சிற்றிதழார் நோக்கில் பாரதிதாசன்: பாரதிதாசனும் மணிக்கொடியாளரும்

"தமிழ்க் கலை இலக்கிய" சூழலில் அதிகமும் புறக்கணிக்கப்பட்ட கவிஞர் பாரதிதாசன். குறிப்பாக நவீன இலக்கிய உலகம் பாரதிதாசனைப் பொருட்படுத்தவே இல்லை. இத்தனைக்கும் 'மணிக்கொடி' இதழில் எழுதிய கவிஞர் பாரதிதாசன். ஆனால் பாரதிதாசன் படைப்புகள் குறித்து ரசனை சார்ந்தோ விமர்சன ரீதியாகவோ சிறுபத்திரிகைகளில் ஒரு கட்டுரையும் படித்த நினைவில்லை. - சுகுணா திவாகர்.

இது ஒரு பகுதி உண்மையே. பாரதிதாசனுக்கும் மணிக்கொடியாளர்க்கும் இடையில் ஊடாடிய உடன்பாடுகளும், முரண்பாடுகளும் விரிவாக இனங்காணப்பட வேண்டியனவே! பாரதியை மகாகவிஞராக முன்னிறுத்தியது மட்டுமல்லாமல், பாரதிதாசனையும் தொடர்ந்து வெளியிட்டுப் போற்றியதும் மணிக்கொடியே.

பாரதிதாசனை மறுதலித்த நவீனத்துவ சூழலில் இருவர்க்கும் இடையே புரிந்துணர்வின் அலைநீளம் ஒத்திசைந்த தரப்புகள் மனங்கொள்ளத்தக்கனவே! இத்தொடர்பில் ஏலவே சுட்டிக்காட்டியனவற்றிற்கும் அப்பாலான வெவ்வேறு தரப்புகளை இனி ஒத்துறழ்ந்தே காண்போம்:

'கண்டுகொள்ளாமல் ' தன்னுணர்ச்சியோடு' விலக்கும் மனோபாவம்

"பொதுவாக கடந்த 50 ஆண்டு காலமாகவே திராவிட இயக்க இலக்கியவாதிகளின் படைப்புகள் தமிழ் ஆய்வுலகத்தால் 'கண்டு கொள்ளப்படாமல்' ஆனால் தன்னுணர்ச்சியோடு விலக்கப்பட்டன. பாவேந்தரும் இந்த விதிக்கு உட்படுத்தப்பட்டவரே. கடந்த10 ஆண்டுகளாகத்தான் இந்த நிலைமை மாறி வருகிறது." - தொ.பரமசிவன் (2001)

சிற்றிதழ் நவீனத்துவவாதிகள் மத்தியிலிருந்து பாரதிதாசனை இவ்வாறு 'கண்டுகொள்ளாமல் தன்னுணர்ச்சியோடு 'விலக்கும் மனோபாவம்' பரவலாக வெளிப்பட்டது:

"பாரதிதாசன் கவிதைகளில் ஒன்றுகூட எக்காரணம் கொண்டும் தேறாது. ஞானி முழுவதுமாக, பாரதிதாசனை நிராகரிக்காதது ஆச்சர்யந்தான்." எம்.டி.முத்துக்குமாரசுவாமி ('அஸ்வமேதா')

இத்தொடர்பில் எமக்கிடையே விவாதக்களம் தொடர்கின்றது. இப்பதிவு இருவேறு நவீனத்துவ ஊடாட்டங்களின் உட்கிடையான அரசியலையும் வரலாற்றையும் பேசி நிற்பது. மாறாக எம்டிஎம் தரப்புகள் முற்றிலும் கவிதையியல் தொடர்பானவையே. ஆதலால் அத்தொடர்பிலான அவர் பங்களிப்புகள் மீதான மதிப்புடன் அவருடன் நான் முரண்படும், உடன்படும் தரப்புகளுடன் அது தனியே பேசப்பட வேண்டியது என்பதால் அது குறித்து விரிவாகப் பேச இங்கே இடமில்லை.

"பாரதிதாசன் கவிதை கூறல் முழுக்க முழுக்க மரபின் பாற்பட்டதே தவிர புதிதானதுமில்லை. மிகுந்த பெயரும் புகழும் பெற்ற அவருடைய கொடை என்ற ஒன்று யோசித்தால் வெறுமனேதான் இருக்க வேண்டிவரும் புதுக்கவிதை என்பதே பார்ப்பனர்களின் கொடைதான்." அழகிய சிங்கர் ('நவீன விருட்சம்:84' ஏப்.சூன் 2009)

தேமேன்னே இரும் ஓய்! அதென்ன புதுக்கவிதைன்னா அக்ரகாரத்துக்குன்னே அகரமானியமா பிரத்தியேகமா ஒங்கள வாக்குண்யுண தாரைவாக்கப்பட்ட பிரமதேய ஏரியாவாங்காணும்?

இவ்வாறாகப் பாரதிதாசனை முற்றாக நிராகரிக்கும் மனோபாவத்துக்கு ஊடாகத் திராவிட இயக்க ஒவ்வாமை, தமிழ் மரபறியாமை, சனாதனப் பார்ப்பனிய உள்நோக்கம், மரபுக்கவிதைப் புறக்கணிப்பு, மேட்டிமை மனோபாவம் ஆகியவை தொழிற்படலாயின.

