சாதாரணமாக அரசியல் என்றால்…, பணம், பதவி, பகட்டு அதிகாரம் என்று உள்ள நிலையில் விடுதலைப்போராட்ட காலத்தில் அர்ப்பணிப்பு மிக்க ஓர் அரசியல் வாழ்வு மேற்கொண்டு நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்த விடுதலைப்போராட்ட வீரர் காஞ்சிபுரம் ச. கிருஷ்ணசாமி சர்மா குறித்து தோழர் ச.முத்துக்குமார் அவர்கள் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள 'கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா' எனும் நூல் கிருஷ்ணசாமி மறைந்த நூற்றாண்டில்
(23-06-2025) காலம் காட்டும் வரலாறாக வெளிவந்துள்ளது. இன்றுவரை விரிவாக யாரும் அறிந்திராத நூற்றாண்டு ஆவணங்களைக் கண்டறிந்து கிருஷ்ணசாமி 1908 ஆம் ஆண்டு கரூர் சதி வழக்கில் கைதான வரலாற்றை தமிழ் மக்கள் அறியும்படி எளிய நடையில் நூலாக்கி உள்ளார் ஆய்வாளர் ச. முத்துக்குமார் அவர்கள். இந்நூல் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் வரலாற்றுப் பதிவாகும்.
1986 ஆம் ஆண்டு, கிருஷ்ணசாமி பிறந்த நூற்றாண்டில் (22-03-1887) வரலாற்றாய்வாளர் மறைந்த பெ.சு.மணி அவர்கள் “காரல் மார்க்சின் இலக்கிய இதயம்” என்ற நூலில் தேசிய மாவீரன் கிருஷ்ணசாமி சர்மா எனத் தலைப்பிட்டு முதன்முதலாகக் களஆய்வின் வழி எழுதியபின் 1987 ஆம் ஆண்டு திருநெல்வேலி எழுச்சி குறித்து எழுதிய ஆ.இரா. வேங்கடாசலபதி கிருஷ்ணசாமி பற்றி குறிப்பிட்டுள்ள நிலையில், கிருஷ்ணசாமி சர்மா பற்றி விரிவானதொரு நூலாக கரூர் சதி வழக்கு நூல் 2024 இல்தான் வெளிவந்திருப்பது தமிழர்களின் அரசியல் வரலாற்று விழிப்பு உணர்ச்சியின் போதாமையை வெளிக்காட்டுவதாக உள்ளது.
கிருஷ்ணசாமி சர்மா பற்றி அறிந்துகொள்ள வரலாற்றின் பக்கங்களில் பெருந்தமிழர் வ.உசி, தோழர் ம.சிங்காரவேலர், தமிழ்த்தென்றல் திரு.வி.க. ஆகியோரின் வரலாற்றில் ஓரிரு வரிகளில் குறிப்பிடுபவராக மட்டுமே இருக்கிறார். அவரைப்பற்றி அறிந்திராத இயக்கத் தலைவர்கள் - எழுத்தாளர்கள் மத்தியில் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர் கிருஷ்ணசாமி பற்றி - அவர் 1908 ஆம் ஆண்டில் கரூரில் பேசிய பேச்சுக்களுக்காக கைது செய்யப்பட்ட வரலாற்றை 117 ஆண்டுகளுக்குப் பின் ஆவணங்களைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் ஆய்வாளர் ச.முத்துக்குமார் அவர்கள் 'கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா' எனும் நூலை நேர்த்தியாக எழுதி உள்ளார். இந்நூலில் உள்ள தகவல்களை அறிந்து கொள்ள ஒருவருக்குப் பல ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில் கடும் உழைப்பும் - அக்கறையும் கொண்டு 27 தலைப்புகளில் பல கருத்துக்களை இந்நூலில் வடித்துள்ளார்.
யார் அந்தக் கிருஷ்ணசாமி…?
