19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி உலக வரலாற்றிலும் - இந்திய வரலாற்றிலும் தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்திய காலகட்டம். தொடர்ந்த உலகப் போர்கள், பிரித்தானியத்திற்கு எதிரான கிளர்ச்சிகள், இந்திய விடுதலைப் போராட்டம் ஆகியவை மட்டுமே அந்த நூற்றாண்டின் முக்கியத்துவத்திற்குக் காரணமல்ல. பழமைவாதமும், பிற்போக்குக் கருத்தியலும் ஊறிப்போய்க் கிடந்த இந்திய நிலப்பரப்பில் உருவான சமூக மறுமலர்ச்சி குறித்த சிந்தனைகளும் அவற்றை முன்னெடுத்த ஆளுமைகளும் 19 ஆம் நூற்றாண்டினை வரலாற்றின் முக்கியப் புள்ளியாக மாற்றினர். ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், M.G. ரானடே போன்றோர் சமயம் சார்ந்த சிக்கல்களையும் காந்தி, திலகர், அம்பேத்கர், பெரியார் போன்றோர் அரசியல் முன்னெடுப்புகளையும் தீவிரமாகக் கைக்கொண்ட காலகட்டம் அது. இவர்களில் அண்ணல் அம்பேத்கரை ஒரு தலித் தலைவராகவே இன்றளவும் பொதுச்சமூகம் முத்திரையிட்டு வைத்திருப்பது அறியாமையினால் மட்டுமல்ல, அது ஒரு வகையான செயல் திட்டம் (Planned Conspiracy). மாயைகளை உடைக்கவேண்டியதும், உண்மைகள் பொதிந்து கிடக்கும் ஆவணங்களைப் பரவலாக்குவதும் அறிவுச் செயல்பாட்டின் முக்கியக் கடமை. இப்படியான பணிகளின் சமீபத்திய ஆச்சரியமே தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறையின் வெளியீடாக மலர்ந்திருக்கும் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் (10 தொகுதிகள்) ஆகும்.
உருவாக்கம் : தனித்தன்மைகள்
என்.சி.பி.எச். நிறுவனம் மூலமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கும் இப்பணியின் மூலம் முதற்கட்டமாக 10 தொகுதிகள் வெளியாகியுள்ளன. செயல்திட்டத்தில் இன்னும் 90 தொகுதிகள் வரவுள்ளன. அம்பேத்கரின் சிந்தனைகள், பேச்சு, எழுத்து என இரு நிலைகளில் தொழிற்பட்டவை. இவற்றைத் தொகுத்து முதலில் மகாராஷ்டிர அரசு 17 தொகுதிகளாக வெளியிட்டது. அம்பேத்கர் பற்றிய பரவலான வாசிப்புக்கு அத்தொகுதிகள் வகை செய்தன. பிறகு
என்.சி.பி.எச். நிறுவனம் டெல்லியில் இயங்கி வந்த அம்பேத்கர் பவுண்டேசன் அறக்கட்டளை உதவியுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்களின் உதவியுடன் பல ஆண்டுகள் உழைப்பில் (1993-2005) மொழிபெயர்த்து அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் எனும் பெருந்தலைப்பில் வெளியிட்டது. இவ்விரு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது நவீன வடிவத்தில் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் வெளியாகியிருக்கும் அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்ட பணியாகும். இந்தத் தொகுப்புகளை உருவாக்க சம்பந்தப்பட்ட குழுவினரின் உழைப்பும் திட்டமிடலும் அதன் மூலம் கிடைத்திருக்கும் விளைச்சலும் அசாத்தியமானவை.
