திருநெல்வேலி மண் வீர உணர்விற்கும் மொழி உணர்விற்கும் பெயர் பெற்றது. திருநெல்வேலி மாவட்டம் பல இலக்கிய ஆளுமைகளை ஈந்துள்ளது. ஒரே மண் சார்ந்த மூன்று இலக்கிய ஆளுமைகளுக்கும் (தொ.மு.சி, கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன்) நூற்றாண்டு. சமூகத்தை மனிதத்தால் புதுப்பித்த வள்ளலார் தோன்றிய கடலூர் மாவட்ட மண்ணில் உதித்த பொதுவுடைமைக் கவிஞர் தமிழ் ஒளிக்கும் நூற்றாண்டு. நூற்றாண்டு காணும் மருதநிலப் படைப்பாளர்களையும் நெய்தல் நிலப் படைப்பாளர்களையும் தனது எழுத்து அறத்தால் நிலைநிறுத்துகின்றார் மருத்துவர் அறம்...

தொ.மு.சி

Nootraandu Kanda Aalumaigalஅறுபது ஆண்டு காலத் தொடர் இலக்கியப் பணி. இலக்கியம் என்பது முழுநேரப் பணி. பணம், விருது, பதவி, அங்கீகாரத்திற்காக அல்ல என வாழ்ந்தவர் தொ.மு.சி. தொ.மு.சி. ரகுநாதன் அவர்களை, 'இலக்கியத்தை தனது முழுநேரப் பணியாக ஏற்று, எந்தவித சமரசமும் இன்றிப் பணத்திற்காகவோ விருதுக்காகவோ, பதவிக்காகவோ, அங்கீகாரத்திற்காகவோ எந்தக் காரியமும் செய்யாதவர்' என அறிமுகப்படுத்தும் பொழுதே தொ.மு.சி. மீதான மதிப்பு உயர்ந்து விடுகின்றது. ஓகாரமிட்டு (பணத்திற்காகவோ...) எழுத எழுத 'ஓ' என்று நம்முள்ளும் வியப்பு ஏற்படுகின்றது. 'வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன், மெய் கூறுவல்' எனும் சங்கப் புலவர் மருதனிளநாகனாரின் கூற்று தொ.மு.சியால் உயிர்பெறுவதைக் காணமுடிகின்றது. தொ.மு.சி.யின் தாத்தா, அப்பா முதலானோரின் இலக்கியப் பணிகள் குறித்து அறியும் பொழுது ‘தந்தையர் ஒப்பர் மக்கள்' எனும் தொல்காப்பியரின் கருத்தும் நினைவிற்கு வருகின்றது.

தொ.மு.சி.யின் இளமை வாழ்வு, நூல் வாசிப்பு, சிறை வாழ்வு, சிறைவாழ்வில் பூத்த சிறுகதை, பத்திரிகைப்பணி முதலான செய்திகளோடு விரியும் இந்நூல் தொ.மு.சி.யின் முதல் நாவல் ‘புயல்' குறித்தும் அதன் கதைக்கரு குறித்தும் சுருக்கமாக விளக்கி நிற்கின்றது. இதன்பின் வெளிவந்த தொ.மு.சி.யின் முதல் இரவு, கன்னிகா, நீயும் நானும் முதலான நாவல்களின் கதைச் சுருக்கத்தை நூலாசிரியர் விளக்குவது படிக்க வேண்டும் எனும் உணர்வை விதைக்கின்றது. தொ.மு.சி.யின் புகழ்பெற்ற முதல் சோசலிச எதார்த்த நாவல் எனச் சுட்டப் பெறும் ‘பஞ்சும் பசியும்’ தோற்றம் பெற்ற சூழல், செக் மொழியில் மொழிபெயர்க்கப் பெற்ற சூழல் முதலான செய்திகளை அறிய இந்நூல் உதவுகிறது. மேலும் ‘பஞ்சும் பசியும்' நாவலுக்குப் பின் நாவல் படைப்பதை விட்டுவிட்டு ஆய்வாளர் விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் முதலான பரிமாணங்கள் வாயிலாக ஆற்றிய பணிகளையும் இந்நூலாசிரியர் தெளிவாக விளக்குகின்றார். தொ.மு.சி.யின் ஆய்வுப்பணி பாரதி குறித்தது; சிலப்பதிகாரம் குறித்தது புதுமைப்பித்தன் குறித்தது, திருக்குறள் குறித்தது, என அறிய முடிகின்றது. இப்பணிகள் இன்றைய தலைமுறையினருக்கும் ஆய்வு வழிகாட்டியாகத் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை. தனது தந்தை சொத்தில் பாகப் பிரிவினையாகக் கிடைத்த பணத்தைக் கொண்டு ‘சாந்தி’ எனும் இலக்கிய இதழைத் தொடங்கியமை தொ.மு.சி.யின் ஆர்வம் குறையா இலக்கியப் பணிக்கும் பணப்பற்றில்லா மனத் தூய்மைக்கும் சான்று.

