இந்தியாவுக்கு சுதந்திரம் சும்மா கிடைக்கவில்லை. பல்வேறு தியாகங்களைச் செய்து பெற்ற சுதந்திரம். நம் சுதந்திரத்தை எவரும் தட்டில் வைத்துத் தரவில்லை, போராடித்தான் பெற்றோம். போராடியவர்கள் நம் பெரும் தலைவர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களும் எண்ணிலடங்கா துயரங்களை எதிர்கொண்டு பெற்ற சுதந்திரம். பெரும் தலைவர்களை அடையாளம் கண்டு வரலாறாக்கி அவர்களைக் கொண்டாடினோம். அடையாளம் தெரியாத எண்ணற்ற சாதாரண மனிதர்களின் வரலாறு இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது என்பது நம் வாழ்நாளில் சந்திக்கும் ஒரு சோகம். தியாகம் செய்தவர்கள் தங்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது, நம்மை பாராட்டப் போகிறார்கள் என்று தியாகம் செய்யவில்லை. அது தங்களின் கடமை என்றேதான் செய்தார்கள். நமது சுதந்திர வரலாறு இன்னும் முற்றாக எழுதி முடிக்கவில்லை. இன்னும் எண்ணிலடங்கா சாதாரண மனிதர்கள் தங்கள் பங்களிப்பை சுதந்திரம் அடைவதற்காக செய்திருப்பதை நாம் சுற்றித் திரியும்போது நமக்கு கூறப்படுகிறது. அதற்குள் அந்தத் தியாக வரலாற்றை நாம் மறப்பது என்பது ஓர் துன்பியல் செயல் என்றே கூற வேண்டும்.
பண்பட்ட நாகரீகங்கள் நமக்குத் தரும் செய்தி தியாகத்தைப் பாராட்டுவதும் போற்றுவதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும்தான் அந்த நாகரீகங்கள் நிலைத்து நிற்பதற்கான காரணங்கள். இன்றைய அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை பெரும் சாதனைகளின் வரலாறாகக் கொண்டாடும்போது, சுதந்திரத் தியாக வரலாறு சாதாரணமாகி மக்களுக்கு மறந்துபோனது. இன்றைய அரசியல் சுதந்திரத்திற்காக செய்த தியாகங்களுக்கு சமாதி கட்டிவிட்டது. தியாக காலத்தில் உருவாக்கப்பட்ட லட்சியங்கள், கனவுகள், விழுமியங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நிகழ்காலம் வணிக காலம். லாபம் என்பதுதான் மனிதர்களை இயக்குகின்றது. இந்தக் காலத்திலும் தியாக கால நீட்சியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்தான் தியாக காலத்தை நினைவூட்டுகின்றார்கள்.
சமீபத்தில் காந்தியப் போராளி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் 100வது பிறந்த நாளை கொண்டாட பல காந்திய அமைப்புக்கள் தயாரானபோது, அவர் எனக்கு எதற்குக் கொண்டாட்டம் எனக் கேட்டு, அதைத் தவிர்த்து விட்டார். காந்தி மக்களின் கண்ணீரைத் துடைப்பதில்தான் தன்னைக் கரைத்துக் கொண்டார். அதேபோல் நாம் செயலில் கரைய வேண்டும் என்று கூறி அவர் களப்பணியாற்றிய கூத்தூருக்கு சென்று விட்டார். நிலமற்ற ஏழைகளும், குடியிருக்க வீடற்ற ஏழைகளும் இந்நாட்டில் சட்டபூர்வமாக வாழ்ந்தாலும் அவர்களுக்கு குடிமக்கள் என்ற முகவரி இல்லை. எனவே அன்று நான் செய்து வந்த பணியாகிய நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கொடுக்க வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கட்டளை இட்டார். ஜூன் 16ஆம் தேதி 29 பேருக்கு நிலத்திற்கான பத்திரப் பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை சென்றவர் மாலை வரை அவர் தங்கியிருந்த இடம் திரும்பவில்லை.
