தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலில் எந்த வகையான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அளவிற்கு தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும் கட்சிகளில் ஒன்றாகவே பாஜக இருந்து வருகின்றது. பல்வேறு பெயர்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து சங் பரிவார் அமைப்புகளின் உறுப்பினர்கள் எல்லோரும் ஓட்டு போட்டால் கூட, அதனால் இரண்டு அல்லது மூன்று சதவீதத்திற்கு மேல் ஓட்டுக்களைப் பெற முடியவில்லை என்பதுதான் உண்மை. இந்த வாக்கு சதவீதத்தை உயர்த்தவும், தனக்கான ஆதரவு தளத்தை விரிவாக்கிக் கொள்ளவும் அவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வதோடு சாதி வெறியர்களையும், மத வெறியர்களையும் தூண்டி விடுவதன் மூலம் பிற்போக்கு சக்திகளின் அணிசேர்க்கையை ஏற்படுத்தி, அதன் மூலமும் கணிசமான ஓட்டு வங்கியையை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்கள். ஆனால் இதன் பலன் எந்தளவிற்கு கிடைக்கும் என்பது நிகழ்தகவு போன்றதுதான். காரணம் இந்தியாவிலேயே கோயில்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருந்தாலும், இங்கே தீவிரமான ஆன்மீகவாதிகள் கூட பிஜேபியை வெறுக்கும் சூழலே உள்ளது. இதுதான் சங்கிகளுக்கு இன்னும் புரியாத புதிராக உள்ளது.
தன்னை இந்துக்களின் ஏகப் பிரதநிதி என்று மார்தட்டிக் கொள்ளும் சங்பரிவார் கும்பலை தீவிரமான ஆன்மீகத்திலும், பிற்போக்குத்தனத்திலும் மூழ்கிக் கிடக்கும் பெரும்பாலான தமிழர்கள் ஏன் ஏற்க மறுக்க வேண்டும்? இதை சரி செய்யத்தான் அதாவது பிற்போக்குவாதிகளை நியாயமாக பிற்போக்கு சக்திகளுக்கே ஓட்டு போட வைக்கத்தான் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை கபாளிகரம் செய்ய முயன்று வருகின்றார்கள். ஏற்கெனவே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை எல்லாம் பார்ப்பன பிற்போக்கு சக்திகளின் கைகளில் மாற்றித் தர வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. ஆனால் அந்தக் கோரிக்கைக்கான ஆதரவு தளம் பெரிதாக இல்லாத காரணத்தால் மத்தியில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இதை செய்து முடிக்க தற்போது முனைந்துள்ளது.
கடந்த மாதம் பத்தாம் தேதி, நாடாளுமன்றத்தில் பேசிய, மத்திய கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், "இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் 3,691 நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 745 இடங்கள், இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ளன. இதே போன்று மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய நினைவுச் சின்னங்களை இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வரவுள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும் தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள சில நினைவுச் சின்னங்களை மாநிலங்களுக்கு அளித்துவிட முடிவெடுத்திருப்பதாகவும். இது தொடர்பாக மாநிலங்களின் கலாசாரத் துறை அமைச்சர்களுடன் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், கூடுதலாக, இந்தியத் தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கையை பத்தாயிரமாக உயர்த்தப் போவதாகவும், அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டும் 7,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் நூறாண்டுகளுக்கு மேல் பழமையானவையாக உள்ளன’ என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களை இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் இருந்து விடுவித்து, அதை பார்ப்பனர் மற்றும் பார்ப்பன அடிவருடிகளின் கையில் கொடுப்பதற்கும், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொடுப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. காரணம் மத்திய அரசின் ஒட்டுமொத்த ஆட்சித் துறையும் ஆர்.எஸ்.எஸ்.