திசைகாட்டி கு.அழகிரிசாமி

குறைந்த வயதே வாழ்ந்தாலும் படைப்பாளியின் வாழ்வு பல எதிர்கொள்ளல்களையும் சவால்களையும் கடினங்களையும் தாங்கியது என்பதற்கு கு.அழகிரிசாமியின் வாழ்வே சான்று. இடைச்செவல் வாழ்வு - சென்னை வாழ்வு - அயலக வாழ்வு என முத்தளங்களில் இயங்கியது இவரது வாழ்வு. இடைச்செவல் கிராமத்தில் ‘எஸ் எஸ் எல் சி வரை படித்தவர்’ என்ற பெருமையை முதன் முதலில் பெற்றவர் கு.அழகிரிசாமி என வாசிக்கும் பொழுது கிராமத்தின் ஒளிக்கீற்றாய் நம் கண்முன் தோன்றுகின்றார். கு.அழகிரிசாமி இடைச்செவல் வாழ்வு - அரசு வேலை ராஜினாமா - சென்னை வாழ்வு - மலேசிய வாழ்வு என மாறி மாறி அமைந்த வாழ்க்கைப் பயணத்தில் படைப்பாளர்களும் வாசகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய செய்திகள் பல உள்ளன. கு.அழகிரிசாமி கி.ரா.விற்குச் சென்னை வாழ்க்கை குறித்து எழுதிய கடிதங்களில் போதிய வருமானமின்மை, பணத்திற்காகப் படைப்பை எழுதாமை, குறுக்கு வழியில் வாழாமை, சுதந்திரத்தோடு வாழ்வது முதலான செய்திப் பதிவுகளை அறியமுடிகின்றது.

படைப்பாளர் கு.அழகிரிசாமி ஓவியராகவும் இசை ஞானம் கொண்டவராகவும் திகழ்ந்தார் என அவரது திறன்களையும் இந்நூல் சுட்டிச் செல்கின்றது. மலேசியாவில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி - சீதாலட்சுமி அம்மையார் சந்திப்பு, இருவரின் இசை ஞான உணர்வு, இசை ஞான அறிவு, இருவரின் வாழ்க்கைப் பயண உறவு உருவாக்கமாக மாறிய சூழல்களை ஆசிரியர் அறம் சுவைபட விளக்குகின்றார். கு.அழகிரிசாமி அவர்கள் ‘பட்டினி கிடந்தாவது படைப்பாளியாக வாழ்வது' எனும் தீர்மானத்துடன் வாழ்ந்ததால் தனக்கு வந்த இடர்பாடுகளைப் பொருட்படுத்தவில்லை எனும் பதிவு கு.அழகிரிசாமியின் இலக்கிய மனதினை அறியத் துணை நிற்கின்றது.

