கடந்த மாதம் முழுதும் இலக்கிய உலகில் பெரும் பேச்சாகக் கிளப்பிய அருந்ததி ராயின் வாழ்வை எழுதும் (Life Writing) நூல் மதர் மேரி. தன் வரலாறு, வாழ்க்கை வரலாறு, நினைவுக் குறிப்பு, போராட்ட வரலாறு, படைப்பு மனநிலை / இயங்குதளம் குறித்த உள்ளார்ந்த பகிர்தல் எனப் பல புள்ளிகளில் ஊடாடும் இந்த நூல் அருந்ததி ராயின் உள்ளுரத்திற்கு இன்னுமொரு கட்டியம். விரைவில் இந்த நூல் தமிழில் நல்லமுறையில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் என நம்புகிறேன். அவரவர் வாசிப்புக்கு குந்தகம் ஏற்படுத்தாமல், ஒரு மெல்லிய சரடாக இந்த நூல் கிளர்த்திய உணர்வுகள், எழுச்சி, பரவசம் ஆகியவற்றைக் கொண்டாட விரும்புகிறேன்.
2022 இல் தனது அம்மா மேரி ராயை இழந்த அருந்ததியின் துக்கத்திற்கு முகம் கொடுக்கும் குளிர்த்தியாக இந்த நூல் திகழ்கிறது. தாய்மை பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகள் புழங்கும் நமது சமூகத்தில் ‘புகலிடமாகவும் புயலாகவும்’ தனது வாழ்வில் இருந்த மேரி ராய் பற்றி மகளாக அருந்ததி பதிவு செய்கிறார். இரு குழந்தைகளைத் தனித்து வளர்த்து, கேரளாவின் சிரியன் கிறித்துவ சமூகப் பெண்களுக்கு குடும்பச் சொத்தில் சமபங்கு பெறுவதற்கான சட்டப் போராட்டத்தில் வென்று, கோட்டயத்தில் பள்ளிக்கூடம் என்ற பெயரில் உருவாக்கிய நிறுவனம், அதனை நிர்மாணிப்பதில் லாரி பேக்கரின் கட்டிடக் கலையைப் பயன்படுத்தியது, அக்காலத்தில் விதிவிலக்காக இருந்த தணிக்கைக்கு முகம் கொடுத்து ‘ஜீசஸ் க்ரைஸ்ட் சூப்பர்ஸ்டார்’ மாணவர் நாடகம் தடை செய்யப்பட்ட ஆணையை பள்ளியில் படமாக மாட்டி வைத்தது... எனத் தனது இருப்பை விசுவரூபமாக வாழ்ந்துகாட்டிய மேரி ராய் ஒரு புறம்; மண முறிவு, வறுமை, ஆஸ்த்மா நோய், ஆதரவு இன்மை, தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வீம்பு ஆகிய அனைத்தையும் கொட்டும் இடமாகத் தன் குழந்தைகளை நடத்திய தாய் மறுபுறம். அம்மாவை விட்டு, படிப்பைக் காரணமாக்கி டெல்லி சென்ற அருந்ததி ‘அம்மாவின் மீது இருந்த அன்பை இழக்காமல் இருப்பதற்காகச்’ சென்றதாகக் குறிப்பிடுகிறார்.
குழந்தைப் பருவ உளவியல் வாழ்நாள் முழுதும் எடுக்கும் பலப் பல அவதாரங்கள் பற்றிய புரிதல் பெருகி வரும் இக்காலத்தில் அருந்ததி பகிரும் உணர்வுகள் முரணாகத் தோன்றினாலும், ஏற்க முடிகிறது. ஆனால், 70 களில் அத்தகு புரிதல் வெகு குறைவு. அந்த வகையில் இந்த நூல் மன நலம் குறித்த ஆழமான, சிக்கலான பகுதிகளுக்கு இடம் அளித்திருக்கிறது.
தாய்மை போலவே புனைவுகள் களையப்படும் பல அனுபவங்கள் இந்த நூலில் உள்ளன. ஆண் – பெண் உறவு, கூட்டுப் படைப்பு முயற்சிகள், களச் செயல்பாட்டாளர் / அரசியல் விமரிசகர் / பத்திரிகையாளர் ஆகிய தளங்களில் இருக்கும் ஊகங்கள், படைப்புருவாக்கம் பற்றிய கற்பிதங்கள் ஆகியவை இந்த நூலில் முகத்தில் அடிக்கும் உண்மையின் வெக்கையோடு வெளிப்படுகின்றன. ஆண் – பெண் உறவில் காலம் காலமாக தொழிற்படும் வன்முறை, பெண்வாழ்வில் அது உருவாக்கும் சிதிலம், ஆணுக்குள்ளும் இயங்கும் நொய்ம்மை, கலைந்த கதாநாயகத்தனங்கள், தனி வாழ்வில் வர்க்க முரண்கள் ஆகியவை மீண்டும் மீண்டும் பேசினாலும் தீராத சிக்கல். காதல், காமம், வேண்டாத கருக்கலைப்பு, விவாகரத்து என நீளும் அன்றாட நடைமுறைகள் கேலியும் கிண்டலும், மனம் முழுதும் வியாபிக்கும் ஏமாற்றம், கோபம் ஆகியவற்றை நக்கலாகச் சாடும் தொனி நூல் முழுதும் விரவிக் கிடக்கின்றன.
