பெண் படைப்புகள் தமிழிலக்கியப் பரப்பில் தனித்துவமான இடத்தினைப் பெறக்கூடியவை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழிலக்கியப் பரப்பில் தங்களின் படைப்பாற்றலாலும், உணர்வு வெளிப்பாட்டு முறையினாலும், தங்களைச் சுற்றியுள்ள சமூகத்தினைப் பற்றிய புரிதலாலும் எழுத்துலகில் பெண் படைப்பாளர்கள் பலர் தங்கள் படைப்புகளைப் படைத்தனர். அத்தகைய பெண் படைப்பாளுமைகளில் தனக்கென தனித்த முத்திரைப் பதித்தவர் எழுத்தாளர் எஸ். கமலா.
1931ஆம் ஆண்டு தினமணி பாரதி மலரில் 'வீடும் வெளியும்' என்ற இவரின் கதை முதன்முதலாக வெளிவந்தது. இக்கதை குடும்பம் சார்ந்த கதையாக இருப்பினும் கணவன், மனைவி இருவரின் மனநிலையினை அவரவர் நிலையில் நின்று மிக எதார்த்தமாக சித்தரிக்கப்பட்ட கதை. இச்சிறுகதை எழுத்தாளர் எஸ். கமலா அவர்களின் படைப்பு உத்தியினையும், மொழிச் சீர்மையினையும் நேர்த்தியாகப் புலப்படுத்தியமையைக் காண முடிகிறது.
எழுத்தாளர் எஸ்.கமலா என்று தன் பெயரிலேயே தன் அடையாளத்தினை நிறுவிய கமலா விருத்தாசலம் அவர்கள் தமிழ்ச் சிறுகதை உலகின் மன்னனான எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவி. கமலா அவர்கள் தன் கணவரின் பெயரினை தன் பெயருடன் இணைக்காமலேயே தன் படைப்புகளை எழுதினார். எழுத்தாளர் புதுமைப்பித்தன் அறிமுகமான அளவிற்கு எழுத்தாளர் கமலா அவர்கள் பெரிய அளவில் தமிழ் இலக்கியப் பரப்பில் அறிமுகமாகவில்லை என்பது வருத்தமே. பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி, எழுத்தாளர் கமலா அவர்களின் 22 கதைகளை நினைவுத் தீ என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 1971ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரம் காசுமாலை என்ற பெயரில் வெளியிட்ட இந்நூல் 2025ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.
“கதை எழுதும் விஷயத்தில் நீயும் என்னுடன் தொடர்ந்து வரவேண்டும். அதனால்தான் உன்னை எழுது எழுது என்று தொந்தரவு செய்கிறேன். மனதில் உள்ள துன்பங்களுக்கு வடிகால் எழுத்துதான்”(தினகரி சொக்கலிங்கம்; 2025) என்ற அப்பாவின் வார்த்தைகள் அம்மாவையும் எழுத வைத்தன என்று இவர்களின் மகள் தினகரி சொக்கலிங்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.
மேலும்,“எல்லாப் பெண்களைப் போல், நீயும் சமையலும், வீட்டு வேலைகள் செய்வதுமான சாதாரண வாழ்வை வாழக் கூடாது”(தினகரி சொக்கலிங்கம்; 2025) என்பது அம்மாவிடம் அப்பா சொன்ன வார்த்தைகள் என்கிறார் மகள் தினகரி சொக்கலிங்கம்.
தமிழின் மிகச்சிறந்த படைப்பாளி புதுமைப்பித்தன் அவர்கள், தான் படைப்பாளியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவியும் தன்னைப் போன்று படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருந்தார். ஒவ்வொரு முறையும் தன்னுடைய மனைவிக்கு சிறுகதை எழுதுவதற்கான உத்வேகத்தினை வழங்கியதோடு தானே அதற்கு வழிகாட்டியாகவும் விளங்கினார்.
