இடங்களையும் திசைகளையும் அறிந்துகொள்ள ஐரோப்பியக் கடற்பயணிகள் நிலப்படங்களையும் வரைபடங்களையும் தயாரித்தனர். ஆனால், இதுநாள் வரையில் அவை பயன்படுத்தப்படாமல் இருந்தன. சமீபத்தில், கோட்டைகள், ஆயுதக்கிடங்குகள், தானியக்கிடங்குகள், நாணயச்சாலைகள், கருவூலங்கள் முதலியவற்றின் 1,862 நிலப்படங்கள் "தமிழ்நாடு மின்னணுக்காப்பகத்தில்" பதிவேற்றப்பட்டுள்ளன. இவை "தமிழ்நாடு மாநில ஆவணக்காப்பகத்தில்' இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவை ஆராய்ச்சியாளர்களுக்கு விலைமதிப்பில்லாத ஆதாரங்களாக அமைகின்றன.

போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் முதலியோர் தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு வந்தது குறித்தும் நிலப்படவியலின் வரலாறு குறித்தும் வரம்புக்குட்பட்ட அளவு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஐரோப்பியக் குடியிருப்புகளின் வெள்ளையர் நகரத்தில் கோட்டைகளும் கட்டிடங்களும் எழுப்பப்பட்டன. வெள்ளையர் நகரம், கருப்பர் நகரத்தில் இருந்து தெளிவாகக் குறிக்கப்பட்ட எல்லைகளால் பிரிக்கப்பட்டிருந்தது. ஐரோப்பியர்கள் கடல்கடந்து வணிகத்தை விரிவாக்கியது, கடற்கரையோர வரைபடங்களையும் நிலப்படங்களையும் தயாரிப்பதற்கு வழிவகுத்தது.

நிலப்படம் என்பது, குறிப்பிட்டஅளவு விகிதத்தில் பல்வேறு வகை இட-வெளிகளை ஒரு காகிதத்தில் வரைந்து காட்டுவதாகும். தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் ஐரோப்பிய வணிகம் விரிவடைந்த காலத்தில் நிலப்படத் தயாரிப்பு தொடங்கியது. தமிழ் நிலப்பரப்பின் ஒரு பெரிய மண்டலத்தை நிலப்படங்களில் ஐரோப்பியர்கள் வரைந்தனர். அவர்கள் கண்ணுண்ட நிலப்பரப்பின் ஊடாக, ஒரு நேர்கோட்டை வரைவதன் மூலம் அதைச் செய்தனர். தமது செயல்பாடுகளுக்கு முதன்மைவாய்ந்த தகவல்களைக் கொண்ட கடலோரத்தின் வரைபடங்களை அவர்கள் தயாரித்தனர். எனவே, அவை வணிகப் போட்டியிடும் நிறுவனங்களின் கையில் கிடைத்து விடக்கூடாது என்று அவர்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். இந்த வரைபடங்கள் தண்ணீரின் ஆழத்தையும், அலையேற்றம் அல்லது அலையிறக்கத்தின் போது மறைந்திருக்கும் அபாயங்களையும் குறித்துக்காட்டின.

கட்டங்களும் பாணிகளும்

தமிழ்க் கடலோரம் பற்றிய முதன்மைப் புவியியல் அறிவைப் பெறுவதற்கான ஒரு மேம்படுத்தப்பட்ட முறையை ஐரோப்பியர்கள் உருவாக்கினார்கள். எண்ணற்ற நிலப்படங்களைத் தயாரிப்பதிலும் பதிப்பிப்பதிலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தார்கள். நிலப்படங்களை தயாரிப்பதன் பல்வேறு கட்டங்களையும் பாணிகளையும் நாம் ஆய்வு செய்யவேண்டும். தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், புவியியலை ஆய்வு செய்யும் வழிகள் இவற்றையும் ஆராயவேண்டும்.