1908 ஆம் ஆண்டு சூன் 14 ஆம் நாள் ஆங்கிலேயரின் கோடைக்கால தலைமையகமான சிம்லாவில் இருந்த அதிகாரி எச்.ஏ. ஸ்டூவர்ட்க்கும் இந்தக் கேள்வி எழுந்ததாக இந்நூலைத் தொடங்குகிறார் முத்துக்குமார். மயிலாப்பூர் கிருஷ்ணசாமி சர்மா, வந்தேமாதரம் கிருஷ்ணசாமி சர்மா, காஞ்சிபுரம் கிருஷ்ணசாமி சர்மா, கிருஷ்ணா அய்யர் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட கிருஷ்ணசாமி சர்மா பற்றியும் அவர்மீது தொடுக்கப்பட்ட வழக்கு மற்றும் காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் அன்றைய செயல்பாடுகள் பற்றியும் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் பெருந்தேவி அம்மையாருக்கும் குடவாசல் சடகோபாச்சாரிக்கும் 1887ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்தான் கிருஷ்ணசாமி சர்மா. வழக்குரைஞராக விளங்கிய தந்தை காங்கிரசு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். 1888 -அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கூட்டத்திலும் 1890 கல்கத்தாவில் நடைபெற்ற கல்கத்தா கூட்டத்திலும் பெற்றோருடன் குழந்தைப் பருவத்திலேயே கலந்து கொண்டவர் கிருஷ்ணசாமி சர்மா. தனது நான்கு வயதில் தந்தையை இழந்த நிலையில் தாய் பெருந்தேவி அம்மையாரால் கொள்கை வழி வளர்க்கப்பட்டவர் கிருஷ்ணசாமி சர்மா. 1903 ஆம் ஆண்டு டிசம்பர் 28,29,30 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தொண்டராகப் பணியாற்றியவர். 1904ஆம் ஆண்டு பம்பாய் மாநாட்டிலும் பங்கேற்றவர் என்கிறார் பெ.சு.மணி.
“நமது சர்மா அவர்கள் ஏனைய தேசபக்தர்களைப் போன்று தனது வாழ்நாளில் வேறு ஒரு தொழிலிலிருந்து தேசசேவைக்கு குதித்தவரன்று” என்று பெரியார் குடியரசு ஏட்டிலே குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் போராட்ட சொற்பொழிவாளர்களில் ஒருவராக கைச்செலவிற்கு மாதம் ரூபாய் இருபத்தைந்தும் மூன்றாம் வகுப்பு ரயில் கட்டணமும் வழங்கப்பட்டது. சாலை வழியாகப் பயணிக்கும்போது ஒரு மைல் தூரத்துக்கு இரண்டு அணா பெற்று முழுநேர அரசியல் பணியை கிருஷ்ணசாமி சர்மா இளம் வயதிலேயே மேற்கொண்டதை இந்நூலில் குறிப்பிட்டுள்ளார் முத்துக்குமார். இன்றைக்குப் பொதுவுடைமை இயக்கங்கள் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கு முன்மாதிரியாக இது அமைந்துள்ளது கவனிக்கத் தக்கதாகும்.
ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் தீவிர அரசியல் போராட்டக்காரர்கள் என்று 21 பேரைக் குறிப்பிட்டு காவல்துறை சுற்றறிக்கை (para 1148 of 1907) வெளியிடப்பட்டதையும், அப்பட்டியலில் ஆறாவது நபராக கிருஷ்ணசாமி இருந்ததையும், அவரின் சங்கேத எண் 301 என்பதையும், புலனாய்வுப் பிரிவும் - இரயில்வே போலிசும் ஒரே டி.ஐ.ஜி.யின் கீழ் இணைந்து புலனாய்வு மேற்கொண்டதையும் இந்நூலில் சுட்டிக்காட்டி உள்ளார்.
1905 இல் வங்காளப் பிரிவினையை ஒட்டி எழுந்த 'தேசிய எழுச்சியின்' வழி விபின் சந்திரபாலரின் பேச்சுக்களும் எழுத்தும் சமூகத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்நூலில் விளக்கி உள்ளார்… பெருந்தமிழர் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயர், கிருஷ்ணசாமி சர்மா ஆகியோர் அவ்வெழுச்சிக் காலத்தில் ஆங்கிலேய அரசால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 124 ஏ பிரிவின் கீழ் ஒடுக்கப்பட்ட வரலாற்றை நம்முன் வைக்கிறார்.
