலை ஒழித்த மகத்தான எழுச்சியே நவம்பர் புரட்சி.

வரலாற்றில் கடந்த காலங்களில் நடந்த புரட்சிகளெல்லாம் வெற்றியைத் தந்திருந்தாலும் அவைகளெல்லாம் சுரண்டலை ஒழிக்கவில்லை. ரோம சாம்ராஜ்யத்தைக் கதறடித்த ஸ்பாட்டகஸ் புரட்சிகளில் இருந்து நமது தமிழக நிலப்பிரபுத் துவத்தை எதிர்த்த நந்தன் வரையிலும் நிறையப் புரட்சிகள் தேசங்களில் நடந்துள்ளன.

இதன் மூலம் அடிமைச் சமூகங்கள் அழிந்து நிலப்பிரபுத்துவ சுரண்டல் சமூகங்கள் தோன்றின.

1789-இல் நிலப்பிரபுத்துவ மன்னராட்சிக்கு எதிராக முதலாளிகள் தலைமையில் மகத்தான பிரெஞ்சுப் புரட்சி நடந்தது.

லூயி மன்னனின் ஆட்சி தூக்கி எறியப்பட்டு முதலாளித்துவம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் இதுவும் ஈவு இரக்கமற்ற முறையில் மக்களைச் சுரண்டி ஆட்சியாளர்கள் கொழுத்தனர்.

சரித்திரத்தில் ரஷ்யப் புரட்சிதான் சுரண்டலை அடியோடு ஒழித்தது. அதற்கு ரஷ்யத் தொழிலாளி வர்க்கமும் கம்யூனிஸ்டு கட்சியும் தலைமை தாங்கின.

1848-இல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிட்டார். 1871-இல் பிரான்சின் பாரிஸ்மா நகரில் தொழிலாளி வர்க்கம் முதல் புரட்சியை எழுச்சியுடன் தோற்றுவித்தது. இப் புரட்சி மிகுந்த வேகத்துடன் செயல்பட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இதைத்தான் வரலாறு பாரிஸ் கம்யூன் புரட்சி என வர்ணிக்கிறது. ஆனால் கிராமங்களில் வாழ்ந்த நிலப்பிரபுத்துவ சக்திகளின் மிச்ச மீதங்களும் பழைய மன்னராட்சியின் எஞ்சிய விசுவாசிகளும், ‘கிறித்தவ சர்ச்’சுகளும் கிராமப்புற விவசாயிகளின் கம்யூன் புரட்சிக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

நகரங்களில் தொழிலாளிகள் வசதி படைத்தவர்களின் திரண்ட சொத்துக்களைக் கொள்ளையடிக் கின்றனர். அவர்கள் கிராமங்களுக்கும் வருவார்கள் எனப் பிரச்சாரம் செய்து எதிர்ப்புரட்சியைத் தூண்டி விட்டனர்.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாரிஸ் நகரை நோக்கி ஆயுதங்களுடன் பயணித்தனர். 30000 தொழிலாளிகளைக் கொலை செய்து கம்யூன் ஆட்சியை வீழ்த்தி முதலாளிகளிடம் ஆட்சியை ஒப்படைத்தனர். ஆனால் எதிர்ப்புரட்சியாளர்கள் நினைத்ததுபோல இந்த ஆட்சி நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 73 நாட்கள் மட்டுமே நீடித்தது.

இந்த பாரிஸ் கம்யூன் நிகழ்வுகளையெல்லாம் லெனின் விரிவாக ஆய்வு செய்தார். தொழிலாளி, விவசாயி ஐக்கியம் உருவாகாமல் புரட்சி ஒரு போதும் வெற்றி பெறாது என்று அறிந்தார். இதனால் புதிய ஒரு பாதையில் புரட்சியை உருவாக்க நினைத்தார்.