"பாரதிதாசனை இருட்டடிப்புச் செய்வது என்பது தமிழ், தமிழன், தமிழ்நாடு என்னும் அடையாளங்களைத் துடைத்தெறியும் மகிழ்ச்சியின் தொடக்கம் என நாம் உணர வேண்டும்." ஈரோடு தமிழன்பன் (' தமிழன்பன் கவிதைகளில் சமூகம்')

பாரதிதாசன் நிதியளிப்புக் குழுவில் தோழர் புதுமைப்பித்தனும்; ஏனைப்பிற மணிக்கொடியாளரும்

பாரதிதாசனுக்கு நிதியளிப்புத் தொடர்பாகச் சென்னையில் நடந்த கூட்டம் (1946 பிப்ரவரி) ஒன்றுக்குப் பார்வையாளராகப் புதுமைப்பித்தன் சென்றிருக்கின்றார். அதே நாளில் நண்பர் மீ.ப. சோமுவுக்கு எழுதிய கடிதத்தில் அந்த நிகழ்வை இப்படிக் குறிப்பிட்டிருந்தார்;

"இன்று பாரதிதாஸன் நிதி ஆதரவுக் கூட்டம் ஒன்று சென்னையில் நடந்தது. எனக்குப் பாரதிதாஸன் பாட்டுகளில் சற்றுக் கவர்ச்சியுண்டு. அதனால் அதில் கலந்து கொண்டேன். அங்குபோன பிறகு பாட்டுக்கும் மேடைக்கும் ரொம்பத் தூரம் என்பதைக் கண்டேன். பலர் பேசினார்கள். பாரதிதாஸனை உபயோகித்துக் கொண்டார்கள்." ('அன்னை இட்ட தீ')"

.ய.மணிகண்டன் ('மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்') இத்தொடர்பில் கவனங்குவிக்க வேண்டியதெல்லாம் அக்கூட்டம் யாரால் கூட்டப்பட்டது? அதில் யார் யார் உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப் பட்டனர்? புபி எவ்வாறு விதந்தோதப்பட்டார்? என்பன குறித்தேயாம்:

"கவிஞர் பாரதிதாசன் நிதிக்கமிட்டிக்கூட்டம் நேற்று மாலை 6 மணிக்குக் கமிட்டிக் காரியாலயத்தில்,தலைவர் நாமக்கல் என்.கிருஷ்ணராஜ் ரெட்டியார் தலைமையில் நடைபெற்றது. தோழர் புதுமைப்பித்தன், ஸ்ரீ பால், கம்பதாசன். குஞ்சிதம் அம்மையார் பி.ஏ, எல்.டி., நால்வரும் கமிட்டி உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்." சி.என்.அண்ணாதுரை ('திராவிட நாடு' * 1921-1946)

இதற்கும் அப்பாலாக திராவிட இயக்கத்தினருக்கும் மணிக்கொடியாளர்க்கும் இடையேயான ஊடாட்டங்கள் குறித்தும் மேலதிகத் தரவுகளைக் காண்போம்:

இக்குழு பின்னால் விரிவாக்கப்பட்ட போது மணிக்கொடியாளரில் டி.எஸ்.சொக்கலிங்கம், வரா இருவர் பெயரும் இடம் பெற்றுள்ளன. 28-7-1946. அன்று நிகழ்ந்த நிதியளிப்பு விழாச் சொற்பொழிவாளர் பட்டியலிலும் வரா, 'சிவாஜி' இதழாசிரியர் திருலோக சீதாராம் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இத்தகவல் யாவும் முருகு. இராசாங்கத்தின், 'பாரதிதாசன் பெற்ற பொற்கிழி' கட்டுரையில் இடம்பெற்றுள்ளன ('பாரதிதாசன் பொற்கிழி, தமிழியக்கம்')

தமிழவனின் தாறுமாறான 'தமிழுணர்வின் வரைபடம்'

"தமிழ்த்துறை பலவற்றிலும் புதுத்தமிழ் இலக்கியம் வளராததற்கு அண்ணா அவர்களின் புதுத்தமிழ் கற்பனை எழுத்துக்குத் தொடர்புண்டு"

"புதுத்தமிழ் என்று இலக்கிய வரலாறு அங்கீகரித்துள்ள தமிழ் செல்லப்பாவாலும் க.நாசு புதுமைப்பித்தன் மௌனி மணிக்கொடியாலும் உருவானதுதான். புதுமைப்பித்தனையும் மணிக்கொடியையும் தவிர, இங்கு பெயர் குறிப்பிட்ட யாரும் பாரதிதாசனைப் புரிந்து கொள்ளவும் இல்லை, அங்கீகரிக்கவும் இல்லை. தமிழ் இலக்கிய வரலாற்றை வரையறைப்படுத்த இந்த விஷயங்கள் முக்கியமானவை." தமிழவன் ('தீராநதி' திச.2009)

தமிழவன் மாதிரித் தொடர்பில்லாமல் மாற்றி யோசிக்க மற்றெவராலுமே இயலாது. தமிழ்த்துறை பலவற்றிலும் புதுத்தமிழ் இலக்கியம் வளராதற்கு அண்ணாமீது இப்படிக்கூட பழிபோட வேறு எவராலும் முடிமோ? பாரதி பரம்பரை, பெரியார் பரம்பரை இரண்டிலுமே ஒருசேர இயங்கிய பாரதிதாசனுக்கும் மணிக் கொடியாளர்க்கும் இடையிலான உடன்பாடுகளும் முரண்பாடுகளும் நோக்கத்தக்கனவே.