“நீ படிக்காத புத்தகங்கள் இங்கே நிறையக் கிடக்கிறதே. அனுப்பவா…? நீ நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும். உன்னால் முடியும்… இந்த விஷயத்தில் நீயும் என்னுடன் தொடர்ந்து வரவேண்டும். என்னுடன் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.” (ஆ.இரா.வேங்கடாசலபதி.2025)
புதுமைப்பித்தன் தன்னுடைய மனைவி தனக்கு இணையான படைப்பாளியாக உருவாக வேண்டும் என்ற பேராவலை பல நிலைகளில் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவினை 1930களில் புதுமைப்பித்தன் செய்துள்ளார். அன்றைய சூழலில் பெண்களின் உலகம் வீடாக மட்டுமே இருந்த நெருக்கடியான நிலையில் அவரின் இச்சிந்தனை வியக்க வைக்கிறது. பாலின சமத்துவம் குறித்த பெரும் புரிதல் ஏற்பட்ட இன்றைய சூழலில் கூட எத்துணை ஆண் படைப்பாளிகள் தன் மனைவி எழுதுவதற்கு ஒத்துழைப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
“நீயும் இந்த விஷயத்தில் என்கூட தொடர்ந்து வரவேண்டும் என்றுதான் ஆசை. அதனால்தான் உன்னை எழுது எழுது என்று தொந்தரவு செய்கிறேன் கண்ணா. உன் புத்தியில் எனக்கு ரொம்ப நம்பிக்கை. நீ மனசு வைத்தால், நடக்காத காரியம் கிடையாது” (ஆ.இரா.வேங்கடாசலபதி.2025).
புதுமைப்பித்தன் அவர்கள் தன் மனைவி கமலாவின் அறிவின் மீதும், படைப்பாற்றலின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை இப்பதிவுகள் உறுதிசெய்கின்றன.
மனைவியின் அறிவைக் கண்டு அஞ்சி, எங்கே தன்னை விட உயர்ந்துவிடுவாளோ என்று அவளின் ஆளுமையினைத் தட்டித் தட்டி வைக்கும் சமூக இயங்கியலில் புதுமைப்பித்தன் அவர்கள் சத்தமில்லாமல் தன் காலத்தில் பெரும்புரட்சியை சாத்தியமாக்கினார்.
“நான் என்னதான் எழுதிக் குவித்தாலும் நீயும் ஒத்தாசை செய்தால் தானே எனக்கும் திருப்தி, மகிழ்ச்சி. நம்மைப் போல் அமைந்த ஜதை… யார் இருக்கிறார்கள்” (ஆ.இரா.வேங்கடாசலபதி. 2025) என்று தன் மனைவி எழுதுவதைத் பெருமிதமாக எண்ணியுள்ளார்.
அவரின் எண்ணத்திற்கேற்ப எழுத்தாளர் கமலா அவர்களும் மிக நேர்த்தியாகத் தன் படைப்புகளைப் படைத்தார்.
“‘மணிக்கொடி’ கமலாவின் இரண்டு கதைகளை வெளியிட்டது. ‘காசுமாலை’ என்ற நெடுங்கதை வெளியானபோது அதன் ஆசிரியர் கூற்றை இங்கு மேற்கோள் காட்ட வேண்டும்."
“ஸ்ரீமதி எஸ். கமலாம்பாள் எழுதிய ‘காசுமாலை’ இதுவரையில் வெளிவந்துள்ள தமிழ்க் கதைகளில் முதன்மை ஸ்தானம் பெற்றவைகளுள் சேர வேண்டியது” (ஆ.இரா.வேங்கடாசலபதி.2025).