1903இல் லெனின் வகுத்த புரட்சிப் பாதையில் பிரகனோவ் போன்றவர்கள் மிதவாதிகளாக இருந்தனர். ஆனால் ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி தோழர் லெனின் தலைமையில் நம்பிக்கை வைத்து பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டனர். சிறு பான்மையினரான மிதவாதிகளின் கருத்துக்களை லெனின் நிராகரித்தார். இதன் பிறகு பெரும் பான்மையினர் “போல்ஷ்விக்குகள்” என்றும் சிறுபான்மையினர் “மென்ஸ்விக்குகள்” என்றும் மக்களால் அழைக்கப்பட்டனர்.

இதன் பிறகு ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் “போல்ஷ்விக்குகள்” என்றே அழைக்கப் பட்டனர். ரஷ்யாவின் ஆட்சியாளர்களாக அன்று ஆண்டு வந்த ஜார் மன்னர்கள் மத்திய ஆசியப் பகுதி முழுவதையும் ஆட்சி செய்தனர். மன்னரான ஜாருக்கு மட்டுமே இரண்டு கோடி ஏக்கர் நிலங்கள் சொந்தமாக இருந்தன. குலாக்குகள் என்று அழைக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் 28000 பேர்களும் 1674 கோடி ஏக்கர் நிலங்களைக் கொண்டு நிலவுடைமையாளர்களாக இருந்தனர்.

ஜார் மன்னர்கள் பரம்பரையில் வந்த ஜார் பீட்டர் சக்கரவர்த்திதான் ரஷ்யாவைத் தொழில் மயமாக்கினார். முதலாளித்துவம் வளர்ச்சியடைந் தாலும் தொழில்துறையில் ரஷ்யா ஐரோப்பிய நாடுகளைவிட பின் தங்கியே இருந்துவந்தது.

தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கினர். தொழிற் சங்கம், விவசாய சங்கம், வாலிபர், மாணவர், பெண்களுக்கென்று தனித்தனி அமைப்புக்கள் உருவாயின. இத்துடன் முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து வர்க்கப் போராட்ட உணர்வுகள் தீவிரமாகச் செயல்பட்டன.

இதன் பின்னணியில் 1914-இல் முதல் உலக யுத்தம் தொடங்கியது. உலக நாடுகளின் மீது தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்க எண்ணிய ஏகாதிபத்தியங்கள் இப்போரைத் தொடங்கின.

ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் உலக நாடுகளைப் பங்குபோட போரில் இறங்கின. ஆனால் ரஷ்யா தனது பல பகுதிகளை ஜெர்மனியிடம் இழந்தது.

தோல்வியுற்ற ரஷ்யப் படைகள் சோர்வில் இருந்தன. 1917-இல் பிப்ரவரியில் ரஷ்யாவில் புரட்சி நடந்தது. இதில் முதலாளிகள் தூமா என்ற நாடாளுமன்றத்தை அமைத்து இரண்ஸ்கி தலை மையில் ஆட்சி செய்தனர். ஆனால் இதுவும் நெடு நாட்கள் நிலைக்கவில்லை. காலத்தின் கோலம் ரஷ்யாவில் அமைக்கப்பட்ட இரண்ஸ்கி ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யப் புரட்சியை உருவாக்கியது. இவை களையெல்லாம் தோழர் லெனின் தீவிரமாக ஆராய்ந்தார். இவைகளையெல்லாம் ஆய்வு செய்தபின் தனது புகழ்மிக்க ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார்.