'காக்கைச் சிறகினிலே' இதழில் இத்தொடர்பில் மணிகண்டன் எட்டுக் கட்டுரைகளை மூலபாட ஆய்வுக்கூறுகளுடன் முன்வைத்தார். அத்துறையில் புது வெளிச்சம் பாய்ச்சின அக்கட்டுரைகள். நானும் சில கட்டுரைகளை முன்வைத்தேன். பின்னர் இருவர் கட்டுரைகளும் நூலுருப் பெற்றன. இவற்றாலும் இன்னொரு பக்கம் திராவிட இயக்கப் பங்களிப்புகள் தொ.ப.வின் ஆய்வுக் கட்டுரையாலும் தமிழவன் தரப்புகள் தகர்ந்தே போயின. பருக்கைப்பதமாக ஒரே ஒரு சான்று:

"கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி எழுத்துக்கள் திராவிட இயக்க இலக்கியப் பங்களிப்பு குறித்த முதற்கட்ட ஆராய்ச்சிகளைத் தகர்த்து எறிந்துள்ளன என்பதையும் கண்கூடாகவே உணர முடிகின்றது. இரண்டாவது கட்டத்தில் தேசியவாதிகளும், மூன்றாவது கட்டத்தில் பொதுவுடைமையாளர்களும் உயர்த்திப் பிடித்த இந்திய தேசியம் பற்றிய எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரின் அரசியல் விமர்சனங்கள் ஒருபுறம்; மறுபுறமாக அ.மார்க்ஸ், பொ வேல்சாமி, கோ.கேசவன் ஆகியோரின் இலக்கிய விமர்சனங்கள் இந்த இரண்டின் விளைவாகத் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு பற்றிய 'கொச்சையான' ஆராய்ச்சிகள் முடிவுக்கு வந்தன." தொ.பரமசிவன் ('தமிழாராய்ச்சியின் வளர்ச்சி')

தமிழவன் தரப்புகள் யமவாலும் தொபாவாலும் தகர்ந்து போகவே 'சிற்றேடு' காலாண்டிதழில் இருவரையும் மலினப்படுத்தி 12 ஆண்டுகளுக்கு முன்புவந்த யமவின் நூலுக்கு மதிப்புரை எனும் பெயரில் வன்மக் காழ்ப்பு அவதூறு தூற்றப்பட்டது:

"பாரதிதாசனைத் தொகுப்புச் செய்தால் பல இடங்களில் 'சபாஷ்' கிடைக்கும். சரி, மொத்தத்தில் தொகுப்புக்கு வந்த மணிகண்டனிடம் காணப்படும் மனோபாவம் தமிழ்த்துறையில் இன்று மலிந்துள்ள மனோபாவந்தான்."

"தொ.பரமசிவன் போன்ற ஆரம்ப நிலை ஆய்வாளர்களையே முன்னோடியாகக் கொண்டிருக்கும் இந்த ஆய்வாளர் பாதிக்கிணற்றைத் தாண்டியுள்ளார்" செ.துரைராஜ் (சிற்றேடு காலாண்டிதழ்: 9)

இதற்கான எதிர்வினையையும் காண்போம்:

"மேலே குறிப்பிட்ட கட்டுரை (செது மதிப்புரை) ஏராளமான தகவல் பிழைகளைக் கொண்டிருப்பதுடன் பார்வைக் கோளாறும் கொண்டிருக்கிறது."

"போகிற போக்கில் தேரை இழுத்துத் தெருவில் விடுவது போல்,தொ.பரமசிவன் மீதும் சேற்றை வாரி இறைக்கிறார் கட்டுரையாளர்"

" ய. மணிகண்டன் அண்மையில் அவர் 'காக்கைச் சிறகினிலே' இதழில் எழுதி வரும் ஆய்வுக் கட்டுரைகள் தமிழக ஆய்வுலகத்தின் கவனத்தைக் கோருபவை; புதிய செய்திகளை முன்வைப்பவை; நிறுவப்பட்ட மதிப்பீடுகளைக் கலைத்துப் போடுபவை. இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாது, 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு தொகுப்புக்கு, 25 ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்டுகளில் நின்று கொண்டு மதிப்புரை எழுதுவது அபத்தத்திலும் அபத்தம்."

"இந்த மதிப்புரை அரை அவியல், முழு அவதூறு." - பார்த்திப ராஜா (சிற்றேடு:10)

இத்தகைய காத்திரமான எதிர்வினைக்கு அப்புறமும் இதழறம் பேணாச் சிற்றேடு மீளவும் சப்பைக்கட்டு ஒத்தூதி குரங்கு, குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் திருப்பணிகளையே இதழிலும் அதன் பேரிலான முகநூற்கணக்கிலும் இன்னமும் தொடர்கின்றது. இதற்குமேற் பேசி நிற்க இதான்று இடம்.