மணிக்கொடி இதழின் ஆசிரியர் எழுத்தாளர் எஸ். கமலா அவர்களின் எழுத்துக்கள் சிறுகதைப் படைப்பிற்குரிய முழுமைத் தன்மையோடு இருப்பதைப் பதிவு செய்துள்ளார். மேலும்,
“ஸ்ரீமதி எஸ். கமலாம்பாள் இதே ரீதியில் எழுதுவாரானால் இன்னும் வெகு சீக்கிரத்திலேயே நம்முடைய சிறந்த எழுத்தாளர்களை வெகுதூரம் பின்னே விட்டு விடுவார் என்பதில் சந்தேகமில்லை” (ஆ.இரா.வேங்கடாசலபதி.2025) என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சிறப்பிற்குரிய படைப்பாற்றல் கொண்ட எழுத்தாளர் கமலா அவர்களின் 22 கதைகள் நமக்குக் கிடைக்கின்றன. 1935இல் இவரின் முதல் கதை தினமணி, பாரதி மலரில் வெளிவந்ததிலிருந்து அடுத்தடுத்தக் கதைகளை எழுதத் தொடங்கினார்.
‘காசுமாலை’ என்ற இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் கதை குடும்பத்திற்குள் நிகழும் பொருளாதாரம் சார்ந்த நுண் அரசியலை நுட்பமான இழையாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக தன் படைப்பாற்றலால் செதுக்கியுள்ளார் இவ்வெழுத்தாளர். இக்கதையில் இடம்பெற்றுள்ள பாத்திரப்படைப்பு, மொழி நடை என்று ஒவ்வொன்றையும் குறித்து மிக விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தலாம். அம்மா குறித்து நம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒற்றை பிம்பத்தினை உடைத்து நொறுக்கும் இக்கதை அவரின் மற்றொரு வடிவத்தை எவ்வித பூச்சுமில்லாமல் உள்ளது உள்ளபடி பதிவு செய்துள்ளது. சொற்களின் வலிமை, யாரை நோக்கி அச்சொற்களைக் கையாள்கிறோம், அதன் பாதிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை காட்சிகளாக நம் கண்முன் மொழிவழி கடத்தியுள்ளார் இப்படைப்பாளி. நீண்ட கதையாக இருப்பினும் சற்றும் அலுப்பில்லாமல் மிக சுவாரசியமாக அமைந்துள்ளது இக்கதையின் தனிச்சிறப்பு.
‘ஆசை’ என்ற அடுத்த கதை பிரிவின் வேதனையைச் சொல்லும் நிலையில் மனதின் நுட்பமான மாய வித்தைகளை உண்மையில் நடப்பது போல காட்சிப்படுத்தியுள்ளார் இவ்வெழுத்தாளர்.
‘முதலைச் சட்டை’ என்ற சிறுகதையில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சற்று இயல்பிகந்தவை என்பதை உணர்ந்தாலும் கதையின் போக்கும், விவரணைகளும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது. இளம்பெண்ணின் எண்ண ஓட்டம், பெற்றோரின் தவிப்பு என்று ஒவ்வொன்றையும் தனக்கே உரிய தனித்தன்மையான மொழியில் வாசகர்களுக்குக் கடத்திவிடுகிறார் இப்படைப்பாளி. மேலும் இக்கதையில் காட்சிப்படுத்தப்படும் நேர்த்தியான இயற்கை வருணனை ரசிக்கத்தக்கதாக உள்ளது.
‘குழந்தை மீனாள்’ என்ற சிறுகதை தனித்தன்மை வாய்ந்த கதை. இக்கதை 1931 ஆம் ஆண்டு மணிக்கொடி இதழில் வெளியானது. இவரின் சமகாலத்தில் படைப்புலகில் இயங்கிய பெண்கள் தொடாத கதைக்கருவினை மையமாகக் கொண்டு இப்படைப்பைப் படைத்துள்ளார். சாதி – சாதி சார்ந்த மனநிலை பெண்களின் உலகில் எவ்வாறு செயல்படுகிறது என்று இக்கதை லஷ்மி, ஜானகி என்ற இருபாத்திரங்கள் வழி மிகக் கூர்மையாக நமக்குள் கடத்திவிடுகிறது. ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இச்சாதியின் வேர் எவ்வாறெல்லாம் நுட்பமாக செயல்படுகிறது என்பதற்கு இக்கதை ஒரு சிறந்த சான்று. நம் சமூகத்தில் சாதி எந்த அளவிற்கு வினையாற்றுகிறது என்ற புரிதலோடு இக்கதையை இவர் படைத்துள்ளார்.
