உலகில் தனக்கு எதிராக செயல்படும் ஒரு எதிராளி வலுவாக இருந்தால் அவருக்கு எதிராக அமெரிக்கா என்னவெல்லாம் செய்யும்? எதிராளி ஆட்சி அதிகாரத்தில் வலுவுடன் இருந்தால் அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா யுத்தம் தொடுக்கும். அல்லது, எதிராளியின் ஆட்சியில் கருங்காலிகள் இருந்தால் அவர்களைக் கொண்டே ஆட்சியை கவிழ்த்து, அதிபரை படுகொலை செய்யும். ஆனால், இந்தியா போன்ற நாட்டில் உள்ள மாநிலத்தில் ஒரு கட்சி அமெரிக்காவுக்கு எதிராக பலமாக செயல்பட்டால் என்ன செய்யும்? இன்று மேற்குவங்கத்தில் நடப்பதைத் தான் அமெரிக்கா செய்யும். நேற்று என்பது காலப்புத்தகத்தின் ஒரு மூடப்பட்ட பக்கம் அல்ல. அதனுள்ளிருந்து வெளிப்படும் உண்மைகள் வெறும் வரிகளல்ல. அது தான் வரலாறு எனும் ஆயுதம். அந்த ஆயுதம் இன்றி சமூகம் ஒரடி கூட முன்னேற இயலாது எனவும், அந்த நவீன வரலாற்றின் அனைத்து பக்கங்களிலும் உள்ளது அமெரிக்கா மனித குலத்திற்கு எதிராக செய்த துரோகங்கள் மட்டுமே என்பதும் மீண்டும் ஒரு முறை நிருபணமாகியுள்ளது.

மேற்குவங்கம் வரலாறு படைக்கும் என மார்க்சிஸ்டுகள் சொன்னதன் முழு அர்த்தத்தையும் ஒரு வரியில் விளக்கிவிட முடியாது. அமெரிக்க அடிவருடி வேலைக்கு, இந்தியாவில் இருந்து யார் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்தி மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்கா என்ன நோக்கத்தோடு கபட நாடகமாடுகிறது என்பதை மேற்குவங்கம் நிருபிக்கும் என்ற அர்த்தத்தில் சொன்னதாகவே இப்போது தோன்றுகிறது. அதையும் முறியடித்து ஜனநாயக வழியில் 34 வருடமாக தொடர்ந்து அமைந்த ஒரு மாநில அரசின் மூலமாக கம்யூனிசத்திற்கே இந்தியாவில் எதிர்காலம் என மேற்குவங்கம் நிருபித்து வரலாறு படைக்கும். என்ற அர்த்தமும் அதில் உண்டு என்பதையும் சேர்த்தே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

ஜனநாயக நாட்டில் ஒரு தேர்தலில் ஒரு கட்சி வெற்றி பெறுவதும், அதே கட்சி மற்றொரு தேர்தலில் தோல்வி அடைவதும் சாதாரண விசயம்தான். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய கட்சிகளும், அனைத்து மாநில கட்சிகளும் தோல்வி அடைந்திருக்கின்றன. அதிகம் தோல்வி அடைந்த கட்சி என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். ஆனால், மேற்குவங்க தேர்தல் குறித்து பல ஊடகங்களும், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கரும் பேசுவதையும் கேட்டால் மிக விநோதமாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி தோல்வியடையும், கோட்டை உடையும், வானம் நொறுங்கும், பூமி வெடிக்கும். கடல் வற்றும் என்ற தொனியில் பேசுவதை பார்த்தால், இதுவரை வெற்றியை மட்டுமே அடைந்தவர்கள் ஜனநாயகத்திலேயே இவர்கள் மட்டும் தானோ என்று தோன்றுகிறது. ஒரு முறை மார்க்சிஸ்ட் கட்சி தோற்றுவிட்டால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியையே தடை செய்துவிடலாம் என நினைக்கிறார்களோ என்னவோ பாவம்.

இந்திய உள்துறை அமைச்சர் மேற்குவங்க மாநில தேர்தலில் பேசியதைப் பார்த்தால் சிறந்த அமைச்சர் விருதுக்காக அமெரிக்கா நடத்தும் போட்டியில் மன்மோகனுக்கு இணையாக களத்தில் நிற்கும் தகுதி உள்ள ஒரே நபர் அவர்தான் என்று தெரிகிறது. இந்தியாவிலேயே மிக மோசமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது மேற்குவங்கத்தில் தான். மார்க்சிஸ்டுகள் ஆயுதம் தாங்கிய வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என பெருமை பொங்க பேசிருக்கிறார். அவரைப் பொறுத்த வரையில் இதுதான் அவருக்கு பெருமை தரக்கூடிய பொய்யுரையாகும். இப்படியான ஒரு பொய்யைக்கூட இதுநாள்வரை பேச வாய்ப்பில்லாமல் அலைந்து திரிந்தவர்கள் இன்று அதற்கான வாய்ப்பை உருவாக்கிவிட்டதற்காக நாளை கட்டாயம் அமெரிக்க பாஸால் பாராட்டு பெறுவது நிச்சயம்.