மறுபக்கத்தில் அண்ணாவின் பார்வையிலே மறுமலர்ச்சி (மணிக்கொடி) எழுத்தாளர்கள். இது ஆசோரியார்க்குப் பதில்கூறுமுகமாக அண்ணாவால் முன்வைக்கப்பட்டது: 

"சுவையும் அழகும் கொண்ட வகையில் எழுதக் கூடியவர்கள் நம்மவர்கள் மட்டுந்தான், மறுமலர்ச்சி எழுத்தாளர்களுக்கு அவ்விதம் எழுதவே தெரியாது என்று அகம்பாவம் கொள்கிறேன் என்று எண்ணிக் கொள்ளப் போகிறார்கள் சொல்லிவிடு அவர்களுக்கு நான் அப்படிப் பட்டவனல்ல என்பதை! அவர்கள் தோல்வி அடைவதற்குக் காரணம் அழகாக, அருமையாக எழுதத் தெரியாததால், அந்தத் திறமை இல்லாததால் அல்ல. அவர்களின் தோல்விக்குக் காரணம் அவர்கள் மனத்திலே தெளிவான திட்டமான கொள்கையும் அதைக் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற நேர்மையும் இருப்பதில்லை." அண்ணாதுரை ('தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்' தொகுதி:1 கடிதம்:7 26/06/1955)

இத்தொடர்பில் மேலதிகப் புரிதல்களுக்கு என் 'கருமை செம்மை வெண்மையைக்கடந்து ' நூலையும் (2015 NCBH) ய.மணிகண்டனின் 'மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்' நூலையும் வாசிக்க (2014 காலச்சுவடு).

ய.மணிகண்டன் ஆய்வுத்தரப்புகள்:

"பாரதிதாஸன் கவி; கனவுக் கோயில்களைக் கட்டி நம்மை அதில் குடியேற்றி மகிழ்கிறவர். 'குள்ளச்சிறு மனிதர்களின்' எத்து நூல்வைத்து அவரது காவிய மாளிகைகளை முழம்போட முயல்கிறவர்களுக்கு ஸ்ரீகனகசுப்புரத்தினம் இடைமறித்து நின்று தம் கருத்துக்களைக் காட்டி மிரட்டி ஓட்டிவிடுவார். பாரதிதாஸனைப் பழகி அனுபவிக்க வேண்மெனில் ஸ்ரீகனக சுப்புரத்தினத்தின் கருத்துக்களைக் கண்டு பயப்படுவது விவேகமல்ல; 'நட்ட கல்லும் பேசுமோ' என்று பாடியவரை விட இவர் பிரமாதமான தவறு எதுவும் செய்துவிடவில்லை. அவருடைய காவியங்களில் ராமாயணம் என்னும் பெரும் புளுகும், 'எங்கள் மடாதிபதி' 'சைவத்தை ஆரம்பித்த' விமரிசையும் இருந்தால் என்ன குற்றம்? அவர் கவி.... பாரதிதாஸனின் இன்னும் இரண்டொரு அம்சங்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் ஏதோ சுயமரியாதைக் கொள்கைக்கு அடிமையானவர், அதனால் அவரிடம் தேசபக்திப் பாடல்களைப் பார்க்க முடியாது. அந்த மட்டில் அவர் மட்டமான கவிஞரெனச் சிலர் சித்தாந்தம் பண்ணுகிறார்கள். அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு 'உன்னை விற்காதே' என்ற பாட்டை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்."

'கோட்டைப் பவுன் உருக்கிச்

செய்த குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகளைப்'

பார்க்கத் தெரியாத ரஸிகர்களைக் '

குருடேயும் அன்று நின் குற்றம்'

என்று அவ்வையுடன் சேர்ந்தே ஆசிர்வதிக்க வேண்டியிருக்கிறது."

"பரமசிவன் வந்து வந்து வரம்கொடுத்துப் போவார்

பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்"

எனச் சினிமாப்படங்களையே வியாஜமாகக் கொண்டு கடவுள்,சமயம் முதலிய அங்கீகரிக்கப்பட்ட சகல கருத்துகளையும் தாக்குபவர். தாக்குவதில் விசேஷ ருசியுடன் ( திருப்பணி செய்யும் பக்தர்களைப் போலல்லாமல்) சாக்கிய நாயனாராக நின்று கல்லாலடிப்பவர். காவியமுறை, கட்டுக்கோப்பு, உவமை சமத்காரங்கள் ஆகியவற்றில் இவர் பாரதிக்குச் சளைத்தவரல்ல. அவருடைய புதிய உவமை நயங்களை மட்டும் தொகுப்பது என்றாலே ஒரு தனிப்பிரசுரம் வெளியிட முடியும்."

புதுமைப்பித்தன் இத்தொடர்பில் புதுமைப்பித்தன் தவிர சிசுசெ, கநாசு, குபரா, வரா, நபி, திசசொ,மணிக்கொடி சீனிவாசன் ஆகியோர்தம் புபி மீதான சாதக பாதகப் பார்வைகளையும் தம் மணிக்கொடி ஆய்வுத் தரப்புகளாக இந்நூலில் ஒருசேரத் திரட்டியே சிறப்பாகவே தொகுத்தளித்துள்ளார் மணிகண்டன்.