‘அந்தக் குடித்தனக்கார ஸ்திரீ' “என்னடீ குழந்தை சொல்றது? சூத்ராள் வீட்டில் குழந்தைக்குச் சாதம் ஊட்ட விடுவாளோ? ரொம்ப…” என்று வெறுப்பு நிறைந்த ஆத்திரத்தில் சொன்னாள். (ஆ.இரா.வேங்கடாசலபதி.90.2025)
என்று கூறுபவளின் வார்த்தைகள் தரும் வலியை உணரும் லஷ்மி இறுதியாக “கல்மிஷம் யார் மனதிலிருந்ததென்பதை எப்படிச் சொல்ல முடியும்?” என்று கூறி இக்கதையை நிறைவு செய்கிறார். சாதி வேற்றுமை மனிதனை மனிதன் எவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கிறது. மனங்களை எத்தகைய காயங்களுக்கு ஆட்படுத்துகிறது என்பதை இக்கதை வழி எழுத்தாளர் எஸ்.கமலாம்பாள் அவர்கள் புலப்படுத்தியுள்ளார்.
‘வார்த்தை – விஷம்’ என்ற சிறுகதை குடும்ப உறவுகளில் பெண்களுக்கிடையே நடைபெறும் நுண் அரசியலை உரையாடல் வழி நேர்த்தியாகக் கடத்திவிடுகிறது. திருமணமாகி கணவன் வீட்டிற்கு வரும் பெண்ணின் மன உணர்வு மற்றும் காலப்போக்கில் மாமியார், நாத்தனாரின் எதிர்பார்ப்புகள் கூடிய மன வெளிப்பாடு என்று ஒவ்வொன்றையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஆணின் தடுமாற்றத்தினை செறிவாக பதிவுசெய்த படைப்பு ‘திறந்த ஜன்னல்!’ பெரும்பாலும் குடும்பத்தில் பெண்களிடையே நடக்கும் உணர்வுகளையே கதைகளாக்கிய 1937இல் கமலா விருத்தாசலம் அவர்கள், ஆணின் உலகினை சமரசமற்று பதிவுசெய்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையிலான நெருக்கத்தினைப் பேசும் அதே வேளையில் கணவன் மனைவிக்குத் தெரியாது என்று எண்ணி செய்யும் தவறு புரியும்போது அப்பெண்ணின் மனம் படும்பாடு, அதேநேரத்தில் தன்நிலையை மனைவி அறிந்துவிட்டாளோ என்று கணவன் படும் மன உளைச்சல் என்று ஒவ்வொன்றையும் வார்த்தைகளில் வடித்துள்ளார் இப்படைப்பாளி. அதேநேரத்தில் இக்கதையில் நிறைவுப் பகுதியைக் கவிதையைப் போல் நிறைவு செய்துள்ளமை இப்படைப்பை மேலும் கொண்டாடத் தூண்டுகிறது.
வாய் பேச இயலாத காதும் கேட்காத மாற்றுத் திறனாளிப் பெண்ணின் எண்ணவோட்டத்தினையும், மன எழுச்சியையும் நேர்த்தியாகப் பதிவு செய்த சிறுகதை ‘ஊமைச்சியின் கலியாணம்’. வசதியான வீட்டுப் பெண்ணான அவளின் எதிர்பார்ப்புகள், திருமண வாழ்வில் அவள் எதிர்கொள்ளும் அவமானங்கள், ஏமாற்றங்கள் என்று ஒவ்வொன்றையும் வலியோடு கடத்துகிறது இப்படைப்பு.