அருந்ததியின் தொடக்க கால திரைக்கதைகள், நடிப்பு, திரைப்படத் தயாரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் புனைகதை படைப்பு உருவானதைப் பற்றிய விவரணைகள் படைப்பாளிகள் – குறிப்பாக ஆண் படைப்பாளிகளின் – பேட்டிகளில் கொடுக்கும் மமதைப் பேச்சுகளுக்கு மாறானது. அவரது இரு புதினங்களையும் வாசித்தவர்களுக்கு, இந்த நூல் பல புதிய திறப்புகளைக் கட்டாயம் தரும். உள்ளுக்குள் குடைந்து கொண்டிருக்கும் பிம்பங்களும், உணர்வுகளும் சொற்களாக வரும்முன் ஏற்படுத்தும் அவஸ்தைகள், அதற்கு எடுக்கும் காலம் என படைப்பின் அடிநாதமான உழைப்பையும் உளைச்சல்களையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
நர்மதா அணைக்கட்டுக்கு எதிரான இயக்கம், காஷ்மீர் போராட்டம், நக்சலைட் இயக்கம், நாளும் இறுகிக் கொண்டு வரும் இந்துத்துவத்தின் பிடி ஆகியவை பற்றிய அருந்ததியின் எழுத்துக்கள் படைப்பாளி என்ற பீடத்தைத் தாண்டி எழுத்தை மக்களுக்கான குரலாக மாற்றும் கடமையை வலியுறுத்துபவை. இந்தப் பங்களிப்பில் தனது இடம் பற்றிய பல அய்யங்களும், கேள்விகளும், அக துருவல்களும் நமக்குக் கிடைக்கும் பெரும் கருத்தாடல். அரசியல்சார்ந்த எழுத்துக்களில் முடிந்த முடிபான உறுதியை வெளிப்படுத்தும் போது பல நேரங்களில் வீராவேசமான, தட்டையான கோஷங்கள்தான் வருகின்றன. ஆனால், முழக்கங்கள் கவித்துவமாக வர வேண்டும்; சுய பரிசீலனைகள் தாங்கி எழ வேண்டும் என்பதை சாய்பாபா போன்ற பல செயல்பாட்டாளர்கள் படும் பாட்டை அருந்ததி சொல்லும்போது புரிகின்றது. தனக்கு உள்ள சமூக வசதி வாய்ப்புகள் பற்றிய தெளிவு, பொறுப்புணர்வுடன் வெளிப்பட வேண்டும் எனப் புரிந்து நடப்பதில் எழும் பல கேள்விகளை இங்கு அவர் வெளிப்படையாகப் பகிர்வதைக் காண முடிகிறது.
தன் அம்மாவுக்கான நினைவிடத்தை எழுப்புவதில் அருந்ததி செலுத்தும் கவனம் அப்பழுக்கற்ற கவிதை. கிறித்துவர் அல்லாதவரை மணம் செய்து கொண்டதால் மயானத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் (அதே போல் மணம் புரிந்த மேரி ராயின் சகோதரருக்கு இந்த விதி பாதிக்கவில்லை), பள்ளி எழுந்த மொட்டைக் குன்றில் மூங்கில் புதருக்கு மத்தியில் மேரி ராயின் சாம்பலின் ஒரு பகுதி புதைக்கப்பட்டு அவரது விருப்பத்துக்கு உரிய உயிரினங்கள், பூக்கள் இடம் பெறுமாறு நினைவிடம் அமைக்கப்படுகிறது.
மொத்தத்தில், ஹீரோயிசம் இல்லாத அருந்ததி ராயின் எழுத்து நம் ஒவ்வொருவரையும் நமது புண்கள், வடுக்கள், தழும்புகள் ஆகியவற்றை நமதென உண்மையாக ஏற்க வைக்கிறது.
அருந்ததி ராய் – மதர் மேரி கம்ஸ் டு மி (Mother Mary Comes to Me)
பென்குவின் பதிப்பகம், 2025. ப: 374.
- அ. மங்கை