தமிழ்ஒளி

பொதுவுடைமைக் கவிஞர் தமிழ்ஒளி குறித்த கட்டுரை நம்முள் உள்ளொளி பாய்ச்சுகின்றது. எழுத்தாளனின் கடமை எது? என்பதற்கு ‘நம் கண் எதிரே நம்முடன் பிறந்தான், மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான்; அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக் கண்டு மனம் இரங்காமல் மரத்துப்போன நெஞ்சுடன் உலாவரும் மானிடப் பிண்டங்களின் உடலில் ‘சுரீர்' ‘சுரீர்' என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மையான எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்' எனப் பதிலளிக்கும் தமிழ்ஒளியின் உள்ளக்கிடக்கை நம்மை ஈர்க்கின்றது.

பாரதிதாசனின் ‘பாண்டியன் பரிசு’ படைப்பினை நகலெடுக்கும் பணி முதலாகக் கவிபடைத்தல், நாடகம் காவியம் படைத்தல், சிறுகதை, இதழ்ப்பணி என நீண்டு செல்லும் தமிழ்ஒளியின் இலக்கியப் பயணம் நெடியது. ‘கம்யூனிஸ்ட் கவிஞர்' என்றழைக்கப்பட்ட தமிழ்ஒளி ‘நிலைபெற்ற சிலை' ‘வீராயி' முதலான காவியங்கள் வாயிலாக சாதியத்திற்கு எதிராகவும் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

‘சிந்தின ரத்தம் உலரவில்லை எங்கள்

செந்தமிழ் வாழ்வு மலரவில்லை'

இந்தியை இங்கே அழைக்கின்றீர்கள்! - கூர்

ஈட்டியை நெஞ்சில் நுழைக்கின்றீர்கள்.

என மொழிக்குக் குரல்தரும் தமிழ்ஒளியின் கவியும் நம் மனதில் உயர்ந்து நிற்கின்றது.

கி.ராஜநாராயணன்

கி.ரா.வைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் எப்பொழுது படித்தாலும் வாசிப்பு ஆவல் எழுந்து கொண்டே இருக்கும். கி.ரா. குறித்த அறம் அவர்களின் எழுத்தும் வாசிப்பு ஆர்வத்ததை மிகுதிப்படுத்திக் கொண்டே செல்கின்றது. கி.ரா.வின் பள்ளி வாழ்க்கை குறித்தும் கரிசல்காட்டு மக்கள் குறித்தும் கி.ரா.வின் மொழியிலேயே பதிவு செய்திருப்பது கி.ரா. நம்முடன் பேசுவது போன்ற உணர்வை விதைக்கின்றது. கி.ரா.வின் குடும்ப வாழ்வியல், படைப்பு வாழ்வியல், இசை வாழ்வியல், சமூக வாழ்வியல் என விரிந்த தளத்தைச் சுருக்கமாகவும் செறிவாகவும் தந்துள்ளது. நூலாசிரியர் கி.ரா.வின் கதைகளைக் கண்முன் உலவவிடுகின்றார். கி.ரா.வின் கதைகளை வாசித்தவர்களுக்கு இக்கதைகள் புரிதலை ஏற்படுத்தும். கி.ரா. கரிசலுக்கான எதிர்காலப் படைப்பாளர்களை உருவாக்கும் நோக்கிலும் படைப்பாள நண்பர்களுடன் உரையாடும் நோக்கிலும் உருவாக்கிய ‘கதைசொல்லி’ ‘தாப்பு' முதலானவை எண்ணத்தக்கன. கரிசல் மண்ணை அசைத்துப் பார்த்தவர் கி.ரா. கி.ரா.வைக் குறித்த பதிவுகள் நம் மனதை அசைத்துப் பார்க்கின்றன.

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள் நால்வரையும் தன் எழுத்துத் திறத்தால் நம் மனதுள்ளும் நிறுத்துகின்றார் நூலாசிரியர் அறம். நூற்றாண்டு கண்ட ஆளுமைகளை நினைவு கூர்வதும் அவர்களை வாசிப்பதும் தமிழறம்.

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

மருத்துவர் த.அறம் | விலை: ரூ.110/-

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

- முனைவர் ந.அருள்மொழி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி), சிவகாசி