அப்படி என்னதான் செய்ய முயற்சித்தார்கள் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்க கைக்கூலிகள்?மேற்குவங்கத்தில் இடது முன்னணி அரசை ஆட்சிப்பொறுப்பில் இருந்து அகற்றவேண்டும். அதற்காக அவர்கள் மீது வன்முறையாளர்கள் என்ற முலாம் பூசவேண்டும். இதற்கு உதவத் தயாராக உள்ள அனைத்து சக்திகளுக்கும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். எந்தெந்த வழிகளிலெல்லாம் அமெரிக்கா இதற்கு முயற்சி எடுக்கிறது என்பது தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத்துவங்கிருக்கிறது. 1995ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதியன்று மேற்குவங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் உள்ள ஜோவ்பூர் ஜால்தா பகுதியில் மர்மமான முறையில் பறந்துசென்ற விமானத்தில் இருந்து ஆயுதங்கள் பெரும் குவியல்களாக வீசப்பட்டன. அப்போது நாடு முழுவதும் ஒரு பிரச்சாரம் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டது. மார்க்சிஸ்டு கட்சியினர் ஆயுதங்களை வைத்து எதிர்க்கட்சியினரைக் கொன்று குவித்து வருகிறார்கள் என காங்கிரஸ் பேசியது. ஆனால், அந்த ஆயுதங்கள் ஆனந்தமார்க்கிகள் என்ற அமைப்பிற்காக வீசப்பட்டது என விசாரணையில் தெரியவந்ததால் காங்கிரசால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய இயலவில்லை. ஆனால் ஆயுதங்களை போட ஏற்பாடு செய்ததே காங்கிரஸ்தான் என தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. 2011, ஏப்ரல்28 அன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு ஆயுதங்களை வீசியவரே அளித்த பேட்டியில் அச்சம்பவத்தின் முழு பின்னணியும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

ஆனந்த மார்க்கிகள் அமைப்பிற்காக, பீட்டர் பிளிச் என்பவருடன் இணைந்து இக்காரியத்தை செய்தேன் என நீல் கிறிஸ்டியன் நீல்சன் என்ற கிம் டேவி கூறியுள்ளார். தற்போது மற்றொரு நாச காரியத்திற்காக தன்னை சிலர் நாடுவதாகவும் கூறியுள்ள அவர், அன்று இத்தகவல் பிரிட்டிஸ் உளவுத்துறை மூலம் இந்திய அரசுக்கு முன்னரே தெரியும் எனவும், இதில் அப்போதைய மத்திய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது என்றும், அவர்தான் பணி முடிந்ததும் தங்களை நேபாள எல்லையில் கொண்டு போய் விட்டதாகவும் கூறியுள்ளதன் மூலம் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் கூட்டுச் சதியையும் அம்பலப்படுத்தியுள்ளார். மேற்படி சம்பவத்தில் முதன்மை குற்றவாளிகளான இருவரும் இந்தியாவிலிந்து தப்பிக்க மத்திய அரசின் நிர்வாகமே ஏற்பாடு செய்தது மட்டுமல்ல, இன்று வரை இக்குற்றவாளிகளை விசாரிக்க எந்தவொரு முயற்சியையும் மத்திய அரசின் உள்துறை எடுக்கவில்லை. காரணம், காங்கிரசின் தேச விரோத செயல்கள் வெளிவந்துவிடும் என்பது மட்டுமல்ல, மேற்குவங்க இடது முன்னணி அரசை நீக்குவது என்பது ஒரு அமெரிக்க அஜண்டா என தங்களது அரசியல்குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயமே ஆகும். ஆனால் உண்மையை மறைக்க முடியுமா? அந்த அரசியல் அஜண்டாவையும் கிம் டேவியே வெளிப்படுத்திவிட்டார்.

