புதிய கதைக் களங்களை அறிமுகப்படுத்தும் படைப்பே சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அத்துடன் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி எழுதப்படும் படைப்புகள் கூடுதல் கவனம் பெறுகின்றன. அந்த வகையில் வானவன் எழுதியுள்ள ஒரக்குழி புதினம் மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுக்கும் பொருட்டு படைக்கப்பட்டுள்ளது. அப் புதினத்தில் சித்திரிக்கப்பட்டுள்ள நவீன வேளாண்மையினால் ஏற்படும் கேடுகளையும் இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதற்கான வழிமுறைகளையும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

வேளாண்மை வேலைகளுக்கு அஞ்சி நகரத்திற்குச் சென்ற செல்லமுத்து பத்தாண்டுகளுக்கு மேல் நகரத்தில் வாழ்ந்தும் நகர வாழ்க்கையில் ஒன்ற முடியாமல் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பி வந்து ஊர்மக்களுடன் இணைந்து இயற்கை வேளாண்மையை மேற்கொள்வதுதான் ஒரக்குழி புதினத்தின் மையக்கருவாகும். கதைப்போக்கின் ஊடாக, இரசாயன உரத்தால் ஏற்பட்ட தீங்குகளையும் இயற்கை உரத்தாலும் இயற்கை உணவுகளாலும் ஏற்படும் நன்மைகளையும் விளக்கிச் செல்கிறது அப்புதினம்.

வேளாண்மை குறித்து அடுத்தடுத்து முழுவதுமாய் எதுவும் தெரிந்து கொள்ளாமல் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்யும் மானாம்பதி கிராம உழவர்களைப் படிப்படியாக இயற்கை வேளாண்மையை நோக்கித் திருப்பும் முயற்சியில் கதையின் நாயகன் செல்லமுத்து வெற்றியடைகிறார்.

vanavan novel on orakkuzhiதுணைமைக் கதைமாந்தர்கள் அனைவரும் செல்லமுத்துவின் நோக்கத்திற்கு வலுசேர்ப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளனர்.

நவீன வேளாண்மையும் இரசாயன உரத்தின் விளைவுகளும்

நவீன வேளாண்மையில் ஈடுபட்டு வரும் உழவர்களை உடனே இயற்கை வேளாண்மையின் பக்கம் திருப்பிவிட முடியாது. அதற்கு முதலில் நவீன வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இரசாயன உரத்தால் ஏற்படும் தீங்குகளை மக்களுக்கு விளக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் புரிந்து கொண்டு மாறுவர் என்பதை நன்கு புரிந்து கொண்ட செல்லமுத்து, கடைக்காரர் பரமசிவம் மாமாவிடம் பின்வருமாறு கூறுகிறார்:

"ஆமா, உங்க காலத்துலதான் ரசாயன ஒரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் களைக்கொல்லியையும் போட்டு நெலத்தை மலடாக்கி உணவுப் பொருட்களை எல்லாம் வெஷம் ஆக்கிட்டீங்க.1

என்று கூறிவிட்டு மேலும், இரசாயன உரத்தின் பாதிப்பால் சர்க்கரை நோய், புற்றுநோய், இரத்த அழுத்த நோய் எனப் பல்வேறு நோய்கள் உருவாவதைச் சுட்டிக்காட்டுகிறான், செல்லமுத்து.

அந்தக் காலத்திலே காலரா, கொலநோய், கொள்ளை நோய், வாந்தி பேதி எனப் பல நோய்கள் வந்து மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துப் போனார்களே என்று பரமசிவம் எதிர்க் கேள்வி கேட்கும்பொழுது செல்லமுத்து,

"ஆமாம் அதெல்லாம் தொத்து வியாதி. அதெல்லாம் வேரோட அழிச்சாச்சு இப்ப வர்றதெல்லாம் நாம சாப்பிடுறதுலேர்ந்து வர்றது. விஞ்ஞானம் வளர்ந்துட்டதா சொல்ற இந்த காலத்துலயும் எத உற்பத்தி பண்ணனும், எப்படி உற்பத்தி பண்ணனும்னு தெரிஞ்சிக்காம நாமா வர வெச்சிக்கிறது."3

 என விளக்குகிறான். செல்லமுத்துவின் இந்தப் பேச்சு ஊர் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இயற்கை உரம் தயாரித்தல்