உமா என்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணின் புரிதல் உணர்வையும், செயல் திறனையும் மெச்சும் இவ்வெழுத்தாளர் அதேநேரத்தில் அப்பெண் உளவியல் சார்ந்து கணவனால் அலைக்கழிக்கப்படுவதையும், உதாசீனப்படுத்தப்படுவதையும் உள்ளது உள்ளபடி உணர்வுப்பூர்வமாக வாசகர்களுக்குக் கடத்தியுள்ளார்.
வரலாற்றுப் பின்புலம் கொண்ட ‘இரத்த சாந்தி’ என்ற சிறுகதையை 1937 இல் எழுத்தாளர் கமலா விருத்தாசலம் அவர்கள் எழுதியுள்ளார். குடும்பக் கதைகளைக் கடந்து வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு இவரால் இத்தகைய சிறந்த கதையை எழுத முடிந்தது என்பது இவரின் படைப்பாற்றலின் பலம் என்றே கூறவேண்டும். நவாபின் படைத்தலைவன் அனந்தகிருஷ்ணன் நம்பி, சீதாலஷ்மி என்ற முதன்மைப் பாத்திரங்களைக் கொண்டு இயங்கும் இக்கதை அரசியல் பேசுவதோடு அரசியல் சூழ்ச்சியையும் பதிவு செய்யத் தவறவில்லை. சீதாலஷ்மி என்ற பெண் பாத்திரத்தின் ஆவேசத்தினையும், அறச்சீற்றத்தினையும், வீரத்தினையும் உணர்வுப்பூர்வமாக இக்கதையில் எழுத்தாளர் கமலா விருத்தாசலம் பதிவு செய்துள்ளார். பிற கதைகளில் இருந்து முற்றிலும் மாறான நிறைய உழைப்பினை வேண்டும் கதைக்களனை எடுத்து மிக அழுத்தமாக இப்படைப்பினை வழங்கியுள்ளார் இப்படைப்பாளி.
‘நினைப்பும் நடப்பும்’ என்ற சிறுகதை உடல்நலம் குன்றியுள்ள மீனா மற்றும் அவள் கணவன் ராமசாமிக்கு இடையில் நடக்கும் உறவுப் போராட்டத்தினை, அன்பின் வெளிப்பாட்டினை வெவ்வேறு கோணத்தில் எழுதியுள்ளார்.
“மனச்சோர்வு வியாதிக்குக் காரணமா? வியாதி மனச்சோர்வுக்குக் காரணமா? என்று அவள் எத்தனையோ தடவை ஆலோசித்துப் பார்த்தும் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவள் படுக்கையில் விழுந்து இன்றோடு இருபது நாட்கள் ஆயிற்று.” (ஆ.இரா.வேங்கடாசலபதி.145.2025)
உடல்நலம் குன்றிய பெண்ணின் மனநிலையினையும், அவள் கணவனின் ஒத்துழைப்பையும் இக்கதை பேசுகிறது. கணவன், மனைவிக்கிடையில் காணப்பெறும் அதிகாரமற்ற புரிதலோடு கூடிய உறவினை மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இப்படைப்பாளி.
மனித மனம் இருப்பது, இல்லாதது என்று பலவற்றையும் கற்பனையில் மிகுவித்துக்கொண்டு அதன்வழி அச்சத்திற்கும், தடுமாற்றத்திற்கும் ஆளாவது இயல்பு, அந்த வகையில் ‘அடைத்த கதவு’ என்ற சிறுகதை மர்மங்களும், கற்பனைகளும் நிறைந்த ஒரு வீட்டைப் பற்றிய நேர்த்தியான சித்தரிப்பு. அத்தகைய வீட்டிற்கு குடிவரும் கணவன், மனைவி அவர்கள் எதிர்கொள்ளும் வினோதமான உணர்வுகளையும், மர்மமான காட்சிகளையும் சற்றும் சுவை குன்றாமல் எழுதியுள்ளார் எழுத்தாளர் கமலா விருத்தாசலம்.