"தமிழ் நவீனத்துவத்தின் அடையாளமாகக் கருதப்படும் 'மணிக்கொடி'க்கும் திராவிட இயக்கக் கவிஞராகக் கொண்டாடப்படும் பாரதிதாசனுக்குமான உறவை ஆராயும் நூல் இது. பாரதிதாசனையும் அவருடைய கவிதைகளையும் மணிக்கொடி மரபினரான புதுமைப்பித்தன், குபரா, ந.பிசேமூர்த்தி, கநாசு, சி.சு.செல்லப்பா முதலானோர் எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதை விளக்குகிறார் மணிகண்டன் ய . கெட்டிதட்டிப்போன மனப்பதிவுகளையும் முன்னெண்ணங்களையும் ஏராளமான புதிய செய்திகளோடு தகர்க்கும் சுவையான ஆராய்ச்சி நூல் இது.” A.r. Venkatachalapathy. ('மணிக்கொடிமரபும் பாரதிதாசனும்' பின்னட்டை 'பிளர்ப்'பில்)

பாரதியைப் பாரதிதாசன் ஏன், எவ்வாறெலாம் போற்றினார் என்பதை உணரொணாமல் அவர் வகிபாகத்தையே மறுதலிப்பர் ஒரு சாரார். போலவே பாரதிதாசனை ஏன் எவ்வாறெலாம் புதுமைப்பித்தனும், மணிக்கொடியாளரும் போற்றினர் என உணரொணாமலே அவர் வகிபாகத்தை மறுதலிப்பர் மற்றொரு சாரார். இவற்றை எதிர்கொள்ளும் தரப்புகள் மேற்கண்ட எம்மிருவர் நூல்களிலும் விரிவாகக் காணக் கிடக்கின்றன.

இத்தொடர்பில் திகசியின் 'பாரதிதாசனும் புதுமைப்பித்தனும்' கட்டுரையும் முகாமையானதாகும்.

பாரதிதாசனும் புதுமைப்பித்தனும் அணுக்கத் தோழர்களே! - திகசி.

"பாரதிதாசன், புதுமைப்பித்தனைவிட 15 ஆண்டுகள் மூத்தவர் எனினும் இருவரும் சமகாலத்தவர்கள். நெருங்கிய நண்பர்கள்." (பாரதிதாசன் 29/04/1891-21/04/1964 புதுமைப்பித்தன் 1906-1948)

"மணிக்கொடியில் வந்த பாரதிதாசன் கவிதைகளைப் பாரதியின் சீடர்களில் ஒருவராகவும் பின்னாளில், 'சக்தி', 'மஞ்சரி' முதலிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்த திஜரவும்; பேராசிரியர் கே.சுவாமிநாதனும் மற்றும் பலரும் மிக உயர்வாக மதித்தார்கள்"

"புதுமைப்பித்தனும், பாரதிதாசனைக் கவிதா ரீதியிலும், கருத்து ரீதியிலும் பாரதியார்க்குப் பின்வந்த கவிஞர்களில் தலைசிறந்தவராகக் கருதினார். ஏனெனில், சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் பாரதியின் உயிர்நாடியான கொள்கைக்குத் தமது வாழ்நாள் முழுவதும் பாரதிதாசன் விஸ்வாசமாய் இருந்தார் என்பதைப் புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்திருந்தார். பாரதிதாசனை ஒரு புதுமைக்கவி என்றும், ஒரு புரட்சிக்கவி என்றும், புதுமைப்பித்தன் கருதினார். பாரதிதாசனின் பாண்டியன் பரிசு நூலுக்கு அவர் எழுதிய மதிப்புரையே இதற்குச் சான்றாகும்" தி.க. சிவசங்கரன்

இருதலையும் ஒத்திசையும் புரிந்துணர்வின் அலைநீளம்.

"பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப் போன சொத்துக்கள் பல. இவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கனகசுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்."

"பாரிசவாய்வும் பக்கவாதமும் போட்டலைக்கும் இன்றைய கவிதையுலகிலே அவருடைய பாட்டுகள்தான் நிமிர்ந்து நடக்கின்றன"

"பாரதிதாஸனின் கற்பனை காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப, இன்றைய மக்களின் கேள்வியாக,பரிணமிக்கிறது. 'புரட்சிக்கவி'யில் கதாபாத்திர சிருஷ்டி அற்புதமானது; அமுதவல்லி என்ன, உதாரன் என்ன, மன்னன்தான் என்ன உயிருடன் நடமாடும் சித்திரங்கள். இதில் பாரதியாருக்குச் சமதையாக இருப்பவர்கள் இன்றைய கவிஞர்களில் பாரதிதாஸன் ஒருவர் தான் என்பது என் அபிப்ராயம்" - புதுமைப்பித்தன்.