அம்பேத்கரின் கருத்தியல் சாமானிய - நடுத்தர மக்களுக்கும் சென்று சேர வேண்டுமென்ற நோக்கில் இத்தொகுதிகள் மக்கள் பதிப்பாக வெளிவந்துள்ளன. இதன் நெறியாளுகைக் குழுவில் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை.ந. அருள், புலவர் செந்தலை கௌதமன், பேராசிரியர்கள் வீ. அரசு, மு. வளர்மதி,
அ. மதிவாணன் உள்ளிட்டோர் செயல்பட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் பதிப்புப் பணியில் முதன்மைப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டுள்ள பேராசிரியர் வீ. அரசுவின் எழுதியலும் தரவுகளின் நுணுக்கமும் எளிதில் கடந்துவிடக் கூடியவை அல்ல. சுமார் 30 பக்கங்களுக்கு அவர் எழுதியுள்ள அம்பேத்கர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு 1891 முதல் 1956 வரையான அவரது பயணத்தைத் திரட்சியான எழுத்துகளில் முன்வைக்கிறது. ஆகச்சிறந்த மார்க்சியவாதியான வீ. அரசு அந்தக் குறிப்புகளின் இறுதியில், இந்தியச் சமூகத்தை அவர் அளவுக்குப் புரிந்து கொண்டவர்கள் வேறு யார்? என்று எழுப்பும் கேள்வி அம்பேத்கரின் பல்லாயிரம் பக்க எழுத்துகளை விடையாகக் கொண்ட கேள்வி. முதல் தொகுதியில் அரசு அவர்கள் வழங்கியுள்ள இந்தியச் சமூக முரண்கள் : சாதி - சூத்திரர் - தீண்டப்படாதோர் குறித்த அம்பேத்கர் உரையாடல்கள் எனும் கட்டுரை மற்ற எல்லாத் தொகுதிகளையும் வாசிப்பதற்கான வழிவிளக்காக அமைகிறது. அம்பேத்கரின் ஆய்வுகளைக் கற்றறிவதன் மூலம் இந்தியச் சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள முடியும் என முடியும் அந்தக் கட்டுரை சாதியத்தின் தோற்றுவாய், இயங்கியல், வர்ணம் - சாதி இரண்டுக்குமான வேறுபாடு, சூத்திர மரபு உருவாக்கம், தீட்டுக் கற்பிதம் ஆகியவை பற்றிய அம்பேத்கரியல் வாசிப்பனுபவக் குறிப்புகளைப் பகிர்கிறது.
மேலும் சாதியின் பாதுகாவலாக விளங்கும் அகமண முறை, குலக்குழு முறை, மனுதர்மம் வழியான பிற்போக்கியல், நால் வருணத்தில் நான்காம் வர்ணம் உருவான விதம், சாதிய அழித்தொழிப்புக் கூறுகள், காந்திக்கும் அம்பேத்கருக்குமான முரண்கள், ஐரோப்பிய அறிஞர்களின் மேற்கோள்களை அம்பேத்கர் சான்று காட்டிய தன்மை என்று இக்கட்டுரை அம்பேத்கரியலுக்கான முகப்புரையாக அமைந்துள்ளது. அவரை இந்தியச் சமூகத்தின் ஒடுக்கப்பட்டோருக்கான அடையாளப் படுத்துதலில் இருந்து விடுவிக்கும் பணியை இத்தொகுப்பு செவ்வனே செய்கிறது. நூல் தொகுதிகளின் பொருண்மை ஒவ்வொரு தொகுதியின் தொடக்கத்திலும் தரப்பட்டுள்ளது.
சாதியம் எனும் பெருந்தலைப்பின் கீழ் சாதியம் :
வரலாறு - ஆய்வு எனும் நிலையில் நான்கு தொகுதிகளும், சாதியம்: கருத்து நிலை எனும் நிலையில் மூன்று தொகுதிகளும், சாதியம் : போராட்டம் - விடுதலை எனும் நிலையில் இரு தொகுதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்து மதம் எனும் பெருந்தலைப்பின் கீழ் இந்து மதம் :
வரலாறு - ஆய்வு என்ற துணைத்தலைப்பில் மூன்று தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இந்து மதம் பற்றிய கருத்துநிலை என்ற தலைப்பில் மூன்று தொகுதிகள் வெளிவரவுள்ளன. மொத்தச் செயல்திட்டத்தில் உள்ள 100 தொகுதிகளில் 10 தொகுதிகள் திறம்பட முழுமை பெற்றுள்ளன.