மட்கிய சாணம், குப்பை, மாட்டு மூத்திரம், தழை முதலியவற்றை நிலத்திற்கு எருவாகப் பயன்படுத்தினால் நிலமும் பாதுகாக்கப்படும், நஞ்சற்ற விளைபொருள்களை உண்பதால் மனிதர்களும் நல்ல உடல் நலத்துடன் வாழ முடியும் என்பதைச் செல்லமுத்து ஊர் மக்களுக்குக் கற்பிக்கிறான். செல்லமுத்துவின் இயற்கை வேளாண்மையை ஊரிலுள்ள தொண்ணூற்று ஐந்து வயது கிருஷ்ணப்ப தாத்தா மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அவருடன் செல்லமுத்து உரையாடும் போது தன்னுடைய மட்டற்ற மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்துகிறார்.

அவர்களின் உரையாடலில் இயற்கை உரம் குறித்த அக்கறையும் இரசாயன உரத்திற்கு எதிரான குரலும் வெளிப்படுகிறது. அந்த உரையாடல் பின்வருமாறு:

"ரொம்ப சந்தோசம்டாப்பாஞ் ஏன் நம்ம ஊர்ல எதப் போட்டாலும் நல்லாத்தான் வரும். எருவ போட்டு வெளைய வெச்சது வரைக்கும் எல்லாம் நல்லாத்தேன் வெளைஞ்சது. இப்பதான் இவனுங்க எதஎதையோ போட்டு மண்ணப் பாழாக்கிபுட்டாய்க. நேத்து சாம்பசிவம் வீட்டுக்கு வந்தப்ப சொன்னான். ஏதேதோ பேரு தெரியாத மரக்கன்னெல்லாம் கொள்ளையில நட்டு வச்சிருக்கியாமே. வரப்போரத்துல நெறைய அகத்திச்செடியெல்லாம் நட்டு வளக்கிறியாம்.”

"ஆமா தாத்தா, இப்ப எல்லாரும் யூரியா போடுறாங்களே அது நமக்கு இயற்கையா கெடைக்கனும்னா அகத்தி போதும். காத்துல இருக்கிற நைட்ரஜன புடிச்சி பூமிக்கு தரும். நம்ம நாட்டுல ரசாயன ஒரம் வந்தப்ப ஜே.சி.குமரப்பா அதெல்லாம் வேண்டாம். அகத்திய நட்டு வச்சாலே போதும்னு சொன்னார். யாரும் கேட்கல. அதான் இப்ப அனுபவிக்கிறோம். இப்ப பூமித்தாய காப்பாத்த நமக்கு ஆடு, மாடு, அகத்தி வளர்ப்பது தான் ஒரே வழி."3

யூரியாவில் இருந்து கிடைக்கும் சக்தியை அகத்தி மரம் வளர்ப்பதின் மூலம் பெறலாம் என்று செல்லமுத்து கூறுவதன் மூலமாக, இயற்கை வேளாண்மையில் நிலத்தை மலடாக்காமலும் பிற உயிரினங்களைக் கொல்லாமலும் மனிதர் உணவை நஞ்சாக்காமலும் இயற்கை சார்ந்த அறிவியல் பயன்படுத்தப்படுவதை விளங்க வைப்பதாக அமைகிறது.

கிருஷ்ணப்ப தாத்தா இரசாயன உரம் போட்டு செய்யும் வேளாண்மையில் உடன்பாடு இல்லாதவர். அவர் இயற்கை வேளாண்மையை நேசிப்பவர். அதனால் செல்லமுத்துவை அவருக்கு மிகவும் பிடித்து விடுகிறது. செல்லமுத்துவை இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்கும் நம்பிக்கை நாயகனாகப் பார்க்கிறார்.

"என்னமோப்பா ஊர்ல அவனவன் செய்யிற விவசாயத்த பார்த்தா எனக்கு பயமா இருந்திச்சி. நீ செய்யறதப் பார்க்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருது. எக்காரணம் கொண்டும் இதக் கைவிட்டுடாத. நீ செய்யறதப் பார்த்து நாலு பேரு ஓம்பின்ன வரணும். பூமாதேவிய காப்பாத்தனும்டா. இல்லன்னா அவ சாபம் நம்ம புள்ளையொல சும்மா விடாது. ரொம்பப் பொறுமையாத் தான் போயிக்கிட்டிருக்கா அவ."4

என்று இயற்கை வேளாண்மையை ஆதரித்து செல்லமுத்துவிற்கு நம்பிக்கை அளிக்கிறார், கிருஷ்ணப்ப தாத்தா. கிருஷ்ணப்ப தாத்தா ஆசைப்பட்டது போல் நான்கு பேர் அல்லர், மகளிர் குழுப் பெண்களும் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து அந்த ஊரே செல்லமுத்துவின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டு இயற்கை வேளாண்மைக்குத் திரும்புகிறது.