வ.உ.சி 1908 ஆம் ஆண்டு பிப்ரவரி 23,26 மார்ச் 2,3 தேதிகளில் பிரிட்டிஷ் மக்களுக்கும் மன்னருக்கும் எதிராகப் பேசியதற்காக தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டு மார்ச் 12 இல் கைது செய்யப்பட்டதைப் போன்று, ஐரோப்பியர்களைத் தாக்கும்படி உள்ளூர் பொதுமக்களையும் சிப்பாய்களையும் தூண்டிவிட்ட குற்றங்களுக்காக 124 ஏ, 153 ஏ, 505 ஆகிய இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் கிருஷ்ணசாமி சர்மா மீது 1908ஆம் ஆண்டு கரூரில் மார்ச் 16-17 தேதிகளில் பேசியதற்காக வாழ்நாள் தண்டனை முதல் மூன்றாண்டு தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மார்ச் மாதம் 17 ஆம் நாள் குறிப்பெடுத்த காவலர் குப்புசாமி குறித்து இந்நூலில் முத்துக்குமார் கொடுத்துள்ள தகவல்கள் அனைவரும் படித்தறிய வேண்டிய ஒன்றாகும்.
1908 மார்ச் மாதம் 17 ஆம் தேதி கரூரில் பேசியதற்காக சூன் மாதம் 12 ஆம் நாள் சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கிருஷ்ணசாமி அவர்களுக்கு கோவை மாவட்ட நீதிபதி ப்ராட்புட் (R.D. Broadfoot) செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் ஐந்தாண்டு நாடு கடத்தல் தண்டனை வழங்கினார். தமிழ்நாட்டின் கோவை, ஆந்திராவின் பெல்லாரி, கேரளத்தின் கண்ணனூர் என அன்றைய சென்னை மாகாணத்தின் சிறைகளில் தன் சிறைவாழ்வை பல இன்னலுக்கு இடையே கழித்தார்.
கிருஷ்ணசாமி சர்மாவின் சிறை அனுபவங்களைப் பற்றி THE NATIONAL MOVEMENT IN TAMIL NADU, 1905-1914 AGITATIONAL POLITICS AND STATE COERCION என்னும் நூலில் வரலாற்றாய்வாளர் N.ராஜேந்திரன் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
'கைதி அமர்ந்திருக்கும்போது பாடுகிறார் அல்லது உரத்த குரலில் பேசுகிறார். ஒரு வாக்கியத்தின் நடுவில் அவரது கருத்துக்கள் பொருத்தமற்றவை. அவர் நிறுத்துகிறார், அடடா பட்லர், அடடா முட்டாள்தனம் போன்ற வெளிப்பாடுகளை மீண்டும் கூறுகிறார். அவர் தனது ஆடைகளைக் கிழிக்கிறார். அவர் எந்த ஆடைகளையும் அணிய மறுக்கிறார், மேலும் தனது லாங்கோட்டியைக் கூட கழற்றியுள்ளார். அவர் தனது பழக்கவழக்கங்களில் அழுக்காக இருக்கிறார், அவர் தனது அறையின் தரையில் சிறுநீர் கழிக்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது தலைமுடியிலும் உடலிலும் மலத்தைத் தேய்த்துக் கொண்டார்.
பைத்தியக்காரத்தனத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தாலும், சிறைச்சாலைகளின் உதாரணம் சர்மாவின் மனநிலை பெரும்பாலும் அல்லது முழுமையாக மெட்ராஸுக்குச் சென்று ஜனவரி 1910 இல் சிறையிலிருந்து வெளியே வருவதற்காக போலியான செயல் என்று சிறை அதிகாரியால் வாதிடப்பட்டது. இருப்பினும், சர்மா ஒரு பைத்தியக்கார விடுதிக்கு மாற்றப்பட்டார். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அவர் மீண்டும் சிறைத் தண்டனையை அனுபவிக்கத் தகுதியானவர் என்று கண்டறியப்பட்டு, கண்ணூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அவரது இளம் மனைவி பட்டம்மாள் மற்றும் அவரது தாயார் பெருந்தேவி அம்மாள் ஆகியோரின் கருணை மனுக்கள் இருந்தபோதிலும், சர்மா தனது முழு சிறைவாசத்தையும் அனுபவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.’
விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணசாமி சர்மா 1905 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், மூன்று நான்கு ஆண்டுகளில் விடுதலை கிடைத்துவிடும் என்ற கருத்து அப்போது தலைவர்களிடம் இருந்த நிலையில்… பிரம்மச்சரிய வாழ்க்கையை மேற்கொண்டதாக பெ.சு மணி குறிப்பிடுகிறார். கிருஷ்ணசாமி சர்மா அவர்களின் இளம் மனைவி அனுபவித்த துன்பங்கள், மனப்போராட்டங்கள் மட்டுமல்லாமல் தனது கணவர் கிருஷ்ணசாமி காலமானபோது எவரின் துணையுமின்றி - இளம் சிறுவன் தோழர் கே.எஸ். பார்த்தசாரதி துணையுடன் மாட்டு வண்டியில் தனது கணவரின் உடலை எடுத்துச்சென்று வேகவதி ஆற்றங்கரையில் பட்டம்மாளே இறுதிச் சடங்குகள் செய்த நிகழ்வு காலத்தின் பெருந்துயரப் பதிவாகும். பட்டம்மாளின் பெயர் வரலாற்றில் அறியப்படாத நிலையில் வ.உ.சி ஆய்வாளர் ரெங்கையா முருகன் வழி மேற்படி நூல் வழி இப்போதுதான் அதிகார பூர்வமாக அறிந்தோம். வரும் பதிப்புகளில் பட்டம்மாள் பற்றிய பதிவை இந்நூலில் விரிவாகச் செய்ய வேண்டும் என முத்துக்குமார் அவர்களிடம் கோருகிறேன்.
1908 இல் முதல் சிறைவாசத்தில் சிறையில் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணசாமி சர்மா 1922 இல் கடலூர்-வேலூர் சிறைகளில் பல நூல்கள் எழுதியதை இந்நூலில் ஆவணங்களின் வழி எடுத்தாண்டிருப்பது விடுதலைப் போராட்டத்தில் கிருஷ்ணசாமி சர்மாவின் அர்ப்பணிப்பு மிக்க பங்களிப்பை நாம் அறிய உதவுகிறது. உலகத்தலைவர்கள் தொடங்கி உள்ளூர் தலைவர்கள் மற்றும் இந்திய மாதர்களின் நிலை, இந்தியாவில் கல்வி, மாமன்னன் இராசராசசோழன் மற்றும் புத்தர் சாதகக் கதைகள் என 22 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். அந்நூல்களைக் கண்டறிந்து வெளியிட முயல வேண்டுமெனக் கோருகிறேன்.
இந்நூலில் 'இந்தியா இழந்த தனம்' பற்றி முத்துக்குமார் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மிகவும் வியப்பைத் தருகிறது. தகவல் பரிமாற்றம் குறைந்த அந்நாளில் அரசின் பொருளாதாரப் புள்ளி விவரங்களைத் திரட்டி கிருஷ்ணசாமி சர்மா தந்துள்ளது அவரின் விரிந்த சமூகவியல் அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர் வழியில் இன்று தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவைவரி மற்றும் பல்துறை வரிமூலம் சுரண்டப்படும் பொருளாதார சுரண்டலைப்பற்றி எழுத எவரும் இல்லையே எனும் ஏக்கம் உண்டாகிறது.
வாழ்ந்த காலத்தில் வ.உ.சி -பாரதி ஆகியோர் உரிய அளவில் போற்றப்படாத நிலை இருந்தது என மூத்த தோழர் ஜீவா எழுதி உள்ள கருத்தை பேராசிரியர் வீ.அரசு தொகுத்த வ.உ.சி நூலில் எடுத்தாண்டு உள்ளார்… காந்தி தொகுப்பு மற்றும் பட்டாபி சீதாராமன் தொகுத்த காங்கிரசு வரலாற்றில் வ.உ.சி பற்றி குறிப்பிடப்படவில்லை…1947 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசு விடுதலைப் போராட்ட மலரில் வ.உ.சி.யின் ஈகம் குறிப்பிடப்படவில்லை என ம.பொ.சி எழுதி வருந்தி உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணசாமி பற்றி யாரும் எழுதவில்லையே என்பது வியப்பானதாக இல்லை.