இது புரட்சியின் பாதையை தெளிவாகக் காட்டியது. தொழிலாளி வர்க்கம் செஞ்சேனையை உருவாக்கியது. ஜார் ராணுவத்திலிருந்து திரும்பிய ஒரு லட்சம் வீரர்கள் தங்கள் ஆயுதங்களுடன் செஞ்சேனையில் இணைந்தனர். ஜார் ராணுவத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் கிராமப்புற விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் புரட்சி நடந்த நாடுகளிலெல்லாம் மக்கள் போரை, பேரெழுச்சியைக் கொள்ளும் போது ஆட்சியாளர்களின் நிரந்தர ராணுவத்தில் இருந்து ஒரு பகுதியினர் புரட்சிக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினர். இம்மாதிரி ராணுவத்தினரும் மக்கள் புரட்சிகளில் பங்கேற்ற நிகழ்வுகளை சீனா, வியத்நாம் கொரியப்புரட்சிகளிலும் காணலாம். இப்படி வந்த ராணுவத்தினர் எல்லோரும் கிராமப் புற விவசாயிகள் வீட்டுப் பிள்ளைகள் என்பது தான் மிக முக்கியமானது. அன்றைய நாட்களில் ராணுவத்தில் கிராமப்புற விவசாயிகளின் பிள்ளைகள் தான் அதிகம் சேர்ந்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி கிராமப்புற விவசாயிகளைக் கட்டமைத்ததின் நோக்கமே எதிர்காலத்தில் புரட்சி ஏற்படும்போது இவர்களின் பிள்ளைகள் ராணுவ வீரர்களாக இருந்தால் ஆதரவு தருவார்கள் என்பது தான்.

நவம்பரில் சோவியத் ஆட்சி அமைந்தது. தோழர் லெனின் இதன் தலைவரானார். மகத்தான உலகைக் குலுக்கிய இந்தப் புரட்சியைப்பற்றி புரட்சி நடந்த காலத்தில் ரஷ்யாவில் இருந்த அமெரிக்கப் பத்திரிகையாளர் திரு ஜான்ரீட் என்பவர் எழுதிய “உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்ற நூலிலும், எழுத்தாளர் திரு. ரைஸ் வில்லியம்ஸ் எழுதிய நேரில் கண்ட ரஷ்யப்புரட்சி என்ற நூலிலும் விரிவான செய்திகள் காணப்படுகின்றன.

இதேபோல ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றியதை தத்ரூபமாக அக்டோபர் லிபரேஷன், முதலாம் உலகப்போர் ஆகிய இரண்டு திரைப் படங்களிலும் நாம் காணலாம்.

புரட்சியை வீழ்த்துவதற்கு ரஷ்யா மீது பதினாறு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் படைகளை அனுப்பின. ஜார் மன்னனுக்கு விசுவாசமான படைகள் வெண்படைகள் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன. கிராமப்புற நிலப் பிரபுக்களின் துலாக்குகள், இவை போக கொள்ளைக் கும்பல்கள் வேறு இவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரையும் எதிர்த்து ரஷ்யப் போல்ஷ்விக்குகள் நான்கு ஆண்டுகள் யுத்தம் நடத்தி வந்தனர். 1917-இல் தொடங்கிய இப்போர் 1922-இல் முழுமையடைந்தது.

ஜாரும் அவனுடைய குடும்பத்தாரும் யூரல் மலைப்பகுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். லெனின் இவர்களை எந்த விதத்திலும் கொல்லக் கூடாது என்று கூறியிருந்தார். ஆனால் செக் கோஸ்லோவேகியப் படைகள் யூரல் மலைப் பகுதிகளை நோக்கிப் படையெடுத்து வந்தனர்.

அப்போது சோவியத்துகளின் மனதில் புதிய எண்ணம் தோன்றியது. செக் படைகள் வெற்றி பெற்றால் ஜார் மன்னரை விடுதலை செய்யக்கூடிய அபாயம், அப்படி ஜார் விடுதலையானால் எதிர்ப் புரட்சியாளர்களுடன் சேர்ந்து செயல்படும் நிலைமை ஏற்படும் என எண்ணினர். எனவே லெனின் அனுமதியில்லாமலேயே ஜார் மன்னரையும் அவர்தம் குடும்பத்தினரையும் வாளால் வெட்டி சிரச்சேதம் செய்தனர்.