"இந்த விருத்தாசலமில்ல; அதான் புதுமைப்பித்தன் எனக்கு ரொம்ப வேண்டியவன். விக்டர் யூகோ (பிரெஞ்சு எழுத்தாளர்) மாதிரி நையாண்டியா, நகைச்சுவையா எழுதறதிலே கெட்டிக்காரன். என்மேலே ரொம்ப மதிப்பு வச்சிருந்தவன். என்னமா எழுதுவான் தெரிமோ? ஒரு தடவை கந்தசாமி வீட்டுக்குக் கடவுள் வந்தார்னு எழுதியிருந்தான். சிரிக்கச் சிரிக்கக் கருத்தாழத்தோடு அருமையா எழுதியிருந்தான். மடமைத்தனத்தையும் பிற்போக்குவாதிகளையும் கிண்டல் பண்ணி எழுதியிருந்தான். கவனிப்பாரற்று சின்ன வயசுலேயே காசநோயாலே செத்துட்டான்பா எல்லாம் வறுமைதான் காரணம்" - இது பொன்னடியானிடம் பாரதிதாசன். ('மணிக்கொடி மரபும் பாரதிதாசனும்)

"இக்கருத்தை (பாரதியார் விட்டுச் சென்ற சொத்து பாரதிதாசன்) இன்றைய தமிழ் இலக்கியப் படைப்பாளர்களும் ஆய்வாளர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்பது வருந்தத் தக்கதாகும். இது புதுமைப்பித்தனுக்கோ பாரதிதாசனுக்கோ நியாயம் செய்வதாகாது."

"புதுமைப்பித்தன் பாதையில் நவீன இலக்கியத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்கிற எழுத்தாளர்கள் பாரதிதாசனைப் புறக்கணிப்பதையே தம்முடைய இலக்கியக் கொள்கையாகக் கொண்டுள்ளனர். பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களையும் கண்மூடித்தனமாக வெறுத்து ஒதுக்குகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் பாரதிதாசனை மட்டுமன்றிப் புதுமைப்பித்தனையும் அவமதிக்கின்றனர் என்பதே என் கருத்தாகும். இனவெறியும், ஜாதி வெறியும், மதவெறியும் தலைவிரித்தாடும் இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்ப்பற்றும் சமநீதி உணர்வும் மங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மனிதநேயத்தையும் மனிதகுல விடுதலையையும் ஒற்றுமையையயும் உயர்த்திப் பிடித்த பாரதிதாசனும் புதுமைப்பித்தனும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கான கலங்கரை விளக்குகள் ஆவர்" - தி.க.சிவசங்கரன்

நாற்பதுகளில் முத்தையா நடத்திய முல்லை மாத இதழ் அலுவலகத்தில் இருவரும் அடிக்கடி சந்தித்ததாகவும், இருவரும் மிக நெருங்கிய தோழர்களாக விளங்கினர் எனவும், முல்லை ஆசிரியரான தொமுசி தம்மிடம் பலமுறை கூறியதாகவும் தொடர்கின்றார். 29/07/1946 இல் நாவலர் பாரதியார் தலைமையில் அண்ணா ஏற்பாட்டில் நிதிதிரட்டும் குழுவில் அவரும் உறுப்பினராக இருந்ததைதையும்; வேலையில் இல்லாமல் இருந்த தம் கடுமையான நெருக்கடிக்கிடையிலும் தம் பங்காக 100/ அன்பளிப்பாக வழங்கியமை குறிப்பிடத் தக்கதெனப் பதிகின்றார்.

"அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டுத் தமிழ் வளர்ச்சிக்குப் பாரதிக்குப் பின்னால் மிகச்சிறந்த பங்காற்றிய கவிஞர் பாரதிதாசன் என்பதே புதுமைப்பித்தன் உள்ளக்கிடக்கையாகும். எனவேதான் பாரதிதாசன் மீது மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்'"  - தி.க.சிவசங்கரன் ('கதைசொல்லி' பிப்.ஏப். 2007)

பாரதி பரம்பரையும் பெரியார் பரம்பரையும்

தி.ச.சொ (டி.எஸ்.சொக்கலிங்கம்) ஆரம்பத்தில் பெரியாரையும் சுயமரியாதை இயக்கத்தையும் படுமோசமாக அவமரியாதை செய்தவரே என்றாலும் ; காலகதியில் பெரியாரின் நிலைப்பாடுகளையும்; சுயமரியாதை இயக்க நியாயப்பாடுகளையும் புரிந்துணர்வுடன் அணுகத் தலைப்பட்டார்:

"சுயமரியாதைக் காலிகளிடம் பொறுமை காட்டுவதுதான் தர்மர் ராஜ்ஜியமென்றால் அந்த ராஜ்யம் நமக்கு வேண்டியதில்லை. துஷ்டர்களை அடக்கி ஒடுக்கும் வீரரராஜ்ஜியமே தமிழருக்கு வேண்டும்." ('மணிக்கொடி' 19/01/1939)

என்றெழுதிய திசசொவே பின்னர்

"ஜஸ்டிஸ் கட்சியைத் தோற்றுவித்த ஸ்ரீ தியாகராயச் செட்டியாரும், டாக்டர் நாயரும் சுயநலக்காரர்கள் அல்ல, பெரிய தியாகிகள்"

எனவும் புரிந்துணர்வுடன் எழுதவும் நேர்ந்தது.