ஒவ்வொரு தொகுதியின் வேலைப்பாடு பொறுப்புடனும் அழகுடனும் நெய்யப்பட்டுள்ளது. தொகுதிகளின் கூடுதல் சிறப்புகளைப் பின்வரும் கவனக்குறிப்புகள் மூலம் புரிந்துகொள்ளலாம்.
- மராட்டிய மொழியிலிருந்து மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட அம்பேத்கர் எழுத்துகள் பின்னர் அங்கிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்கள் மக்கள் பதிப்பில் இடம்பெற்றுள்ளன.
- ஒவ்வொரு தொகுதியும் சுமார் 300 பக்கங்களைக் கொண்டது. அம்பேத்கர் ஆய்வில் உருவான அவரது பெருநூல் வடிவங்கள் இந்த முந்நூறு பக்க வரையறை கருதி பகுதி - 1, பகுதி - 2 எனும் இரு பிரிவுகளாக வெளியிடப்பட்டுள்ளன.
- ஒவ்வொரு பெருந்தொகுப்பிலும் உள்ள பொருண்மை குறித்துத் (சாதியம், இந்துமதம்) தெளிவுபெறும் வகையில் பொருண்மையின் முதல் தொகுதியில் அறிமுகக் கட்டுரை ஒன்று விரிவாகத் தரப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் நூல்கள் எங்கிருந்து மொழிபெயர்க்கப்பட்டன? ஆதார மூலங்களான கையெழுத்துப் படிகள் எவை? அரசு சார்ந்த நிறுவனங்களில் எடுக்கப்பட்ட ஆவணங்கள் - இதழ்கள் - கூட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட உரைகள் முதலியன துல்லியமான விவரங்களாகத் தரப்பட்டுள்ளன.
- மராட்டிய மொழியில் உள்ள எழுத்தாக்கங்கள் நீண்ட தொடரமைவாக அமைவது இயல்பு. பதிப்புக்குழுவினர் அதை மாற்றித் தமிழ் வாசிப்புக்கேற்ற வகையில் எளிமையாகப் பொருளாழம் மிக்க தொடர்களாக அமைத்த விதம் பாராட்டுக்குரிய பணியாகும்.
- தலைப்புக்களும், துணைத்தலைப்புக்களும் பதிப்புக்குழுவால் பொருத்தமாகத் தரப்பட்டுள்ளன. இதைக் குறிக்கும் வகையில் தலைப்புகளைத் தனித்துக் காட்டும் விதமாக (ப.ஆ. - பதிப்பாசிரியர்) எனச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
- பல்வேறு பண்பாட்டுப் பின்புலம் கொண்ட சொற்களை அம்பேத்கர் தமது ஆக்கங்கள் முழுவதும் பயன்படுத்தியுள்ளார். இவற்றைப் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டுள்ள கலைச்சொல் அகராதி இப்பணியில் தனித்துவமிக்கது. சான்றாக 'நாசிசம்' என்ற சொல்லுக்கு NAZI - தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி என்ற அதன் பொருளை மட்டுமே வழங்காமல் அதன் பின்புலம் சார்ந்த தகவல்களைத் திரட்சியாக வழங்கும் அகராதித்தன்மை தொகுதிகள் முழுவதையும் இலகுவாக வாசிப்பதற்கான திறப்பாகும்.
- தரவுகள் மொழியாக்கம் செய்யப்பட்ட மூல நூல்களை வாசகர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் தரப்பட்டுள்ள நூல்களின் விபரம் இந்த ஆக்கங்கள் குறித்த நம்பகத் தன்மையைப் பன்மடங்கு அதிகரிக்கிறது.