வ.உ.சி. ஜஸ்டிஸ் கட்சியின் ஆள் என புறக்கணிக்கப்பட்ட நிலையில், காந்தியால் “முற்றிலும் நாட்டின் தொண்டிற்காகவே தம்மை அர்ப்பணிக்க விரும்புகிறார் என குறிப்பிடப்பட்ட கிருஷ்ணசாமி சர்மா புறக்கணிக்கப்பட்டார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும். கிருஷ்ணசாமி சர்மா ஆங்கிலேய அரசால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் தண்டனைக் குற்றவாளி என்பதும், காந்தியின் காங்கிரசு கோட்பாடுகளில் முரண்படுபவர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ்மொழியில் நூல்பல எழுதியவர்; சாதி - மத வேற்றுமைகளை எதிர்த்தவர் வ.வே.சு நடத்திய குருகுலத்தின் உணவு தீண்டாமையை எதிர்த்தவர் என்பதாலும்; ருக்மணி அருண்டேல் திருமணத்தை ஆதரித்தவர் என்பதாலும்; அன்றைய ஆதிக்க சக்திகளால் புறக்கணிக்கப்பட்டவராக கிருஷ்ணசாமி உள்ளார். அதன் உச்சமாக அவர் காலமானபோது அவரை அடக்கம் செய்யக்கூட சொந்த சாதியினரோ உறவினரோ கூட வராமல் போனதுவரை அது நீடித்திருக்கிறது என்பது பெருந்துயராகும்.
1905 ஆம் ஆண்டு ஏற்பட்ட விடுதலைப் போராட்ட எழுச்சியில் பங்கேற்று 1908 இல் சிறைசென்றவர்கள் திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, அரவிந்தர், நீலகண்ட பிரம்மச்சாரி விடுதலைக்குப்பின் திலகர் காலமானார், வ.உ.சி நொடிந்து வறுமையுற்று வாழ்வதற்கே அல்லாடினார், காந்தி-அன்னி பெசன்ட் அரசியலை எதிர்த்தார், திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் நூல் பதிப்பில் ஆர்வம் காட்டினார். பெரியாரின் வகுப்புரிமை கருத்திற்குத் துணைநின்றார். சுப்பிரமணிய சிவா தொழு நோயுற்று பாரதமாதா கோயில் அமைப்பு பணிக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார். வங்காளத்து அரவிந்தர் புதுச்சேரியில் ஆசிரமம் அமைத்து சாமியார் ஆனார். ஆஷ் கொலை வழக்கில் ஈடுபட்ட நீலகண்ட பிரம்மச்சாரி பாலாறு உற்பத்தி ஆகும் நந்தி மலையில் ஆசிரமம் கண்டார். இந்நிலையில் கிருஷ்ணசாமி அரசியல் கூர்மை பெற்று மீண்டும் சிறைக்குச் சென்று நூல் பல எழுதியதுடன் இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு கொண்டாடிய முதல் மேநாள் கூட்டத்தில் தோழர் சிங்காரவேலருடன் பங்கேற்றார் என்பது அவரின் அரசியல் வளர்ச்சியைக் காட்டுகிறது.
