நாஞ்சில் வட்டார வாழ்வு, தலித்துகளைப் போலவே அடிமை களாக வாழ்ந்த வரலாறு கொண்ட நாடார் இனக்குழுவின் மாறிவரும் விழுமியங்கள், அக-புற உலகப் பிணைப்பை அதீத உணர்வு குமுறல்கள் இன்றிப் பிணைப்பை அதீத உணர்வுக் குமுறல்கள் இன்றிச் சித்திரிப்பது ... போன்ற கூறுகளுக்காகத் தமிழ்நாவல் உலகில் மறுக்க முடியாத இடத்தைப் பெற்ற ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்கள் பிப்ரவரி, 10, 2012இல் மறைந்தார். தமிழ்ப் புனைகதை தன்னளவில் பக்குவப்பட்ட 1960களில் எழுத வந்தவர் ஹெப்சிபா. கிறித்துவப் போதகப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அவரது கொள்ளுப்பாட்டி ஒரு பைபிள் பெண்மணியாக, உபதேசியாகத் திகழ்ந்தவர். எனவே கல்வி அவருக்கு முதுசம். அவரது தந்தை அன்றைய பர்மாவில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஒரு ஆங்கிலக் கவிஞராக வேண்டும் என்ற முனைப்புடன் இளம் வயதில் இருந்தே தன்னை வளர்த்துக் கொண்டவர். அவரது வாழ்க்கை இணையாக அமைந்த காலஞ்சென்ற பேரா.ஜேசுதாசன், ஹெப்சிபாவுக்குத் தமிழ் இலக்கிய உலகைக் காட்டினார். பன்னிருகைப்பெருமாள், பேரா.ச. வையாபுரிப்பிள்ளை ஆகியோரின் மாணவராக உருப்பெற்ற பேரா.ஜேசுதாசன் அவர்களோடு இணைந்து ஆங்கிலத்தில் தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலை எழுதினார் (1961). அவ்விருவரது வாழ்க்கை நிறைவான பகிர்தலும் ஆங்கிலப் பயிற்சியும் தமிழ்க் காதலும் மிக்கதாக இறுதி வரை அமைந்தது. பேராசிரியரின் சாதாரணக் கூற்று ஒன்று ஹெப்சிபா நாவலாசிரியராக உருப்பெறக் காரணியாயிற்று. கல்கியின் எழுத்துப் பற்றிப் பேசுகையில், ‘பார்ப்பனர் தவிர வேறொருவருமே தமிழ் பேசுவதில்லை என்ற உணர்வு தரும் படைப்பு!’ என்று அவர் கூறிவிட்டுப் போகத் தான் வளர்ந்த, வாழ்ந்த பனையேறிச் சமூகத்தைப் பற்றிய ‘புத்தம் வீடு’ நாவலை ஒரே மூச்சில் எழுதி முடித்தார் ஹெப்சிபா. மௌனி, சுந்தரராமசாமி ஆகியோரிடம் அதனைக் காட்டினார் ஜேசுதாசன்.

1964இல் புத்தம் வீடு வெளி யானது. லிஸியின் காதல் கதையாகவும், வாழ்ந்து கெட்ட குடும்பத் தின் கதையாகவும் ‘பெண்களின் பாதுகாப்பை யட்டி கட்டுப்பாடு நிறைந்த ஒரு குடும்பத்தின் கதை’ எனச் சிட்டியால் வர்ணிக்கப்பட்ட நாவல் இது. ஒரு சமூகத்தின் அசைவியக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அகமனக் கூறுகளில் ஏற்படுத்தும் விரிசல்களைப் பாசாங்கின்றிக் காட்டும் முயற்சியாகப் புத்தம் வீடு இன்றும் திகழ்கிறது. 1968இல் வெளிவந்த டாக்டர் செல்லப்பா ‘புத்தம் வீடு’ தங்கராஜின் சகோதரனின் கதை. 1978இல் அனாதை, 1982இல் மா-னீ என நாவல் கள் தொடர்ந்தன. இரண்டாம் உலகப் போரின்போது பர்மாவை விட்டுத் தப்பி மீண்டும் தமிழகம் திரும்பிய மக்களின் இடர்களை விவரிக்கும் நாவல் மா-னீ. தனது தந்தைக்காற்றும் அஞ்சலியாக ஹெப்சிபா அந்த நாவலைத் தொடங்கினார். நாவல் வெளிவரும் முன் அவரது தந்தை மரணம் அடைந்தார்.

நாவல்கள் தவிர கவிதைகள், தமிழ் இலக்கிய வரலாற்றைப் பதிவு செய்யும் நான்கு தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம், மொழி பெயர்ப்புகள் ஆகியவை அவரது படைப்புலகில் அடங்கும். இறுதி வரை தொடர்ந்து இயங்கும். விருப்போடும், அயர்வின்றி உழைக் கும் உறுதியோடும் திகழ்ந்தார். ஷிறிகிஸிஸிளிகீ அமைப்பின் ஆவணப் பதிவிற்காக அவரைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. அவரது எளிமையும் மனந்திறந்த பேச்சும் சிரிக்கும் கண்களும் மாறி மாறி சேரும் நினைவுகளுக்கு இடையே வெளிப்பட்ட மனிதநேயமும் ‘எழுத்தாளர்’ என்று தோள்தட்டும் பலரிடம் காணக்கிடைக்காத பண்புகள். நேரடியான அரசியல் வாக்குமூலங்கள் எதுவும் அவர் தர வில்லை. ஆனால் மாறிவரும், தானறிந்த சமூகத்தின் எதார்த்தத்தைக் காட்டினார்.