- பின் இணைப்பில் தரப்பட்டுள்ள சுட்டி (Index) தொகுதிகள் முழுவதும் பயின்றுவரும் இடங்கள், மனிதர்கள், பொருண்மைகள் பற்றி விரைவாக அறிய உதவுகிறது.
- நூறாண்டுகள் கடந்துவிட்ட எழுத்தாக்கங்களை வாசிக்கும் ஒருவர் செய்திகளோடு அந்நியப்படாமல் தடுக்கும் சமகால மொழிநடை இப்பணியின் தனிச்சிறப்பாகும்.
- சமீபகாலத் தமிழ்ப் பனுவல்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக எழுத்துப்பிழை (Spell Error) ஆகிவிட்டது. தமிழின் ஆகச் சிறந்த பதிப்பகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அரசு சம்பந்தப்பட்ட பணிதானே‚ என்ற வழக்கமான அலட்சியப்போக்கு துளியும் இன்றி 20 க்கும் மேற்பட்ட மொழியார்வலர்களைக் கொண்டு மெய்ப்புத் திருத்தம் (Proof Reading) செய்யப்பட்டுள்ளது.
- மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யும் அரும்பணியைப் பேராசிரியர் பா. ஆனந்தகுமார் தலைமையிலான குழு செய்துள்ளது. இவர்களின் பணியானது வாசிக்கப்படுவது ஒரு மொழியாக்கம் என்பதை மறக்கடித்து மூலநூலை வாசிப்பதைப் போன்ற நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
- குறிப்பிட்டே ஆகவேண்டிய மற்றொரு முக்கிய அம்சம் இந்தப்பணிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர். அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் என்ற தலைப்பில் உள்ள அண்ணல் என்பதே பலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ள சொல். தமிழின் சிறந்த அகராதிகளில் ஒன்றெனக் கருதப்படும் மதுரைத் தமிழ்ப் பேரகராதி இச்சொல்லுக்கு அரசன், தலைமை, புத்தன், பெருமை, பெருமையில் சிறந்தோன், முதல்வன், திருமால், கடவுள் எனப் பல்வேறு பொருள்களைத் தருகிறது. க்ரியாவோ, வணக்கத்துக்குரியவர் என்ற பொருளை வழங்குகிறது. கம்பர் மொழியில் ‘அண்ணலும் நோக்கினான்’ என்ற தொடரில் சுட்டப் பெறும் ‘இராமன்’ அகராதிப் பொருள்களுக்கேற்ப அமைவது சனாதன இயல்பு. பிறகு இந்திய வரலாற்றில் இச்சொல் காந்திக்கே உரிய முன்னொட்டாகச் சுட்டப்பட்டது. காந்தியைத் தவிர இங்கு யாரும் அண்ணலாக முடியாது, கூடாது என்ற வலதுசாரிக் கருத்தியலை உடைத்த பெருமகனாக நாம் அம்பேத்கரை வாசிக்க வேண்டிய சமகாலத் தேவை உள்ளது. இதற்குத் திறவுகோலாக ஓர் அரசின் செயல்திட்டப் பணியான இந்தப் புத்தக உருவாக்கத்திற்கு ‘அண்ணல்’ என்ற பெயரை முன்மொழிந்த - வழிமொழிந்த அத்தனை பேரும் மாண்புக்குரியவர்கள். குறிப்பாக இதுபோன்ற உடைப்புகளைச் செய்வதில் எப்போதும் முன்நிற்கும் பேராசிரியர்
வீ. அரசு எதிர்ப்புகளையும் இழப்புகளையும் அதிகம் சந்தித்தவர். நெறியாள்கைப் பணியில் செயல்பட்ட புலவர் செந்தலை கௌதமன் உள்ளிட்ட அனைவருமே நினைத்துப்பார்க்கத் தக்கவர்கள். இந்தப் பொருள் குறித்தறிய 1936 இல் ஜாத்பாத் தோடக் மண்டலுக்கு சாதியை அழித்தொழித்தல் எனும் தலைப்பில் அமைந்த உரையின் பொருட்டு காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடந்த உரையாடல் முரணை வாசிக்க வேண்டியது (தொ : I, பக்: 187,197) அவசியமாகிறது.