நிலத்தைப் பதப்படுத்துதல்

நிலத்தை உழுது இரசாயன உரமிட்டுப் பயிர் செய்வதற்கு மாற்றாக இருபத்து நான்கு வகையான தானிய விதைகளைக் கலந்து நிலத்தில் விதைத்து அவை வளர்ந்து பூக்கத் தொடங்கியவுடன் அவற்றை அப்படியே உழுது எருவாக்கி விடுவது இயற்கை வேளாண்மையில் நிலத்தைப் பதப்படுத்தும் முறையை விளக்கி, அப்படிச் செய்வதால் மண்வளம் மேம்படும் என்பதையும், ஏற்கெனவே நிலத்திலிருக்கும் நச்சுத்தன்மையை இது போக்கிவிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறான், செல்லமுத்து..

சுயமான மண் பரிசோதனை முறை

நவீன வேளாண்மை முறையில் வேளாண்மை அதிகாரிகள் மூலம் ஆய்வகத்தில் மண் பரிசோதனை செய்து அவர்கள் சொல்லும் இரசாயன உரத்தைத்தான் நிலத்தில் இடவேண்டும். ஆனால், இயற்கை வேளாண்மையில் உழவர்களே சுயமாக மண் பரிசோதனை செய்து கொள்ளும் முறை செல்லமுத்துவின் மூலம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

"வீட்டுக்கு போனதும் ரெண்டு அன்னக்கூடய எடுத்துக்குங்க. ரெண்டும் ஒரே அளவா இருக்கட்டும். சோதன பண்ண மண்ணு எடுக்கிறது எப்படின்னு ஒங்களுக்குத் தெரியும். மேல்மண்ணக் கொஞ்சமாத் தள்ளிட்டு ஒன்ரை அடி ஆழத்துக்கு சரிவா ஒரு குழி எடுங்க. அதுல மேலேர்ந்து குழியோட அடி வரைக்கும் உள்ள மண்ண சொரண்டி எடுங்க. ஒரு ஏக்கர்ல நாலு எடத்துல எடுத்து ஒரு அன்னக்குடையில போட்டுக்கோங்க.

எவ்வளவு மண்ணு எடுத்தீங்களோ அவ்ளோ அளவுக்குப் பசுஞ்சாணத்த எடுத்து இன்னொரு அன்னக்கூடயில போடுங்க. ரெண்டையும் தண்ணி ஊத்தி தோச மாவு பதத்துக்கு கலக்குங்க. ரெண்டுலயும் கையை உள்ள விட்டு எடுங்க. பின்ன கைய தண்ணி விட்டு அலசுங்க. கையத் தேச்சி கழுவக் கூடாது. லேசா தண்ணிய மேல ஊத்தி அலசணும்.

இப்பக் கைய மோந்து பாருங்க, பசு மாட்டு சாணத்தோட வாசம் வந்தா பூமியில உயிர் இல்லன்னு அர்த்தம். சாண வாசனை வல்லன்னா பூமி உயிரோட இருக்குதுன்னு அர்த்தம்."5

இப்படி சுயமாக மண் பரிசோதனை செய்து சத்தில்லாத நிலமாக இருந்தால் பல தானிய விதைப்பு விதைத்து, நாற்பது நாள் கழித்து உழுது அவற்றை உருவாக்கி மண்ணில் உயிர்ப்பை உண்டாக்கும் முறை இயற்கை வேளாண்மையில் நிலத்தைப் பயன்படுத்தும் முறையாக இருப்பதை அறிய முடிகிறது.