போர்ச்சுகீசியர்களின் காலனியாக்கத்துக்கு இணையாக கடற்பயணிகள் முதலில் தயாரித்த நிலப்படங்கள், காலநிலையைப் பொறுத்து பாதுகாப்பாக கடலில் பயணிப்பதற்கான மாற்றுவழிகளை விளக்குபவையாக இருந்தன. அவர்கள் முதன்மையாக வெளியையும் திசையையும் பதிவு செய்வதற்காக நிலப்படங்களைத் தயாரித்தனர். ஐரோப்பாவில் உள்ள வாசகர்கள் தமிழ் மண்டலத்தைப் பற்றியும் கிறித்துவ மிஷன்களைப் பற்றியும் அறிந்துகொண்டார்கள். நிலப்படங்களைப் பயன்படுத்தி மிஷனரிகள் தாம் போகவேண்டிய இடத்தைச் சென்றடைய முடிந்தது. இந்தச் செயல்பாட்டின் ஊடாக, தமிழ்க் கடற்கரைக்கும் அட்லாண்டிக் மண்டலத்துக்கும் இடையே புவியியல் அறிவைக் கடத்துவதும் பரிவர்த்தனை செய்வதும் வளர்ச்சியடைந்தது. இது வளர்ச்சியடைந்த நிலப்படவியல் முறைக்கு வழிவகுத்தது. படத்தின் மூலமான இந்த வெளிப்பாடு, வணிக உலகின் பொருட்கள், கருத்து நிலைகள், நிகழ்முறைகள் முதலியவற்றைப் புரிந்துகொள்வதற்கு வழி செய்தது. இவை கணிதவியல் கட்டமைப்புகளுக்கு இட்டுச்சென்றன. இறுதியில், நவீன உலகின் ‘அளவுவிகித’ நிலப்படங்களில் முடிந்தன.

போர்ச்சுக்கீசியக் காலனி தேவனாம்பட்டினம் நிலப்படம் (1607), நாகப்பட்டினம் நிலப்படங்கள் (1635-58), மைலாப்பூரின் சாந்தோம் நிலப்படங்கள் (1635-87), சாந்தோமின் நிலவரைபடம் முதலியவை போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரில் அமைந்துள்ள "வரலாறு மற்றும் பண்டைய நிலப்படவியல் மையத்தில்" உள்ளன.

1734ஆம் ஆண்டில் தரங்கம்பாடியின் லூத்தரன் மிஷனரியாக இருந்த கிறிஸ்டோப் தியோடோசியஸ் வால்தர், தமிழ்நாட்டில் உள்ள இடங்களின் நிலநேர்க் கோட்டையும் (அட்சரேகையையும்) நிலநிரைக் கோட்டையும் (தீர்க்க ரேகையையும்) வரையறுப்பதில் ஈடுபட்டார். டென்மார்க்கிலும் ஜெர்மனியிலும் (1729-45) நிலப்பட உருவாக்கத்துக்கான பல புவியியல் தகவல்களை அவர் வழங்கினார். பழவேற்காடு, நாகப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், பறங்கிப்பேட்டை, புன்னைக்காயல் முதலிய டச்சு வணிகத் தொழிற்சாலைகளின் நிலப்படங்களும் திட்டங்களும் நெதர்லாந்தில் உள்ள தி ஹேக் நகரின் "தேசிய ஆவணக் காப்பகத்தில்" "வெளிநாட்டு நிலப்படங்களின் தொகுப்பில்" உள்ளன.

பிரெஞ்சுத் தொகுப்பு

புதுச்சேரியின் (1701-1789) நிலப்படங்களும் தளவரைபடங்களும் பிரான்சில் உள்ள "எக்ஸ்-ஆன்-புரோவான்சின் வெளிநாட்டு ஆவணக்காப்பக மையத்தில்" பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. 1746க்கும் 1761க்கும் இடையில் அதிகாரத்துக்காக நடந்த கர்நாடகப் போர்களும் அதிகாரத்துக்கான ஆங்கிலேயர்-பிரெஞ்சுப் போராட்டங்களும், இடங்கள், முற்றுகைகள், படைமோதல்கள், போர்கள் முதலியவற்றின் நிலப்படங்களைத் தயாரிப்பதற்கு பிரெஞ்சுப் புவியியல் பொறியாளர்களை இட்டுச்சென்றன. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்கள் பற்றிய நிலப்படங்களும் தளவரைபடங்களும் பிரெஞ்சுத் தொகுப்பில் உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இவை எக்ஸ்-ஆன்-புரோவான்சில் பாதுகாக்கப்படுகின்றன. சில தளவரைபடங்களும் நிலப்படங்களும் புதுச்சேரியில் உள்ள "இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின்" மண்டல அலுவலகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