- தொகுதிகளின் வடிவமைப்பில் பெருஞ்சிரத்தையெடுத்து உழைத்த ஜீவமணி குழுவினரின் பணி பிரமாதமானது. அடர் நீலமே அம்பேத்கரியலின் அடையாளம் என்பதை இலகுவாக்கி வெளிர்நீலத்தில் உருவாக்கப்பட்ட அட்டையின் நிறம் அம்பேத்கர் எல்லோருக்குமான ஆளுமை என்பதைக் காட்டுகிறது. முகப்பட்டையில் இடம்பெற்றுள்ள அம்பேத்கரின் கோட்டோவியம் கம்பீரமும் அறிவுத் தெளிவும் கொண்ட கண்களையும் அவருக்கே உரிய உடை நேர்த்தியையும் கொண்ட மாற்றுச் சித்திரம்.
- தொகுதியின் உள்ளடக்கத்தைச் சுருக்கமான சொற்களால் அட்டையிலே குறித்திருப்பதும் அதை மாற்று நிறத்தில் (பச்சை) தனித்துக் காட்டியிருப்பதும் (High Lighted) சிறப்பான உத்தி முறைகளாகும். ஒரு பெருந்தொகுப்பைக் கையாள்வதற்கான சிரமங்களை இதுபோன்ற முறைகள் எளிமையாக்குகின்றன.
- தாள்களின் தரமும் எழுத்துக்களின் உருவளவும் தேவையான இடங்களில் தரப்பட்டுள்ள தடிமையும் (Letter Boldings) ஒரு தேர்ந்த செய்நேர்த்தியுடன் இத்தொகுதிகளை மிளிரச் செய்கின்றன.
உள்ளடக்கம் : சில செய்திகள்
முன்னரே குறிப்பிட்டது போல் இரண்டு பெரும் தலைப்புகளின் படிதான் 10 தொகுதிகளும் சமைக்கப்பட்டிருக்கின்றன.
சாதியம், இந்து மதம் எனும் இரு தலைப்புகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள பல்வேறு கட்டுரைகளை வாசிப்பு நலன் கருதிப் பதிப்புக்குழுவே சுருக்கமான தலைப்புகளைத் தந்துள்ளது. இது சம்பந்தப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. இந்த இரு பொருண்மைகள் பற்றிய சில கூறுகளைப் பருந்துப் பார்வையில் காணலாம்.
சாதியம் :
படிநிலைப் பாகுபாடுகளைக் கொண்ட இந்தியச் சமூகத்தில் சாதியம் குறித்த ஆய்வுகள் என்பவை சார்பு நிலையிலும், எதிர் நிலையிலும் நிகழ்த்தப்பட்டு வந்த காலகட்டத்தில் அம்பேத்கர் தனது தேர்ந்த வாசிப்பின் மூலம் புதிய அணுகல் முறையைக் கண்டுபிடித்தார். வேதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், பிராமணங்கள், சூத்திரங்கள், உபநிடதங்கள் எனத் தேடித் தேடி வாசித்து சாதிய இயங்கியலை அம்பேத்கர் அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.
முதல் தொகுதியின் இரண்டு நூல்களில் முதல் கட்டுரை 1916 மே - 19 அன்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மானிடவியல் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. இது பின்னர் இந்தியாவில் சாதிகள் - அவற்றின் இயங்கியல், தோற்றம், வளர்ச்சி எனும் தலைப்பில் 1917 இல் இந்தியன் ஆண்டிக்கொயரி ஆய்விதழில் வெளியானது.