இது லெனினுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. எதிர்ப்புரட்சியாளர்கள் ஒரு லட்சம் படைகளுடன் கர்ணிலோவ் என்பவன் தலைமையில் மாஸ்கோவை நோக்கி வந்தான். ஆனால் பெரும் பகுதி படை வீரர்கள் போல்ஷ்விக்குகளுடன் கைகோத்துச் செயல்பட்டதால் கர்ணிலோவால் மேலும் தொடரமுடியவில்லை.

புரட்சியின் விளைவுகள் பல வரலாற்று நிகழ்வுகளை ஏற்படுத்தின. ஆலைகள் அனைத்தும் அரசின் கீழும் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் கீழும் வந்தன. இவைகளின் நிர்வாகப் பொறுப்புக்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் வந்தன.

கிராமங்களில் துலாக்குகளின் நிலங்களை விவசாயிகள் தாங்களாகவே பிரித்துக்கொண்டனர். புரட்சியில் பங்கேற்ற ராணுவத்தினருக்கும் நிலங்கள் பங்கிட்டு வழங்கப்பட்டன.

ஆனால் 1923-இல் ரஷ்ய மக்களின் மனதை வருத்தும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ஜெர்மன் வம்சாவளிப் பெண்ணான அலெக்சாண்ட்ரோவ்னா என்பவள் லெனினைத் துப்பாக்கியால் சுட்டாள். இது லெனினின் உடல் நிலையில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது. 1924-இல் லெனினின் மரணகாலம் வரையிலும் அது வேதனைப்படுத்தியது. 1924-இல் லெனின் மரணமடைந்தார்.

1924ஆம் ஆண்டில் தோழர் ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். தோழர் லெனின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் உள் நாட்டில் எதிர்ப்புரட்சியாளர்கள் ட்ராய்ஸ்கியிக்குகள், மென்ஸ்விக்குகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

புரட்சி அரசைக் காப்பாற்ற ஸ்டாலின் அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளைக் கடைப் பிடித்தார். பலர் கொல்லப்பட்டனர். துரோகி களோடு சந்தேகப்பட்ட பலரும் சுட்டுக்கொல்லப் பட்டனர். ரகசியப் போலிசாரின் இந்த நடவடிக்கை களைத் தவறானது எனப் பலரும் கருதினர். இதனால் ஸ்டாலின் மீது பழி விழுந்தது.

ரஷ்யப் புரட்சியின் தாக்கம் உலகில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜார் ஆட்சியில் அடிமைகளாக நடத்தப்பட்ட 14 தேசிய இனங்கள் குடியரசுகளாக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தோடு இணைக்கப்பட்டன. இதுவே யூனியன் ஆப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் என்று அழைக்கப்பட்டது. சோவியத்தில் இருந்த கம்யூனிஸ்டுகளுக்கு தாங்களே பெரியவர்கள், ஆளப்பிறந்தவர்கள் என்ற எண்ணம் மனதில் இருந்தது.

இப்புரட்சிக்குப்பின் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்த இந்தியா போன்ற நாடுகளில் விடுதலை உணர்வுகள் அதிகம் பிறந்தன.

1918இல் இந்திய விடுதலைப் போராளிகள் ரஷ்யா சென்று வந்தனர். இதன் விளைவாக 1918-இல் இந்தியாவிலும் தொழிற்சங்கங்கள் உருவெடுத்தன. எட்டு மணி நேரவேலை, உரிமைகள், சலுகைகளைப் போராடிப் பெறும் உணர்வுகள் அதிகரித்தன.

இதைத்தொடர்ந்து 1919, 1920, 21, 22 ஆகிய ஆண்டுகளில் பிரம்மாண்டமான போராட்டங்கள் நடத்தப்பட்டன. மீரட் சதி வழக்கு போன்ற வழக்குகள் போராடிய தோழர்கள் மீது சுமத்தப்பட்டன.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் ரஷ்யப்புரட்சியின் தாக்கம் ஊடுருவியது. பாலகங்காதர திலகர், விபின்சந்திரர், லாலா லஜபதிராய், சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்கள் ரஷ்யப் புரட்சியின் வெளிச்சத்தில் இந்திய மண்ணில் கோஷங்களை முழங்கினர்.