மதராசில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி வரைபடக்கலைஞர்களையும் நிலப்படக்கலைஞர்களையும் வேலைக்கு அமர்த்தியிருந்தது. அவர்கள் 1745-81ஆம் காலப்பகுதியில் கர்நாடக மண்டலத்தில் மதராஸ், படைமோதல்கள், போர்கள், இராணுவ நிலப்படங்கள் முதலியவற்றின் தளவரைபடங்களை வரைந்தனர். தமிழ்நாட்டில் பிரித்தானியர்கள் மேற்கொண்ட நிலவருவாய் அளவீடுகள் (1767-1857) முறையான நிலப்படத்துக்கு இட்டுச்சென்றன. தமிழ்க் கடற்கரைப் பகுதியின் பல்வேறு வரைபடங்கள், கோணங்கள், தளவரைபடங்கள், கோட்டோவியங்கள் 1798க்கும் 1802க்கும் இடையே தயாரிக்கப்பட்டன. இவை போர்ட்ஸ்மௌத்தில் உள்ள "முடியரசின் கடற்பிரிவு அருங்காட்சியகத்தில்" அலெக்சாண்டர் டால்ரிம்பிளின் சேகரிப்பில் காணப்படுகின்றன.

சென்னையில் உள்ள "தமிழ்நாடு மாநில ஆவணக் காப்பகத்தில்" உள்ள நிலப்படங்கள் மற்றும் தளவரைபடங்களின் சேகரிப்பு மிக முதன்மையானது. ஏனெனில், அவை பயன்படுத்தப்படாமலும் குறைவாகப் பயன்படுத்தப்பட்டவையாகவும் இருக்கின்றன. அவற்றை மின்னணுமயமாக்கியது ஆவணக்காப்பகப் பதிவுகளை பாதுகாக்கும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்குகிறது. சமீபத்தில் கோட்டைகள், ஆயுதக்கிடங்குகள், தானியக் கிடங்குகள், நாணயச் சாலைகள், கருவூலங்கள் முதலியவற்றின் 1,862 நிலப்படங்கள் தமிழ் மின்னணு நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. காலனிய காலத்தை ஆய்வுசெய்யும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் எதிர்கால அகழ்வாராய்ச்சிகளுக்கும் இந்த நிலப்படங்கள் விலைமதிப்பற்ற ஆதாரங்களாக இருக்கும்.

மாறிக்கொண்டிருக்கும் நிலை

காலனிய வரலாறு பற்றிய ஆய்வு தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கிறது. இராணுவ மற்றும் ஆட்சிப்பகுதி விரிவாக்கம், வரிவசூல், அறிவியல், தொழில்நுட்பம், மிஷனரி விரிவாக்கம் முதலிய புதிய ஆய்வுப் புலங்கள் எழுகின்றன. கிழக்கிந்தியக் கம்பெனிகளின் கடல்வழி வணிகமும் வர்த்தகமும், தாக்கம் செலுத்திய மனிதவாழ்வின் புலங்கள், அவற்றை வழிநடத்துகின்றன. நிலப்படங்களையும் வரைபடங்களையும் பயன்படுத்தி, காலனியம் தனக்கேயுரிய பாத்திரத்தை எவ்வாறு ஆற்றியது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். காலனிய வரலாறு பற்றிய புதிய கண்ணோட்டங்கள், வருங்காலத்தில் தொடர்ந்து ஆழ்ந்த கவனத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

- எஸ்.ஜெயசீல ஸ்டீபன்

தமிழில்: மா சிவகுமார்

நன்றி: தி ஹிந்து, ஆங்கில நாளிதழ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.