இந்தியச் சமூக அமைப்பின் தவிர்க்க முடியாத தன்மையுடையதும் பல்வேறு விளைவுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டதுமான சாதியம் பற்றிய கெட்கரின் முக்கியமான கருத்தை மேற்கோள் காட்டுகிறார் அம்பேத்கர்.
இந்தியாவில் சாதிமுறை உள்ள வரை இந்துக்கள் சாதிக்கலப்பு மணம் செய்ய மாட்டார்கள். அயலாருடன் சமூக உறவு கொள்ளமாட்டார்கள். இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றால் இந்தியச் சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும் (S.V. Ketker : History of Caste in India : Page.4)
எனும் கெட்கரின் கருத்தினை சாதியின் பேராபத்தை உணர்த்தும் வரிகளாக அடிக்கோடிடும் அம்பேத்கர், புறச்சாதியாரோடு உணவு உண்ணாமை, தனிமைப்படுத்திக் கொள்ளுதலின் இயல்புநிலை, சாதியின் காவல்மரமாக விளங்கும் அகமண முறை, சாதி முறைத் திருமணத்தில் உள்ள உபரி ஆண்கள் - பெண்கள் என்று பரவலான கருத்துக்களை தீர்க்கப்பூர்வமாக எழுதுகிறார். பால்ய மணம், கைம்பெண் முறை, உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்கங்கள் மனுவின் சூத்திரத்திலிருந்து எவ்வாறு நடைமுறையாக்கப்பட்டது? ஸ்மிருதியை மீறும்போது சாதிச்சட்டங்கள் எவ்வாறு கொடூரத்தன்மை பெற்று விளங்கின? நால் வருணத்தில் ஒவ்வொரு வர்ணமும் தங்களை எப்படி தனித்த சாதியாக மாற்ற முற்பட்டன? அதன் உளவியல் காரணி பற்றித் தெளிவாகக் குறிப்பிடும் அம்பேத்கர் ‘போலச்செய்தல்’ மூலம் சாதிகள் பல்கிப் பெருகியமை பற்றியெல்லாம் விரிவாக எழுதுகிறார். சாதியம் பற்றிய அவரது திடமான பின்வரும் கூற்று முக்கியமானது.
ஒரு சாதி என்று இல்லவே இல்லை. எப்போதுமே சாதிகள் தான் இருக்கின்றன. நான் சொல்வதைப் பின்வருமாறு விளக்குவேன். பார்ப்பனர்கள் தங்களைத் தனியாக ஒரு சாதி என்று ஆக்கிக் கொண்டதன் விளைவாகப் பார்ப்பனரல்லாதோர் என்றொரு சாதியை அதன்மூலம் உருவாக்கினர். அல்லது எனது பாணியில் சொல்வதானால் அவர்கள் கதவடைத்துக் கொண்டதன் மூலம் மற்றவர்களை வெளியில் நிறுத்திவிட்டனர் (தொ: I,பக்: 70)
என்ற அவரது பார்வை வித்தியாசமானது. புனிதம் கருதியோ, தூயவாதம் பேசிக்கொண்டோ பார்ப்பனர்கள் நடத்திய கதவடைப்பு பின்னாளில் பல்வேறு படிநிலை ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிற்று. இந்தத் தொகுதியின் மற்றொரு முக்கியமான கட்டுரை ‘சாதியை அழித்தொழித்தல்’ எனும் தலைப்பிலானது. மிகத்தீவிரமான சர்ச்சைகளைக் கிளப்பிய இக்கட்டுரை 1936 இல் லாகூரில் நடைபெற்ற ஜாக் பாத் தோடக் மண்டல் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கிற்காகத் தயாரிக்கப்பட்ட உரை. ஆனால் எதிர் வினைகளாலும் சில காரணங்களாலும் அவ்வுரையை அம்பேத்கர் நிகழ்த்தவில்லை. பின்னர் 1937 இல் இக்கட்டுரை நூலாக வெளியாகிப் பெரும் வரவேற்பினைப் பெற்றது. இவ்வுரையில் தீட்டு, அதை