ரஷ்யப் புரட்சியைப்பற்றி உலகிலேயே முதல் முதலாக வாழ்த்தி வரவேற்றவர் மகாகவி பாரதியார் தான். தான் நடத்தி வந்த ‘இந்தியா’ பத்திரிகையில் அவர் இவ்வாறு கூறுகிறார்.

“நமது ருசியத் தோழர்களின் உத்தமமான முயற்சிகளுக்கு ஈசன் திருவருள் புரிவானாகுக”

புரட்சி வென்றபின் உலகில் ரஷ்யா தனது புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய போதும் மகாகவி, “ஆஹா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி! மகாகாளி ருசிய நாட்டிடை கடைக்கண் வைத்தாள்” என்று முழங்கி யுகப்புரட்சி என்ற சொல்லை முதன் முதலாகக் கூறினார்.

நஸ்ரூல் இஸ்லாம், ரவீந்திரநாத் தாகூர் போன்ற கவிஞர்களெல்லாம் ரஷ்யப் புரட்சியைப் பற்றி பெருமிதம் பொங்கப் பாராட்டி எழுதினர்.

ஜவஹர்லால் நேருவும், தந்தை பெரியாரும் ரஷ்யா சென்று வந்தபின் சோசலிசத்தின் பெருமை களை வானளாவ எழுதினர். 1930-இல் சிறையி லிருந்தபடி பகத்சிங்கும் அவருடைய தோழர்களும் லெனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினர். இந்தக் கடிதத்தில் தான் கடைசி வரிகளில் பகத்சிங் “உலகத் தொழிலாளிகளே ஒன்றுபடுங்கள்” என்று தொழிலாளி வர்க்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியா மீது ரஷ்யர்களும் ரஷ்யர்கள் மீது இந்தியர்களும் பற்றுடையவர்களாக துவக்கம் முதலே இருந்தனர்.

இந்தியாவின் உற்ற நண்பனாக சோவியத் யூனியன் தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவதில் ரஷ்யா முக்கிய பங்கு வகித்தது. அரசுத் துறைகளில் பொது நிறுவனங்களை உருவாக்குவதிலும் மிகுந்த உதவிகள் செய்தது. பிலாய் உருக்காலை, பக்ராநங்கல் அணைக்கட்டுகள் இதற்கு உதாரணம்.

கிழக்கு பாகிஸ்தானின் யாஹ்யாகான் அண்டை நாடுகளுக்கு குறிப்பாக கிழக்கு வங்காள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தவன். அவனது ஆட்சியில் 1971-இல் பங்களாதேஷ் போர் உருவானது. லட்சக் கணக்கானோர் இந்தியாவிற்கு அகதிகளாக வந்த நிலையில் அப்போதைய இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி இப்போரில் இந்திய ராணுவத்தை ஈடு படுத்தினார். அமெரிக்கா பாகிஸ்தான் ஆட்சி யாளருக்கு ஆதரவான நிலையை முன்னெடுத்து வங்காள விரிகுடா கடலில் தனது 7ஆவது கடற்படைக் கப்பல்களை நிறுத்தி அச்சுறுத்தியது. ஆனால் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக பதினெட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி அமெரிக்கக் கப்பல் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து அமெரிக்கக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தியது.

ரஷ்யா இதன் மூலம் பாரதத்தின் உற்ற நண்பன் என்பதை மீண்டும் நிருபணம் செய்தது.

உலகில் பாசிசத்தை எதிர்த்த போர் என்று வர்ணிக்கப்படும் முதல் உலகப்போர் 1939 முதல் 1945 வரை நிகழ்ந்தது.