பல ஆண்டுகள் கழித்து அழகியநாயகி அம்மாள் ‘கவலை’ என்ற தனது வாழ்க்கை வரலாற்று நூலைப் படைத்தபோது, புத்தம் வீட்டிற்குள் மீண்டும் பயணிக்க முடிந்தது. ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த, இருவேறு மதங்களைத் தழுவிய, ஒரே தொழிலை மேற் கொண்ட இனத்தைச் சேர்ந்த இரு பெண்களின் பதிவுகளைக் காணும் வாய்ப்பு இதனால் சாத்தியமாயிற்று.

ஹெப்சிபாவின் உலகம் தானறிந்த இனக்குழுவின் வாழ் முறையை அகஉலகம் சார்ந்து வெளிப்படுத்துவதில் தங்கி இருந்தது. குடும்பச் சித்திரிப்பு, ஆண் - பெண் வாழ்வியல் என்பன குறுகிய வரையெல்லை என்ற தொனி எல்லாப் பெண் படைப்பாளிகளின் எழுத்துக்களுக்கும் கிடைக்கும் எதிர்வினை. அதற்கு ஹெப்சிபாவும் விதிவிலக்கல்ல. ஆனால் புதியதொரு நாடாக உருவான இந்தியா வின் இளம் அதிகாரிகள் உலகை மையப்படுத்தி 1950கள் தொடங்கிப் புனைகதைகள் எழுதிய கிருத்திகாவின் நாவல்களில் இம்மாற்றங் களின் ஊற்றாகவும் மடையாகவும் திகழ்வது பாலுறவுச் சிக்கல்களும் அகமன உளைச்சல்களும் தான்! தமிழ் நாவல் உலக ஜாம்பவானாகக் கருதப்படும் தி.ஜானகிராமனின் படைப்புகள் ஊறித்திளைப்பது அக மன உணர்வெழுச்சிகளின் அலைகளில்தான்! எனவே தனிமனித வாழ்வு, உணர்வு ஆகியவற்றை மையப்படுத்தும் சொல்லாடல்கள் அகவாழ்வின் சிக்கல் சிடுக்குகளைக் காட்டுபவை. கற்பனையில் பிறந்த ஏக மனிதனின் மனநிலை குறித்தது மட்டுமல்ல. எனவேதான் பெண்ணியவாதிகள் ‘தனிவாழ்வும் அரசியலே’ என்ற முழக்கத்தை வலியுறுத்துகின்றனர்.

ஹெப்சிபாவின் ஆங்கில-தமிழ் சீசா விளையாட்டு காலனியச் சூழலின் முரண்களைக் காட்டுவதாக அமைகிறது. ஆங்கிலத்தில் புலமையோடும், ஈர்ப்போடும் வளர்ந்த ஹெப்சிபா, தமிழ் இலக்கியத் தில் ஊறித் திளைக்கத் தொடங்கியதும் அதில் கொண்ட ஆறாக் காதல் சொல்லி மாளாது. இறுதிவரை கம்ப இராமாயணக் கவிமொழியில் திளைத்தார். தமிழ் தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் பதிவு செய்வதில் முனைப்புக் காட்டினார். இவரைப் போலவே இரு மொழிப் புலமை கொண்டு விளங்கிய கிருத்திகா புனைகதைப் படைப்புமொழியாகத் தமிழையும் குழந்தை இலக்கியம், கட்டுரைகளுக்கான மொழியாக ஆங்கிலத்தையும் கொண்டதோடு மட்டுமன்றி, ஆங்கில எழுத்தில் தனது இயற்பெயரைப் பயன்படுத்தி னார். இந்தியப் பண்பாடு சார்ந்த கலை, புராணங்கள் அவற்றொடு கிருத்திகா, ஆங்கிலத்தில் தந்தது பாரதியின் வாழ்வை! ஆனால் ஹெப்சிபாவுக்குத் தமிழ் இலக்கியம் என்ற மாபெரும் கொடையை அறிமுகமாகவேணும் ஆங்கிலத்தில் பதியவைக்க வேண்டும் என்ற முனைப்பு இருந்தது. தென் தமிழகத்தின், விளிம்பு நிலை இனத்தில் வாழ்ந்த ஹெப்சிபா, வசதிகள் இருந்தும், கால் பாவி நின்றது தமிழ் இலக்கிய மரபில் தான்.

கோஷங்கள் அற்ற, அதீத புனைவுகள் அற்ற, உருவம் குறித்த கூடுதலான கவலைகள் அற்ற படைப்புகள் மூலம் தாமறிந்த உலகிற்கு நியாயம் செய்ய விரும்பிய ஹெப்சிபாவின் கையில் இருந்தது அவரது இளவயதுக் கனவான ‘தேவதை தந்த பேனா’ தான்”.

(கட்டுரை ஆசிரியர், நாடக இயக்குநர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்)

Pin It