விதை நேர்த்தி செய்தல்

புதியதாகப் போட்ட மாட்டு சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொண்டு அதில் வேப்பிலை, நொச்சி இலை, புங்கை இலை, குப்பை மேனியிலை, தும்பையிலை, துளசி இலை, அருகம்புல் ஆகியவற்றை உரலிலிலிட்டு இடித்துக் கலக்கிக் கொள்ள வேண்டும். இது சாணிப் பால் எனப்படுகிறது. அந்தச் சாணிப்பாலில் கடலை விதையைச் சணல் கோணிப்பையில் போட்டுத் தோய்த்து, பத்து நிமிடம் கழித்து வெளியில் எடுத்துச் சாணிச் கரைசல் வடிந்ததும் காற்றில் உலர வைத்து, ஈரம் கொஞ்சமாக இருக்கும் போது அதன் மீது சாம்பலைத் தூவி, மறுநாள் விதைக்க வேண்டும். அப்படிச் செய்வது ‘விதை நேர்த்தி செய்தல்’ எனப்படுகிறது. அப்படி விதை நேர்த்தி செய்து விதைத்தால் பூச்சிகள் தாக்காது எனச் செல்லமுத்து மூலம் விளக்கப்படுகிறது.

மூலிகைப் பூச்சி விரட்டியும் இரசாயனப் பூச்சிக்கொல்லியும்

நவீன வேளாண்மையில் இரசாயன உரங்களும் மருந்தும் இன்றிப் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பை ஒழிக்க முடியாது. அவை நிலத்தை மலடாக்குவதுடன் பூச்சியினங்களைக் கொன்றுச் சூழலியல் அழிவையும் உண்டாக்குகின்றன. ஆகவே, பூச்சிகளை விரட்ட ‘மூலிகைப் பூச்சி விரட்டி’யைத் தயாரிக்கும் வழிமுறை ஒரக்குழி புதினத்தில் செல்லமுத்துவின் மூலமாக முன்வைக்கப்படுகிறது.

இரசாயன உரத்தைப் பயன்படுத்தாமல் பூச்சியடித்தால் என்ன செய்வீர்கள் என மாவட்ட ஆட்சியரின் மனைவி கேட்கும்போது, செல்லமுத்து பின்வருமாறு கூறுகிறான்:

"இப்போதைக்கு வேப்பிலைய பதினைஞ்சி நாளைக்குத் தண்ணியில ஊற வெச்சி, அதுல தண்ணிய கலந்து தெளிக்கிறேன். அதிகமா வெள்ளாம பண்ணும் போது மூலிகை பூச்சி விரட்டி தயாரிக்கணும்"

"அது எப்படி செய்யறது?" கலெக்டரம்மா ரொம்ப ஆர்வமா இருந்தாங்க.

"ஆடு மாடு கடிக்காத நாலஞ்சு வக எலைங்களா பார்த்து சேகரிச்சி, அத துண்டு துண்டா வெட்டி, மூழ்குற அளவுக்கு மாட்டுக் கோமியத்துல ஊறவெச்சி பத்து நாள் ஊறுனதும் அத வடிகட்டி பத்து பங்கு தண்ணி கலந்து தெளிக்கணும்" 8

இயற்கை முறையில் பூச்சி விரட்டி தயாரித்துப் பயன்படுத்தும் பொழுது மனிதர்களின் உடல் நலமும் நிலத்தின் உயிர்ப்பும் மட்டுமின்றிப் பல்லுயிர்ப் பாதுகாப்பும் கவனத்தில் கொள்ளப்படுவதை அறிய முடிகிறது.

விளைச்சலைப் பெருக்கும் பஞ்சகாவ்யம்

இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சலைப் பெற பஞ்ச காவ்யம் எனும் கரைசலைப் பயன்படுத்துவதை அறிய முடிகிறது. என்ன தம்பி ஏதோ வித்தியாசமா வாசம் வருகிறதே என்று கேட்கும் இதழாசிரியர் உத்தமசோழனிடம் செல்லமுத்து,

பஞ்சகாவியம் குறித்து பின்வருமாறு விளக்குகிறான்.

"ஐயா அது பஞ்ச காவியம்யா. பயிருக்கு அடிக்க தயாரிச்சி வெச்சிருக்கேன். அதோட வாசனதான்.

... .

ஐயா இது நம்ம பசு மாட்டோட புது சாணம், பசுவின் கோமியம், பசு மாட்டுப் பால், பசுந்தயிர், பசு நெய், கரும்புச்சாறு, இளநீர், வாழைப்பழம், கள்ளு இதெல்லாம் சேர்த்து தயாரிக்கிறதய்யா. இதத் தண்ணியில கலந்து பயிர் மேல அடிச்சா பயிர் நல்லா வளர்ந்து நெறைய காய்க்கும்.