ஆண், பெண் உறவை தேர்ந்த படைப்பழகியலுடனும் நேர்மையுடனும் தன் படைப்புகளில் பதிவு செய்த சிறப்பு எழுத்தாளர் கமலா விருத்தாசலத்திற்கு உண்டு. அந்த வகையில் ‘அவனும் அவளும்’ என்ற சிறுகதை சமூக ஒழுங்கியலில் இருந்து சற்று விலகிய ஆண், பெண் நட்பினை அப்பெண்ணின் உணர்வின் வழியும், அந்த ஆணின் உணர்வின் வழியாகவும் கடத்திய இவரின் மொழியாளுமை சிறப்பாக அமைந்துள்ளது. மன உணர்வுகளை இவ்வளவு யதார்த்தமாக மொழியில் கடத்திவிட முடியும் என்பதற்கு இக்கதை பெரும் சான்று.
‘புறை ஓடிய ஆசை’ என்ற சிறுகதை இன்றும் கூட பேச இயலாத பொருண்மையைக் கொண்ட படைப்பு. 1944 ஆம் ஆண்டு இக்கதையை கமலா விருத்தாசலம் அவர்கள் எழுதினார்கள் என்பதே வியப்பை ஏற்படு்த்துகிறது. பெண் படைப்புகள் பேசுவதற்கான பொருண்மைகள் என்ற எல்லைக்கோடுகளைக் கடந்த படைப்புகளை இவர் சாத்தியமாக்கினார். பெண்ணின் உணர்வுப் போராட்டத்தினை நுணுக்கமாக மொழியில் செதுக்கிவிடும் வல்லமை இவருக்குண்டு என்பதை இப்படைப்பு உறுதி செய்கிறது.
குடும்பத்தில் கணவன், மனைவியிடையே நடைபெறும் சண்டை - அதன் உள்ளீடான பெரும் கோபம் என்று ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து மிக இயல்பாகப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் கமலா விருத்தாசலம். ‘வாய்த் துடுக்கு’ என்ற இச்சிறுகதை யதார்த்தத்தின் உச்சத்தினை செறிவாக முன்வைக்கும் படைப்பு.
‘வேறுபாடு உண்டா?’ என்ற சிறுகதை மனதின் பல்வேறு கேள்விகளின் விடையறியாப் பக்கங்களை பெண்ணின் கோணத்தில் பதிவு செய்யப்பட்ட படைப்பு.
“போக்கிரி செத்தாலும், யோக்கியன் செத்தாலும் பெயர் பிணந்தானே? சுடுகாட்டில் எரியும்போது நாற்றத்தில் வேறுபாடு உண்டா? எனக்கும் தெரியாது; அந்தச் செத்துப்போன பிணத்துக்கும் தெரியாது” என்று இக்கதையை நிறைவு செய்கிறார் எழுத்தாளர் எஸ்.கமலா.
‘காதல் பூர்த்தி’ என்ற சிறுகதை பங்கஜம் என்ற பெண்ணை மையமாக வைத்து நகர்கிறது. “பெண்ணுக்கு வயது வந்துவிட்டது என்று சுதந்திரத்தை எல்லாம் கட்டி மூலையில் போட்டுவிட்டு, சதா வீட்டிற்குள்ளேயே அவர்களைப் பூட்டிப்போடும், திருநெல்வேலி ஜில்லாவல்ல அது. அவ்வூரில் அக்கம் பக்கம் எங்கு வேண்டுமானாலும் போகலாம். வரலாம்” என்று திருநெல்வேலிப் பகுதியில் பெண்களுக்கிருந்த கட்டுப்பாட்டினை எள்ளலோடு பதிவு செய்யும் அதேவேளையில் இந்நிலையில் மாற்றங்கள் அவசியம் என்பதையும் துணிச்சலாக முன்வைத்துள்ளார்.