அவருக்கு வீர வணக்கம் செலுத்த செந்தொண்டர் படை தளபதிகளாக நாகை பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. செல்வராசு, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மாரிமுத்து, வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் நிர்வாக அறங்காவலர் வேதரெத்தினம் என பலர் வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நான்தான் செய்தியைத் தெரிவித்திருந்தேன். வெளியூர்களிலிருந்து படித்த இளைஞர்கள் கூட்டம் ஒன்று காத்திருந்தது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இரவு ஏழு மணிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்திலிருந்து அவர் தங்கி இருக்கும் இடம் வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடன் எந்த மாலை மரியாதையும் செய்யவில்லை. அனைவரையும் ஒரு நாடகம் நடக்க இருக்கிறது அங்கு வாருங்கள் என அழைத்துச் சென்று உட்கார வைத்தோம். முருக பூபதி உருவாக்கிய போரைப் பற்றிய ஒரு நாடகம் மிகவும் அற்புதமாக நிகழ்த்தப்பட்டது. அதற்கு முன் அங்கு இருந்த பயிற்சி அறை ஒன்றை கிருஷ்ணம்மாள் வாழ்நாளில் நடத்திய போராட்டங்களை புகைப்படமாக்கி அங்குக் காட்சிப்படுத்தியிருந்தனர். அதை எழுத்தாளர் கோணங்கி திறந்து வைத்தார்.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அந்த நாடகத்தை முழுவதுமாகப் பார்த்து ரசித்தார், அது முடிந்தவுடன் அங்கு வந்திருந்த நல்லோர் வட்ட மாணிக்க மாணவர்களுக்கு லாரா கோப்பா (இத்தாலியர்) எழுதிய புத்தகத்தின் தமிழ் வடிவம் பெற்ற “சுதந்திரத்தின் நிறம்” என்ற நூலினை அளித்தனர். மாணவர்களுக்கும் ஊர் மக்களுக்கும் பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணம்மாவிற்கு கதர்ஆடை போர்த்தி வீரவணக்கம் செலுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் தன்னைப் பற்றிய “சுதந்திரத்தின் நிறம்” என்ற புத்தகத்தை அன்புப் பரிசாக வழங்கினார். அவர் எப்பொழுதும் வள்ளலார் பாடிய “எல்லாம் செயல் கூடும்” என்ற பாடலைப் பாடி அந்த நிகழ்வை அவரே நிறைவு செய்தார்.
தன்னுடைய நூறாவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடாமல் தான் செய்துவந்த நிலமற்றவர்களுக்கு நிலம் தரும் செயல்பாட்டை அன்று செய்து செயலில்தான் எனக்கு மரியாதை என அங்கு வந்து அந்த நிலத்தைப் பதிவு செய்து கொடுத்ததுதான் அந்த அம்மாவின் சிறப்பான செயல்பாடாகக் கருதுகிறார். ஆனால், அங்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் எங்கோ இருந்து இவரைப்பற்றி அறிந்து ஒரு முறை இவரைச் சந்தித்த ஒரு தொழிலதிபர் அவரைப் பற்றிய புத்தகத்தை இளைஞர்களும் மாணவர்களும் படிக்க வேண்டும் என்று அதற்கான புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தார். அது மட்டுமல்ல, நாடுகளுக்கிடையில் நடக்கும் போரினால் இயற்கை எப்படியெல்லாம் அழிக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று ஒரு நாடகத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று முருகபூபதி அவர்களின் நாடகக் குழுவையும் ஏற்பாடு செய்திருந்தார். அத்துடன் அன்று அங்கு வருகின்றவர்களுக்கு பழமரக்கன்றுகளை கொடுத்துச் சிறப்பிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டு, அத்தனை செயல்பாடுகளைச் செய்த அவரின் செயல்பாடு பிரமிக்க வைத்தது.
இந்த நிகழ்வுகளையெல்லாம் யார் தம்பி ஏற்பாடு செய்தது என்று கேட்ட வண்ணம் இருந்தார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்கள். அத்தனையும் அவருக்கும், அவருடைய மகன் மருத்துவர் பூமிக்குமாருக்கும், மருத்துவர் சத்தியா அவர்களுக்கும் எங்கோயிருந்து வந்து இதை ஏன் நடத்துகின்றார்கள் என்று தெரியவில்லை. அதற்கும் மேலாக, எந்த அழைப்பிதழும் இல்லை, நாகை பாராளுமன்ற உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் வந்து அவருக்கு வீர வணக்கம் செலுத்தியது அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்து தினமணி நாளிதழில் இவரைப் பற்றி ஓர் சிறப்புக் கட்டுரை வெளியிட்டு சிறப்புச் செய்தது பலருக்கு வியப்பு. வருகின்றவர்களுக்கெல்லாம் தினமணி பிரதி ஒன்று கொடுத்தார்கள். இவைகளையெல்லாம் ஈரோட்டிலிருக்கும் ஒரு தொழில் நிறுவனத்தின் அதிபர் ஏன் செய்தார் என்றால் இன்றைய கொச்சைப்படுத்தப்பட்ட தியாகத்தை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே. நம் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இவர்களின் தியாக வரலாறு காண்பிக்கப்படவில்லை என்றால் இன்றைய அரசியல்வாதிகள் தியாகிகளாகி விடுவார்கள். தங்களை அவர்களே தியாகிகள் என பட்டம் சூட்டி மக்களை நம்ப வைத்துவிடுவார்கள்.