இத்தொடர்பில் சொக்கலிங்கம் பற்றிய ஆய்வினை முனைவர் பட்டத்துக்குச் சமர்ப்பித்த பேரா. பா.மதிவாணன் தரப்புகள் முகாமையான கடவுத்திறப்புகளே:

"இந்திய அரசியல் விடுதலைப் போர்க் காலத்தில், பார்ப்பனரால்லாதார் இயக்கமான நீதிக்கட்சி முதலியவற்றைக் கடுமையாகத் தாக்கி வந்த சொக்கலிங்கம் விடுதலைக்குப்பின், காமராஜர் குழுவிற்கு எதிராகப் பார்ப்பனர் செயல்பட்டமையால் பார்ப்பனரல்லாதார் இயக்கங்களின் நியாயங்களை விளக்கினார்."

"இந்திய விடுதலைக்குப் பின்பு சமூக சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் அரசியலில் குறிப்பிட்ட போது, ஈவெரா பெரியாரின் நிலைப்பாட்டை வரவேற்க நேர்ந்தது." பா.மதிவாணன் (' டி.எஸ். சொக்கலிங்கம் அரசியல்/ இதழியல்')

அவர்களுடைய ஏனைப்பிற சமாந்தரக்கலைஞர் எல்லாம் (வெ.சாமிநாத சர்மா, திருவிக உட்பட) இட்லரைத் தேசபக்தியின் உருவமாக நேசபாவத்துடனேயே அணுகி நின்ற அன்றைய காலச்சூழலில் அவரைப் பாசிஸ்ட்டாக இனங்கண்டு எதிர்த்த இருவர் எவரெவரெனில் அவ்விருவர் புதுமைப்பித்தனும் மணிக்கொடி சீனிவாசனும் மட்டுமே!

அதற்கும் அப்பாலாகக் தமிழ்த்திரை உலகின் திருப்புமுனையான கலைஞரின் 'பராசக்தி' திரைப்படத்திற்குச் சனாதனிகளால் பலத்த எதிர்ப்பபு எழுந்த தருணத்தில் அதனைப் பொருட்படுத்தாது இசைவளித்த திரைத்துறைத் தணிக்கை அதிகாரி யார் என அப்போது ஜெமினி ஸ்டூடியோ கதை இலாக்காவில் பணியாற்றிய அசோகமித்திரன் எடுத்துரைத்தார். அவர் நம் மணிக்கொடி சீனிவாசனேதான்! . இத்தொடர்பிலான மேலதிகப் புரிதல்களுக்கு என் 'திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்' நூலிற் காண்க.

பாரதிதாசன் குறித்த புதுமைப்பித்தன் கட்டுரைக்கு ஊடாக நாம் மனங்கொள்ள வேண்டிய முகாமையான அம்சம் என்னவென்றால் அது அவருடைய சமாந்தர எழுத்தாளர்களான குபரா, கநாசு, சிசுசெ ஆகியோர் என்னதான் பாரதியாருக்கு அடுத்து, அவருக்குச் சமமான கவிஞர் எனக் கொண்டாடி நின்றாலும்கூட; (வராவைவும், மணிக்கொடி சீனிவாசனையும் தவிர) அவர்களால் கவி பாரதிதாசனை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கனகசுப்புரத்தினம் என்ற சுயமரியாதை மானுடனைச் செரித்துக் கொள்ளவே இயலவில்லை என்பதுதான்!

இதுதான் இருவேறு நவீனத்துவப் படிநிகராளியர்க்கும் இடையில் ஊடாடிய கருத்துச்சமரின் முகாமையான உட்கிடையாகும். ஆக. இவற்றாலும் பேரா.ய.மணிகண்டன் மணிக்கொடியியல் ஆய்வுத் தரப்புகளாலும்: இத்தொடர்பிலான என் பாரதிதாசன் குறித்த ஆய்வுக் கட்டுரைகளாலும் ('கருமை செம்மை வெண்மையைக் கடந்து.. ' நூலிற் காண்க. NCBH வெளியீடு) தமிழவன் தரப்புகள் தகர்ந்தே போயின.

பாரதிதாசன் திரைப்பங்களிப்பு குறித்துச் சுகுணாதிவாகர் காணத் தவறிய பக்கங்கள்

திராவிட இயக்கத்தவருள் முதன்முதலாகத் திரைப்படத் துறையில் உரையாடல், பாடல் ஆசிரியராக நுழைவினை நிகழ்த்தியவர் பாரதிதாசனே. 1938 இல் வரா கதை, வசனம் எழுதி பிச்சமூர்த்தி நடித்து வெளிவந்த 'ஸ்ரீராமானுஜர்' திரைப்படத்தின் ஒன்பது பாடல்களையும் ஒரு சேர எழுதியவரும் பாரதிதாசனே ஆவார்.

'குமரகுருபரர்' நாடகம் முதற்பதிப்பின் முன்னுரையில் பாடல்களுக்கு எவ்வாறு இராகம் தாளம் அமைப்பது, எவ்வாறு மாற்றி அமைப்பது, குறிப்பிட்ட காட்சிகளுக்கு இன்னவகை நாட்டியத்தை நிகழ்விப்பது, ஒல்லும் வாயெலாம் நகைச்சுவையைச் சுட்டுவது என அவரால் டைரக்டருக்குக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்த 'அலங்கோலங்கள்' குறித்து பாரதிதாசனார் பாட்டுவிட்ட சுவையான சில பாட்டுக்கள் விருத்தத்தின் இலகு பாய்ச்சலாய்...:

'தமிழ்நாட்டில் சினிமா'

வேடநாட்டார் போன்ற உடை, வடநாட்டார் மெட்டு

மாத்தமிழர் நடுவினிலே தெலுங்குகீர்த் தனங்கள்

வடமொழியில் ஸ்லோகங்கள்! ஆங்கில ப்ரசங்கம்

வாய்க்குதவா இந்துஸ்தான்! ஆபாச நடனம்

அடையுமிவை அத்தனையுங் கழித்துப் பார்த்தால்

அத்திம்பேர் அம்மாமி எனுந்தமிழ்தான் மீதம்"

('பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதி)

"பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!