வாசகரின் மனதைப் பிசையும் கதை ‘பாசக்கயிறு’. குழந்தைகளிடம் நாம் காட்டும் கண்டிப்பின் அளவினை பொட்டில் அறைந்தாற் போல் உரைக்கிறது இச்சிறுகதை. குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இக்கதையில் மிக இயல்பாகப் பதிவு செய்துள்ளார் இப்படைப்பாளி.
‘வீடும் வெளியும்’ என்ற படைப்பு கணவன், மனைவி இருவரின் உலகையும் ஒருநாள் நிகழ்வின் வழி கட்டமைத்துள்ளது. ஒரு நாளை நாம் நினைக்குமாறு திட்டமிட்டாலும் அன்றைய நாள் அப்படியாக நிறைவு பெறுவது கடினம் என்பதையும் அதனூடான உணர்வுப் போராட்டத்தினையும் சுவை குன்றாமல் கூறிச் சென்றுள்ளார் எழுத்தாளர் எஸ்.கமலா அவர்கள்.
அன்பான கணவனின் மரணம் அதுதரும் வேதனை, பிறந்த வீட்டின் வேறுபாடு – உறவுகளின் கூரிய வார்த்தைகள் என்று ஒவ்வொன்றையும் அவருக்கே உரிய தனித்தன்மையுடன் நேர்த்தியான மொழிநடையில் எழுதியுள்ளார். அடுத்தடுத்தக் காட்சிகள், தங்கு தடையற்ற மொழியாளுமை நிறைந்த ‘நினைவுத் தீ ’ சிறுகதை இத்தொகுப்பின் ஆகச் சிறந்த படைப்பு.
“கணவனைக் கொன்றுவிட்டு களிப்போடிருக்கும் நீ என்னையும் கொன்று விட்டுத்தான் நிம்மதி அடைவாய் போலிருக்கிறது” (பக்.220) என்ற சகோதரனின் வார்த்தைகளை சொற்களா அவை, எரியும் தீப்பந்தங்கள் என்கிறார். இவ்வாறு அலைவுறும் நெஞ்சத்தின் வேதனை மொழி பேசும் அதேநிலையில் நெருங்கிய உறவுகள் ஏற்படுத்தும் அவமானங்களின் வலியினையும் துல்லியமாகப் பதிவு செய்துள்ளார் இவ்வெழுத்தாளர்.
‘காற்றினிலே வந்த கீதம்’ சிறுகதை நிறம் சார்ந்து நம் சமூகத்தில் நிரம்பி வழியும் ஏற்றத்தாழ்வினை உடைத்து நொறுக்குகிறது. பெண்ணின் கருமை நிறம் திருமணத்திற்குத் தடையாகப் பார்க்கும் சமூகக் கருத்தாக்கத்தை இக்கதையில் கேள்விக்குட்படுத்தியுள்ளார் இப்படைப்பாளி. பெண்ணின் அறிவையும், திறமையையும் கொண்டாடும் ஆணை இக்கதை வழி முன்னிறுத்தியுள்ளார் இப்படைப்பாளி.
“ஆண் மலடு சொன்னாலும் சொல்லலாம். அப்பனே பெண் மலடு யாருமில்லை என்று யாரோ ஒரு மகான் சொன்னதாக ஞாபகம். இதை அறிந்து நடக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. கலியாணமாகி மூன்று வருஷங்களுக்குள் ஒருத்தி குழந்தை பெறாவிட்டால் பிள்ளையைப் பெற்றவர்கள் தங்கள் மகனுக்கு இரண்டாந்தாரமோ, மூன்றாம் தாரமோ எது வேண்டுமானாலும் நடத்தப் பின்வாங்குவதில்லை” (ஆ.இரா.வேங்கடாசலபதி.230.2025)
குழந்தையில்லாமல் இருக்கும் பெண்ணைக் குடும்பமும், சமூகமும் எவ்வாறு பார்க்கும் என்பதையும் அதன் வழி அப்பெண் அடையும் வேதனையையும் மட்டும் பதிவு செய்யாமல் சமூகத்தின் இத்தகைய மூடத்தனமானப் பார்வைக்கு எதிரான தன் கருத்தினை ஆணித்தரமாகப் பதிவுசெய்துள்ளார் எழுத்தாளர் கமலா. 1950ஆம் ஆண்டு தினமணி கதிரில் வெளிவந்த இக்கதை இப்படைப்பாளியின் முற்போக்குச் சிந்தனையின் உச்சம்.