பொதுவாக நம் நாட்டில் நம் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மேற்கத்திய அறிஞர்கள் செய்கின்ற வேலைகளைப் பார்த்து அவர்களின் அடிச்சுவட்டில் பயணிக்க முயல்வார்களேயன்றி, நாம் நமக்காக நம் நாட்டிற்காக என்ன செய்ய வேண்டும் என்று புதுமைகள் ஆய்வுகளில் செய்வது கிடையாது என்பதை ஒரு எழுத்தாளர் கடுமையாக நம் நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர்களைப் பற்றி விமர்சனம் செய்திருந்தார். காரணம் நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு ஆய்வு செய்து நல்ல நூல்களை ஆங்கிலத்தில் வெளியிடுகின்றனர். நம் ஆராய்ச்சியாளர்கள் அப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவில்லையே என்று “உப்பு வேலி” என்ற புத்தகத்தில் எழுதியிருந்தார்.
இந்தக் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் தம்பதியர்களின் தியாக வரலாற்றை ஒரு இத்தாலியரான லாரா கோப்பா தான் இந்தியா வந்து ஆய்வு செய்து எழுதி இத்தாலிய மொழியில் வெளியிட்டார். ஒரு அமெரிக்கப் பேராசிரியர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அமெரிக்காவில் வெளியிட்டார். அப்பொழுதும்கூட நம் ஆய்வாளர்களுக்கு உணர்வு வரவில்லை. அதைப் பார்த்த சோலை வெட்கப்பட்டு ஒரு நூலை எழுதி புரட்சியில் பூத்த காந்திய மலர்கள் என்ற தலைப்பில் பதிப்பித்தார். அதன்பின் ராமச்சந்திர குகா இவரைப் பற்றிய குறிப்புக்களை தன் புத்தகத்தில் கொண்டு வந்தார். லாரா கோப்பா எழுதிய புத்தகத்தை தமிழில் கொண்டு வந்து “சுதந்திரத்தின் நிறம்” என்ற தலைப்பில் தன்னறம் பதிப்பகம் வெளியிட்டது.
கிருஷ்ணம்மாளின் இணையர் ஜெகந்நாதன் மறைவிற்குப்பின் ஆண்டு தோறும் அவர் நினைவாக நடத்தும் சர்வோதய விழாவிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதேபோல் படித்த இளைஞர்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இன்று இவர் எண்ணிலடங்கா இளைஞர்களை வசீகரிக்கும் தலைவராக விளங்குகிறார். இவரை நம் இளையவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பணியை குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜ் அவர்களையே சாரும். மறக்கப்பட்ட கோபிச்செட்டிப்பாளையம் லட்சுமண அய்யரை சுபி புத்தகமாக எழுதி வெளியிட்டு எப்படி நினைவுபடுத்துகிறாரோ அதேபோல் சிவராசு கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனை “எங்களுக்கெல்லாம் வழிகாட்டும் தலைமை” என இளைஞர்களை அழைத்து வந்து இவரின் பணிகளைக் கவனிக்க வைத்து புதுத் தலைமைத்துவத்தை இளைஞர்களிடம் உருவாக்குகிறார். எது அப்படி இந்த இளைஞர்களை ஈர்த்தது என்றால் இவரின் தலைமைப்பண்பு. இவரின் தலைமைப் பண்பில் இருக்கும் தனித் தன்மை. என்ன அப்படி தலைமைத்துவம் என்றால், தனக்கான நிறுவனத்தைக் கட்டாமல், மக்கள் பிரச்சினை இருக்கும் இடம்தேடிச் சென்று மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து போராடி மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பதுதான் இவர் காட்டிய புதுத் தலைமை. இந்த தனித்தன்மை வாய்ந்த தலைமைத்துவம் ஆய்வு செய்யப்பட வேண்டிய பொருள்.