உருவாக்கும் மதச் சிக்கல்கள், வேலைப் பிரிவினை, கலந்து உணவுண்ணாமை எனப் பல காரணிகளைச் சாதியை வளர்க்கும் கருவிகளாகக் குறிப்பிடும் அம்பேத்கர் சாதியை அழித்தொழிக்கும் முக்கியக் கருவியாக சாதிக்கலப்பு மணத்தைப் பரிந்துரைக்கிறார். மேலும் இந்துச் சமூகத்தில் சாதியத்தால் ஏற்பட்ட சீரழிவு, மனிதர்களைச் சாதி எப்படிக் கோழையாக்குகிறது? நால்வருண முறையின் பித்தலாட்டங்கள் எனப் பலவற்றையும் விவரிக்கிறார். இதற்கு மறுப்புத் தெரிவித்து ஹரிஜன் இதழில் எழுதிய காந்தி இந்து மதவாதிகளில் ஒரு பிரிவினர் மீதுள்ள வெறுப்பை இந்து மதத்தின் மீது காண்பிக்கிறார் என்றும் ஒரு மதத்தை அது விளைவித்த சான்றோர்களைக் கொண்டே மதிப்பிட வேண்டுமேயன்றி மிகக் கேடான நபர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு மதிப்பிடக்கூடாது என்றும் அம்பேத்கருக்கு எதிர்வினையாற்றினார். இதற்கு மறுப்பாக அம்பேத்கர் காந்தி சிந்தனையை நம்புபவர் அல்லர். எனவே நடைமுறைக்கு உதவும் வழிகாட்டுதலை அவரால் அளிக்க முடியாது என்றும், அவர் வாய் திறந்தால் பிறர் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றார். அதற்குப் பிறகு தெருவில் போகும் நாய்கூட குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுகின்றன. அதனால்தான் அவருக்கு மறுமொழி அளித்துள்ளேன் என்றும் மகாத்மா மீதான பெரும் புனிதத்தை மறுக்கிறார். இதன்மூலம் இருபெரும் ஆளுமைகளின் கருத்தியல் முரண் வெளிப்படுகின்றது.
VIII, IX ஆகிய தொகுதிகள் தயாரிப்பில் உள்ள நிலையில் X, XI, XII ஆகிய தொகுதிகள் இந்து மதம் பற்றிய விவாதங்களைக் கொண்டது.
இந்து மதம் :
பழைமைவாதப் போக்கும் சனாதனத் தன்மையும் மலிந்து கிடக்கும் இந்து மதம் பிற மதங்களை விடவும் விமர்சனப்பூர்வமாக அணுகப்படுகிறது. கிறிஸ்தவ - இஸ்லாமிய மதங்களை விட இந்து மதம் மேன்மைப்பட்டதாகப் பொதுப்புத்தி கொண்டவர்களால் காட்டப்படுவதுண்டு. மற்ற மதங்கள் சர்வாதிகாரப் பண்பு கொண்டவை என்றும் தோற்றுவித்தவர் ஒருவரே என்றும் கூறப்படுவதுண்டு. இந்து மதம் பலரால் பல சூழல்களில் தோற்றுவிக்கப்பட்ட ஜனநாயகப் பண்புடைய அமைப்பு என்பதே அதன் மேன்மைப் பார்வைக்குக் காரணம். பண்பாட்டு ஆய்வாளரான இ.பி. ஹேவல், சமயம் என்பது இந்தியாவில் மனிதனைக் கட்டுப்படுத்தும் ஒரு கோட்பாடன்று. வாழ்க்கையின் பல்வகைச் சூழ்நிலைக்கும் ஆன்மிக வளர்ச்சியின் பல்வேறு படிகளுக்கும் ஏற்ப மனித நடத்தையை அமைத்துக் கொள்வதற்கு உதவியாக அமைந்த ஒரு கருதுகோள் (Hypothesis) ஆகும். (The History of Aryan rule in india, Page: 170) என்கிறார். அவரது கருத்தின்படி மதம் என்பது மனித நடத்தையை பண்படுத்த வேண்டும் என்பதே அறம். ஆனால் தோற்றுவாயிலிருந்து சமகாலம் வரையான இந்து மதக் கூறுகளை நாம் அந்தப்படி அணுகுவது சிரமம். அதற்கு தனித்த பார்வையும் அம்பேத்கரின் கண்ணாடியும் அவசியம்.