ஆண், பெண் உறவின் மீதான பொதுப்புத்திப் பார்வையினைக் கடந்து ஆழமான நட்பும் இவ்வுறவில் சாத்தியமே என்பதை ‘சந்தேகம்’ என்ற சிறுகதையில் பேசியுள்ளார் இப்படைப்பாளி. கணவன், மனைவியிடையே ஏற்படும் சந்தேகம் கணவன் தன் பெண் தோழியைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துதல் என்று ஒவ்வொரு காட்சியினையும் மிக இயல்பாகப் படைப்பாக்கியுள்ளார் இவ்வெழுத்தாளர்.
‘வெள்ளை தாடி தாத்தா’ என்ற சிறுகதை குழந்தை இலக்கியத்தின் தனிச்சுவடற்ற காலகட்டத்தில் குழந்தைகளின் உலகை நுட்பமாக இவர் எழுதியுள்ளமை வியப்பிற்குரியது. தொடர்பில்லாத ஒரு மனிதன் துன்புறும்போது அத்துன்பத்தினைப் போக்க வேண்டிய கடப்பாடு சக மனிதர்களுக்கு உண்டு என்பதை குமார் என்ற சிறுவன் பாத்திரம் மூலம் பதிவு செய்துள்ளார்.
‘நினைவுத் தீ’ என்ற இச்சிறுகதைத் தொகுப்பு பொதுவாக பெண் படைப்பாளிகள் குடும்பக் கதைகளை மட்டுமே எழுதுவார்கள் என்ற அடிப்படைக் கருத்தாக்கத்தினைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. 1935இல் தொடங்கிய இவரின் எழுத்துப் பயணம் 1950 கடந்தும் நீள்கிறது. தமிழின் முதல் தலைமுறைப் பெண் படைப்பாளியான இவரின் எழுத்துகள் அப்படியான எந்தத் தோற்றத்தினையும் தரவில்லை. வளமான மொழிநடை, இயல்பான கதை கூறும் திறன், ஆற்றல் வாய்ந்த மையப்பொருள் என்று ஒவ்வொரு சிறுகதை குறித்தும் விவாதிக்க ஏராளமான செய்திகள் உள்ளன. இதை மட்டுமே ஒரு பெண் படைப்பாளி எழுதவேண்டும் என்று எந்த முகமூடியும் இல்லாமல், மிகுந்த நேர்மையுடனும், படைப்பழகியலுடன் படைத்துள்ள எழுத்தாளர் கமலா விருத்தாசலம் அவர்களை எழுத்துலகம் கொண்டாடத் தவறியது தமிழிலக்கிய உலகின் வழமையான பொருள் பொதிந்த மௌனமாக இருக்கிறது. சமகால எழுத்தாளர்களைக் கடந்து நிற்கும் இப்படைப்புகள் தமிழிலக்கிய உலகிற்கு இவரின் பெருங்கொடை என்றால் அது மிகையில்லை.
துணைமை நூல்கள்:
1. எந்தையும் தாயும் –2025 - தினகரி சொக்கலிங்கம், காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோவில்.
2. நினைவுத் தீ – 2025 - (பதி.ஆ) ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- முனைவர் ஏ.இராஜலட்சுமி, துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி, புதுவை.