பதிவிரதைக் கின்னல்வரும், பழையபடி தீரும்!

சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்

சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து

வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும் போகும்"

புதுக்கவிதையை பாரதிதாசனும் புதுமைப்பித்தனும் ஏற்கவில்லை.. நவீன கவிஞரூடே இளங்கோ கிருஷ்ணன் பாரதிதாசன், புதுமைப்பித்தன் குறித்து எடுத்துரைப்பது இங்கே மனங்கொள்ளத் தக்கதாகும்:

பாரதிதாசம் - தமிழ் வரைவியலின் நவீனமுகம்

"பாரதிக்குப் பிறகு ஆற்றல் மிக்க கவிஞராகவும் தனி மனித இயக்கமாகவும் உருப்பெற்ற ஆளுமை என்றால் அது பாரதிதாசன்தான். பாரதி முதல் புதுமைப்பித்தன் வரை பல முன்னோடிகளின் அபிமானத்தைப் பெற்றவர். பு.பி பொதுவாக கவிஞர்களை மதிக்க மாட்டார் என்பார்கள். ஆனால், அவர் பாரதிக்குப் பிறகு பாரதிதாசன் மீதே பெரும் மதிப்பு கொண்டிருந்தார். பாரதிதாசன் ஒருவரே கவிஞனுக்குரிய எல்லா அந்தஸ்துகளையும் அடைந்த தமிழ் ஆளுமை. அதற்கேற்ற தகைமையும் அவருக்கு இருந்தது. பாரதிக்கே அமையாத மாபெரும் மாணவப் பட்டாளம் பாரதிதாசனுக்கு அமைந்தது. பின்னாட்களில் அவர்களில் பலர் புகழ்பெற்ற ஆளுமைகளாயினர்."

"கிட்டதட்ட உலகம் முழுதுமே புதுக்கவிதைக்குள் நுழைந்து விட்ட பின்னும் மரபில் கவிதை எழுதிக் கொண்டிருந்தவர் பாரதிதாசன். டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட், நிகோனர் பர்ரா, பெர்டோல்ட் ப்ரெக்ட், நெரூதா, ஆக்டோவியா பாஸ், ஆலன் கின்ஸ்பெர்க் போன்ற மேதைகள் கோலோச்சிய நாட்களில் இங்கு தமிழ் சிலம்பம் சுழற்றிக் கொண்டிருந்தவர் என்ற விமர்சனம் ஒன்று அவர் மீது உண்டு.

நம் மண்ணின் இரண்டாயிர வருட மரபு கொடுத்த அழுத்தம் அது. நெரூதாவுக்கும் எலியட்டுக்கும் இல்லாத ஒரு கவிதையியல் தொடர்ச்சி நமக்கு இருக்கிறது. அதிலிருந்து பட்டென்று வெளியேறுதல் சுலபம் அல்ல. பிறகு மரபின் அத்தனை வளங்களையும் கற்ற ஒருவன் அதிலிருந்து வெளியே வருவது சாத்தியமே இல்லாத விஷயம்.

மரபில் எழுதினாலும் பெண் விடுதலை முதல் சாதி எதிர்ப்பு வரையான நவீன சிந்தனைகளே அவரின் பாடுபொருளாய் இருந்தன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

"ஒரு கவிஞனாக அவர் சிந்தனை இயல்பாகவே பரிணாமம் அடைந்து கொண்டுதான் இருந்தது. மாற்றங்களை ஏற்றுக் கொண்டுதான் இருந்தது என்பதன் சான்றுகள் இவை.

தமிழ் என்பதையே ஒரு தொல்படிமமாக (Archetype) ஓர் உயர் விழுமியமாக நோக்கும் போக்கு ஒன்று பழங்காலம் முதலே நமக்குண்டு. பாரதிதாசன் அதன் நவீன காலத் தொடர்ச்சி. நிலத்தை வணங்கும் பண்பாடுகளுக்கிடையே மொழியை வணங்கும் பண்பாடு இது. நிலத்துக்கு இணையாக மொழியையும் போற்றி அதனையும் ஒரு தூலப் பொருளாய் கருதும் சிந்தனைப் போக்குக்கு சமகால முகம் கொடுத்தவர் என்பதுவே பாரதிதாசனின் முதன்மையான பங்களிப்பு. அந்தவகையில் தமிழ் அடையாளம் என்ற கருத்தியல் இருக்கும் வரை பாரதிதாசன் பெயர் நிலைத்திருக்கும்.

(இளங்கோ கிருஷ்ணன் 29/04/2022 முகநூற் பதிவிலிருந்து..)

- பொதியவெற்பன்