இவரைப்பற்றி நாம் இன்று பேசுவதற்குக் காரணம் முகவரியில்லா மனிதர்களுக்கு முகவரி கொடுக்க அவர் நடத்திய போராட்டங்கள்தான். 100 வயதில் இருக்கும் கிருஷ்ணம்மாள் வைக்கும் ஒரு கேள்விக்கு நம்மால் பதில் தரமுடியவில்லை. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியத் தாயின் மக்கள்தானே. அவர்கள் பெயரில் அரைக்காணி நிலம் கிடையாது, குடியிருக்க வீடு கிடையாது, இவர்களை நீங்கள் எப்படி இந்தியக் குடிமக்கள் என்று அழைப்பீர்கள். சுதந்திர நாட்டில் ஒரு அகதியைவிட மோசமான ஒரு சூழலில் தானே வாழ்கின்றனர். இதை ஏன் நான் குறிப்பிடுகிறேன் என்றால் பொது வெளியில் இதை விவாதிக்க வேண்டும் என்பதால்தான் என்கிறார். எனக்குத் தெரிந்த வழிமுறை குடியிருக்க அவர்களுக்கு ஒரு சிறிய வீடு, அவர் பெயரில், உழைத்து வாழ அவருக்கு 2 ஏக்கர் நிலம் வேண்டும். இது இரண்டும் இருந்தால் அவருக்கு முகவரி உண்டு. அவர் இந்திய நாட்டின் குடிமகன் அல்லது குடிமகள் இவர்களுக்கு முகவரி கொடுக்கத்தான் காந்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால் சுதந்திர நாட்டில் நம் அரசு இவர்களைக் கவனிக்கவில்லையே, எனக்குத் தெரிந்ததைச் செய்கிறேன் என்கிறார்.
இவரைப் பற்றி வெளிவந்துள்ள நூல்களைப் படிக்கும்போது இவரும் இவரின் இணையரும் நடத்திய போராட்டங்களின் தொகுப்பாக உள்ளது. பல நிகழ்வுகள் ஆய்வு செய்ய வேண்டியவைகள், இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. இவர் செய்த பணிகளின் தாக்கம் என்ன, நிலம் கொடுத்ததில், வீடுகள் கட்டிக் கொடுத்ததில், பெண்களை ஒருங்கிணைத்ததில், இறால் பண்ணைக்கு எதிராக நடத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தீர்ப்பு வாங்கியதில் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இவர்கள் இருவரும் தங்கள் செயல்பாடுகளுக்காக நிறுவனங்களோ அமைப்புக்களோ பெரிய அளவில் கட்டமைக்காமலே செயல்பட்டு வந்தனர். அந்தச் செயல்பாடுகளில் வெற்றியும் பெற்றனர். இன்று பல அமைப்புக்கள் அமைப்புக்களைக் காக்கவே செயல்படுகின்றன. ஆனால், இவர்கள் மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து மக்களை ஒருங்கிணைத்து போராடி பல பிரச்சினைகளைத் தீர்த்துக் காண்பித்திருப்பது புதுமையாக இருக்கிறது. அதுதான் இளைஞர்களுக்கு நம்பிக்கை தருவதாக பலர் கூறுகின்றனர். இவரிடம் இருக்கும் தலைமைத்துவம், இவரிடம் இருக்கும் கண்ணோட்டம், இவரிடம் இருக்கும் அணுகுமுறை அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.
பிரச்சினையின் உண்மைத் தன்மையை உண்மையாக நேர்மையாக அரசியலாக்காமல் எதிரணியினரிடம் கூறும்போது அவர்களின் உள்ளத்தைத் தொட முடியும். அவர்களையும் நியாயத்தின் பக்கம் கொண்டுவர முடியும் என்பதை நிரூபணமாக்கி இருக்கின்றார் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். இன்று இவரால் எப்படி சித்தாந்தங்களைக் கடந்து பல கட்சிக்காரர்களையும் ஈர்க்க முடிகிறது என்பது அடுத்த ஆய்வுப்பகுதி. நம் ஆய்வாளர்கள் இதுவரை வெளிவந்த புத்தகங்களையும், கட்டுரைகளையும் படித்துவிட்டு, அதிலிருந்து எழும் கேள்விகளுக்கு பதில் தேடினால் பல ஆய்வுகளை அவர்கள் முன்னெடுக்க முடியும். இவரைப் பற்றிய ஆய்வுகள் என்பது புதினங்களை உருவாக்குவது அல்ல. மேம்பாட்டுக்கு அணுகுமுறைகளை உருவாக்கத் தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். 100 வயதிலும் புத்தகம் படிப்பது, வருகின்றவர்களிடம் உரையாடுவது, வகுப்பெடுப்பது, எழுந்து நின்று கூட்டங்களில் பேசுவது அனைத்தும் வித்தியாசம். இவரைப் பற்றி இன்றைய இளைஞர்கள் பலர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். பலர் இவரை ஆவணப்படுத்தி வருகின்றனர். இன்றைய தேவை நல்ல ஆய்வுகள் இவரைப் பற்றி. இன்றைய சூழலுக்கான தலைமைத்துவம் இவரிடம் என்ன இருக்கிறது என்று ஆய்வு நடத்த வேண்டும். அதுதான் இன்றைய தேவை.
- பேராசிரியர் க. பழனித்துரை, காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)