சின் கிளைப் பிரிவுகளாகவே செயல்பட்டு வரும் சூழ்நிலையில், மத்திய தொல்லியல் துறையையும் நாம் அப்படித்தான் பார்க்க வேண்டும். வரலாற்றை மாற்றி பித்தலாட்டம் செய்வதில் கைதேர்ந்த பார்ப்பன மற்றும் பார்ப்பன அடிவருடிக் கும்பல்களின் கைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் செல்லும் என்றால், இன்னும் சில ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கோயில்களையும் கட்டியது பார்ப்பனர்கள் என்றும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், அதன் சொத்துக்களையும் உரிமை கோரும் பாத்தியதை அவர்களுக்கே உள்ளது என்றும் பல்வேறு ஆதாரங்களை அவர்கள் உருவாக்கி விடுவார்கள். குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்ற நிலை தமிழக கோயில்களுக்கு ஏற்பட்டு விடும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் 38,652 கோயில்கள் உள்ளன. இதில் 7,000 கோயில்கள் நல்ல வருவாய் உள்ள கோயில்கள் ஆகும். இந்தக் கோயில்களில் இருந்து வரும் வருவாயைக் கொண்டுதான் மீதமுள்ள சிறிய கோயில்களை அரசு பராமரித்து வருகின்றது. மேலும் இந்து சமய அறநிலையத் துறை மூலம் பல்வேறு கோயில் சொத்துக்களும் மீட்கப்பட்டு உள்ளது. 2011 முதல் 2015 வரையிலான நான்கு ஆண்டு காலத்தில் மட்டும் 1,683 ஏக்கர் பரப்பளவுள்ள சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏராளமான கோயில்களுக்கு குடமுழுக்கு திருவிழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு மூலம் இந்து சமய அறநிலையத் துறையில் பணியில் சேர்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினப் பெண்களும் ஆண்களுமே இவற்றை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 38,618 கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளும், 17 சமண சமய திருக்கோயில்களும் இருக்கின்றன. இதனை நிர்வகிப்பதற்காக ஆணையர், அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என பலர் செயல்பட்டு வருகின்றனர். இவை தவிர, கோயிலை நிர்வகிப்பதற்காக அந்தந்த கோவில்களில் தனியாக ஊழியர்களும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் திருக்கோயில்களை, திருமடங்களை, அறநிலையங்களை நிர்வகிக்கும் ஒரு துறை ஆகும்.
இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கோட்பாட்டின்படி இத்துறையின் செலவினங்களை அரசின் பொதுக் கருவூலத்திலிருந்து மேற்கொள்ள இயலாது. ஒரு கோயில் ஈட்டும் மொத்த வருவாயில் வரிக்கு உட்பட்ட வருமானத்தில் இருந்து 14 சதவிகிதம், அரசுக்கு வரியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலமே இந்து சமய அறநிலையத் துறையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. கோயிலின் வரிக்கு உட்பட்ட வருமானமான 14 சதவிகிதத்தைத் தவிர, மற்ற கோயில் வருவாய் எதையும் கோயில் எடுத்துக் கொள்வது இல்லை. அவை அனைத்தும் அந்தந்த கோயில்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கே செலவிடப்படுகின்றன. வருமானம் அதிகமாக ஈட்டும் கோயில்களில் இருந்து குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, வருமானம் இல்லாத கோயில்களின் பராமரிப்புப் பணிகளுக்கு செலவிடுவதும் நடைபெறுகிறது. இப்படி இந்து சமய அறநிலையத் துறை என்பது மிகவும் திட்டமிட்ட வகையில் அதன் வரவு, செலவுகளைக் கையாண்டு வருகின்றது. மேலும் கோயில்களின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வங்கிக் கணக்குகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன. கோயில் வருவாய் அனைத்தும் கண்காணிப்புக்கும், தணிக்கைக்கும் உட்பட்டது.
இப்படி முறையாக நடைபெற்று வரும் பணிகள்தான் பார்ப்பனக் கும்பலையும் அதன் அடிவருடிகளையும் கோபம் கொள்ளச் செய்கின்றது. கோயிலின் சொத்துக்களையும் அதன் வருவாயையும் ஒட்டுமொத்தமாக ஆட்டையப் போட நினைக்கும் கும்பல்கள்தான் தொடர்ச்சியாக இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று கூக்குரல் இட்டு வருகின்றன. அதற்காக பல்வேறு குறுக்கு வழிகளைக் கையாண்டு இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை முடக்கும் வேலையையும் அவை மேற்கொண்டு இருக்கின்றன. பாரம்பரியமான, புராதனமான கோயில் கட்டுமானங்கள் சிதைக்கப்படுகின்றன என்ற புகார் அற நிலையத் துறை மீது தொடர்ந்து எழுப்பப்படுகின்றது. இதற்காக ஏராளமான வழக்குகளும் தொடுக்கப்பட்டு அவை நிலுவையில் இருப்பதாலும், தொல்லியில் துறையின் கட்டுப்பாடு அதிகரித்து விட்டதாலும், கோயில் புனரமைப்பு, குடமுழுக்கு உள்ளிட்ட பல பணிகள் தடைபட்டு நிற்கின்றன. இதனால் ஆண்டு ஒன்றுக்கு 150 கோடி ரூபாய் வரையில் நடைபெற்று வந்த கோயில் திருப்பணிகள், வழக்குகள் காரணமாக இப்போது ஆண்டுக்கு 79 கோடி என்ற அளவில் சுருங்கி இருக்கின்றது.