மேலும், காரச்சியில் உள்ள கிம் நேவிக்கு சொந்தமான கரோல் ஏர் சர்வீஸ் விமான நிறுவனத்தின் ஏஎன் 26 விமானத்தின் மூலம் ஆயுதங்கள் போடப்பட்டது. இதற்கு முன் 1988ம் ஆண்டு திரிபுராவில் உள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டு அதன் மூலம் சட்ட ஒழுங்கை சீர்குலைத்ததன் பின்னணியில் திரிபுரா இடது முன்னணி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதேபோல் மேற்கு வங்க கம்யூனிஸ்ட் ஆட்சியை கலைக்க மேற்கு வங்கத்தில் தீவிரவாதக்குழுக்களுக்கு ஆயுதங்கள் அளித்து அதன் மூலம் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியை கலைக்கவும், அவப் பெயரை உண்டு பண்ணவும், திட்டமிடப்பட்டுள்ளது இதற்காகவே சில அரசியல் சக்திகள், ஆனந்த மார்க்கிகள் மற்றும் சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செய்துள்ளதாக கிம் டேவி கூறுகிறார். அப்படியெனில், தற்போது அவரை சிலர் தொடர்பு கொள்வதாக கூறியுள்ளதை வைத்து பார்க்கும்போது, அவர்கள் யாராக இருக்கும் என அனைவராலும் கணிக்க இயலுகிறது. ஏனெனில், தற்போதும் இதே குற்றச்சாட்டுதான் காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணியால் பேசப்படுகிறது. ஆக, முப்பது வருடமாக பல உள்துறை அமைச்சர் முயன்றாலும் முடியாததை சாதித்தற்காக சிதம்பரத்துக்கு ஒரு அமெரிக்க விருது கட்டாயம் தரப்படும். ஏனெனில் அமெரிக்காவின் பிரதான எதிரிகளில் மார்க்சிஸ்ட் கட்சியும் ஒன்று.

இந்தியா மிகப்பெரும் நுகர்வு சந்தை கொண்ட நாடு. உலகமயமாக்கல் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு துவங்கிவிட்ட பின்னரும், அதை தீவிரமாக அனைத்து துறைகளிலும் அமல்படுத்த இயலவில்லை காரணம் இந்தியாவெங்கும் நவீன பொருளாதரக் கொள்கைகளை எதிர்த்த போராட்டம் என்பது தொடர்ந்து நடந்துவருகிறது. மாநில கட்சிகளையும், சில ஜனநாயக சக்திகளையும் மட்டுமல்லாது சில நேரங்களில் ஆளும்கட்சியின் தொழிற்சங்கங்களைக் கூட இப்போரட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஈடுபடுத்துவதால் மக்களிடம் எதிர்ப்புணர்வு படிப்படியாக மேலோங்கிவருகிறது. குறிப்பாக அணு சக்தி உடன்பாட்டினை நான்கு ஆண்டுகளாக தாமதப்படுத்தியது மட்டுமல்லாமல் அணு உடன்பாட்டிற்கு எதிரான விவாதத்தை நாடெங்கும் நடத்தியது இடதுசாரிகள் மட்டுமே. எதிர்க்கட்சியாக உள்ள பா,ஜ.க. கூட அணுசக்தி உடன்பாடு உள்பட பொருளாதாரக்கொள்கையில் ஆதரித்து நிலைபாடு எடுக்கையில் இந்தியாவில் ஒழிக்க வேண்டிய சக்தியாக அமெரிக்கா உணர்வது இடதுசாரிசக்திகளைத்தான்.

அதனால்,தான் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளுக்கு அதிக பிரதிநிதிகளை அனுப்பும் மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளை ஒழிக்க பல்வேறு சதிச்செயல்களை அமெரிக்கா செய்துவருகிறது. 2009, நாடாளுமன்றத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச்சதி செய்து வெற்றி வாய்ப்புகளை தடுத்தனர். அதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர் என்பது அம்பலத்திற்கு வர ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா ஏகாதிபத்தியம் மம்தா பேனர்ஜிக்கு தகுதியே இல்லை என்றாலும் இடது முன்னணி அரசை வீழ்த்த பகடை காயாக பயன்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டதாக வீக்கீலிக்ஸ் அம்பலப்படுத்தியது.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினரை கொன்று குவித்து கோரத் தாண்டவம் ஆடிய மம்தா கும்பல் போலியான பட்டியல்கள் தயாரித்து தங்களது தொண்டர்கள் கொல்லப்பட்டனர் என சித்தரித்தது ஆதாரங்களோடு பொய்யான தகவல் என நிருபிக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து அவதூறுகளாலும், அடக்குமுறைகளாலும் சிந்தாந்த தெளிவும்,சரியான இலக்கும், தியாகமும், உழைப்பும், உறுதியும் உள்ள இடது முன்னணி அரசை மக்களிடமிருந்து பிரிக்க நினைக்கும் சக்திகளே மக்களிடமிருந்து தனிமைப்பட்டு காணாமல் போவார்கள் என்பது வரலாறு நிரூபித்த ஒன்று. மேற்குவங்கம் அதை மீண்டும் நிரூபிக்கும்.

Pin It