இது ஒரு காலத்துல நம்ம ஊரு சிவன் கோயில்ல பிரசாதமா கொடுத்திருக்காங்க."9

கோயிலில் இறைவனுக்குப் படைக்கப்படுவதும் மனிதர் உண்ணக்கூடியதுமான திருவமுதை பயிர்களுக்கு அடிக்கும் இயற்கையோடு இணைந்த பண்பாட்டை இயற்கை வேளாண்மை முறையில் அறிய முடிகிறது. மேலும் குப்பையை மட்க வைப்பதற்கு நாட்டுச் சர்க்கரைக் கரைசல், வாழைப் பழம், பப்பாளிப் பழம், பரங்கிப் பழம் சேர்ந்த கரைசலையும் இயற்கை வேளாண்மையில் பயன்படுத்துவதை அறிய முடிகிறது.

உரக்குழி: மண்புழு உரம்

மண்புழுவை உழவர்களின் நண்பன் என்பர். ஒரக்குழி மூலம் மண்புழுவை இயற்கை எருவை நோக்கி ஈர்க்க முடியும். அதனால்தான்,

"ஒரு விவசாயிகிட்ட முக்கியமா இருக்க வேண்டியது ஒரக்குழி. அதுதான் உயிர் மாதிரி. நம்ம வெளையிற மண்ண உயிர்ப்போட வெச்சிருக்குறது அதுதான்."8

என்கிறான், செல்லமுத்து. மேலும், அவன் மண்புழுவை நிலத்திற்கு வரவழைக்கும் வழிமுறையைப் பின்வருமாறு கூறுகிறான்.

"நவீன வேளாண்மையில தொலைச்சதுல்ல இதுவும் ஒண்ணு. இத திரும்பக் கொண்டு வரணும்னா ஒரம் மருந்த நிறுத்தணும். அடுத்ததா இந்த மாதிரி வட்டமா ஒரு குழி எடுக்கணும். தரமான நாட்டுச் சர்க்கரய வாங்கி வந்து தண்ணியில கரைச்சி இங்கன தெளிக்கணும். மேல சணக்கோணிய போட்டு மூடணும். அதிக வெக்கயாவும் இருக்கப்படாது. தண்ணியும் நிக்கக் கூடாது. பைஞ்சி நாளு இப்படியே விட்டா மண்புழுங்க தேடிக்கிட்டு வந்துடும். மண்புழுவ நம்ம கொல்லைக்கு வரவெக்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கிட்டிங்களா?."9

ஒரு உழவனுக்குக் கோயில் குளம் எல்லாம் முக்கியம் இல்ல, இயற்கை தான் கடவுள் என்று கூறும் செல்லமுத்து, கார்த்திகை தீபத்தன்று ஒரக்குழிக்கும் அகல் விளக்கேற்றும் தமிழரின் வேளாண்மைப் பண்பாட்டை எடுத்துக் கூறுகிறான்.

எனும் பேராசிரியர் ஜான் ஸி ஜேக்கப் கூற்றிற்கேற்ப செல்லமுத்துவின் செயல்பாடுகள் அமைந்திருப்பதைக் காணமுடிகிறது.

இரசாயன உரம் பயன்படுத்துவதால் நிலம் மலடாக்கப்படுகிறது. பூச்சிகள், புழுக்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இரசாயன உரம் பயன்படுத்தி விளைவிக்கப்படும் விளைச்சலை உண்ணும் மனிதர்கள் நோய் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதைச் சீர்செய்ய இயற்கை வேளாண்மை தேவையாக இருக்கிறது. இயற்கை வேளாண்மையில் இயற்கையாகத் தயாரிக்கப்படும் எருவைப் பயன்படுத்துவதால் நிலம் அதன் இயல்பு மாறாமல் உயிர்ப்புடன் இருக்கிறது. நஞ்சு அற்ற விளைபொருட்களை உணவுக்குப் பயன்படுத்துவதால் மனிதர்களும் உடல் நலத்துடன் வாழ முடிகிறது என்பதை ஒரக்குழி புதினம் மூலம் அறிய முடிகிறது.

ஒரக்குழி | வானவன் |

எழுத்து பிரசுரம் | விலை: ரூ.290.

- முனைவர் ஜெ. முனுசாமி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரி, காட்டாங்குளத்தூர்

Pin It