அம்பேத்கரின் சாதி குறித்த ஆய்வில் மூலகாரணமாக அவர் மதத்தைச் சுட்டுகிறார். எனவே மதம் பற்றிய பல்வேறு உரையாடல்களை நிகழ்த்தும் அம்பேத்கர், இந்துக்களின் பைபிள் எனப்படும் மனுஸ்மிருதியோடுதான் தன் ஆய்வுகளைத் தொடர்கிறார். மனுஸ்மிருதி மூலம் ஏற்பட்ட வருணப் பாகுபாட்டை - மோதலை வர்க்கப்போர் என்று கூறுவதுடன் பார்ப்பனர்களை மீயதிகாரம் பெற்றவர்களாகவும் நிறுவுகிறார். இந்து மதம் முன்னிறுத்தும் உருவ வழிபாடு, அதன் மூலம் உண்டாக்கப்பட்ட வைதீக நெறிகள், சம்பிரதாயங்கள் என அனைத்தையும் விரிவாகப் பேசுகிறார்.
இந்து மதத் தொகுதிகளுக்கான அறிமுகக் கட்டுரையில் பேராசிரியர் வீ. அரசு, மதத்திற்கு ஒரு தத்துவ மரபு உண்டு என்பதை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை. மதத்திற்கு இறையியல் இருக்கலாம். அதைத் தத்துவம் என்று கூற முடியாது என்கிறார். இக்கருத்து இந்து மதத்தைக் கோட்பாடாக - தத்துவமாக அணுகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
இவ்வாறு தலைப்பிடுதலில் - பகுப்பு முறையில் - கலைச் சொல்லாக்கத்தில் - விவரணங்கள் குறித்த நேர்மையில் - ரசனையும் அறிவும் மிளிரும் கட்டுமானத்தில் இன்னும்... இன்னும்... பல நிலைகளில் இந்தப் பணி ஒப்பற்றது. வாசிப்புச் சோர்வு ஏற்படாத வண்ணம் உளவியல் தன்மையோடு இப்பணியில் புகுத்தப்பட்டுள்ள படையல் நேர்த்தி உச்சிமுகர வேண்டியது. அந்த வகையில் சட்ட மேதையென்றும், ஒடுக்கப்பட்டோர் ஒளியென்றும் அடையாளம் கொண்ட அம்பேத்கரை இந்தியச் சமூகவியல் ஆய்வின் நேர்மையான முன்னோடியாக இந்தப்பணி அடையாளப்படுத்துகிறது. அந்த வகையில் அண்ணலுக்குச் செலுத்தும் அஞ்சலியாக இதனைப் புரிந்து கொள்ளலாம்.
துணை நின்றவை
1. அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் : தொகுதிகள் - I, II, III, IV, V, VI, VII, X, XI, XII தமிழ் வளர்ச்சித்துறை - என்.சி.பி.எச். வெளியீடு.
2. இந்து சமயத் தத்துவம் - டாக்டர். T.M.P. மகாதேவன் - தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு.
3. வரலாறு பண்பாடு அறிவியல் (டி.டி. கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்) - மூ. அப்பணசாமி, ஆறாம்திணை வெளியீடு.
4. மார்க்ஸ் - அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை - ந. முத்துமோகன், விடியல் வெளியீடு.
5. இந்திய நாத்திகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாய - பாரதி புத்தகாலயம் வெளியீடு.
- செ. சதீஸ்குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அரசுக் கல்லூரி, காங்கேயம்.