ஜெர்மனியின் ஹிட்லர், இத்தாலியின் முசோலினி, ஜப்பானின் டோஜோ ஆகியோர் பாசிசத்தை பிரகடனம் செய்து உலக நாடுகளைக் கைப்பற்ற போரில் இறங்கினர்.

ஹிட்லரின் படைகள் ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றியது. பிரிட்டனும் பிரான்சும் கூடத் திணறிப் போயின. இந்த வேகத்தில் ஹிட்லர் கம்யூனிசத்தை வேரோடு அழிப்பேன் என்று கூறி 16 லட்சம் துருப்புகளுடன் ரஷ்யா மீது படை எடுத்தான்.

ரஷ்யாவைக் கைப்பற்றினால் இந்த உலகத் தையே தனது கைவசம் கொண்டுவருவேன் என்று சோவியத் யூனியனில் காலடி எடுத்துவைத்தான்.

தோழர் ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியன் முழு மூச்சாக ஹிட்லரை எதிர்த்தது. இரண்டு கோடிப்பேர் இப்போரில் மாண்டனர். செஞ்சேனை ஆக்ரோஷத்துடன் ஹிட்லரின் படை களை முறியடித்து கிழக்கு ஐரோப்பா முழுவதையும் மட்டுமல்லாமல் ஜெர்மனியில் பாதியையும் கைப் பற்றியது.

1948 மே முதல் நாள் ஜெர்மன் அரச மாளி கையில் பறந்த ஹிட்லரின் கொடியை இறக்கிய செஞ்சேனை தனது செங்கொடியை ஏற்றியது.

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா முதலிய மூன்று நாடுகளும் இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியனோடு கூட்டணி அமைத்தனர். இதனை இந்த நாடுகள் பாசிசத்திற்கெதிரான போர் என்று வர்ணித்தன.

சோவியத் யூனியனின் எழுச்சியால் அதிர்ச்சி அடைந்த ஹிட்லர் தனது காதலியுடன் தற்கொலை செய்து கொண்டான்.

“பாசிசம் முறியடிக்கப்பட்டது” எனும் பெருமை சோவியத் யூனியனை நேசிப்பவர்களின் மனதில் மகிழ்வைத் தந்தது.

உலகில் மூன்றாம் உலக நாடுகளின் நண்பனாய், துயரத்தில் பங்கு கொள்ளும் தோழனாய் நீண்ட காலம் சோவியத் யூனியன் இருந்துவந்து உலகின் சோஷலிசப் புரட்சி நடைபெற்ற நாடுகளுக்குச் சகல உதவிகளையும் செய்தது.

73 ஆண்டுகள் நிறைவு கொண்டிருந்த சோவியத் யூனியன் 1990 இல் தகர்ந்தது. ஸ்டாலின் மறைவுக்குப் பின் சோவியத் கட்சிக்குள் நுழைந்த திரிபுவாதம் பல தவறுகளைச் செய்தது.

நவீன தொழில்கள், நவீன பொருளாதாரம், புத்துருவாக்கம் செய்யப்படவில்லை. சோசலிச மனிதனை சோசலிச உணர்வோடு வளர்க்காத குறை, கட்சியின் தலைமைக்கும் கட்சி அணி களுக்கும் இடையே ஏற்பட்ட பெரும் இடைவெளி இவைகளால் சோவியத் யூனியன் தகர்ந்தது. குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகில் யுத்தங்களைத் திணித்து வருகிறது. நவீன, தாராள மய, முதலாளித்துவம் உலக மக்களைக் கபளீகரம் செய்து வருகிறது.

பசி, வறுமை, வேலையின்மை போன்ற துயரங் களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் முதலாளி களுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன.

முதலாளித்துவத்திற்கு மாற்று சோஷலிசம் தான். உலகின் மூலதனம் உள்ளவரை சுரண்டல் நீடிக்கும். சுரண்டல் உள்ளவரை வர்க்கப்போர் நீடிக்கும். இதன் உச்சகட்டத்தில் புரட்சி வெடிக்கும். முதலாளித்துவம் புரட்சியைத் தாமதப்படுத்தலாமே தவிர தவிர்க்கவோ, தடுத்து நிறுத்தவோ முடியாது.