அவர் காங்கிரசுக் கட்சியின் அடுத்த மாநாடு காஞ்சியில் நடத்தவேண்டுமென 1924 நவம்பர் 15,16 இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டில் முன்மொழிந்தார். காஞ்சிபுரத்தில் 1925 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமை வலியுறுத்தி பெரியார் வெளியேறினார். 1925 இல் முதல் கம்யூனிஸ்ட் கட்சி, தோழர் ம.சிங்காரவேலர் தலைமையில் தொடங்கப்பட்டது… விடுதலைப்போராட்ட வீரரும் சாதி மத வேற்றுமை கடந்து பொருளாதார சமத்துவம் விரும்பும் ஒருவராகவும் விளங்கிய கிருஷ்ணசாமி காலமாகாமல் இருந்திருந்தால் அவரின் நிலை தமிழ்நாட்டின் அரசியலை வேறுவிதமாக மாற்றி இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சென்னையில் நடைபெற்ற 1923 மே நாள் விழாவில் தலைமையுரை ஆற்றிய கிருஷ்ணசாமி சர்மா தனது தலைமை உரையில் தோழர் சிங்காரவேலர் வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டினார். கம்யூனிஸ்டுகளை, போல்ஷ்விக்கர்கள் என்று குறை கூறுவோரைக் குறிப்பிட்ட பொழுது உண்மையான கேள்வி சமூக மாற்றம் பற்றியது எனக் கூறினார். மதவேற்றுமைகள், சாதி வேற்றுமைகள் ஒழிக்கப்பட வேண்டும். இதில் பல தடைகள் எழலாம். ஆயினும் இதைப்பற்றி சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி சர்மா பேசினார். சிங்காரவேலர் வெளியிட்ட லேபர் கிசான்கட்சி அறிக்கையை இன்று நான் சொன்னேன் என்பதற்காக கையெழுத்திட்டுவிட்டு நாளை போலீசைக் கண்டதும் பயப்படக்கூடாது என்றும் சிங்காரவேலரின் இந்துஸ்தான் தொழிலாளர் விவசாயிகள் கட்சியின் கொள்கை, சமூக சுயராஜ்யத்தை இந்திய மக்களுக்காக நிறுவுதே ஆகும் என்றும் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் நாளான இன்றைய மே தினத்தில் சிங்காரவேலர் மிகுந்த முயற்சிகள் எடுத்து, இந்த இயக்கத்தை நிறுவி உள்ளார் என்றும் கிருஷ்ணசாமி சர்மா பாராட்டி உள்ளார்……என இந்நூலில் 134 ஆம் பக்கத்தில் முத்துக்குமார் குறிப்பிட்டுள்ளார். அவர் பேசிய இடத்தில்தான் இப்போது காமராசர் ஆட்சியின் போது உழைப்பாளர் சிலை அமைக்கப்பட்டுள்ளது வரலாற்றுப் பெருஞ்சிறப்பாகும்.
அன்றைய ஆட்சியாளர்களால் தேச விரோதிகள் என குற்றம் சாட்டப்பட்ட வ.உ.சி- கிருஷ்ணசாமி முன்வைத்த கருத்துகள் இன்றும் பொருத்தம் உடையதாக இருப்பதைக் காண வியப்பாக உள்ளது. வ.உ.சி மொழிவழி அமைவது தனிநாடு என மெய்யறத்தில் முன்வைத்தார். கிருஷ்ணசாமியும் தமிழில் அரசியல் நூல்கள்வழி மக்களுக்கு விழிப்பூட்டினார். சாதி-மத வேற்றுமைகள் கடந்த உழைக்கும் மக்களின் உரிமைக்கான குரல்களாக அவர்களின் குரல் இருந்ததோடு, தொழிலாளி வர்க்க விடுதலைக்கும் தான் முன்வைத்த கொள்கைகளுக்காக களத்தில் நின்றனர். இவர்களின் கருத்துகளை காலத்திற்கேற்ப வளர்த்தெடுக்க அமைப்புகள் இல்லாத நிலையில் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் நூற்றாண்டு ஆவணங்களைப் புரட்டி வரலாற்றில் மறைக்கப்பட்ட விடுதலைப்போராட்ட வீரர் கிருஷ்ணசாமி சர்மா 1908 ஆம் ஆண்டு கரூரில் கைதான வரலாற்றை 'கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா' எனும் நூலைத் தெளிவான எழுத்து நடையில் நம்முன் தோழர் முத்துக்குமார் முன்வைத்துள்ளார். இந்நூலை தமிழ் மக்கள் கற்று-உணர்ந்து சமூக மாற்றத்திற்குத் துணை நிற்க வேண்டியது அவ் வீகியர்களுக்கு நாம் செய்யவேண்டிய சமூகக் கடமையாகும். நூற்றாண்டு நினைவு நாள் காணும் விடுதலைப்போராட்ட வீரர் கிருஷ்ணசாமி சர்மாவுக்கு செவ்வணக்கம்….நூலை ஆக்கித் தந்த தோழர் முத்துக்குமாருக்கு வாழ்த்துகள்.
கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா
நூலாசிரியர் - முத்துக்குமார், வெளியீடு: சந்தியா பதிப்பகம், 94447 15316
பக்கங்கள்: 160, விலை ரூ.190
- காஞ்சி அமுதன்