இப்படி திட்டமிட்டு இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை முடக்குவதன் மூலம் அதன் மீது பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி, அதைச் சாக்காக வைத்து கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையை வெளியேற்றிவிட வேண்டும் என சங் பரிவாரக் கும்பல்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்கு தமிழக கோயில்கள் செல்வது என்பது பார்ப்பனர்களின் கைகளில் செல்வதற்கு ஒப்பாகும். இதன் மூலம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஏற்பட்ட நிலைதான் நாளை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் ஏற்படும். நாளையே ஒரு சட்டம் போட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் வழிபாட்டு உரிமையையும், அதன் வருவாயையும், சொத்துக்களையும் மத்திய அரசே கட்டுப்படுத்தும் என சட்டம் கொண்டு வந்து விட்டால் நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த அரசு எதையும் செய்யத் தயங்காத பாசிச அரசு என்பதை நாம் தொடர்ச்சியாகப் பார்த்து வருகின்றோம்.
சிலர் கோயில்களை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதன் மூலம் அதன் தொன்மையும் புராதான சின்னங்களும் பாதுகாக்கப்படும் என்கின்றார்கள். ஆளைக் கொல்லும் கொலைகாரன் அறுவை சிகிச்சை சிறப்பாக செய்வான் என்று நம்மை நம்பச் சொல்கின்றார்கள். தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் மத்திய சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் என்பவர் யார்? இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். சமீபத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பு சார்பில், இந்தியா- தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையிலான 'பழைய சகோதரத்துவத்தை நினைவூட்டல்' எனும் தலைப்பில் இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கம் ஒன்று அக்கார்டு ஓட்டலில் நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய அவர் “சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியக் கலாசாரம், பாரம்பரியம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அவற்றை உலகம் முழுவதும் பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" எனத் தெரிவித்தார். இதுதான் சங்கிகளின் கபடத்தனம் என்பது. இந்தியக் கலாச்சாரம் என்று அவர் சொல்வது இந்து பார்ப்பன கலாச்சாரத்தைத்தான். அவர் சொல்வதுபோல அது புறக்கணிக்கப்பட்டிருந்தால் எப்படி பிஜேபியால் ஆட்சிக்கு வந்திருக்க முடியும்?. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பார்ப்பன சிந்தனைக்கு எதிரான சிந்தனைகள்தான் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட ஒரு நபர் தமிழக கோயில்களை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று சொன்னால் அதைத் தமிழக கோயில்களை திருடும் பார்ப்பன கும்பலின் முயற்சியாகப் பார்க்காமல் வேறு எப்படி பார்க்க முடியும்? ஒரு வேளை அப்படியான ஒன்று நடந்தால் தமிழக கோயில்களில் மோடி சிலையும் அமித்ஷா சிலையும் ஏன் எச்.ராஜா சிலைகள் கூட வைக்கப்பட்டு அதைத் தமிழக மக்களை கும்பிட வைத்து விடுவார்கள். இவை எல்லாம் மிகையான கூற்றாக உங்களுக்குத் தெரியலாம் ஆனால் பார்ப்பனக் கும்பலின் நச்சு சிந்தனை இதைச் செய்யாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. தமிழக மக்களின் ஆன்மீக சிந்தனையை பிஜேபிக்கு, பார்ப்பன அடிமைத்தனத்திற்கு ஒட்டுமொத்தமாக மடை மாற்ற வேண்டும் என்பதுதான் இதற்குப் பின்னால் உள்ள சதி. இதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் நம்மால் ஒருக்காலும் பார்ப்பனியத்தை வேரறுக்க முடியாது.
- செ.கார்கி