ஆக நவம்பர் புரட்சி உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் நிரந்தரமாக வழிகாட்டி வருகிறது.

சோவியத் யூனியனின் மகத்தான சாதனை கம்யூனிசத்தையும், தத்துவார்த்தங்களையும் மக்களி டையே நூல்களாக, இதழ்களாகக் கொண்டு சேர்த்தது தான்.

மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் உலகின் 226 மொழிகளிலும் சோவியத் நாடு என்ற இதழை வெளியிட்டது. இந்தியாவில் 14 தேசிய மொழி களிலும் சோவியத் இதழ்களும் சோவியத் நூல் களும் வெளியிடப்பட்டன.

லியோ டால்ஸ்டாய் போன்ற எழுத்தாளர் களின், மாக்சிம் கார்க்கி முதலிய அறிஞர்களின் படைப்புகளும் உலக மக்களுக்கு மலிவு விலையில் கிடைத்தன. போரும் வாழ்வும், தாய் நாவல்களும் குழந்தைப் பாடல்களும் ஜுலியஸ் பூசிக்கின் தூக்குமேடைக் குறிப்புகள் நூலும் மக்களிடம் வந்தன.

தமிழ்நாட்டில் இந்த நூல்களை விற்பனை செய்வதற்காகத்தான் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தக நிலையம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்காகப் புத்தகங்கள் 0-25, 0-50 காசுகளுக்கு மலிவுப் பதிப்புக்களாக வழங்கப்பட்டன.

தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர்கள் ரஷ்யக் கல்லூரிகளுக்கு கற்பிக்கச் செல்வதும் நிகழ்ந்தது.

1991-இல் எல்த்சின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்தான். 1993-இல் கட்சியில் மறு சீரமைப்புச் செய்யப்பட்டு “கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் ரஷ்யன் பெடரேஷன்” என்று பெயர் மாற்றப்பட்டது.

1992-தேர்தலில் 13 சதவீதமும் 1995-இல் 25 சதவீதமும் உள்ளாட்சித் தேர்தலில் 19 சதவீதமும் கட்சி பெற்றது. புதின் கட்சிக்கு அடுத்த இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான். 2009-இல் சூலை 15 இல் சேகுவேரா பிறந்த நாளில் இருந்து வாலிபர், மாதர், மாணவர் இயக்கங்கள் தோற்றுவிக்கப் பட்டு வளர்ந்து வருகின்றன.

சோவியத் யூனியனில் 14 குடியரசுகளில் கட்சியை உருவாக்கி வளர்க்க முனைப்புக் காட்டி வருகின்றனர். 1993-இல் 4 லட்சம் உறுப்பினர்கள். தற்போது 5,70000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 2016 அக் 24 முதல் மத்தியக் கமிட்டி கூடி 2017 ஆம் ஆண்டினை கட்சி உறுப்பினர் சேர்ப்பு ஆண்டாகக் கொண்டாடுகின்றனர். இதன்படி ஸ்தாபன செயல்பாடுகளை அதிகரிப்பது என முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய சோசலிச வாழ்க்கை மீண்டும் வர வேண்டும், மீண்டும் பழைய சோவியத் ஒன்றியம் உருவாக வேண்டும். பழைய வாழ்வின் இழப்புகள் குறித்த நினைவுகள் மக்களிடம் மீண்டும் தோன்றி வருகின்றன.

மூலதனம் உள்ளவரை சுரண்டல் நீடிக்கும். வறுமையும் துயரங்களும் மக்களை வாட்டும். நவம்பர் புரட்சியில் கிளைத்து ஒரு புரட்சியின் ஒளி மங்காது நிலைத்திருக்கிறது. இந்த நவம்பர் செவ்வொளியில் புரட்சி தொடரும்.

Pin It